Thursday, April 29, 2010

ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 02

-ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளில் ந‌க‌ரும் நியாய‌ங்க‌ள்-

இவ‌னுட‌ன் கூபாவிற்கு சேர்ந்து வ‌ரும் ந‌ண்ப‌ருக்கு ப‌ய‌ணிப்ப‌த‌ற்கு முத‌ல்நாள் வ‌ரை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ப் ப‌ரீட்சை இருந்த‌து. க‌டைசிப் ப‌ரீட்சையாக‌ அவ‌ருக்கு பிரெஞ்ச் மொழி இருக்க‌, இவ‌னும் கூபாவிற்குப் போவ‌தால் ஸ்பானிஷ் மொழியைப் ப‌டிக்கலாமென‌ முடிவு செய்தான். த‌மிழ்ச்சினிமாவில் ஐந்து நிமிட‌ப் பாட்டிலேயே ஏழையான‌வ‌ன் ப‌ணக்கார‌னாகும்போது, தான் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுப் ப‌டித்தால் ஓரிர‌விலேயே ஸ்பானிஷ் மொழியில் பாண்டித்திய‌ம் பெற்றிட‌முடியுமென‌ தீவிர‌மாக‌ ந‌ம்பினான். ஆனால் ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ஷ‌கீராவும், ச‌ல்மா ஹ‌ய‌க்கும் அடிக்க‌டி வ‌ந்து பாட்டுப்பாட‌வும் ந‌ட‌னமாட‌வும் செய்தார்க‌ளேய‌ன்றி, ஸ்பானிஷ் மொழி மூளைக்குள் ப‌திய‌ப்ப‌ட‌வேயில்லை. ஆனால் அன்றைய‌ உற‌க்க‌த்தில் -கூப‌ன் பெற்றோருக்குப் பிற‌ந்த‌- இவா மெண்டிஸோடு ஸ்பானிஷ் மொழி ச‌ர‌ள‌மாக‌க் க‌தைக்க‌ முடிந்த‌த‌ற்கு க‌ட‌வுளின் பெருங்க‌ருணை த‌விர‌ வேறெதுவும் இருந்திருக்க‌ச் சாத்திய‌மில்லை.

கூபாவிற்கு போகும் அவ‌ச‌ர‌த்தில் துணைக்கு சில‌ புத்த‌க‌ங்க‌ளை இவ‌ன் எடுத்துப்போயிருந்தான். ந‌ண்ப‌ரின் உத‌வியால் இவ‌ர்க‌ள‌து நூல‌க‌ச் சேக‌ர‌த்தில் வ‌ந்துசேர்ந்த‌ 'அன்புள்ள‌ டாக்ட‌ர் மார்க்ஸ்' கையில் அக‌ப்ப‌ட்டிருந்த‌து. அதை வாசிக்கும்போது 'ப‌ழி நாணுவார்' என்று ஷோபா ச‌க்தி ஒரு க‌ட்டுரை எழுத‌, பின்னூட்ட‌ங்க‌ளில் பால‌ன் என்ப‌வ‌ர் ஹெல‌ன் டெமூத்திற்கும் மார்க்ஸிற்குமான‌ உற‌விற்கான‌ ஆதார‌ம் வேண்டும் என்று விடாப்பிடியாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து இவ‌னுக்கு நினைவுக்கு வ‌ந்த‌து. பிற‌கு 'அன்புள்ள‌ ஹெல‌ன் டெமூத்' என்று ஷோபா இன்னொரு க‌ட்டுரை எழுதிய‌தை நீங்க‌ள் அனைவ‌ரும் வாசித்திருப்பீர்க‌ள். இவ‌னுக்கு ஹெல‌ன் டெமூத்திற்கும், மார்க்ஸிற்கும் உற‌வு இருந்த‌தா இல்லையா என்ப‌து ப‌ற்றி விடுப்புப் பார்க்கும் ம‌னோநிலை இருக்க‌வில்லை. ஆனால் த‌மிழ்ச்சூழ‌லில் இந்த‌ உரையாட‌ல் எப்ப‌டி ந‌ட‌ந்த‌து/முடிந்த‌து என்ப‌தை அறிய‌வும், மார்க்ஸை அவ‌ர் கால‌த்தில் வைத்துப் பார்க்கும் விரும்பும் இருந்த‌து. ஷோபா த‌ன‌க்கு 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் 'அன்புள்ள‌ டாக்டர் மார்க்ஸ்' வாசித்த‌போது ஹெல‌ன் டெமூத்தோடான‌ மார்க்ஸின் உற‌வுப‌ற்றித் தெரிந்த‌து என்கிறார். ஆனால் சிக்க‌ல் என்ன‌வென்றால் ஷீலா ரெளபாத்த‌ம் எழுதிய‌ 'அன்புள்ள‌ டாக்ட‌ர் மார்க்ஸ்' என்று க‌டித‌மெழுதும் பாத்திர‌ம் ஒரு க‌ற்ப‌னைப் பாத்திர‌மே (மார்க்ஸிய‌த்தில் பெண்க‌ளுக்கான‌ விடுப‌ட‌ல்க‌ளை இது விரிவாக‌ ஆராய்கிற‌து).

இச்சிறு நூல் நேர‌டியான ஒரு க‌ட்டுரையாக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்பது கவனிக்கத்தது. சில‌ க‌ற்ப‌னைப் பாத்திர‌ங்க‌ளுட‌ன், வ‌ர‌லாற்றுப் பாத்திர‌ங்க‌ளை இணைத்து இது எழுத‌ப்ப‌ட்டிருக்கும். என‌வே ஒரு ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌த்தைப் பேசும்போது இதையொரு முக்கிய‌ சான்றாக‌ நாம் முன் வைத்துப் பேச‌முடியாது. இத‌ன் பின் 'Dear Dr. Marx' ஐ ஆங்கில‌த்தில் வாசித்த‌போதும், ஷீலா க‌டித‌மாய் எழுதி முடித்த‌பின் த‌னியே எழுதும் முடிவுக் குறிப்பிலேயே ஹெல‌ன் டெமூத் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தை ஷீலா குறிப்பிடுகிறார் (அந‌த‌க்குறிப்பையே ஷோபா ஒரு முக்கிய‌ சான்றாய்த் த‌ன் க‌ட்டுரையிலும் குறிப்பிடுகிறார்). அத்துட‌ன் ஹெல‌ன் டெமூத் ப‌ற்றிக் குறிப்பிடும் விட‌ய‌த்திற்கு எந்த‌வொரு அடிக்குறிப்பும் ‍-எங்கிருந்து பெற‌ப்ப‌ட்ட‌தென‌‍- த‌ர‌வில்லை. அடிக்குறிப்பு த‌ராம‌ல் ஷீலா எழுதுகின்றார் என்றால் ஒன்று ஹெல‌னுக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தையிற்கு மார்க்ஸ் த‌ந்தையென‌, பொதுவாக‌ எல்லோராலும் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌தென‌ எடுத்துக் கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. அல்ல‌து போகின்ற‌போக்கில் ஷீலா எழுதியிருக்கின்றாரென‌ -மார்க்ஸின் குழ‌ந்தையில்லையென‌ வாதிடுப‌வ‌ர்க‌ளுக்கு- சார்பாக‌ இது போய்விடும். இதையேன் இவ‌ன் குறிப்பிடுகின்றான் என்றால், ச‌ர்ச்சைக்குரிய‌ ஹெல‌ன்‍ மார்க்ஸ் உற‌வு ப‌ற்றிய‌ உரையாட‌லுக்கு நாம் இந்நூலை முக்கிய‌ நூலாக‌ வைத்து உரையாட‌முடியாது என்ப‌தே.

