Saturday, November 10, 2007

பெயல் மணக்கும் பொழுதும், அயல் நிலத்துக் கவிதையும்

-சேரன்

'பெயல் மணக்கும் பொழுது' எனும் ஆழமான, அர்த்தம் செறிந்த தலைப்புடன் ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் தொகை நூல் ஒன்றை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களும் சிதறல்களும் அலைவுகளும் இடம்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் தொண்ணூற்று மூன்று கவிஞர்களின் கவிதைகள், சிக்கலானதும் பல்வேறு முகங்களுடையதும் முரண்பாடுகளும் அவலமும் நிறைந்ததான ஈழ வாழ்வைப் பாடுகின்றன. தொகுதிக்கு வ. கீதா வழங்கியுள்ள சிறப்பான பின்னுரை கருத்தியல் சார்ந்து பெரும் முக்கியத்துவம் உடையது.

''தமிழ் பேசும் மக்களின் நிதர்சனங்களைச் சலனப்படுத்தி பெண்மை, பெண் ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியன குறித்து நமது மரபுகள் சலிக்காமல் முழங்கும் . . . செய்திகளைப் புரட்டிப்போட்டு நமது மனச்சாட்சிகளைத் தொடர்ந்து செயல்படவைக்கும் ஈழ வரலாற்றுக்கும் குறிப்பாக அவ்வரலாறு கண்டுள்ள பெண்ணியச் சொல்லுக்கும் வாக்கிற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்'' என்னும் அவரது முடிவுரையுடன் இந்தக் குறிப்பைத் தொடங்குவது சாலப் பொருத்தமாகும்.

போரும் தேசியவாதங்களும் தீவிரமாக ஆட்சி பெற்றுள்ள சூழலில் பெண்ணிய வாதங்களுக்கும் இவற்றுக்குமிடையிலான உறவுகள், முரண்கள்யாவை? பங்காளியாக, பாதிப்புற்றவளாக, போரில் குதித்தவளாக, பெண்களது வாழ்வும் அனுபவமும் கருத்தியல்களும் எவை? போன்ற கேள்விகள் கடந்த பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தக் கேள்விகள் சிக்கலான பதில்களை எழுப்பவல்லன. இத்தகைய கேள்விகளுக்குரிய பதில்களை இனங்கண்டுகொள்வதில் பெண்களுடைய இலக்கியப் பதிவுகள், வாய்மொழி, நேர்காணல்கள், சினிமா எனப் பல வழிமுறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். பெண்ணியத்துக்கும் தேசியத்துக்கும் / தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இடையேயான உறவின் நெருக்கடிகள் பற்றி ஈழ வரலாற்றனுபவங்களை முன்னிட்டுப் பல நிலைப்பாடுகளை இனங்காண முடிகிறது. போரில் ஈடுபட்டாலும் தேசியவாத எழுச்சியில் தீவிரமான பங்குபெற்றாலும் பெண் விடுதலை என்பது தேசியப் போருக்கூடாகச் சாத்தியமில்லை. ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை நிரந்தரமானவையன்று என்பது முதலாம் நிலைப்பாடு (எ-கா: ராதிகா குமாரசுவாமி, குமாரி ஜயவர்த்தனா போன்றவர்கள்). ஆயுதம் தரித்த போராளிகளாகத் தமிழ்ப் பெண்கள் மாறியமை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்கான விழுமியங்கள் மீதான பேரிடி என்பதும் அதனூடாகப் பெண்களின் ஒட்டு மொத்தமான விடுதலை சாத்தியம் என்பதும் இரண்டாம் நிலைப்பாடு (எ-கா: அடேல் ஆன் பாலசிங்கம்). இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் அப்பால், மூன்றாம் நிலைப்பாட்டை வலியுறுத்துபவர்கள், போராளிகளாய்ப் பெண்கள் மாறுவதும் தேசியச் சிக்கலில் அவர்களுடைய பங்கும் பெண்களுக்கு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்கியுள்ள போதும் இவை ஐயத்துக்கிடமானவையாகவும் ஊசலாடும் தன்மையதாகவும் இருக்கின்றதெனக் கருதுகிறார்கள் (எ-கா: தரிணி ராஜசிங்கம், சேனநாயக்க, நெலுஃபர் டீ மெல் போன்றோர்). ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப கால அமைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, விடுதலைப் போராட்ட அமைப்புகள் / இயக்கங்களுக்கு உள்ளே பெண் உரிமைகள், பெண் விடுதலை என்பன பற்றிய குறிப்பான கவனம் எதுவும் இருந்திராதபோதும், பெண் விடுதலை எனும் எண்ணக் கருவை எல்லா இயக்கங்களும் ஏற்றுக்கொண்டமையே முக்கியமான வெளிகளையும் வழிகளையும் பெண்களுக்குத் திறந்துவிட்டது என்பது சித்திரலேகாவின் கருத்தாக இருந்தது. ''உயிர் ஈனும் ஆற்றலுடையோர் சாவை அரவணைத்து ஏற்றது காலத்தின் கட்டாயமும் முரணும்'' என்பதை இன்னொரு கருத்துத் தளமாகக் கொள்ள முடியும் (எ-கா: வ. கீதா).

