Monday, August 31, 2009

வாழ்வில் அதிக‌ ச‌க்தியை விர‌ய‌மாக்குவ‌து எதுவெனில்...

இருத்த‌ல் சார்ந்த‌ வ‌ழ‌மையான‌ கேள்விக‌ளும், புற‌ச்சூழ‌ல் குறித்த‌ நெருக்க‌டிக‌ளும் தின்றுகொண்டிருக்க‌ என‌க்கான‌ நாட்க‌ள் திண‌றிக்கொண்டிருப்ப‌தாக‌த் தோன்றுகின்ற‌ன‌. வாசிப்ப‌தும், எழுதுவ‌தும், உலாத்துவ‌தும் தான் என‌க்குப் பிடித்த‌மான‌ வெளிக‌ளென‌ வெளிப்ப‌டையாக‌ எவ‌ரிட‌மும் கூற‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து. இவ்வாறாக‌ உல‌கின் 'அதிமுக்கிய‌ பிர‌ச்சினைக‌ளால்' குழ‌ம்பிப்போய் எங்க‌ளுடைய‌ அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான‌ எலிவேற்ற‌ரில் ஏறிய‌போது, அங்கேயிருந்த‌ வாசக‌ங்க‌ள் க‌ண்ணில்ப‌ட்ட‌ன. 'ஒருவ‌ருடைய‌ வாழ்க்கையில் அதிக‌ம் ச‌க்தியை விழுங்கும் விட‌ய‌ம் என்ன‌வென்றால் 'க‌வ‌லைப்ப‌டுவ‌துதான்' என்றும், எதைப் ப‌ற்றியும் அதிக‌ம் தீவிர‌மாய் யோசிக்காம‌ல் வாழ்வ‌துதான் வாழ்க்கை என்றும் எழுதிவைத்திருந்தார்க‌ள். என‌க்காக‌த்தான் எழுதிவைத்திருந்தார்க‌ள் போலும்.

எப்ப‌வோ வாங்கி தேங்கிக்கிட‌ந்த‌ சில‌ புத்த‌க‌ங்க‌ள் இந்த‌ வார‌விறுதியில்தான் கையில் கிடைத்திருந்த‌ன‌. புத்த‌க‌ங்க‌ள் வாசிப்ப‌தைப் போல‌ சுவார‌சியமாய் ஏன் வாழ்க்கையிருப்ப‌தில்லையென‌ வேதாள‌ம் மீண்டும் முருங்கை ம‌ர‌த்தில் ஏறிக்கொள்ள‌ மீண்டும் தொலைந்த‌வ‌னானேன் - நான்.

தனிமையின் வழி - சுகுமாரன்
வெயில் உலர்த்திய வீடு - எஸ். செந்தில்குமார்
ஒரு தலித்திடமிருந்து - வசந்த் மூன்
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் - ஆனந்த டெல்டும்ப்டே (தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை)
வரலாற்றை நேர் செய்வோம் - தலித் முரசு பேட்டிகள் - 1
வரலாற்றை நேர் செய்வோம் - தலித் முரசு பேட்டிகள் - 2
நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
மார்க்சியம் பெண்ணியம்: உறவும் முரணும் - தமிழில் வெ.கோவிந்தசாமி, வெ.நடராஜ்
தலித்தியல் - இராம். குருநாதன், பத்மாவதி விவேகானந்தன்
ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த் நாகராஜன்
சீதமண்டலம் - கண்டராதித்தன்
நிழலன்றி ஏதுமற்றவன் - ஜெ. பிரான்சிஸ் கிருபா
மரம் பூக்கும் ஒளி - கோகுலக்கண்ணன்
கள்ளிகாடும் செம்பொடையனும் - மஜீத்
கங்கணம் - பெருமாள் முருகன்
புனைவின் நிழல் - மனோஜ்
நிலாச் சமுத்திரம் - தேவகாந்தன்
உறுபசி - எஸ்.ராமகிருஸ்ணன்
நிழல்வெளிக் கதைகள் - ஜெயமோகன்


கூடவே புதிதாய் வந்து சேர்ந்தவை:

ஒற்றைச் சிலம்பு - மாதுமை
விடுதலை முகம் - சு.வில்வரத்தினம் (மறைவின் பின்)


அபகரித்த சில:

கட்டுரையும் கட்டுக்கதையும் - ரமேஷ்- பிரேம்
விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் - தொகுப்பு அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி
நமக்கிடையிலான தொலைவு - ம.மதிவண்ணன்

Sunday, August 23, 2009

Rogers Cup Tennis - Final (Photos)

Toronto - Aug 23, 2009

இன்று இறுதியாட்டத்தில் Sharapovவும், Dementievaம் விளையாடியிருந்தனர். ஏற்கனவே அரையிறுதியாட்டத்தில் Dementieva, பலமிக்க Serena Williams ஜ வென்றிருந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Sharapova , காயமேற்பட்டு நெடும் ஓய்வின்பின் வந்திருந்தாலும் திறமையாக விளையாடியிருந்தார். எனினும் இன்றைய நாள் Dementievவிற்கானது. போட்டி முடிவு: 6-4, 6-3.


இறுதியாட்டம் தொடங்கமுன்னர் பயிற்சியின்போது Sharapova


ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்



கனடா தேசியக்கீதத்தைப் பாடுமொரு சிறுவன்


பார்வையாளர்கள்





ஆடிக்கொண்டிருக்கும் Dementieva


ஆட்டத்தின் இடைநடுவில், ஓய்வுக்குப் பின் Sharapova


இறுதியாட்டத்தை வென்றபோது


ஆட்டம் முடிந்து நடுவரிடனான கைகுலுக்களின்போது


Runners - up ஆன Sharapovவின் உரை








வெற்றிக்கோப்பையுடன் Dementieva

Friday, August 21, 2009

தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009 - செல்மா பிரியதர்ஷன்

(எனது குறிப்பு: இது குறித்த சுகிர்தராணியின் கட்டுரையை ஏற்கனவே பதிவு செய்து, அது எனது facebookலிலும் ஏற்றப்பட்டு ஒரு விவாதம் (வளர்மதி, வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ஜமாலன் போன்றோர் பங்குபற்றியது) நிகழ்ந்திருந்தது. அந்த உரையாடலின் நீட்சியில், அதில் கலந்துகொள்ளவிரும்பாத, ஆனால் அதை வாசித்த லீனா, இந்நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளுக்கான தனது எதிர்வினையை என்னோடு தனியே பகிர்ந்திருந்தார். லீனாவின் அந்தக் கட்டுரை விரைவில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வெளிவரவிருப்பதால் இங்கே நான் லீனாவின் எதிர்வினையைப் பதிவுசெய்யவில்லை. அக்கட்டுரை பிரசுரமானவுடன் இத்தளத்தில் நிச்சயம் நான் பதிவு செய்வேன்.

