Thursday, April 24, 2008

ஏற்புரை

-'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டு நிகழ்வு-
(நிகழ்வில் உரையாற்றியதன் சுருக்கமான கட்டுரை வடிவம்)

பேசுவதை விட எழுதுவதே எனக்கு உவப்பானது. எழுதுவதை விட வாசிப்பு இன்னும் பிடித்தமானது. கேட்டுக்கொண்டிருப்பவர்களை பேசுபொருளாலும், தொனியாலும் உள்ளிழுத்தல் என்றவகையில் பேசுவது ஒரு கலை. அதற்கான எந்தத் தகுதியுமில்லாதவன் என்ற தயக்கங்களோடே தொடர்ந்து உங்களோடு உரையாட விரும்புகின்றேன். விடைகளில்லாத கேள்விகளோடு இருக்கும் பொழுதுகளே தனக்கு உவப்பானது என்கிறார் மிஷைல் ஃபூக்கோ ழான் போத்ரியார். அதுபோல எத்தனையோ விடைகளில்லாத கேள்விகளை இயல்பென எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்போது நமக்கான ஒவ்வொரு நாளும் அழகாகிவிடும் போலத்தான் தோன்றுகின்றது. எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் இவ்வாறான தெளிந்த முடிவுகள் என்று இருக்காத பொழுதுகளே முக்கியமானதென நம்புகின்றேன்.

இத்தொகுப்பு குறித்து சில குறிப்புகளை பகிர்வதற்குப் பிரியப்படுகின்றேன். இக்கவிதைகளைத் தொகுப்பாக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று புத்தக வெளியீடு வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன என்றால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். இணையத்தில் பழக்கமான நண்பர்களும், நேரில் அறிமுகமான தோழர்களும் கவிதைகளைத் தொகுப்பாக்கும்படி உற்சாகப்படுத்தியிருக்கின்றார்கள். தொடக்ககாலத்தில் இக்குரல்களை உதறித்தள்ளிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி நகரவேண்டும் எனின் கவிதைகளைத் தொகுப்பாக்கலும் கறாரான விமர்சனங்களை எதிர்கொள்ளலும் முக்கியமானதெனக் கருதியே, கவிதைகளைத் தொகுப்பாக்கும் முயற்சியில் இறங்கினேன்.

எந்த ஒரு நண்பரின் பின்னணி ஆதரவுமில்லாது, நேரடியாகவே பதிப்பாளர்களை அணுகுவதென்று தொடக்கத்திலேயே தீர்மானித்திருந்தேன். ஈழத்திலிருந்து பதிப்பிக்க விருப்பம் இருந்தாலும், நாட்டின் சூழ்நிலையில் மிகச்சொற்பமான பதிப்பங்களே இயங்கிவருகின்றன என்பதாலும், அவற்றில் பலவற்றோடு அரசியல்ரீதியாக உடன்படமுடியாத நிலையிருந்ததாலும் தமிழகத்து பதிப்பாளர்களை நாடவேண்டி வந்தது. அவ்வாறு முதலில் நான் அணுகிய நபர் நல்லதொரு படைப்பாளியும், 'புது விசை' சஞ்சிகையின் ஆசிரியருமான ஆதவன் தீட்சண்யா. எந்த ஒரு முன் அறிமுகமும் எனக்கும் அவருக்கும் இடையில் இல்லாதபோதும் தொகுப்பு முயற்சியின் ஆரம்பகட்டங்களில் அதிகம் உற்சாகப்படுத்தியவர். கவிதைகளை அனுப்புங்கள் வாசித்துவிட்டுக் கருத்துச்சொல்கின்றேன் என்று ஆரம்பித்த நட்பு, திருத்தங்கள், விமர்சனங்களைப் பகிர்வதுவரை நீண்டன. எனினும் தொகுப்பு வெளியிட்டு என்ன செய்யப்போகின்றேன் என்ற எனது அலுப்பாலும், ஆதவன் வேறு சில விடயங்களில் கவனஞ்செலுத்த நேர்ந்ததாலும், மற்றும் சந்தியா பதிப்பகத்தால் தொகுப்பு வெளியிட எனக்குச் சில தயக்கங்கள் இருந்ததாலும் அந்த முயற்சி கைகூடாமற் போய்விட்டது.