இப்போது உள்ள நிலைமையைப் பார்க்கிறபோது, தேசியவாதப் போராட்டத்தின் வேட்கைக்கும் வெம்மைக்கும் கீழ்ப்பட்டதாகவே பெண் விடுதலை பேசப்படுகிற நிலையே மேலோங்கியுள்ளது. கூடவே, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண் விடுதலை எப்படி அமையும் என்பதில் நிச்சயமின்மையும் முடிவு கூற முடியாமையுமே நிலவுகின்றன என்பதை அடேல் பாலசிங்கமும் தமிழினியும் குறிப்பிடுகிறார்கள்.

'கட்டாயமும் முரணும்' கிளப்புகிற சிக்கல்கள் மிகப்பல என்பதையும் ஈழ வரலாற்று, சமூக அனுபவங்கள் உணர்த்துகின்றன. நான் மேலே குறிப்பிட்ட பல கருத்துத் தளங்களுக்கு அப்பால், வேறுபாடுகளும் சிக்கல்களும் நிறைந்த இன்னும் முடிவுறாத போராட்டமாகத் தொடரும் வேறு பல நிலைப்பாடுகளும் பெண் / பெண்ணிய அனுபவங்களும் கருத்துத் தளங்களும் படிம நிலைகளும் சாத்தியம் என்பதை ஈழப் பெண் படைப்பாளிகளின் இலக்கியப் படிமங்களும் பதிவுகளும் நேரடியாகவும் உள்ளடங்கியும் உணர்த்துகின்றன என்பதற்குப் பெயல் மணக்கும் பொழுது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

பெண் மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து, பெண் மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலின / பாலியல்பு உறவுகள் என்பனவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இவை பற்றிய கேள்விகளும் கவிதைப் படிமங்களும் நூலில் ஆங்காங்கே பெயல் நிலையில் பயில்கின்றன.

சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும் /தனித்தே சுற்றுவேன் (செல்வி); போராடும் எதுவும் நின்று நிலைக்கும் (தமிழவள்); உண்மைகளை நினைத்து அழுகிறேன் / நியாயப்படுத்த முடியாதவளாக (தில்லை); எனக்கான ஒரேயொரு காதலனையும் காண முடியவில்லை (நஜீபா); ஒரே உலகத்திலேயேதான் / இருக்கின்றன / எனக்கும் அவனுக்குமான வெவ்வேறு உலகங்கள் (அனார்); உன் தனிமை பற்றிப் பேசு (றஞ்சினி); நான் சிந்தும் கண்ணீர் / திரும்பவும் என்னிடமே கேள்வி கேட்கிறது (சந்திரா ரவீந்திரன்); பொய்க் கால்களும் / போய்விட்ட விழிகளுமாய் / உலா வருகின்ற / எண்ணற்ற காலடிகள் (சிரஞ்சீவி) - இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நூலின் ஒட்டுமொத்தமான பாதிப்பைச் சுட்டிக்காட்ட இவை தூண்டுதலாக அமையலாம் என நம்புகிறேன். பலதரப்பட்ட கவிதைகளையும் பலதரப்பட்ட அனுபவங்களையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இப்பொழுது எழுதிவருகிற, எப்பொழுதோ எழுதிய, எப்போதாவது எழுதுகிற, மற்றும் அவ்வப்போது எழுதுகிற எல்லா ஈழப் பெண் கவிகளையும் இயலுமானவரை தொடுத்து எடுத்துள்ளார் அ. மங்கை. விடுபட்டுப் போனவர்கள் மலரா, மாதுமை, சாரங்கா, லதா என மிகச் சிலரே. இத்தகைய தொகுதியை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல்கள், சங்கடங்கள் பற்றி மங்கை உணர்ந்துள்ளமையை அவரது முன்னுரையும் பின்னுரையும் உணர்த்துகின்றன. புவியியல் திணைகளைக் கடந்து ஈழ மக்களுடனும் ஈழ வாழ்வுடனும் ஈழ அரசியலுடனும் ஈழப் பெண் கவிகளுடனும் தன்னுடைய அரசியல், அறவியல் ஒருமைப்பாட்டை (solidarity) அ. மங்கை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

