Friday, February 23, 2007

லட்சுமி நரசு

லட்சும் நரசு அவர்கள் குறித்து ராஜ்கெளதமனின் 'அயோத்திதாசர் ஆய்வுகள்' நூலில்தான் சற்று விரிவாக வாசித்திருக்கின்றேன். இந்தக்கட்டுரை நல்லதொரு அறிமுகத்தை லட்சுமி நரசு குறித்து தருகின்றது. இநதக்கட்டுரையை மொழிபெயர்த்தவரும் வலைப்பதிவுகளில் பூங்குழலி என்று எழுதுபவரும் ஒருவரா?
(~டிசே)
.......

லட்சுமி நரசு: அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடி!
-ஜி. அலாய்சியஸ்


பொக்காலா லட்சுமி நரசு - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் வாழ்ந்த பவுத்த முன்னோடிகளில் முக்கியமானவர். ஆசிய அறிஞர்களால் அக்காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வந்த பவுத்த மரபுகளில் இருந்து காலத்திற்கேற்ற, விடுதலை அளிக்கும் மதத்தை, மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்திய பிற பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், எம். சிங்காரவேலு ஆகியோருடனான தொடர்ந்த கலந்தாய்வுகளோடு, நரசுவின் மத உருவாக்க முயற்சி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைபெற்றது. மதம் என்பதற்கு இன்று அளிக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் மற்றொரு மதத்தை நிறுவுவது, அவர்களின் நோக்கமல்ல. மாறாக, காலத்திற்கேற்ப பகுத்தறிவு சார்ந்த, சுதந்திரமான உலகப் பார்வையும், ஒழுக்க நெறியும் கொண்டு நவீன காலத்திற்குள் நுழையும் ஆண் பெண்களுக்கிடையே சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கவும் வழங்கவுமான ஒரு நெறியை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

நரசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், அவருக்குப் பிறகு தென்னிந்திய பவுத்த சங்கத்தின் சென்னை பெரம்பூர் கிளைக்குப் பொறுப்பேற்றவரான மறைந்த என். ஜீனராஜு என்பவர் சேகரித்தவையே ஆகும். அவற்றில் பரவலாகப் பேசப்பட்டு, அறியப்பட்டு வந்த வாய்மொழித் தகவல்கள் மற்றும் அக்காலத்திய இதழ்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த செய்திகள் ஆகியவையே இருந்தன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலிருந்து தலைநகருக்கு குடி பெயர்ந்து, சென்னை நீதிமன்றங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கிய பொக்காலா செல்லா நாயனம்காரு என்பவரின் மகனாக லட்சுமி நரசு பிறந்தார். அவருக்கு ஆண்டாள் அம்மாள் என்ற சகோதரியும், கிருஷ்ணசாமி, ராமானுஜம் மற்றும் பாஷ்யம் என்று மூன்று சகோதரர்களும் உண்டு.

1911இல் சென்னையில் நடந்த ரயில் தீ விபத்தில் ராமானுஜமும் பாஷ்யமும் மரணமடைந்தனர். லட்சுமி நரசு 1861இல் பிறந்து, அறிவியல் கற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெண்கள் நலச் சங்கத்தின் மூலம் பொது வாழ்வில் செயலாற்றி வந்த ருக்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்குப் பிறந்த 10 குழந்தைகளில் வெங்கட் என்ற மகனும், வீரலட்சுமி என்ற மகளும் மட்டுமே பிழைத்தனர். வெங்கட் பாரிசில் படித்துக் கொண்டிருக்கையில், அகால மரணம் அடைந்தார். அவர் மறைந்த வேதனை தாங்க இயலாமல் ருக்மணி அம்மாளும் வெகு விரைவில் இறந்து விட்டார். 1925 இல் நரசு, ராம ரத்தினம் அம்மாள் என்றொரு ‘விதவை'யை பெரம்பூர் வியாரத்தில் பவுத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

நரசு பொதுவாக, அவரது சகோதரர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்டே வாழ்ந்து வந்தார். சமூக மத மூடப் பழக்க வழக்கங்கள், குறிப்பாக சாதிய அமைப்பு மற்றும் அன்றாட சடங்குகளை எதிர்த்து அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுடன் அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவு ஆகியவற்றை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அனைத்து வகையான சமூக இழிவுகளுக்கும் எதிராகவே தொடர்ந்து செயலாற்றி, சமூகத்திற்கு, குறிப்பாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்த அவர், இதய நோய் காரணமாக 1934, சூலை 14 ஆம் நாள் தமது 73 ஆவது வயதில் மரணமடைந்தார். மயிலாப்பூர் சுடுகாட்டில், எளிமையான பவுத்த முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

‘மெட்ராஸ் மெயில்' என்ற ஆங்கில நாளேடு, 23 சூலை 1934 பதிப்பில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது:

‘அண்மையில் சென்னையில் மறைந்த பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவுகளைப் போற்றும் வகையிலும் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் சனிக்கிழமையன்று ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் கூட்டம் கூடிய அந்நிகழ்ச்சிக்கு திவான் பகதூர் ஏ. ராமசாமி (முதலியார்) தலைமை வகித்தார். மறைந்த பேராசிரியருடன் இருபது ஆண்டு காலம் பழகியவரான டாக்டர் சுரேந்திர நாத் ஆர்யா, பேராசிரியரின் அறிவுத்திறன், பொதுநலத் தொண்டு குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், அவரது மறைவின் மூலம் பொதுநலத்திற்கு தொண்டாற்றும் ஒரு முக்கிய ஆளுமையை இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். திரு. பி. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பவுத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் கொண்டிருந்த ஆர்வத்தைப் போற்றினார். இந்த மாநிலத்திலேயே தனது சாதியைத் துறந்து, தான் போதித்தவற்றைத் தானே பின்பற்றிய ஒரே மனிதர் பேராசிரியர் நரசுதான் எனவும் அவர் குறிப்பிட்டார். பவுத்த நோக்கத்திற்காக பேராசிரியர் ஆற்றிய பணிகளை, சென்னை பவுத்த சங்கத்தின் செயலாளரான திரு. மோனியர் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியின் தலைவர் தனது இறுதியுரையில், பேராசிரியர் சிறந்த குணங்களை உடைய, உறுதியான சுதந்திர மனோபாவம் உடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டார். லட்சுமி நரசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் போற்ற ஒரு குழு அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

தொழில் ரீதியாக நரசு ஓர் இயற்பியல் அறிஞர். ஆனால், உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகவே அவர் அறிவியலை கண்டார். அவர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு மாணவராக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது பிஷப் ஹீபர் கல்லூரி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி கிறித்துவக் கல்லூரியில் பின்னர் அவர் இளநிலை விரிவுரையாளராக சேர்ந்தார் எனத் தெரிகிறது. 1892 - 94 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆரணி ஜகிர்தார் தங்கப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவராக அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. 1894 ஆம் ஆண்டு அவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் மாணவர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரியின் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்ட அவர், மாணவர் தங்கும் விடுதிகளின் பொறுப்பாளராகத் திகழ்ந்தார்.

‘தி இந்தியன் ரிவ்யூ' போன்ற இதழ்கள், பெருமை வாய்ந்த கல்லூரி இதழ்கள் போன்றவற்றில் நரசு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். கல்லூரியின் மூத்தப் பேராசிரியரான மறைதிரு. மொபாத் அவர்கள் இல்லாத நேரங்களில் வகுப்புகள் எடுக்கும் பொறுப்பை நரசு ஏற்றபோது, கல்லூரி நிர்வாகிகளால் அவரது நுட்பமான அறிவுத் திறன் அங்கீகரிக்கப்பட்டது. அவருக்கு அவரது துறையில் இருந்த ஆழமான அறிவின் காரணமாக, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை. ஆங்கிலேயரான பேராசிரியர் வில்சன் என்பவருடன் அவர் நடத்திய துறை சார்ந்த விவாதம், அவரது வாழ்நாள் முழுவதும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும் பேசப்பட்டதாக இருந்தது.

பிற்காலத்தில் நரசுவின் நூல் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக, நரசுவின் வாழ்க்கை குறித்த ஆய்வை மேற்கொண்ட அம்பேத்கரின் கவனத்திற்கு இந்த விவாதம் வந்தது. வலிமை மிக்கவர்களின் திமிரை துணிவுடன் சந்தித்த அவரது நேர்மையான உறுதிதான் - நரசுவின் ஆளுமைக்கு சான்றளிப்பதாகவும், அவரது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் பிரதிபலிப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரை நெருக்கமானவராகவும், அதே வேளையில் அவரது சக ஊழியர்கள் மற்றும் ஆதிக்கவாதிகளிடமிருந்து அவரை ஓரளவிற்கு விலக்கி வைப்பதாகவும் இருந்தது.

1909 ஆம் ஆண்டு நரசு, கிறித்துவக் கல்லூரியிலிருந்து விலகி, பச்சையப்பன் கல்லூரியில் முழு நேரப் பேராசிரியராக சேர்ந்தார். 16 ஆண்டுகள் அவர் அக்கல்லூரியில், பல்வேறு விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கேற்றும், கல்லூரியின் பொது நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் சிறப்பாகப் பணிபுரிந்தார். ஒரு சிறந்த ஆசிரியராக, அவரது பணிகள் தேர்வு மேற்பார்வையாளர் மற்றும் உயர்நிலை கல்விக் குழுக்களின் உறுப்பினர் போன்றவற்றிற்கு - சென்னை பல்கலைக்கழகத்தாலும், வேண்டி பயன்படுத்தப்பட்டது. 1925 ஆம் ஆண்டு அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவப்படம் அக்கல்லூரியில் நிறுவப்பட - அவரது சக ஊழியர்களும், மாணவர்களும் எடுத்த முயற்சிக்கு அவர் இசைவு அளித்தாரா என்பது தெரியவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சென்னை மாகாணத்தில் குறிப்பிடத்தக்க பகுத்தறிவு சீர்த்திருத்தவாதியாக நரசு அறியப்பட்டார். ஏற்கனவே பவுத்தத்தின் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு இணைந்து, பரந்த மனப்பான்மை கொண்ட சிறந்த ஆளுமையாக அவரை பரிணமிக்க வைத்தது. மனித நலனுக்குரிய எதையும் தேவையற்றதாகவோ அவரது நேரம், செயல் திறன், ஈடுபாடு ஆகியவற்றை வீணடிக்கக் கூடியதாகவோ அவரால் பார்க்க இயலவில்லை. அக்காலத்தில் உருவெடுத்த பல முற்போக்கான சீர்த்திருத்த அமைப்புகளால் மிகவும் நாடப்பட்ட ஒரு முக்கிய நபராக அவர் திகழ்ந்தார். அனைத்து வகையான சமூக ஒதுக்குதல்களையும் அவர் எதிர்த்தார்.

‘மெட்ராஸ் எக்ஸ்செல்சியார் கிளப்', இந்து சமூக சீர்த்திருத்த சங்கம், தென்னிந்திய சங்கம், தேசிய நிதியம் மற்றும் தொழிற்சங்கம், சென்னை மகாஜன சபா, யங் மென்ஸ் பிரதர்ஹுட், சென்னை சமூக மாநாடு, தென்னிந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, மெட்ராஸ் டீச்சர்ஸ் கில்ட், ராயபுரம் தர்ம அண்ணா சாலா, நாயுடு சங்கம், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி, குழந்தைகள் பாதுகாப்பிற்கான சென்னை சமூக அமைப்பு, இந்திய தொழிற்சங்க மாநாடு, யங் மென்ஸ் லிட்டரரி அசோசியேசன், ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுச் சங்கம், புரசைவாக்கம் திராவிட சங்கம், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு மாநாடு மற்றும் பல்வேறு பவுத்த சங்கங்கள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

லட்சுமி நரசு இன்றுவரை நினைவுக் கூரப்படுவது - அவரது துறை சார்ந்த பங்களிப்புகளுக்காகவோ, பல்வேறு பொது நலத் தொண்டுகளுக்காகவோ அல்ல. மாறாக, அவரது காலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் இருத்தல் குறித்து எழுந்த கேள்விகளுக்கான பதிலாக புத்தரின் போதனைகளை மீட்டுருவாக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காகவே ஆகும். நவீன காலத்தின் தோற்றத்தால், அனைத்து வகையான சமூக மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ நடக்கும் தொடர்ந்த நியாயமற்ற வேறுபாடுகள் ஆகியவை ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்டு வந்த அதே வேளையில், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தவிர்க்க இயலாததாக ஆகி விட்டன. விரும்பியோ விரும்பாமலோ, ஆங்கிலேய ஆதிக்க அரசு, தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக துணைக் கண்டத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் மிக மோசமான பகுதிகளான பார்ப்பனிய மூடத்தனங்களுக்கு புது தெம்பு அளித்துவிட்டன. அதற்கு இணையாக, வலிமை பெற்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களும், பண்பாடு - மரபு என்ற பெயரில் அவற்றையே தங்கள் அரசியல் கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு அடித்தளமாக ஆக்கிக் கொண்டன.

புத்தரும் அவரது போதனைகளும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் சமூகங்களால், தங்களுக்கு ஓர் உலகளாவிய பார்வை அளிப்பதற்கான மூலாம்பரமாக - மனித சமத்துவம் மற்றும் சமூக விடுதலைக்கான அவர்களது தொடர்ந்த எதிர்வினைக்கான அடித்தளமாகப் பார்க்கப்பட்டது. நிலவும் பழமைவாத சிந்தனைகளோடு போட்டியிடக் கூடிய மற்றொரு பழமைவாத சிந்தனையாக, நிறுவப்பட்ட புனித நூல், மொழி மற்றும் புனித சடங்குகளைக் கொண்டதாக பவுத்தத்தை வெளிப்படுத்தும் பிற முயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, பிரச்சாரம் செய்த லட்சுமி நரசுவை, ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் செய்தியால் உச்சத்தை அடைந்த ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட பவுத்தம்' என்று அழைக்கப்பட்ட சிந்தனையின் முன்னோடியாகவே காணலாம். பாபாசாகேப் அவர்களே பேராசிரியர் நரசு அவர்களை தனது முன்னோடியாகக் கருதியது தற்செயலானது அல்ல!

சாதி குறித்த நரசுவின் நூலை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள பிக்கு தேவப்பிரியா வலிசின்கா, நரசு இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வெளிப்படையாக பவுத்தத்தைத் தழுவிக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறார். இது குறித்து வேறு எந்த ஆதாரமும் நமக்கு இல்லை. ஆனால், நரசுவிற்கு பவுத்தத்தின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவரது வாழ்க்கையின் தொடக்கக் காலங்களிலேயே இருந்ததை நாம் அறிய முடிகிறது. குறிப்பாக, மகாபோதி சங்கத்தின் சென்னை கிளை தொடங்கப்பட்ட ஆண்டான 1890க்கு முன்பே எனக் கூறலாம். அங்காரிகா தர்மபாலா, சென்னையில் தனது சங்கத்தின் கிளையைத் தொடங்க முடிவு செய்தபோது, ஏற்கனவே புத்தரின் அறிவுரைகளைப் பரப்புவதில் அர்ப்பணிப்போடு செயல்படக்கூடிய மூன்று முக்கியமானவர்கள் நகரில் இருந்தனர். எம். சிங்காரவேலு, பி. லட்சுமி நரசு மற்றும் அயோத்திதாசர் ஆகிய அம்மூவரும் ‘தியாசபிகல் சொசைட்டி'யின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர வேறு சில பரவலாக அறியப்படாதவர்களும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய காலத் தில் காலனிய ஆதிக்க அரசின் துணையோடு பார்ப்பனிய ஆதிக்கம் மிகுந்ததாக உருவாகிக் கொண்டிருந்த இந்து மதத்திற்கு ஒரே மாற்றாக, இவர்கள் அனைவருமே பவுத்தத்தையே கருதினர். இவர்களின் சமூகப் பின்புலம் வெவ்வேறாக இருந்ததன் காரணமாக, பவுத்தத்தின் மீதான அர்ப்பணிப்பில் ஒன்றுபட்டு நின்ற போதிலும், தங்களது இருத்தல் தேவைகளின் அடிப்படையில் பவுத்தத்தை வெவ்வேறான பார்வையிலேயே அணுகினர்.

மேற்கே எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிச மாதிரிகளின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, சிங்காரவேலர் புத்தரை ஒரு நாத்திக பகுத்தறிவுவாதியாக கண்டார். லட்சுமி நரசுவை பொறுத்தவரையில், புத்தர் ஒரு மிகச் சிறந்த மாந்த நேய பகுத்தறிவுவாதி. அயோத்திதாசரை பொறுத்த வரையில், புத்தரும் அவரது அறிவுரைகளும் முக்கியமாக தமிழ் - திராவிட மரபுகளுக்குள் பொருந்தக் கூடியதாக பழமைவாத வேத மற்றும் இந்திய பண்பாடு மற்றும் வரலாற்று மரபுகளுடன் போட்டியிடக் கூடியதாக, அதனால் சமூக பண்பாட்டுப் புரட்சிக்கு முக்கிய உந்து சக்தியாக மறுகட்டமைக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதினார். தர்ம பாலாவின் மகாபோதி சங்கத்தை உருவாக்கும் பணியில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். தங்களுக்கு இடையேயும், தர்மபாலாவுடனும் நிலவிய பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையேயும், அவர்கள் ஒரு காலகட்டம் வரையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு, நகரின் பல்வேறு பகுதிகளில் கருத்துரைகளை ஒழுங்கு செய்வதிலும், மக்களின் மொழியில் துண்டறிக்கைகள் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் வெளியிடுவதிலும், பவுத்த விழாக்களை கொண்டாடுவதற்கு ஒழுங்கு செய்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

அயோத்திதாசருக்கு பிந்தைய காலத்தில் சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்கத்துடன் நரசுக்கு இருந்த ஈடுபாடும், குறிப்பாக அதன் பெரம்பூர் கிளையை அமைப்பதிலும் அதை நிர்வகிப்பதிலும் நரசுவின் பங்களிப்பும் மகா போதி பவுத்தத்தின் இத்தகு நடவடிக்கைகளைவிட பலன் அளிக்கத்தக்கதாக இருந்தன. இச்சங்கம், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிறப்பு வாய்ந்த அயோத்திதாசரின் வழிகாட்டுதலின் கீழ், தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவைப் பெற்று, தலைநகரில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது.

மகா போதி சங்கத்தில் ஒரு காலகட்டம் வரை அயோத்தி தாசருடன் இணைந்து செயல்பட்டதோடு, ராயப்பேட்டையில் இருந்த ஆசிரமத்தில் உருவாகிக் கொண்டிருந்த சாக்கிய திராவிட தென்னிந்திய பவுத்த சங்கத்தை உருவாக்குவதிலும் நரசு அயோத்திதாசருக்கு தனது ஒத்துழைப்பை நல்கினார். அயோத்திதாசர், லட்சுமி நரசு இருவருமே, உறுதியான குண இயல்புடைய, இயற்கையான அறிவுத் திறனுடன் கூடிய உணர்வுப்பூர்வமான மனதும், திட்டமிட்டு கவனமாக வளர்த்தெடுத்த கல்வியறிவும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். அனைத்திற்கும் மேலாக இருவருமே சிறந்த நோக்கமுடையவர்களாக, தற்கால நியாயமற்ற சமூகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு, நியாயமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திசையில் அவற்றை திருப்பும் முயற்சியில் ஓய்வின்றி செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரின் சமூக நிலையும் வெவ்வேறாகவே இருந்தது. நரசு, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த போதிலும், ஓரளவு வளமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தார். அவரது குடும்பத்தினர் அன்றைய காலனிய அரசில் மதிப்புமிக்க பதவிகளை எட்டும் நிலையிலிருந்தனர். அதோடு நவீன ஆங்கிலம் மற்றும் அறிவியல் அறிவும் பெறக்கூடிய சூழல் அவருக்கு இருந்தமையால், அறிவாதிக்க உலகோடு தொடர்பு கொள்ளவும் நகரில் உள்ள அத்தகு மனிதர்களோடு பழகவும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. மற்றொரு புறத்தில் அயோத்திதாசர் நரசுவைப் போன்றே இயற்கையான அறிவுத் திறன் உடையவராகவும் தமிழ் இலக்கியப் புலமை மற்றும் மருத்துவ அறிவு உடையவராக இருந்தபோதும் அன்றைய ஆதிக்க மொழியின் வழியாக வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாதவராக இருந்தார். குறிப்பாக பறையர்கள் என்று ஒதுக்கப்பட்ட, காலனிய அரசால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வந்தவராக அவர் இருந்தார்.

வேறுபாடுகளுக்கு இடையிலும், அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர். நரசு ராயப்பேட்டை ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உரைகள் நிகழ்த்துவார். அயோத்திதாசரின் மறைவிற்குப் பிறகு ‘சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்க'த்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களால் லட்சுமி நரசு, தமிழ் பவுத்த இயக்கத்தின் நண்பராக, வழிகாட்டியாக, தத்துவாசிரியராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தமிழ் பவுத்த இயக்கத்திடம் நரசு கொண்டிருந்த ஈடுபாடும் அதில் அவரது பங்களிப்பும் பன்முகத் திறன் கொண்டவை. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல், சங்கத்தின் பெரம்பூர் கிளை, பெரும்பாலும் கற்றறிந்த இந்தப் பேராசிரியரின் கைத்திறனேயாகும். அமெரிக்க பவுத்த பெருமாட்டி மேரி பாஸ்டர் அவர்களின் தாராள நிதியில் ஒரு பங்கை தனது நண்பர் அங்காரிகா தர்மபாலாவின் மூலம் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு அளப்பரியது.

நரசு தொடக்கத்தில் இருந்தே தன்னைச் சுற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளை உருவாக்கிக் கொண்டார். அவர்களின் துணையோடு ஒரு நிதியம் அமைத்து, வியாரம் ஒன்றும் பள்ளி ஒன்றும் கட்டினார். அப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டனர். தங்கள் அளவில் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவர்களாகவும், சுதந்திர சிந்தனையுடையவர்களாகவும் அர்ப்பணிப்புடைய செயல்வீரர்களாகவும் இருந்த அவருடைய சீடர்களிடம் நடத்திய தொடர் விவாதங்கள் மற்றும் வாராந்திர உரைகள் இவற்றின் வழியாக நரசு உருவாக்கிய ‘நவீன பவுத்தம்' இங்குதான் வடிவம் பெற்றது. சங்கத்தில் அவரது சக ஊழியர்களான வி.பி.எஸ். மோனியர், பெரம்பை மாணிக்கம் ஆகியோர் பேராசிரியருடன் இணைந்து ‘இந்து மதமும் பவுத்தமும்', ‘மணிமேகலையில் பவுத்தம்' என்ற இரு தமிழ் நூல்களைப் பதிப்பித்தனர். பெரம்பூர் கிளை 1917இல் அமைக்கப்பட்டது. பாஸ்டரின் நிதியுதவியோடு எழுப்பப்பட்ட அதன் கட்டடம், 1921இல் திறக்கப்பட்டது. இங்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் பல தனி நபர்களை இந்தப் புதிய மதத்திற்கு அழைத்து வந்தார். அதோடு பார்ப்பன புரோகிதர் இன்றியும் வேத சடங்குகள் இன்றியும் நடத்தப்பட்ட பல சீர்த்திருத்த திருமணங்களுக்குத் தலைமையேற்றார். இந்த திருமண முறை அக்காலகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த சுயமரியாதை திராவிடர் இயக்கத்தில் புகழ் பெறத் தொடங்கியது.

ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்திலும், அதைவிட அதிகமாக 1924 இல் அவர் ஓய்வு பெற்ற பின்னரும், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். மாகாணத்தின் பிற நகரங்களான பெங்களூர், திருப்பத்தூர், கோலார் தங்க வயல் போன்ற இடங்களுக்கு சங்கக் கிளைகள் அமைப்பதற்கும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்ளவும், சிறப்பு உரைகள் நிகழ்த்தவும், திருவிழா கொண்டாட்டங்களை சிறப்பிக்கவும் அவர் பயணம் மேற்கொண்டார். நகரத்தில் புதிய கிளைகள் அமைக்கவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டார். சங்கத்தின் சார்பில் ஒரு பொது மாநாடு நடத்துவது என்பது, அயோத்திதாசரின் நிறைவேறாத கனவாக இருந்தது. அத்தகைய ஒரு மாநாட்டிற்கான ஓர் அறிவிப்பை, அவர் ‘தமிழன்' இதழில் வெளியிட்டார். அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. ஆனால், முதல் மாநாடு பண்டிதரின் மறைவுக்குப் பிறகு 1917இல் தான் நடத்தப்பட்டது. சென்னை மூர் அரங்க மக்கள் பூங்காவில் நடந்த அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்க பேராசிரியர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது 1920இல் பெங்களூரிலும், மூன்றாவது மீண்டும் சென்னையில் 1928லும், நான்காவது கோலார் தங்கவயலில் 1932லும் நரசுவின் காலத்திலேயே நடத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்திய ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினரால் பவுத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதின் அடிப்படை நோக்கம், அவர்களது முழுமையான நிலையான, விடுதலையை நோக்கியதாக இருந்தது. அன்றைய காலனிய அரசால் சட்டமாக்கப்பட்டு வந்த பல சமூக, அரசியல் சிக்கல்களுக்கு இது தீர்வு காண முயன்றது. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நிதியும் சட்டத்துணையும், போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவமும் ஆகும். காலனிய அரசோடு பேசி தீர்க்க வேண்டிய இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தையை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு லட்சுமி நரசுவிடமே ஒப்படைக்கப்பட்டது. நரசு தொகுத்த புத்தரின் அறிவுரைகள் நிலைத்திருப்பதாகவும் விடுதலை அளிப்பதாகவும் காணப்பட்டன. சங்கத்தின் மதம் குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையாக அவரது ‘பவுத்தத்தின் சாரம்' ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் ‘தமிழன்' இதழின் ஆசிரியராக இருந்த ஜி. அப்பாத்துøரயார் இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும்படி பணிக்கப்பட்டார்.

நவீன பவுத்தத்தின் மறு உருவாக்கத்திற்கு லட்சுமி நரசுவின் எழுத்துகளே, உண்மையான நீடித்த பங்களிப்பாக இருக்கிறது. அவரது பரந்த வாசிப்பு, ஆழ்ந்த வெளிப்பாடு மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஆண்கள் பெண்களுடன் அவர் கொண்டிருந்த நீடித்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவே - பல்வேறு தளங்களில் அவர் நிகழ்த்திய பல உரைகளுக்கு அடிப்படை ஆகும். இவை திருத்தப்பட்டு நன்கு எழுதப்பட்ட கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு பல வார, மாத இதழ்களில் வெளிவந்தன. அவற்றிற்கு எழுந்த வரவேற்பின் அடிப்படையில் அக்கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்பட்டு, எளிய, நேரடியான, தெளிவான நூல்களாக வெளியிடப்பட்டன. நரசு மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டார். ‘பவுத்தத்தின் சாரம்' (1907), ‘பவுத்தம் என்றால் என்ன?' (1916), ‘சாதி குறித்த ஆய்வு' (1922), ‘பவுத்தம் சுருக்கமாக' என்ற மற்றொரு நூலைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆனால், இந்நூல் கிடைக்கவில்லை. நரசு பல்வேறு தலைப்புகளிலும் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவை இன்னமும் சேகரிக்கப்படவில்லை. எனினும் நமக்கு கிடைத்திருப்பவை ‘சதர்மா' குறித்து அவரது விளக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. அதோடு அவரது பரந்த அறிவுத்திறன், முதிர்ச்சியான சிந்தனை, எளிமையான தெளிவாக்கும் திறன் இவற்றிற்கு மேலாக அவரது சார்பற்ற நேர்மையான முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகின்றன.

1954இல் ரங்கூனில் நடந்த பவுத்த தோழமையின் 3 ஆம் உலக மாநாட்டில் அவரது இளைய சகாக்களான வி.பி.எஸ். மோனியர் மற்றும் ஆர்.பி. தங்கவேலனார் ஆகியோர் நரசுவின் எழுத்துகள் குறித்து கீழ்க்கண்டவாறு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்:

‘தங்கள் மக்கள் பின்பற்றக்கூடிய பவுத்தம் குறித்த பொருத்தமான ஒரு நூலை தேடிக்கொண்டிருந்த ஜப்பானியர்களை நரசுவின் ‘பவுத்தத்தின் சாரம்' வெகுவாக ஈர்த்தது. இந்நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தனர். அந்நாட்டில் இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்தன. சுருக்கமாக, ஆனால் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட பவுத்தம் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கிய ‘பவுத்தம் என்றால் என்ன?' எனும் சிறிய நூல், செக்கோஸ்லோவாக்கிய நாட்டின் முதல் அதிபரான ழான் மாரிக்கை பெரிதும் கவர்ந்தது. அவர் அதை தங்கள் மொழியில் மொழிபெயர்த்து, ஆசிரியருக்கு ஒரு பிரதியும் அனுப்பி வைத்தார். பின்னர் ‘இயற்கைத் தத்துவம்' பற்றிய ஓர் இதழில் இந்நூலின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு வெளிவந்தது. அவரது மூன்றாவது நூல் ‘சாதி குறித்த ஆய்வு' அவரது சமூக, அரசியல் சிந்தனைகளைக் கொண்டதாகவும் அவர் தனது காலத்தைக் கடந்து சிந்திப்பவராக இருந்ததை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது...”

உள்நாட்டைப் பொருத்தவரையில், ‘பவுத்தத்தின் சாரம்' நூல் அம்பேத்கரை பெருமளவில் பாதித்தது. இதுவரை பவுத்தம் பற்றி வெளியான நூல்களிலேயே சிறந்தது இதுவென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ‘சதர்மா' குறித்து அறிந்து கொள்ள விரும்பிய அனைவருக்கும் வேறுபாடின்றி அவர் இந்நூலை பரிந்துரைத்தார். 1948 இல் தனது முன்னுரையுடன் இந்நூலை அவர் மீண்டும் அச்சிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தர் குறித்தும் பவுத்தம் குறித்தும் வெளிவந்த பல்வேறு எழுத்துகளிலிருந்து நரசுவின் எழுத்து தனித்துவம் பெறக் காரணம் என்ன? பொருளாதாரத்தை விவசாயமயமாக்குதல், சமூகத்தைப் பார்ப்பனியமயமாக்குதல் என்ற காலனிய முயற்சியின் பக்க துணையாக அமைந்த புத்தரின் தொடக்கால எழுத்துகளின் கீழ்திசை கண்டுபிடிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுக்கு மாற்றாக, லட்சுமி நரசு விடுதலை தரும் பவுத்தத்தின் அடித்தளத்தை துணைக் கண்டத்தில் நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு அடித்தளமாகவும் அதன் மூலம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் விடுதலை பெற்ற சமூக வாழ்விற்கு இட்டுச் செல்லக் கூடியதாகவுமே அவர் ‘விடுதலை தரும் பவுத்தத்தை' கட்டமைத்தார். அன்றைய காலத்தில் இருந்த பகுத்தறிவு மற்றும் மாந்த நேய சிந்தனைகளின் துணையை அவர் இதற்கு பெற்றார். ‘பவுத்தத்தின் சாரம்' நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் இந்த செயல்திட்டம் விளக்கப்பட்டுள்ளது.

‘தனது ஆசானின் போதனைகளை எடுத்துரைக்கும்போது, அந்த போதனைகள் எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறதோ, அந்த அடிப்படைக் கருத்துகளை தவற விடாதிருப்பது சீடரை சார்ந்துள்ளது. புத்தரை பொருத்தவரையில், அவரது குரல் உண்மையை அடித்தளமாகக் கொண்டது. அதனால் உண்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ, அங்கெல்லாம் சீடர்கள் செல்ல வேண்டும். ‘எதுவெல்லாம் சரியான காரணங்களோடு இல்லாதிருக்கிறதோ, எதுவெல்லாம் உண்மையோடு பொருந்தாமல் இருக்கிறதோ, அவை எதுவும் ஆசானின் அறிவுரைகளாக இருக்க இயலாது' என்பதே பவுத்தத்தை போதிக்கும் பள்ளிகள் அனைத்திலும் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழியாகும். தங்கள் மதத்தை குறித்து விளக்க வந்த அனைத்து முக்கிய பவுத்த எழுத்தாளர்களும், பகுத்தறிவு மற்றும் உளவியலின் துணையை நாடியுள்ளனர். சிந்தனையின் பொதுவான நம்பகத் தன்மை குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறையின் காரண மாக, பொதுவாக தங்களுடைய மதத்தின் அடிப்படையாக கருதப்படும் சூத்திரங்களை, அவர்கள் பெரும்பாலும் ஒதுக்கியுள்ளனர். ஒரு பவுத்தர் என்ற நிலையிலிருந்து மாறாமல், தொடக்கக் காலத்திலிருந்து நிலவி வந்த பவுத்த மரபை பின்பற்றியே நூலாசிரியர், நவீன அறிவுத் தெளிவோடு பவுத்தத்தை தெளிவாக்க முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பவுத்தத்திற்கு ஒரு நவீன தன்மையை அளித்துள்ளார் என்றால், அது நவீன சிந்தனைகளோடு சிறிதளவு பவுத்தத்தை கலந்து தருவதாக அல்லாமல், அனைத்து வகையான பவுத்த மரபுகளின் அடி ஆழம் வரை சென்று, அடிப்படையான உண்மைகளை வெளிக்கொணர்வதின் மூலமேயாகும்.”

அனைத்து வகையான சீர்திருத்த எதிர்ப்புகள், மத மூடத்தனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றாக பவுத்தத்திற்கு அவர் அளித்த பகுத்தறிவும் விடுதலை உணர்வும் மிக்க விளக்கமும், சமூக மூடத்தனத்தின் மிகக் கேடான வடிவமான சாதியை அதன் அத்தனை நுட்பமான, காலத்திற்கேற்ற விளக்கங்களோடு, நரசு தனது எழுத்துகளில் விவரித்த தன்மையும், நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்குதலில் பெரும் பங்காற்றியது. இந்தியாவிற்குள், அவ்வாறு இன்னமும் அங்கீகரிக்கப்படாத போதிலும், அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடியாகவே நரசு நிற்கிறார். அம்பேத்கரின் எழுத்துகளுடன் இணைந்து நோக்கும்போது, துணைக் கண்டத்தில் ஒரு மனிதநேய சமூகத்தை அமைப்பதில் ஒரு சாத்தியமான விரும்பத்தக்க கொள்கை நெறியாளராகவே நரசு திகழ்கிறார்.

தமிழாக்கம்: பூங்குழலி

நன்றி: தலித் முரசு (& கீற்று)

Sunday, February 18, 2007

வசீகரிக்கும் படைப்பாளி -ச.இராகவன்

அண்மையில் வாசித்த நேர்காணல்களில் வசிகரீத்த நேர்காணலில் இதுவும் ஒன்று. போர்ச்சூழலுக்குள்ளிலிருந்து இவ்வளவு தீவிர வாசிப்பும், தீர்க்கமான எழுத்துச் சிந்தனையும் உள்ள ஒருவரை கண்டு கொண்ட மகிழ்ச்சிதான் வந்தது. இராகவனுடனான நேர்காணலை பா.துவாரகன் செய்திருந்ததார். வைகறை பத்திரிகையிலிருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றேன். (~டிசே)

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது.”

-ச.இராகவன்-

இலக்கிய, சினிமா விமர்சகராகவும் கவிஞராகவும் தீவிர வாசகனாகவும் இயங்குகின்ற ச.இராகவன் தன்னை ஒரு கதைசொல்லியாக அடையாளம் காண்பதன் ஊடாகப் படைப்புலகில் தடம் பதித்து வருவதுடன் ஈழத்தின் புனைகதையாளர்களில் தற்புதுமையானதும், வடிவம் அழிந்ததும், வரையறைக்குள் அமையாததுமான சிறுகதைகளை - அதிகதைகளை இந்தியச் சிற்றிதழ்களில் அறிமுகம் செய்து வருகின்றார். மு.த. கனவு கண்ட மெய்யுளை (இது ஒரு கோட்பாடல்ல) நோக்கி, கடந்து செல்லும் நதியாக இவரது எழுத்துக்கள் நகர்ந்து செல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்து இலக்கிய உலகிலும் (புலத்திலிருந்து செயற்படும் ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்களிலும்) அதிகதைகள் பற்றிய பரிச்சயமின்மையை அவதானிக்க முடிகின்றது. இராகவனது
அண்மைக்காலச் சிறுகதைகள் இவ்வகை அதிகதைகளாக, வாசகன் தானே கதையை உருவாக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான பன்முகத்தில் இவரது கதைகள் அதிகம் பிரசுரமாகியுள்ளன.

“பன்முகம்”-கலை இலக்கிய கோட்பாட்டு இதழ் - ஈழத் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஒரு சிற்றிதளாக இருந்து வருவதும், இராகவனின்சிறுகதைகளை உள்ளூர் , வெளியூர் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் பிரசுரிக்க மறுத்து வருவதும் ஆச்சரியமான ஒன்றல்ல. பன்முகத்தில் பிரசுரமான இராகவனின் 'சதுரம்” , “எதிர்நோக்கு”, “கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி” ஆகிய மூன்று சிறுகதைகளும்; பாலியலை பற்றியனவாக இருந்த போதும் அவை வாசகனிடம் விட்டுச் செல்லும் , உருவாக்கும் கதைகளும் ஈழத்து இலக்கியச் சூழலிற்கு அந்நியமானவையே.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'தெரிதல்” சிறு சஞ்சிகையில் 'ஜனரஞ்சகப் போலிகள்” என்ற தொடரை எழுதி ஜனரஞ்சக எழுத்தாளர்களின் போதைêட்டும் எழுத்துக்களை அம்பலப்படுத்தி சர்ச்சைக்குள்ளானவரான இராகவன் கடந்த இரு தசாப்தத்திற்கும் மேலாக ஈழத்திலும், புலத்திலும் நிலவி வரும் இலக்கியச் சூழலையும், படைப்பாளிகள் , படைப்புக்கள் குறித்த தனது அவதானத்தையும், A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள யாழ் நகரில் இருந்து வைகறை வாசகர்களுடன்; பகிர்ந்து கொள்கின்றார்.

• சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம் என்று பல்வேறு துறைகளிலும் ஆழமாகத்தடம் பதித்துவரும் நீங்கள்கலை-இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

உங்களுக்கு 'இராகவன்” என அறிமுகமாகும் நான் 11-08-1976 காலப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டேன்.(சத்திரசிகிச்சையொன்றின் மூலமாக). பிறப்பிடம் வெள்ளாளர் மிகுந்து வாழும் கரவெட்டி. முதலாம் தரத்திலிருந்து ஏழாந்தரம்வரை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்திலும் எட்டாந்தரத்திலிருந்து பன்னிரண்டாந் தரம் வரை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று பின்னர் உயர்தரப்பரீட்சையில் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் நான்கு வருடங்கள் பயின்று 2002 காலப்பகுதியில் ஒரு முகாமைத்துவப்பட்டதாரியாக வெளியேறி இப்போது யாழ். பிரதேசசெயலகத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி மகாசங்கத்தில் பதில் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிவருகின்றேன்.

சிறுவயதில் நான் மற்றவர்களால் கீலா இராகவனாக அடையாளங்காணப் பட்டிருந்தேன். அப்போதே அதிகமாகக் கதைக்கத்தொடங்கியிருந்தேன். நான் கதைப்பதைக்கேட்க எதிரே யாராவது இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடன் நானே கதைத்துக்கொண்டிருப்பேன். அப்போது உயர்திணை அஃறிணை எனப் பல்வேறு பாத்திரங்களை நான் வகிக்கவேண்டியிருக்கும். அர்த்தம் அர்த்தமின்மை குறித்த கவனம் எனக்கிருந்ததில்லை அப்போது எனக்குப் பரவசந்தந்த நிகழச்சியென்றால் இவ்வாறாகத் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதுதான். இந்த எல்லையற்ற கதையாடல் மூலமாக நான் சந்திக்கநேரும் மனிதர்களுக்கெல்லாம் ஒவ்வொரு படிமத்தை வழங்கி மகிழக்கூடிய நிலையில் இருந்தேன். அப்போதுதான் ஓர் உண்மை புலனாகியது. ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து அவதானித்தால் அவர்களில் பறவைகள், மிருகங்களின் சாயலைக்காணலாம் என்பதுதான்.

அந்தப்பேருண்மை. இதே போன்று எனது இடைவிடாத அவதானங்களிலிருந்து சேகரித்த தரவுகளைப் பொதுமைப்படுத்தும் போது புதிய தத்துவங்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. புதிய தத்துவம் வெளிப்படுத்தப்படும் வரை பொறுத்திரடா ராசா என்பது என்னிடம் இருந்த தத்துவ வாக்கியங்களில் ஒன்று இவ்வாறாக நாளும்பொழுதும் கதையளந்து கொண்டு திரிந்த எனக்கு அளக்கின்ற கதை எதுவானாலும் எழுத்தில் கொணருவதற்கான எண்ணம் ஒரு புள்ளியாக உருவாகி விரிவாகி மிகத் தொடங்கியது. அதற்கான எத்தனிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் விளைவே நான் கலை இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி என்பேன்.

• விமர்சனத் துறையா அல்லது படைப்புத் துறையா உங்களை முதலில் ஈர்த்தது?
புனை கதைதான் எனது இலக்கிய எத்னிப்பின் அடித்தளம். இதனால் நான் அதன் வழியாகத்தானே நுழைந்திருப்பேன்.

• உங்களது முதல் சிறுகதை அல்லது படைப்பு, அது பிரசுரமான ஊடகம்:
சிறுகதை என்று நான் கருதிய வெறுங்கதை “சந்தேகக் கோடு” பிரயோகித்த புனைபெயர் இராகினி ரங்கராஜன் பிரசுரமான ஊடகம் மித்திரன் வாரமலர் அனேகரால் சிறுகதை என அங்கீகரிக்கக் கூடிய படைப்பெனப் பார்த்தால் 'நாய்கள் குரைக்கின்றன” பிரயோகித்த புனைப் பெயர் சுதா
ரஞ்சன் பிரசுரமான ஊடகம் - சரிநிகர் இதழ் 221.

சிறுகதையின் உருவமைப்பில், கதை சொல்லும் முறையில் புதிய உத் திகளைக் கையாண்டு வருகின்றீர்கள், இந்தப் புதிய கட்டமைப்பு முறையைப் பிரயோகிப்பதற்கான தூண்டுதலை எவ்வாறு பெற்றீர்கள்?
தூண்டுதல் எனப் பார்த்தால் இரு முக்கிய விடயங்களைச் சொல்வேன்.
1. நாளொன்றுக்கு திருவிவிலியத்திலிருந்து நான்கு பக்கங்கள் வீதம் வாசித்துவருகிறேன். அத்தருணங்களில் அற்புதமான உத்திகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும்.
2. தமிழ் நாட்டின் அதிமுக்கிய இலக்கிய கோட்பாட்டாளரான எம்.ஜி.சுரேஷ் காலாண்டுக்கு ஒருமுறை வெளிக்கொணரும் பன்முகம் நவீன இலக்கிய கோட்பாட்டு இதழைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக இதழின் முகம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அதில் யுவன் சந்திரசேகர் எழுதியிருந்த '1999இன் சிறந்த கதை” எனும் தலைப்பில் அமைந்த சிறுகதை என்னுள் ஏற்படுத்திய அதிர்வு என்பது அளப்பரியது.(குறிப்பு: 8வது வினாவுக்கும் 4வது வினாவுக்கான விடை முழுமையாகப் பொருந்தும். 8 வது வினா-'எதிர்நோக்கு”- சிறுகதை , அதிகதைகளுக்கான இதழில் வெளிவந்த சிறுகதைகளிற்கு வாசகர்கள் எழுதிய விமர்சனங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழிற்கு இது புதுமையான முயற்சி இக்கதை உருவான பின்னணிச் சூழல்:)

குறியீடுகள், தொன்மங்கள், பகுப்பு என்பவற்றுடன் புதிய வடிவில்; சில ஆண்டுகளிற்கு முன் கணையாழியில் வெளிவந்த 'சதுரம்” சிறுகதையின் தலைப்பும் கட்டமைப்பும்பற்றி, விக்கிரமாதித்தன் கதையுடன் ஆரம்பமாகும் கதை சொல்லும் முறை:அது சதுரத்திற்கு வெளியே நிலவும் அரசியல் சூழலை பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தொன்மம் வெளிச் சூழல் எவ்வளவுதான் நெருக்கடி மிகுந்ததாக இருப்பினும்அந்த நெருக்கடியை சற்றேனும் உணராதவர்கள் சதுரத்தினுள் இயங்குகிறார்கள்.
இதை நடைமுறையில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கிறது.

சதுரம் - பாலியல் உணர்வு, உறவு,பாலுறுப்புக்கள் பற்றிப் பேசுவதாகவும் இக் கதை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
எவரும் எழுதத் துணியாத விடயங்களை நீங்கள் எழுதியுள்ளதாகக் கருதலாமா?

இந்தக் கதையை வெளியிட்டதால் கணையாளியின்
ஆசிரியர் பீடத்திலுள்ளவர்கள் மாற்றப்பட்டதாக செவிவழிக் கதையொன்று நிலவுகிறது. இது திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கும் அபத்தமான கதை என்றே கருதலாம். இந்தக் கதையினால் வெகுவாகப் பாதிப்புக்குள்ளான ஒருவர் அல்லதுஒரு குழுவே இச் செவிவழிக் கதையை புனைந்திருக்கலாம் என நம்புகிறேன். எவரும் எழுதத் துணியாத விடயங்களை நான் எழுதிவிடவில்லை. எஸ்.பொ.இதைவிட பெரும் எடுப்பில் தீயைப் புனைந்திருக்கிறார்.