மேலும் ஷோபாவின் 'அன்புள்ள‌ ஹெல‌னுக்கு' க‌ட்டுரையில் த‌ந்திருக்கும் மேல‌திக‌ வாசிப்பிற்கான் இணைப்புக்க‌ள் -அவ்வ‌ள‌வு தெளிவாக‌- அவ‌ர‌து க‌ட்டுரைக்கு உத‌வுகின்ற‌ன‌வாய் இல்லை. உதார‌ண‌மாக ஷோபா த‌ன‌து க‌ட்டுரையில் ‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்?' என்று கேட்ப‌து ச‌ரியான‌ கேள்வியும‌ல்ல‌.

மார்க்ஸை விட‌ ஏங்க‌ல்ஸ் வ‌ச‌தியான‌ குடும்ப‌த்தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்திற்கென புதைக்கும் ம‌யான‌ம் கூட‌ இருக்க‌லாம். இவ‌ற்றையெல்லாம் விட‌ முக்கிய‌மாய் ஏங்க‌ல்ஸின் விருப்புப்ப‌டி அவ‌ரின் உட‌ல் புதைக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை ஷோபா ம‌ற‌ந்தோ/ம‌றுத்தோ விடுகிறார். ஏங்க‌ல்ஸின் உட‌ல் எரியூட்ட‌ப்ப‌ட்டு அவ‌ர‌து சாம்ப‌ல் க‌ட‌லில் வீச‌ப்ப‌ட்டிருக்கிற‌து. என‌வே ஷோபாவின் 'ஏன் எங்க‌ல்ஸ் மார்க்ஸின் அருகில் புதைக்க‌ப்ப‌டவில்லை?' என்ற‌ வாத‌ம் ச‌ரியான‌த‌ல்ல‌. மேலும் ஷோபா குறிப்பிட்ட‌ விக்கி இணைப்பின்ப‌டி, ஹெல‌னை மார்க்ஸின் குடும்ப‌ க‌ல்ல‌றைக‌ளில் புதைக்க‌வேண்டும் என்ப‌து ஜென்னி மார்க்ஸின் விருப்பாக‌வே இருந்திருக்கிற‌து (In accordance with Jenny Marx's wishes, she was buried in the Marx family grave).

இவ்வாறு கூறுவ‌தால் ஹெல‌னின் பிள்ளைக்கு மார்க்ஸ் த‌ந்தைய‌ல்ல‌ என்பதை ம‌றுப்ப‌த‌ற்காக‌ அல்ல‌. ஆனால் ஹெல‌னின் பிள்ளை மார்க்ஸிற்குப் பிற‌ந்த‌துதான் என்ப‌தை ஆதார‌பூர்வ‌மாக‌ நிரூபிக்க‌ ஷோபா த‌ரும் சான்றுக‌ள் ச‌ரியான‌ வ‌கையில் த‌ர‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தைக் குறிக்க‌வே. இவ்விட‌ய‌த்தில் ஷோபா வைத்த‌ உருப்ப‌டியான‌ ஒரெயொரு சான்று மார்க்ஸின் ம‌க‌ளான‌ எலினோர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ளே ஆகும். எலினோர் நீண்ட‌கால‌மாய் ஏங்க‌ல்ஸிற்குப் பிற‌ந்த‌ ம‌க‌னே ஹென்றி ஃபெடரிக் டெமூத் என‌ ந‌ம்பி வ‌ந்திருக்கின்றார். பின்னாளில் உண்மையை அறிகின்ற‌போது, 'நானும் நீங்க‌ளும் ஒருவித‌மாய் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ள்' என‌ ஒரு க‌டித‌த்தில் எலினோர் எழுதுகின்றார்.

மேலும் ஷோபா சொல்வ‌துபோல‌ 'மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை' என்ப‌தில் முற்றுமுழுதாக‌ ஏங்க‌ல்ஸை நாம் குறை கூற‌முடியாது. ஏங்க‌ல்ஸ் த‌ன‌து உற்ற‌ ந‌ண்ப‌ரைக் காப்பாற்றும்பொருட்டு மார்க்ஸின் ம‌க‌னுக்கு த‌ன‌து குடும்ப‌ப் பெய‌ரையே வ‌ழ‌ங்கியிருக்கிறார். நீண்ட‌ கால‌மாக‌ மார்க்ஸின் ம‌களான‌ எலினோர் உட்ப‌ட‌ ப‌ல‌ர் ஃபெடரிக் டெமூத்தை ஏங்க‌ல்ஸின் ம‌க‌னென‌வே நினைத்திருக்க‌ மார்க்ஸிற்காய் பாவ‌ச்சுமையை ஏங்க‌ல்ஸே சும‌ந்துமிருக்க‌ ஏங்க‌ல்ஸை மார்க்ஸைப் போல‌க் குற்ற‌வாளிக் கூண்டில் அவ்வ‌ள‌வு எளிதில் ஏற்ற‌முடியாது.

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ இந்த‌ விவாத‌த்தில் ஏன் ஒரு முக்கிய‌ புள்ளியை எல்லொரும் ம‌ற‌ந்துவிட்டிருக்கின்றார்க‌ள் என‌ இவன் யோசிக்கிறான். ஜென்னி மார்க்ஸ் என்ப‌வ‌ரின் நிலைப‌ற்றி ஏன் எவ‌ரும் க‌தைக்க‌வேயில்லை என்ப‌துதான். இவ‌னுக்கு ஏன் இந்த‌க் கேள்வி வ‌ருகின்ற‌து என்றால்,'அன்புள்ள டாக்டர் மார்க்ஸில்' ஷோபா ஹெலன் டெமூத் பற்றி ஆதாரம் காட்டும் அதே 70ம் பக்கத்தில் மார்க்ஸும், ஜென்னியும் கூட்டு வாழ்வில்லத்திற்குச் செல்லும்போது  ' மரபொழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத கவிஞரின் (ஜோர்ஜ் ஹேர்வே) நடத்தை முறைகளை திருமதி மார்க்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை வசியப்படுத்த ஹெர்வெ செய்த முயற்சிகளை அவர் நிராகரித்தார். ஆண் - பெண் சுதந்திர உறவு பற்றி பாரிஸில் நடந்த விவாதங்கள் அவருக்கு திகைப்பேற்றின' எனச் சொல்லபடுகின்றது.  ஜென்னி,  மார்க்ஸ் X ஹெல‌ன் உற‌வுப‌ற்றி என்ன‌ நினைத்திருப்பார்? எவ்வாறான‌ சூழ்நிலையில் இம்மூவ‌ரும் ஒரேவீட்டில் 30 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக ஒன்றாக‌ வாழ்ந்திருப்பார்க‌ள் என்ற இருட்டுப் பக்கங்கள் பற்றி -ஷோபா உட்பட- எல்லோரும் ஏன் மறைக்கின்றார்கள் என்பதில் வெளியே பிதுக்கித் தள்ள முடியாத சில கதைகள் அவரவர்க்கு இருக்கக்கூடும்.

