-மற்றும் சில குறுக்குக் கேள்விகளும்-
'கூபா' இன்றொரு கம்யூனிச நாடாக அறியப்பட்டாலும் 1959ம் ஆண்டு புரட்சிக்கு முன்பான அதன் வரலாறு அவ்வளவு மெச்சக் கூடியதொன்றல்ல. கிறிஸ்ரோபர் கொலம்பஸ் 14ம் நூற்றாண்டின் முடிவில் கூபாவைக் கண்டுபிடிக்கும்போது அங்கே பூர்வீகக் குடிகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அதன் பின் நிகழ்ந்த ஸ்பானிய ஆக்கிரமிப்புக்களினால் இன்று கூபாவில் -கிட்டத்தட்ட- எந்தவொரு பூர்வீகக்குடியும் (tribes) இல்லை எனச் சொல்கின்றார்கள். ஆக அவ்வாறான ஒரு கொடுமையான இன அழிப்பு கூபாவில் ஸ்பானியர்களால் செய்யப்பட்டிருக்கின்றது. கூபாவின் ஒரு மாகாணமான Matanzas என்ற பெயரே 'Massacre' என்ற பூர்விக்ககுடிகளை கூட்டாக கொன்ற சரித்திரத்திலிருந்தே வந்திருக்கின்றது. வரலாற்றைச் சற்று நேரம் காலத்தின் பனிப்பாளத்தில் புதைத்துவிட்டு பயணக்குறிப்புக்களுக்கு வருவோம்.
முதலில் தலைப்பிலிருக்கும் 'இளம் பயணி'க்கு ஒரு அறிமுகத்தைத் தரவேண்டியிருக்கிறது. இளம்பயணி என்பது குறிப்பிட்டது இளம் வயதில் இப்பயணி இருக்கின்றார் என்பதால் அல்ல; அவர் மிகச் சொற்பமாகவே பயணங்களைச் செய்திருக்கின்றார் என்ற காரணத்தால் மட்டுமேயாகும். 'தமிழினத் தலைவர்' கருணாதியின் கட்சியின் இளைஞர் அணிக்கு 50 வயதைத்தாண்டியும் ஸ்ராலின் தலைவராக, இளைஞராக இருந்ததைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நினைவூட்டத் தேவையில்லை. மேலும் இலக்கியச் சூழலில் முதுபெரும் படைப்பாளிகள் ஞானஸ்தானம் வழங்கும்வரை இளம்படைப்பாளியாகவோ/'வயதுக்கு வராத' படைப்பாளியாகவோ காலம் தள்ளவேண்டியதைப்போல, பயணிகளுக்கும் இவ்வாறான எழுதப்படாத விதிகள் -கண்ணுக்குத் தெரியாது- புதைந்து இருக்கக்கூடும். ஆகவேதான் எதிர்காலத்தில் வரக்கூடிய பிக்கல் பிடுங்குப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டே 'இளம்பயணி' என அழைத்துக்கொள்ள இவன் விரும்புகிறான.
சில இலக்கியவாதிகள் தங்கள் சொந்தப் பணத்தில் பயணிக்கும்போது தனியாகவும், யாராவது ஏமாளி வாசகர்/நண்பர்கள் வாய்க்கும்போது புல்வெளி தேசங்களுக்கு குடும்பத்தோடு பயணிப்பதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. அதிகமாக எப்போதும் தனியே பயணிக்கும் குடும்பத்தலைவர்கள், தம் துணைகளுக்கும் பிள்ளைகளுக்கும் தம்மைப் போலவே பயணிக்க விருப்பு இருக்கும் என்பதை சாதுர்யமாக மறைக்கும் சாமர்த்தியத்தைப் பற்றி பயணிகளுக்கான 'கொலம்பஸ் அகராதி' தன் முதலாம் அத்தியாத்தில் கூறுகிறது.
