Tuesday, December 15, 2009

உண்மைக‌ளைப் பேசுவோம் - 05

"சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்"

(அமைதியின் ம‌ண‌ம், 2001)


சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் ந‌ண்ப‌ர்க‌ளாய்ச் சேர்ந்து கோப்பிக்க‌டையொன்றில் உரையாடிக்கொண்டிருந்தோம். கோட்டோவிய‌ங்க‌ள் வ‌ரைகின்ற‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் தான் வ‌ரைந்த‌ ஒவிய‌மொன்றைச் சுட்டிக்காட்டி, இந்த‌ ஓவிய‌ம் அண்மையில் க‌ண்க‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு பின் த‌லையில் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகின்ற‌ இளைஞ‌னின் வீடியோ காட்சியுட‌ன் ஒப்பிட‌க்கூடிய‌தென்றார். ச‌ம‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ இக்கொடூர‌த்தை ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌ல் முக்கிய‌மென்ற‌ வ‌கையில் அவ்வோவிய‌ம் விரைவில் வ‌ர‌ப்போகின்ற‌ த‌ன‌து தொகுப்பிற்கு முன்ன‌ட்டையாக‌ வ‌ர‌விரும்பிய‌தாக‌க் கூறினார். எனினும் ப‌திப்பாள‌ர் இவ்வாறான‌ சாய‌லுடைய‌ ஓவிய‌ம் ஏற்க‌ன‌வே வெளிவ‌ந்த‌தால் வேண்டாமென‌ கூறியிருக்கின்றார்.

நான் இந்த‌ வீடியோ காட்சியைப் பார்க்க‌வில்லை; இந்த‌ வீடியோ என்று ம‌ட்டுமில்லை ஈழ‌த்தில் இறுதிப்போரில் நிக‌ழ்ந்த‌ கோர‌ங்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள், வீடியோக்க‌ள் என்ற‌ எதையும் பார்க்க‌வில்லை. இவ‌ற்றை வேண்டுமென்று த‌விர்க்க‌வேண்டும் என்ற எண்ண‌த்தால் அல்ல‌; அவை த‌ரும் ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளைத் தாங்க‌ முடியாது என்என்ப‌தால் ம‌ட்டுமே. போர் நிக‌ழ்ந்து கொண்டிருக்கும் கால‌ங்க‌ளில் இங்குள்ள‌ ப‌த்திரிகைக‌ள் ப‌ல‌தின் முக‌ப்பில் இவ்வாறான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் வெளிவ‌ந்த‌போதும் அவ‌ற்றைப் புர‌ட்டிப் பார்க்க‌த் துணிவு வ‌ந்த‌தில்லை.

க‌ண்க‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு இந்த‌ இளைஞ‌ன் அவ‌னின் பின் த‌லையில் கொல்ல‌ப்ப‌டும் வீடியோவை -மொன்றிய‌லுக்கு ப‌ய‌ணித்த‌வேளையில்- ஒரு ப‌தினான்கு வ‌ய‌துப் ப‌தின்ம‌ன் த‌ன‌து பேஸ்புக்கில் வைத்துக் காட்டிய‌போது, I dont have courage to watch it, have you watched it? என்று நான் கேட்ட‌போதுபோது அவ‌ன் தான் அதைப் பார்த்த‌தாக‌க் கூறினான். அடுத்த‌ த‌லைமுறைக்கு எம‌து த‌லைமுறை எதை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ ப‌ய‌ம் என‌க்குள் ப‌டிந்த‌து.

ஆனால் இந்த‌ வீடியோ காட்சியைப் பார்க்கவில்லையே த‌விர‌, இந்த‌ வீடியோ சார்ந்து எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளையும், க‌விதைக‌ளையும் விரிவாக‌ வாசித்திருக்கின்றேன். அதைவிட‌ ஒரே 'பொய்யை' திரும்ப‌ச் திரும்ப‌ச் சொன்ன‌ சுக‌னின் கோய‌ப‌ஸ்த‌ன‌த்தையும் க‌வ‌னித்திருக்கின்றேன். சுக‌ன் ஒரே பின்னூட்ட‌த்தை ப‌ல்வேறு இணைய‌த்த‌ள‌ங்க‌ளில், 'இது புலிக‌ளின் வ‌தைக்கூட‌த்தில் புளொட் உறுப்பின‌ர்க‌ளைக் கொன்ற‌ வீடியோ காட்சி'யென‌க் கூறிய‌போது, இருக்க‌வும் சாத்திய‌மிருக்கிற‌தென‌ யோசிக்க‌க்கூடிய‌வனாக‌ இருந்திருகின்றேன்.

புலிக‌ளின் வ‌ர‌லாறு அப்ப‌டியொன்றும் சொல்லிக்க்கூடிய‌தும் அல்ல‌வே. அதைவிட‌ இறுதிப்போர் ந‌ட‌ந்த‌கால‌க்க‌ட்ட‌ங்க‌ளில் புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ள் கிசுகிசுப்பாணியினால் ப‌ல‌ செய்திக‌ளை வெளியிட்டு த‌ம‌து 'ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை' வெளிக்காட்டியுமிருக்கின்றார்க‌ள். உதாரண‌மாய் க‌ற்சிலைம‌டுக்குள‌ம் உடைக்க‌ப்ப‌ட்டு ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ இராணுவ‌ம் கொல்ல‌ப்ப‌ட்ட‌தென்றும், இராணுவ‌ம் கைதுசெய்த‌ இளைஞ‌ர்க‌ளின் உட‌லுறுப்புக்க‌ளை உயிரோடு இருக்கும்போது திருடுகின்ற‌தென்றும்...என‌ இன்னும் ப‌ற்ப‌ல‌ செய்திக‌ள். பொய்க‌ளைப் ப‌ர‌ப்புவ‌த‌ற்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌ சிர‌த்தையைக் கூட‌, புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ளிட‌ம் க‌ள‌த்தில் நிக‌ழும் உண்மைக‌ளை வெளிச்சொல்ல‌ எடுக்க‌வில்லை. தீப‌ன், க‌டாபி, விதூஷா, துர்க்கா போன்ற‌ புலிக‌ளின் நீண்ட‌கால‌த் த‌ள‌ப‌திகள் இற‌ந்த‌போதுகூட‌ உண்மையைச் சொல்ல‌வில்லை; மிக‌க் க‌வ‌ன‌மாக‌ ம‌றைக்கப்ப‌ட்டிருக்கின்ற‌து. அத‌ன் தொட‌ர்ச்சியான‌ ம‌வுன‌மே புலிக‌ளின் த‌லைமை அழிக்க‌ப்ப‌ட்ட‌போதும் நீட்சித்து... க‌ள‌த்தில் தாம் ந‌ம்பிய‌த‌ற்காக‌ (அது ச‌ரியா அல்ல‌து பிழையா என்ப‌து ஒருபுற‌மிருக்க‌) இருந்த‌வ‌ர்க‌ளுக்காக‌ கூட‌ ம‌ன‌ம் விட்டு அழ‌க்கூட‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ழ‌ங்கப்ப‌ட‌வில்லை. தொட‌ர்ச்சியாக‌ 100நாட்க‌ளுக்கு மேலாக‌ இர‌வும் ப‌க‌லுமாய் அமெரிக்க‌த் துணைத்தூத‌ர‌க‌த்தின் முன் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போது, அந்த‌ப் ப‌க்க‌ம் ந‌ட‌ந்துபோனாலே அங்கேயிருந்த‌ தாய்மார்க‌ள் -அழும் தொனியில்- ஒல‌மிட்டுக்கொண்டிருந்த‌ குர‌லைக் கேட்டால் உங்க‌ளையும் உள்ளிழுக்க‌க்கூடிய‌தாக‌ ம‌னதைப் பிசையும். த‌ம‌து பிள்ளைக‌ளுக்காக‌ -அது புலியாக‌ இருந்தாலென்ன‌, புலிய‌ன்றியிருந்தாலென்ன‌- அந்த‌ அம்மார்க‌ளின் உண்மையான‌ க‌த‌ற‌ல்க‌ளுக்கு 'ச‌ர்வ‌தேச‌ம்'தான் செவி சாய்க்க‌வில்லை; ஆற்றாமையோடு விட்டுத்த‌ள்ளுவோம்.ஆனால் உண்மைக‌ளை உண்மைக‌ளாக‌ சொல்லாது த‌விர்த்து, ந‌ம் அம்மாமார்க‌ளின் க‌ண்ணீரோடும் க‌த‌ற‌லோடும் கூட‌த்தானே அர‌சிய‌ல் ந‌ட‌த்தியிருக்கின்றோம்? எங்க‌ள் அம்மார்க‌ளே எம‌தெல்லாம் முடிந்துவிட்ட‌து; ந‌ம்மிட‌ம் இப்போது மிச்ச‌மிருப்ப‌து கண்ணீரும், குருதியும், க‌றைக‌ளும்தான் என்று வெளிப்ப‌டையாக‌ச் சொல்லாது த‌விர்த்த‌ அற‌ம‌ற்ற‌ செய‌லுக்காய் நாம் யாரிட‌ம் ம‌ன்னிப்புக் கோர‌ப்போகின்றோம்?

இதைப் புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் செய‌தபோது, அது ந‌ம‌க்குப் புதிதான‌து அல்ல‌வே. ஈழ‌ப்போராட்ட‌ வ‌ர‌லாற்றில் இதை தொட‌ர்ச்சியாக‌ நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தாம் வான‌த்திலிருந்து வ‌ந்திற‌ங்கிய‌ தேவ‌ர்க‌ளாக‌ வேட‌மிட்டுக்கொண்டு, தாம் ம‌றுத்தோடிக‌ள் என‌வும் எதிர்ப்பு அர‌சிய‌லே த‌ங்க‌ள் அர‌சிய‌லே என்று கூறிக்கொண்டவ‌ர்க‌ள் இவ்வாறான‌ ஒரு கோய‌ப‌ஸ்த‌ன‌த்தில் இற‌ங்கிக்கொள்கின்ற‌போது, நாம் அவ‌ர்க‌ள் வெளியீட்டு விழாக்க‌ளில் ஒரு க‌ல‌க‌மாய் முன்வைத்த‌ விளக்குமாறாலும் தும்புக்க‌ட்டைக‌ளாலும் திரும்ப‌ விளாச‌ வேண்டியிருக்கிற‌து. ஒரு பொய்யைச் சொல்வ‌தைவிட‌ ம‌வுன‌மாய் இருப்ப‌து எவ்வள‌வோ மேலான‌து. த‌ங்க‌ளால் எது உண்மையென்று தெளிவாக‌ உறுதி செய்ய‌த்தெரியாவிட்டால் கூட‌ அதை ஏதோ தாங்க‌ளே நேர‌டியாக‌ப் பார்த்த‌தாக‌ப் பார்த்தாக‌ பாவ‌னை செய்துகொண்டு எழுதுகின்ற‌ ப‌ல‌ர் இருக்கின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிக் கூற‌த்தேவையில்லை.

இந்த‌ இளைஞ‌ன் பின்ப‌க்க‌த்தில் மிக‌ அண்மையாக‌ வைத்துச் சுட‌ப்ப‌டுகின்ற‌தை இல‌ங்கை இராணுவ‌ம் செய்ய‌வில்லையென‌ தொட‌ர்ச்சியாக‌ சுக‌ன் ம‌றுத‌லித்துக்கொண்டேயிருந்தார். அந்த‌ எரிச்ச‌லைப் ப‌ல‌ரும் ப‌ல்வேறு வ‌கையில் சுட்டிக்காட்டியிருந்த‌ன‌ர். முக்கிய‌மாய் ஷோபாச‌க்தி 'பிற‌ழ் சாட்சிய‌ம்' என்று சுக‌னின் நேர்மையீன‌த்தை அற‌ம் சார்ந்து அணுகிய‌போதும் அங்கேயும் தேய்ந்த‌ ஒலிநாடா போல‌ கூறிய‌ ஒன்றையே திரும்ப‌வும் சுக‌ன் முன‌கிக்கொண்டிருந்தார். வ‌ள‌ர்ம‌தி தொட‌ர்ச்சியாக‌ இந்த‌ப்பின்னூட்ட‌ங்க‌ளைத் தொகுத்து ஏன் இன்னும் முத‌ற்பின்னூட்ட‌ம் எழுதிய‌ ஜான் மாஸ்ர‌ர் என்ப‌வ‌ர் இதைத் தெளிவாக்க‌ திரும்ப‌ வ‌ரவில்லையென‌ ஒரு இணைய‌த்த‌ள‌த்தில் வினாவியிருக்கின்றார் (அந்த‌ இணைப்பு எங்கென‌ ம‌றந்துவிட்ட‌து). இந்த‌ வீடியோவில் புலிக‌ளால் செய்ய‌ப்ப‌ட்ட‌துதான் என்று சுக‌ன் கூறிய‌த‌ற்கு முன்வைத்த‌ முக்கிய‌ வாத‌ம், இதிலிருப்ப‌வ‌ர் ஒரு புளொட் உறுப்பின‌ரென‌ ஜான் மாஸ்ட‌ர் எழுதியிருக்கின்றாரென்ற‌ ஒற்றைப் பின்னூட்ட‌ம்.