மார்க்ஸ் ஜென்னி ஹெல‌ன் க‌ல்ல‌றைக‌ளுக்குள் போய்விட்டார்க‌ள். மார்க்ஸ் என்கின்ற‌ பேராசானும் த‌வ‌றுவிடுகின்ற‌ ஒரு ம‌னித‌னே என்ப‌தை -ஹெல‌ன் டெமூத் ப‌ற்றி வெளிப்ப‌டையாக‌ப் பேசாம‌ற் போயிருப்ப‌திலிருந்து-  நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஷோபாச‌க்தி குறிப்பிடுவ‌து போல‌ உற‌வில் ந‌ல்ல‌ உற‌வு X க‌ள்ள‌ உற‌வு எனறு எதுவுமில்லைத்தான். ஆனால் எல்லா உற‌வும் ந‌ல்ல‌ உறவாய் மட்டுமே இருக்கிறதென நாம் அவ்வளவு எளிதாய்ச் சுருக்கிவிடவும் முடியாது. ஹெலன் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் பேசும்போது அதேயளவு முக்கியத்துவத்துடன் ஜென்னி பற்றியும் உரையாடத்தான் வேண்டும். தாம் திரும‌ண‌ம் செய்துகொண்டோ (அல்லது உறவொன்றில் இருந்துகொண்டோ)  த‌ங்க‌ள் அலைபாயும் ம‌ன‌த்திற்காய் தம்மில் ந‌ம்பிக்கை வைத்திருக்கும் ஆணை/பெண்ணை ஏமாற்றி பிற‌ருட‌ன் உற‌வு வைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளையும் நாம் அவ்வ‌ள‌வு எளிதாக‌ க‌ட‌ந்து போய் விட‌முடியாது. முக்கிய‌மாய் இன்றைய‌ கால‌த்தில் பேராசானை உதார‌ண‌ங்காட்டி இங்கே ப‌ல‌ர் த‌ம்மை நியாய‌ப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌தை. பேராசானே ஹெல‌னின் முன் த‌லைகுனிந்து நிற்கும்போது, இப்ப‌டி ஆட்ட‌ம் போடுப‌வ‌ர்க‌ளை நாளைய‌ கால‌ம் சும்மா 'ஊ' என்று ஊதித்த‌ள்ளிவிட்டு போய்விடும் என்ப‌தையும் நாம் நினைவூட்டத்தான் வேண்டும்.

இவ்வாறு எல்லாம் எழுதுவ‌தெல்லாம்... மார்க்ஸின் மீது காழ்ப்புண‌ர்வு கொண்டு எதிர்க்கின்ற‌வ‌ர்க‌ளுக்கோ  அல்லது அவரைப் புனித‌மாக்கி திருவுருவாக்குப‌வ‌ர்க‌ளுக்கோ  உதவட்டும் என்பதால் அல்ல‌ என்ப‌தை இத்தால் இங்கே இவ‌ன் உறுதிப்ப‌டுகின்றான். மார்க்ஸின் மீதுள்ள‌ பிரிய‌த்தில் அவ‌ரை அவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்திலிருந்து  எல்லாவிதக் கோணத்திலிருந்தும் வைத்துக் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கான‌ சிறுமுய‌ற்சியே இதுவாகும். இன்னொன்று த‌மிழ்ச்சூழ‌லில் உரையாட‌ல்க‌ள் எந்த‌ள‌வு ஆழ‌மாக‌வும், நேர்மையாக‌வும் நிக‌ழ்கின்ற‌ன‌ என‌ எட்டிப் பார்க்கும் ஆவ‌லுமாகும்.. ஷோபாவின் ந‌க்க‌லும் நையாண்டியுமான‌ புனைவுக‌ள் மீது இவ‌னுக்கு மிக‌ப் பெரும் விருப்புள்ள‌து எனினும், அதே அள‌வுகோல்க‌ளுட‌னேயே க‌ட்டுரைக‌ள் எழுதும்போது சில‌வேளைக‌ளில் ஆப‌த்தாய்/அப‌த்த‌மாய்ப் போய்விடும் என்ப‌தை அவ‌ருக்கு சுட்டிக்காட்ட‌வும் வேண்டியிருக்கிற‌து.

இனி முதல் நாள் கூபாப் ப‌ய‌ண‌த்தில் சென்றிறங்கிய வ‌ராதாரோ கடற்கரையில் கண்டவை, இரசித்தவை...

மினுங்கும் திரவங்கள்

சே மற்றும் காட்சிப் படங்கள் @ Market Place

 அடுக்குச் செவ்வரத்தம்பூ

அடுத்த பகுதியில் ஹவானாப் பயணம் ப‌ற்றியும், பினாகோலடா எப்ப‌டிச் செய்வ‌து என்ப‌து ப‌ற்றியும் விள‌க்கித் தெளிக்க‌ப்ப‌டும்.

குறிப்பு: மேலே எழுதப்பட்ட பகுதி முழுதும் ஷோபாசக்தி  'அன்புள்ள‌ ஹெல‌ன் டெமூத்' கட்டுரையில் தந்த இணைப்புகளை முன்வைத்து மட்டுமே எழுதப்படுகிறது.