கூபா போன்ற இடதுசாரிகள் ஆளும் நகருக்கு போகும்போது இவன் நிறைய முன் ஆயத்தங்களைச் செய்யவேண்டியிருந்தது. இந்தியா என்னும் இந்து தரிசன மரபுள்ள நாட்டின் நதிகளையும் கோயில்களையும் அசுத்துமாக்குபவர்கள் அங்கு பெரும்பான்மையாகவுள்ள இந்துக்கள் அல்ல, இடதுசாரிகளும், பெரியாரியவாதிகளும் மட்டும் என்று உள்ளொளி தரிசனம் பெற்ற அறிவுஜீவி உறுதியாகக் கூறியதால் இவன் கூபாவில் இறங்கும்போது கவனமாக இருந்தான். கூபாவில் பெரும்பான்மையாக இருக்கும் இடதுசாரிகள் அங்குள்ள நதிகளையும் கடற்கரைகளையும் அசுத்தமாக்கவும், கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கவும் கூடுமென்ற அச்சத்தில் இவன் கன்டாவிலிருந்து போகும்போது அனுமதிக்கப்பட்ட இரு சூட்கேஸ்களில் ஒன்றில் ஒன்ராறியோ வாவியையும் இன்னொன்றில் 'நகரும் மலசலகூடத்தை'யும் எடுத்துச் சென்றிருந்தான். ஆனால் அதிசயத்தக்க வகையில் கூபாவில் அழகான/சுத்தமான கடற்கரைகள் எங்கும் நிறைந்திருந்தன, இந்தியாவிலிருக்கும் மக்கள் அநேக கோயில்களைச் சுற்றி தமது கழிவுகளால் இன்னொரு கோபுரம் கட்டுவதைப் போல எதையும் கூபாவில் இடதுசாரிகள் நிகழ்த்தியதாகக் காணவில்லை.
ஆனால் இவனுக்கு விமான நிலையத்தில் இறங்கியபோது ஒரு சந்தேகம் அரிக்கத் தொடங்கியது. கும்பமேளாவில் போய் இறங்குவதே பாவங்களை கரைக்கத்தான் என்றால் அந்த நேரத்தில் எப்படி வைரஸ் சிலரது தளங்களை ஆட்டி அந்தரப்படச் செய்கின்றன என்பதுதான். அப்படியாயின் ஹரித்துவாரில் இறங்கியும் சிலரின் பாவங்கள கரையவே இல்லையா? கும்பமேளாவில் இறங்கியே பாவங்கள கரையவில்லை என்கின்றபோது இடதுசாரிகளின் கூபா கடற்கரையில் இறங்கினால் என்னென்ன பிரளயங்கள் உருவாகப்போகின்றதோ என்ற கவலையே இவனுக்குள் திரளத் தொடங்கின. தனது தளத்திற்கு தினமொரு 'உங்கள் ஆண்குறியை இஞ்சு இஞ்சாக நீளமாக்க' என்று வரும் வைரஸ் பின்னூட்டங்கள் நிறைய வந்து தனது இளம்பயணித்தளம் முற்றாகவே இணையவெளியில் மூழ்கிவிடுமோ என்ற பயம் இருந்துகொண்டிருந்தது. நல்லவேளையாக திரும்பிவரும்போது எப்போதும்போல -வாசிப்பவர் இல்லாது-இலையான் கலைக்க தளம் இயங்கிக்கொண்டிருந்தது.
சரி, இப்போது காலத்தில் உறையவைத்த கூபா சரித்திரத்தை மீளப் பார்ப்போம். இவ்வாறாக பூர்வீகக் குடிகளை அழித்து ஸ்பானியர்கள் தங்களை கூபாவில் நிறுவிக்கொண்டாலும், காலப் போக்கில் அவர்களுக்கு, தங்களை ஸ்பானிய நாடும் அரசர்களும் ஆண்டுகொண்டிருப்பது பிடிக்கவில்லை. எப்படி அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் தம் மூதாதையரான பிரித்தானியர்களுக்கு எதிராக சுதந்திர நாடு வேண்டிப் போரிட்டார்களோ அவ்வாறே கூபாவிலும் 'கூபா கூபன்களுக்கும் எனவும் கறுப்பின அடிமைகளுக்கு விடுதலையும்' என்றும் கோரி ஸ்பானிய பேரரசுக்கு எதிராகப் போராடினார்கள். எனினும் அவர்களின் பத்து வருடக் காலத்தைய போராட்டம் நசுக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஸ்பானிய பேரரசிடம் கூபா பேருக்கு இருந்தாலும் வர்த்தகம், நிலம் என்பவற்றை நிறைய அமெரிக்கர்கள் சொந்தமாக்குகின்றனர்.
