Monday, February 12, 2007

துயரத்தின் மேல் படியும் துயரம்

அஞ்சலி: சு. வில்வரத்தினம் (07.08.1950 - 08.12.2006)

-ரவிக்குமார்-


"வில்வர்" என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட கவிஞர் சு. வில்வரத்தினம் மரணமடைந்துவிட்டார். அவருக்குச் சாகிற வயதில்லை. எல்லா வயதுமே இறக்கிற வயதுதான் என்றாகிவிட்ட ஈழத்தில் ஐம்பத்தாறு வயதில் ஒருவர் இறந்ததில் வியப்பெதுவும் இருக்க முடியாதுதான். ஆனால் வில்வரத்தினத்தின் மரணத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. ஒரு இழப்பின் மதிப்பு அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் தீர்மானிக்கப்படுகிறது. வில்வரத்தினம் ஏற்படுத்திச் சென்றுள்ள வெற்றிடம் ஈழத்தைக் காட்டிலும் பெரியது.

1986-அப்போது எம்.ஏ. நுஃமான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இலங்கைக்குச் சென்று திரும்பும்போது எனக்கென்று சில நூல்களைக் கொண்டுவந்திருந்தார். மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களோடு வில்வரத்தினத்தின் முதல் கவிதைத் தொகுதியான அகங்களும் முகங்களும் நூலின் ஒரு பிரதியும் இருந்தது. மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் வில்வரத்தினத்தின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது மொழியும் வெளிப்பாடும் புதியனவாக இருந்தன. யார் இவர் என்று அவரைப் பற்றி நுஃமானிடம் கேட்டேன். "இப்போது எழுதிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர்" என்று அவரைப் பற்றி மிகச் சுருக்கமாக நுஃமான் சொன்னார். நுஃமான் கூறியது மிகையானதல்ல என்பதை அவரது கவிதைகள் மூலமாக நான் கண்டுகொண்டேன்.

'தமிழ் இனி 2000' மாநாட்டின் குழுவில் நானும் ஒருவனாகப் பங்கெடுத்திருந்த நேரம். இலங்கையிலிருந்து யார் யாரை அழைப்பது என்பது பற்றிப் பேச்சு எழுந்தபோது சேரன் உள்ளிட்ட இலங்கை நண்பர்கள் ஒட்டுமொத்தமாகப் பரிந்துரைத்த பெயர் வில்வரின் பெயர்தான். அவர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கும் இங்கே எழுத்தாளர்கள் பலரோடும் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதற்கும் 'தமிழ் இனி' மாநாடுதான் வழிவகுத்தது (காலச்சுவடு இதழை அவதூறு செய்வதன் மூலம் தமக்கொரு அடையாளத்தைத் தேடிக் கொள்ள முற்படும் நபர்கள் 'தமிழ் இனி' மாநாட்டின் சாதகமான அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள்). அந்த மாநாட்டில் அதிகமான "ரசிகர்க"ளைப் பெற்றவர் அவர்தான்.

1940களில் தொடங்கியதாகக் கூறப்படும் ஈழத்துப் புதுக்கவிதை மரபில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் வில்வரத்தினம். அந்தத் தலைமுறையில் சேரனும் அவரும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். தமது தனித்துவத்தாலும் ஆளுமையாலும் ஈழத்துக் கவிதை உலகத்தில் மட்டுமின்றி அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியவர்கள். சேரனுக்கு இருந்த பின்புலம் வில்வருக்கு இருக்கவில்லை. ஈழத்துப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்ட மஹாகவியின் மகன் என்ற அனுகூலம் சேரனுக்கு இருந்தது. ஆங்கிலக் கல்வியும் அவருக்குக் கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. இவை எதுவும் வில்வருக்குக் கிடையாது. விவசாயப் பின்புலம் கொண்ட கிராமத்து வாழ்க்கை அவருடையது. ஆனால், அதுவே அவரது பலமாகவும் ஆயிற்று. தேவாரப் பாடலுடன் புலரும் காலைகளைக் கொண்ட அவரது வாழ்க்கையில் இயற்கையாக அமைந்த லயம் அவரது குரலிலும் கவிதையிலும் வெளிப்பாடு கொண்டது.