இந்தக்கட்டுரையிலும் செல்மா பிரியதர்ஷன், சுகிர்தராணி முன்வைக்கும் (குடியும் சாதியும்) குற்றச்சாட்டுக்கள் குறித்து எதுவும் பேசவில்லை. ஆக, இது குறித்து மூன்றாந்தரப்பு -அதாவது தமிழ்க்கவிஞர்கள்- இயக்கம் சாராதவர்களிடமிருந்து வரும் குரல்களையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தக்கட்டுரையில் இரவிக்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. குறுஞ்செய்திகளினால் என்ன 'மொழி' விளையாட்டுக்கள் நடந்தனவோ நானறியேன். எனினும் ஃபேஸ்புக்கில் தொடர்பிலுள்ள இரவிக்குமாரிடம் நேரடியாக இது குறித்துக் கேட்கும் எண்ணமுண்டு.


~டிசே)


...........................
தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009

- செல்மா பிரியதர்ஷன்

இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன தழிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள் சமகாலத்து அரசியல் கவிதைகள்,என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது

ஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார். கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார்.

முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தழிழ்நதி கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதிவு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. சுகிர்தராணி,தழிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான்,லீனா மணிமேகலை , நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர்.

ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துலாக இருக்கிறது. முதல் அமர்வில் சராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) ,கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன்,திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்பித்தார்கள்.

கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன. யவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல் தலித் விடுதலை குறித்து எழுதாமல் எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் எழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சகணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலிக் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார்.

அதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும்கூடி கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின் கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார்.

மதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார்.

கவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை –ஐஐ ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.

செல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம் சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்பைடயாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.

ஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம்,சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்துதூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா ரிரிதர்ஸன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரiவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.

நிகழ்வு:2

கவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து தாந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள் விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் குடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பதிரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீயார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.

ஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைபாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ் பேஷ் செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று வன்டாம் காட்டியிருக்கிறார்.

தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைபாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது.
“இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா: ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா சாகடித்தவர்கள் நீங்கள்தான். பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.

நிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம்.

சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும்,இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், படுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.இலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.

அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று,ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியைஃ பங்கு போட்டுஃ சிங்கங்களும் புலிகளும்ஃ பகிர்ந்துகொண்டனஃ இரண்டின் வால்களையும்ஃ முடித்துவிட்ட எவனோஃ எனது இடத்தின்மீது நிரந்தரமானஃ காயத்தை ஆரம்பித்து வைத்தான்ஃ அதிலிருந்து வடியும் இரத்தம்ஃ நிரந்தரமானது என அடிக்குறிப்பும்ஃ எழுதிவைத்துவிட்டான்ஃ எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள்ஃ விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி இரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.

கிழக்கிலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள்,சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை,உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.

தமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ்சொரணை? கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர்,இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.

அடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது,தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சேர்க்கிறது என்றார்.

லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினார்.

இளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்புக்குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பானத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னால் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.

நிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார்.

பழைய கதைகளை பேசி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன? வரலாறு தெரியுமா? நீ இதையெல்லாம் படித்திருக்கிறாயா? என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு என்றும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகாரதொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.

மரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா? ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.

தொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.

பின்குறிப்பு:

இந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே. இதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பகுதியில் வெளியிடப்படும்

உங்கள் பொறுமைக்கு நன்றி.


நன்றி: கீற்று

Friday, August 14, 2009

"Let our People go Home" By Mano Ganesan

(English translation script of the Sinhala interview appeared in Ravaya weekly on 9th August, 2009)

How do you describe the current situation in the IDP camps ?

President Mahinda Rajapakse’s own advisor Vasudeva Nanayakara referred to the IDP camps as Hell. Former chief justice Sarath Silva called these camps as open prison camps. They commented in Sinhala language. I am looking for more suitable terms beyond these descriptions. It is a fact that these camps are being maintained contravening all accepted national and international laws. These camps symbols of disgrace to our national history, cultural traditions and people.

Do you propose actions beyond sending water bottles, clothing and food packets from the people of south to the refugees ?

Sure. These people are neither beggars nor homeless street people. They are proudful people who lived honorably in their traditional villages, the villages and land of our ancestors who lived and shaped our heritage for thousands of years. It is very true that Buddhism and Hinduism carry the messages of kindness and mercy. But these people do not require mercy. They need no to be at anybody’s mercy. This national problem cannot be restricted to water bottles, clothing, food packets and tents. Government is trying to cover it’s nakedness by using the media excessively to telecast the ‘merciful’ supplies of such goods to the IDPs.

I feel embarrassed as a member Sri Lankan state to note this shameless act of the government. This trend of portraying our people as poor beggars on the breadline should stop at once. Their legitimate rights to live freely in their own traditional villages should be treasured and respected. I am talking this from my heart. I address this to the hearts of my Sinhala Buddhist brethren. I wish to engage myself in efforts to win over the hearts and minds of our Sinhala brethren in view of ending this national humanitarian crisis. Government is trying to wrap this humanitarian problem under the carpet. I call upon the goodhearted Sinhalese people to unite and defeat this efforts of the government.

How do you look at government’s handling of the IDP issue?

The government had blundered from the very beginning. I am telling this because I believe that no lawfully elected government can perform similar to that of a terrorist group. All those human rights violations of LTTE are matched and even surpassed by this government. The violations continue to occur. I believe LTTE’s non state terrorism has come to an end. But this government’s state terrorism is existing widely. I cannot find any streak of humanism anywhere in the so called humanitarian operations of the government. At this very moment over three hundred thousands of our people are being detained behind barbed wires and their movements restricted against their free will. Is it not state terrorism? Governments initial statistics talked about seventy thousand people. But it is now over three hundred thousand. The numbers of people gathered today were not anticipated by the government. This government at that time air dropped leaflets calling the people to come into the government held territory. People accepted the invitation and came into government territory.

But the government had no ability of infra structure basis to house this large number of people. This government will never acquire that ability. Therefore our people are becoming mentally and physically sick patients on a daily basis. The physically sick die. The mentally sick commit suicide. Children, Women and Elders are becoming orphans. Especially the conditions of our women have become very vulnerable. Our people are forced to wait in long queues for toilets, baths, water, food and medicine from dawn to dusk. Our people are becoming members of a 24 hour line-up society. The government is behaving very indecently to cover these realities. Elected Parliamentarians and media personnel are not allowed to visit these sites independently. No such restrictions imposed in any such camps housing displaced people anywhere in the world. This is the reality. They are not welfare villages. I refer to these camps as open prison camps. This is the treatment meted out to our people by this government.