இந்த நூல் தொடர்பாகவும் பெண் / பெண்ணியப் படைப்பாளர்கள் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான பதிவுகளும் விவாதங்களும் எழ வேண்டும். பெண்கள் பெயரில் ஆண் எழுதுவது பற்றிய சர்ச்சை முன்னரும் எழுந்ததொன்றே. இந்தத் தொகுதியிலும் ஆதிரா, ஆமிரபாலி ஆகியோர் 'ஆண்' எழுத்தாளர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களை ஏன் சேர்த்தீர்கள்? ஆண் எப்படிப் பெண் பெயரில் எழுதலாம்? என்ற ஆரவாரங்களைத் தவிர்த்துப் புனைபெயர்களின் அரசியல் பற்றிய விவாதங்களை நாம் எழுப்ப முடியும். பெண் பெயரை மட்டும் சூடுவதா அல்லது பெண்ணியப் பார்வையையும் குரலையும் காட்டுவதான படைப்பு மனோநிலையின் விளைவா அது எனும் கேள்விகளை எழுப்ப முடியும் அல்லவா? பெயர்களின் பாலின அரசியல் என்ன என்பது இன்னொரு கேள்வி. ஆண்மை/பெண்மை போன்ற கட்டமைப்புகளைக் கட்டுடைப்பது பற்றிக் குறிப்பிடுகிறார் மங்கை. அந்தக் கேள்வி நமது சூழலில் இலக்கியப் படைப்புகளூடாக ஆழமாக முன்னெடுக்கப்பட முடியும். அதேபோல ஒடுக்கப்படுபவர்களின் குரலையும் அடையாளத்தையும் ஒடுக்குபவர்கள் அபகரித்துவிடுதலும் சாத்தியமானதுதான். ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறபோது, இத்தகைய ஆபத்துகள் உள்ளன. ஒருமைப்பாட்டுக்கும் (solidarity) அபகரிப்புக்கும் (appropriation) இடையே இருப்பது ஒரு பெருவெளி அரசியல். பாலற்றவர்களும் பாலினங்கடந்தோரும் (transgender) ஆண்/பெண் பெயர்களை மாறிமாறிப் பயன்படுத்த முன்பாக ஆண் / பெண் ஆடைகள், அணிகள் என்பவற்றை மாறிமாறி அணிந்து ஆண்/பெண் நடைமுறைகளை மாறிமாறி மாற்றிப் பாலினக் கலகத்தையும் பண்பாட்டுக் கலகங்களையும் உருவாக்குகிறார்கள். இவர்களது படைப்பிலக்கியத் தொகுதிகள் பல வெளியாகி உள்ளன. இத்தகைய பதிவுகளை நோக்கித் தமிழ்ப் படைப்பாளிகளும் நகர்வது தவிர்க்க முடியாதது.

'தமக்கான காலமும் நேரமும் வெளியும் அற்று இடப்பெயர்வும் அங்கலாய்ப்பும் அவற்றை எதிர்கொள்வதுமே வாழ்வாகிப்போன இக்கால கட்டத்தில்' ஈழப் பெண் கவிகளின் இத்தொகை சீரிய முயற்சியாகும்.

(நன்றி: காலச்சுவடு, நவம்பர் இதழ்)

இத்தொகுப்பு குறித்து...
(1)
ஊடறுவில், றஞ்சி எழுதியது
(2)
முரண்வெளியில், நிகிதா இம்மானுவல்பிள்ளை எழுதியது