மு. தளையசிங்கத்தோடு ஏற்பட்ட அறிமுகமும் பின்னர் அது நட்பாக மாறியதும் வில்வரத்தினத்தின் வாழ்வில் முக்கியமானவை. தளையசிங்கத்தின் ஆன்மீகக் கனவுகளை வில்வரத்தினத்தினமும் பகிர்ந்துகொண்டார். சமய நம்பிக்கையாகத் திரிந்துவிடாத ஆன்மீகம் அது. மனிதர்களிடத்தில் அன்பைப் பொழியும் அதன் சாரத்தை வில்வரத்தினத்தின் கவிதைகளில் பார்க்கலாம்.

'தமிழ் இனி' மாநாடு முடிந்த பிறகு சில நாட்கள் வில்வரத்தினம் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு மாலை அவரோடு ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். கவிஞர் நீலாவணனின் "ஓ... வண்டிக்காரா..." என்ற கவிதையை அப்போது அவர் பாடிக்காட்டினார். அடுத்தடுத்துப் பல கவிஞர்களின் பல்வேறு கவிதைகளைப் பாடினார். அந்தச் சந்திப்பு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய நான் ஏற்பாடுசெய்திருந்தேன். அந்த வீடியோ கேசட் இப்போது பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் கண்ணனிடம் இருக்கிறது. வில்வரத்தினம் கவிதைகளை முழுமையான ஒரு தொகுப்பாக வெளிக் கொண்டுவரும் திட்டம் அப்போதுதான் உருவானது. அந்தத் திட்டத்தைத் தனது உத்தியோகத்தின் அடிப்படையாக அந்த நண்பர் ஆக்கிக்கொண்டாரென்பது பிறகுதான் எனக்குத தெரிந்தது.

ஈழத்தமிழர்களின் துயரத்தை எடுத்துச் சொல்லித் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கியதில் ஈழத் தமிழ்க் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு. வ.ஐ.ச. ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல், சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் என ஒரு பட்டியலைச் சொல்லலாம். மரணத்துள் வாழ்வோம், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், சொல்லாத சேதிகள் ஆகிய தொகுப்புகளுக்கும் இதில் பெரிய பங்குண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும்விடச் சேரனின் இரண்டாவது சூர்யோதயம் என்ற சிறு நூல் உண்டாக்கிய தாக்கம் அதிகம். எண்பதுகளில் சேரனின் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்நாட்டிலும் பல கவிஞர்களை உருவாக்கியது. "முற்போக்குக்" கவிதைகளின் தொனி மாறுவதற்குச் சேரனின் கவிதைகள் காரணமாக அமைந்தன. அதுபோல, ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு ஈழப் பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மௌனத்தைச் சற்றே நெகிழ்த்திய பெருமை வில்வரத்தினத்தின் கவிதைகளையே சாரும்.

1995இல் வெளியான காற்றுவழிக் கிராமம் என்ற சிறு நூல் வில்வரத்தினத்தின் நீள் கவிதையைத் தாங்கி வந்தது. ஈழப் போராட்டத்தின் துயரத்தை அந்த நூலின் அளவுக்கு எடுத்துச் சொன்ன நூல் வேறெதுவும் இருக்க முடியாது. நான் அப்போது எனது பணி நிமித்தமாகக் கோயம்புத்துணரில் தங்கியிருந்தேன். விடியல் பதிப்பக உரிமையாளர் சிவஞானம் அப்போது என் தோழராயிருந்தார். அவர்தான் அந்த நூலின் பிரதியொன்றை எனக்குத் தந்தார் (அந்தக் கவிதைகளை மறுபிரசுரம் செய்வதற்கென்றே புதுவையில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து ஒரே இதழோடு அது முடிந்துபோனது தனிக் கதை). அதன் பிறகு வில்வரத்தினத்தின் நெற்றிமண் என்ற தொகுப்பு வந்தது.