எப்பொருள் மெய்ப்பொருள் காண்ப‌த‌றிவு என்ப‌தைப் போல‌வோ, இல்லாவிட்டால் எல்லாவ‌ற்றையும் ச‌ந்தேகி என்ப‌த‌ற்கிண‌ங்க‌வோ சுக‌னின் கேள்விக‌ளை என‌க்குள் வைத்துக்கொண்டிருந்தேன். இந்த‌ வார‌விறுதியில் என‌க்கான கேள்வியைத் தெளிவுப‌டுத்தும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்த‌து. 'வியூக‌ம்' ச‌ஞ்சிகை வெளியீட்டின்போது சுக‌ன் குறிப்பிடுகின்ற‌ ஜான் மாஸ்ட‌ரைச் முத‌ன் முத‌லில் ச‌ந்திக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்த‌து. சுக‌னின் இந்த‌ப் பின்னூட்ட‌ம் குறித்தும், உண்மையில் இந்த‌ வீடியோவில் இல‌ங்கை இராணுவ‌ம் கொலை செய்ய‌வில்லையா என்று வினாவியபோது, முத‌லில் த‌ன‌க்கு சுக‌னோடு நேர‌டியாக‌ எந்த‌ப் ப‌ரீட்ச‌ய‌மில்லையென‌வும், வீடியோவில் இருப்ப‌து புலிக‌ள் கொல்கின்ற‌ புளொட் உறுப்பின‌ர் என்று தான் எங்கும் கூற‌வில்லையென‌க் குறிப்பிட்டார்.(அத்துட‌ன் தான் இது குறித்து எதுவும் எங்கும் எழுத‌வில்லையென‌வும் கூறியிருந்தார்). ஜான் மாஸ்ட‌ரும், இன்னொரு ந‌ண்ப‌ரும் 'ஜான் மாஸ்ட‌ர்' என்ற‌ பெய‌ரில் அவ‌ருக்குப் பிடிக்காத‌ 'இன்னொரு ந‌ப‌ரே' இவ்வாறான‌ போலிப் பின்னூட்ட‌ங்க‌ளை எழுதிக்கொண்டிருக்கின்றாரென‌ தெளிவுப‌டுத்தியிருந்தார்க‌ள்.

ஆக‌ ம‌றுத்தோடி சுக‌ன் இப்போது இத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் சொல்ல‌ப்போகின்றார்? ஒரு பொய்யை உண்மையாக‌ச் சொல்லும் திற‌மை புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமில்லை; புலி எதிர்ப்ப‌ர‌சிய‌ல் செய்ப‌வ‌ர்க‌ளுக்கும் இல‌குவாக‌க் கைவ‌ருகின்ற‌து என்ப‌தைப் பார்க்கும்போதும், இந்த‌ ம‌றுத்தோடி அர‌சிய‌ல் என்ப‌து புலிக‌ளின் அர‌சிய‌லுக்கு எதிராக‌ இருந்த‌தேயின்றி உண்மையான‌ எதிர்ப்ப‌ர‌சிய‌லாக‌ இருக்க‌வில்லை என்ப‌து மீண்டும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌து. ஜான் மாஸ்ர‌ர் சொல்வ‌தை ந‌ம்ப‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் கூட‌ இப்போதில்லை.

இன்று மிக‌ உறுதியான‌ ஆதார‌த்தோடு இந்த‌ வீடியோ உண்மையான‌து என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டு செய்தி வ‌ந்திருக்கின்ற‌து. ஆதார‌த்தைப் பார்க்க‌: Sri Lankan war crimes video is authentic, Times investigation finds

Wednesday, November 11, 2009

உண்மைக‌ளைப் பேசுவோம்- 04

ஈழ‌த்தில் மிக‌ப்பெரும் அழிவுக‌ள் நிக‌ழ்ந்த‌ மிக‌ இருண்ட‌ ஒரு கால‌த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைவில் இருந்தாலும் ந‌ம‌து க‌ர‌ங்க‌ளிலும் ம‌றைமுக‌மாக‌ குருதி வ‌டிய‌ வ‌டிய‌ இய‌ன்ற‌வ‌ள‌வு பின்புற‌ம் க‌ர‌ங்க‌ளைக் க‌ட்டி ம‌றைத்த‌ப‌டி உரையாடிக்கொண்டிருக்கின்றோம். எம‌து குற்ற‌வுண‌ர்வை கொஞ்ச‌மேனும் குறைப்ப‌து என்ப‌து இன்னும் இடைத்த‌ங்க‌ல் முகாங்க‌ளில் த‌ங்கியிருக்கும் ம‌க்க‌ளின் ம‌றுவாழ்விற்கான‌ முய‌ற்சிக‌ளில் எங்க‌ளை ஈடுப‌டுத்திக்கொள்வ‌தே என்ப‌தே முத‌ன்மையாக‌ இருக்குமென‌ ந‌ம்புகின்றேன். இல‌ங்கை இராணுவ‌மே அண்மையில் ந‌ட‌ந்த‌ போர் ந‌ட‌வ‌டிக்கையில் த‌ன‌து 6000 ப‌டைவீர‌ர்க‌ளை இழ‌ந்தும் 10,000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அங்கவீன‌ப்ப‌ட்டும் இருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ளும்போது, புலிக‌ளின் இழ‌ப்பும், உட‌ல் உறுப்புக்க‌ளை இழ‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் இதைவிட‌ இர‌ண்டு ம‌டங்கிற்கும் மேலான‌தாய் இருக்க‌க்கூடும். இதைவிட‌ இர‌ண்டு த‌ர‌ப்பாலும் த‌ங்க‌ளின் வெற்றிக்காய்ப் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் இழ‌ப்புக்க‌ளும், உட‌ல் சேதார‌ங்க‌ளும் க‌ண‌க்கிட‌ப்ப‌ட‌க்கூடாத‌வையாக‌ இருக்கும்.

ஆனால் இவ்வாறு ஒரு பேர‌ழிவு நிக‌ழ்ந்த‌பின்னும், நாம் இன்னும் 'அவ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளைவிட‌.../ இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை விட‌ 'ந‌ல்ல‌வ‌ர்க‌ள்' என்ற‌ சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌லைச் செய்துகொண்டிருக்கும்போது மிகுந்த‌ அலுப்பே வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தில் இருந்த‌ அதிகார அமைப்புக்க‌ள் ம‌ட்டுமில்லை, புல‌ம்பெய‌ர்ந்தவ‌ர்க‌ளும் கூட‌ இந்த‌ அழிவில் பெரும் ப‌ங்காற்றியிருக்கின்றார்க‌ள் என்ப‌து இப்போது தெளிவாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆக‌ இவ்வாறு ப‌ட்ட‌வ‌ர்த்த‌மாய் எல்லோர் க‌ர‌ங்க‌ளிலும் க‌றையென‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் பின்னாலும் இன்ன‌மும் ஒரு அமைப்பைவிட‌ இன்னொரு அமைப்பு ந‌ல்ல‌து கெட்ட‌து என‌ விவாதிக்கொண்டிருப்ப‌தில் எந்த‌ ந‌ன்மையும் முக்கிய‌மாய் தொட‌ர்ச்சியான‌ போரால் பாதிக்க‌ப்ப‌ட்டு எல்லாவ‌ற்றையும் இழ‌ந்து ஏதிலிக‌ளாய் இருக்கும் ம‌க்க‌ளுக்கு வ‌ந்துவிட‌ப்போவ‌தில்லை.

இன்று ஈழ‌ப்போரின் இறுதிக்க‌ட்ட‌ங்க‌ளில் நிக‌ழ்ந்த‌து குறித்து ப‌ல்வேறு நிலைக‌ளிலிருந்து ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ஈழ‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளாலும், புல‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளாலும் எழுத‌ப்ப‌டுகின்ற‌ன‌. வாசிப்ப‌வ‌ர்க‌ள்,அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர்க்குப் பிடித்த‌மான‌ க‌ருத்துக்க‌ளை எடுத்துக்கொண்டும்/ ஏற்றுக்கொண்டும் பிற‌ர‌து க‌ருத்துக்க‌ளை மூர்க்க‌மாய் நிராக‌ரிக்கின்ற‌ன‌ர். உண்மைக‌ள் என்ப‌து ஒருபோதும் ஒற்றை உண்மையாக‌ இருப்ப‌தில்லை. சி.புஸ்ப‌ராஜாவின் 'ஈழ‌ப்போராட்ட‌தில் என‌து சாட்சிய‌ம்' எப்ப‌டி ஒரு ப‌க்க‌ உண்மைக‌ளைக் கூறி பிற‌ப‌க்க‌ங்க‌ளை வெற்றிட‌மாக‌ விட்ட‌தோ, அவ்வாறே இன்று ஈழ‌த்தில் இறுதியில் நிகழ்ந்த‌து என்ன‌ என்ப‌து மாதிரியாக‌ எழுத‌ப்ப‌டும் க‌ட்டுரைக‌ளை வாசிப்ப‌த‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னை அவ‌சிய‌மாகின்ற‌து. இன்றைய‌ கால‌த்தில் இல்லாவிட்டாலும், இனி வ‌ருங்கால‌ங்க‌ளில் இக்க‌ட்டுரைக‌ள் அனைத்தும் ஒன்றாக‌த் தொகுப்ப‌டும்போதோ, இவ‌ற்றோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விரிவாக‌ எழுதும்போதோ ப‌ல‌வேறு உண்மைக்ள் வெளிப்ப‌டலாம்.

இன்றுவ‌ரை முக்கிய‌மாய் ஈழ‌த்த‌வ‌ர்க‌ளாகிய‌ நாம் உண‌ர்ச்சி அர‌சிய‌லையே செய்து வ‌ந்திருக்கின்றோம். அந்த‌ அரசிய‌லின் உச்ச‌மே புலிக‌ளை ம‌க்க‌ளிட‌மிருந்து பிரித்து அந்நிய‌ப்ப‌டுத்தியிருந்த‌து ஒருபுற‌ம் என்றால், புலத்திற்கூட‌ இந்த‌ உண‌ர்ச்சி அர‌சிய்லை விடுத்து மேலைநாடுக‌ளில் நிக‌ழும் மாற்ற‌த்திற்கேற்ப‌ த‌ங்க‌ளை த‌க‌வ‌மைத்துக் கொள்ள‌ புலிக‌ளின் அர‌சிய‌லைச் செய்த‌வ‌ர்‌க‌ளால் முடிய‌வில்லை. அத‌னால்தான் இறுதிக்க‌ட்ட‌ங்க‌ளில் தொட‌ர்ச்சியாய் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் ப‌ங்கேற்போடு நிக‌ழ்ந்த‌ எந்த‌ ஊர்வ‌ல‌மோ/ஆர்ப்பாட்ட‌மோ பெரிய‌ மாற்ற‌ம் எதையும் ஈழ‌த்தில் ஏற்ப‌டுத்தாது வீணே போயிற்று. புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ளுகு ம‌ட்டுமில்லை புலி எதிர்ப்பு அர‌சிய‌லைச் செய்தவ‌ர்க‌ளும் புலி அர‌சிய‌லை ம‌ட்டுமே சார்ந்து அர‌சிய‌ல் செய‌த‌தால் இந்த‌ப் பேர‌ழிவு நிக‌ழ்ந்து புலிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌பின்னும் அடுத்து என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அந்த‌ப் பெருங்குழ‌ப்ப‌மே இதுவ‌ரை 'மாற்று' அர‌சிய‌லைச் செய்த‌வ‌ர்க‌ளென‌ அடையாள‌ப்ப‌டுத்திய‌ ப‌ல‌ரை இல‌ங்கை அர‌சு சார்ந்து இயங்க‌ச் செய்திருக்கின்ற‌து. முக்கிய‌மாய் இந்த‌ இர‌ண்டு வ‌கைத்த‌ர‌ப்பிலும் -முக்கிய‌மாய் இய‌ங்கிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள்- கிட்ட‌த்த‌ட்ட‌ 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் ஆகையால் ஈழ‌த்தின் அண்மைக்கால‌ நிக‌ழ்வுக‌ளை ய‌தார்த்த‌ நிலைக‌ளில் வைத்து விள‌ங்கிக்கொள்ள‌ முடியாத‌தாய் இருக்கிற‌து.