(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்....)
ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01

Tuesday, April 27, 2010

ஓர் இள‌ம்பய‌ணியின் கூபா ப‌ய‌ண‌க் குறிப்புகள் - 01

-ம‌ற்றும் சில‌ குறுக்குக் கேள்விக‌ளும்-

'கூபா'  இன்றொரு க‌ம்யூனிச‌ நாடாக‌ அறிய‌ப்ப‌ட்டாலும் 1959ம் ஆண்டு புர‌ட்சிக்கு முன்பான‌ அத‌ன் வ‌ர‌லாறு அவ்வ‌ள‌வு மெச்சக் கூடிய‌தொன்ற‌ல்ல‌. கிறிஸ்ரோப‌ர் கொலம்ப‌ஸ் 14ம் நூற்றாண்டின் முடிவில் கூபாவைக் க‌ண்டுபிடிக்கும்போது அங்கே பூர்வீக‌க் குடிக‌ள் வாழ்ந்து கொண்டிருந்த‌ன‌ர். அத‌ன் பின் நிக‌ழ்ந்த‌ ஸ்பானிய‌ ஆக்கிர‌மிப்புக்க‌ளினால் இன்று கூபாவில் -கிட்ட‌த்த‌ட்ட‌-  எந்த‌வொரு பூர்வீக‌க்குடியும் (tribes)  இல்லை என‌ச் சொல்கின்றார்க‌ள். ஆக‌ அவ்வாறான‌ ஒரு கொடுமையான‌ இன‌ அழிப்பு கூபாவில் ஸ்பானிய‌ர்க‌ளால் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. கூபாவின் ஒரு மாகாணமான‌ Matanzas என்ற‌ பெய‌ரே 'Massacre' என்ற‌ பூர்விக்க‌குடிக‌ளை கூட்டாக‌ கொன்ற‌ சரித்திர‌த்திலிருந்தே வ‌ந்திருக்கின்ற‌து. வ‌ர‌லாற்றைச் ச‌ற்று நேர‌ம் கால‌த்தின் ப‌னிப்பாள‌த்தில் புதைத்துவிட்டு ப‌ய‌ண‌க்குறிப்புக்க‌ளுக்கு வ‌ருவோம்.

முத‌லில் த‌லைப்பிலிருக்கும் 'இள‌ம் ப‌ய‌ணி'க்கு ஒரு அறிமுக‌த்தைத் த‌ர‌வேண்டியிருக்கிற‌து. இள‌ம்ப‌ய‌ணி என்ப‌து குறிப்பிட்ட‌து இள‌ம் வ‌ய‌தில் இப்ப‌ய‌ணி இருக்கின்றார் என்ப‌தால் அல்ல‌; அவ‌ர் மிக‌ச் சொற்ப‌மாக‌வே ப‌ய‌ண‌ங்க‌ளைச் செய்திருக்கின்றார் என்ற‌ கார‌ண‌த்தால் ம‌ட்டுமேயாகும். 'த‌மிழின‌த் த‌லைவ‌ர்' க‌ருணாதியின் க‌ட்சியின் இளைஞ‌ர் அணிக்கு 50 வ‌ய‌தைத்தாண்டியும் ஸ்ராலின் த‌லைவ‌ராக‌, இளைஞ‌ராக‌ இருந்த‌தைத் த‌மிழ்கூறும் ந‌ல்லுல‌க‌த்திற்கு நினைவூட்ட‌த் தேவையில்லை. மேலும் இல‌க்கிய‌ச் சூழ‌லில் முதுபெரும் ப‌டைப்பாளிக‌ள் ஞான‌ஸ்தான‌ம் வ‌ழ‌ங்கும்வ‌ரை இள‌ம்ப‌டைப்பாளியாக‌வோ/'வ‌ய‌துக்கு வ‌ராத‌' ப‌டைப்பாளியாக‌வோ கால‌ம் த‌ள்ளவேண்டிய‌தைப்போல‌, ப‌ய‌ணிக‌ளுக்கும் இவ்வாறான எழுத‌ப்ப‌டாத‌ விதிக‌ள் -க‌ண்ணுக்குத் தெரியாது- புதைந்து இருக்க‌க்கூடும். ஆக‌வேதான் எதிர்கால‌த்தில் வ‌ர‌க்கூடிய‌ பிக்க‌ல் பிடுங்குப்பாடுக‌ளைத் த‌விர்க்கும் பொருட்டே 'இள‌ம்ப‌ய‌ணி' என‌ அழைத்துக்கொள்ள‌ இவ‌ன் விரும்புகிறான‌.

சில‌ இல‌க்கிய‌வாதிக‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ப் ப‌ண‌த்தில் ப‌ய‌ணிக்கும்போது த‌னியாக‌வும், யாராவ‌து ஏமாளி வாச‌க‌ர்/ந‌ண்ப‌ர்க‌ள் வாய்க்கும்போது புல்வெளி தேச‌ங்க‌ளுக்கு குடும்ப‌த்தோடு ப‌ய‌ணிப்ப‌தும் ஒரு வ‌ழ‌க்க‌மாக‌ இருக்கிற‌து.  அதிக‌மாக‌ எப்போதும் த‌னியே ப‌ய‌ணிக்கும் குடும்ப‌த்த‌லைவ‌ர்க‌ள், த‌ம் துணைக‌ளுக்கும் பிள்ளைக‌ளுக்கும் த‌ம்மைப் போல‌வே ப‌ய‌ணிக்க‌ விருப்பு இருக்கும் என்ப‌தை சாதுர்ய‌மாக‌ ம‌றைக்கும் சாம‌ர்த்திய‌த்தைப் ப‌ற்றி ப‌ய‌ணிக‌ளுக்கான‌ 'கொல‌ம்ப‌ஸ் அக‌ராதி' த‌ன் முத‌லாம் அத்தியாத்தில் கூறுகிற‌து.

கூபா போன்ற‌ இட‌துசாரிக‌ள் ஆளும் ந‌க‌ருக்கு போகும்போது இவ‌ன் நிறைய‌ முன் ஆய‌த்த‌ங்க‌ளைச் செய்ய‌வேண்டியிருந்த‌து. இந்தியா என்னும் இந்து த‌ரிச‌ன‌ ம‌ர‌புள்ள‌ நாட்டின் ந‌திக‌ளையும் கோயில்க‌ளையும் அசுத்துமாக்குப‌வ‌ர்க‌ள் அங்கு பெரும்பான்மையாக‌வுள்ள‌ இந்துக்க‌ள் அல்ல‌, இட‌துசாரிக‌ளும், பெரியாரிய‌வாதிக‌ளும் ம‌ட்டும் என்று உள்ளொளி த‌ரிச‌ன‌ம் பெற்ற‌ அறிவுஜீவி உறுதியாக‌க் கூறிய‌தால் இவ‌ன் கூபாவில் இற‌ங்கும்போது க‌வ‌ன‌மாக‌ இருந்தான். கூபாவில் பெரும்பான்மையாக‌ இருக்கும் இட‌துசாரிக‌ள் அங்குள்ள‌ ந‌திக‌ளையும் க‌ட‌ற்க‌ரைக‌ளையும் அசுத்த‌மாக்க‌வும், க‌ண்ட‌ க‌ண்ட‌ இட‌ங்க‌ளில் ம‌லங்க‌ழிக்க‌வும் கூடுமென்ற‌ அச்ச‌த்தில் இவ‌ன் க‌ன்டாவிலிருந்து போகும்போது அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ இரு சூட்கேஸ்க‌ளில் ஒன்றில் ஒன்ராறியோ வாவியையும் இன்னொன்றில் 'ந‌க‌ரும் ம‌ல‌ச‌ல‌கூட‌த்தை'யும் எடுத்துச் சென்றிருந்தான். ஆனால் அதிச‌ய‌த்த‌க்க‌ வ‌கையில் கூபாவில் அழ‌கான‌/சுத்த‌மான‌ க‌ட‌ற்க‌ரைக‌ள் எங்கும் நிறைந்திருந்த‌ன‌, இந்தியாவிலிருக்கும் ம‌க்க‌ள் அநேக‌ கோயில்க‌ளைச் சுற்றி த‌ம‌து க‌ழிவுக‌ளால் இன்னொரு கோபுர‌ம் க‌ட்டுவ‌தைப் போல‌ எதையும் கூபாவில் இட‌துசாரிக‌ள் நிக‌ழ்த்திய‌தாக‌க் காண‌வில்லை.