இவ்வாறு சில மாதங்களுக்கு உறங்குநிலைக்குப் போன முயற்சியை மீண்டும் தளிர்க்கச் செய்தது சில நண்பர்களின் உற்சாகப்படுத்தல்கள். முருங்கை மரத்திலேறும் வேதாளமாய் மீண்டும் முயற்சியில் ஈடுபட்டபோது 'அடையாளம்' சாதிக்கை தொடர்புகொண்டேன்; ஆதவன் போலவே எந்தவித அறிமுகமில்லாது கவிதைகளை வாசித்துவிட்டு அரவணைத்துக்கொண்டார். நிச்சயம் தொகுப்பாக்குவோம் என்ற சாதிக்கின் உற்சாகக் குரல் இல்லாது போயிருந்தால் இத்தொகுப்பு வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேலையே வேண்டாம் என்று சோர்ந்து தப்பியோடியபோதெல்லாம் சாதிக்கே இழுத்து வந்திருக்கின்றார். தொகுப்பின் உட்பக்கங்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்டபின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வெளியட்டைக்குச் சரியான முகப்பு கிடைக்காமல் அல்லாடியிருக்கின்றோம். இந்தக் கணத்தில் எனக்கு உதவி செய்ய வந்த இங்கிருக்கும் ஓவிய, வரைகலை நண்பர்களை நினைவில் இருத்திக்கொள்கின்றேன். தொலைவில் இருந்ததாலோ என்னவோ, நான் இங்கிருந்து அனுப்பும் வடிவமைப்புக்கள் சாதிக்கிற்குப் பிடிக்காமற்போகும். அதேபோல் அவர் அங்கிருந்து ஓவியர்களைக்கொண்டு அனுப்பும் வடிவமைப்புக்கள் எனக்குப் பிடிக்காமற்போகும். இதற்காகவே சில சமயங்களில் சாதிக்கோடு முரண்பட்டிருக்கின்றேன். ஒரு புதியவனின் ஆர்வமென்றவகையில் என்னைச் சகித்துக்கொண்டமைக்காய் சாதிக்கை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்கின்றேன். அதேபோன்று எனக்காய் உதவவந்து அந்த ஓவியங்களைப் பயன்படுத்த முடியாமற்போனதற்காய் ஒவ்வொரு ஓவியரிடமும் மானசீகமாய் மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மையில் கொழும்பு சென்றிருந்தபோது, அங்கே நான் சந்தித்த சாதிக்கும், பூபாலசிங்கம் புத்தகசாலை சிறிதர்சிங்கும், வேறு சில நண்பர்களும் வெளியீட்டு விழா செய்வோம் என்று வற்புறுத்தியபோது, ஈழத்தைவிட்டு பத்துவருடங்களுக்கு முன் வெளியே வந்துவிட்ட நான், இங்கிருக்கும் சூழ்நிலைகளுக்குள், ஒரு புத்தகவெளியீட்டைச் செய்ய எந்த அருகதையுமற்றவன் என்றவகையில் அந்தத் திட்டத்தை நிராகரித்திருந்தேன். எனினும் அவர்கள் அனைவரினதும் அன்பை கதகதப்பாக எனக்குள்ளே வைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இத்தொகுப்பு வெளிவந்து ஒருவருடமும் கடந்த நிலையில் இந்நிகழ்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு 'காலம்' செல்வத்தின் உந்துதல்தான் முக்கிய காரணம். செல்வத்தின் வற்புறுத்தல் இல்லாதிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா தெரியவில்லை. நானும் செல்வமும் உடன்படுகின்ற விடயங்களை விட முரண்படுகின்ற விடயங்களே அதிகம் என்பது எங்கள் இருவருக்கும் நன்கு தெரியும். இவ்வாறான உடன்பாடின்மைகளோடு நம்மால் ஏதோவொரு புள்ளியில் இணைந்து இயங்கமுடியும் என்ற நம்பிக்கை, முக்கியமாய் இந்தப்புலம்பெயர் இலக்கியச் சூழலிற்கு அவசியமென நம்புகின்றேன். நம் எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும், எல்லோரின் மீதும் விமர்சனங்கள் உண்டு என்ற புரிதல்களின் ஊடே பிறரையும் அணுகும்போது நாம் நண்பர்களை இழக்கவேண்டியிருக்காது, எதிரிகளைப் பெருக்கவும் வேண்டியிருக்காது என நம்புகின்றேன்.