While some sections disapprove, certain others approve government’s handling of the displaced people. How should a responsible government act at such juncture?

Only politically cruel and communally insane persons approve such inhuman conditions. These are small numbers of persons. But through excessive media coverage they attempt to interpret this as the majority opinion. But I do not think that majority of our Sinhala Buddhist people approve this. This is not a private problem of the government. First of all this government should understand this. Therefore the ‘Northern Blossom’ (Uthurata Vasanthaya/Vadakkin Vasantham) program cannot be implemented according the plans drawn as per the government designs. At this hour of national crisis, the government should form an inter party commission powered to take independent decisions. This commission should be authorized to question and receive answers regarding the governmental executive decisions and acts. Need of the hour is transparency.

According to the reports received by us, over two hundred and fifty thousand people demand to go back to their villages independently. These people do not require any governmental assistance. This is the demand of the people who wish to continue living in their traditional village lands where their ancestors lived over thousands of years as an ethnic nationality. Neither this government nor any force on earth can deny this traditional and historical rights of our people. I wish to state this very categorically. We will never accept the efforts of the government to create new townships changing the demography. Government is magnifying this problem to undue proportions to suit it’s own political agenda. The less government we have the better said Emerson. But this government is administering everything from toileting to sleep bed and from birth to death of the displaced Tamil civilians.

This government has made everything government in every aspect of the displaced Tamil civilians by supervising and interfering in every stages of their personal lives. This is nothing but systematic insult and injury to the Tamil civil layers. Government by purposefully postponing the resettlements of the civilians. Government again and again talks about landmines. I will not buy this story. The mined territory is only about 10% of the total land. All knowledgeable civilians know this. Our security forces reached Vanni heartland from all directions well through the territory. Let our people go home. It should occur with immediate effect. It is the need of the hour. Under the circumstances, our priorities number one, number two and number three are letting our people going back to their homes.

Today rights to life and speech are under threat in the north and as well as in the south. What is your intervention in this regard?

I live in the south. But I never gave a round of applause when the rights to life and speech were violated in the north. I am for a undivided Sri Lanka. I always provide my highest most respect to our national flag. But when such rights were publicly violated in the north, I did not raise our national flag. I did not bring insults to our national flag by engaging in such activities. Do not wait until the arm of tyranny taps your door. Be on your alert. Get together. Join hands. This is my call.

Thanks: Transcurrents

இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து என்ன‌? - ம‌னிதவுரிமை ஆர்வ‌ல‌ர் நிமல்கா ஃபெர்னாண்டோ

நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார். அனைவருக்கும் வாழ்வுரிமை, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதிகார பகிர்வளிக்க வேண்டும் ஆகியவையே `பிளாட்ஃபாரம் ஃபார் ஃப்ரீடத்தின்' நோக்கம். ராஜபக்ஷே உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்கள் அனைவருமே இவரது நண்பர்கள்.

1980களில் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் தொடங்கியபோது, சிங்கள அரசு அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முயன்றது. நாள்தோறும் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தபோது அவர்களுக்காக கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு தைரியமாக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் இவர். விடுதலைப் புலிகளுக்கு உதவியதற்காக பேராசிரியர் நிர்மலாவை இலங்கை அரசு மட்டக்கிளப்பு சிறையில் அடைத்திருந்தது. அவரை மீட்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக கடந்த 10.6.1984_ம் தேதியன்று விடுதலைப் புலிகள் மட்டக்கிளப்பு சிறையை துவம்சம் செய்தனர். பத்திரமாக அவரை மீட்டு, பாதுகாப்பான இடத்திலும் தங்க வைத்தனர். அந்தளவிற்கு பிரபாகரனின் அபிமானத்தைப் பெற்ற பேராசிரியை நிர்மலாவின் வக்கீல்தான் இந்த நிமல்கா ஃபெர்னாண்டோ. காணாமல் போகும் தமிழ் இளைஞர்களுக்காக வாதாடியதால் ஜே.வி.பி. அமைப்பு இவரை `தேசத் துரோகி' என்றும், புத்த பிக்குகள் `சி.ஐ.ஏ. ஏஜெண்ட்' என்றும் சொல்லி டார்ச்சர் செய்யவே இவர் நாட்டை விட்டே எஸ்கேப்பாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். நான்கு ஆண்டுகள் வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு சந்திரிகா அதிபரான பிறகே, இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார். மனித உரிமைக் காப்பாளர் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த நிமல்காவை சந்தித்துப் பேசினோம். இனி அவரது பேட்டி.

இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன?

``இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. `சண்டே லீடர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உள்ளிட்ட 14 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதால் பல பத்திரிகையாளர்கள் தொழிலை விட்டே ஓடிவிட்டார்கள். இலங்கை அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்குமென யாருக்கும் தெரியாது.''

கடைசிக் கட்ட சண்டையில் சிங்கள ராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி போர் விதிமுறைகளை மீறியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே?

``உண்மைதான். இரண்டு தரப்புமே பல மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசக்கூடாது என்பது சர்வதேச போர் நெறிமுறை. ஆனால், சிங்கள ராணுவம் வவுனியா ஆஸ்பத்திரியில் குண்டுகளை வீசியிருப்பதை நான் அங்கு சென்றபோது கண்கூடாகவே பார்த்தேன். அதுவும் முள்ளிவாய்க்காலில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இறுதிக்கட்டப் போரில் இரண்டாயிரம் பேர் பலியாகியிருப்பார்கள் என்று அரசு சொன்னாலும் கூட உண்மையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். சில சிங்கள ராணுவ அதிகாரிகளிடம் பேசினேன். `சுமார் 35 ராணுவ வீரர்கள் ஊனமுற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அனுராதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய ராணுவ மருத்துவமனைகளில் தங்க வைத்திருக்கிறார்கள்' என்று கூறினார்கள். ஆனால், அவர்களையும் யாரும் சந்திக்க முடியாது. உண்மைகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம்தான் காரணம்.''

போர் முடிந்துவிட்ட நிலையிலும் வவுனியா மக்களை முகாமிலேயே அரசு தங்க வைத்திருக்கிறதே, அங்கு வசதிகள் எப்படி? மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?