Friday, November 09, 2007

பார்த்து இரசித்த சில குறும்படங்கள்

குறும்படங்களை எடுப்பதில், நடிப்பதிலென அக்கறையுள்ள ஒரு நண்பருக்காய் என்னாலும் ஏதேனும் ஒரு சிறு துரும்பை எடுத்துக்கொடுக்க முடியுமா என தமிழல்லாத குறும்படங்களைக் குடைந்துகொண்டிருந்தேன். குறும்படங்களுக்கான நேர அளவீடுகள் கதையின் களங்களுக்கேற்ப வேறுபடலாம் என்றாலும், பத்து நிமிடத்திற்கப்பால் நீளும் படங்களைப் பார்க்க நிறையப் பொறுமை வேண்டும் (என்னைப் பொறுத்தவரை ஐந்து நிமிடத்திற்குள் எடுத்தால் இன்னும் சிறப்பாகவிருக்கும்). நான் பார்த்த அனேக தமிழ்க்குறும்படங்களில் குடும்பம்/அரசியல்/உணர்ச்சிகள் என்ற எல்லையைத் தாண்டிச் சென்ற படங்கள் குறைவே என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. இவ்வாறான எல்லைகளுக்குள் படங்கள் எடுப்பது அவசியமானது என்றாலும், அதற்கப்பாலும் விரிவுபடுத்த வேண்டிய பார்வைகள் இருக்கின்றன என்ற புரிதலுக்காய் நான் பார்த்த குறும்படங்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துத் தருகின்றேன்.


SPIN

இதொரு டீஜேயின் விரல்களில் அசைவில் நகரும் சிறு உலகைப்பற்றிய கதை ('கடவுள்' கூட ஒருவகையில் டீஜேதான் என்ற பாரவையைக்கூட இப்படம் தரக்கூடும்). எவ்வளவு அழகாக இதைப் படமாக்கியிருகின்றார்கள் எனப்பாருங்கள். டீஜே ஒவ்வொருமுறையும் ஸ்பின் பண்ணும்போது அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற சுவாரசியம் நமக்குள் வந்துவிடும்போதே படம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. எத்தனையோ தீயவர்கள்/தீயவிடயங்கள் இருந்தாலும், ஒரு நல்ல விடயத்தால் (ஒரு chain reaction போல) எப்படி இந்த உலகமே அழகாய் மாறிவிடுகின்றதென்ற கரு வசீகரிக்கின்றது.

Wrong side of the bed

இக்குறும்படம், இரண்டு நிமிடங்களுக்குள் முடிவடைந்துவிடுகின்றது. ஒரு நாளில் ஒரு தவறான தெரிவைச் செய்வதால் வரும் விளைவுகளை நகைச்சுவையுடன் எடுத்திருக்கின்றார்கள். இப்படி ஒரு தவறான முடிவால், நாள் முழுக்க... சிலவேளைகளில் வருசக்கணக்காய் எல்லாம் வேதனைப்பட வேண்டி வந்திருக்கும் அல்லவா நமக்கும்?

Death Is My Co-Pilot

மரணம் எப்படி நம்மைப் பின் தொடர்கின்றதென்பதை பயமுறுத்தாமல் மெல்லிய நகைச்சுவையுடன் இதில் கூறியிருக்கின்றார்கள். பார்த்துமுடிக்கையில் ஒரு புன்சிரிப்பு வருவதைத் தவிர்க்கவே முடியாது.

Snap

இப்படம் நமது பொதுப்பார்வையை எள்ளி நகையாடுகின்றது. ஆரம்பக்காட்சிகளுக்கு எதிர்மறையான இன்னொரு பார்வையை அதன் முடிவு தருகின்றது.

10 minutes

பத்து நிமிடங்களுக்குள் இருவேறு உலகங்களுக்குள் நடக்கும் இருவேறு சம்பவங்களை காட்சிப்படுத்துகின்றது. பத்து நிமிடங்களுக்குள் எத்தனை பேரின் வாழ்வு அழிக்கப்படுகின்றது....ஆனால் அது குறித்த அக்கறையில்லாது இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்ற பார்வையை நம்மிடையே விதைக்கின்றது. இதை ஞானதாசோடு இருந்து (ஈழத்தில் இருந்துகொண்டு குறிப்பிடும்படியான குறும்படங்களைத் தந்திருக்கின்றார்) பார்த்திருக்கின்றேன்... படத்தின்பின் ஒரு சிறுகுழுவாய் இப்படம் குறித்து உரையாடியதும் நல்லதொரு அனுபவம்.

(Thanks: YouTube)

Thursday, November 08, 2007

கனடாவின் இலக்கிய விருதுகள்

-Giller Price 2007-

கனடாவில் இலக்கியத்திற்கான விருதுகள் என்று வரும்போது Governor General's Literary Award, Giller Prize ஆகிய இரு விருதுகளே அதிக கவனத்தைப் பெறுகின்றன. இம்முறை இவ்விரு விருதுகளுக்கான shortlistற்கு மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisaderoம், எம்.ஜி.வசாஞ்ஜியின் The Assassin’s Songம் தெரிவுசெய்யபட்டிருக்கின்றன. கனடா எழுத்தாளர்கள் என்றவளவில் இவர்களிருவரின் எழுத்துக்கள் என்னை அதிகம் கவர்கின்றவை (இவர்களிருவரும் கனடாவில் பிறந்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது).