அண்மையில் இல‌ங்கை அர‌சோடு சேர்ந்து இய‌ங்குத‌லே இனி எம் ம‌க்க‌ளுக்கான‌ தீர்வைத் த‌ரும் என்று ந‌ம்பிக்கையில் இருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் க‌ல‌ந்துரையாட‌லுக்குச் சென்ற‌போது, இல‌ங்கை அர‌சாங்க‌ம் செய்த‌ பேர‌ழிவுக‌ளை ஏற்றுக்கொள்ள‌வும், உங்க‌ளின் இதுவ‌ரை கால‌ அர‌சிய‌லை விம‌ர்சித்துக்கொள்ள‌வும் த‌யாரா என்று வினாவிய‌போது அவ‌ர்க‌ளால் தெளிவான‌ ப‌தில்க‌ளைத் த‌ர‌ முடியாத‌போது எல்லோருடைய‌ அர‌சிய‌லும் சுத்திச் சுத்திச் சுப்ப‌ன்ரை வீட்டுப் பின்ப‌க்க‌த்திலை என்ப‌தாய்த் தெரிந்த‌து. அவ‌ர்க‌ள் இல‌ங்கை அர‌சோடு சேர்ந்து இய‌ங்க‌ விரும்புவ‌தால் அது செய்த‌ ப‌டுகொலைக‌ளை விம‌ர்சிக்க‌வே த‌ய‌ங்குகின்றார்க‌ள் என்கின்ற‌போது இவ்வாறுதானே புலிக‌ளின் அனைத்துத் த‌வ‌றுக‌ளையும் 'ம‌க்க்ளின் ந‌ல‌த்திற்காய்' விம‌ர்சிக்க‌வேண்டாம் என்று கேட்ட‌ புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் நினைவும் வ‌ருகின்ற‌து.

இனியான‌ கால‌த்திற்கு புலிக‌ளின் அர‌சிய‌லில் இருந்து ம‌ட்டுமில்லை, த‌மிழ‌ர‌சுக்க‌ட்சி, த‌மிழ‌ர் விடுத‌லைக் கூட்ட‌ணி ஈறாக‌ எல்லா இய‌க்க‌ங்க‌ளின் அர‌சிய‌லிருந்தும் நாம் முத‌லில் விடுப‌டுத‌ல் என்ப‌து மிக‌ முக்கிய‌ முன் நிப‌ந்த‌னையாக‌ இருக்கிற‌து. அஹிம்சைப் போராட்ட‌ங்க‌ள், ச‌த்தியாக்கிர‌க‌ங்க‌ள் தொட‌ங்கி ஆயுத‌ப்போராட்ட‌ங்க‌ள் ஈறாக‌ நாம் அனைத்து போராட்ட‌ வ‌டிவ‌ங்க‌ளிலும் வீழ்ச்சியைச் ச‌ந்தித்தோம் என்றால், இதுவ‌ரை நாம் ந‌ட‌ந்து வ‌ந்த‌/ந‌ட‌த்திவ‌ர‌ப்ப‌ட்ட‌ ந‌ம் போராட்ட‌ பாதைக‌ளின் அக‌த்திலும் புற‌த்திலும் மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌ங்க‌ள் இருக்கின்ற‌தென்ப‌தை தெளிவாக‌ விள‌ங்கிக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. இனியான‌ போராட்ட‌ம் என்ப‌து ஆயுத‌ப்போராட்ட‌மாய் எந்த‌ப்பொழுதிலும் மாறிவிட‌க்கூடாது என்ப‌தில் நாம் எல்லோரும் க‌வ‌ன்மாயிருக்க‌ வேண்டியிருக்கின்ற‌ அதேவேளை, இனி ம‌க்க‌ளுக்குள்ளேயே ம‌க்க‌ளுக்காய் ம‌ட்டுமே அர‌சிய‌லை (க‌வ‌னிக்க‌) ய‌தார்த்த‌த்த‌ள‌த்தில் முன்மொழிகின்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து. முக்கிய‌மாய் அதை -எல்லா நிலைக‌ளிலும் த‌ங்க‌ளைத் தாரைவார்த்த‌- ஈழ‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளே செய்ய‌வேண்டும்; த‌ங்க‌ளுக்கு எது வேண்டும் என்று நினைக்கின்றார்க‌ளோ அதைச் செய்வ‌த‌ற்கான‌ தோழ‌மைக் க‌ர‌ங்க‌ளை நீட்டுவ‌தே புல‌ம்பெய‌ர்த்த‌ தேச‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளைக் கார‌ண‌ங்காட்டி த‌ங்க‌ள் த‌லைக‌ளில் கிரீட‌ங்க‌ளைச் சூட்டி சிம்மாச‌ன‌ங்க‌ளில் இருக்க‌விரும்பும் புல‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளின் ஆசைக‌ளை நாம் முற்றுமுழுதாக‌ நிராக‌ரித்தாக‌ வேண்டியிருக்கிற‌து

Sunday, November 08, 2009

Quebec City, Quebec

கனடாவில் பிரெஞ்ச் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணம் இது. மற்ற அனைத்து மாகாணங்களில் ஆங்கிலமும், பிரெஞ்சும் உத்தியோகபூர்வமாக மொழியாக இருக்கும்போது, இன்றும் Quebecல் பிரெஞ்ச் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கிறது. பூர்வீகக்குடிகளுக்கு சொந்தமாயிருந்த கனடா நாட்டை முதலில் 'ஆக்கிரமித்தவர்கள்' என்றவகையில் பிரான்சிலிருந்து வந்தவர்களே ஆவர். பிறகே பிரித்தானியர்கள் கனடாவிற்கு வருகின்றனர். அந்தவகையில் Quebec தனிநாடாகப் பிரிவதற்கான கோரிக்கையை தொடர்ச்சியாக Quebecலிருக்கும் சில அரசியற்கட்சிகள் கோரியபடியே இருக்கின்றனர்.

கியூபெக் மாகாணத்தில் மொன்றியல் நகரம் பிரபல்யம் வாய்ந்த நகரென்றாலும், கியூபெக் மாகாணத்தின் பாராளுமன்றம் கியூபெக் சிற்றி என்ற அதன் தலைநகரிலேயே இருக்கிறது. கியூபெக் சிற்றியில் நுழையும்போது புராதன ஒரு ஐரோப்பிய நகரிற்கு நுழைவதுபோன்ற உணர்வையே தருகின்றது. சமதரையற்ற மலையும் மலை சார்ந்த இடங்களும் சுற்றியோடும் சென்.லோரன்ஸ் ஆறும் இன்னும் அழகைக் கொடுக்கின்றது.



















Wednesday, October 28, 2009

காலம் வாழும் தமிழ் - நூற்காட்சி

வெளியீடுகள்

-மிலான் குந்தாரவின் 'மாயமீட்சி' (மொழிபெயர்ப்பு: மணி வேலுப்பிள்ளை)

-தெணியான் சிறப்பிதழ் (காலம் இதழ்)

ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழா - 2009

இம்முறை நிகழ்ந்த‌ 35வ‌து ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரைப்ப‌ட‌ விழாவில் சில‌ சர்ச்சைக‌ளும் எழுந்துள்ள‌ன‌. இவ்விழாவில் "City to City" என்னும் புதிய‌ பிரிவை அறிமுக‌ப்ப‌டுத்தி ரெல் அவிவ்வை (Tel Aviv) ந‌க‌ரை முன்னிலைப்ப‌டுத்தும் ப‌ல்வேறு திரைப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இப்பிரிவில் தொட‌ர்ச்சியாக‌ ஒவ்வொரு வ‌ருட‌மும் ஒரு ந‌க‌ரைத் தேர்ந்தெடுத்து அதை முன்னிலைப்ப‌டுத்தும் திரைப்ப‌ட‌ங்க‌ளை திரையிடும் எண்ண‌ம் நிக‌ழ்வை ஒருங்கிணைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இருக்கின்ற‌தென‌க் கூற‌ப்ப‌ட்டாலும், ஒரு ஆக்கிர‌மிப்பு நில‌மாக‌ இருக்கும் இஸ்ரேலின் ரெல் அவிவ்வை ஏன் தேர்ந்தெடுத்தாகள் என்ப‌து ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌மாக‌ இருக்கின்ற‌து. நூற்றாண்டு விழாக் கொண்டாடுவ‌தாலேயே ரெல் அவிவ்வைத் தேர்ந்தெடுத்தோம் என்று கூற‌ப்ப‌ட்டாலும் அந்ந‌க‌ரான‌து அத‌ற்குமுன் அங்கே வாழ்ந்த‌ பால‌ஸ்தீனிய‌ர்க‌ளிட‌மிருந்து சுவீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தே வ‌ர‌லாறு கூறும் உண்மை. இத‌ன் கார‌ண‌மாக‌ திரைப்ப‌ட‌ உல‌கைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் இம்முறை ரொறொண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌ விழாவைப் புற‌க்க‌ணித்துள்ளார்க‌ள். இன்னும் சில‌ர் வெளிப்ப‌டையாக‌ த‌ம‌து எதிர்ப்பைக் கையெழுத்திட்டுக் காட்டிவிட்டு நிக‌ழ்வில் ப‌ங்குப‌ற்றியிருக்கின்ற‌ன‌ர்.

ரொறொண்டோ திரைப்ப‌ட‌விழாவில் முக்கிய‌ம்பெறும் திரைப்ப‌ட‌ங்க‌ள், அத‌ன் பின்ன‌ர் ந‌ட‌க்கும் ஒஸ்காரிலும் க‌ட‌ந்த‌கால‌த்தில் விருதுக‌ளைக் குவித்திருப்ப‌தால் இம்முறை ம‌க்க‌ள் தெரிவு விருதிற்கு(People's Choice Award) தெரிவாக‌ எத்திரைப்ப‌ட‌ம் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தில் ப‌ல‌ருக்கு ஆர்வ‌மிருந்திருக்கிறது. இம்முறை ப‌தின்ம‌ வ‌ய‌தில் குடும்ப‌வ‌ன்முறையால‌ பாதிக்க‌ப்ப‌டும் ஒரு பெண்ணில் க‌தையைக் கூறும் Precious என்ற‌ ப‌ட‌ம் விருதுக்காய்த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ஒப‌ரா வின்ஃப‌ரே (Oprah Winfrey) இணைந்து த‌யாரித்துள்ளார். த‌ன‌து சொந்த‌த் த‌க‌ப்பனாலேயே பாலிய‌ல் வ‌ன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் க‌தையான‌ The Colour Purple என்ற‌ ப‌ட‌த்தில் ஒப‌ரா ஏற்க‌ன‌வே ந‌டித்தும் அத‌ன் த‌யாரிப்பாளார்க‌ளில் ஒருவ‌ராக‌வும் இருந்திருக்கின்றார் என்ப‌து க‌வனிக்க‌த்த‌க்க‌து. அலிஸ் வோக்க‌ரின்( Alice Walker) புலிட்ச‌ர் விருதுபெற்ற‌ அற்புத‌மான‌ க‌தையை அதே பெய‌ரில் (Colour Purple) திரைப்ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌போதும் ஸ்டீப‌ன் ஸ் ரீல்பேர்க் (Steven Spielberg) அத‌ன் உயிரோட்ட‌த்தை இல்லாம‌ற்செய்துவிட்டார் என்கின்ற‌ விம‌ர்ச‌ன‌மிருக்கின்ற‌து. க‌றுப்பின‌ப் ப‌தின்ம‌ வ‌ய‌துப்பெண்ணின் க‌தையைக் கூறும் Preciousஐ கறுப்பின‌த்த‌வ‌ரான‌ லீ டானிய‌ல் (Lee Daniels) இய‌க்கியிருக்கின்றார்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் ரொறொண்டோ ச‌ர்வ‌தேச‌ திரையிட‌லில், 'ம‌க்க‌ள் தெரிவு விருதில்' விருதுக‌ள் பெற்ற‌ ப‌ட‌ங்க‌ளான‌ American Beauty,Hotel Rwanda, Tstotsi, Slumdog Millionaire போன்ற‌ ப‌ட‌ங்க‌ள் ஒஸ்காரிலும் விருதுக‌ளைக் குவித்த‌தால் இம்முறை Precious ற்கும் ப‌ல‌ விருதுக‌ள‌ கிடைக்க‌லாமென‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து. இதைத் த‌விர‌ விருதுக‌ளைக் பெறாவிட்டாலும், பெத்ரோ அல்ம‌தோவ‌ரின் 'Broken Embraces'ம், அமெரிக்கப் பெருநிறுவ‌ன‌ங்க‌ளை க‌டுமையாக‌ விம‌ர்சிக்கும் மைக்க‌ல் மூரின் Capitalism: A Love Story 'ம் க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌.