சற்று சிந்தித்தவர், ``பாவம் தமிழர்கள்'' என்று சோகத்தோடு கூறிவிட்டுத்தான் தொடர்ந்தார். ``சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மெஜாரிட்டி பேர் கிரிமினல்களோ, போர்க்குற்றவாளிகளோ அல்ல. அப்பாவிகள். விசாரித்துவிட்டு அவர்களை ஊருக்கு அனுப்பிவிடவேண்டியதுதானே. ஆனால், அந்த முகாம்களுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. முகாம்களின் நிலைமையும் படு மோசம். ஆயிரம் பேருக்கு ஒரு கக்கூஸ்தான். அது போதாது என்று எங்களைப் போன்றவர்கள் சொன்னதால் எண்ணூறு பேருக்கு ஒரு கக்கூஸ் என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு குடிக்கக் கூட சொற்ப தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. குளிப்பது என்றால் முறை வைத்துத்தான் குளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றால் அப்பா இன்றைக்குக் குளித்தால், அம்மா மூன்று நாட்களுக்குப் பிறகே குளிக்க முடியும். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் பவுடர் கிடையாது. இப்போதே இந்த நிலைமை என்றால், விரைவில் பருவ மழை தொடங்கி விடும். முகாம்களுக்குள் மழைநீர் பெருக்கெடுக்கும்போது மக்களால் தங்க முடியாது. மழை பெய்கிறதே என்று எழுந்து ஓடினால் ராணுவம் சுட்டுவிடும் என்ற நிலைதான் என்கிறார்கள். நான் முகாம்களுக்குச் செல்லவில்லையென்றாலும் மருத்துவமனைக்குப் போனேன். அங்கிருந்தவர்களின் நிலைமை மிகவும் பரிதாபம். அங்குள்ள ஒரு தாயின் சோகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. ராணுவம் குண்டு போட்டபோது தப்பிப்பதற்காக குடும்பத்தோடு ஓடியிருக்கிறார்கள். அப்போது ஒரு குண்டு வெடித்ததில் அந்த கர்ப்பிணித் தாயின் இடுப்புக்கு கீழ் சிதைந்து விட்டது. அப்போது அவர் மேல் பிணமாக விழுந்திருக்கிறாள், அவரது பத்து வயது மகள். அதன்பிறகே அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதை வளர்க்கக் கூடிய மனநிலையில் அவர் இல்லை. தற்போது முகாம்களில் இருந்த மூவாயிரம் முதியவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால் இளைஞர்களின் கதி அதோகதிதான். தீவிரவாதிகள் என்று இன்னொரு குரூப் (கருணா கோஷ்டி) அடையாளம் காட்டும் பட்சத்தில் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆக, பாவம் தமிழர்கள்.''

இந்த அவலத்தை மாற்ற முடியாதா?

``முடியும். அதுவும் வெளிநாடுகளிலிருந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தமிழர்களின் அவலம் மாறும். குறிப்பாக, இந்தியாவின் அழுத்தம் மட்டுமே நல்ல பலனைக் கொடுக்கும். அதிபர் ராஜபக்ஷே எனது நண்பர். அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். அவர் அதிபர் ஆவதற்கு முன்பு ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இருவரும் சேர்ந்துதான் கலந்து கொண்டோம். அவர் வேண்டுமானால் தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பார். உரிமைகள் கொடுக்க மாட்டார். தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்போவதாக அவர் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது. எள்முனையளவு உரிமைகளைக் கூட அவர் தமிழர்களுக்குக் கொடுக்க மாட்டார். இப்படிச் சொல்வதன் மூலம் நானும் டார்கெட் பண்ணப்படலாம். இந்தியாவும், தமிழ்நாடும் 500 கோடி ரூபாய் நிதி, பலாலி விமான நிலையம் புதுப்பிப்பு என்பதெல்லாம் சரிதான். அதே சமயத்தில் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்குமே சொந்த வீடு இருக்கிறது. மீனவர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களில் யாருமே பிச்சைக்காரர்கள் அல்ல, வசதியாக வாழ்ந்தவர்கள். அவர்களையெல்லாம் 180 நாட்களுக்குள் சொந்த வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று ராஜபக்ஷே சொன்னார். ஆனால், அதற்கான அறிகுறிகளே இல்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டு அழுத்தம் கொடுத்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது.''

பிரபாகரனின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

``சிங்கள ராணுவ அதிகாரிகளிடம் நான் பேசிய வரையில் அவர் இறந்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். ஆனால் எப்படி இறந்தார் என்று ராணுவம் வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லிக் குழப்புகிறது. தவிர, டி.வி.யில் யூனிஃபார்ம், அடையாள அட்டை சகிதம் காட்டியது அவரது உடல் அல்ல என்பதே பெரும்பாலான தமிழ் மற்றும் சிங்கள மக்களின் கருத்து. தமிழர்கள் அதிலும் குறிப்பாக, வயதானவர்கள் டி.வி.யில் அவரது உடலைக் காட்டும் போது பார்க்க கஷ்டப்பட்டு கண்ணீருடன் தலை குனிந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு `வார் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள `மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் `அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல' என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்.''

இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

``ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசின் 13_வது சட்டப்பிரிவை அமல்படுத்துவதே தமிழர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு. அதாவது வடகிழக்குப் பகுதிகளில் பிராந்திய அரசு அமைக்கப்பட வேண்டுமென்பதே அச்சட்டப் பிரிவு. இதை ஜே.வி.பி, புத்த பிக்குகள் தவிர இலங்கையிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர்களின் தாய்நாடும் இதுவே. அவர்களும் மண்ணின் மைந்தர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டு அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும். இந்தியாவும், கருணாநிதியும் தமிழ் மக்கள் படும் பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தியா அளப்பரிய ஆதரவு கொடுத்து ராஜபக்ஷேவை ஜனநாயகவாதியாக ஆக்க வேண்டுமே தவிர, சர்வாதிகாரியாக மாற்றி விடக்கூடாது.''

காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்டதால்தான் தனித் தமிழ் ஈழக் கோரிக்கை வந்தது. இனிமேல் அது சாத்தியமா?

``முதலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதோடு நின்று விடாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். ஈழப்பிரச்னைக்கு இலங்கையில் கூட்டாட்சி அமைவதே சரியான தீர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன்.''

புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்க முடியுமா?

``முதலில் சொந்த வீடுகளில் மக்கள் வாழத்தொடங்கட்டும். மக்களிலிருந்துதானே தலைவர்கள் வரமுடியும். எப்போது தேர்தல் நடந்தாலும் விடுதலைப் புலிகள் மக்களை மிரட்டுகிறார்கள் என்று ஆட்சியாளர்கள் சொல்லி வந்தார்கள். இப்போது விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்ட நிலையிலும் வவுனியாவை அவர்களின் ஆதரவுக் கட்சிதானே கைப்பற்றியிருக்கிறது.''

தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நடப்பதாகச் சொல்கிறார்களே?

``இது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சிறுபான்மை சமுதாயத்தின் அடையாளம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்கும் முயற்சி இது. இதெல்லாம் சாத்தியமானால் எங்களைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் வேலை செய்யவே முடியாது.''