மைக்கல் ஒண்டாஜ்ஜியின் The English Patient, Anil's Ghost ஆகியவற்றை அவை வந்த காலங்களில் வாசித்திருக்கின்றேன். அண்மையில் Running in the Family யையும், கவிதைத் தொகுப்பான The Cinnamon Peelerயையும் வாசித்து, அவை குறித்து எழுத ஆரம்பித்தது அரைகுறையில் நிற்க, மற்றொரு நாவலான Coming Through Slaughter இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றேன். ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவல், Single தகப்பனையும் அவரின் இரண்டு மகள்களையும் வைத்து எழுதப்பட்டதாய் அறிகின்றேன். அமெரிக்காவில் கலிபோர்ணியாவில் ஆரம்பிக்கும் கதை பிள்ளைகள் வளர வளர அமெரிக்காவின் பிற பகுதிகள், பிரான்ஸ் என நகர்வதாய் சொல்லப்படுகின்றது. தனது முதல் பதினொரு வருடங்களை இலங்கையிலும், பிறகு எட்டு வருடங்களை இங்கிலாந்திலும், மிச்சக்காலங்கள் முழுதும் கனடாவில் வசித்துவரும் ஒண்டாஜ்ஜியின் ஒரு நாவலை (In the Skin of a Lion) தவிர, மிகுதி அனைத்தும் கனடாவின் பின்புலத்தைப் பின்னணியாகக் கொண்டவை அல்ல எனபது ஒரு விசித்திரமான அவதானம்.

எம்.ஜி.வசாஞ்ஜியின், The Assassin’s Song குஜராத்தில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதாக வாசித்திருக்கின்றேன். வசாஞ்ஜியின், When she was a Queen என்ற சிறுகதைகளின் தொகுப்பு எனக்குப் பிடித்தமான ஒன்று. Giller Prize தவறவிட்ட இந்த இருவர்களில் ஒருவர் Governor General's Literary விருதைப் பெறவேண்டுமென்று விரும்புகின்றேன். Giller Prize பரிசுத்தொகை 40, 000 கனடியன் டொலர்களாகும்.. 15,000 டொலர்களாயிருந்தத் Governor General's Literary விருதை இந்தமுறை 25, 000மாக உயர்த்தியிருக்கின்றார்கள்.

Giller Prize நிகழ்வு தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்சம் பதிவுசெய்திருக்கின்றேன். படம் இங்கே அங்கேயென ஆடுவதற்கு நான் இன்னொரு கையில் வைத்திருந்த சூடான தேநீர் மட்டுமே காரணம் என உறுதிப்படுத்துகின்றேன். இம்முறை Giller பரிசு, Elizabeth Hayயின் நாவலான Late Nights on Air ற்குக் கிடைத்திருக்கின்றது. கனடாவின் வடக்குப்பகுதிகளை நோக்கி பயணம் செய்து, அதிகம் 'நாகரிகம்' தீண்டாத (பூர்விக மக்கள் அதிகம் வாழும் பகுதி) பின்னணியாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டதென விருது விழாவில் Elizabeth Hay கூறியிருந்தார்.


பேசும் இப்பெண்மணியைத் தெரிகின்றதா? தீபா மேத்தாவின் water படத்தில் நடித்தவர். தமிழ்ப்படத்தில் நமது சாத்தானோடும் ஒரு படத்தில் நடித்திருக்கின்றார் (சாத்தான் எனபது சரத்குமாரிற்கு நாங்கள் இட்ட செல்லப்பெயர், அவரின் இரசிகர்க்ள்/தொண்டர்கள் கோபிக்கக்கூடாது). Lisa Ray.


மைக்கல் ஒண்டாஜ்ஜியின் நூல் பற்றிய அறிமுகம்.


மைக்கல் ஒண்டாஜ்ஜி நூலில் கையெழுத்திடல்


சென்றவருடம் மிக இளம் வயதில் Giller Price பெற்ற Vincent Lam.

Elizabeth Hayயின் விருதைப் பதிவு செய்திருந்தாலும், அது நீளமாய் இருப்பதால் YouTube என்னோடு மல்லுக்கட்டுகின்றது. சாத்தியமாகும்பட்சத்தில் அதையும் பிறகு இங்கே இணைத்துவிடுகின்றேன்.