விருதுகள் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியனவாகவே இருக்கின்றன. எந்த விருதும் அது சார்ந்திருக்கும் அமைப்பின் விருப்பு/வெறுப்புக்களை மீறி அனைவரையும் போய்ச்சேருதல் அவ்வளவு சாத்தியமில்லை. எனினும் விருது கொடுப்பவர்களின் அரசியலை நாம் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலம் பொதுவெளியில் அம்பலப்படுத்தமுடியும். அவ்வாறு அந்த நபர்களின்/அமைப்புக்களின் அரசியலைப் புரிந்துகொண்டபின் எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமில்லையென அதைவிட்டு நகர்வதுதான் நமக்கு நல்லது.
கனடாவில் வழங்கப்படும் இயல் விருதின் அரசியல் குறித்து நான் உட்பட பல நண்பர்கள் கடந்த காலங்களில் கேள்விகள் எழுப்பியிருக்கின்றோம். முக்கியமாய் இவ்விருதின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென வெளிப்படையாக தங்களை அறிவித்துக்கொள்ளவேண்டும் என்றும், இயல் விருதுக்கு உரித்தானவர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு உரியமுறையில் விளக்கம் தரப்படவேண்டும் என்றும் கேள்விகள் எழுபியிருக்கின்றேன்/றோம்.
இம்முறை விருது லக்சுமி ஹோம்ஸ்ரோம் ற்கு வழங்கப்பட்டபின் கனவிலிருந்து விழித்து வந்த நவீன தேவதூதுவராய் ஜெயமோகன் களமிறங்கியிருக்கின்றார். லக்சுமி ஹோம்ஸ்ரோமிற்கு அல்ல, பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் ற்கு 2005 இயல்விருது வழங்கப்பட்டபோதே இயல்விருதின் வீழ்ச்சி குறித்து பேசியிருக்கின்றேன். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழிற்காய் சிறு துரும்பை எடுத்துப்போட்டவர்கள் எவராயிருப்பினும் அவர்கள அங்கீகரிக்கப்படவேண்டும் எனபதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களில்லை. ஜோர்ஜ் எல் ஹார்டோ அல்லது லட்சுமி ஹோம்ஸ்ரோம்ற்கோ அவர்களின் உழைப்பிற்காய் விருது கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல எனது விழைவு. சில வருடங்களுக்கு முன் நானெழுதியதியதன் ஒரு பகுதியை மீளவும் பதிகின்றேன்...
...சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமித்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.
அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும்...
இயல்விருதின் பின் நிற்பவர்கள் யாரென நாம் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளின் நிமித்தாலோ என்னவோ, சென்ற ஆண்டு தாசீசியஸிற்கு இயல் விருது வழங்கிய நிகழ்வில் தேர்ந்தெடுத்த நடுவர்களின் பெயர்கள் முதன்முதலாக வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன் (வீ.அரசு அவர்களில் ஒருவர்; மற்றவர்களின் பெயர்கள் இப்போது நினைவினில்லை). இந்த முறையும் நான்கு நடுவர்கள் இருந்தார்களென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வெளிப்படையான அறிவிப்பு நல்லதொரு விடயமே. இம்முறை ஜெயமோகன் நடுவர்களோடும் அழுகுணி ஆட்டம் ஆடுவதற்கு அவருக்குரித்தான் அரசியலே காரணம். ஜெயமோகனிற்கு, நுஃமான் மீதான காழ்ப்புணர்வுக்கு அவரொரு மார்க்சியவாதியாக இருப்பதுவும், ஆ.இரா. வெங்கடாசலபதி மீதான காய்தலுக்கு சலபதியின் திராவிட இயக்கங்கள் மீதான பற்றென்பதையும் நாம் நன்கறிவோம் (தனிப்பட்டு சலபதி மீது நிறைய விமர்சனங்கள் உண்டு, அது இப்போது தேவையும் அல்ல).