வழமைபோல பின் கதவால் அமெரிக்க அரசு, கூபாவை தரும்படி ஒரு இரகசிய உடன்படிக்கைக்கு ஸ்பெயினிடம் போகின்றது. எனினும் ஸ்பெயின் நிராகரிக்கின்றது. மீண்டும் எழும் உள்நாட்டுப் போரில், அமெரிக்கா தனது குடிமக்களுக்காய் அனுப்புகின்ற ஒரு கப்பல் ஹவானாவில் வெடித்துச் சிதற அமெரிக்கா நேரடியாக ஸ்பெயினுடன் போரிடத் தொடங்குகின்றது. ஸ்பெயின் பின்வாங்க அமெரிக்க வசமாகின்றது கூபா. தமது நாட்டை தாமே ஆளவேண்டுமென கூபன்கள் கோரிக்கை விட அமெரிக்கா கூபன்களிடம் தாம் எழுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கேட்கின்றது. அந்த ஒப்பந்தத்திலுள்ளவை, தெளிவாக அமெரிக்கா கூபாவை தன் காலனிய நாடாக வைத்திருக்க விரும்புவதைக் காட்டுகின்றது. அந்த ஒப்பந்தத்திலுள்ளதை இன்றும் மீற முடியாத நிலையே... கூபாவின் குவாண்டமோனோ ஜக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருப்பது.
அடுத்த பகுதியில் கூபாவில் இவன் இறங்கிய முதல் நாளையும், 'வராதாரோ' கடற்கரையில் வைத்து 'அன்புள்ள மார்க்ஸ்' வாசித்து சில உண்மைகளைக் கண்டறிந்தையும் சொல்வான். மேலும் கூபாவிற்கு போகாமலே இவன் கதைவிடுகிறான் என்று நீங்கள் ஊகிப்பதைத் தவறு என்பதும் ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்படும்.
(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்...)
4 comments:
படங்காட்டும் பதிவிலே படங்காட்டாமல் பயணக்கதையா? பயணம் கதையா என்ற ஐயத்தை நீங்களே எழுப்புவானேன்? :-)
கொஞ்ச நாட்களாகத் தொடர்ந்து சீரியஸாகவே எழுதி வந்தீர்கள். இப்போது மீண்டும் அந்த நக்கல் கலந்த நடை......
அருமை....
கூபா பற்றிய பிரமிப்புகள் அதிகம் இருப்பினும் (சே மீதான அதீதமான அபிமானம் மற்றும் அமெரிக்காவின் மீதிருக்கும் வெறுப்பு காரணமாக இருக்கலாம்) , கூபாவின் இப்போதைய கம்யுனிசம், ஆட்சி மாற்றம் கையளிக்கப்பட்ட விதம், எதிர்காலம் என்பன பற்றி நிறைய கேள்விகள் எழவே செய்கின்றன
நல்ல விஷயம் ஸார்..! தொடருங்கள்..! நானும் தொடர்கிறேன்..!
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
...
செல்வராஜ், கையும் களவுமாய் இப்படிப் பிடித்தால் தொடர்ந்து இவன் படம் காட்டமுடியாதே :-)
...
சுதன், ஒரு சுற்றுலாப் பயணியாய் மேலோட்டமாய்ப் பார்த்தவளவில், கூபன்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன போலத் தெரிந்தது; வாழ்வைக் கொண்டாடுபவர்களாய் இருந்தார்கள். ஆனால், நாம் கூபன்களாய் அவர்களின் வாழ்வை வாழ்ந்து பார்க்காதவரை எதையும் தீர்க்கமாய் சொல்லவோ/எழுதவோ முடியாது என்பதையும் குறிப்பிட்டாகத்தான் வேண்டும்.
Post a Comment