வில்வரத்தினம் விடுதலைப் புலிகளின் அன்புக்கு உரியவராயிருந்தார். அவர் மறைவுக்கு விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பிரிவுக்குப் பொறுப்பான புதுவை இரத்தினதுரை இரங்கல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததை இணையத்தில் பார்த்தேன். புலிகளின் போராட்ட வலிமைமீது வில்வரத்தினமும் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருந்தார். அதே சமயம் ஈழத்தில் நடக்கும் சகோதரக் கொலைகள் பற்றிய விமர்சனமும் அவருக்கிருந்தது. ஈழத்தில் பஞ்சமர்கள் என அறியப்படும் தலித் மக்களின் உரிமைகள் குறித்த புரிதல் அவருக்கிருந்தது. ஈழத்தில் எழுந்த முதல் ஆயுதப் போராட்டம் சாதி ஒழிப்புப் போராட் டம்தான். அந்த வரலாற்றை டானியலின் பஞ்சமர் நாவலில் நாம் தெரிந்துகொள்ளலாம். சண்முகதாசனின் செல்வாக் கால் உருப்பெற்ற, இடதுசாரித் தன்மை கொண்ட 'சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி'க்கு அப்பால் தளையசிங்கத்தின் தலைமையிலும் சில போராட்டங்கள் நடந்துள்ளன. 'நீர் அள்ளச் செய்தல்' என அந்தப் போராட்டங்கள் நடந்தன. புங்குடுதீவு பகுதியில் நடந்த நீர் அள்ளும் போராட்டத்தில் தளையசிங்கத்தோடு கலந்துகொண்டு போலீஸால் தாக்கப்பட்டுத் தனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாக வில்வரத்தினம் என்னிடம் தெரிவித்தார்.

வில்வரத்தினம் நேரடியாக யுத்தத்தில் குண்டடிபட்டுச் சாகவில்லையெனினும் அவரது சாவுக்கு ஈழத்தில் நடக்கும் போரே காரணம். ஓர் இடத்தில் தங்கியிருக்க முடியாமல் அங்குமிங்கும் அவர் விரட்டப்பட்டார். இந்திய அமைதிப் படையால் அவரது வீடு எரிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்த சீறுநீரகக் கோளாறை உரிய காலத்தில் கண்டறிந்து சொல்லக்கூடிய மருத்துவர்களோ அதைக் குணமாக்கும் மருத்துவ வசதியோ இன்று ஈழத்தில் இல்லை. கால்களில் ஏற்பட்ட வீக்கம் சீறுநீரகக் கோளாறின் அறிகுறி என்பது தெரியாமல் கால் வீக்கத்துக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தவர் தனது நோயைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முயன்றபோது காலம் கடந்துவிட்டது. 8.12.2006 மாலை கொழும்பு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எம்.ஏ. நுஃமான் மூலமாக மின்னஞ்சலில் வந்தது. அவருக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தவே விரும்பினேன். அவரது கவிதைகள் மூலமாக ஏற்பட்ட நெருக்கமான உறவே என்னை அப்படி எண்ணவைத்திருக்கும். கவிஞர் இந்திரனோடு சேர்ந்து சென்னையிலும் (13.12.06) புதுவை இளவேனிலோடு இணைந்து புதுச்சேரியிலும் (15.12.06) இரண்டு அஞ்சலி நிகழ்ச்சிகளை மட்டும்தான் ஏற்பாடுசெய்ய முடிந்தது.

வில்வரத்தினத்தின் மரணச் செய்தி கேட்டு ஒரு வாரத்துக்குள்ளாகவே ஆன்டன் பாலசிங்கம் மறைந்த செய்தி வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் நடத்தும் வலையகங்களில் ஒரு மரணத்தை இன்னொரு மரணம் சிறியதாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு துயரத்தின்மேல் படிகிறது இன்னொரு துயரம். பாலசிங்கத்துக்குத் 'தேசத்தின் குரல்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரபாகரன். ஒரு கவிஞனைப் பூகோள எல்லைக்குள் வரையறுக்க முடியாது. பிரபாகரனைப் பின்பற்றி வில்வரத்தினத்தைத் 'தமிழின் குரல்' என்று அழைக்கலாமெனத் தோன்றுகிறது. தமிழ் உள்ளளவும் ஒலிக்கும் அந்தக் கவிதைக் குரல்.

நன்றி: காலச்சுவடு

1 comment:

வசந்தன்(Vasanthan) said...

பதிவாக்கியதற்கு நன்றி.