இன்று திண்ணையில் ஒரு பொது வேண்டுகோளை ஜெயமோகன் வைத்திருக்கின்றார். ஏற்கனவே மேலே கூறியதுமாதிரி ஒவ்வொரு விருதுக்குமான அரசியல் தவிர்க்கமுடியாதவை. அதே சமயம அவற்றின் அரசியலைப் புரிந்துகொள்ளலும் தெளிதலுமே, விருதுகளின் அமைப்புக்கு வெளியில் இருக்கும் நம்மைப்போன்றவ்ர்கள் செய்ய வேண்டியவை. இவ்வாறு எல்லா விருதுகள் குறித்தும் அக்கறைப்படும் ஜெயமோகன் (அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து நடத்திய ) 'சொல் புதிது' இதழ்களைக் கொண்டுவந்தபோது அவர் தனக்குரியவர்களுக்கு மட்டுமே சிறப்பிதழ்கள் வெளியிட்டும் தன்னைப் பாராட்டுபவர்களைத்தான் முன்னட்டையில் போட்டும் பாராட்டியிருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனக்குக் கிடைத்த சொற்ப 'சொல் புதிது' இதழ்களில் வெங்கட் சாமிநாதன், யோகி ராம்சுரத்குமார், எம்.யுவன் போன்றவர்களே முன்னட்டையை அலங்கரித்ததும் சிறப்பிதபிதழார்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஜெயமோகனுக்கு நான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே தனது அரசியலுக்கு அப்பாலிருப்பவர்களை முன் நிறுத்தி உரையாடல்களை ஆரம்பிக்க விரும்ப்பாத ஒருவர் 'ஐயகோ விருதுகள் எல்லாம் பாழ்/விருதுகளுக்கு அரசியல் இருக்கிறது' என்று ஒப்பாரி வைக்கும்போது அவருக்குப் பின்னால் நிற்கவேண்டும் என்றோ அல்லது அவரின் குரலைச் செவிமடுக்கவேண்டுமென கேட்பதன் அரசியலை எவ்வாறு விளங்கிக்கொள்ளுவது? இன்று இன்னும் விருது கிடைக்காத அவர் பட்டியலிடுகின்ற 'முன்னோர்களில்' அவருக்கு எதிர்த்தளத்தில் இயங்கிய/இயங்கிக்கொண்டிருக்கும் தொ. பரமசிவம், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, பொதியவெற்பன் போன்றவர்களுக்கு இடமேயில்லை.
'விளக்கு' விருதில் இன்னமும் நம்பிக்கை கொள்கின்ற ஜெயமோகனுக்கு ஏன் விளக்கு அமைப்பாளர்கள், தமிழக இலக்கியவாதிகளுக்கு மட்டும் விருதை வழங்குகின்றார்கள் என்பது குறித்து எந்தக்கேள்வியுமில்லை. தமிழகத்தில் மட்டுந்தானா தமிழ் இருக்கிறது? தமிழகத்தவர்கள் மட்டுந்தானா இலக்கியவாதிகளாக இருக்கின்றார்கள்? எனவே விளக்கு விருதை எம் முன்னோருக்கு எந்த இடமும் வழங்க இடங்கொடுக்காத விருதென ஒரு ஈழ/புலம்பெயர்ந்தவனாய் நிராகரிக்கவே செய்கின்றேன்.
இதுவரை இயல் விருது வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் பல அரசியல்கள் புரியும். சிலதை இங்கு பார்ப்போம்...
(1) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால்...
சுந்தர ராமசாமி + வெங்கட் சாமிநாதன் + லட்சுமி ஹோம்ஸ்ரோம் = ...?
(2) மார்க்சிசம் பேசி அதைத் தமது வாழ்வாக வரித்துக்கொண்டவர்களுக்கு இயல் விருதில் இடமேயில்லை. தமிழகத்தை விடுவோம், ஈழத்தில் எமக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த நிறைய இலக்கியவாதிகள்/விமர்சகர்கள் இடதுசாரிகளாய்த்தான் இருந்திருக்கின்றார்கள். எனவே நாங்களும் ஜெயமோகன் கூறுகின்றமாதிரியே - எம் முன்னோர்களை இன்னமும் அங்கீகரிக்காத- இயல்விருதில் எங்களுக்கும் உடன்பாடில்லையெனவே சொல்கின்றோம்.