• இலங்கைத் தமிழச்; சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதாகக் கருதப்படுகின்றது. உங்களது கதையில் ஆண்பாலுறுப்பில் இருந்து வெளி வரும் நாற்றம் பற்றிய பகுதியில் மன்மதக்குமிழை பெற்றோல் ஊற்றிக்
கழுவவேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனை:

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல்பற்றி எழுதுவது தவறாக கருதப்படுகின்றது", என்ற கூற்றில் ஒரு சிறு திருத்தம் இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் அநேகர் தங்களை உத்தமர்களாகக் காட்ட எத்தனிக்கின்றார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து அவதானித்தால் பாலியல் வேட்கைமிகுந்தவர்களாக அவ்வுத்தமர்களை இனங்காணக் கூடியதாகவும் இருக்கும். சதுரம் வெளிப்படுத்த முனைவது சில சமூகப்பிராணிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தான். தவிரவும் இது ஒரு புனைவு. மதன்மதக் குமிழைப் பெற்றோல் ஊற்றிக்கழுவவேண்டும் என்ற மருத்துவரின் கூற்று சரியா? தவறா? என்பது அல்ல முக்கியம் சதுரத்தினுள் இயங்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கிடையிலான அற்பத்தனமான முரண்பாடுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளனவா? என்பது தான் முக்கியம்.

பன்முகம் கலாண்டு இதழில் (ஜனவரி-மார்ச்2006)வெளிவந்த 'எதிர்நோக்கு” சிறுகதையில் செண்பகப் பெருமாள் எழுதிய சம்பவங்கள் என்ற குறுங்கதையில் - தமிழ்மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் பகுதியைக் கண்டித்து வாசகர் சுட்டி காட்டி எழுதிய பகுதியை வாசித்தபோது அசோஹா ஹந்தகமவின் திரைப்பட This is my moon நினைவிற்கு வந்தது. நான் இதுவரை This is my moon என்ற திரைப்படத்தைப் பார்க்கவில்லை. போர்ச் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வரும் நிலையில் அநேகரது சிந்தனைகள், படைப்பாக்க முயற்சிகள் ஒரே தளத்தில் வெளிப்பாடடையலாம். செண்பகக் பெருமாளின் சம்பவங்கள் வாசித்த பிறகு நீங்கள் This is my moon ஐ பார்த்திருந்தால் சம்பவங்கள் உடனடியாக நினைவில் மேலோங்குவதை தவிர்க்க முடியாமலிருக்கும்.அதேவேளை இச்சிறுகதையில் சொல்லப்படும் குறுங்கதையான 'வதைப்பாடு” இல் இலங்கையில் சிறையில் கொடூரமான சித்திரவதைக்குள்ளாகும் தமிழ் இளைஞர்,யுவதிகள் மீது மேற்கொள்ளப்படும் வதைகளை வாசித்தபோது சில காலத்திற்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் அட்சகர் ஒருவர் நீதிமன்றில் அளித்த சாட்சியம் எதிர் ஒலித்தது.
இதில் விசேடமாக குறிப்பிடக் கூடியஅம்சங்களாக,
1. “எதிர்நோக்கு" என்ற புனைக் கதையால் நீங்கள் அதிர்வுக்குள்ளாகி இருககின்றீர்கள்.
2. “வதைப்பாடு" என்பதன் மெய்மை மீள நிறுவப்படுகிறது என்பவற்றைக் கருலாம்.
இந்த வகையில் 'எதிர்நோக்கு” தோல்வியைத் தழுவவில்லை.

• உங்களது இக்கதையின் முதற்பகுதியில் வெளிவரும் மழைப் பிரம்மனின் முப்பத்தேழாம் பாதம் என்ற அதிகதை பற்றி வாசகர் எழுப்பும் சந்தேகம் - நான் 37 தடவை வாசித்தும்விளங்கவில்லை என்று குறிப்பிட்டு
இதுபோன்ற அதிகதைகளுக்கு அடிகுறிப்பிட்டதை: (இப்பகுதியை 3 தடவைகள் படித்த பின்பே சொல்லவந்ததைப் புரிந்து கொண்டேன்).

அதிகதைகள் தொடர்பாக ஒரு சாதாரண வாசகன் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கருத்தின் வெளிப்பாடுதான் அந்தக் குறிப்பிடல். அதிகதைகளில் ஒருதேர்ந்த வாசகன் கதையை எதிர்பார்க்கக்கூடாது.அவனாகவே தனது சிந்தனை ஆற்றலால் கதையை உருவாக்க வேண்டும். கதையை நிகழ்த்துபவர் வெளிப்படையாக ஒரு கதையைச் சொல்வதன் மூலம் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். இந்நிலையில் வாசகனின் சிந்தனைச் செயற்பாடு குறுகிப்போகிறது. வாசகன் தானாகவே ஒரு கதையை உருவாக்கிக் கொள்ள நேரும் போது அவன்சிந்தனை எல்லை கடக்கிறது. அவனே ஒரு கதையை நிகழ்த்தி பரவசமடைகிறான். இதிலும் எல்லா வாசகர்களும் ஒரு பொதுவான கதையை உருவாக்குவதில்லை.

வேறு கதைகளை உருவாக்கி பரவசமடைகள் உருவாக அனுமதிக்கின்றது. இந்நிலைப்பாட்டின் ஒரு கூறாகவே மழைப்பிரம்பனின் இயக்கம் குறித்து நீங்கள் ஒரு கதையைஉருவாக்கி இருக்கின்றீர்கள். இன்னொருவர்
வேறொரு கதையை உருவாக்குவார். இதுதவிர்க்க முடியாததாகும். 'ங” இதழில் வெளிவந்த எட்டு அதி-கதைகளைப் பற்றிய வாசகர்களது கடிதங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இச் சிறுகதையில் மூன்று சிறுகதைகளைப் பற்றியே அறியமுடிகின்றது ஏனயை சிறுகதைகளான வெயில்திரவம், தாவர இளவரசன் மகாசேனன், உத்தரவும் 108 பல்லிகளும், திருவுரு, யாழி, ஆகிய கதைத் தலைப்புக்கள் வாசகனிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தவல்லன.

இதுவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது இயலுமைக் கேற்ப கதைகளை உருவாக்க அனுமதிக்கும் எத்தனிப்பே இங்கே கதைகள் மர்மப் பகுதிகளைக் கொண்டிருப்பதால் வாசகன் அந்த மர்மப் பகுதிகள் மீது நாட்டம் கொள்வான். அதன் விளை உருவாக்கப்பட மர்மப் பகுதிகள் அகலும். இது அவனுக்கு அளப்பெரும் பரவசத்தை நல்கும் என நம்பலாம்.

• உங்களது ஆரம்பகாலக் கதைகளிற்கும் இன்றைய கதை சொல்லும் முறைக்கும் இடையில் காணப்படும்
மாறுதலை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஆரம்பக் காலங்களில் வாசகன் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்லும் உத்தியை அல்லது முறையைப் பிரயோகித்து வந்தேன். தற்போது வாசகனே கதைகளை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்வதென் பதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறேன்.

• நீங்கள் நாவல் எழுத முயற்சிக்கவில்லையா? (நாவல் எழுதியிருந்தால் அதுபற்றிச் சொல்லவும்)

இதுவரை எத்தனிக்கவில்லை. எழுதும் நோக்கம் இருக்கிறது. எழுத நேர்ந்தால்அத்தருணத்திலும் வாசகனைத்தான் புதினத்தை உருவாக்கிச் செல்லத் தூண்டுவேன்.

• உங்களது கவிதை முயற்சிகள்,எழுதிய கவிதைகள் குறித்து:
அவ்வப்போது நெருக்கடி மிகுந்தபோர்ச் சூழலில் வசித்துவரும் நிலை குறித்த என் அகவெளிப்பாடுகளை கவிதைகளாக எழுதியிருக்கிறேன். அவை நிகரி,கவிப்பிரவாகம், காலச்சுவடு, மன்னுயிர்,தெரிதல், போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இது வரை கவிதைக்கான முழுமையான எத்தனிப்பில் ஈடுபடவில்லை.

• விமர்சகர் என்ற வகையில் 'ஜனரஞ்சகப் போலிகள்” என்ற பத்தியை தெரிதல் சஞ்சிகையில் தொடராக எழுதி வந்தீர்கள் அதற்கான எதிர் வினை எப்படியிருந்தது?
தெரிதல் இதழுக்காக அதனது ஆசிரியர் அ.யேசுராசாவின் அயராத, இடைவிடாததூண்டுதலினாலேயே இத் தொடரை எழுதினேன். 'ரமணிச்சந்திரன்” பற்றி முதலாவது இதழில் எழுதிய கட்டுரையை சிலபத்திரிகைகள் மீள் பிரசுரம் செய்துள்ளன. பத்மநாப ஐயரின் முயற்சியால் 'அப்பால்தமிழ்” என்ற இணையத்தளத்திலும் இக்கட்டுரைத் தொடர் வெளியானது. இத்தொடர் குறித்த எதிர் வினைகளை அவ்வப்போது செவிவழியாகக் கேட்டுவருகிறேன். சுஜாதாவை ஜனரஞ்சகப் போலி எழுத்தாளனாகக் கருதுவதில் சில தீவிர இலக்கிய வாதிககளுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. இதுவும் ஒரு நகைப்பிற்குரிய யதார்த்தமே.

• ஜனரஞ்சகப் போலிகள் வகையில் என்டமூரி வீரேந்திரநாத்ஐயும் இணைத்திருந்திர்கள். அவரது 'கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்ற விஞ்ஞானப் புனைகதையை (நாவல்) 10 ஆண்டுகளுக்கு முன் படித்திருந்தேன். இது உலகநாடுகள் தமக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஐ.நா.வில்
முறையிட்டு தீர்ப்பது போல (?) கிரகவாசிகள் தமக்கிடையிலான பிரச்சினைகளிற்கு universal committee ஒன்றில் முறையிடச் செல்லல் பற்றியது. சென்றவர்கள்; பூமியில் இருந்து சென்று 100 வருடங்களுக்கு பின்னர் திரும்ப நேரிடுகிறது. வேறு கிரகவாசிகள் உதவியால் பழையகாலத்திற்கு திரும்புகின்றனர். காலத்தைப் பினநோக்கி நகர்த்துகின்றனர். அதாவது இறந்து போனவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திற்கு திரும்புகின்ற அடங்குமா? இத்தகைய எழுத்துக்கள் வாசகனை அவனது உணர்வுகளை பொய்மைக்குள் தள்ளும் என்று கருதுகின்றீர்களா?

வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பு, இருப்பின்மை குறித்து அறிவியல் ரீதியாக எத்தகைய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிராத காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மெய்ப்பிக்க முடியாத முற்கற்பிதங்களே வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுவருவதை அவதானிக்கலாம். அவ்வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். அவ்வாறான முற்கற்பிதங்களை வைத்தே ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள் வேற்றுக்கிரக வாசிகளைக் கொண்ட புனைகதைகளைத் தயாரிக்கின்றனர்;. இது வாசகனை செயற்கையாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனம். இத்தகைய தருணங்களில் வாசகனுக்கு ஒருவிதப் பிரமிப்பு ஏற்படுவது மெய்தான். அவனது இரசனை மோசமாகச் சுரண்டப்படுகிறது. அவன் சிந்தனை ஆற்றல் விரிவடைவதில்லை விஞ்ஞான புனைகதை எனும் வகை முக்கியமாக வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைய எதிர்;பார்க்கப்படுகிறது. மேலும் விஞ்ஞானப் புனைகதையின் நகர்வு தர்க்கரீதியாக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் 'கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்பதே நவீனப்புனைகதை என்ற வகையில் பார்த்தால் பலவீனமான தலைப்பு. மற்றது வேற்றுக் கிரகவாசிகள் பற்றியதாக புனைவு அமைவதால் இதன் நகர்வு தர்க்கரீதியாக இருக்காது என்பதால் இது போலியான எழுத்துவகை என்பதில் சந்தேகமில்லை. எனவே இது வாசகனுக்குத்தரும் அதிர்வும், பிரமிப்பும் தற்காலிகமானது. அவனது இரசனையை மிகமோசமாகச் சுரண்டுவதன் மூலம் அவனை வாசிப்பில் பின் தள்ளுகிறது.

• போலி எழுத்துக்களை அடையாளம் நுட்பமாக வசப்படுத்தி வியபாரமாக்கும் தந்திரங்கள் கலையுலகில் நடந்து வரும் சூழலினை உங்களது எழுத்துக்களில் அம்பலப்படுத் தியும் வாசகனைப் போதை ஊட்டிவைத்திருக்கும் மலினமான மர்ம நாவல்களையும் அதை எழுதியோரையும்
உங்களது எழுத்துக்களில் சாடியுமிருந்தீர்கள். ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் தமிழ் சினிமாவை பார்த்து மகிழ்ச்சியடைந்தாலோ அல்லது தனது பொழுதினை வீணே கழித்தாலோ அவரது ரசனனயை பொய்யானது என்று சொல்லி பிரச்சாரப்படுத்துவதும் உயர்வான கலைகளையே
அவன் ரசிக்கவேண்டும் என்று எழுதுவதும் ரசனை குறைந்த சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்பட வாய்புள்ளதல்லவா?

சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக்கருதும் நிலை எப்போது ஏற்படுமென்றால் என்னால் அதிகாரத்தைப் பிரயோகித்து எழுதும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான். அவ்வரிய சந்தர்ப்பம் துரதிஷ்ட வசமாக எனக்கு வாய்க்கவில்லை. 'இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்” பற்றி நான் எழுதியிருப்பது எனது கருத்தைத்தான். அதை எவரும் சிரமேற் கொண்டு செயற்பட வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. மாற்றுக்கருத்தைக்கொண்டிருப்பவர்கள் அதைத் தெரிவிக்க உரிமையுடையவர்கள். நான் எழுதியவற்றை வாசி த்தவர்கள் அதன் பிறகு ரமணிச்சந்திரனை,ராஜேஷ்குமாரை, சுஜாதாவை வாசிக்க ஆவலாக உள்ளோம். ஆனால் வாசிக்க முடியவில்லையே என மனம் மிக வெதும்பினால் அவர்களின் சுதந்திரத்தை நான் மீறுவதாக நீங்கள் கருதலாம். ஆனால் அந்த மாதிரியாக நிகழவில்லையே. அண்மையில் யாழ் பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த நூலகக் கண்காட்சிக்கு போனேன். அங்கே ரமணிச்சந்திரன் நாவல்ககளுக்கு தனிப்பிரிவு என்ற முறையில் காட்சிப்படுத்தியிருக்க கண்டேன். விசாரித்தபோது இந்தத் தனிப்பிரிவுகளிலுள்ள புத்தகங்களை வாசிப்பதற்காகவே பலர் அங்கத்தவர்களாக சேர்வார்கள் எனக் கூறப்பட்டது.

இப்போது சொல்லுங்கள் சாதாராண வாசகனின் சுதந்திரத்தை இந்த 'ஜனரஞ்சகப்போலி எழுத்தாளர்கள்” மூலமாக நான் மீறி
யதாகக் கருதும் வாய்ப்புள்ளதா?

(இன்னும் தொடரும்)

Saturday, February 17, 2007

ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள்

அண்மையில் பாலபாரதி ஒரு பின்-நவீனத்துவக் கட்டுரையை அம்மா இதழிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார். விமர்சனம் என்பது வேறு, ஆனால் அதில் பின் நவீனத்துவம் குறித்த அதீத காழ்ப்பு இருப்பது போலத் தோன்றியது. தத்துவங்களை மட்டும் எப்போதும் கட்டி அழுபவர்களுக்கு நேரும் அவலம் தான் இது. புது விதமான கட்டுடைப்புக்களையோ, புது வகையிலான தத்துவங்களையோ ஏற்றுக்கொள்வது என்பது -இது மட்டுந்ததான் நமக்கான தத்துவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு- கொடூரமாய்த்தான் இருக்கும். இவ்வாறு சமகாலத்தையும், மக்களையும் விட்டுவிலகிப் போய்க்கொண்டிருக்கும் பலரது வீழ்ச்சிகளைய்ப் பார்த்துக்கொண்டுத்தானே இருக்கின்றோம்.

எம்.ஜி.சுரேஷின் நேர்காணலை தீராநதியிலிருந்து நன்றியுடன் கீழே தருகின்றேன். எம்.ஜி.சுரேஷின் எல்லாப்புள்ளிகளோடும் உடன்படுவது என்பதல்ல இதற்கு அர்த்தம். இன்னவின்ன எழுத்துமுறைகளுக்காய் நான் நவீனம் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று எம்.ஜி.சுரேஷின் நாவல்களின் பின்னட்டைகளில் வரும் 'பயமுறுத்தல்கள்' எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வாசகர் ஒரு நாவலை வாசித்துவிட்டு இது இன்ன எழுத்து நடையில் எழுதியிருக்கலாம் என்று சிந்திக்கும் வெளியைக் கூட அவை மறுத்து நிற்கின்றன. அத்துடன், கிட்டத்தட்ட 'நாற்சார் மடம்' என்ற கதைக்கு நிகராய் ஜெயமோகனைக் கீழ்த்தரமாய்ச் சித்தரித்து எம்.ஜி.சுரேஷ் பன்முகத்தில் எழுதிய கதையிலும் எனக்கு எந்தப்புள்ளியிலும் உடன்பாடில்லை (அதற்கான எதிர்ப்பை எழுத்தில் வைத்தபோதும் -வழமைபோல ஜெயமோகன்- இப்படி தன்னைப் பற்றி எம்.ஜி.சுரேஷ் எழுதியதால் 'டிசே தமிழனுக்கு புளங்காகிதம்' என்று கூறியதை மறந்துவிடுவோம் :-) ).

-டிசே


போஸ்ட் மாடர்னிஸம் என்று அழைக்கப்படும் பின்நவீனத்துவத்திற்கு இப்போது வயது முப்பத்தெட்டு. 1966_ம் ஆண்டு ழாக் டெரிடா (Jacques derrida) என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் நிர் _ நிர்மாணம் (Deconstruction) என்ற சொற்பிர யோகத்தை முதன் முதலாக கையாண்டதில்தான் பின்நவீனம் பிறந்தது. அதற்கு, முன்னமே ஐம்பது வருஷங்களுக்கு முன் ஜான் வாட்கின்ஸ் சாப்மேன், ருடோல்ஃப் பான்விட்ஸ் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும் ‘போமோ’ அங்கீகரிக்கப்பட்ட பிறப்பென்பது 1966_ல்தான் தொடங்கியது. இதையட்டிய கோட்பாடுகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களில் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். பின்நவீனக் கோட்பாடுகளை முணுமுணுக்கும் நபர்கள் கூடவே தவிர்க்க முடியாமல் உச்சரிக்கும் பெயரல்ல; ஒரு சொல் எம்.ஜி.சுரேஷ். ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள். ‘இஸங்கள் ஆயிரம்’ ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ ஆகிய இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்கள், என்று பல படைப்புகளை தமிழுக்குத் தந்திருப்பவர். zero degree writing வகைமையைக்கொண்டு இவர் எழுதிய சமீபத்திய நாவல் ‘37’. இவரை தசரதபுரத்திலுள்ள அவரது வீட்டில் தீராநதிக்காகச் சந்தித்தோம். அவரது எழுத்து நடையைப் போலவே பேச்சும் எளிமையாக அமைந்தது.

தீராநதி : கார்க்கி இதழில்தான் உங்களுடைய முதல் கதை பிரசுரம் கண்டிருக்கிறது. அது கம்யூனிஸ தத்துவத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு பத்திரிகை. அதன் ஆசிரியர் இளவேனில் கூட ஒரு கம்யூனிஸ்ட். ஆக, நீங்களும் அப்போது கம்யூனிஸ்ட்டாக இருந்தீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: இல்ல. நான் கம்யூனிஸ்ட்டா இல்ல. முதல்ல நான் ஒரு வாசகரா இருந்தேன். கையில கிடைக்குற எதுவானாலும் படிப்பேன். குமுதம், விகடன், இப்படி எது எது கிடைக்குதோ அதயெல்லாம் படிப்பேன். ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினா சாப்பிட்டு முடிஞ்ச பின்னால அந்த பேப்பரை படிப்பேன். அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த பேப்பர் எங்கிருந்து கிழிக்கப்பட்டதுன்னு தேடிப் போவேன். குமுதம், விகடன்னு தொடர்ந்து படிச்சிக்கிட்டு இருக்குறப்ப இவையெல்லாம் ஒரு கட்டத்துல போதாம போயிடுச்சு. ஏதோ நம்மள ஒரே மாதிரியே ஏமாத்துது இந்தக் கதைகள்லாம்னு தோண ஆரம்பிச்சது. இத கடந்து நாம போகணும்னு, நினைச்சேன். அன்றாட வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். முதல்ல வெறுக்கிறோம். அப்புறம் விரும்புறோம். அடுத்ததா அதைக் கடந்து போறோம். அடுத்த கட்டமா கடந்து போகணும்_ அடுத்த அடுத்த லையனுக்கு கடந்து போகணும். இலக்கியத்துலயும் அதே மாதிரிதான். முதல்ல தேடித் தேடி படிக்க ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சு போகும், சுஜாதான்னா இந்த மாதிரி எழுதுவாரு. இந்த இந்த வார்த்தைகளை இங்க இங்க போடுவாரு. தி. ஜானகிராமன்னா இந்த மாதிரி எழுதுவாரு. ஜெயகாந்தன்னா இப்படித்தான் எழுதுவாரு. இப்படி எல்லாமே பேட்டன் ஆயிடுது இல்லையா? ‘பெரடைம்’ (Paradigm) மாதிரி. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு சட்டகம் இருக்கு. இதைத்தாண்டி வேற ஏதாவது நமக்கான எழுத்து இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் சோவியத் புத்தகங்கள் எனக்குக் கிடைச்சது. ரஷ்யன் ரைட்டர் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், மார்க்ஸிம் கார்க்கி, துர்க்கனீவ், குப்ரின் இதுபோல படிக்க ஆரம்பிச்சப்போ சரி, இதுதான் நமக்கான எழுத்துன்னு நினைச்சு நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்லயும் நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்ல சுஜாதா மாதிரியான எழுத்துக்கள படிச்சிகிட்டு இருந்தப்ப, ஜெயகாந்தன் கதைகள் வித்தியாசமா இருந்தது. அவர் ரைட்டிங் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. அப்போ ஜெயகாந்தன் எழுத்து நமக்கான எழுத்துன்னு நினைச்சு தொடர்ந்து படிக்கிறேன். அந்த காலிபர்ல கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, நகுலன், இந்த மாதிரி வாசிச்சேன். அதே போலதான் பத்திரிகைகள்லயும் கணையாழி, கசடதபற, தீபம்னு இப்படி இலக்கிய பத்திரிகையா வாசிச்சேன். அப்போதான் ‘கார்க்கி’ பத்திரிகையையும் வாசிச்சேன். இளவேனிலோட புரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பைபிள் மாதிரியான நடை. பைபிளையும் நான் படிச்சிருக்கேன். பைபிள் அற்றதைக் கூட பைபிள் நடையில எழுதலாம் போலிருக்கேன்னு தெரிய வருது. அதுக்கப்புறம்தான் இளவேனிலோட நட்பு எனக்குக் கிடைச்சது. அவரோடு நெருங்கிப் பழகினேன். மத்தபடி பொலிடிக்கல் லைன்ல கம்யூனிஸ்ட்டா என்னை நான் அடையாளப்படுத்திக்கல. ஆனா, கம்யூனிஸ்ட் புக்ஸ்செல்லாம் படிச்சிருக்கேன். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ராஸ்கி இதுமாதிரி கம்யூனிஸ்ட் லிட்ரேச்சர் நிறைய படிச்சிருக்கேன். ஆனாலும் அதுல எதனாலயோ என்னால ஒன்ற முடியல. ஏதோ ஷீtலீமீக்ஷீ ஒரு மற்றமையா உணர்ந்தேன். மனிதன் குறையுடையவன், பிரபஞ்சம் குறையுடையது. இப்படி எந்த ஒரு தியரியிலயும் ஒரு குறை இருக்குற மாதிரி ஓர் எண்ணம் எனக்கு. ஒரு விஷயத்துல குறையிருக்குறதாலதான் நாம் வேற ஒண்ணை தேடிப் போறோம். ஒரே விஷயத்துக்குள்ளேயே நாம இருக்குறதில்லையே? ஸயன்ஸ், ஃபிலாஸ`ஃபி, லிட்ரேச்சர், இப்படி நாம எதுலயும் பிடிக்கலையின்னா அடுத்த விஷயத்துக்குப் போயிடுறோம். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்_ விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். ஜாமண்ட்ரி தியரி, யூக்ளிட் இப்படி... யூக்ளிட் சமதளத்துக்கான தியரி. பூமி வந்து உருண்டையானது. ஆனா, பூமிக்கும் யூக்ளிட்டை வெச்சித்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். சின்ன அளவா இருந்தா யூக்ளிட் தியரி சரியா இருக்கும். பெரிய அளவா இருக்கும்போது அது தப்பாயிடும்னு தெரிய வருது இல்லையா? ஒரு தியரி, கொஞ்ச நாட்கள்லேயே செல்லாம போயிடுது. அதே மாதிரிதான் மார்க்ஸியத்துலயும் பிரச்னைகள் இருக்கு.