அடுத்து, இங்கே அறிமுக உரையும் விமர்சனமும் செய்த அனைவருக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள். அதிபர் கனகசபாபதி சென்றவாரம்வரை ஐரோப்பா நாட்டிலிருந்தார். அவர் இலண்டனில் நிற்கும்போது தொடர்புகொண்டபோது, புத்தகத்தைக் கொண்டுவந்து தாரும், நான் பேசுகின்றேன் என்றபோதே மனதுக்கு நிம்மதியாக இருந்தது. அதேபோன்று கெளசலா, கேட்ட உடனேயே சம்மதித்திருந்தார். நிகழ்வில் என்னைத் திட்டும்போது கொஞ்சம் குறைவாய்த் திட்டுங்கள் என்று கூறித்தான் தொகுப்பை அவரது கையில் கொடுத்திருந்தேன். கூடத் திட்டினாரா இல்லை குறையத் திட்டினாரா என்பதை அவரின் உரையைக் கேட்ட உங்களின் தீர்மானத்கே விட்டுவிடுகின்றேன். அடுத்து செல்வம்... நானாகவே ஒரு உரை தரும்படி வேண்டிக்கேட்டேன். எல்லா விழாவிலும் பின் நிற்பவரை முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்று விரும்பியே செல்வத்தை ஒரு உரையாற்ற அழைத்திருந்தேன். மெலிஞ்சிமுத்தனை இவ்வெளியீட்டுக்கான Flyerயரோடு சந்தித்தபோது உங்களுக்கு சிதைதல் அழிதல் என்ற வார்த்தைகள் அதிகம் பிடிக்கும்போல... என்றார். நான் என்ற ஒன்றையே எத்தனை நான்களாய்ச் சிதைத்து ஒவ்வொரு விடயத்துக்கும் நாளும் பொழுதும் அலையவேண்டியிருக்கும்போது சிதைதலும் வளர்தலும் அழிதலும் இயல்பானதுதான் அல்லவா?

இத்தொகுப்புழ் சம்பந்தப்படாத ஒரு பொதுவான உரை வேண்டுமென விரும்பியபோது, புலம்பெயர் சூழலின் கவிதைப்போக்குகள் குறித்து உரையாற்ற தேவகாந்தன் சம்மதித்திருந்தார். அவருக்கும், அண்மையில் காலஞ்சென்ற ஈழத்து முக்கியக் கவிஞன் சு.வில்வரத்தினத்தை நினைவுகூர, அவரின் கவிதைகளைப் பாடலாகப் பாடிய மெலிஞ்சிமுத்தனுக்கும் செல்வத்துக்கும் எனது நன்றிகள்.

அடுத்து இந்நிகழ்வைப் பரவலாகக் கொண்டுசெல்ல உதவிய பத்திரிகைகளான வைகறை, முழக்கம், புது வீடு, உதயன், விளம்பரம் போன்றவற்றுக்கும், இணையத்தளங்களான பதிவுகள், திண்ணை போன்றவற்றுக்கும் நன்றி. அதேபோன்று கர்ணமோட்சம், தூதிக்காவா இறுவட்டுக்களைத் தந்த செல்வத்துக்கும், தீர்ந்துபோயிருந்தது காதல் இறுவட்டைத் தந்த சுமதி ரூபனுக்கும் நன்றிகள். இறுவட்டுக்களின் ஃபோர்மட் இங்கிருக்கும் இலத்திரனியல் கருவிகளுக்கு ஏற்றமாதிரியில்லாதபோது, அதை உரிய முறையில் மாற்றித்தருகவென இரவுகளில் வீட்டுக்கதவைத் தட்டியபோது மனங்கோணாமல் வேண்டிய உதவி செய்து தந்த ரூபனுக்கும் எனது நன்றி.