ஆனால் இவ‌னுக்கு விமான‌ நிலைய‌த்தில் இற‌ங்கிய‌போது ஒரு ச‌ந்தேக‌ம் அரிக்க‌த் தொட‌ங்கிய‌து. கும்ப‌மேளாவில் போய் இற‌ங்குவ‌தே பாவ‌ங்க‌ளை க‌ரைக்க‌த்தான் என்றால் அந்த‌ நேர‌த்தில் எப்ப‌டி வைர‌ஸ் சில‌ர‌து த‌ள‌ங்க‌ளை ஆட்டி அந்த‌ர‌ப்ப‌ட‌ச் செய்கின்ற‌ன‌ என்ப‌துதான். அப்ப‌டியாயின் ஹ‌ரித்துவாரில் இற‌ங்கியும் சில‌ரின் பாவ‌ங்க‌ள‌ க‌ரைய‌வே இல்லையா? கும்ப‌மேளாவில் இற‌ங்கியே பாவ‌ங்க‌ள‌ க‌ரைய‌வில்லை என்கின்ற‌போது இட‌துசாரிக‌ளின் கூபா க‌ட‌ற்க‌ரையில் இற‌ங்கினால் என்னென்ன‌ பிர‌ள‌ய‌ங்க‌ள் உருவாக‌ப்போகின்ற‌தோ என்ற‌ க‌வ‌லையே இவ‌னுக்குள் திர‌ள‌த் தொட‌ங்கின‌. த‌ன‌து த‌ள‌த்திற்கு தின‌மொரு 'உங்க‌ள் ஆண்குறியை இஞ்சு இஞ்சாக‌ நீள‌மாக்க‌' என்று வ‌ரும் வைர‌ஸ் பின்னூட்ட‌ங்க‌ள் நிறைய‌ வ‌ந்து த‌ன‌து இள‌ம்ப‌ய‌ணித்த‌ள‌ம் முற்றாக‌வே இணைய‌வெளியில் மூழ்கிவிடுமோ என்ற‌ ப‌ய‌ம் இருந்துகொண்டிருந்த‌து. ந‌ல்ல‌வேளையாக‌ திரும்பிவ‌ரும்போது எப்போதும்போல‌ -வாசிப்ப‌வ‌ர் இல்லாது-இலையான் க‌லைக்க‌ த‌ள‌ம் இய‌ங்கிக்கொண்டிருந்த‌து.

ச‌ரி, இப்போது கால‌த்தில் உறைய‌வைத்த‌ கூபா ச‌ரித்திர‌த்தை மீள‌ப் பார்ப்போம். இவ்வாறாக‌ பூர்வீக‌க் குடிக‌ளை அழித்து ஸ்பானிய‌ர்க‌ள் த‌ங்க‌ளை கூபாவில் நிறுவிக்கொண்டாலும், கால‌ப் போக்கில் அவ‌ர்க‌ளுக்கு, த‌ங்க‌ளை ஸ்பானிய‌ நாடும் அர‌ச‌ர்க‌ளும் ஆண்டுகொண்டிருப்ப‌து பிடிக்க‌வில்லை. எப்ப‌டி அமெரிக்காவில் குடியேறிய‌ வெள்ளைய‌ர்க‌ள் த‌ம் மூதாதைய‌ரான‌ பிரித்தானிய‌ர்க‌ளுக்கு எதிராக‌ சுத‌ந்திர‌ நாடு வேண்டிப் போரிட்டார்க‌ளோ அவ்வாறே கூபாவிலும் 'கூபா கூப‌ன்க‌ளுக்கும் என‌வும் க‌றுப்பின‌ அடிமைக‌ளுக்கு விடுத‌லையும்' என்றும் கோரி ஸ்பானிய‌ பேர‌ர‌சுக்கு எதிராக‌ப் போராடினார்க‌ள். எனினும் அவ‌ர்க‌ளின் ப‌த்து வ‌ருட‌க் கால‌த்தைய‌ போராட்ட‌ம் ந‌சுக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஸ்பானிய‌ பேர‌ர‌சிட‌ம் கூபா பேருக்கு இருந்தாலும் வ‌ர்த்த‌க‌ம், நில‌ம் என்ப‌வ‌ற்றை நிறைய‌ அமெரிக்க‌ர்க‌ள் சொந்த‌மாக்குகின்ற‌ன‌ர்.

வ‌ழ‌மைபோல‌ பின் க‌த‌வால் அமெரிக்க‌ அர‌சு, கூபாவை த‌ரும்ப‌டி ஒரு இர‌க‌சிய‌ உட‌ன்ப‌டிக்கைக்கு ஸ்பெயினிட‌ம் போகின்ற‌து. எனினும் ஸ்பெயின் நிராக‌ரிக்கின்ற‌து. மீண்டும் எழும் உள்நாட்டுப் போரில், அமெரிக்கா த‌ன‌து குடிம‌க்க‌ளுக்காய் அனுப்புகின்ற‌ ஒரு க‌ப்ப‌ல் ஹ‌வானாவில் வெடித்துச் சித‌ற‌ அமெரிக்கா நேர‌டியாக‌ ஸ்பெயினுட‌ன் போரிட‌த் தொட‌ங்குகின்ற‌து. ஸ்பெயின் பின்வாங்க‌ அமெரிக்க‌ வ‌ச‌மாகின்ற‌து கூபா. த‌ம‌து நாட்டை தாமே ஆள‌வேண்டுமென‌ கூப‌ன்க‌ள் கோரிக்கை விட‌ அமெரிக்கா கூப‌ன்க‌ளிட‌ம் தாம் எழுதிய‌ ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திடும்ப‌டி கேட்கின்ற‌து. அந்த‌ ஒப்ப‌ந்த‌த்திலுள்ள‌வை, தெளிவாக‌ அமெரிக்கா கூபாவை த‌ன் கால‌னிய‌ நாடாக‌ வைத்திருக்க‌ விரும்புவ‌தைக் காட்டுகின்ற‌து. அந்த‌ ஒப்ப‌ந்த‌த்திலுள்ள‌தை இன்றும் மீற‌ முடியாத‌ நிலையே... கூபாவின் குவாண்ட‌மோனோ ஜ‌க்கிய‌ அமெரிக்காவின் ஆக்கிர‌மிப்பில் இருப்ப‌து.