இயல்விருதோடு அண்மைக்காலங்களில் வேறு சில உப பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அதை வெளிப்படையாகப் பட்டியலிப்படுகின்ற தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பதில்லையென நினைக்கின்றேன் (எனெனில் வீ.அரசு தாம் பிறத் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லையெனச் சொன்னதாய் நினைவு). சென்ற ஆண்டு கவிதைக்கான விருது சேரனின் 'மீண்டும் கடலுக்கு' வழங்கப்பட்டிருந்தது. நான் வாசித்தளவில் இதுவரை வந்த சேரனின் தொகுப்புகளில் இதுவே மிக மோசமான தொகுப்பு என்று நினைக்கின்றேன். ஆகக்குறைந்து சேரனுக்குத்தான் விருது வழங்கவேண்டும் என்று அவரது ஆர்வலர்கள்/இரசிகர்கள் விரும்பியிருப்பின் சேரனின் அனைத்துத் தொகுப்புகளுக்குமென பொதுவாய் விருதை வழங்கியிருக்கலாம். சேரனின் பிற தொகுப்புக்களுக்கு வந்தமாதிரி இதற்கு பெரிதாக திறனாய்வுகளும் வரவில்லை. சு.ரா இருந்தாலாவது நட்புக்காய் ஒரு விமர்சனம் எழுதி, இயற்கையின் உபாசகன், காதலின் மன்மதன் (இரண்டும் ஒன்றா, அப்படித்தான்...சும்மா சத்தம் போடாமல் வாசியுங்கள்) என்றாவது குளிர வைத்திருப்பார். மகன் கண்ணனிற்கு சுற்றுப் பயணங்களிற்கும், (அண்மைக்காலமாய்) அ.மார்க்ஸோடு தொடை தட்டவுமே நேரம் போதாதிருப்பதால் (ஓ...ராஜ மார்த்தாண்டன் துணைக்கு இருக்கின்றார்தானே?) இப்போதைக்கு சேரனின் தொகுப்பை உயிர்க்க வைக்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது.
நவீன தேவ தூதுவராய் களமிறங்கியிருக்கும் ஜெயமோகனுக்கு மீண்டும் சொல்ல விழைவது இதுதான். எல்லா விருதுகளுக்கும் ஒரு அரசியல் உண்டு. அதைப் புரிந்துகொள்ளலே அவசியம். ஜெயமோகனுக்கும் ஒரு அரசியல் உண்டு. எம்மைப்போன்றவர்களுக்கு அது நன்கு தெளிவாய்த் தெரியும். சங்கச்சித்திரங்கள் என்று எல்லாம் வியந்து எழுதிவிட்டு, அண்மைய கட்டுரைத் தொகுதியில் (உயிர்மைப் பதிப்பு) சங்க காலத்தில் -அவ்வாறான சங்க இலக்கியத்தில்- கூறப்பட்டமாதிரி வாழ்வு முறை இருக்கவில்லை அவ்வாறொரு வாழ்வை அமைப்பற்கான கனவுகளே சங்க இலக்கியங்கள் என்பதுமாதிரியாக எழுதியுமிருக்கின்றார். (அடுத்த புள்ளி எங்கே நகரபோகின்றார் என்பதும் நாமறிவோம்). இப்படி எழுந்தமானமாய் எழுதுவதற்கெல்லாம் எங்கே ஆதாரங்களை அகழ்வாராய்ந்து எடுத்தீர்கள் என்ற நம் ஊடலை இன்னொரு பொழுதில் வைத்துக்கொள்வோம்.
பி.கு1: பொழுது போகாதபோது நானுமொரு பட்டியல் இயல் விருதிற்கு சிலவருடங்களுக்கு முன் கொடுத்திருக்கின்றேன். இம்முறை நடுவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் மொழிபெயர்ப்பைக் கவனத்தில் கொண்டதாய்த் தெரிகின்றது. இயல் விருது போல பணமோ, இலக்கியப் பின்னணியோ இல்லாவிட்டால் என்ன, நான் என்னுடைய விருதை இம்முறை என் சார்பில் வ.கீதாவுக்கு வழங்கிவிடுகின்றேன். ஆங்கிலம்<-->தமிழ் என்று இரண்டு திசைகளிலும் மொழிபெயர்ப்புக்களை வ.கீதா செய்திருக்கின்றார். அண்மையில் பெருமாள் முருகனின் நாவலை ஆங்கிலத்தில் வ.கீதா மொழிபெயர்த்திருந்தது கிடைத்திருந்தது. வ.கீதா, இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார் என்பதோடு, தமிழில் நேரடியாக நிறையவே எழுதியுமிருக்கின்றார். எனவே வ.கீதா விருதுக்குப் பொருத்தமானவரே. மற்றது எனக்கும் அரசியல் உண்டு.
பி.கு 2: ஜெயமோகனின் இயல் விருது முதற்கட்டுரையை வாசித்தபோதே இவை குறித்து எழுத நினைத்திருந்தேன். எனினும் இயல் விருதின் அரசியல் குறித்து ஒரளவு தெளிவு இருந்ததால் திரும்பவும் மல்லுக்கட்ட விரும்பவில்லை. இப்போது ஜெயமோகன் ஏதோ தான் தான் இயல்விருதின் வீழ்ச்சியைக் கண்டெடுத்தமாதிரி 'கர்சித்து' தொடர் பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பதன் எரிச்சலே இதை எழுத வைத்தது. நன்றி.