('உன்ன‌த‌ம்' ஒக்ரோப‌ர் இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

Tuesday, October 27, 2009

க‌ன‌டாவின் இன்னொரு முக‌ம்

கைக‌ளிலும் கால்க‌ளிலும் ச‌ங்கிலிக‌ளுட‌ன்


இது குவாண்ட‌னாமோ அல்ல‌, வ‌ன்கூவ‌ரில் ஈழ‌ அக‌திக‌ள் கொண்டுசெல்ல‌ப்ப‌ட்ட‌ வித‌ம்.


ஏற்க‌ன‌வே இது குறித்து எழுதிய‌ ப‌திவு

Friday, October 23, 2009

நான் நானாக‌ இருக்கும் சுத‌ந்திர‌ம்: Deeyah (Singer)

ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டுக்கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌, 'பால‌ஸ்தீனிய‌ எதிர்ப்பு இசை'ப‌ற்றிய‌ ஒரு ஆக்க‌த்தை மொழிபெய‌ர்க்க‌த் தொட‌ங்கியிருந்தேன். Hip-Hop, Rap சார்ந்தே அக்க‌ட்டுரை இருந்த‌து என்றாலும், மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளைப் பெறுவ‌த‌ற்காய் இணைய‌த்தைத் தோண்டிய‌போது Deeyah (Deepika) கிடைத்திருந்தார்.



இந்த‌ப் பாட‌ல் 'பேசுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌த்தை' (Freedom of Expression) முக்கிய‌ப்ப‌டுத்துகிற‌து என‌ தியா கூறுகின்றார். (ந‌ம‌க்குப் ப‌ரிட்ச‌ய‌மான‌ தென்னிந்திய‌ இசைக்குறிப்புக்க‌ளும் இப்பாட‌லின் ந‌டுவில் வ‌ருகிற‌து)

இவ‌ர் நோர்வேயில் பாகிஸ்தானிய‌ப் பெற்றோருக்கு பிற‌ந்த‌வ‌ராவார். ஒரு முஸ்லிமாக‌ இருப்ப‌தால் அவ‌ர்ப‌டும் துய‌ர‌ங்க‌ளை அவ‌ர‌து நேர்காண‌லின் நீங்க‌ள் கேட்டுப்பார்க்கலாம். அடிப்ப‌டைவாதிக‌ளால் இவ‌ர் இஸ்லாம் ம‌த‌த்திற்கு எதிரான‌வ‌ர் என‌க்கொலைப் ப‌ய‌முறுத்த‌ல்க‌ள் விட‌ப்ப‌ட்டு இப்போது நோர்வேயை விட்டு வெளியேறி இல‌ண்ட‌னில்(?) வசிக்கின்றார். முஸ்லிம்க‌ள் குறித்து பொதுப்புத்தி எப்ப‌டி மேற்குல‌கில் இருக்கின்ற‌து என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து தெரிவுக‌ளின் அடிப்ப‌டையில் த‌ன‌து வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவ‌ருக்கும் இருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌முடியாது.

நேர்காண‌லில் தியா கூறுவார், 'நான் Veil அணிய விரும்பும் பெண்ணின் உரிமையை எந்த‌ப்பொழுதிலும் ம‌றுக்க‌மாட்டேன். ஒருவ‌ர் அவ்வாறு அணிவ‌தைத் தேர்ந்தெடுத்தால் அதை நான் ம‌திப்ப‌தோடு அவ‌ரின் உரிமைக்காய் குர‌ல் கொடுக்க‌வும் செய்வேன். ஆனால் அதேபோன்று ஒரு பெண் Veil அணிவ‌தை விரும்ப‌வில்லை என்றாலும் அத‌ற்கு நாம் அனும‌திக்க‌வேண்டும். அது அவ‌ருக்கான‌ சுத‌ந்திர‌ம். அதை நாம் ஏற்றுக்கொள்ள‌வேண்டும்' என்று கூறியிருப்பார்.

உண்மையில் (ஏற்க‌ன‌வே எழுதியுமிருக்கின்றேன்) முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைக‌ள் குறித்த‌ தெரிவுக‌ளை அவ‌ர்க‌ள் வ‌ச‌வே விட‌வேண்டும். வெளியாட்க‌ளாக‌ இருக்கும் நாம் அவர்க‌ள் இவ்வாறு இருக்க‌வேண்டும்/இருக்க‌க்கூடாது என்று எம் முடிவுக‌ளைத் திணிக்க‌முடியாது. ஆனால் இந்த‌ப் பெண்க‌ள் த‌ம‌து தெரிவுக‌ள் இதுதான் என்கின்ற‌போது அவ‌ர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வுக்க‌ர‌ங்க‌ளை நீட்டுவ‌தில் த‌ய‌க்க‌ங்க‌ள் கொள்ள‌த் தேவையில்லை.

அந்த‌வ‌கையில் நாம் தியா தேர்ந்தெடுத்துக்கொண்ட‌தை ஆத‌ரிக்க‌வேண்டும்.

உண்மையில் இது தியா போன்ற‌ போன்ற‌ முஸ்லிம்பெண்க‌ளின் பிர‌ச்சினை ம‌ட்டுமில்லை. புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் இரண்டாம் த‌லைமுறையின‌ருக்கும் எழும் பெரும் சிக்க‌ல்க‌ளே இவை. இந்த‌க்கால‌க‌ட்ட‌த்தை த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாங்க‌ளும் எதிர்கொள்ளும் கால‌மும் க‌ணிந்துகொண்டிருக்கிற‌து.

இர‌ண்டு க‌லாசார‌ங்க‌ளில் வாழும் சிக்க‌ல்க‌ளை ஆழ‌மாக‌ விள‌ங்கிக்கொள்ளாத‌வ‌ரையில் நாம் எந்த‌த் தீர்ப்புக்க‌ளையும் எழுதிவிட‌முடியாது என்ப‌தை ம‌ட்டுமே இப்போது சொல்ல‌முடிகின்ற‌து.



இந்நேர்காண‌லை க‌ட்டாய‌ம் கேட்டுப்பாருங்க‌ள்...எப்ப‌டி புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளின் ஊட‌க‌ங்க‌ளில் குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தையும், த‌ங்க‌ள் ச‌முக‌த்தில் த‌ன‌க்கான‌ பிர‌ச்சினைக‌ளையும் மிக‌த் தெளிவாக‌ப் பேசுகின்றார் தியா.

உண்மைக‌ளைப் பேசுவோம் - 03

1
986ல் க‌ன‌டாவின் மேற்குக்க‌ரையோர‌த்திலிருக்கும் நியூப‌வுண்ட‌லாண்ட் க‌ரையோர‌மாய், நூற்றி ஜ‌ம்ப‌து ஈழ‌ அக‌திக‌ள் இர‌ண்டு ப‌ட‌குக‌ளில் மித‌ந்துகொண்டிருக்கையில் க‌ன‌டா மீன‌வ‌ர்க‌ளால் அவ‌ர்க‌ள் காப்பற்ற‌ப்ப‌ட்ட‌து நிக‌ழ்ந்திருக்கிற‌து. அன்றைய‌ பொழுதில் அது ஒரு முக்கிய‌ நிக‌ழ்வாய் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து கிலோமீற்ற‌ர்க‌ளை இவ்விரு 'உயிர்காக்கும்' ப‌ட‌குக‌ள் க‌ட‌ந்திருந்த‌துட‌ன், உள்ளேயிருந்த‌வ‌ர்க‌ளின் உடல்ந‌ல‌ம் மிக‌ மோச‌மாக‌வும் இருந்த‌து. இப்ப‌டிக் 'க‌ள்ள‌மாய்' ப‌ட‌கில் வ‌ந்த‌வ‌ர்க‌ளைத் திரும்பி அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாட்டுக்கு அனுப்ப‌ வேண்டுமென‌வும், இல்லை க‌ன‌டாவில் அவ‌ர்க‌ள் த‌ங்குவ‌த‌ற்கான‌ வ‌ச‌திக‌ள் செய்ய‌வேண்டுமென‌ விவாத‌ங்க‌ள் அன்றைய‌பொழுதுக‌ளில் ந‌ட‌ந்திருகின்ற‌ன‌. இறுதியில் ப‌ட‌குக‌ளில் த‌த்த‌ளித்த‌வ‌ர்கள் அக‌திக‌ளாக‌ ஏற்கப்ப‌ட்டு க‌ன‌டாவில் இருக்க‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள். இல‌ங்கை என்ற சிறுதீவும் அங்கிருந்த‌ அங்கிருக்கும் இன‌ங்க‌ளுக்கிடையிலான‌ பிர‌ச்சினைக‌ளும் க‌ன‌டா ம‌க்க‌ளிடையே ஒர‌ள‌வு தெரிய‌வ‌ந்த‌து இந்நிக‌ழ்வின் பின்னால் என்றும் கூற‌லாம். இந்த‌ நிக‌ழ்வு குறித்துத்தான் சேர‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் ஒர் ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் எடுத்திருந்தார்க‌ள் என்று நினைக்கிறேன்.

இன்று க‌ன‌டாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 300, 000 ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ளென‌க் க‌ணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஈழ‌த்திற்கு வெளியே அதிக‌ ஈழ‌த்த‌மிழ‌ர் ச‌ன‌த்தொகை க‌ன‌டாவிலே இருக்கிற‌து. அதேபோன்று ஈழ‌ப்பிர‌ச்சினை குறித்த‌ புரித‌ல்க‌ள் அண்மைய‌ வ‌ருட‌ங்க‌ளில் க‌ன‌டாவிலிருக்கும் பிற‌ ச‌முக‌த்தின‌ரிடையே ப‌ர‌வ‌லாக‌ச் சென்றிருக்கிற‌து. அண்மையில் றொரொண்டோ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌ விழாவில் விமுத்தி ஜெய‌சுந்த‌ராவின் திரைப்ப‌ட‌மான‌ 'இர‌ண்டு உல‌க‌ங்க‌ளுக்கு இடையில்' வெளியிட்ட‌போது கூட‌, ஈழ‌த்த‌வ‌ர் அல்லாத‌ பிற‌ ச‌முக‌த்த‌வ‌ர் ஒருவ‌ரால் ஈழ‌ப்பிர‌ச்சினை குறித்த‌ கேள்வியொன்று எழுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து.