அடுத்த‌ ப‌குதியில் கூபாவில் இவ‌ன் இற‌ங்கிய‌ முத‌ல் நாளையும், 'வ‌ராதாரோ' க‌ட‌ற்க‌ரையில் வைத்து 'அன்புள்ள‌ மார்க்ஸ்' வாசித்து சில‌ உண்மைக‌ளைக் க‌ண்ட‌றிந்தையும் சொல்வான். மேலும் கூபாவிற்கு போகாம‌லே இவ‌ன் க‌தைவிடுகிறான் என்று நீங்க‌ள் ஊகிப்ப‌தைத் த‌வ‌று என்ப‌தும் ஆதார‌பூர்வ‌மாய் நிரூபிக்க‌ப்ப‌டும்.

(உருத்திராட்சைக் கொட்டைக‌ள் உருட்ட‌ல் தொட‌ரும்...)

Friday, April 09, 2010

சின்னத் தம்பி – செழியன்

எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். ஆனால், நாவலப்பிட்டி கதிரேசன் குமாரா மகா வித்தியாலயத்தில் பிட்டத்தில் ஆறு அடி வாங்கி சாதனை படைத்தது என்னைத் தவிர இன்று வரை வேறு யாருமாக இருக்கமுடியாது.

மாணவர்களைத் திருத்துவதற்காக ‘பிட்டத்தில் பிரம்பால் ஆசிரியர்கள் அடிப்பதுண்டு’ என்பது உண்மைதான். அடிவாங்கிய மாணவன் துடிதுடித்துப் போனதாகவும் துவண்டு விழுந்ததாகவும் பலவிதமான கேள்விக் கதைகள் உள்ளன. அந்த பிரம்படியின் தழும்புகள் இன்றுவரை சிலரது பிட்டத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இந்த வீரக்கதைகளை தமது மனைவியிடம் கூறி ‘மாவீரன்’ என்ற பெயரை இரகசியமாகப் பெற்றுக்கொண்ட வீரர்களும் உள்ளதாகக் கதைகள் உலாவுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் பள்ளிக்கூடங்களில் நடந்த இவை, மனித உரிமை மீறல் என்பதால் இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நமது ஐ.நாடுகள் சபை விருப்பப்படலாம். வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் தானே. ஆனால், நிச்சயமாக நமது அரசு தமது மக்களின் பிட்டத்தை ஆராய்வதற்கு ஐ.நா.வை அனுமதிக்கத் தயாராக இருக்காது என்று நாம் நம்பலாம். அதனிலும், பார்க்க ‘போராடி மடிந்து போகலாம்’ என்று அந்த சகோதரர்கள் நினைக்கலாம். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு கையாலாகாத அமைப்பு என்றோ, களங்கப்பட்ட அமைப்பு என்றோ வாய்க்கு வந்த படி உடனே நாம் சொல்லி விட முடியாது.

பெரும்பான்மையான நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் பெண்களையோ, ஆண்களையோ பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது சரியா, பிழையா? என்று ஐ.நா. தீர்மானிக்கும் வரை அது ஒரு ‘ஐனநாயக அமைப்பு’ என்றும், பூமிப் பந்தையும் அதில் வாழும் மனிதர்களையும் காப்பாற்றும் ஒரு காவல் தெய்வம் என்றும் நிச்சயமாக இல்லாவிட்டாலும், ஓரளுவுக்கேனும் நம்பலாம்.

அந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அருளம்பலம், ராஐன் செல்வநாயகம், தியாகராஐட, மந்திரி குமார சூரியர், மேயர் துரைப்பாவைப் பற்றியெல்லாம் எனது கையெழுத்து சஞ்சிகையில் அவமரியாதையாக எழுதினேன் என்பது என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. கையெழுத்துச் சஞ்சிகையை கைப்பற்றி வகுப்பாசிரியை மூலமாக அதிபரின் அறைக்கு என்னை விசாரணைக்காக அனுப்பிவைத்த கைங்கரியத்தை செய்தவன் இராமச்சந்திரன் என்ற மாணவன்.

மதிய இடைவேளையின் போது என்னை அதிபர் விசாரணைக்காக அழைத்தார். உப அதிபர் முன்னிலையில் சஞ்சிகையை புரட்டிப்பார்த்துவிட்டு,‘மந்திரிமாரைப் பற்றியெல்லாம் கூட இப்படி எழுதி இருக்கின்றான்’ என்று ஆச்சரியமாகக் கூறியவர், என்ன நினைத்தாரோ சில நிமிடங்களில் விடுதலை செய்தார். எனது அப்பாவின் முகம் சமயத்தில் அவருக்கு வந்திருக்கலாம் என்றும் எனக்கு ஒரு நினைப்பு.

இதை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்ல, வகுப்பாசிரியை பிரகாஸ்பதிக்கும் தாங்கமுடியவில்லை. அதிபரிடம் மீண்டும் சென்றார்கள். என்ன பேசினார்கள் என்பது மட்டும் ஒரே மர்மம். இடைவேளை முடிந்ததும் அதிபர் தனது நீளமான பிரம்புடன் வந்தார். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போன்று, இந்தப் பிரம்பு தன்னுடனேயே பிறந்தது என்ற பெரு நினைப்பு அவருக்கு. கூட வகுப்பாசிரியை பிரகாஸ்பதியும் வந்தார்.

‘கட்டுரைகள் எழுதியது யார்?’, ‘ஓவியங்கள் வரைந்தது யார்?’, ‘கவிதைகள் எழுதியது யார்’, ‘யாருடைய கையெழுத்தில் சஞ்சிகை உள்ளது?’ என்று பலவகையான கேள்விகள் அதிபர் கேட்டார். எனக்குப் பதில் சொல்வதில் எந்தக் கஸ்டமும் இருக்கவில்லை. ஏன் என்றால், எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்.

‘நான் தான் செய்தேன், வேறு வேறு பெயர்களில்’ என்ற எனது பதிலால் சஞ்சிகையில் ஓவியம் வரைந்தவர், கவிதை எழுதியவர், சிறுகதை எழுதியவர் என்று எல்லாரும் சற்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் எனக்கு பிரம்படி என்று அதிபர் தீர்மானித்தார். அது விசாரணைக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட முடிவு என்பதுதான் உண்மை.