தீராநதி: இதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு வரும்போது பிடிபடுகிற விஷயங்கள். ஆனால் முதலில் இதை நீங்கள் உணர வாய்ப்புகள் கம்மி இல்லையா? அச்சூழலுக்குள்ளாகப் பொருந்தி இருந்தும் உங்களை கம்யூனிஸ்ட் ஆகவிடாமல் தடுத்தது எதுவாக இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்போ அந்தச் சமயத்துல அந்தப் பிரச்னைகள் எனக்குத் தெரியாது. போஸ்ட் மாடர்னிஸம் புக்ஸ்செல்லாம் படிக்கும்போது, இந்த விஷயங்கள்லாம் பின்னாடி நமக்குத் தெரிய வந்தது. அப்புறம் தியரிட்டிக்கலா மார்க்ஸியம் என்பது சிறந்ததுன்னு வெச்சிக்கோங்க. அதுக்கான ஆல்டர்நேடிவ் கிடையாதுன்னே சொல்லலாம்.

ஒடுக்கப்படும் மக்கள் போர்க்குணம் பெறுவதற்கு, ஒன்றுகூடி போராடுறதுக்கு... இந்த மாதிரி விஷயங்களுக்கு மார்க்ஸியம் தேவையானதுதான். அப்புறம் அது முன் வைக்குற சோஷலிஸ விடுதலைக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சம்பந்தமா வர்றதுக்கெல்லாமே கரெக்ட்தான். ஆனா, அதுக்கப்புறம் இம்பிலிமெண்டேஷன்னு வர்றப்ப சார்த்தர் சொல்வாரு ‘‘எல்லா கோட்பாடுகளும் நடைமுறைப்படுத்தும் போது நிறுவனமயமாகி விடுகிறது. நிறுவனம் ஆகுறப்ப அதனுடைய அடிப்படை தப்பாயிடுது’’ன்னு சொல்வாரு.

தீராநதி: சார்த்தர் corrupt ஆகிவிடுகிறது என்றுதானே சொன்னார்?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். corrupt ஆகிடுதுன்னுதான் சொல்றார்.அஃப்கோர்ஸ் அதுமாதிரியேதானே ஆச்சு. சோவியத் யூனியன்ல மார்க்ஸியம் முதல்ல வந்தப்ப ரொம்ப எழுச்சியோடவே இருந்தாங்க. பின்னாடி அது நீஷீக்ஷீக்ஷீuஜீt ஆயிடுச்சு இல்லையா?. அவங்களும் பிரிவிலெட்ஜ்டு சொஸைட்டியாதானே இருந்தாங்க. பெரிய பெரிய கார்ல போனாங்க. வசதியும், ஆடம்பரமுமா வாழ ஆரம்பிச்சாங்க. இவங்க செஞ்ச மாதிரியேதான் வேற கோணத்துல முசோலினியும், ஹிட்லரும் செஞ்சாங்க. இவங்களும் தன்னை மக்களின் பிரதிநிதியா அறிவிச்சிகிட்டுதான் தீமைகள் செய்ய ஆரம்பிச்சாங்க. மக்களை சர்வாதிகாரம்ங்குற பேர்ல ஒடுக்குனாங்க. ஏதோ தனிப்பட்ட விரோதத்தால இது நடக்கல. மக்களின் நன்மைக்குன்னு சொல்லித்தான் நடத்துனாங்க.

சோவியத் யூனியன்லயும் ‘சோவியத் ஒர்க்கிங் கிளாஸ்’ங்குற பேர்ல சில தீமைகள் நடந்தது. மக்களின் மீதான ஒடுக்குமுறை நடந்தது. அங்க நாஜி வதை முகாம்ல செஞ்ச மாதிரி சைபீரிய வதைமுகாம்ல இவங்க செஞ்சாங்க. கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் தீமைகள் ஒண்ணுபோலதான் இருந்தன. அதனாலதான் என்னை நான் பொலிட்டிக்கலா கம்யூனிஸ்டுன்னு அடையாளப்படுத்திக்கல.

தீராநதி : கேள்வி கம்யூனிஸ நண்பர்களுடன் பழக்கம் இருந்த காலத்திலும் நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்பதுதான். பிற்காலத்தில்தான் ‘போமோ’ எழுத்துக்களைப் படித்துவிட்டு இவற்றையெல்லாம் நிராகரிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் இளவேனிலுடன் தொடர்பு இருந்த நேரத்தில் உங்களிடம் மார்க்ஸியத்தை எதிர்ப்பதற்கும், இது சரியானதல்ல என்று புறம் தள்ளுவதற்கும் தர்க்க ரீதியாகவோ, அல்லது tமீஜ்tடாகவோ உங்களிடம் எந்த மெட்டீரியலும் இல்லை. இருந்தும் இடதுசாரியாக அடையாளப்படத் தயங்கி இருக்கிறீர்கள். அது ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: முதல்ல இடதுசாரிங்குறது வேற, கம்யூனிஸ்ட்டுங்குறது வேற. கம்யூனிஸ்ட் இல்லாதவர்களும் இடதுசாரியாக இருக்கலாம். கியூபாவுல முதல்ல அவங்க புரட்சி பண்ணப்போ அவங்கயெல்லாம் கம்யூனிஸ்ட்டே கிடையாது. சேகுவேரா, காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கிடையாது. ‘சே’வும் அவர் நண்பர்களும் மோட்டார் பைக்கை எடுத்துகிட்டு லத்தின் அமெரிக்கா முழுக்க ஒரு இடம் விடாம சுத்துனாங்க. ஊர் ஊரா, கிராமம் கிராமமா போய் மக்கள் படுகிற அந்த அவலங்களையெல்லாம் நேர்ல பார்த்தாங்க. அதனால கொதித்தெழுந்து புரட்சி செஞ்சாங்க. பின்னாடி அவங்க ஆட்சிக்கு வந்த பிறகுதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சாங்க. அதுமாதிரி பார்த்தா நான் முதல்ல இடதுசாரி சிந்தனையாளனாத்தான் இருந்தேன். இப்பவும் இருக்கேன்.

தீராநதி: சரி, நீங்கள் சொல்வது மாதிரி இடது சாரித்தன்மை கம்யூனிஸ்ட் இரண்டும் வேறு வேறுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் நீங்க ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை?

எம்.ஜி.சுரேஷ்: நான் ஆர்கனைசேஷன் சார்ந்த இடதுசாரியா இல்லையான்னு வர்றப்போ நான் சுத்தமான மார்க்ஸிஸ்ட்டா இல்லை. அதுக்கும்மேல் போய் சொன்னா நான் நூறு சதவீதம் மார்க்ஸிஸ்ட்டா இருக்கல.

தீராநதி: சார்த்தர் சொல்லும் corrupted என்ற வார்த்தையை எந்த விஷயத்திலேயும் நம் சௌகர்யத்திற்கு ஏற்ப போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தத்துவத்தின் மீதும் போட்டுப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு உயரிய லட்சியத்திற்காக இதைச் செய்கிறோம் என்பதை எப்படி நாம் அடைய முடியும்? லட்சியம் என்பதே தேவையில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: போஸ்ட் மாடர்னிஸம் என்ன சொல்லுதுன்னா ஒவ்வொன்னுக்கும் ஒரு சட்டகம் (Paradigm)இருக்குன்னு சொல்லுது. மார்க்ஸிஸம் தொழிலாளி, முதலாளின்னு ரெண்டா நம்மள பிரிக்குது. இரண்டாயிர வருஷ கலை, இலக்கிய வரலாற்றை அனலைஸ் செஞ்சிட்டு அதையே போஸ்ட் மாடர்னிஸம் மையம், விளிம்புன்னு ரெண்டாப் பிரிக்குது. மார்க்ஸிஸ்ட் சொல்ற தொழிலாளி வர்க்கத்தை எடுத்துக்கிட்டாகூட அதுலயும் மையம், விளிம்புன்னு இருக்கு. ஜாதின்னு எடுத்துக்கிட்டாலும் தலித்துக்குள்ளயே கூட மையம், விளிம்புன்னு இருக்கு. அதனால விஷயத்தை இப்படித் துல்லியமா பிரிச்சுக்கச் சொல்லுது போஸ்ட் மாடர்னிஸம். மையத்துக்கும் விளிம்புக்குமான ஒரு யுத்தம் உள்ளுக்குள்ளேயே நடந்துகிட்டே இருக்கு. அப்ப மையம், விளிம்புங்குற விஷயம் கலைக்கப்படணும்னு சொல்லுது. அப்பதான் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்னு சொல்லுது.

தீராநதி: மையத்தையும், விளிம்பையும் கலைப்பதால் மீண்டும் அது ஒரு மையமாகத்தானே ஆகும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்படி ஆகக்கூடாது. அது மாதிரியா கலைக்கப்படணும்.

தீராநதி : சபால்டன் என்ற ஒன்றிருக்கிறது. மையம் என்ற ஒன்றிருக்கிறது. சபால்டன், மையம் கலைக்கப்பட்டால் அது மறுபடியும் ஒரு மையமாக அல்லது சபால்டனாக ஏதோ ஒன்றாகத்தானே ஆக முடியும்?

எம்.ஜி.சுரேஷ்: கலைக்குறதுங்கறது ஒரு அஜெண்டா. ஸோ... உடனடியா கலைக்க முடியாது. முதல்ல வந்து அனைவரும் சமம்ங்குற மாதிரி ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொன்னாங்க. ஆனா, பிராக்டிக்கலா ஒரு பொதுமைப்படுத்துற முயற்சி இது. மார்க்ஸியமோ தொழிலாளி வர்க்கம்னு எல்லா உழைப்பாளர்களையும் ஒரு பொதுமைப்படுத்திடுது. நானும் தொழிலாளி, எனக்குக் கீழாக இருக்குற தலித்தும் ஒரு தொழிலாளின்னா சரியா வராது. ஆக பொதுமைப்படுத்துறங்கறது இங்க பொருந்தி வரல. போஸ்ட் மாடர்னிஸம்; பெண்ணியம், தலித்தியம்ங்கற மாதிரி ஒவ்வொரு விளிம்பு மக்களும் பாதுகாக்கப்படணும்னு சொல்லுது. இது வரைக்கும் நாம நாத்திகம் பேசினோம். இப்ப வந்து சிறு தெய்வ அடையாளங்களை மீட்டெடுக்கணும், நம்மோட தொன்மங்கள் மீட்கப்படணும்னு சொல்றோம். அப்பதான் நாம யாருங்கறது தனியாக காப்பாத்தப்படும். இந்தப் பொதுமை என்ன பண்றதுன்னா புல்டௌசரை போட்டு எல்லா அடையாளத்தையும் இடிச்சிடுது.

தீராநதி: கேள்வி corruptionன்னு சொல்லிக் கொண்டே போனால், உயரிய லட்சியங்களுக்காக செய்வது என்பது இனி சாத்தியமில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: அது வந்து அப்படி கிடையாது. சொல்லப்போனால் போஸ்ட் மாடர்னிஸமே ஒரு லட்சியத்தோடதான் இருக்கு. மையம், விளிம்பு கூடாதுன்னு சொல்றது கூட லட்சியம் தானே. எல்லோருக்கும் சுதந்திரம்னு நாம சொல்றோம். ஆனா, நமக்கு இங்க சுதந்திரம் இருக்கான்னு பார்த்தா உண்மையான சுதந்திரம் இல்ல. நாம சொல்லிக்கிட்டு இருக்குற சுதந்திரமும், நடப்புல இருக்குற சுதந்திரமும் ஆக்சுவலி ஒண்ணு இல்ல. நாம பிறந்து வளர்றப்பவே நம்மோட சுதந்திரம் தடுக்கப்படுகிறது. நான் ஒரு பொயட் ஆகணும்னு விரும்புறேன். ஆனா, சமூகத்துல என்னுடைய அடையாளம் கவிஞன் கிடையாது. கவர்மெண்ட் ஆபீஸ§ல ஒரு வேலையில இருக்கறது, அதான் என்னுடைய அடையாளம். நான் விரும்புற அடையாளம் அது கிடையாது. அப்படிங்கறப்போ சுதந்திரமே இங்க இல்லியே. நீங்க யார்? என்பதை உண்மையான அடையாளத்தோட பார்க்கப்படணும்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது. தனித் தனி அடையாளங்களும் காப்பாத்தப்படணும்னு சொல்றது எவ்வளவு பெரிய லட்சியம்.

தீராநதி : ஏறக்குறைய செக்குரலரிஸம் மாதிரியா இது?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். தனிப்பட்ட உரிமை, மொழி வேணும்னு சொல்லுது. இட்டிஷ் மொழிய எடுத்துக்கோங்க அது வெறும் நூறு இருநூறு பேர் பேசுற மொழிதான். ஆனா சைனீஸ்ஸை எடுத்துக்கிட்டா லட்சம், கோடிக்கணக்குல பேசப்படுற மொழி. அப்ப உலகம் பூராவும் மெஜாரிட்டியான மொழியா இருக்குறதால சீன மொழியே உலக மொழியா இருக்கணும், இன்ட்டிஷ் மொழியெல்லாம் தேவையில்லைன்னு சொல்ல முடியாது. அது இருநூறு பேர் பேசுற மொழியா இருந்தாலும் மரியாதைகள், கௌரவங்கள், அந்த மக்களுக்கு வழங்கப்படணும்னு கேட்குது. அப்படிங்குறப்ப இத வந்து தனித்தனியா பிரிச்சு பார்க்குறதல அர்த்தம் இல்ல. எல்லோருக்கும் இந்த உலகத்துல ஒரு வெளி இருக்கு. இந்த ஸ்பேஸ் காப்பாத்தப்படணும்னு சொல்லுது. இப்ப வெளியான ‘வெயில்’ படத்தை எடுத்துக்கோங்க. பெரும்பாலும் வெற்றி பெறுறவங்களைப் பத்திதான் நாம கவலைப்படுறோம். தோத்துப் போறவனைப் பத்தி நாம கவலைப்படுறதில்ல. தோத்துப் போறவன்தான் மெஜாரிட்டியா இருக்கான். அவனாலயும்தான் இந்த உலகம் இயங்குது. இந்த விஷயத்தை ‘வெயில்’ படம் சொல்லுது. தலித்தியம், பெண்ணியம்னு அவங்க அவங்களுக்கான ஸ்பேஸை உறுதிப்படுத்த வைக்குது. பிரான்ஸில பார்த்தீங்கன்னா, யூதர்களை மதிக்கமாட்டாங்க. ஆப்பிரிக்கர்களை கருப்பர்கள்னு அவமானப்படுத்துவாங்க. இன்னைக்கு அங்க கலவரம் நடக்குது. ஏன்னா அவங்களை மற்றமையா பார்த்தாங்க. டிசுயம், மற்றமைன்னு ரெண்டு விஷயம் இருக்கு. அடிப்படையிலேயே மனிதன் அதிகாரத்தை விரும்புறவனா இருக்கான். நீட்ஷே ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகாரத்திற்கான, ஆற்றலுக்கான விருப்பு இருக்கு’’ன்னு சொல்றார். இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும். விரும்புறதை நான் அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறான். என்னுடைய விருப்பத்துக்கு உங்க விருப்பம் குறுக்கீடா இருக்கு. உங்க விருப்பம் என் விருப்பத்தைத் தடை செய்யுது. அப்ப நான் என்ன பண்ணணும்னா அதிகாரத்தை கைக் கொள்ளணும். அதிகாரம் என் கைக்கு வந்துடுச்சுன்னா நான் நினைச்சதை அடைஞ்சுடலாம். அதிகாரம்ங்குறது ரெண்டு நுனிகளைக் கொண்டது. ஒன்று செலுத்துபவனின் நுனி; இன்னொன்று பெறுபவனின் நுனி. செலுத்துற எடத்துக்கு நான் வந்துட்டேன்னா என்னுடைய விருப்பம் நிறைவேறும். நீங்க உங்க விருப்பத்தை தியாகம் பண்ணணும். என்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு, இப்ப நான் உங்களை கண்ட்ரோல் பண்றேன். என் விருப்பத்தை நிறைவேற்றிக்குறேன். நீங்க வந்து ரெகுலரா என்னை எதிர்த்துப் போராடுறீங்க, எதிர்ப்புத் தெரிவிக்கிறீங்க. அப்ப வந்து ரெவில்யூஷன், புரட்சிக்காரன், காந்தி, பகத்சிங் எல்லாமே நீங்கதான். இதுமாதிரி வரலாறு முழுக்க நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் காலத்துல கூட நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் ஒரு இனத்தையே அழிச்சான். இது மாதிரி ஏன் நடந்திருக்குன்னா அதிகாரம் ஒரு இடத்துல குவிஞ்சு இருந்ததால நடந்திருக்கு. அப்போ அதிகாரம் ஒரே இடத்துல இல்லாம பகிர்ந்தளிக்கப்பட்டா corruption வராதுன்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது.

தீராநதி : அப்போ பின்நவீனத்துவ அரசியலை நடைமுறைப்படுத்தினால் அதிகாரம் யார் கையில் இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அதிகாரம் நிச்சயம் ஒருத்தர் கையில இருக்காது. அதிகாரம் ஒருத்தர் கையில இருந்தா மிருகம் மாதிரி ஆயிடும். அதிகாரம் வெச்சிருப்பவனும் மிருகம் போலவே ஆயிடுவான். பிரித்தளிக்கும்போது இது நடக்காது. இதைத்தான் சோவியத் யூனியன்ல செஞ்சாங்க. அதிகாரம் முழுக்க முதல்ல மாஸ்கோவுல இருந்தது. பின்னால அதிகாரத்தைப் பகிரணும்னு யூனியனில் கூட்டாக இருந்த நாடுகளை அவங்க பிரிச்சுவிட்டாங்க. ஒரு இடத்துல அதிகாரம் மொத்தமா இல்லாத மாதிரி பண்ணாங்க. அது போலதான்.

தீராநதி : இந்தியாவில் கூட மாநிலங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க. முன் வைக்கின்ற மாநில சுயாட்சி மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: தி.மு.க.வுல மாறன் போன்றவங்க கூடி மாநில சுயாட்சின்னு ஒரு கருத்தை முன் வைச்சாங்க. அது இதோட ஒத்துவரக்கூடிய ஒன்றுதான். மாநில சுயாட்சியின் மூலமா அதிகாரத்தை மத்தியில மையமா வைச்சி இருக்காம பிரிச்சளிக்க முடியும். அப்போ அதிகாரம் பரவலாயிடும். ஸோ... corruption க்கு வேல இல்லாம போயிடும்.

தீராநதி : உலக மயமாக்கலுக்குப் பின்பும், புதிய பொருளாதார கொள்கைக்குப் பின்பும் கம்யூனிஸம் தன் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியாமல் திணறி, பின்னடைவு அடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சமீபத்தில் கூட, கொல்கத்தாவில் புத்ததேவ் அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்து 23 நாட்கள் தாண்டி பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னால் சமரசத்திற்கு வந்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாடா போன்ற நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதென்றும், அவற்றை தவிர்க்க முடியாதென்றும் கம்யூனிஸ்ட்டுகளே கொல்கத்தாவில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். பின்நவீனம் குறித்து விவாதிக்கும் இக்காலத்திற்கு கம்யூனிஸத்தின் தேவை இருக்கிறதா?