Thanks: Kumudam Reporter

Wednesday, August 12, 2009

குடியும் சாதி நிமித்தமும் - சுகிர்தராணி

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்று எண்பதைத் தொட்டுவிட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இருநூறுக்கும்மேல். அவர்களுள் பெண்களும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும். மதுவிலக்கு அமல்படுத்தப்படாத தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விஷச்சாராய உயிரிழப்புகள் சம்பவித்து வருகின்றன என்பது கண்கூடு.

விஷச்சாராயம் அருந்தி பலியானவர்கள் மற்றும் சிகிச்சைபெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். குஜராத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து கள்ளச்சாராயத்தைக் கடத்துவதற்காகக் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அக்குழந்தைத் தொழிலாளர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய படிப்பறிவற்ற தலித் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். தலித்துகளைக் கொண்டே தலித்துகளின் கண்ணைக் குத்தும் சமூக அவலத்திற்கு இவையெல்லாம் சான்றுகள்.

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் கள்ளச்சாராயம் பலிவாங்குவது ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களைத்தான். தலித்துகள் ஏன் குடியை நாடிச் செல்கின்றார்கள்? குடி தலித்துகளின் கலாச்சாரமா? கொண்டாட்டத்திற்குரிய ஒன்றா? போன்ற கேள்விகள் எழாமலில்லை.

o

இந்தியாவில் வேத காலம்தொட்டே மக்களுக்குக் குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கின்றது. சோமபானமும் சுராபானமும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின் அனைவராலும் அருந்தப்பட்டிருக்கின்றன.

அப்போது ஏறக்குறைய 62 பிரிவுகளாக விளங்கிய இந்து சமயத்தில் வேள்விகளும் சடங்குகளும் மலிந்திருந்தன. சாதிக்கொடுமைகள் வேறு மக்களை வாட்டின. இவற்றிலிருந்து மக்களை விடுவிக்கவே சமணமும் பௌத்தமும் மாற்றுச் சமயங்களாகத் தோன்றின.

பௌத்தம் அனைவரும் சமம் என்னும் கருத்தைப் போதித்ததால், தாழ்த்தப்பட்ட மற்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்து சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக பௌத்தம் வீழ்ச்சியடையத் தொடங்கியதால் புத்தரின் அட்டமார்க்கத்தைப் பின்பற்றி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள், உடலுழைப்புத் தொழில்களால் உண்டான களைப்பைப் போக்கிக்கொள்ள குடியை நாடத் தொடங்கினர்.

சமூகத்தில் சாதி அமைப்புமுறை தோன்றக் காரணமாக இருந்த, வேதங்களால் போஷிக்கப்பட்ட இந்து மதம் வளர வளரச் சாதியமைப்பும் சாதி இழிவும் இறுகிக்கொண்டே போகின்றன. அதனால்தான் இன்றும் இந்தியாவில் சாதிகள் காணப்படுகின்றன. இன்றும் பௌத்தத்தின் பூர்வ குடிமக்கள் ஊருக்கு வெளியே சேரிகளில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல், பிணங்களை எரித்தல், மூட்டை தூக்குதல் போன்ற தொழில்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே தொழில் நிமித்தம் அவர்களுக்குக் குடி தேவைப்படுகிறது.

ஆகவேதான் விலையுயர்ந்த மதுவைவிடத் தம் ஒரு நாள் கூலிக்குள் மலிவாகக் கிடைக்கக்கூடிய கள்ளச் சாராயத்தைத் தலித்துகள் நாடுகின்றனர். எங்கெல்லாம் தலித்துகள் அதிகமாக வசிக்கிறார்களே, அங்கெல்லாம் கள்ளச்சாராய விற்பனையும் கள்ளச்சாராயச் சாவுகளும் இயல்பாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் தலித்துகள் அதிகமாக வசிக்கின்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற வடமாவட்டங்களில் விஷச்சாராயச் சாவுகள் அவ்வப்போது நிகழ்வதை மறுக்க முடியாது. இது போன்று இந்தியா முழுவதும் நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது.

கூர்ந்து நோக்கினால் தீட்டானவை, அருவருப்பானவை எனச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட தொழில்களோடுதான் பெரும்பாலான தலித்துகளின் அன்றாட வாழ்க்கை இருப்பது புலப்படும். அவற்றை மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் உள்ள தலித்துகளின் மனோநிலையை ஆதிக்கச் சாதியினராலும் தலித் உணர்வுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் அறிவுஜீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதுதான்.

தம் மலத்தைத் தாம் பார்ப்பதையே அசூசையாகக் கருதும் மக்களிடையே, எவ்வித விகல்பமுமின்றி மலத்தை அள்ளுதல், சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பெடுத்தல், செத்த விலங்குகளைத் தூக்கிச்சென்று புதைத்தல், நெருப்புச் சூட்டில் வெந்து பிணங்களைப் புதைத்தல், உடல் கூராய்வின்போது பிணங்களை அறுத்தல், திருவிழாக்களிலும் இழவுகளிலும் பறையடித்தல், மூட்டை தூக்குதல், செங்கல் அறுத்தல் போன்ற தொழில்களைச் செய்வதற்குத் தம், முந்தைய அல்லது பிந்தைய மனோநிலையை நனவிலிருந்து நனவிலிக்குக் கடத்த வேண்டியுள்ளது.

அப்படிக் கடத்துவதற்குக் குடியை ஒரு கருவியாகத்தான் தலித்துகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியும் குடிக்கே போதாமையால் தலித் வீடுகளில் ஒருவேளைதான் அடுப்பெரிகிறது. ஆகவே நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப் படை வீரர்களுக்கு மலிவுவிலையில் மது வழங்கப்படுவதைப் போல இந்தியாவில் உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தலித்துகளுக்கு அடையாள அட்டை அளித்து, மலிவுவிலையில் தரமான மது வழங்க அரசு ஆவனசெய்ய வேண்டும். குடி ஆரோக்கியச் சீர்கேடு என்றால் கையால் மலத்தை அள்ளுவது அதைவிடச் சீர்கேடு. குடி என்பது தலித்துகளின் கொண்டாட்டத்திற்கு உரியதன்று. எல்லாவற்றிலும் நிறைவுபெற்றிருக்கின்ற ஆதிக்கச் சாதியினருக்குத்தான் குடி கொண்டாட்டமாக விளங்குகிறது.

மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மேற்கத்திய இசை அதிர அதிர மதுக்குவளையோடு திரிபவர்கள் பெரும்பாலும் தலித்துகளாக இருக்க வாய்ப்புகள் குறைவு. தலித்துகளுக்குக் குடி என்பது தொழில்நிமித்தமாக ஏற்பட்டதேயன்றி சாதிநிமித்தமாக ஏற்படவில்லை. “குடி என்பது தலித்துகளின் கலாச்சாரம்” என்னும் சொல்லாடலை உலவவிடுவது ஒரு ஆதிக்கச் சூழ்ச்சி.

அவ்வாறு கட்டமைத்தல் சாராயம், கள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றோடு தொடர்புடைய தலித்துகளைக் குடிகாரர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் வசவு வார்த்தைகளை வெளிப்படுத்தும் ஆபாசமானவர்களாகவும் சண்டைக் காரர்களாகவும் நிறுவுகின்ற ஒரு திரிபு. ஆகவே, குடியை மாற்றுக் கலாச்சாரமாகத் தலித்துகளின் மீது போர்த்துபவர்களை தலித்துகள் அடையாளம் கண்டுகொண்டு புறக்கணிக்க வேண்டும்.

குடியானது ஆதிக்கச் சாதியினரிடையே ஆதிக்க மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. குடியே அதைத் தலித்துகளுக்கு எதிராகத் திருப்புகிறது. அதனால்தான் ஆதிக்கச் சாதியினரால் தலித்துகள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தலித்துகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. தலித்துகளின் தலைமை அவர்களைப் பதற்றமடையச் செய்கின்றது.

o

தற்போது இலக்கிய உலகிலும் இந்நோய் பீடித்திருப்பது தலித் படைப்பாளிகளைக் கவலைகொள்ளச் செய்கிறது. ‘தலித் உணர்’ வாளர்களாக அறியப்படுபவர்களின் முகமூடிகள், அவர்களுடைய கொண்டாட்டக் குடியில் உருகி ஓடுவதை எழுத வேண்டியிருக்கிறது.

ஜூன் மாதம் 13,14 தேதிகளில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக, நானும், செல்மா பிரியதர்ஷன், யாழன் ஆதி மற்றும் லீனா மணிமேகலை ஆகியோர் ஒருங்கிணைத்த கவிதை நூல்கள் விமர்சனக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது. முதல்நாள் பிற்பகலில் தொடங்கிய முதல் அமர்வில் பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. யவனிகா ஸ்ரீராம் எழுதிய “திருடர்களின் சந்தை” கவிதை நூலின் விமர்சனக் கட்டுரையை மதிவண்ணன் முன்வைத்து விவாதப்புள்ளி ஒன்றைத் துவக்கிவைத்தார்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தைப் பேசுகின்ற யவனிகாவின் ஒரு கவிதையைக் குறிப்பிட்டுவிட்டு, “இதுதான் அரசியல் கவிதை, ஆத்மாநாமுக்குப் பிறகு யவனிகாதான் இத்தகைய அரசியல் கவிதையை எழுதியிருக்கிறார். சர்வதேச அரசியலைப் பேசுகின்ற இத்தகைய கவிதைகளை அனைவரும் எழுத முன்வர வேண்டும்” என்று அ. மார்க்ஸ் கூறுகிறார். அப்படியென்றால் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால் மட்டும்தான் அரசியல் கவிதையா? சாதி ஒழிப்பைப் பேசுவது அரசியல் கவிதை இல்லையா? இந்துத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? நாங்கள் அதைத்தானே எழுதிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? உள்ளூரில் நடக்கின்ற சாதிக்கொடுமை, சாதி இழிவு போன்றவற்றைப் பதிவுசெய்யாமல் சர்வதேச அரசியலை மட்டும் பேசுவது நியாயமா? யவனிகாவின் கவிதைகள் ஒன்றுகூட அவற்றைப் பற்றிப் பேசவில்லை. இதற்கு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன் என மதிவண்ணன் கேட்டார்.

அதற்கு செல்மா பிரியதர்ஷன் எழுந்து, “யவனிகா தலித் கவிதைகளை எழுதவில்லை என்பதாலேயே அவரைக் கவிஞர் இல்லையென்றோ அவருடைய கவிதைகளை அரசியல் கவிதைகள் இல்லையென்றோ ஒதுக்கிவிட முடியாது. மேலும் எதை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் படைப்பாளி. அது அவனுடைய சுதந்திரம். அவனிடம் ஏன் தலித் கவிதைகளை எழுதவில்லை என்று கேள்வி கேட்க முடியாது” என்று கூறினார்.

மீண்டும் மதிவண்ணன் தன் கேள்விகளைத் தெளிவாக முன்வைத்தார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கரிகாலன் எழுந்து “நாங்களும் தலித் உணர்வாளர்கள்தான், தலித் ஆதரவாளர்கள்தான். நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம். தலித் விஷயங்களைப் பதிவுசெய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

அப்போது கம்பீரன், “நீங்கள் தலித் உணர்வாளர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை வளர்க்கும்போது தலித்துகளைப் பற்றி ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி, சொல்லிச் சொல்லி வளர்த்திருப்பார்கள். அப்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களாகத்தான் நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில்தான் தலித் உணர்வுள்ளவர்களாக மாறியிருப்பீர்கள். அதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். ஆதிக்க உணர்விலிருந்து தலித் உணர்வுக்கு மாறிய கணத்தை ஏன் யாருமே இதுவரை பதிவுசெய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அரங்கத்தில் மீண்டும் சலசலப்பு. யாருமே பதிலளிக்கவில்லை. எனவே நான் எழுந்து “மதிவண்ணனும் கம்பீரனும் நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. நேர்மையான உங்கள் பதிலைத் தெரிவியுங்கள்” என்றேன்.

“பெண்ணியவாதிகளும் தலித்துகளும் அவரவர் பார்வையில் ஒரு பிரதியை அணுகுவது இயல்பானது. அப்படித்தான் அணுக முடியும். மதிவண்ணனும் யவனிகாவின் பிரதியை அவ்வாறே பார்த்துள்ளார். கேள்விகளைக் கேட்கக் கூடாது, தலித்துகளைப் பற்றி தலித்துகளே எழுதிக்கொள்ள வேண்டும் என்பது உங்கள் பதிலாக இருந்தால், எங்கள் எழுத்தை, எங்கள் விடுதலையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்றும் தெரிவித்தேன்.