இந்த‌ வார‌விறுதியில் க‌ன‌டாவின் மேற்குப்ப‌குதியிலிருக்கும் வ‌ன்கூவ‌ரில் (விக்ரோரியா)ஒரு ப‌ட‌கில் 76 பேர் வ‌ந்திற‌ங்கியிருக்கின்றார்க‌ள். ஈழ‌த்திலிருந்தே இவ‌ர்க‌ள் வ‌ந்திருக்கின்றார்க‌ளென‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து. இது குறித்த‌ செய்திக‌ள் ஊட‌க‌ங்க‌ளில் தொட‌ர்ந்து வ‌ந்துகொண்டிருக்கின்ற‌து. எந்த‌வ‌கையில் க‌னேடிய‌ அர‌சாங்க‌ம் இந்த‌ விட‌ய‌த்தைக் கையாள‌ப்போகின்ற‌து என்ப‌தைப் பொறுத்திருந்தே பார்க்க‌வேண்டும். அதிதீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் வ‌ந்த‌த‌ன்பின் குடியேற்ற‌வாதிக‌ள் தொட‌ர்பான‌ விட‌ய‌ங்க‌ளில் இறுக்க‌மான‌ கொள்கைக‌ளைக் கையாளுவ‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சென்ற‌ இருவ‌ருட‌ங்க‌ளில் அக‌தி அந்த‌ஸ்து கோரிய‌வ‌ர்க‌ளில் 20,000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் விண்ண‌ப்ப‌ங்க‌ள் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. பெரும்பான்மையாக‌ மெக்சிக்கோவிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளின் விண்ண‌ப்ப‌ங்க‌ள் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சென்ற‌மாத‌ம‌ள‌வில் இதுவ‌ரை வ‌ழ‌க்கில்லாத‌ விட‌ய‌மான‌ க‌ன‌டாவிலிருந்து மெக்சிக்கோவிற்குச் செல்ப‌வ‌ர்க‌ள் விஸா எடுக்க‌வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌த்தையும் கொன்ச‌ர்வேட்டிக் அரசு கொண்டுவ‌ந்திருந்த‌து க‌வ‌ன‌த்திற்குரிய‌து.

(மேலே எழுதிய‌து 4 நாட்க‌ளுக்கு முன்)

2.

க‌னடாவின் ச‌ட்ட‌த்தின்ப‌டி, ஒருவ‌ர் க‌ன‌டாவிற்குள் வ‌ந்து அக‌தி அந்த‌ஸ்து கோரும்போது, 48 ம‌ணித்தியால‌ங்க‌ளுக்குள் அவ‌ர் விசாரிக்க‌ப்ப‌ட‌வேண்டும் (Detention Review Hearing). அத்துட‌ன் ஒருவ‌ர் அக‌தி த‌ஞ்ச‌ம் கோரும்போது அவ‌ர் அக‌தியாக‌ வ‌ந்த‌ நாட்டு அர‌சுட‌ன் குறித்த‌ ந‌ப‌ர் குறித்த‌ எந்த‌ விப‌ர‌ங்க‌ளையும் பெற‌க்கூடாது என்ப‌தும் இருக்கிற‌து. இத‌ற்கு மாறாக‌ 76 ஈழ‌த்த‌மிழ‌ர் க‌ன‌டாவின் எல்லைக்குள் நுழைந்த‌ 48 ம‌ணித்தியால‌ங்க‌ள் ஆன‌பின்ன‌ரும், 16 பேர் ம‌ட்டுமே க‌னேடிய‌ அதிகாரிக‌ளால் விசாரிக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ர். கிட்ட‌த்த‌ட்ட‌ வ‌ந்த‌ 60 பேருக்கு க‌ன‌டாவிலிருக்கும் உற‌வுக‌ள் -குறித்த‌ ந‌ப‌ர்க‌ளின் அக‌தி அந்த‌ஸ்து விசார‌ணைக‌ள் நிக‌ழும்வ‌ரை- அடிப்ப‌டை வ‌ச‌திக‌ளைப் பொறுப்பு எடுத்துக்கொள்வ‌தாக‌வும் வாக்குறுதி அளித்துள்ள‌ன‌ர்.

ஆனால் இன்றைய‌ அர‌சாக‌ இருக்கும் வ‌ல‌துசாரி க‌ட்சி இவ‌ற்றையெல்லாம் க‌ண‌க்கிலெடுக்குமா என்றும் தெரிய‌வில்லை. அண்மைக்கால‌மாய் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ளை குடிவ‌ரவாள‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌மாய் ச‌ட்ட‌த்தில் ஏற்ப‌டுத்திக்கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌தும் க‌வ‌னிக்க‌த்த‌து.

இவையெல்லாம் ஒருபுற‌மிருக்க‌, ந‌ம‌து மாற்றுக்க‌ருத்தாள‌ர்க‌ள் என்று த‌ங்களுக்குத் தாங்க‌ளே சூட்டிக்கொண்டு, புலி ஆத‌ரவாள‌ர்க‌ளின் உடுப்புப்பிடிக்கு ச‌ற்றும் குறையாத‌ குல‌க்கொழுந்துக‌ள், இப்ப‌டி வ‌ந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் புலிக‌ள் அவ‌ர்க‌ள் திருப்பி அனுப்ப்ப‌ட‌வேண்டும் என்று கூக்குர‌ல் எழுப்ப‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ர். முத‌லில் வ‌ந்திற‌ங்கிய‌வ‌ர்க‌ள் புலிக‌ளாக‌வோ, முன்னாள் புலிக‌ளாக‌வோ இருந்தாற்கூட‌ அவ‌ர்க‌ளை ம‌னிதாபிமான‌த்த‌ன்மையுட‌ன் அணுகும்த‌ன்மையே ந‌ம்மிட‌ம் வேண்டியிருக்கிற‌து. ம‌னிதாபிமான‌த்தைத்தாண்டி புலி ஆத‌ர‌வு X எதிர்ப்பு த‌ன்மையை ஊதிப்பெருப்பித்த‌தில் புல‌ம்பெய‌ர்ந்த‌ புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ளிடையே அதிக‌ம் இருந்த‌து என்ற‌ உண்மையையும் நாம் முத‌லில் ஏற்றுக்கொள்ள‌வும் வேண்டும்.

இப்போது மீண்டும் இந்த‌ 76பேர் விட‌ய‌த்திற்கு வ‌ருவோம். அவ‌ர்க‌ள் முன்னாள் புலிக‌ளாக‌ இருந்தால் கூட‌, அவ‌ர்க‌ளுக்கு அக‌தி அந்த‌ஸ்தோ, அர‌சிய‌ல் த‌ஞ்ச‌மோ கொடுப்ப‌தில் த‌வ‌றென்று எவ‌ரும் -முக்கிய‌மாய் ஆயுத‌ம் ஏந்திய‌ ம‌ற்ற‌ இய‌க்க‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌- கோர‌முடியாது. எனெனில் அவ‌ர்க‌ளும் இவ்வாறான‌ ஒரு நிலைப்பாட்டிலே ஈழ‌த்திலிருந்து வெளியேறி ப‌ல்வேறு நாடுக‌ளுக்குப் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள். அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தாலோ அல்ல‌து புலிக‌ள் மாற்று இய‌க்க‌ங்க‌ளைத் த‌டைசெய்து அழித்தொழிக்க‌ முய‌ன்ற‌போதோதான் வெளிநாடுக‌ளுக்கு வ‌ந்தவ‌ர்க‌ள். அவ்வாறு வ‌ந்த‌ இவ‌ர்க‌ள் கூட‌, இப்போது வ‌ந்திற‌ங்கிய‌வ‌ர்க‌ள் (ஒரு உதார‌ண‌த்திற்கு புலிக‌ளாய் இவ‌ர்க‌ள் இருந்தால்கூட‌) திரும்பி இல‌ங்கைக்குப் போவென்று கூறுவ‌த‌ற்கோ எழுவ‌த‌ற்கோ எத்த‌கைய‌ தார்மீக‌ உரிமையுமில்லை என்றே கூற‌வேண்டியிருக்கிற‌து.

அத்துட‌ன் க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் புலிக‌ளில் இருந்த‌ ப‌ல‌ர் அர‌சிய‌ல் த‌ஞ்ச‌ம் கோரிய‌து ஏற்க‌ன‌வே நிக‌ழ்ந்துமிருக்கிற‌து. இன்னும், டிபிஎஸ் ஜெய‌ராஜ் த‌ன‌து ப‌த்தியொன்றில் எழுதுவ‌துபோல‌ ச‌மாதான‌ கால‌ம் என‌ப்ப‌ட்ட‌ 2003-2005ல் நிறைய‌ப் புலிக‌ள் வெளிநாடுக‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தும் க‌வ‌ன‌த்திற்குரிய‌து. இப்ப‌டி எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ள் ஏற்க‌ன‌வே நிக‌ழ்ந்திருக்கும்போது நாம் இன்று க‌ப்ப‌லில் வ‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள் புலிக‌ளாய் இருந்தால் கூட‌ அவ‌ர்க‌ளை ம‌னிதாபிமான‌த்துட‌ன் க‌னேடிய‌ அர‌சு உள்வாங்க‌வேண்டுமென்று கோரிக்கை விட‌வேண்டுமே த‌விர‌, திருப்பி இல‌ங்கைக்கு அனுப்ப‌வேண்டுமென‌ இன‌வாதிக‌ளின் குர‌லில் நின்று பேச‌முடியாது.

.....

உண்மைக‌ளைப் பேசாவிட்டால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை. ஆனால் பொய்க‌ளை உண்மைக‌ள் போல‌ப் பேசாதிருந்த‌ல் முக்கிய‌ம். எங்க‌ளைப் போன்ற‌ 80க‌ளின் ச‌ந்த‌தியிற்கு தெரிந்த‌ ஒரு இய‌க்க‌மாய் புலிக‌ள் ம‌ட்டுமே இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளே எம‌க்கான‌ உரிமைக‌ளுக்காய்ப் போராடுகின்றார்க‌ள் என்ற‌ பெரும் ந‌ம்பிக்கை ப‌தின்ம‌வ‌ய‌துக‌ளில் இருந்த‌து என்ப‌தும் உண்மையே. அந்த‌ ந‌ம்பிக்கைக‌ள் எவ்வாறு தூர்ந்துபோயின‌ என்ப‌தை மிக‌த்தெளிவாக‌ தீப‌ச்செல்வ‌னின் 'உயிர்மை'த் தொட‌ர் பேசிக்கொண்டிருக்கிற‌து. ஆனால் புல‌ம்பெய‌ர்ந்த‌ ப‌ல‌ர் 'உண்மை' தெளிவாக‌த்தெரிந்த‌பின்னும், புலிக‌ள் இறுதிப்போரின்போது ப‌ல‌வ‌ந்த‌மாய்ப் பிள்ளைக‌ளைச் சேர்க்க‌வில்லை என்றும், கிளிநொச்சி இழ‌ப்பின்பின் ம‌க்க‌ளை மிக‌ மூர்க்கமாய் எதிர்கொண்ட‌ன‌ர் என்ப‌தையும் ஏற்றுக்கொள்ள‌த்த‌யாரில்லை. இன்று தீப‌ச்செல்வ‌ன் த‌ன‌து மூத்த‌ச‌கோத‌ரரைக் முக‌மாலைக் க‌ள‌முனையில் இழ‌ந்த‌ துய‌ர‌த்தோடுதான், த‌ன‌து 14 வ‌ய‌து த‌ங்கை க‌ட்டாய‌மாக‌ க‌ள‌முனையில் புலிக‌ளால் நிறுத்த‌ப்ப‌ட்டார் என்ப‌தை முன்வைத்து புலிக‌ளின் தார்மீக‌ அற‌ங்க‌ள் எவ்வாறு இழ‌ந்துபோயின‌ என்ப‌தை விம‌ர்சிக்கின்றார். அதும‌ட்டுமில்லை, த‌.அகில‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அனும‌திபெற்ற‌(?) த‌ன‌து த‌ம்பியை புலிக‌ள் க‌ட்டாய‌ ஆட்சேர்ப்பில் இணைத்துக் காவுகொடுத்த‌தை மிகுந்த‌ துய‌ர‌த்தோடு த‌ன‌து க‌விதையொன்றில் ப‌திவு செய்கின்றார். யாழ்ப்பாண‌த்தில் இருந்து எழுதுகின்ற‌ சித்தாந்த‌ன், திரும‌ண‌மான‌ த‌ன‌து ந‌ண்ப‌னும் இவ்வாறு க‌ட்டாய‌மாக‌ச் சேர்க்க‌ப்ப‌ட்டு க‌ள‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டுவிட்டார் என்ப‌தைப் ப‌திவுசெய்திருக்கின்றார். அவ்வாறில்லாது பேச்சுவாக்கில்..., இன்னும் வெவ்வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில்... இவ்வாறான‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டுக்கொண்டுதானிருக்கிற‌து. இன்னும் நூற்றுக்க‌ண‌க்கான‌ க‌தைக‌ள் பேசப்ப‌டாம‌லே புதைந்துபோயுமிருக்கும். புலிக‌ளின் இந்த‌த்த‌வ‌றுக‌ளே ‍அவ‌ர்க‌ளை ம‌க்க‌ளிட‌மிருந்து அந்நிய‌மாக்கி அவ‌ர்க‌ளின் வீழ்ச்சியை இன்னும் விரைவுப‌டுத்திய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும். அத‌ற்காய் புலிக‌ளின் த‌வ‌றுக‌ளால், ராஜ‌ப‌க்ஷே அர‌சு -புலிக‌ளை முன்வைத்து- செய்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளை மூடிம‌றைததுக்கொண்டிருக்க‌வும் முடியாது. ஒருவ‌ரின் த‌வ‌று இன்னொருவ‌ரின் த‌வ‌ற்றைச் ச‌ரியென‌ மாற்றிவிட‌முடியாது.