எம்.ஜி.சுரேஷ்: இப்போ பின்நவீனத்துவவாதிகள்னு சிலரைச் சொல்றோம் இல்லையா, அவங்க எல்லாமே மார்க்ஸிஸ்ட்டா இருந்து வந்தவங்கதான். பின்நவீனவாதிகளில் சிலர் நேரடி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்காங்க. அல்லது ஆதரவாளராக இருந்தாங்க. சார்த்தர் கூட ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்தவருதான். நேரு கூட ‘‘முப்பது வயசுக்குள்ள ஒருத்தன் கம்யூனிஸ்டா இல்லையின்னா அவன் முட்டாள். அதுக்கப்புறமும் கம்யூனிஸ்டா இருந்தா அவன் பைத்தியக்காரன்’’னு சொன்னார். அப்படிச் சொன்ன நேருவும் கம்யூனிஸ்டா இருந்தவர்தான். முதல்ல கம்யூனிஸ்டா இருந்தவங்க அதுக்கப்புறம் அதுமேல அதிருப்தி அடைஞ்சு இது சரியாயில்லைனு வெளியேறிடுவாங்க. இது தவறான போக்குன்னு எடுத்துக்கக்கூடாது. அதுக்குப் பேரு கடந்து செல்வதுன்னு சொல்லலாம். அடுத்த கட்ட நகர்வுன்னு எடுத்துக்கலாம். ஒரு விஷயம் தியரி, பிராக்டிக்கல்னு ரெண்டு விதமா இருக்கு. கொள்கை அமலாக்கம்னு வர்றப்ப, வெறும் கொள்கையா இருந்து வந்தது அமலாக்கப்படுத்தும் போது அப்படியே நிகழ்றதில்ல. அதுல சில பிரச்னைகள் வந்துடுறது. இந்த ஆட்டத்துக்கு நான் வர்லப்பான்னு சிலர் போயிடுவாங்க. சிலர் வேற வழி இல்லாம இத விட்டு வேற எங்கயும் போக முடியாம தங்கிடுவாங்க. இதுலயே இன்வால்வ் ஆயிட்டோம், இத்தனை வருஷங்களை ஓட்டிட்டோம்னு இருந்துடுவாங்க. 50 வருஷமா நடிகனா இருந்தவன் பொழைக்க வழி இல்லன்னா கேமிரா மேனாவோ, இல்ல மேக்கப் மேனாவோ எப்படி ஆக முடியாதோ அதே மாதிரி இதுலயும் பிரசினைகள் இருக்கு. இப்படித்தான் மார்க்ஸிஸ்டுகள் அடுத்த கட்டம் நோக்கிப்போக முடியாம வீழ்ச்சி அடைஞ்சுட்டாங்க. அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு ஒண்ணு இருக்கு. ஒரு பேப்பரை எடுத்துக்கிட்டா அது வெறும் தனிப் பொருள் இல்ல. இத மரத்தூள்ல இருந்து பண்ணாங்க. இந்த மரத்தூள் இதுக்கு முன்னால ஒரு நல்ல மரமா இருந்தது. இப்ப அதே பேப்பரை எரிச்சிட்டா கரியாகிடும். பவுத்தம் இப்படித்தான் ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லுது. மார்க்ஸியமும் அப்படித்தான் சொல்லுது. எல்லா பொருளும் இயங்கிக்கிட்டே இருக்கு. ஓடிக்கிட்டே இருக்கு. ‘உலகம் பற்றி எரியும் தீ’ன்னு புத்தர் சொன்னாரு. இந்தத் தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. புதிய புதிய தழல்கள் வந்துகிட்டே இருக்கு. முதல்ல எரிஞ்ச தீ இப்ப அணைஞ்சு போயிடுச்சு. அப்புறம் இன்னொரு தீ... இன்னொரு தீ... அதுமாதிரி எல்லாமே தொடர்ந்து ஒரு இயக்கத்துல இருக்கு. எல்லாமே மாறுது இல்லையா? தொழிலாளி, முதலாளி எல்லாமே மாறுறாங்க.

இன்னைக்கு மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் இல்ல. virtual முதலாளிகள் வந்துட்டாங்க. அவன நேரில பார்க்க முடியாது. BPO வுல வேல செய்யுறவங்க அவங்க முதலாளிய நேர்ல பார்த்திருக்கவே மாட்டாங்க. முதலாளியும் இவங்கள பார்த்திருக்க மாட்டான். எங்கிருந்தோ அவன் அனுப்புறத மெயில் வழியா இங்கிருந்து வேல செஞ்சு அவனுக்கு இவங்க பதில் அனுப்புவாங்க. USல ஒரு டாக்டர் இருக்காருன்னா, அவர் ஒரு நாளைக்கு பத்து பேஷண்ட் பார்க்குறார்ன்னா தன்னோட கேஸ் ஹிஸ்டரி, ரெக்கார்டு எல்லாத்தையும் இங்க அனுப்புவான். அத டோட்டல் ஃபைலா உருவாக்கி இவங்க இங்க பத்திரமா வைச்சிருப்பாங்க. இத வைச்சிதான் அந்த டாக்டரால அங்க பீஸ் வாங்க முடியும். அவன் அப்படி வாங்குற பீஸை வைச்சிதான் அவன் இவங்களுக்குச் சம்பளம் தரமுடியும். இதுபோல பல துறைகள் இன்னைக்கு இயங்கிட்டு இருக்கு. தொழிலாளர் நலன் பத்தி இங்க நாம பேச முடியாது. ஏன்னா இவங்க முதலாளிய பார்க்குறதே இல்ல. இத வெச்சு தொழிற்சங்கம் எல்லாம் கட்டமுடியாது. பொலாரிஸ் மாதிரியான சாஃப்ட்வேர்ல வேலை செய்யறவங்க அமெரிக்காவுல இருக்குற முதலாளிக்காக இங்க சின்ஸியரா உழைக்குறாங்க. இருபது, முப்பது ஆயிரம்னு சம்பளம் கூட அவன் இவங்களுக்கு அதிகமா தர்றான். இவ்வளோ சம்பளம் வாங்குறவன் முதலாளிக்கு எதிரா புரட்சி பண்ணணும்னு நினைக்கக் கூட மாட்டான். இவங்களுக்கே அவன் இவ்வளவு சம்பளம் தர்றான்னா அவன் எவ்வளவு சம்பாதிப்பான்! இது மாபெரும் சுரண்டல் இல்லையா? மார்க்ஸ் காலத்து சுரண்டல விட மிகப்பெரிய சுரண்டல். ஆனா, இவங்களை எல்லாம் திரட்டி போராடவே முடியாது. இது virtual முதலாளி, virtual தொழிலாளி. இதெல்லாம் மார்க்ஸ§க்கு தெரியாது. காரணம், அப்ப இந்த நிலவரம் இல்ல. இதுக்கு. மார்க்ஸியத்துலயும் தீர்வு கிடையாது. மார்க்ஸ் எல்லாத்தையும் பொருள் மதிப்பா பார்த்தாரு. கார்ன்னா யூடிலிட்டி வேல்யூ_ பயன் மதிப்போட பார்த்தாரு. But இன்னைக்கு வந்து என்னா ஆகிப்போச்சு. எல்லாத்தையும் அர்த்தமா பார்க்க வேண்டி இருக்கு. ஒரு பொருளுக்கு போஸ்ட் மாடர்னிஸம் பல மீனிங்ஸ் சொல்லுது. ‘படி’ன்னு சொன்னா ‘படி’க்குறது, அளக்குற‘படி’, ‘படி’க்கட்டு, ‘படிப்படி’யா முன்னேறுவது, தலையை ‘படி’ய வாரினான். இப்படி எவ்வளவோ மீனிங்ஸ் வருது. அதே மாதிரி காருக்கும் மீனிங் இருக்கு. நான் BMW கார் வாங்கி இருக்கேன்னா யாருமே வாங்காத BMW காரை நான் வாங்கி இருக்கேன்னு ஒரு அர்த்தம் வருது. BMWயும் கார்தான், மாருதியும் கார்தான். ஆனா, மாருதி கார் வாங்கினவன் BMW கார் வாங்கினவன பார்த்தா பயப்படுவான். ‘பரவா இல்லப்பா நீங்க கார் வாங்கிட்டீங்க’ன்னா ‘இதெல்லாம் ஒரு காரா சார்’ன்னு சொல்லுவான். ஆக, ஒரு பொருளை வாங்கும்போது அதோட அர்த்தத்தையும் நாம சேர்த்து வாங்குறோம்.

இந்த ஏரியா மார்க்ஸியத்துல இல்ல. இந்த ஏரியாவை மார்க்ஸ் கவனிக்கல. அல்லது அதற்கான தேவை அப்ப இல்ல. அப்ப மார்க்ஸியம் பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைக்கப்படணும். ஒரு செடி எப்படி பேப்பரா மாறுச்சோ மாக்ஸியம்ங்கற செடியும் இந்த பேப்பரா மாறணும். அப்படி மாறுச்சா? மாறல. கம்யூனிஸ்ட் என்ன பண்றாங்கன்னா மறுக்குறாங்க. இல்ல, மறைக்குறாங்க. மார்க்ஸியத்தின் தடுமாற்றங்களை அமெரிக்காவோட பொய் பிரச்சாரம்னு பேசிக்கிட்டே இருக்காங்க. ஈ.எம்.எஸ்.கிட்ட, ‘‘கம்யூனிஸம் போய் மீண்டும் முதலாளித்துவம் வருமா’’ன்னு கேட்டப்போ ‘‘கருவாடு மீனாகாது’’ன்னு பதில் சொன்னார். ஆனா, கருவாடு மீனாயிடுச்சு. ரஷ்யாவில் செங்கொடி இறக்கப்பட்டு வேற கொடி பறந்தது. இத நம்பூதிரி நினைச்சுப் பார்க்கல. ஏன் இப்படி பிரச்னை வருதுன்னா பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸியம் வளர்த்தெடுக்கப்படல. மார்க்ஸியம் தோத்துடுச்சு, மார்க்ஸியம் பொருந்தாது என்பதைவிட, அது வளர்த்தெடுக்கப்படணும். இந்தப் புதிய வாழ்நிலைக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்படணும். ஆனா, இன்னைக்கும் இவங்க பழைய அறிக்கைதானே வாசிக்குறாங்க. கம்யூனிஸ அறிக்கையில இருக்குற பல விஷயங்களை முதலாளித்துவ அரசுகளே செஞ்சுடுச்சு. ரயில்துறை மாதிரியான பெரிய துறைகள் தேசியமயமாக்கப்படணும்னு அதுல இருக்கு. அத இந்திராகாந்தி அரசு; அப்புறம் வந்த பல அரசுகள் செஞ்சுடுச்சு. ஆனா இன்னைக்கும் அதே அறிக்கை வாசிக்குறாங்க.

சிலர் மார்க்ஸிஸம் காலாவதியாகிடுச்சுன்னு சொல்லுவாங்க. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். வளர்தெடுக்கப்படணும்னு சொல்றேன்.

தீராநதி: meta marxismமும் நீங்கள் சொல்லும் Hyper marxismமும் எந்த விதத்தில் வேறுபடுகிறது?

எம்.ஜி.சுரேஷ்: நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்து அதன் செயல்பாடுகள் பிடிக்காம விலகிப்போனவர். அவர் meta marxism என்கிற கருத்தை முன் வைச்சார். இப்போ இம்பிலிமெண்ட்டேஷன்னு வரும்போது என்ன பிரச்னைகள் வருதோ அது வராமலிருக்க நாம் கம்யூனிஸத்தை கடந்து போகணும்னு சொன்னார். metaன்னா கடந்து போவதுன்னு அர்த்தம்.

Hyper-marxism என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தியது, நாளையதினம் ஒரு Hyper marxism வரலாம்னு சொன்னேன். இந்த உலகம் வந்து ‘ஹைப்பர் ரியல்’னா; அதீத உண்மை, நிஜமற்ற நிஜம், நகல் உண்மை, இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கலாம். இன்னைக்கு நாம பிம்பங்களால் ஆன உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். ரஜினிங்கற பிம்பம், இன்னும் ஏதேதோ பிம்பங்கள் நம்மை ஆட்சி செய்யுது. ரஜினிங்கற உண்மையை விட பிம்ப ரஜினிக்கு வால்யூ ஜாஸ்தி. நாளைக்கு ஒரு தேர்தல்னா பிம்ப ரஜினியை பார்த்துத்தான் மக்கள்ஓட்டுப் போடுவாங்க. அப்ப இந்தப் பிம்பம் என்பது நகல் உண்மை. இந்த நகல் உண்மை. அசல் உண்மையைவிட உண்மையாக இருக்கு. வீட்டுல இருக்குற டெலிவிஷனை எடுத்துக்கிட்டா இதே பிம்பங்கள்தான் ஆட்சி செலுத்துது.

மெகா சீரியல பார்த்து நம்ம ஜனங்க நம்பிகிட்டு உட்கார்ந்திருக்காங்க. நாம் வந்து பிம்பங்களின் அடிமை ஆகிறோம். உளவியல் ரீதியாவே மனிதன் பிம்பங்களின் அடிமைதான். மனுஷன் முதல்ல பிம்பத்தின் பின்னாடிதான் போவான். இத ஒரு விஞ்ஞானி பரிசோதனை பண்ணார். ஒரு கோழியை முட்டைகளை அடைகாக்க வச்சார், கோழி அடைகாத்து குஞ்சு வெளிய வந்த பின்னாடி கோழிய தூக்கிட்டு தாய்க் கோழிக்குப் பதிலா தன்னோட ஷ¨வை வைச்சிட்டார். இப்ப குஞ்சுகள் பார்க்குற முதல் பொருள் ஷ¨தான். அந்தப் பிம்பம் அதுங்களுக்கு முதல்ல பதியுது. அப்புறம் ஷ¨வை எடுத்து மாட்டிக்கிட்டு அவர் நடக்க ஆரம்பிச்சார். அந்தக் குஞ்சுகள்லாம் அவர் பின்னாடியே போகுது. பார்வை வந்த உடனே முதல்ல பிம்பம்தான் மனசுல படியுதுன்னு அவர் புரூஃப் பண்ணார். நமக்கு தாய்தான் முதல் பிம்பம். குழந்தை, தாயும் நாமளும் ஒண்ணுன்னே முதல்ல நம்புது. இதோட நீட்சியாதான் நாம நடிகர்கள் பின்னாடி போகுறது. இந்தப் பிம்பங்கள் ஷிஃப்ட்டாகிட்டே இருக்கு. முதல்ல அம்மாங்கற பிம்பம், அப்புறம் தலைவர்ங்கற பிம்பம், சேகுவேரா, காரல்மார்க்ஸ் எல்லாம் ஒரு பிம்பமா இருக்குறாங்க. அதுக்காக சேகுவேராவும் மார்க்ஸ§ம் நடிகனும் சமமானவங்கன்னு நான் சொல்லல. பல்வேறு ‘லெவல்’ல இந்தப் பிம்பங்கள் பின்னாடி நாம போறோம். நகல் உண்மையை நோக்கிப் போவது நல்லதில்லை. அப்ப என்ன செய்யணும். எந்த ஒரு விஷயத்தையும் விசாரணை பண்ணணும். பகுப்பாய்வு பண்ணணும். பின்நவீனத்துவம் அதுதான் பண்ணுது. ஏன் லிட்ரேச்சர்கூட அதைத்தான் செய்யுது. எல்லாக்காலத்திலும் இலக்கியம் தன்னுடைய காலத்துக்கு எதிரா இருந்திருக்கு. தன்னுடைய சமூக அமைப்புக்கு, அதிகாரத்துக்கு எதிரா நின்னு செயல்பட்டிருக்கு. Hyper marxismங்கறது இதுதான் செய்யச் சொல்லுது. Hyper marxismம்னா செழுமை செய்யப்பட்ட, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட marxismம்னு அர்த்தம். இப்போதைய அரசியல் அமைப்புகள் எல்லாமே படிநிலை (hierarchy) தன்மையா இருக்கு. இதுல அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் போகும். Hyper marxism சமூகத்தில் அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கிப் போகும். இன்னைய அமைப்பு செங்குத்தானது. (Vetical) மேல் கீழ் பாகுபாடுகள் கொண்டவை. நமக்குத் தேவை கிடைமட்டமான அமைப்பு (Horizonta) கிடைமத்தில் மேல் கீழ் இல்லை. இவையெல்லாம் Hyper marxismமட்டுமே சாத்தியம்.

தீராநதி: பிம்பங்கள் பற்றி பேசியதால் கேட்கிறேன். தங்களின் வசதிக்கேற்ப பிம்பங்களை அரசியல் சாயலோடு மறு வடிவமைப்பு செய்வதும் நடந்துவருகிறது. உதாரணமாக ஒளவையின் நிஜ பிம்பம் இன்று சொல்லப்படவில்லை. ஏதோ பொய்மையைக் கொண்டு நிரப்பி வேறுவிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பமே ருஸ§ வடிவமாக உள்ளது. இதைப்பற்றி உங்களின் கருத்து?

எம்.ஜி.சுரேஷ்: முன்னாடி நாம பேசினோம் இல்ல. அத மாதிரி பின்நவீனத்துவ அடிப்படையில இத கேள்விகேட்பதாலயும், விசாரணை செய்யறதாலயும் நிஜ பிம்பத்தை நாம அடைய முடியும். அப்ப இந்தப் பிரச்னை வராது.

தீராநதி: ஒரு கேள்வி மறுபடியும் ஒரு கேள்வியைத்தானே உண்டாக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: விசாரணையின் மூலமாதான் நாம உண்மைய அடைய முடியும். நாம சொல்ற உண்மைங்கறது ஒற்றை உண்மையல்ல; ஜெர்மன் விஞ்ஞானி எர்வின் ஷ்ரோடிங்கர் ‘கேட் தியரி’ன்னு ஒரு பரிசோதனை செஞ்சுகாட்டினார். உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். ஒரு டப்பாவுக்குள்ள ரெண்டு தட்டு வெச்சு ஒரு தட்டுல விஷமும் இன்னொரு தட்டுல உணவும் தனித்தனியா வெச்சார். ஒரு பூனையை அதுக்குள்ள போட்டு மூடிட்டார். இப்ப அந்த உணவைச் சாப்பிட்டா பூனைக்கு ஒண்ணும் ஆகாது. விஷத்த சாப்பிட்டா பூனை செத்துடும். இப்ப நாம பொட்டிய திறக்குற வரைக்கும் ரெண்டு உண்மை இருக்கு. ஒண்ணு: பூனை உயிரோட இருக்கு இரண்டு: பூனை செத்துடுச்சு. இத வைச்சு ஒரு உண்மைங்கறது கிடையாதுன்னு நிரூபிச்சார். இப்ப நாம திறந்து பார்க்காத இடத்துல இருக்கோம். திறந்து பார்த்துட்டா ரெண்டு உண்மைக்கு எடம் இல்லியே. நாம மூடப்பட்ட பெட்டியின் முன்னால நிற்குறோம். நம் வாழ்க்கைச் சூழல் பொதுவாக அப்படி இருக்கு. பொதுவா நாம பல உண்மைகளோட இருக்கோம். அதுக்குதான் இந்தக் கேள்வியும், விசாரணையும்.

கேள்விக்கு உள்ளாக்குதல் என்பது ஒரு விஷயத்தை நிராகரிக்குறது அல்ல; அதாவது பின்நவீனத்துவவாதியென்பவன் தன் முன்னோர்களை நிராகரிக்க மாட்டான். அதேசமயத்துல அவர்களைப் பின்பற்ற மாட்டான்.

தீராநதி: நீங்கள் சொல்வது மாதிரி விசாரணைக்கு உட்படுத்துதல், கேள்வி எழுப்புதல் இப்படிச் சகல வசதிகள் இருந்தும் நம் வரலாற்றையே கொட்டிக் கவிழ்த்த மாதிரி தமிழில் ஒரு பிரதி கூட வெளிவரவில்லையே ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: நீங்க சொல்றது உண்மைதான். உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆப் எ ரோஸ்’ டான் பிரவுனின், ‘டாவின்ஸி கோடு’ மாதிரியான ஒரு படைப்பு தமிழ்ல இன்னும் வரல. இத்தனைக்கும் ‘டாவின்ஸி கோடு’ ஜனரஞ்சகமான ஒரு படைப்பு. அதுபோல கூட தமிழ்ல வரல!

இப்ப நான் அந்த முயற்சியிலதான் இருக்கேன். இத சொல்றதால என்னை நான் அவங்களோட அவங்க அளவுக்கு ஒப்பிட்டுக்குறதா நினைச்சுடக்கூடாது. உம்பர்டோ ஈகோ, இடாலோ கால்வினோ எல்லாம் பெரிய ஆளுமைகள்.

‘டாவின்ஸிகோடு’ல யேசு கிறிஸ்துவுக்கு ஒரு மனைவி இருந்தாள், ஒரு மகள் இருந்தாள்னு ஒரு விஷயத்தைச் சொல்றார். அப்ப ரெண்டாயிர வருஷத்து பைபில கொட்டிக் கவிழ்த்துட்டார். யேசுவுக்கு மனைவி இருந்தான்னு சொல்லி அவர கேவலப்படுத்தல. ஆனா, இப்படியும் ஒண்ணு இருந்தது, எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்கன்னு சொல்றார்.

இதேபோல நம்முடைய களப்பிரர் காலத்தை எடுத்துக்கிட்டா கேள்விக்குரிய பிரசினைகள் எவ்வளவோ இருக்கு. பத்தாயிரம் சமணர்களை ஆசனவாயில் கழுவேத்திக் கொன்னாங்க. கழுவுல ஏத்துனா உடனே செத்துடமாட்டான். இதயம், மூளையில பாதிக்கப்பட்டாதான் உடனே ஒருத்தன் சாவான். ஆசனவாயில் ஏற்றப்பட்ட கழுமரம் அங்க குத்தாம வேற எங்காவது குத்துனா மணிக்கணக்கா சாகாம துடிதுடிச்சிகிட்டே கிடப்பான். இது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி செத்த உடல்களை எரிச்சு அந்தச் சாம்பல்ல ஏறி குதிச்சு சந்தோஷமா ஆட்டம் போட்டாங்க. அவங்க உடல் எரிக்கப்பட்ட சாம்பல உடல் முழுக்க பூசிக்கிட்டாங்க. இன்னைக்கு விபூதி பூசுறாங்களே அதோட ஆதாரம் இதுதான். சைவர்கள் மையமாக இருந்தப்ப சமணர்கள் விளிம்பு நிலையாக்கப்பட்டாங்க. சமணர்களும் தமிழன்தான். இந்த வரலாற்றை யாராவது இதுவரைக்கும் எழுதுனாங்களா? இல்ல.

தீராநதி: தைரியம் கொடுக்கும் கோட்பாடு இருந்தும் தமிழில் ஏன் வரவில்லை? சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட வரவில்லையே? தைரியம் போதவில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட தமிழில் வரல. நீங்க சொல்ற தைரியமின்மையை கூட மன்னிச்சுடலாம். ஆனா, இவங்க ஆதாயங்களுக்காக செயல்படுறாங்க. அதனால இவங்கள மன்னிக்கக்கூடாது. ஜெயகாந்தன் முதல்ல ‘ஹர ஹர சங்கரா’ எழுதுனார். ஞானபீடம் கிடைச்சதுக்கு அப்புறம் சங்கராச்சாரியார தூக்கி பிடிச்சு மறுபடியும் எழுதுறார். ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’னு ஒரு நாவல் எழுதுனாரு. விஷ்ணுபுரத்தோட முதல் பதிப்பு அட்டைப் படத்த பார்த்தீங்கன்னா தாமரை படம் போட்டுருக்கும். தாமரை பி.ஜே.பி.யோட சிம்பல். விஷ்ணுபுரத்தோட ‘மெயின் தீம்’ என்னான்னு பார்த்தா, ஆதியில் விஷ்ணுபுரம்னு ஒண்ணு இருந்தது. விஷ்ணு புரண்டுபடுத்தார் _ நம்ம ஐதீகத்துல வருது முதல் முறை விஷ்ணு புரண்டு படுத்தப்ப விஷ்ணுபுரம் இருந்துச்சு. மீண்டும் புரண்டு படுத்தப்ப முகலாயர்கள் வந்துட்டாங்க. அதனால அந்த விஷ்ணுபுரம் அழிந்தது. இப்ப திரும்ப புரண்டு படுத்திருக்காருன்னு வருது. அப்படீன்னா பி.ஜே.பி. ஆட்சி வந்துட்டதுன்னு மறைமுகமா எழுதுறார். அதன் விளைவு, பொள்ளாச்சி மகாலிங்கம் அத நூற்றுக் கணக்குல வாங்கி இலவசமா தர்றாரு. அதனால அது அதிகமாக விற்குது. நியாயமா இவரு என்ன செய்யணும்? உம்பர்டோ ஈகோ, டேன் பிரவுன் மாதிரி நமது இந்திய நாட்டுல என்ன கொடுமைகள் இருந்தது, ‘அன்பே சிவம்’னு சொல்லறாங்க, நிஜமா இருந்திருக்காங்களான்னு கேள்வி எழுப்பி இருக்கணும்.