அதிபர் ராஐகோபால் அந்தக் காரியத்தை செய்ய முன்னர் சுவரைப் பார்க்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார். அது ஏனைய மாணவர்கள் எனது பிட்டத்தை பார்ப்பதற்கு வசதியாகவா? அல்லது பிரம்பால் அடிக்கும் போது எனது முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாததாலா? என்று தெரியாது. ஆறு அடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர் துளி கூட வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகு அந்தக் கல்லூரியில் என் மனம் துளியளவும் ஒட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் சென்று படிக்கும் திட்டம் ஏற்கெனவே இருந்தது. அதன் படி அடுத்த ஆண்டு மீண்டும் எட்டாம் வகுப்பில் உரும்பராய் இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.

ஒரு நாள் காலை கல்லூரிக்கு செல்லும் வழியில், ‘ இன்று துக்க தினம். பாடசாலையை பகிஸ்கரியுங்கள்’ என்று வீதியில் நின்ற சில இளைஞர்கள், மாணவ மாணவிகளை வழிமறித்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என்னை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது முன் எப்போதும் பார்க்காத ஒரு புதினமாக எனக்கிருந்தது. கல்லூரி வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பில் இருந்த சில மாணவர்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். என்ன விசயம் என்று மெல்லக் கேட்டேன். ‘திரவியம் செத்துப்போட்டான்’ என்று கலக்கத்துடன் கூறினார்கள். எல்லாருடைய முகத்திலும் யாரோ நெருங்கிய உறவினரை இழந்த துக்கம் வழிந்தது. கோப்பாய் வங்கியை கொள்ளை அடித்துக்கொண்டு செல்லும் வழியில், பொலிசார் துரத்திச் சென்று கைது செய்ததால் சயனைட் அருந்தி திரவியம் இறந்து போனதாக ஒருவன் சொன்னார்.

‘யார் இந்தத் திரவியம்?’ என்று எனக்கு மனது குடைந்தாலும், கேட்க வெட்கமாக இருந்தது.

‘துவக்கு வாங்கத்தான் திரவியத்துக் காசு தேவைப்பட்டது’ என்று இன்னொருவர் சொன்னான்.

‘அவனோட போன ஆட்கள் எல்லாம் தப்பிவிட்டினம். திரவியம் மட்டும்தான் பிடிபட்டுப் போனான்’ என்று இன்னொருவன் சொல்ல, ‘நீர்வேலிச் சனங்கள் தான் திரவியத்தை யார் என்று தெரியாமல் பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்திட்டுதுகள்’ என்று எவனோ ஆவேசப்பட்டான்.

யார் இது? எதற்காக மாணவர்கள் கலங்குகின்றனர். ஆசிரியர்கள் தமது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இளைஞர்கள் வீதியில் நிற்கின்றனர். எனது காதுக்குள் மிக இரகசியமாக இரஞ்சித் சொன்னான். திரவியம் என்பதுதான் சிவகுமாரன். ஆயுத மூலமே இனி விடுதலை என்று, இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த போராளி. பொலிஸ் அதிகாரிக்கே குண்டு வைத்தவன். தற்போது தலைமறைவாக இங்குதான் எங்கோ வாழ்ந்து வருகின்றான். பொலிசார் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியோடு அலைகின்றனர்.

சிவகுமாரனின் உடல் உரும்பராயில் தகனம் செய்யப்பட எடுத்து வரப்பட்டது. வழமையாக ஒருவர் ஊரில் இறந்தால் எனது வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஒரு நூறு, இருநூறு பேர்கள் செல்வார்கள். ஆனால், சிவகுமாரனின் உடல் தகனத்துக்காக எடுத்து வரப்பட்ட போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எனது வீதிவழியாகச் சென்றனர். எனது ஊர் மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் இளைஞர்கள், யுவதிகள் அணி திரண்டு வந்திருந்தனர்.

பனைகளும் வடலிகளும் கொய்யா மரங்களும் முள்ளு மரங்களும் எந்த வித தடைகளும் இன்றி மிக சுதந்திரமா தங்கள் விருப்பப்படி வளர்ந்து இருந்த எனது கடைசி வளவின் எல்லையிலே அந்த மயானம் இருந்தது. உயரமான ஒரு கொய்யா மரத்தின் உச்சியில் ஏறி, தாய் நிலம் பிளந்து தந்த வீரனின் இறுதி நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சிவகுமாரன் இருக்கும் போது ஒரு புதிய வழியைக் காட்டினான். அது மட்டுமல் இல்லாமல் போன பின்னரும் அவன் புதிய வழிமுறைகளை எழுதிச் சென்றான். தமிழர்களின் முறைப்படி பெண்கள் யாருமே மயானத்துக்குச் செல்லக் கூடாது. அவர்கள் படலி வரை மட்டுமே வருவார்கள். ஆனால், சிவகுமாரனின் இறுதிக் கிரிகைகள் நடைபெற்ற மயானத்தில் பல நூறுக்கும் அதிகமான பெண்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அதற்கு மேலாக சிவகுமாரனின் இறுதி முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூக்குரல் இட்டனர். வழமைப்படி பெட்டியில் அடைக்கப்பட்ட உடல் மீண்டும் திறந்து பார்க்க அனுமதிக்கப்படாது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு இணங்கி அந்த வீரனின் உடல் ஒரு வானின் உச்சியில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி பா.உ நவரத்தினத்தினம் உட்பட சில பா.உ க்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் காண்பிக்கப்பட்டது. குழந்தைத் தனமான அந்த முகத்தை கண்டதும் எல்லா மக்களும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார்கள். எல்லார் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. சிலர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. அவனை வெறித்துப் பார்த்தார்கள். அவர்கள் மனதில் வைராக்கியம் வளர்ந்தது.

கடைசியில் நான் ஏறி இருந்த கொய்யா மரத்தின் அடியில் இருந்து சுமார் பத்து அடி தூரத்தில் அந்த வீரனின் தியாக உடல் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த அக்கினியை வெகு நேரமாக அந்த கொய்யாமரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். வீடு திரும்ப மனம் இல்லை. ஒருவாறு நமது பங்கு கிணற்றின் உறவினர் வீட்டுக்குச் சென்றேன்.

‘செத்த வீட்டுக்குப் போட்டுவந்து தாகத்துக்கு எனது கையால் கிணத்துத் தண்ணியை வாங்கிக் குடிச்சிட்டு போன பெடியங்கள், பழிக்கு பழி வாங்குவோம் என்டு சத்தியம் பண்ணிவிட்டுப் போறாங்கள்’ என்று கண்கள் மலர லாலி மச்சாளின் கணவர் சொன்னார். சந்தோசமாய் இருந்தது.