பிறகு அ. மார்க்ஸ் பதில் கூறினார். “யவனிகாவின் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசிய விஷயங்களே தீராநதி கட்டுரையிலும் வந்திருந்தன. யவனிகா மட்டும்தான் அரசியல் கவிஞர் என்றோ அவர் கவிதைகள் மட்டும்தான் அரசியல் கவிதைகள் என்றோ குறிப்பிடவில்லை. யவனிகா ஏகாதிபத்தியத்திற்குள் ஊடாடும் அரசியலைக் கவிதையாக்கியிருக்கிறார்” என்று கூறினேன். மேலும் நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது பூரண விமர்சனத்தை முன் வைக்காமல் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. அது அவசியமும்கூட. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” மேலும் சில கட்டுரைகளின் வாசிப்போடு அவ்வமர்வு முடிந்தது. அமர்வு முடிந்தபின்னர் சிலர் மதிவண்ணன் அ. மார்க்ஸையே கேள்விகேட்டுவிட்டது பற்றித் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிரவு என்னை மதுவருந்த அழைத்தார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு என் அறையிலேயே இருந்தேன். அதே தளத்தில் இன்னொரு அறைக்குள் பலர் மதுவருந்திக்கொண்டிருந்தனர். அவர்களில் நட. சிவகுமார் மட்டும்தான் தலித் என்பதைப் பிற்பாடு அறிந்துகொண்டேன்; மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். இரவுக் கொண்டாட்டம் எடுக்க இருக்கும் ரூபங்களை முன்னுணர்ந்த சிலர் அவசரமாகக் கிளம்பி வெளியேறிவிட்டனர். கொண்டாட்டச் சத்தத்தால் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது அவர்களின் பேச்சு தலித்துகளின் பக்கம் திரும்பியது. “நாம் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மைப் போய் தலித்துகளுக்கு எதிராக எழுதுகிறோம் என்கிறார்கள். ஆதிக்கச் சாதியில் தலித்துகளுக்கு எதிராக யார் எழுதுகிறார்கள்” என்று திரும்பத் திரும்ப யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்த குரல் யாருடையது என என்னால் அறிய முடியவில்லை. குடியால் குரல் மாறியிருக்கலாம். “அவர்கள் கேட்பது நியாயம்தான். தலித்துகளைப் பற்றி நம் மனோநிலையை இதுவரை பதிவுசெய்திருக்கிறோமா? நேர்மையாகப் பதிவுசெய்யாதவரை நாம் எல்லோரும் ஆன்ட்டி தலித் தான், தலித்துகளுக்கு எதிராக யார் எழுதவில்லை என்று முதலில் சொல்லுங்கள். யார் எழுதினார்கள் என்று நான் பிறகு சொல்லுகிறேன்” என்று வாதிட்ட அந்தக் குரல் மட்டும்தான் தலித்துகளுக்கு ஆதரவாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குரல் கரிகாலனுக்குரியது.

இருந்தாலும் சுகிர்தராணி எப்படி அப்படிப் பேசலாம் என்றது இன்னொரு குரல். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டச் சத்தங்களுக்கிடையில் மதிவண்ணன் பற்றிய அவ தூறான பேச்சுகள் கேட்டன. அ. மார்க்ஸூக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்வி பலரை ஆழமாகச் சீண்டியிருந்தது உரையாடலில் வெளிப்பட்டது. எல்லாக் கூட்டங்களிலும் பிரச்சினை செய்பவர் அவர், எனவே அவரைப் பொருட்படுத்த வேண்டாம் என்றெல்லாம் பேசினார்கள். தலித்துகள் பற்றிய இழிவான பார்வை அவ்வுரையாடல்களில் ஊடாடியது. கீழ்த்தளத்தில் தங்கியிருந்த மதிவண்ணன் இவற்றை அறியவில்லை. கொண்டாட்டங்கள் நடந்த மேல்தளத்தில் என் அறைக்குப் பக்கத்து அறையிலிருந்த மதிவண்ணனின் மனைவி இந்த அவதூறுகளைக் கேட்டு இரவெல்லாம் அழுத கண்களுடன் காலை ஆறு மணிக்கு மதிவண்ணனை அழைத்துக் கொண்டு அவ்வரங்கை விட்டு வெளியேறினார். பிறகு என்னுடன் பேசிய மதிவண்ணனைச் சமூகத்தில் எதிர்கொள்ளும் அதே ஆதிக்கச் சாதி உணர்வுகள் இலக்கிய அரங்கிலும் வெளிப்பட்டதில் அவர் மனைவி அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டாட்டத்திற்குரிய குடி அங்கு ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான தலித்துகள் அக்கொண்டாட்டத்தில் இல்லாதபோது அவர்களைப் பற்றி விவாதித்தது நேர்மையற்ற செயலாகவே எனக்குத் தோன்றியது. ஆதிக்கத்தின் நனவிலி மனநிலையையும் தலித்துகளின் நனவு மனநிலையையும் அச்சூழலில் நேர்ப்படுத்த முடியாது என்பதால் அமைதி காத்தேன்.

முழுவதும் மதுவின் பிடியிலிருந்த ‘இளங்கவிஞர்’ ஒருவரின் ஆதிக்க மனோபாவத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கொண்டாட்டச் சூழலில் ததும்பிய தலித் எதிர்ப்பு மனோபாவத்தின் தொடர்ச்சியாக யாழன் ஆதி தங்கியிருந்த கீழ்அறைக்குச் சென்று தலித்துகள் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? கேட்கலாமா? என்று தாயைக் கேவலப்படுத்தும் வார்த்தைகளோடு ஏராளமான ஆபாச வசவுச் சொற்களைக் கொண்டு திட்டியிருக்கிறார் அந்த ‘இளங்கவிஞர்’. யாழன்ஆதி நிதானமாக இருந்ததால் சூழலைக் கருதி அவரும் அமைதி காத்திருக்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு லீனா மணிமேகலையும் செல்மாவும் யாழனைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசிய ‘இளங்கவிஞரை’ நீங்கள் அடிக்க வேண்டியதுதானே என்று கேட்டிருக்கிறார்கள். கருத்தியல்ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கும் தலித் படைப்பாளிகளை வன்முறையாளர்களாக மாற்றி, அவர்களைக் காலிசெய்யும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது.

தலித்துகள் இவ்வளவுதான் கேட்க வேண்டும், பேச வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான். ஆகவே தற்போதைய இலக்கியக் கூட்டங்கள் முடிந்ததும் நடந்து வருகின்ற குடி இரவுகள் பெரும்பாலும் சாதியைக் கட்டிக்காக்கின்ற, ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற, வன்மத்தை வளர்க்கின்ற இரவுகளாக முகம் காட்டுகின்றன. பலரின் ‘தலித் உணர்வு’ போலிமுகத்தையும் தோலுரித்துக்காட்டுகின்றன.

பிறகு ஒருநாள் அந்த ‘இளங் கவிஞர்’ என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தான் தலித்துகளை ஆபாசமாகத் திட்டவில்லை என்றும் அப்படித் திட்டியிருந்தால் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். நானும் மன்னித்துவிட்டேன். ஆதிக்கச் சாதியினர் தலித்துகளிடம் மன்னிப்பு கேட்பதேகூட தலித் விடுதலையின் அறிகுறிதான்.