இந்நிகழ்வுக்கு ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளாராக இருக்கவேண்டும் என்று கேட்டபோது மறுக்காது ஏற்று, நல்ல விதமாய் நிகழ்ச்சியைத் தொகுத்துத் தந்த தனுசாவுக்கும் நன்றி.

இன்னும் இந்த நிகழ்வுக்கான விளம்பர வடிவமைப்பைச் செய்து தருகவென உரிமையோடு கேட்டபோது, தனக்கான வேலைகளை தள்ளிவைத்து வடிவமைத்துத் தந்த இரமணனுக்கு எனது அன்பு. அதேபோன்று நிகழ்வில் திரையிடப்படும் படங்கள் குழறுபடி இல்லாது திரையிடப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அதன் எல்லாவிதமான பொறுப்பையும் எடுத்துத் திறம்படச்செய்து முடித்த சிறிக்கும் மிக்க நன்றி. நிகழ்வில் இடைவேளையின்போது வந்திருப்பவர்களை உபசரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்ட எனது சகோதரர்களுக்கும் அவரின் நண்பர்களுக்கும் நன்றி.

இவையெல்லாவற்றையும் விட வந்திருக்கும் நீங்களில்லாது இவ்விழா இனிது நடந்தேறியிருக்கமுடியாது. இந்நாட்டில் எப்படி நம் எல்லோரின் வாழ்வும் எவ்வளவு அதிவிரைவாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதை நானறிவேன். நீங்கள் செய்யவேண்டிய எத்தனையோ விடயங்களை தள்ளிவைத்து, இந்நிகழ்விற்காய் வந்திருக்கின்றீர்களே... அந்த அன்புக்காய் உங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நன்றி.

எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் எனது பெற்றோர், சகோதரர்களின் அன்பையும் இத்தருணத்தில் நினைவிலிருந்திக் கொள்கின்றேன். தவிரவும், இங்கு பெயர் குறிப்பிட மறந்த, இந்நிகழ்வு இனிதே நடந்தேறுவதில் பின்னின்று துணைநின்ற ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி.

இறுதியாய், என்னைப்போன்று எண்பதுகளில் ஈழத்தில் பிறந்தவர்கள் போர் ஒன்றைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்களாய் வளர்ந்திருக்கின்றோம்; வளர்க்கப்பட்டிருக்கின்றோம். எனனைப்போன்றவர்களை விட எமக்கு அடுத்து வரும் சந்ததிகளுக்கு போர் இன்னும் உக்கிரமான தனது கோரமுகத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றது. நம் ஒவ்வொருவருக்குமிடையில் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி, ஈழத்தில் எல்லாவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு சமாதானச்சூழல் கொண்டு வரச்செய்வதற்கு நாம் எல்லோரும் வலுவான குரலில் சேர்ந்து வற்புறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

Sunday, April 20, 2008

'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டு விழா

-ரொறொண்டோ (ஏப்ரல் 19, 2008)


நிகழ்ச்சித் தொகுப்பாளர் தனுஷா


உரை 1: பொ.கனகசபாபதி (மகாஜனாவின் முன்னாள் அதிபர்)


உரை 2: கெளசலா ('அற்றம்' சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவர் மற்றும் 'ஆரம்' தொலைக்காட்சி நிருபர்)


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


உரை 3: செல்வம் அருளாந்தம் ('காலம்' சஞ்சிகையின் ஆசிரியர்)

உரை 4: மெலிஞ்சிமுத்தன் (கவிஞர், நாட்டுக்கூத்துக்கலைஞன்)'புலம்பெயர் சூழலின் கவிதைப்போக்குகள்' : தேவகாந்தன் (சிறுகதை, நாவல் ஆசிரியர்)


முதற்பிரதி பெற்றோர்சிறிரஞ்சினி


'வைகறை' பத்திரிகை ஆசிரியர் இரவி


'உதயன்' பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


உரையாற்றியவர்கள்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


தொழில்நுட்ப உதவி: சிறிதரன்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்'வாழும் தமிழ்' புத்தக்கண்காட்சி

--------------------------
இவைதவிர,
'கர்ண மோட்சம்', 'தீர்ந்து போயிருந்தது காதல்' மற்றும் 'தூதிக்காவோ' ஆகிய குறும்படங்கள் திரையிடலும், காலஞ்சென்ற கவிஞர் சு.வில்வரத்தினத்தை நினைவுகூருமுகமாய் அவரது கவிதைகள் சிலவும் பாடலாகப் பாடப்பட்டன.