அதச்சொன்னா அவருக்கு என்ன ஆதாயம். அவருக்கு என்ன பலன் கிடைக்கும். இந்துத்வா கொள்கைகளை எழுதினா நாளைக்கு அவர் ஒரு எம்.பி.யாகூட ஆகலாம். பி.ஜே.பி. கவர்மெண்ட் வர்றப்ப சாகித்ய அகாடமி விருதுகூட கிடைக்கும். இதனால அவர் எழுத்து பல மொழிகள்ல மொழி பெயர்க்கப்படும். பலவாரியான இந்து மக்களுக்கு ஆதர்ஸமா அவர் இருப்பார். அதனால இப்படி எழுதுறாரு. ஆக, தைரியமில்லாம இருப்பதைவிட ஆதாயவாதியாக இருப்பது கொடியது.

தீராநதி: அப்படி ஒரு படைப்பும் வராதபட்சத்தில் இந்தக் கோட்பாடுகள் வீணாக எதற்கு?

எம்.ஜி.சுரேஷ்: நம்மளோட கடமை ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். யாராவது இத செய்வாங்கன்னு நம்பி செஞ்சிட்டு இருக்கோம். இப்ப ‘நாஸா’வுல இருக்குற விஞ்ஞானிகள்லாம் பிரபஞ்ச வெளியில சவுண்டை அனுப்புறாங்க. ... பீப்பீப்பீப்பீன்னு சவுண்டை அனுப்புறாங்க. பிரபஞ்ச வெளில வேற எங்காவது உயிரினம் இருக்கலாம் அந்த உயிரினம் பதிலுக்கு என்றைக்காவது எதிர்வினை செய்யாதான்னு நம்பி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நாமலும் அதே மாதிரி செய்யுறோம் அவ்வளவுதான்.

தீராநதி: ஆரம்பகாலங்களில் நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்கள். அதில் கவிதைகளின் அம்சம் குறைவாக இருப்பதால் நிராகரித்துவிட்டதாக சொல்லியிருந்தீர்கள். இன்று கவிதைகளுக்கான அம்சத்தையெல்லாம் உரை நடை கொண்டு போய்விட்டது. அப்படி இருக்க நீங்கள் ஏன் மறுபடியும் அ_ கவிதை எழுதக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பொயட்ரிங்கறது ஏற்கெனவே இருக்குற ஒரு விஷயத்தை மேலும் சிக்கலாக்குறதால பின்நவீனத்துவவாதிகள் பொயட்ரியை நிராகரிக்கிறாங்க. கவிதை வாசிக்குறவன்கிட்ட கவிதைய பத்திய பொதுபுத்தி ஒண்ணு இருக்கு. அவன் உரைநடையைப் படிக்கும்போது அத அப்படியே எடுத்துக்குறான். ஆனா, இதுவே கவிதையின்னு வரும்போது வேற அர்த்தம் தேடுறான். ‘கவிதை என்பது அர்த்தங்களின் சுமைகளாகத் தடுமாறுகிறது’ன்னு ரொலன்பார்த் சொல்றார். கவிதை வந்தது வேற எடத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கு. எப்படி கேமிரா வந்ததும் ஓவியம் தன் வெளிப்பாட்டை மாத்திக்கிடுச்சோ அது மாதிரி கவிதையும் வேற லெவலுக்குப் போய் ஆகணும்.

தீராநதி: அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பண்ணணும்ங்கற எண்ணம் எனக்கிருக்கு. மீ கவிதை (Hyper poem) மாதிரி பண்ண ஒரு திட்டம் வைச்சிருக்கேன்.

தீராநதி: inter-text ஊடிழைப் பிரதி என்று சொல்லப்படுகிறதே அதை விளக்க முடியுமா?

எம்.ஜி.சுரேஷ்: ஒரு கதையைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே போனால் சில தவறுகள் நடந்துடும். அதையே பிரேக் பண்ணி பிரேக் பண்ணி சொன்னா தப்பு வராது. அதுக்குதான் ஊடிழைப் பிரதி தேவைப்படுது.

ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’னு ஒரு சிறுகதை எழுதுனார். அதயே பெருங்கதையாடலாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எழுதுனார். சிறுகதையில ‘கங்கா’ங்கற கேரக்டர் கெட்டுப்போயிடுவா. அப்ப அவள ‘நீ தல குளிச்சுடுடீ.. சீத வந்து அக்னி பிரவேசம் பண்ண பிறகு சுத்தமாயிடுவா. குளிச்சா நீ சுத்தமாயிடுவே’ன்னு சொல்லி இருப்பார். அதுல நம்ம பழைய ஒழுக்கக் கட்டமைப்புகளையெல்லாம் கொட்டிக் கவித்திருப்பார் அதுவே பெருங்கதையாடல்ல எப்படி வரும்னா இந்த ‘கங்கா’ங்கறவ ஏற்கனவே லவ் பண்ணவன பார்ப்பா. அவன் தண்ணி அடிச்சிக்கிட்டு கிடப்பான். முடிவுல அந்தக் கதையில ஒரு விபச்சாரிபோல நடந்து போவா கங்கா. கார் ஒண்ணு போகும். இவள பார்த்த ஒடனே நின்னு பின்னாடி வரும். அதுல இருந்து ஒருத்தன் சிகரெட் பத்த வைச்சிகிட்டு இவள பார்ப்பான். இவ உடனே ‘ஈ’ன்னு சிரிச்சிகிட்டு நிற்பா. இப்படி முடியும் கதை. அப்படின்னா அவள விபச்சாரியாக்கிட்டாரு. அக்னி பிரவேசத்துல சிறப்பா பண்ணவரு, அவள ஒரு விபச்சாரியாக்குறதுக்கு இவ்வளவு பெரிய கதைய எழுதணுமா? Inter text ன்னு எழுதும்போது இந்த விஷயங்களை ஷார்ப்பா கையாளலாம்.

தீராநதி: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை வைத்து ‘37’ என்ற நாவலை எழுதி இருக்கிறீர்கள். பிரைமேலெவி போல மாற்று அறிவியல் நாவலது. தத்துவம், அறிவியல் கோணங்களில் எழுதி வாசகனை பிரமிக்க வைப்பது என்பது அதன் சாராம்சம். எதிர் நபரை தன் அறிவைக்காட்டி பிரமிக்க வைப்பதென்பதும் Intellectual Terrorism மாகாதா?

எம்.ஜி. சுரேஷ்: அறிவைக்காட்டி பிரமிக்க வைக்குறது கூட இல்ல இது. சில நிகழ்வுகளைக் காட்டி பிரமிக்க வைக்கிறது. panaromic Spectacle மாதிரி, உடை, தோற்றம், ஜோடனைகளைக் காட்டி பிரமிக்க வைக்குறது. அவ்வளவுதான். நம்ம மனோகர் நாடகம் மாதிரி. அறிவு ரீதியா பிரமிப்பும் பண்ணலாம். டெரிடா, பூக்கோவோட அறிவாற்றல கண்டுதானே நாம பிரமிக்கிறோம். நான் நிறைய படிச்சிருக்கேன், எனக்கு நிறைய தெரியும்னு மத்தவங்களை அறிவைக்காட்டி பயமுறுத்துறதுதான் Intellectual Terrorism.

தீராநதி: அதுபோல வேலையும் இங்கு நடக்கிறது இல்லையா?

எம்.ஜி. சுரேஷ்: ஆமாம். நடக்குறதுதான். அந்த டெரரிஸத்தை நான் எதிர்க்குறேன்.

தீராநதி: தனக்குக் கிடைக்கும் ஓர் அழகான பேனாவை அல்லது தகவல்களை யாருக்கும் சொல்லாமல் நமக்கானதாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்று. ஆனால் நீங்களோ அதற்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். அறிவு பரவலாக்கல் செய்கிறீர்கள். இந்த அறிவுப் பரவல் மனப்பான்மையை எப்படிப் பெற்றீர்கள்?

எம்.ஜி. சுரேஷ்: நம்ம ராமானுஜர் தனக்குத் தெரிஞ்ச ‘ஓம் நமோ நாராயணா’ங்கற மந்திரத்தை மக்கள் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல... அததான் நான் செய்றேன். ஒரு அறிவுங்கறது பலருக்கும் பகிர்றதா இருக்கணுமே ஒழிய, மிரட்டறதா இருக்கக் கூடாது. அறிவுங்கறது மக்களுடையதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக என்னுடைய எல்லா புத்தகத்துலயும் ‘உரிமை மக்களுக்கு’ன்னு போட விரும்புறேன். மக்கள்தான் என்னை உருவாக்குனது. otherதான் என்னை உருவாக்குனது. அப்படின்னா பலரால் உருவானவன் நான். பலரால் உருவான நான் சமூகத்துக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணும்னு வரப்ப இத செய்யறேன். நான் எழுதின ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ புத்தகம் பல காலேஜ்ல பாடத் திட்டத்துல வைச்சிருக்காங்க. பேராசிரியர்கள்லாம் இந்தப் புத்தகத்த சிபாரிசு செய்யுறாங்க. அத பார்த்துட்டு ஓர் இலக்கிய நண்பர் ‘என்ன நீங்க இவ்வளவு சிம்பிளா பண்ணிட்டீங்க. நாளைக்கு நம்மளைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டாங்க. நீங்க தப்பு பண்ணிட்டீங்க’ன்னு சொன்னாரு. இப்படி நினைக்குறதே ஒரு டெரரிஸம் போலதான்.

தீராநதி: நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். மார்க்குவேஸ், ஜான்அப்டைக் போன்றவர்கள் கூட பெரும் பத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். மார்க்குவேஸை, ஜான் அப்டைக்கை கொண்டாடுகிற நம்மவர்கள் சிறுபத்திரிகை படைப்புகள் மட்டுமே உன்னதமானது என்பதுபோல ஒரு ஃபோபியாவில் மாட்டித் தவிக்கிறார்களே?

எம்.ஜி. சுரேஷ்: தாஸ்தாவெஸ்கியும் ஒரு வெகுஜன எழுத்தாளர்தான். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவது கீழானது. சிறு பத்திரிகையில் எழுதுவது உன்னதமானது அப்படி நினைக்குறதும் ஒரு ஹிப்போகிரஸிதான்.

தீராநதி: இதையட்டியே ஒருகேள்வி. பெரும் பத்திரிகைதான் சிற்றிதழின் எழுத்து நடையையே தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக ஒரு காலத்தில் சிறு பத்திரிகையில இயங்கிய பாலகுமாரன் வெகுஜனத்திற்குப் போனார். அது வெகுஜன நடையானது. பிறகு ஜெயகாந்தன் போனார், அப்போதும் மாறியது. இன்று ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எல்லாம் வெகுஜனத்திற்கு போய்விட்டார்கள். இதுவரை சிறுபத்திரிகை நடையாக இருந்தது வெகுஜனமாக மாறி இருக்கிறது. இப்போது வேறு நடைகள் சிறு பத்திரிகைக்கு தேவையாகிறது. இந்த ‘வேக்கம்’தான் சிறுபத்திரிகையின் நடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன், இது சரியா?

எம்.ஜி. சுரேஷ்: இது ரெண்டு விதமாகவும் Vice Versa இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி அப்படியும் இதைப் பார்க்கலாம்.

தீராநதி: பின்நவீன எழுத்தை அறிமுகம் செய்ய உங்களுக்கு என்று ஓர் இதழ் முன்னால் தேவைப்பட்டது. இன்றோ வெகுஜன இதழ்களே பின்நவீன எழுத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. பிறகு உங்களுக்கென்று ஓர் இதழ் தேவையா?

எம்.ஜி. சுரேஷ்: பின்நவீன எழுத்தை வெளியிடறதுக்கும், அந்தக் கோட்பாடுகளை அறிமுகம் செய்யறதுக்கும், விவாதிக்குறதுக்கும் ஒரு இதழ் தேவைப்பட்டது. அதனால் பன்முகம் இதழைத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி இயங்கிகிட்டு இருந்த நிறப்பிரிகை, கிரகணம் மாதிரியான இதழ்கள் நின்னுபோனதால இந்தத் தேவை உண்டாச்சு. இப்ப நீங்க சொல்ற மாதிரி பெரிய பத்திரிகைகளே போஸ்ட் மாடர்னிஸ எழுத்துக்களைப் பரவலா வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்ப எனக்குன்னு ஒரு பத்திரிகை தேவை இல்ல. இன்னொன்று, ஒரு சிறு பத்திரிகை தொடர்ந்து வரக்கூடாது. வந்தா அது நீர்த்துப் போயிடும். கொஞ்ச நாள் நிறுத்திட்டு அப்புறம் கொண்டு வரலாம். இப்போ பன்முகத்தை போன டிசம்பரோட (2006) நிறுத்திட்டோம்.

தீராநதி: அண்மையில் உலகையே உலுக்கிய சதாம் தூக்கு பற்றி?

எம்.ஜி.சுரேஷ்: அடிப்படையில நான் மரண தண்டனையை எதிர்க்குறேன். சதாம் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அந்தப் பிரச்னையில அமெரிக்கா தலையிட முடியாது. சதாமை அந்த மக்கள்தான் தண்டிக்கணும். அதுகூட தூக்குப் போட்டு தண்டிக்குறது சரி இல்ல. சதாம் தப்பு பண்ணலையான்னு ஒரு கேள்வி வரும். யாருதான் தப்பு செய்யல. வரலாறு என்பதே வன்முறையின் வரலாறுதானே. பல வரலாறுகள் நம்மகிட்ட முன்னுதாரணமா இருக்கு. தமிழர்களுடைய ‘நாலடியார்’ங்குற எட்டாயிரம் பாடல்களை பாண்டிய மன்னன் ஆற்றுல தூக்கிப் போட்டான். அதுல மிஞ்சின நாலாயிரம் பாடல்கள் தானே நாலடியார்? அதுவும் ஒரு வரலாறு. வன்முறைங்கறது காலம் காலமா நிகழ்ந்துகிட்டே இருக்கு. இத சதாம் மட்டுமே செய்யலியே. ஆனாலும் வன்முறைக்குத் தீர்வு வன்முறை இல்ல.

சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : ஆர். சண்முகம்

Monday, February 12, 2007

துயரத்தின் மேல் படியும் துயரம்

அஞ்சலி: சு. வில்வரத்தினம் (07.08.1950 - 08.12.2006)

-ரவிக்குமார்-


"வில்வர்" என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட கவிஞர் சு. வில்வரத்தினம் மரணமடைந்துவிட்டார். அவருக்குச் சாகிற வயதில்லை. எல்லா வயதுமே இறக்கிற வயதுதான் என்றாகிவிட்ட ஈழத்தில் ஐம்பத்தாறு வயதில் ஒருவர் இறந்ததில் வியப்பெதுவும் இருக்க முடியாதுதான். ஆனால் வில்வரத்தினத்தின் மரணத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. ஒரு இழப்பின் மதிப்பு அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் தீர்மானிக்கப்படுகிறது. வில்வரத்தினம் ஏற்படுத்திச் சென்றுள்ள வெற்றிடம் ஈழத்தைக் காட்டிலும் பெரியது.

1986-அப்போது எம்.ஏ. நுஃமான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இலங்கைக்குச் சென்று திரும்பும்போது எனக்கென்று சில நூல்களைக் கொண்டுவந்திருந்தார். மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களோடு வில்வரத்தினத்தின் முதல் கவிதைத் தொகுதியான அகங்களும் முகங்களும் நூலின் ஒரு பிரதியும் இருந்தது. மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் வில்வரத்தினத்தின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது மொழியும் வெளிப்பாடும் புதியனவாக இருந்தன. யார் இவர் என்று அவரைப் பற்றி நுஃமானிடம் கேட்டேன். "இப்போது எழுதிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர்" என்று அவரைப் பற்றி மிகச் சுருக்கமாக நுஃமான் சொன்னார். நுஃமான் கூறியது மிகையானதல்ல என்பதை அவரது கவிதைகள் மூலமாக நான் கண்டுகொண்டேன்.

'தமிழ் இனி 2000' மாநாட்டின் குழுவில் நானும் ஒருவனாகப் பங்கெடுத்திருந்த நேரம். இலங்கையிலிருந்து யார் யாரை அழைப்பது என்பது பற்றிப் பேச்சு எழுந்தபோது சேரன் உள்ளிட்ட இலங்கை நண்பர்கள் ஒட்டுமொத்தமாகப் பரிந்துரைத்த பெயர் வில்வரின் பெயர்தான். அவர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கும் இங்கே எழுத்தாளர்கள் பலரோடும் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதற்கும் 'தமிழ் இனி' மாநாடுதான் வழிவகுத்தது (காலச்சுவடு இதழை அவதூறு செய்வதன் மூலம் தமக்கொரு அடையாளத்தைத் தேடிக் கொள்ள முற்படும் நபர்கள் 'தமிழ் இனி' மாநாட்டின் சாதகமான அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள்). அந்த மாநாட்டில் அதிகமான "ரசிகர்க"ளைப் பெற்றவர் அவர்தான்.

1940களில் தொடங்கியதாகக் கூறப்படும் ஈழத்துப் புதுக்கவிதை மரபில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் வில்வரத்தினம். அந்தத் தலைமுறையில் சேரனும் அவரும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். தமது தனித்துவத்தாலும் ஆளுமையாலும் ஈழத்துக் கவிதை உலகத்தில் மட்டுமின்றி அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியவர்கள். சேரனுக்கு இருந்த பின்புலம் வில்வருக்கு இருக்கவில்லை. ஈழத்துப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்ட மஹாகவியின் மகன் என்ற அனுகூலம் சேரனுக்கு இருந்தது. ஆங்கிலக் கல்வியும் அவருக்குக் கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. இவை எதுவும் வில்வருக்குக் கிடையாது. விவசாயப் பின்புலம் கொண்ட கிராமத்து வாழ்க்கை அவருடையது. ஆனால், அதுவே அவரது பலமாகவும் ஆயிற்று. தேவாரப் பாடலுடன் புலரும் காலைகளைக் கொண்ட அவரது வாழ்க்கையில் இயற்கையாக அமைந்த லயம் அவரது குரலிலும் கவிதையிலும் வெளிப்பாடு கொண்டது.

மு. தளையசிங்கத்தோடு ஏற்பட்ட அறிமுகமும் பின்னர் அது நட்பாக மாறியதும் வில்வரத்தினத்தின் வாழ்வில் முக்கியமானவை. தளையசிங்கத்தின் ஆன்மீகக் கனவுகளை வில்வரத்தினத்தினமும் பகிர்ந்துகொண்டார். சமய நம்பிக்கையாகத் திரிந்துவிடாத ஆன்மீகம் அது. மனிதர்களிடத்தில் அன்பைப் பொழியும் அதன் சாரத்தை வில்வரத்தினத்தின் கவிதைகளில் பார்க்கலாம்.

'தமிழ் இனி' மாநாடு முடிந்த பிறகு சில நாட்கள் வில்வரத்தினம் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு மாலை அவரோடு ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். கவிஞர் நீலாவணனின் "ஓ... வண்டிக்காரா..." என்ற கவிதையை அப்போது அவர் பாடிக்காட்டினார். அடுத்தடுத்துப் பல கவிஞர்களின் பல்வேறு கவிதைகளைப் பாடினார். அந்தச் சந்திப்பு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய நான் ஏற்பாடுசெய்திருந்தேன். அந்த வீடியோ கேசட் இப்போது பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் கண்ணனிடம் இருக்கிறது. வில்வரத்தினம் கவிதைகளை முழுமையான ஒரு தொகுப்பாக வெளிக் கொண்டுவரும் திட்டம் அப்போதுதான் உருவானது. அந்தத் திட்டத்தைத் தனது உத்தியோகத்தின் அடிப்படையாக அந்த நண்பர் ஆக்கிக்கொண்டாரென்பது பிறகுதான் எனக்குத தெரிந்தது.

ஈழத்தமிழர்களின் துயரத்தை எடுத்துச் சொல்லித் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கியதில் ஈழத் தமிழ்க் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு. வ.ஐ.ச. ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல், சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் என ஒரு பட்டியலைச் சொல்லலாம். மரணத்துள் வாழ்வோம், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், சொல்லாத சேதிகள் ஆகிய தொகுப்புகளுக்கும் இதில் பெரிய பங்குண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும்விடச் சேரனின் இரண்டாவது சூர்யோதயம் என்ற சிறு நூல் உண்டாக்கிய தாக்கம் அதிகம். எண்பதுகளில் சேரனின் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்நாட்டிலும் பல கவிஞர்களை உருவாக்கியது. "முற்போக்குக்" கவிதைகளின் தொனி மாறுவதற்குச் சேரனின் கவிதைகள் காரணமாக அமைந்தன. அதுபோல, ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு ஈழப் பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மௌனத்தைச் சற்றே நெகிழ்த்திய பெருமை வில்வரத்தினத்தின் கவிதைகளையே சாரும்.

1995இல் வெளியான காற்றுவழிக் கிராமம் என்ற சிறு நூல் வில்வரத்தினத்தின் நீள் கவிதையைத் தாங்கி வந்தது. ஈழப் போராட்டத்தின் துயரத்தை அந்த நூலின் அளவுக்கு எடுத்துச் சொன்ன நூல் வேறெதுவும் இருக்க முடியாது. நான் அப்போது எனது பணி நிமித்தமாகக் கோயம்புத்துணரில் தங்கியிருந்தேன். விடியல் பதிப்பக உரிமையாளர் சிவஞானம் அப்போது என் தோழராயிருந்தார். அவர்தான் அந்த நூலின் பிரதியொன்றை எனக்குத் தந்தார் (அந்தக் கவிதைகளை மறுபிரசுரம் செய்வதற்கென்றே புதுவையில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து ஒரே இதழோடு அது முடிந்துபோனது தனிக் கதை). அதன் பிறகு வில்வரத்தினத்தின் நெற்றிமண் என்ற தொகுப்பு வந்தது.