Thanks: KALACHUVADU (AUG, 2009)

வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு


ஈழப்போரின் இறுதி நாட்கள்

அன்புள்ள கண்ணன்,

உங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.

வன்னி நிலைமைகள் - வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது? இந்த வீழ்ச்சிக்கு யார் யார் காரணம்? ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் எவ்வளவு பொறுப்பு? போராளிகள் தோற்றார்களா, தோற்கடிக்கப்பட்டார்களா? சிங்கள இராஜதந்திரத்தின் ரகசியம், அதன் வீரியம், சிங்கள அரசின் மேலாதிக்க உபாயம், இந்தியா வகித்த, வகித்துவரும் பங்கு, வகிக்க வேண்டிய பாத்திரம், சர்வதேசச் சமூகத்தின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும், தமிழ்மக்களின் 50 ஆண்டு காலப் போராட்டப் பாதையின் போக்கு, ஜனநாயகம் பற்றிய தமிழ் மக்களின் புரிதல், பன்மைத்துவத்தை ஏற்கமுடியாத உளவியல் உருவாக்கம், சாதிய மனோபாவத்தின் கூட்டுருவாக்கம் எப்படி முஸ்லிம் விரோத, பிற அமைப்புகளின் மீதான காழ்ப்புணர்ச்சியாக உருமாற்றம் பெற்றது, ஈழப்போராட்டம் புலிகளின் போராட்டமாகச் சுருங்கியதும் புலிகளின் மீதான தடைகளும் எதிர்ப்புகளும் எப்படி ஈழப்போராட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாக மாறின என்பதைப் பற்றியுமாகப் பல நிலைகளில் சாட்சிநிலை நின்று எழுதப்பட வேண்டும். அப்படியொரு எண்ணமும் உண்டு. ஆனால், இப்போது நாங்கள் இருக்கின்ற முகாம் சூழலில் இதற்கு வாய்ப்பேயில்லை. இந்த reportingகூடத் துண்டுதுண்டாகப் பல நெருக்குவாரங்களின் மத்தியில் எழுதப்பட்டுள்ளது. மனமும் நினைவுகளும் ஒரு சீருக்கு வரமுடியாது கொந்தளித்த நிலையிலேயே உள்ளன.

வன்னி யுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள். அதிலும் பிரபாகரன் தன்னை நம்பிய மக்களைக் கொன்று குவித்தார். படுகொலைக்குக் காரணமாக இருந்தார். சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார். சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார். இறுதியில் அவர் அநாதரவாகக் கொல்லப்பட்டார். எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மக்கள் அவருக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். பேராசிரியர் சிவத்தம்பி சொல்வதைப்போல சிங்கள இனவாதத்தின் மீதும் அரசு மீதும் இருந்த வெறுப்பு பிரபாகரனைப் பல குறைபாடுகளின் மத்தியிலும் ஆதரிக்க மக்களைத் தூண்டியது. ஆனால், இதையெல்லாம் சரியான வகையில் பயன்படுத்த அவர் தவறியதுதான் இந்த மாபெரும் எதிர்விளைவுக்குக் காரணம். இதில் முக்கியமானது மறுபார்வையற்ற போக்கின் ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனம். இன்று இது முடிவற்ற இருளையும் பெரும்வீழ்ச்சியையும் தமிழ் மக்களுக்கு, ஈழ அரசியலுக்குக் கொடுத்துள்ளது.

கண்ணன், அருமை நண்பரே!

ஒரு சிறிய இனத்தின்மீது, இலங்கைத் தீவின் சிறுபான்மை இனத்தின்மீது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் மிகக்கொடூரமாக - மனிதாபிமானமற்ற முறையில் - நடந்துகொண்டது. தமது நலன், அதிகாரம் என்பவற்றை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட அணுகுமுறைகளும் அரசியல் நடவடிக்கைகளும் எத்தனையோ மக்களின் உயிர்களைப் பறிக்கக் காரணமாகிவிட்டன. அப்படிப் பார்த்தால் இந்தியத் தரப்பினரும் குற்றவாளிகளே!

இப்போதுகூட - புலிகளின் மீதான இவர்களின் பகையுணர்ச்சி தீர்ந்த பிற்பாடும் - தமிழ்மக்களின் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. தவிரவும் மக்களின் நல்வாழ்க்கைக்கான உத்தரவாதம், ஏற்பாடுகள், இயல்புநிலை என்பவற்றுக்குக் கூட எவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை.

இத்தகைய குரூரமான அரசியல் யதார்த்தத்தை நாம் கேள்விக்குட்படுத்தியே ஆகவேண்டும். தென்னாசியப் பிராந்தியத்தில் இறுதியாக நசுக்கப்பட்ட விடுதலைப் போராட்டமாக ஈழப்போராட்டம் இன்றுள்ளது. அதீதமான புனைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈழப்போராட்டம் பற்றிய விளக்கத்தை நாம் புதிய முறையில் உண்மையின் வெளிச்சத்தில் காணவும் மதிப்பிடவும் வேணும்.

கண்ணன், இதற்கு உங்களுடையதும் காலச்சுவடுவினதும் பங்களிப்பும் ஆதரவும் தேவை.

இப்போது எங்கள் முகாமில் யாருக்குமே பெயர்கள், தனி அடையாளங்கள் என்று எதுவும் இல்லை. தனியே டோக்கன் எண் மட்டும்தான் உண்டு. அந்த எண் தான் சாப்பாட்டுக்கும் மலசலம் போவதற்கும், யாருடனும் பேசுவதற்கும் பிற அனைத்துக்கும். இப்போது கடிதத்தின் கீழே பெயரை எழுதுமுன்னர் அந்த இலக்கம்தான் முன்னே வருகிறது.

அன்புடன்
**********

..........................................................................

வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.

வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.

முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.

இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.

2

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.

புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, 'சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்', 'எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?' என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.

இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.

குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் - இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் - பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.

மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் - றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.

தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.

இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.

இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.

ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் - மக்கள் பிரதிநிதிகளைக்கூட - சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.

கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.

சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.

முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள - அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் - ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.

இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அமைச்சர் ரோஹித பேகல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா பிரதமர் ரமணசிறீ விக்கிரம நாயக்க உட்படச் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை - இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.

இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.

மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!

சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.

இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.

கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் - துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.

எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை - இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.

சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ - புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.

மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.

புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.

இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.

பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.

மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.

இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.

அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.

பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு - சவக்களை என்று சொல்வார்களே - இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.

உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.

மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.


Thanks: Kalachuvadu(Aug, 2009)