(புகைப்படங்கள்: இரமணன்)

Sunday, April 06, 2008

நிகழ்வு - ரொறொண்டோ

-இலங்கை இனப்பிரச்சனையும் சர்வேசத்தின் பங்களிப்பும்!
...இந்த நிகழ்வில் சுவீடன் நாட்டில் இருந்து, இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாகவும், இலங்கையில் சமாதானம் ஏற்படவேண்டும் என்றும் மிக நீண்டகாலமாகவும், மிக ஆர்வமாகவும் செயல்பட்டு வருகின்ற Camilla Orjela Ph.D அவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இவர் தற்போது சுவீடன் நாட்டு Goteborg University ல் Peace and Research துறையில் பணியாற்றிவருகின்றார்.

அத்தோடு இந்த நிகழ்வில் ரொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி Kanishka Goonewardena Ph.D அவர்களும் கலந்து கொண்டு இனப்பிரச்சனை தொடர்பாக பேசுகின்றார். கனிஸ்க இலங்கை இனப்பிரச்சனையில் நீதியான தீர்வு சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீண்டகாலமாக செயல்பட்டுவருகின்றார். இனப்பிரச்சனை தொடர்பாகவும், மனித உரிமைகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை இவர் ஆங்கிலத்தில் எழுதி அவை சர்வதேச ரீதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து இலங்கை சமாதான முயற்சிக்காக 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' என்ற அமைப்பு செயல்பட்டுவருகின்றது. இந்த அமைப்பில் தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள், மற்றும் முஸ்லீம்களும் அங்கம் வகிக்கின்றனர். எந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் ஆதரவு இல்லாமல் சுயாதீனமாக இலங்கையில் நீதியான சமாதானம் ஏற்படுவதற்கான இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' அமைப்பு செயல்படுகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சனையில் மிக்க ஆர்வமும், இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஆர்வத்துடன் செயலாற்றியவரும், இலங்கை அரசு தனது சிறுபான்மை இனங்களுடன் தனது அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மிக ஆணித்தரமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற கனேடிய அரசியல் வாதியான பொப் ரே இந்த 'சமாதானத்திற்கான கனேடியர்கள்' கடந்த நவம்பரில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பிடத்தக்கது.

Camilla Orjela Ph.D இதுவரை பதினைந்து தடவைகள் இலங்கைக்கு இவர் சென்றுள்ளார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எல்லாரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மற்றும் புலிகள் தரப்பில் தமிழ்செல்வன், புலித்தேவனையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இவர் உரையாடியுள்ளார்.

இவருடைய கலாநிதி பட்டத்திற்காக இவர் எழுதியதே இலங்கைப்பிரச்சனையைப் பற்றியதுதான் என்றால் (”Civil Society in Civil War: Peace Work and Identity Politics in Sri Lanka” என்னும் தலைப்பில் இவர் ஆய்வு செய்துள்ளார்) இலங்கை விடயத்தில் எவ்வளவுக்கு இவர் ஆர்வமான உள்ளார் என்பது தெரியும். Camilla Orjela Ph.D ஒரு பத்திரிகையாளரும் கூட. இவர் Utblick என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்த சஞ்சிகை IOGT-NTO's International Institute ஆல் வெளியிடப்படுகின்றது. இந்த சஞ்சிகையின் முக்கிய நோக்கம் சமாதானமும்- முன்னேற்றமும் ஆகும் ( Peace- and Development issues). அதே சமயம் இவர் SASNET's board உறுப்பினராக ஐனவரி 2004ம் ஆண்டில் இருந்து அங்கம் வகிக்கின்றார்.


(தகவல்: நன்றி pathivukal.com)