ம‌ற்றும்ப‌டி எந்த‌க் குற்ற‌த்தைச் செய்த‌வ‌ரும் அதை அனுப‌விக்கும் கால‌ம் என்றேனும் ஒருநாள் வ‌ந்துவிடும் என்ப‌தில் என‌க்குத் தீர்க்க‌மான‌ ந‌ம்பிக்கை உண்டு. அதேயே தான் இன்றைய‌ ப‌டுகொலைக‌ளின் கார‌ண‌மான‌ அனைவ‌ரும் என்றேனும் ஒருநாள் த‌ண்டிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கின்ற‌தென்று ந‌ண்ப‌ரொருவ‌ரிட‌ம் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் 'அவ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை கிடைக்க‌லாம், ஆனால் இன்று அப்பாவிக‌ளாய் இந்த‌ப் ப‌டுகொலைக்கு ஆளான‌வ‌ர்க‌ளுக்கு அத‌னால் என்ன‌ கிடைக்க‌ப்போகின்ற‌து?' என்று திருப்பிக் கேட்டார் ந‌ண்ப‌ர். உண்மைதான். அவ‌ர்க‌ளுக்குக் கொடுப்ப‌த‌ற்கோ சொல்வ‌த‌ற்கோ ந‌ம்மிட‌ம் எதுவுமில்லை. எனெனில் நாங்க‌ளும் ஏதோவொருவ‌கையில் இந்த‌க்கால‌த்தைய‌ குற்ற‌வாளிக‌ள்தான்.

Monday, October 12, 2009

வன்னி அகதிக்கு இந்த உலகில் என்ன இருக்கிறது?

நன்றி: காலச்சுவடு (ஒக்ரோபர்)

அன்பிற்குரிய கண்ணன்

இன்றுதான் குறித்த பதிவைப் பெற்று அனுப்ப முடிந்தது. செப்டம்பர் இதழுக்கு உங்களுக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன். இதை முகாமிலிருக்கும் நண்பரிடமிருந்து வாங்கிப் பெறுவதற்குள் பல்வேறு சிக்கல்கள். இதை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் பயணம்செய்வது முதல் ஸ்கான்செய்து அனுப்புவதுவரை எல்லாமே பாதுகாப்பற்றவையாக இருந்தன. சென்றமுறை இவற்றை டைப்செய்து அனுப்பலாம் என முயன்றதில் 25 பக்கங்கள்வரை முடிந்த வேளை எனது கணினி பழுதடைந்துவிட்டது. இம்முறை எனக்கு டைப் செய்யுமளவுக்கு மனநிலை இல்லை.

என் குடும்பமும் தடுப்பு முகாமில் வாழ்வதால் அவர்களைச் சென்று பர்வையிட நேர்ந்தது. அதனால் தான் இப்பதிவை வாங்கி அனுப்பத் தாமதமாகிவிட்டது. தடுப்புமுகாம்களில் இப்போதிருக்கிற நிலவரம் மிகவும் கொடுமையானதாயிருக்கிறது. அவற்றில் உள்ள பலருடன் கதைக்க நேருகையில் இன்னும் லட்சம் துயர் விரியும் கதைகள் இருப்பதைத்தான் புரிய முடிந்தது. இந்தப் பதிவுகள் மிகவும் முக்கிமானவை. பெயரின்றி இவை வெளிவருகிறதென்பதால் இதைப் பற்றிப் பலரும் வாய்க்குவந்தபடி கதைப்பார்கள். இந்தப் பதிவுகளை எழுதிவருபவருக்குப் பதிவு பற்றி எழுதப்பட்டிருக்கிற கருத்துகளைப் பிரதி எடுத்துக்கொடுத்திருக்கிறேன். உண்மையில் அவர் என்ன நினைக்கிறாரோ என்னவோ, எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. இந்தக் கடிதத்தையும் மிக அவசரமாக எழுதுகிறேன். அனுப்பிய முழுப்பக்கங்களும் கிடைத்தனவா என்பதை அறியத் தாருங்கள். நீங்கள் அனுப்பிய இரண்டு இதழ்களில் ஒன்றுதான் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

மிக்க அன்புடன்

******


29.08.2009

தென்னாசியாவிலேயே மிகப் பெரிய சேரி என்றால் நீங்கள் மும்பை என்று சொல்வீர்கள். மும்பை தாராவி சேரியில் விபச்சாரம் இருக்கும். வறுமையும் நாற்றமும் இருக்கும். அடிதடி, சண்டை, கொலை, வம்பு தும்பு என்று ஆயிரம் சங்கதிகள் இருக்கும். ஆனால் இதைவிட ஆசியாவிலே மிகப் பெரிய இரத்தம் நிரம்பிய சேரியாக, கொலையும் மரணமும் மலமும் கண்ணீரும் மிதக்கும் சேரியாக ஈழத்தில் புதுமாத்தளன் - முள்ளிவாய்க்கால் சேரி இருந்தது. இப்போது அது இடம்பெயர்ந்து, நிறம் மாறி மிகப் பிரம்மாண்டமான அகதிகள் முகாமாகியிருக்கிறது.
ஈழப் போர் என்பதன் மறு விளக்கம் அகதி உருவாக்கம் என்று கொள்ளலாம். முப்பதாண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக அகதிகளின் கதை நீண்டுகொண்டிருக்கிறது ஈழத்தில். தமிழகத்தில்கூடக் கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக ஈழ அகதிகளின் அறிமுகம் உண்டு. நான்காம் கட்ட ஈழப் போர் மற்ற எல்லாக் காலங்களையும்விட மிகவும் உச்சத்தில் கொலைப் பெருக்கத்தையும் அகதிப் பெருக்கத்தையும் கொண்டது. இது இறுதி யுத்தமல்லவா! எனவே அதற்குத் தகுந்த மாதிரியே அழிவும் துயரமும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த யுத்தத்தை இறுதி யுத்தம் எனப் புலிகளும் சொன்னார்கள். அரசும் சொன்னது. எப்படியோ இறுதி யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்களின் அகதி வாழ்வு முடியவில்லை. அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.

2006 ஓகஸ்டு 13இல் யுத்தம் தொடங்கியபோது வன்னிக்குள்ளேயே சனங்கள் இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இராணுவம் வேகமாக முன்னேறிப் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டபோது - குறிப்பாகக் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு - சனங்கள் ஈழப் போராட்டத்தில் முழுதாகவே நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். இதனால் அவர்கள் இராணுவத்திடம் செல்ல ஆரம்பித்தனர். முதலாவது பெரிய சனத்தொகையொன்று சனவரி 2009இல் இராணுவத்திடம் சென்றது. அப்போது இராணுவம் ஆனையிரவைக் கைப்பற்றிச் சுண்டிக்குளம் என்ற வடகிழக்குக் கடற்கரைவரை நகர்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து இராணுவத்திடம் செல்வோரின் தொகை அதிகரித்தது. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளால் நொந்தும் சலிப்புற்றும் கோபமடைந்தும் வெறுப்புற்றும் இருந்தவர்கள் இராணுவத்திடம் போய்க்கொண்டிருந்தனர். ஆனால் அப்படி இராணுவத்திடம் அவர்கள் செல்வது என்பது சாதாரணமானதல்ல. மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது உயிரைத் துச்சமெனக் கருதிக்கொண்டே இந்த இடமாற்றத்தை - இராணுவத்திடம் செல்வதை அவர்கள் செய்ய வேணும்.

முழு மரணப்பொறிக்குள் வீழும் செயல் இது. ஆனால் சனங்களுக்கு வேறு வழியில்லையே. இவ்வாறு இராணுவத்திடம் சென்ற மக்களைத் தம்மிடம் சரணடையும் மக்கள் என அரசாங்கம் அழைத்தது. போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்றனர் புலிகள். சனங்களுக்கோ இது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் உயிர் தப்ப வேண்டும். எனவே புலிகளின் தடையைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. அந்த மரணப் பொறியைக்கூட அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒன்று இராணுவத்திடம் தாமாகச் செல்வதால் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைக்கும், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தார்கள்.

வன்னிக் கிழக்கை இராணுவம் முழுதாகக் கைப்பற்றத் தொடங்கும்போது இந்த அகதிகள் அதிகளவில் இராணுவத்திடம் சென்றனர். அதுவரையிலும் வன்னியில் 80,000 மக்களே இருக்கின்றனர் என்று சொல்லிவந்த கொழும்பு அரசுக்கு அங்கிருந்து வந்துகொண்டிருக்கும் சனத்தொகை அதிர்ச்சியையும் சங்கடத்தையும் கொடுத்தது. 17, 18, 19, 20, 21, 22 ஏப்ரல் 2009இல் தான் மிகக் கூடுதலான மக்கள் (ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள்) இராணுவத்திடம் சென்றனர். இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையையே அரசாங்கம் செய்வதாகச் சொல்லப்பட்டது. அதாவது இந்த இராணுவ நடவடிக்கையை ‘மனித நேய நடவடிக்கை’ என்றே சிறிலங்கா அரசாங்கம் கூறியது. இப்படி இராணுவத்திடம் சென்ற மக்கள் இரண்டு வகையினர். ஒருசாரார் களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என்போர். அடுத்த வகையினர், கடல்வழியாகப் படகுகளில் சென்றோர். இவர்களில் படகுகளில் சென்றவர்களில் ஒரு தொகுதியினர் யாழ்ப்பாணம் சென்றனர். ஏனையோர் திருகோணமலைக்கு அருகில் உள்ள புல்மோட்டைக்குச் சென்றனர். யாழ்ப்பாணம் சென்றவர்கள் அங்கே பத்து வகையான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்குச் சென்ற அகதிகளின் தொகை 11,719 என்று அரசப் புள்ளிவிவரம் சொல்கிறது. ஏனையோரில் 6,000 பேர் வரையில் புல்மோட்டையில் உள்ளனர். மிச்சமுள்ள இரண்டு லட்சத்து எண் பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சனவரி 15 தொடக்கம் மே 20ஆம் திகதிக்குள் இவ்வளவு அகதிகள் இராணுவத்தின் வசமாயினர்.

