இவரும், வலைப்பதிவு எழுதும் லோஷனும் (http://loshan-loshan.blogspot.com) ஒருவரே என்று நினைக்கின்றேன். இவருடன் எவ்விதமான தொடர்புமில்லாததால் நண்பரொருவரின் -Facebook- மூலமாகவே இச்செய்தியை அறிந்தேன். லோஷனின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மேலும் இச்செய்தி குறித்து எழுதக்கூடும். ஏற்கனவே ஊடகவியலாளர்களான ஜசிதரன், வளர்மதி, திஸ்ஸநாயகம் போன்றவர்கள் இன்னமும் சிறைக்குள் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.
லோஷன் விரைவில் விடுதலையாவார் என்பதை நம்புவதை விட வேறு எதைத்தான் இந்தக்கணத்தில் நம்புவது?
(~டிசே)
...............
ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) கைது
தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
--
நன்றி: http://thambiluvilweb.blogspot.com/2008/11/blog-post_9962.html
Facebook: http://www.facebook.com/group.php?gid=25329430013