வில்வரத்தினம் விடுதலைப் புலிகளின் அன்புக்கு உரியவராயிருந்தார். அவர் மறைவுக்கு விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பிரிவுக்குப் பொறுப்பான புதுவை இரத்தினதுரை இரங்கல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததை இணையத்தில் பார்த்தேன். புலிகளின் போராட்ட வலிமைமீது வில்வரத்தினமும் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருந்தார். அதே சமயம் ஈழத்தில் நடக்கும் சகோதரக் கொலைகள் பற்றிய விமர்சனமும் அவருக்கிருந்தது. ஈழத்தில் பஞ்சமர்கள் என அறியப்படும் தலித் மக்களின் உரிமைகள் குறித்த புரிதல் அவருக்கிருந்தது. ஈழத்தில் எழுந்த முதல் ஆயுதப் போராட்டம் சாதி ஒழிப்புப் போராட் டம்தான். அந்த வரலாற்றை டானியலின் பஞ்சமர் நாவலில் நாம் தெரிந்துகொள்ளலாம். சண்முகதாசனின் செல்வாக் கால் உருப்பெற்ற, இடதுசாரித் தன்மை கொண்ட 'சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி'க்கு அப்பால் தளையசிங்கத்தின் தலைமையிலும் சில போராட்டங்கள் நடந்துள்ளன. 'நீர் அள்ளச் செய்தல்' என அந்தப் போராட்டங்கள் நடந்தன. புங்குடுதீவு பகுதியில் நடந்த நீர் அள்ளும் போராட்டத்தில் தளையசிங்கத்தோடு கலந்துகொண்டு போலீஸால் தாக்கப்பட்டுத் தனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாக வில்வரத்தினம் என்னிடம் தெரிவித்தார்.

வில்வரத்தினம் நேரடியாக யுத்தத்தில் குண்டடிபட்டுச் சாகவில்லையெனினும் அவரது சாவுக்கு ஈழத்தில் நடக்கும் போரே காரணம். ஓர் இடத்தில் தங்கியிருக்க முடியாமல் அங்குமிங்கும் அவர் விரட்டப்பட்டார். இந்திய அமைதிப் படையால் அவரது வீடு எரிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்த சீறுநீரகக் கோளாறை உரிய காலத்தில் கண்டறிந்து சொல்லக்கூடிய மருத்துவர்களோ அதைக் குணமாக்கும் மருத்துவ வசதியோ இன்று ஈழத்தில் இல்லை. கால்களில் ஏற்பட்ட வீக்கம் சீறுநீரகக் கோளாறின் அறிகுறி என்பது தெரியாமல் கால் வீக்கத்துக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தவர் தனது நோயைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முயன்றபோது காலம் கடந்துவிட்டது. 8.12.2006 மாலை கொழும்பு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எம்.ஏ. நுஃமான் மூலமாக மின்னஞ்சலில் வந்தது. அவருக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தவே விரும்பினேன். அவரது கவிதைகள் மூலமாக ஏற்பட்ட நெருக்கமான உறவே என்னை அப்படி எண்ணவைத்திருக்கும். கவிஞர் இந்திரனோடு சேர்ந்து சென்னையிலும் (13.12.06) புதுவை இளவேனிலோடு இணைந்து புதுச்சேரியிலும் (15.12.06) இரண்டு அஞ்சலி நிகழ்ச்சிகளை மட்டும்தான் ஏற்பாடுசெய்ய முடிந்தது.

வில்வரத்தினத்தின் மரணச் செய்தி கேட்டு ஒரு வாரத்துக்குள்ளாகவே ஆன்டன் பாலசிங்கம் மறைந்த செய்தி வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் நடத்தும் வலையகங்களில் ஒரு மரணத்தை இன்னொரு மரணம் சிறியதாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு துயரத்தின்மேல் படிகிறது இன்னொரு துயரம். பாலசிங்கத்துக்குத் 'தேசத்தின் குரல்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரபாகரன். ஒரு கவிஞனைப் பூகோள எல்லைக்குள் வரையறுக்க முடியாது. பிரபாகரனைப் பின்பற்றி வில்வரத்தினத்தைத் 'தமிழின் குரல்' என்று அழைக்கலாமெனத் தோன்றுகிறது. தமிழ் உள்ளளவும் ஒலிக்கும் அந்தக் கவிதைக் குரல்.

நன்றி: காலச்சுவடு

Sunday, February 11, 2007

எலும்புக்கூட்டின் வாக்குமூலம்

-(கவிதைகள்) அநாமிகன்-
மதிப்புரை : ராஜமார்த்தாண்டன்தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் எழுதத் தொடங்கிய அநாமிகனின் நாற்பத்து நான்கு கவிதைகளடங்கிய தொகுப்பு 'எலும்புக்கூட்டின் வாக்கு மூலம்.' போர்ச்சூழலில் 'எரியும் தேசத்திலிருந்து' எழுதப்பட்ட கவிதைகள் இவை. தொகுப்பின் முதல் கவிதையே ('நிலம் மீளுகை') சுதந்திரத் தாயகம் அடைந்துவிட்டதான கவிஞரின் தீர்க்கமான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை,

எல்லா விடியல்களும் / எல்லா
இரவுகளும் / சூறையாடப்பட்ட
பின்னரும் / சாம்பல்
மேடாக்கப்பட்ட / பின்னரும் / நீ
துளிர்ப்பாய் / நீ மிளிர்வாய் /
வீரியமிக்க உனது மனிதரின் /
நெஞ்சுறுதியில் / தவிரவும்
எதைக்கொண்டு / மனமாற

என்ற வகையிலானது.

அநாமிகனின் கவிதைகள் பலவும் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. எளிமையானவை. அவரது சொற்களில், 'அரிதாரம் பூசாத வார்த்தை'களால் எழுதப்பட்டவை. ஆனால் யோசிக்கும் வேளையில், அந்த எளிமை ஒரு மாயத் தோற்றம் என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'இடைச்சிறுவனின் பயணம்' கவிதை. தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதையின் எளிமையின் பின்னிருக்கும் அனுபவ தரிசனம், பலரது கவிதைகளிலும் அபூர்வமாகவே காணக் கிடைக்கும் ஒன்று.

இந்தக் கவிதை, சாதாரண மனிதன் ஒருவனின் வாழ்க்கையைப் பற்றியது. 'மந்தையின் பிறப்பில் சிரிப்பும் / மந்தையின் பிரிவில் அழுகையுமே / இடைச் சிறுவனின் இரவும் - பகலும்.' வாழ்க்கைப் பயணத்தில் வேறெந்த அக்கறையும் அவனுக்கில்லை - வாய்க்கவில்லை - என்ற போதிலும் அவன் 'எதற்காகவோ காத்திருக்கிறான்.' ஆனால்,

'அவனுக்காய் / அற்புதங்கள்
எதுவும் நிகழவில்லை / எந்த
தேவதூதர்களும் /
காட்சியளிக்கவில்லை / எந்த
மீட்பர்களும் / பிறந்திருக்கவில்லை'

மனித குல வரலாற்றில் இத்தகை யோரே பெரும்பான்மையினர். ஆனால் வரலாறோ, சமூகமோ, இலக்கியமோ, இயக்கமோ இத்தகையோரைக் கணக்கி லெடுத்துக்கொள்வதில்லை. அந்தத் துக்கம், எளிமையான வார்த்தைகளின் பின் அழுத்தமாக உள்ளுறைந்திருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பு.

ஈழத்துக் கவிஞர்கள் பலரையும் போல் அநாமிகன் வார்த்தைகளை விரயமாக்கவில்லை. உதாரணத்துக்கு 'கி9' கவிதையைச் சொல்லலாம். ஈழத்தை இலங்கையின் பிற பகுதிகளோடு இணைக்கும் 'ஏ-9' நெடுஞ்சாலை, ஈழத்து மக்களின் வாழ்விலும் தாழ் விலும் இரண்டறக் கலந்தது. ('சாவும் வாழ்வும் நிறைந்திருந்த பெருந்தெரு' என்று தனது கவிதையொன்றில் சேரன் குறிப்பிடும் நெடுஞ்சாலை.)

A9 ஒரு கறுப்பு நிதி / குருதியும்
வியர்வையும் / கண்ணீருமாய்
சேர்ந்தோடும் நதி

A9 ஒரு ஜீவ நதி / கனவும்
வாழ்வுமாய் / நீண்டோடும் நதி

வீழ்த்தப்படாத நெஞ்சுறுதியுடனும்/
விடுதலை அவாவுடனும்/
எழுந்தொலிக்கும் / நீக்றோவின்
ஜீவ கானமாய் / நீண்டோடும் கரு நதி

மூன்று படிமங்கள் - காட்சிகள் - பார்வைகள் மூலமாக, 'ஏ-9' என்றழைக்கப்படும் அந்தப் பிரதான நெடுஞ்சாலையைச் சித்திரிப்பதன் மூலம் இன்றைய ஈழத்து மக்களின் அவலத்தையும் மன உறுதியையும் குறிப்பாலுணர்த்துகிறது.

இக்கவிதைகள் போர்ச் சூழலில் எழுதப்பட்டவை - அநாமிகனின் வார்த்தையில் 'விடுதலைப் பரணிகள்' -என்ற போதிலும் காதலின் கனிவு கூடிய மென்மனமும் கடலின் அழகில் மயங்கி நிற்கும் ரசனையுணர்வும் வெளிப்படாமலும் இல்லை. ('முறைசாரா முகவரிகள்', 'கடலின் அழகு.')

'இந்தக் கவிதைகள் தவிப்பையும் நெருக்கத்தையும் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளின் மையம் எத்தனிப்பு எனலாம். அநாமிகனின் கவிதைமொழி எப்போதும் எத்தனிப்போடுதான் இயங்குகிறது. ஆக அநாமிகனின் கவிதைகளை எத்தனிப்புகளின் மொழி அல்லது எத்தனிப்புகளின் வெளிப்பாடு அல்லது எத்தனிப்புகளின் விளைவு எனலாம்' என்கிறார் முன்னுரையில் கருணாகரன். அநாமிகனின் இத்தகைய கவிதைகளே ('பிரிவின் சங்கீதம்', 'எலும்புக்கூட்டின் வாக்குமூலம்', 'நிராசை', 'நிலம்மீள் தரிசனம்', 'கி9', 'ஆறு ஆறாமல் அழுகிறது', 'கடலின் அழகு', 'பயணம்', 'மூன்றாவது மனம்', 'இடைச்சிறுவனின் பயணம்', 'நீயிருக்கும் நான்', 'தேவை') அவரைக் கவிஞராக இனம்காட்டுகின்றன. மாறாக, கனவுகளும் நம்பிக்கைகளும் கருத்தியல்களாக மட்டும் வெளிப்படும் கவிதைகள் அவற்றுக்கான அங்கீகாரங்களுடன் நின்றுவிடும்.

ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்தை, தான் வாழும் காலத்தில் நின்று எதிர்கொண்டு எதிர்வினையாற்றுபவனாகவே இருக்கிறான். அவனது எதிர்வினை நேர்மையாகவும் உள்ளுணர்வு சார்ந்தும் சுதந்திரமாகவும் கலைத்துவமாகவும் வெளிப்படும்போது, காலம், நாடு, மொழி என்னும் எல்லைகளைக் கடந்தும் புதுமையுடன் நிலைத்திருப்பதை இலக்கிய வரலாறு காட்டும். அநாமிகனின் கவிதைகளில் சிலவேனும் அவ்வகையில் அமைந்திருப்பதே, அவரைக் கவனப்படுத்திப் பேச வைக்கின்றன.

கலைத்துவமாக வெற்றி பெறாத கவிதைகளிலும்கூட மிகையுணர்வோ, போலித்தனமோ இல்லையென்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம். யுத்த காலச் சூழலைப் பதிவு செய்யும் இத்தகைய கவிதைகளில் எளிதாகவே படர்ந்துவிடும் 'களிம்பு' அநாமிகனிடம் இல்லையென்பதும் அவரிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு:
அழகியல் கலாமன்றம்
கிளிநொச்சி.
முதல் பதிப்பு - ஜனவரி 2006
பக். 88. ரூ. 150

நன்றி: காலச்சுவடு

Thursday, February 08, 2007

*சாரங்கன் கவிதைகள்

வேள்வி 2006

வெளிநாட்டிலிருந்தும்
உள்ளூரிலிருந்தும்
வேலைகளை விட்டுக்கொடுத்து
வந்திருக்கிறது
கூட்டம்.

சப்பாத்து, கழுத்துப்பட்டி
கைமூடிய சட்டைகளைத் துறந்து
சண்டிக்கட்டுடன்
கிடாய் பார்த்துத் திரிகிறது
HIACEகளில் ACஐ
நிறுத்தாமல்

கைச்சங்கிலிகளில்
கழுகையும், ஒலிவ் இலையையும்
அழகுக்காய் பொறித்திருக்கின்றனர்

இந்தமுறை
கிடாய்கள் 'கணாவத்தை”
போகாது.
உயர்பாதுகாப்பு வலயத்திற்கிப்பால்
மழைக்கால வெள்ளம் வடியும்
வாய்க்கால்களில்
சின்னவுயிர்களை
அறுத்து தின்னவேண்டியிருந்தது

எவருமே வருவதற்கான
தேவைகள்
இல்லாமல்
நிதமும் நடக்கிறது
வேள்வி
எங்களூர் ஒழுங்கைகளின்
புளியமரங்களினடியில்
முன்வினைப்பயனாக
சாராயம் பருக்காமலே
வெட்டப்படுகின்றன
மனிதக் கிடாய்கள்.


குரங்குப் பரம்பரை

தீப்பிடித்துவிட்டது எங்கள் வால்.
சாப்பிட்ட கோப்பையில் எச்சமிட்டதாக கூறி
கொளுத்திவிட்டார்கள் பலபேர் சேர்ந்து.

ஒவ்வொரு ஊராக
ஒவ்வொரு மரமாக
ஒவ்வொரு உயிராக
எரித்துக்கொண்டிருக்கிறோம் இயலுமட்டும்
புரிந்துணர்ந்துதான் பேனா பிடித்தோம்
கதிரைகள் தராதபோது
வாலைச்சுருட்டி பீடமாக்கி
அமர்ந்துகொண்டோம்
பின்புறம் சுடுவதை பொருட்படுத்தாமலே

தகிக்கின்ற வாலை
யாருடையதாவது வாய்க்குள் விட்டு
ஆட்டவேண்டும்
என்றுதான் எங்களுக்குக் கட்டளை
ஆனாலும்
நாங்கள் கொழுத்த வேண்டிய ஊர்கள்
துருவங்களிலும் இருக்கின்றன.

எரிகின்ற வாலுடன் விமானங்கள் ஏறி
சமரசங்கள் பேசி சராசரங்கள் ஆள்கிறோம்.
கிறிஸ்துவுக்குப் பின்னர்
எரிந்துகொண்டிருப்பது எங்களின் வால்
ஒன்றுதான்.

தகனவிதிகளை மீறி
எரிபொருள் இல்லாமல்
வளியும் இல்லாமல்
சொரிந்துகொண்டிருக்கும் சூடு
எங்கள் வால்த்தீப்பந்தத்தில்

வேதாளமாகி முருங்கையில்
முனியாகிப் புளியில்
யட்சணியாகிக் காற்றில்
கொழுந்துவிட்டுகிறது
வால்

பாதாளத்திலும் ஆகாசத்திலும் இருந்துதான்
இனி வரவேண்டும்
எங்கள் எழுந்தருளிக்கு கொம்பு பிடிக்கும்
கூட்டம்
நாங்கள் பிடிப்போம்
தீப்பந்தம்


கடுங்காவல்

நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள்
ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் ஒருவராக.
கிளைகள் வெட்டப்பட்ட மரங்களின் நிழலிலும்
கிடுகுவேலிகளில் சாய்ந்த படியும்
வெயிலுக்காக கண்களைப் பூஞ்சியபடியே
சுட்டுவிரல்கள் மாத்திரம் தெறிவினையாக
சுடுவதற்கு தயாராக இருந்தன

இரும்புத் தொப்பிக்கு கீழாக
தலைமயிரும், மனித மூளையும்
இருக்கத்தான் செய்கின்றன

வெறும் தேநீருக்காக அதிகாரத்துடன்
அவர்கள் வீட்டுப்பெண்களுக்கு
ஆணையிடும் பாணி அலாதியானது
சிலசமயம் பால்தேநீரே கிடைக்கும்
சீனி குறைவாகவும் தாய்மை நிறைவாகவும்

ஒருவன் சாப்பிட ஒருவன் காவல்
உதட்டில் ஒட்டிய சோற்றுப்பருக்கையை
நாவால்
லாவகமாக உள்ளெடுக்க நேரமில்லாமல்
அடுத்தவனுக்குக் காவல்
சூரியனைப் பிடித்து ஆலமரம்
தொங்கிக் கொண்டிருந்த மாலை
விழுதுகளில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன

அடிவயிற்றைக் கலக்குகின்ற சத்தம்
கண்ணை மறைக்கும் புகையும்
கந்தக வாசமும்
மனிதரும் மிருகமும் இல்லாத வெளிவும்
சில நிமிடங்களில் நிறைவுக்கு வந்தது.

சாயரட்சைப் பூசையில்
வசந்தமண்டப வாயிலில்
பந்துவராளியில் தேவாரம் பாடிய பெரியவர்
செத்துக்கிடந்தார்.
அதே கிடுகுவேலி
அதே கிளைகள் வெட்டிய மரம்
அனலடிக்கும் தார்வீதி
அவர்கள் காவலுக்காகவே இருந்தார்கள்

காலை ஒன்பது மணிக்குப்பிறகு
நீதவான் வந்து பெரியவரை
ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் வரை
தார் வீதியின் வெக்கையை
முகத்திலே அப்பிக்கொண்டு
அவர்கள்
கடுங்காவலுக்காகவே.


திருவிழா விடுமுறை

மஞ்சள் நிறப்பூக்களில்
தேனெடுக்கும் ஞாபகத்தில்ப்
பாடிக்கொண்டேயிருக்கின்றன
வண்டுகள்

கோவிலின் கதவிடுக்கில்
கண்களை வைத்து
மூலஸ்தானம் பார்த்து இரக்கிறாள்
ஒரு சிறுமி

பிச்சைக்காரர்களைத்
தாண்டிச்சென்று
கச்சான் வாங்கிக் கொறிக்கும்
பசார்க் கடை முதலாளி

திருவிழாவுக்காக மைபூச
வெளிக்கிட்டு,
கோபுரத்திலிருந்து புறாக்களையும்
பிரகாரத்திலிருந்து வெளவால்களையும்
விரட்டியாகிவிட்டது.

பட்டாம்பூச்சிகளின் மாமிசமுண்ணும்
கனவுகளைத் தாண்டி,
களைகட்டுகிறது திருவிழா.
லீவு விண்ணப்பத்தை
நிரப்பி வைத்துவிட்டு
சுற்றுலாச் சென்றிருக்கிறார்
கடவுள்.


சாறணைச் சங்கம்

தரவைகளில் பூக்கின்ற
சிறுசெருஞ்சிப் பூக்களையும்
கறிக்கு வருகின்ற பைரியையும்
சாறணையையும்
தூரதேசத்தில் இளவேனிற்காலத்தில்
வெளியாகும்
ஏதோவொரு
பத்திரிகையில் பார்த்தேன்.

பச்சைப்பயறு தின்று வயிற்று வலியிற்துடித்து
"துங்கப்பரிகாரி"யிடம் லேகியம்
வாங்கித்தின்றவர்கள்
பனிமூடும் காலைகளுக்குச் சொந்தமான
நாட்டில்
பத்திரிகை நடத்துகிறார்கள்.

என்னதான் வாசத்துடன்
எங்களுர்ச் சேற்றை எழுதினாலும்
ஊசிப்போன சாறணைக்கீரைக்கறியில்
பழஞ்சோறு பிசைந்து
உருட்டித்தின்பது ஒருவலி

அனுபவித்துச் சொல்லுங்கள்
சாறணைக்கீரைச் சங்கம் வைப்போம்
"கென்டகி" மற்றும் "மக்டொனால்ட்"
அனுசரணையில்.


*வை. சாரங்கன்
யாழ்- பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவன்.இன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையின் அவலத்தை எதிரொலிக்கும் இவரது கவிதைகள் எண்பதுகளை நினைவூட்டுகின்றது. பலரதும் கவனத்தை பெற்ற இவரது கவிதைகள் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

(நன்றி: வைகறை)

தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும்

-யவனிகா ஸ்ரீராம்


சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கருத்துகளோடும் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு கவிதைத் தேவையை வழங்கிவிட்டுப் போனதையும் அதை தொடர்ந்த சிந்தனைப் பள்ளிகளையும் இன்றுவரை நம்மால் பார்க்க முடியும்.

1974ல் வானம்பாடிகள் ஆரம்பித்த சமூக, வரலாற்று பொருக்குகளும், மொழிப் பீறிடல்களும் ஊடக வளர்ச்சிப் போக்கிற்கிடையே பெரும் ஆரவாரம் பெற்றதையும் பல்கலைக்கழகக் கவிதை தொட்டியில் சாராய ஊறல்களாகி நாறியதையும், அதன் காய்ச்சப்பட்ட போதை வடிவுகளும் சினிமாத்துறையில் பெரும் விலைக்கு பரிமாறப்பட்டதையும் தமிழ்கூறும் நல்லுலகு நன்றியுடன் இன்றுவரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது.

ஆக தமிழனின் அறிவுத்துறைச் செயல்பாடு என்பது கவிதையைப் பொறுத்தவரை விளக்கெண்ணைய் வியாபாரமாகி பத்திரிகை மூலைகளிலும் லேஅவுட் செய்பவனின் விருப்பத்திற்கேற்ப பக்க இடைவெளிகளில் எறியப்பட்டு பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.

முற்போக்கு, நற்போக்கு என பல மாமாங்கமாக புரட்சிக் கவிதைகள் எழுதிய பூபாளப்பாடல்கள் எல்லாம் உலர்ந்த கனியின் கோட்பாட்டு வெடிப்புகளாகி காற்றில் பரவியபோது அதன் விதைகளை கையில் வைத்துக்கொண்டு சமரசச்சோலையை உருவாக்கும் வித்துகள் எனச் சொல்லியதோடு அதையே வெடிகுண்டாகவும் மாற்றியமைப்பதாக ஜம்பம் பேசியவர்கள் இறுதியில் அரசாங்க விருதுகள் எனும் ஈரச்சாக்கில் போட்டு அதை மூடிவிட்டு மேடையில் கைத்தட்டல்களுக்கு மட்டும் கவிதை சொல்லி ஆக்கப்பட்ட கவிஞர் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என ஆகிப்போனார்கள்.

இன்றைய சமகாலச் சூழலில் தீவிர மனோநிலையோடு இயங்கக்கூடிய கவிஞன் என்பதும் எல்லோரும் பயன்படுத்தும் மொழியை எடுத்துக்கொண்டு எவரும் சொல்லாதவற்றை சொல்லிவிட முயலும் புதிய மற்றும் மாற்றுப்பார்வைகளோடு கூடிய கவிதை என்பதும் சாத்தியம் இல்லாத சூழலில் ஒரு நூற்றாண்டுகாலக் கவிதை முற்றிலும் அரசாங்க அறிக்கைகளாகிப் போனதுதான் மிச்சம். இவர்கள் கவிதையைத் தெருவிற்கு கொண்டு வந்ததாக சொன்னாலும் தெருவிலிருந்து ஒரு கவிஞனும் உருவாகவில்லை. எதிர் கவிதைகள் கூட விமர்சனப் பார்வையை முன்வைத்து ஆளும் கருத்தியல் போக்கில், ஜனநாயக விளைவுகளை முன்வைக்க முனைந்தன என்றாலும் மாற்று இருப்புகள் கட்டற்ற விடுதலை உணர்ச்சி அதிகாரத்திற்கு எதிரான கலகம் போன்றவற்றை சூழலில் பிரித்தெடுக்க இயலாதவையாகிப்போயின.