2

யுத்தக் களத்திலிருந்து உருவாகும் ஒரு அகதி எப்படி இருப்பார்? யுத்தம் எல்லாவற்றையும் தின்றுவிடுவது. எனவே, உயிரை மட்டும் எப்படியோ காப்பாற்றிக்கொண்டு அல்லது தக்கவைத்துக்கொண்டு ‘தப்பினோம், அதுவே புண்ணியம்’ என்று ஓடிச் சரணடைந்தவர்கள். உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் இல்லாமல், எதையும் எடுத்துச்செல்ல முடியாமல் முகாம்களுக்கு வந்தவர்கள். இவர்கள் வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப்பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள். அப்படி வந்த மக்கள் முதலில் பள்ளிக் கட்டடங்களிலும் அரச விடுதிகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டார்கள். இதற்குள் முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சியோடு அழைத்துவரப்பட்ட மக்களின் நிலை வேறானது. அவர்கள் ஆண்கள், பெண்கள், இளவயதினர் எனத் தரம் பிரிக்கப்பட்டனர். புலிகளின் உறுப்பினர் என்று அடையாளம் தெரிந்தோர், சந்தேகத்துக்கிடமானோர் என்ற பிரிப்புத் தனி. அநேகமாக ஏப்ரல் 18, 19, 20, 21 தொடக்கம் மே 20 வரையான முக்கிய அகதிச் சரணடைவுகளில் இந்த மாதிரியே சனங்கள் தரம் பிரிக்கப்பட்டனர். இதனால் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. உறவுகளை இழந்த நிலையில் இந்தப் பிரிப்பு வேறு அவர்களைத் தாக்கியது. எனினும் படைத்தரப்பின் நடவடிக்கை என்பதால் யாரும் இது பற்றி மாற்று நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சிவில் அதிகாரிகள் வந்த மக்களைப் பதிவுசெய்து முகாம்களுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தனர். எதிர்பாராத அளவில் குவிந்துகொண்டிருந்த அகதிகளைப் பராமரிக்கக்கூடிய சிறு ஏற்பாடு தானும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. இதைவிடப் பாதுகாப்பு ஏற்பாடு, சந்தேகம் என்ற காரணங்களிலான இறுக்கமான நடைமுறை. இவற்றால் சனங்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பஸ் வண்டிகளில் இருந்து மூன்று நாட்களாக இறக்கப்படாமலே கொளுத்தும் ‘கத்திரி வெயிலில்’ அவர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். இதனால் பெருமளவு குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பவதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சனங்களின் இந்த அவல நிலை குறித்து இலங்கைத் தீவின் எந்த ஜனநாயக அரசியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை. இந்த மாதிரி அவலம் இலங்கைக்குப் புதிதல்லதான்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990இல் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டபோது, தென்னிலங்கையிலிருந்து 1956, 1977, 1983ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் விரட்டப்பட்டபோது, புலிகளால் தமிழ் மக்கள் யாழ் நகரில் இருந்து (வலிகாமம் இடப்பெயர்வு) 1995இல் வெளியேற்றப்பட்டபோது, மூதூர் யுத்தத்தில் 2006இல் முஸ்லிம்கள் அகதியானபோது என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் இந்த அகதிகளின் கதை வேறானது. இவர்கள் மிகக் கொடுமையான யுத்தக் களத்திலிருந்து அகதியானவர்கள். வவுனியாவில் நிரம்பிய இந்த அகதிகளுக்குக் குடிநீர், சாப்பாடு, மலசலக்கூட வசதியே இல்லாமலிருந்தது. சாப்பாட்டுப் பொதிகளை வீசும்போது அதைப் பெறுவதற்காக முண்டியடித்துச் செத்த கதையெல்லாம் உண்டு.

அகதிகளுக்கான முதற்கட்டப் பதிவுகள் நடந்த பின்னர் அவர்கள் முகாம்களுக்கு இடமாற்றப்பட்டனர். பல பள்ளிகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் அகதிகள் போக மிகுதி ஒன்றரை லட்சத்துக்கும் மேலானவர்கள் கதிர்காமர், அருணாசலம், இராம நாதன், ஆனந்தக் குமாரசாமி என்னும் பெரும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த முகாம்களின் பெயரைச் சற்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கதிர்காமர் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். அருணாசலமும் இராமநாதனும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரிட்டீஷார் காலத்தில் புகழோடு விளங்கிய சேர்பொன். இராமநாதன், சேர்பொன். அருணாசலம் என்னும் தமிழ்த் தலைவர்கள். (இருவரும் சகோதரர்கள்) அடுத்தது கலாயோகி ஆனந்தக் குமாரசாமி என்னும் கலை விற்பன்னர். இவர்களின் பெயரில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்தக் கிராமங்கள் ‘நிவாரணக் கிராமங்கள், நலன்புரி நிலையங்கள்’ என்றே கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவை தடுப்பு முகாம்களே!

இன்று ‘மெனிக்பாம்’ எனச் சொன்னால் உலகின் பெரும்பாலானவர்களுக்கு வவுனியா அகதி முகாம் அல்லது தமிழ் மக்களின் தடுப்பு முகாம் என்று தெரியும். ஒன்றரை லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் வெளியுலகத்திலிருந்து முற்றாகத் தடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரம்மாண்டமான முகாம் இது. மனித அவலம் எல்லைமீறியிருக்கும் இந்த முகாமின் கதையும் இந்த முகாம்களில் கண்ணீரும் கவலையுமாக வாழும் மக்களின் கதையும் சாதாரணமானவையல்ல.

எதற்காகத் தாம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்று இவர்களுக்குத் தெரியாது. எப்போது நாம் விடுவிக்கப்படுவோம் என்று தெரியாது. யார் தம்மை மீட்பார்கள் என்று தெரியாது. வெளியே விட்டால் எப்படி, எங்கே சென்று வாழ்வது என்று தெரியாது. இருக்கும் நாட்களில், முகாம்களில் அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியாது. இதைவிடத் தங்கள் குடும்பத்திலும் உறவிலும் யார் தப்பியிருக்கிறார்கள்? அவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள்? எல்லோரும் மறுபடியும் எப்போது ஒன்றுசேர்வது? யாருக்குக் கையில்லை, யாருக்குக் காது இல்லை, யார் பார்வை இழக்காமலிருக்கிறார்கள்? என எதுவும் தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களுக்கான ஒரு சிறு பதிலை, ஆறுதலை, நம்பிக்கையைத் தரக்கூடியவராக எவருமேயில்லை; எதுவுமேயில்லை.

வவுனியாவிலிருந்து தென்மேற்கே அமைந்துள்ள செட்டிகுளம் பகுதியிலேயே இந்தப் பிரமாண்டமான முகாம் உள்ளது. வவுனியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையை விட அங்கே இருக்கும் அகதிகளின் தொகை அதிகம். பொதுவாக வவுனியா இப்போது அகதிகளின் நகரமும் புறநகரமுமாகவே உள்ளது. கோடைகாலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடாக இருக்கும் இந்த நகரத்தில் மேலதிக மக்களை இவ்வளவு தொகையாக வைத்துப் பராமரிக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. எந்த வசதிகளும் கிடையாது. இந்த நிலையில் மேலும் இரண்டரை லட்சம் மக்களைக் கொண்டுவந்து இறக்கினால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள் அரச உயரதிகாரிகள். ஆனால் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சிவில் அதிகாரிகளுக்கு அறவே கிடையாது. அகதிகளைப் பொறுத்த எல்லா வகையான தீர்மானங்களும் நடவடிக்கைகளும் இராணுவத்துக்குட்பட்டனவாகவே இருக்கின்றன. எனவேதான் தொண்டு நிறுவனங்களின் பணி தொடர்பாகவும் ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சினைகளும் தொடர்ந்தபடியுள்ளன. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் என்றாலே இலங்கை அரசுக்குப் பெரும் தலையிடிதான். அதைவிட இராணுவத்துக்கு இந்த நிறுவனங்களை அறவே பிடிக்காது.

வவுனியாவில் இருக்கும் அகதிகளைப் பராமரிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த உருப்படியான திட்டமும் இல்லை. ஏன் இந்த அகதிகள் தொடர்பாக எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தேகப்படுவது, பழி வாங்குவது என்ற விவகாரங்களைத் தவிர.

ஏனென்றால், அகதிகள் தொகையாக வரத்தொடங்கியபோதெல்லாம் அவர்களுக்கான உணவு, குடிநீர், பொதுச் சுகாதாரம், மருத்துவம், தங்குமிடம், அவசரத் தேவைகளுக்கான உதவிகள் என்பவற்றையே செய்ய முடியாமல் திணறியது அரசு. இலங்கையின் ஊடகங்கள் பலவற்றிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் எந்தக் கவனத்தையும் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி அது அக்கறையெடுத்திருந்தால் பின்னர் வந்த அகதிகள் ஓரளவுக்கேனும் சீரான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பார்களல்லவா! அதுமட்டுமல்ல, இப்போது முகாம்களிலுள்ள அகதிகளில் 5 மாதத்தைக் கடந்தவர்கள் முதல் மூன்று மாதங்கள் நிறைவானவர்கள்வரை இருக்கின்றனர். முகாம்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள்கூடச் சீர்செய்யப்படவில்லையே என எந்தத் தேவைக்கும் யாரிடமும் முறையிட முடியாது. அப்படிக் கண்டுபிடித்து யாரிடமாவது முறையிட்டாலும் எந்தப் பலனும் கிடையாது. அப்படியொரு அமைப்பு முறை இந்த முகாம்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது உணவுக்கே நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் பின்னடிக்கின்றன.
ஐ.நா. சாசனத்தில் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த உரிமைகளும் இந்த அகதிகளுக்கு வழங்கப்படவில்லை. இவர்கள் விசாரணையில்லாத அரசியல் கைதிகளாகவே தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த ஒரே காரணத்துக்காக இவ்வாறு இவர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

இலங்கை அரசியலில் பொதுவாக மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலைமையே இன்றும் உள்ளது. ஊடகச் சுதந்திரம், சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், அரசியல் உரிமை களுக்கான போராட்டங்கள் வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் நடந்துவருகின்றது. அவசர காலச் சட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரப்படும் நாடு இலங்கை. ‘தேசியப் பாதுகாப்பு’ என்பது முதன்மையாக்கப்பட்டு அதன் பேரால் எல்லாவகையான கேள்விகளும் நியாயமான கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டுவிட்ட சூழல். இந்தப் பின்னணியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த மக்கள் சந்தேகத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதற்கு நல்ல உதாரணங்கள் சிலவுண்டு.

1. இந்த மக்களுக்கும் (அகதிகளுக்கும்) பிறருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. எல்லாமே தடுக்கப்பட்டுள்ளன. யாரும் இவர்களை வந்து சந்தித்துப் பேச முடியாது. இவர்களும் வைத்தியத் தேவை தவிர வெளியே எந்தக் காரணத்தைக் கொண்டும் செல்ல முடியாது.

2. முட்கம்பி வேலி, மண் அணைகள், தடுப்பு வேலிகள் என்பவற்றுக்குள்ளேயே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றிவர மின்சார விளக்குகள் பொருத்தப்பட்ட வெளிச்ச வேலி வேறு. காவல் கடமையில் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர்.

3. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொலைபேசித் தொடர்பு. மற்றும்படி வெளியுலக ஊடகத் தொடர்புகள் கிடையாது. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி கிடையாது.

4. தொடர்ச்சியான பதிவுகள் - தரவுகளை மீள் மதிப்பீடு செய்யும் வகையிலும் உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலுமாகத் தொடர்ச்சியாகத் தரப்பு மாறித் தரப்பு என மேற்கொள்ளப்படும் பதிவுகள்.

5. கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே உணவு வழங்கப்படுகிறது. பொதுச்சமையல். ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு சமையல் எனக் குழுக்குழுவாகப் பிரிக்கப்பட்டுச் சமையல் நடக்கிறது. சத்துள்ள உணவு கிடையாது. ‘மணி அடித்தால் சோறு’ என்பார்களே அதுபோலவே இங்கும் மணி அடிக்கும்போது சாப்பாட்டுத் தட்டுடன் வரிசையில் அணிவகுத்துக் காத்திருக்கின்றனர் சனங்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள், குழந்தையைப் பிரசவித்த தாய்மார், முதியோர், நோயாளிகள் என எந்த வேறுபாடுகளும் இல்லாத பொதுச் சமையல்.

6. தவிர, தங்குமிடத்தில் உள்ள வசதிக் குறைபாடுகள் மனித வாழ்க்கையில் எந்தவகையிலும் சமாளித்துக்கொள்ள முடியாதவை. தொழுவங்களில் என்னதானிருக்கும்? ஹி.ழி.பி.சி.ஸி. மூலம் வழங்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் மழைக்கும் வாழ முடியாது. வெயிலுக்கும் சமாளிக்க முடியாது. அதைவிட இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடம் புதிதாகக் காடுவெட்டி உருவாக்கப்பட்ட பிரதேசம். ஏற்கனவே நீர் வசதி குறைவான இடம். பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்காக இவ்வாறு திட்டமிட்டுப் புதிய பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கட்டுமான வசதிகள், அடிப்படை வசதிகள் இங்கே இல்லை. ஸ்ராலின் காலத்தில் சைபீரியாவில் கைதிகளையும் சந்தேகத்துக்குரியவர்களையும் வைத்திருந்ததைப் போலவே இங்கும்.