ஒரு இந்து மயானத்தில் வழமைக்கு மாறாக ஒரு சமாதி கட்டப்பட்டது. பொன். சிவகுமாரன் என்ற பெயர் அதில் பொறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த சமாதியில் சிவகுமாரனின் தாயர் பூக்களையும் தீபங்களையும் ஏற்றி வைப்பார். சமயத்தில் தண்ணீரும் புல்லு வெட்ட மண்வெட்டியும் எனது வீட்டில் இருந்து கொடுக்கப்படும். இந்த நாட்களில் ஒரு நாள் திடீரென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணிவகுத்து எனது வீட்டைத் தாண்டி மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து மயானத்துக்குச் சென்றேன். அவர்கள் பொன். சிவகுமாரனின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் ‘தமிழ் இளைஞர் பேரைவையினர்’ என்றும், அதன் தலைவர் சந்ததியார் என்றும் தெரியவந்தது. அவர்கள் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தந்தை செல்வாவின் ‘தமிழ் ஈழமே இனி நமது இறுதி முடிவு’ என்று முழங்கம் எழுப்பி, காங்கேசன்துறை இடைத்தேர்தலின் இறுதி பிரசாரக் கூட்டத்திற்காக கால்நடையாக முற்றவெளிக்கு செல்லுகின்றார்கள் என்பதும் சந்ததியாரின் பேச்சில் இருந்து தெரியவந்தது.

மந்திரம் சபிக்கப்பட்ட ஒருவனைப் போல அவர்களை நான் பின்தொடர்ந்தேன். சந்ததியாரின் கட்டளைப்படி இரண்டு இரண்டு பேராக வீதியின் ஓரமாக நாம் நடந்தோம். எனது வீட்டைக் கடந்து நான் செல்லும் போது கூட வீட்டில் இருந்த யாருமே என்னைத் தடுக்கவில்லை. சந்ததியாரின் தலைமையில் வாகனங்களுக்கு இடைஞ்சல் இன்றி வீதிகளின் ஓரமாக நாம் நடை பயணம் செல்லுகின்ற போது எல்லா வீடுகளில் இருந்தும் மக்கள் படலைக்கு வந்து எங்களைப் பார்த்து மனமார வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் இருந்து தாகத்துக்கு எமக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. பலாலி வீதி வழியாக கோண்டாவில் சந்தியைக் கடந்து நாம் சென்று கொண்டிருக்கும் போது, தடால் அடியாக பொலிசாரின் சில வாகனங்கள் எம்மை வழி மறித்தன. சந்ததியாரின் பின்னால் ஒரு இரண்டடி தூரத்தில் இருந்த எனக்கு சற்று பயமாக இருந்தது.

ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அதிகாரி சந்ததியாரை கேள்விக்குள்ளாக்கினார். அவருக்கு தமிழ் தெரியாது. சந்ததியாருக்கு சிங்களம் தெரியாது. எனவே, அந்த பொலீஸ் அதிகாரி ஆங்கிலத்தில் பேசினார். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சந்ததியார் கூறினார். உடனே இன்னொரு பொலிஸ் அதிகாரி மொழிபெயர்ப்புக்காக அமர்த்தப்பட்டார்.

‘அனுமதி இல்லாமல் ஊர்வலம் போவது சட்ட விரோதம். உடனே கலைந்து செல்லுங்கள்’ என்றார் உதவிப் பொலிஸ் அதிகாரி.

‘இது ஊர்வலம் அல்ல; பஸ்சுக்கு காசு இல்லாதல், தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து செல்லுகின்றோம்.’

‘இது சட்ட விரோதம். போது மக்களுக்கு நீங்கள் இடைஞ்சல் செய்கின்றீர்கள்’.

‘நாங்கள் வீதியில் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. ஒரு ஓரமாக நடந்து செல்லுகின்றோம்.’ இது சந்ததியாரின் பதில்.

ஒரு சில நிமிட பேச்சுகளின் பின்னர் சந்ததியார் எதற்கும் மசியாத படியால் பொலிஸ் வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன. நமது கூட்டம் ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஒலி எழுப்பியது. தொடர்ந்து நாம் நடந்தோம். திருநெல்வேலி விவசாய கழகத்தை கடந்து நாம் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் எம்மை வழி மறித்தது. அதில் இருந்து மிக ஆவேசமாக இறங்கி வந்தார் தளபதி அமிர்தலிங்கம் அண்ணா.

‘என்ன சந்ததியார். நீங்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு, என்னை முன்வைத்துக் கொண்டு வழங்கிய உறுதி மொழி என்ன?… பிறகு, எப்படி கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ஊர்வலம் செய்வீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டார்.

‘அண்ணா! இது ஊர்வலம் இல்லை. பஸ்சுக்கு காசு இல்லாததால் நாங்கள் நடந்து வருகின்றோம்’ என்று மிக அமைதியாக சந்ததியார் பதில் அளித்தார்.

‘சரி அப்படியானால் இப்பவே உங்கள் எல்லாரையும் கூட்டத்திற்கு நான் அனுப்பி வைக்கின்றேன்’ என்று கூறிய அமிர்தலிங்கம், அந்த பலாலி வீதியால் வந்த பஸ், கார் என்று எல்லா வாகனத்தையும் கைநீட்டி மறித்தார். அவருடைய கைகாட்டலுக்கு எல்லா வாகனங்களும் சட்டுப் புட்டு என்று நின்றன. அமிர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று வழியால் வந்த எல்லா பஸ்களும், ஏதோ ஏதோ வேலைகளுக்காக அந்த வழியால் வந்த கார்களும் எந்தவித ஆட்சேபனையும் இன்றியும், கட்டணங்கள் எதுவும் இன்றியும் எங்களை ஏற்றிக் கொண்டன. ஒரு பத்து நிமிட நேரத்தில் அங்கிருந்த எல்லாரும் ஏற்றப்பட்டனர்.

‘சின்னத் தம்மி… இந்தக் காருக்குள் ஏறுங்கள்’ என்று அமிர் அண்ணா என் தோளைத் தட்டிச் சொல்ல, என்னை ஒரு கார்க்காரர் ஏற்றிக்கொண்டார்.

நாங்கள் எல்லாரும் தந்தை செல்வாவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். தமிழர்களின் உரிமைக்கான முழக்கம் அன்று முத்தவெளியில் எழுப்பப்பட்டது. சுமார் ஐம்பதினாயிரம் பேர் அதில் கலந்து கொண்டிருப்பார்கள். அந்த நிகழ்வு சுமார் இரவு பத்து மணியளவில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு எப்படி நான் வீடு வந்து சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனது நினைவில் இல்லை.

‘எங்கு போய்விட்டு இந்த அர்த்த இராத்திரியில் வருகின்றாய்’ என்றும் எனது வீட்டில் யாரும் கேட்கவும் இல்லை. எனது வீட்டு நாய் மட்டும் என்னைக் கண்டதும் சத்தமில்லாமல் குதித்து வாலை ஆட்டியது. இரவுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அதற்கும் தெரியும்.

(ந‌ன்றி: 'கால‌ம்' இத‌ழ் 34)