வாழ்வின் மீதான நிலைத்தன்மையே இவர்களிடையே மொழிக்கவனம் பெற்றதல்லாமல் எதுவும் புதிதல்ல என்ற கீழைத்தேய ஏகாந்தமும் கற்பிதமான குடும்ப அலகும் கொண்டாட்டமில்லாத நிலமும் ஒரு குறிப்பிட்ட ஒற்றைத்தன்மையுள்ள கவிதையியலைத் தீர்மானித்திருக்கிறது எனலாம். ஏறக்குறைய முலைப்பாலூட்டிகளின் ஊட்டுதலுக்கான இயங்குதலே தமிழ்க்கவிதையின் உளவியல் என்றும் கூடச் சொல்லி முடிக்கலாம். சங்க இலக்கியத்திலிருந்து பெறப்பட்ட காதல், வீரம், அகம், புறம், தத்துவம், தாய்மை, சடங்கு வழிபாடு, பக்தி இலக்கியம் எல்லாம் இதற்குள்தான் அடக்கம். தமிழனுக்கு ஏதாவது ஒரு சக்தி தன் முலையை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எடுத்துவிட்டால் மூச்சுத்திணறி அழும் குழந்தைதான் அவனது கவிதையும்.

இதைப்பற்றிக் கவலைகொள்வது ஒருபுறமிருக்க 1960களில் மேற்கத்திய பாணியைப் பின்பற்றி கட்டற்ற கவிதைகள் எழுதவந்த நவீன கவிஞர்கள் மீதான ஒருபார்வைதான் நமது உண்மையான அக்கறையாக இருக்கிறது. இது இன்னும் ஜனரஞ்சகப்படாமல் ஒரு குறிப்பிட்ட சுற்றுக்குள் இயங்கிவருவதாலும் அதுமெல்ல மேற்சொன்ன நிலைக்கு நீர்த்துப்பரவி வருவதையும் நாம் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. மத்தியகால நம்பிக்கைகளான கடவுள், மதம், தந்தைமை, வீரம் போன்றவற்றின் மீதான நம்பிக்கையும் அவற்றோடு சமூக, அரசியல், பொருளாதாரம் பற்றிய அறிவற்று, இருப்பை குருட்டுத்தனமாக நம்புதல் போன்றவற்றில் இயங்கும் கவிதைகளை இன்னும் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இவ்வகையான சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியோடு நவீனத்துவத்திற்கு கலகப்பண்பாடான நிலையை மேற்கத்தியச் சூழலில் தீவிரமாகச் சாதித்துக் காட்டியவர்கள் கலைஞர்கள், அறிவொளிக்கால கலை இலக்கிய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது நாம் சொல்லாமலே புரியும்.

இவ்வாறான நவீனத்துவம் ஒருபுறமிருக்க இரண்டு உலகப்போர்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பேரழிவு போன்றவற்றால் ஐரோப்பிய சமூகம் உட்பட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் மத்தியகால நம்பிக்கைகளும் அறிவொளிக்கால எதிர்பார்ப்புகளும் தகர்ந்து சிதைந்து போனதை கணக்கில் எடுக்காமல் கலை உட்பட எந்த மாற்றத்தையும் ஆய்வு செய்ய முடியாது. மொத்த மனித உளவியலே இருப்பின் தீவிர அவஸ்தையை உணர்ந்தபோது விஞ்ஞானவாதம் முதல் பகுத்தறிவின் விளைவுகள் வரை அனைத்தும் கேள்விக்குள்ளாகின. அறிவியல் மற்றும் மதம் சார்ந்த அனைத்து லட்சியவாதங்களும் தகர்ந்து நம்பிக்கைகுரியதல்ல எதிர்காலம் என்கிற நிலை ஏற்படுகிறது. இந்தச் சூழலில் உருவான கலைஞர்கள்தான் காப்காவும், ஆல்பர்ட் காம்யூவும் உலகத்தின் அத்தனை இலக்கியப் போக்குகளிலும் ஒரு தளமாற்றத்தை பாய்ச்சலாக புகுத்தியதுதான் அவர் தம் படைப்புகளின் பங்களிப்பு அவை வாழ்வை அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் நிறுவின.

இப்போக்கினை உள்வாங்கும்போது அதன் வலியை உணரும் ஒரு கலைஞன் தனக்கு வாழும் காலத்தில் நேரப்போகும் கெடுபிடியை முன்னுணர்ந்து தனது படைப்பை அதன் பழைய போக்குகளிலிருந்து சரேலென உருவிக்கொண்டு முற்றிலும் புதிய வகையான மாற்றுத்தளத்தில் புனைவில் கற்பனையில் கனவில் இயங்க நேர்வதையே அவன் சமகாலத்து நவீனம் எனக் கொண்டாட முடியும். தவிர மேற்கத்திய வடிவத்தை மட்டும் கைக்கொண்டு 1960களில் உருவாக தமிழ் நவீன கவிஞர்கள் ‘வாழ்வு அபத்தம் என்ற போக்கை இந்திய மரபு சொல்லியிருக்கிறது. நிலையாமையை விட உயர்ந்த தத்துவம் எதுவும் இல்லை’யென்று உள்ளூர் சாதியங்கள் அல்லது மற்றதுகள் தன் இருப்பிற்கு தொந்தரவாக இருப்பதை மறைத்து ‘ஏகம்தான் வாழ்க்கை’ என மேட்டுக்குடி ஆசிரியர்களாகி தங்கள் கவிதைச் செருக்கை முன்வைத்து, அதிகாரம் செய்தார்கள். இதுவே தமிழ் நவீன கவிதையின் வரலாறும் இயங்கியலும் கவிதையிலுமாக இருக்கிறது.

நவீன இருப்பு என்பது மேற்சொன்ன எதன் பிடியிலும் இல்லை. அனைத்து வகைத் தொழில்நுட்பங்களும் ஏகாதிபத்திய வளர்ச்சியும் ஓருலகு ஒரே நிறுவனம் என்ற கொடூரத்தின் கீழ் நம்மை மந்தைகளாக கணித்து வைத்திருக்கும்போது அறியமுடியாத அதன் நெருக்கடிகளிலிருந்து எழும் ஒரு கவிஞன் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு புதியதளத்தில் அத்துமீறி சஞ்சரிக்க வேண்டியதிருக்கிறது. அதற்கான வலியை உடையவனே சமகால நவீனத்தைப் படைக்க முடியும். ஆக, எதையும் மறுவுறுதி செய்யவேண்டிய அவசியமில்லாமலும், தத்துவத்தின் பிடியிலிருந்து விலகியும், அடங்க மறுத்தும், மொழியின் அதிகாரச் சொல்லடைவுகளைத் தகர்த்தும் எல்லாம் வார்த்தைகள்தான் என அறிந்தும் ஒரு குழந்தைமை விளையாட்டில் குரூரத்துடனே ஈடுபடவேண்டியிருக்கிறது.

வலியே வன்முறையையும் ஒழுங்குச் சிதைவையையும் உருவாக்குகிறதெனில் சமநிலை குலைக்கும் ஒரு கவிஞன் உருவாகாத நிலம் செயலூக்கமற்ற மொழியையும் மொண்ணைத்தனமான நிறுவன இருப்பையுமே தேசிய மனச்சாட்சியாக வைத்துக் கொண்டிருக்கும் என்பதைத்தவிர நாம் சொல்ல என்ன இருக்கிறது. ‘‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதால் ஏன் என் பெயர் சொல்லப்படவேண்டும்’’ என்ற ப்ரக்ட்டுக்கும் ‘‘பசித்தவன் முன்பு வெந்த முட்டையோடு உடையும் சத்தம் கொடியது’’ என்று எழுதிய லாக்ப்ரெவர்க்கும் இடையேதான் இன்றைய நவீன கவிதை மேலெழும்புகிறது. பாழ்நிலம் எழுதிய டி.எஸ்.எலியட் முதல் பாரதி எழுதிய ‘‘சோற்றுக்கா வந்தது இந்தப் பஞ்சம்’’ தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ வரையிலான கவிதைகள் சூழலில் எங்கே தொலைந்து கிடக்கின்றன என்பது புதிரானது. மொழி, உருவம், உள்ளடக்க உத்தி போன்றவற்றில் கச்சிதமான கவிதை தேடுபவர்கள், தமிழ்ச்சூழலில் தங்கள் தத்துவமான அரிப்பிற்கு கவிதை விரித்துக் கொண்டுபோவது உயர்குடி கேளிக்கையின் கொலைபாதகம்தானேயொழிய நவீனம் என்று சொல்லுவதெல்லாம் வெகுளித்தனமான எளியவைகளின் மீதான வன்முறை என்றதான் புரிந்துகொள்ள முடியும்.

பெருகிவரும் தாராளமயப்போக்கும் மூன்றாம் உலகங்களில் மறைக்கப்படும் வறுமையும் அமெரிக்க அரசியல் வன்முறையும் தற்கொலைகளும் வாழ்வின் சிதைவுகளையும் குடும்பம், அரசு, கோவில் போன்றவற்றின் பிடியிலிருந்து விலகி ஓடி மாற்று இருப்புக்கொள்ளும் உதிரி நிலைகளையும் பாலியல் வகைமைகளையும் உடல்மீதான கண்காணிப்பையும் பேசாத கவிதையானது படிமம், வடிவம், கச்சிதம் எனப் பழங்குப்பைகளை நவீன உறைக்குள் இட்டு நிரப்பி தொழில்நுட்ப புத்தக வடிவங்களாய் நம்முன் கொட்டுவது நியாயமற்றது.

நவீன கவிதைகளைப் படிக்க ஆர்வமில்லாதவர் மற்றும் அதுபற்றியே தெரிய விரும்பாதவர்களுக்கு எவரும் எதையும் முனைந்து சொல்லவேண்டியதில்லை. ஆனால் நவீன கவிதையே புரியவில்லை என்பவர்களில் பாசாங்குக்காரர்கள்போக புரிய ஆர்வமுள்ளவர்கள் மீது படைப்பாளிகள் எதிர்வன்முறை செய்வது தேவையற்றது. காரணம் பூடகமான மொழிதலில் விடுபட்டு எளிய நேரடித்தன்மையை நோக்கி கவிதை வந்துவிட்ட சூழலில் படிமங்களையும் காலம்-வெளி, போத அபோதங்களையும் மெய்யியல் கவிஞனுக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் மற்றதனோடு உறவு கொண்டிருக்கும் தனது நிஜமான இயல்பை மறைத்துக்கொண்டு தனித்துவம் கோருவது தீர்மானிக்கவும் அனுபவிக்கவுமான எதனுடைய உரிமையிலும் மொழி வழியாகத் தலையிடுவதில்தான் முடியும். அதைவிட நவீனகவிதையை அறியாத ஒருவனின் இருப்பு மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் அனுபவிக்க வசப்படுமேயானால் அவனை கீழிருப்புச் செய்து தன்னை மேல்நிலையாக்கம் செய்துகொள்ள முயற்சிக்கும் எந்தவொரு கவிதைச் செயல்பாடும் அனாவசியமானதுதான்.

பிறகு நவீனகவிதை என்பது ஒரு மொழி விளையாட்டுத்தான் எனவும் இதுவரை மொழிந்துபட்டவைக்கும் இருப்பிற்குமான உறவுகளை நம்பி வந்த மரபை உடைத்து மறுபடியும் மொழியுடன் மொழியை வைத்து அர்த்த உடைப்புகளில் எவரும் ஈடுபடலாம் என்பதே எல்லா நவீன இலக்கியங்களுக்கு நாம் பொருத்திப்பார்க்கச் சுலபமானது. ஒரு படைப்பாளி கோரும் இடத்தைவிட அவன் மொழியில் ஒளிந்துள்ள இடமே விளையாட்டின் முதல்நிலைக் கண்டுபிடிப்பாகிறது. யாவும் சந்தேகத்திற்குரியதும் கேள்விக்குட்பட்டதுமாகுமெனில் மொழி படைப்பாளியின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டே தனக்குள் ஒரு அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டு தோன்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

மொழியைச் சரியாகப் பயன்படுத்தபவன் அல்லது மொழியின் கூடுதலான தகவலைப்பெற்றவன் அதிகாரத்தின் மேல்நிலையாக்கத்தை எளிதில் பெற்றுவிடுகிறான் என்பதே அரசியல் கலை, இலக்கிய வரலாறு. எவ்வளவுதான் நுட்பமானவனாகவும் தேர்ந்த படைப்பாளியாக இருந்தாலும் மொழியின் அதிகாரச் சூசகங்களை தன் பிரக்ஞையிலிருந்து கழற்றுவதற்கு தேவையான வெகுளித்தனத்தை பெற்றிருந்தாலொழிய அவன் மொழியை வேறுதளத்திற்கு நகர்த்த முடியாது. கூடுதலான மொழி அறிவிற்கு இப்படியும் ஒரு நுட்பமான ஒரு தேர்வு இருக்கத்தான் வேண்டும். இது தேவையில்லையெனில் மொழி அதன் கதியில் தேர்ந்த படைப்பாளியையும் வீழ்த்திவிடும். நான் நாளைக்கு வந்தேன் என பதில் சொல்லும் குழந்தையின் மொழிச் சிரிப்புதான் வெகுளித்தனத்தின் துவக்கமாக இருக்கிறது.

ஒரு வர்த்தகக் காலனியான மூன்றாம் உலகத்தில் கவிதை எழுதும் ஒருவனுக்கு தன் வாழ்வின் நெருக்கடிகளுக்கான அடிப்படைத் தகவமைப்பு போதுமானதாக இருக்கும்பட்சத்தில் கலையின் உன்னதங்கள் பற்றி பேசிக்கூடுவது இலக்கிய தோட்டமாகலாம். ஆனால அரசியல், பண்பாட்டு, கலாச்சார மத ஒடுக்குதல்களுக்கும் குடும்பக் கற்பிதங்களில் நிகழும் வன்முறைக்கும் எந்நிலையிலும் விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் கோரும் பொருளாதார வன்மங்களுக்கும் ஆளாகும் ஒருவன் தன்மீதான கண்காணிப்பிற்கும் பொதுப்புத்திசார்ந்த மதிப்பீடுகளுக்கும் எதிராக மொழியைச் சிதைப்பதற்கும், சட்ட, நிறுவனக் கோட்பாடுகளுக்கு அகப்படாத உயிரிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரத்திற்கு எதிரான குற்றச் செயல்களை புரிவதற்குமாகச் சேர்த்து கலையின் வெகுளித்தனங்களை முன்வைப்பது தவிர்க்க முடியாதாகிறது.

நாம் வசிக்கும் பகுதி அமெரிக்காவின் ஒரு வர்த்தகக் காலனி எனில் அதை அப்படியே அமெரிக்க நலன்களுக்கு தாரைவார்த்துவிட்டு தன் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளத்துடிக்கும் உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு எதிராக பேய்சிரிப்புடன் ஒரு கலகம் செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்கச் சுரங்கப்பாதை வாசிகளும் ஜிப்சிகளும் வந்தேறிகளும் அம்மண்ணில் ஆளும் வாழ்விடத்திலிருந்து துவங்குவதுதான் சமநிலை குலைக்கும் ஒரு காலனித்துவச் செயல்பாடாக இருக்க முடியும். ஏறக்குறைய அமெரிக்க மனம் கொண்ட பொதுப்புத்தி வளர்ந்து வரும் இன்றைய இந்தியனுக்கு மரபு, தொன்மங்கள் இவற்றிலிருந்து அவன் இருப்பை ஞாபகப்படுத்தவது காலவிரயமாகத்தான் முடியும்.

பன்னெடுங்காலமாகவே அரசியல் ஆளுமைக்கூறு இல்லாத இந்திய மனம் அடிமையாக இருப்பதையே தொடர்ந்து மறுவுறுதி செய்துகொண்டிருக்கிறது. இங்குதான் தமிழ் நவீனகவிதை எல்லாவற்றிலிருந்தும் சரேலென உருவிக்கொண்டு ஒரு பாய்ச்சலாக வெளிப்படுகிறது. வரப்போகும் அமெரிக்கவியத்திலிருந்து தன் மனிதமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் வளர்ந்துவரும், ஏகாதிபத்திய நலன்களில் பங்குபெற தனக்குள்ள உரிமையைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்ந்துவரும், ஏகாதிபத்திய நலன்களில் பங்குபெற தனக்குள்ள உரிமையைக் கம்பீரமாக வெளிப்படுத்தவும் தான் இதுவரை சுயமென நம்பிவந்த சாதிமான், தேசியவாதி, நற்குடிமகன், குடும்பப்பொறுப்புடையவன், கடும் குடிகாரன், பைத்தியக்காரன், நேர்மையற்றவன், பணிவற்றவன், நன்றிகெட்டவன், விசுவாசமற்றவன், சோம்பேறி, சந்தர்ப்பவாதி, பொறுப்பற்றவன், அரசு வருமானத்திற்கு உதவாதவன், ஊர்சுற்றி, நிலையில்லாதவன், கலைஞன் எனப்பெயரெடுக்கவும் நவீன கவிதை புதிய குணரூபம் கொள்கிறது. இவ்வாறு பெயரெடுப்பதைவிட அவன் தற்கொலை செய்துகொள்வதே மேல் என நினைக்கும் பொதுப்புத்திகளுக்கிடையே கலைஞர்களை கொலையாளிகளாகவும் இனம்காண வரலாற்றில் படைப்பாளியின் உருவம், உள்ளடக்கம், உத்திசெயல்படுகிறதேயொழிய அறிக்கைகளை கவிதைகளாகச் செய்து கொண்டிருப்பவன் நிலையாமை, மாயை, துறவு, ஆன்மீகம் என செயலூக்கமும் கொண்டாட்டமும் உள்ள ஒரு மனித தொகுதியையே பலகீன மந்தைகளாக்கி வீரியமிழக்க வைக்கிறான் என்பதைத் தொடர்ந்து எப்படிச் சகிக்க முடியும்.

ஆகவே 2000க்கு முன்பாக தமிழில் நவீனக்கவிதை எழுதியவர்களில் ஒரு சிலரைத் தவிர, சரியாக சொல்ல வேண்டுமானால் ஒருசில கவிதைகளைத் தவிர வாழ்வை அடையாளப்படுத்துவதாகச் சொன்ன அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் ஒருசேர நவீனத்தன்மையை இழக்கிறது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் குறித்தும் இன்னொரு சமயத்தில் பேசுவதையே இந்த கட்டுரை விரும்புகிறது. வலி நிறைந்தவனுக்கு அடையுமிடமும் தெரியும் வெளியேறும் வழியும் புரியும். வாழும்போது கற்றுக்கொள்ளுவதுதான் சுதந்திரம், இருப்புறுதி, விழைவுறுதி கொண்டாட்டம் போன்றவைகளேயன்றி எதிர்காலத்தில் கிடைக்குமென நம்பி நிகழ்காலத்தில் செத்து மடிவதல்ல. மற்றபடி எந்த நிறுவனமும் வாழுவதற்கான உறுதிப்பத்திரங்களை தந்து கொண்டிருப்பதில்லை. குற்றத்திற்கான தண்டனைகளை மட்டுமே அவை நிச்சயப்படுத்துகின்றன.

நவீன கவிதை தொடங்கும் புதிய புள்ளியும் அதுவே. அது அதிகாரம் பற்றிய அல்லது கடவுள் பற்றிய கேலிச் சித்திரங்களாகவும், பாலியல் விழைச்சுகளாகவும் அர்த்த மறுப்புகளாகவும், அனுபவத்தின் மீதான கிண்டல்களாகவும், அருவருப்பூட்டுவதாகவும், திகட்டலாகவும், சமநிலை குலைப்பதாகவும், ஒழுங்கற்ற பயனற்ற மொழி விளையாட்டாகவும் புனிதமற்றதாகவும், உருவம், உள்ளடக்கம், உத்தி போன்றவற்றை குழப்பியும் சிதறியடித்தும் திருகியும் மருகியும் வெருண்டும் மிரண்டும் அதிர்ந்தும் அமைதியற்றும் அச்சுறுத்தியும் வெளிப்பட்டு வரும் எனில் அதற்கான மாற்றுவழியை துணிச்சலோடு எந்த அதிகார கருத்தியல் நிறுவனமும் ஏற்படுத்தி தராது என்பதே அறமற்ற இன்றைய சமகாலச் சூழல். எனவே இந்த தாராளமயச்சூழலில் ஒருவன் இரண்டு கைநிறைய புளிய விதைகளைத் தரும்போது அவனுக்கு ஒரு இறக்குமதிபானம் மறுக்கப்படுமேயானால் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு கலகத்தை ஆரம்பித்து விடவேண்டியதுதான். அவனது மொழியும் அதற்கு உதவுமேயானால் நவீனக் கவிதையைவிட வேறென்ன இருக்கிறது அவன் வாழ்விற்கு.

நன்றி: புது விசை
........................................................

காலம் இதழில் ஜெயமோகன், சு.வியின் கவிதைகளை முன்வைத்து எழுதிய கட்டுரையில் - அகம் சார்ந்த கவிதைக்ளே மட்டுமே நவீன கவிதைகள் - என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியபோது, அப்படி மட்டும் பார்க்கமுடியாது என்றவகையில் சில குறிப்புகள் எடுத்து ஒரு பதிவு எழுத விரும்பியிருந்தேன். கிட்டத்தட்ட இந்த அகஞ்சார்ந்த விடயத்தில் ஈழத்துச் சிறுகதைகளை முன்வைத்து ஜெயமோகனோடு -பிற நண்பர்களோடு இணைந்து- பதிவுகள் விவாதக்களத்தில் விவாதித்தது நினைவுவர -அமைதியாயிருப்பதே சாலவும் சிறந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி ஆனதால், 'எழுதுவதை நிறுத்தியிருந்தாலும் இன்னும் இன்ரநெட்டில் திட்டுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை' என்று ஜெயமோகன - விகடனில்- ஆதங்கப்பட்டவர்களின் பட்டியலில் வராமற்போனது ஒருவகையில் மகிழ்ச்சிதான். ஜெயமோகன் தொட விரும்பாத/மறுத்த புள்ளிகள் சிலதை யவனிகா ஸ்ரீராமின் இந்தக் கட்டுரை கவனப்படுத்துகின்றது என்பதோடு நவீன கவிதைகள் எழுதியவர்கள்/எழுதுபவர்கள் பட்டியலையும் மீள்பரிசீலனை செய்ய இக்கட்டுரை கோரி நிற்கிறது.

யவனிகா ஸ்ரீராம், நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களில் ஒருவர். 'சொற்கள் உறங்கும் நூலகம்', 'கடவுளின் நிறுவனம்' போன்ற தொகுப்புகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்திருக்கின்றன. மொழியின் அரசிய்ல குறித்து அக்கறைப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்ற யவனிகா ஸ்ரீராம், 'அவ்ன்' பாலில் மட்டுமே பேசுவது முரண்நகைதான், கவனம் எடுத்திருக்கலாம்.... ~டிசே )