கொளுத்தும் வெயிலில் ஒரு பொட்டு நிழல் இல்லாமல் தத்தளிக்கின்றனர் எல்லோரும். இப்போது மழையில் முழு இடமும் வெள்ளக் காடாகிவிட்டது. சேறும் சகதியுமாகவே எல்லாம் மாறிவிட்டன. இவ்வளவுக்கும் பருவ மழை இன்னும் தொடங்கவில்லை. கோடை மழைக்கே இப்படியென்றால் மாரியில் நிலைமை எப்படியிருக்கும்? மலசலக்கூடம், குடிநீர் வழங்கிகள் எல்லாம் ஒன்றாகிவிட்டன. தொற்றுநோய் அபாயம் மிகப் பயங்கரமாகச் சூழ்ந்துள்ளது. ஆனால் இந்த மக்களை இப்போதைக்கு மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க உட்படப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முதல் சேனாதிபதியின் சகோதரனுமான கோத்தபாய ராஜபக்சே, முன்னாள் இராணுவத் தளபதியும் இப்போதைய முப்படைகளின் அதிகாரியுமான சரத்பொன் சேகாவரை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் உண்மையில் கைதிகள் போலவே நடத்தப்படுகின்றனர். சமையல், துப்புரவுப் பணிகள் என்று தொடங்கி இராணுவத்தினரால் கட்டளையிடப்படும் அத்தனை வேலைகளையும் செய்தாக வேண்டும். ‘உடனே, உடனடியாக’ என்ற உத்தரவு வேறு. ஆனால் இந்த மக்கள்மீதான எந்த நேரடி வன்முறையும் பாலியல் சேட்டைகளும் கிடையாது. மகிந்த ராஜபக்சேவின் காலத்தில் இராணுவம் பல நிலைகளிலும் சீராக்கி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு நண்பர் சொன்னதைப் போலக் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பனவற்றில் படைத் தரப்பு இறுக்கமாகவே உள்ளது. இதுவரையில் இந்த மூன்று லட்சம் வரையான அகதிகளிடத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் வரவில்லை. மற்றபடி இராணுவமும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுமே இந்த முகாம்களை நிர்வகிக்கின்றன. ஒப்புக்கு சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடம் எந்த அதிகாரமும் கிடையாது.

தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானதே. இதில் இரண்டு வகையுண்டு. ஒன்று சர்வதேசத் தொண்டு அமைப்புகள். மற்றது உள்ளூர்த் தொண்டு அமைப்புகள். எந்தத் தொண்டு அமைப்புகளும் தங்கித் தமது பணிகளைச் செய்ய முடியாது. எந்தத் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த அகதிகளுடன் பேசுவதில்லை. அப்படிப் பேசிக்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதியும் கிடையாது. தவிரவும் சிலவேளை இந்த மக்கள் தாமாக முன்வந்து ஏதாவது தமது தேவைகளைப் பற்றியோ தமது உணர்வுகளைப் பற்றியோ கதைக்க முற்பட்டால் வேண்டாம் சாமி, ஆளைவிட்டால் போதும் என்று ஓடிவிடுகிறார்கள். தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் தமிழ் ஊழியர்களே இதில் கூடுதலாகப் பயப்படுகிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பொதுவாகத் தொண்டு அமைப்பின் ஆட்கள் ஏன் இந்தச் சனங்களோடு கதைப்பதில்லையென்றால், அவ்வாறு தொடர்புகொண்டால் அது அரசியல் விவகாரமாகி, நாம் இப்போது செய்துவரும் தொண்டுகளையும் செய்ய முடியாமல் போய்விடும்; அரசு அனு மதியை மறுத்துவிடும் என்ற காரணம். அடுத்தது, உள்ளூர் ஆட்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஏன் கதைக்கத் தயங்குகிறார்கள் என்றால், வன்னியிலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்பதால், இவர்கள் புலிகளாகவோ புலிகளுடன் தொடர்புள்ளவர்களாகவோ இருக்கலாம் அல்லது அப்படி அரசாங்கத்தால் சந்தேகிக்கப்படலாம். இவர்களுடன் கதைத்து எதற்காகத் தமது வேலையை இழக்க வேண்டும். வீண் சிக்கல்களில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற அச்சம்.

இது வவுனியாஅகதி முகாம்களில் மட்டுமல்ல, யாழ்ப்பண முகாம்களிலும்தான். முகாம்களுக்கு வெளியிலும் சனங்கள் இந்த மக்களோடு கதைப்பதற்கும் பழகுவதற்கும் தயங்குகிறார்கள். சிலர் மிகுந்த அனுதாபத்தோடும் கருணையோடும் அன்போடும் பழகுவதும் உதவுவதும் உண்டு. குறிப்பாக மருத்துவமனைகளில் இந்தமாதிரி உதவுகிறார்கள். மருத்துவர்களும் தாதிகளும் பிற ஊழியர்களும் மிகவும் இரக்கமாகவும் உதவியாகவும் நடந்துகொள்கிறார்கள். எல்லோருக்கும் தனி நாடு வேணும், தமிழ்த் தேசியம் வேணும். போராட்டம் வேணும். அதற்கான போரும் தேவை. ஆனால் அதிலே பாதிக்கப்பட்ட மக்களுடன் தமக்குத் தொடர்பு இருக்கக் கூடாது. உதவுவதாகவும் தெரியக் கூடாது. இதுதான் உண்மைநிலை. இந்த மனப்பாங்குதான் தமிழ் அரசியலின் பின்னடைவுக்கும் இந்த மக்கள் இப்படித் துன்பப்படுவதற்கும் காரணமானது.

இதுவரையில் இந்த மக்களை வந்து பார்வையிடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட முன்வரவில்லை. அரசாங்கம் தம்மை அனுமதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். ஆனால் தனிப்பட்டதொரு உரையாடலின் போது இந்த நாடாளுமன்ற உறுப் பினர்களில் சிலர் சொன்னார்கள், ‘வேண்டுமென்றால் நீங்கள் இந்த முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கலாம்’ என்று ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக. ஆனால் கட்சியின் நிலைப்பாடு வேறாக இருப்பதால் தம்மால் தனியே முடிவெடுக்க முடியாமலிருக்கிறோம் என்று. இதைவிடவும் இன்னொரு விசயத்தையும் இங்கு நாம் நோக்க வேண்டும். ஒரு நண்பர் சொன்னதைப் போல, ‘இந்தியா தம்மையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதித் தீர்வுத் திட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், முதலில் அகதி முகாம்களுக்கு நேரில் சென்று மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்கும் உதவுவதற்கும் எதற்காக இவர்கள் இந்தியாவின் உதவியை நாடவில்லை? இந்தியா ஏன் இவர்களுக்கான அனுமதியை இலங்கை அரசிடம் பெற்றுக் கொடுக்கவில்லை?’ என்பது

இந்த மக்களின் நிவாரணப் பணிகளுக்காகவும் மீள் குடியேற்றத்துக்காகவும் சர்வதேச நாடுகளும் நாணய நிதியமும் பெருமளவு நிதியை இலங்கை அரசுக்குக் கொடுத்து வருகின்றன. இந்தியாகூட 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால் இங்கே நிவாரணப் பணிகள் செம்மையாக நடக்கவில்லை. உழைப்பு, வருமானம் எதுவுமில்லாமல் இருக்கும் இந்த மக்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவைப் போல வழங்கப்படும் உணவைத் தவிர வேறு எதுவும் இல்லாதபோது இவர்களால் எப்படி வாழ முடியும்? குழந்தைகள், சிறுவர்களுக்கான தேவைகள் பிரத்தியேகமானவை. அதேபோலக் கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோரின் தேவைகளும். வன்னியில், யுத்தத்தின் போது சகலத்தையும் இழந்து, அங்கே வாழ்வதற்கும் சாப்பிடுவதற்கும் வழியற்றிருந்த மக்கள் எந்த வகையிலும் ஆறுதல்படுத்தப்படவில்லை. சிறு அளவிலேனும் மீள்நிலைப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் உணவு, குடிநீர், மருத்துவம், மலசலக்கூட வசதி போன்ற பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கீதிறி (உலக உணவுத் திட்டம்) ஹிழிபிசிஸி (அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு) மிசிஸிசி, சிணீக்ஷீமீ, திஷீக்ஷீutமீ, ளிஜ்யீணீனீ, ழிஸிசி, ஞிஸிசி போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் அரசாங்கம் அடிக்கடி முரண்பட்டுக்கொள்கிறது. இவற்றின் பணிகளுக்குக்கூடப் பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

முகாம்களின் நிலைமையோ மாட்டுத் தொழுவங்களையும்விட மோசமாக உள்ளது. சனங்களோ ஒட்டியுலர்ந்து எலும்பும் தோலும் என்று சொல்வார்களே அப்படி இருக்கிறார்கள். ஆதிவாசிகள், வேடுவர்கள்போலப் பரட்டைத்தலை, தாடி, அழுக்கு என்று பார்ப்பதற்கே சகிக்க முடியாத தோற்றத்திலுள்ளனர். இவ்வளவுக்கும் இவர்கள் ஒருபோதும் இப்படி வாழ்ந்ததில்லை. முகத்தில் தீராத கவலை. எதிர்காலம் பற்றிய சிறு நம்பிக்கைகூட இந்தக் கண்களிடம் இல்லை. எல்லாவற்றாலும் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டதாகவே, கைவிடப்பட்டதாக« இவர்கள் தங்களைக் கருதுகின்றார்கள். ஏனெனில் ஜப்பானியத் தூதுவர் யஸாஸி அகாஸி, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மிலிபான், பிரெஞ்சுத் தூதுவர், அமெரிக்க வெளியுறவுத் துறை உதவி அதிகாரி ஐ.நா.வின் செயலர் பாங்கி மூன் எனப் பலர் இந்த முகாம்களுக்கு வந்து சென்ற பின்னரும் நிலைமையில் எந்தக் குறிப்பிடும்படியான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேபோல, மீள்குடியேற்றம் பற்றிச் சர்வதேச அமைப்புகள் மனித உரிமையாளர்கள், சர்வதேச நாடுகள் எனப் பலதரப்பும் வலியுறுத்தி வருகின்றபோதும் அது பற்றி அரசாங்கம் சிந்திப்பதாகத் தெரியவில்லை. புலிகளிடமிருந்து இந்த மக்களைத் தாம் மீட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கத்தின் ஜனாதிபதியோ பிரதமரோ இந்த மக்களை ஒரு தடவையேனும் நேரில் சென்று பார்வையிடவில்லை. அவர்களிடம் உரையாடவும் இல்லை. புலிகளால் தடுக்கப்பட்ட மக்கள் கட்டாயமாகப் பயிற்சிக்குள்ளாக்கப்பட்டுப் போர் நடவடிக்கைகளில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட மக்கள், அப்பாவிகள் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கூறிப் பெரும் பரப்புரை செய்த அரசாங்கம் இப்போது இவர்களைக் குற்றவாளிகளாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் தண்டனைக்குரியவர்களாகவும் பார்க்கின்றது. அதனாலேயே இந்தத் தண்டனைகள், இந்தத் தனிமைப்படுத்தல்கள், இந்தச் சிறைவைப்பு, இந்த வஞ்சனை எல்லாம்.

சர்வதேவ அமைப்புகளின் உதவிப் பணிகள் தற்காலிகமான ஏற்பாட்டைக் கொண்டவை. மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்குரிய வகையிலானவை. ஏனென்றால் இந்தக் காலப் பகுதிக்குள் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். ஆகவேதான், அதை விரைவுபடுத்துவதற்காகத்தான் இவ்வளவு காலத்துக்கான ஏற்பாடுகள் என்கின்றனர் தொண்டு அமைப்பினர். ஆனால் அரசாங்கமோ மீள்குடியேற்றம் பற்றிய பேச்சை எடுக்க விரும்பவேயில்லை. சர்வதேச நெருக்குவாரங்களைச் சமாளிப்பதற்காக 180 நாள் திட்டத்தில் மீள்குடியேற்றம் நடக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சொல்லியிருக்கிறார். கண்ணிவெடிகள் அகற்றப்படுவதில் இன்னும் பெரிய தடைகள் உள்ளதாகவும் புலிகளின் ஆயுதக் கிடங்குகளை முழுமையாகத் துப்புரவுசெய்யும்வரையில் மீள் குடியேற்றத்துக்குச் சாத்தியமில்லை என்றும் பாதுகாப்புத் தரப்பினரும் அமைச்சர்களும் சொல்கிறார்கள். இலங்கையைப் பொறுத்து இப்போது பாதுகாப்புத் தரப்பே சகலத்தையும் தீர்மானிக்கும் ஆற்றலோடு இருக்கின்றது. தேசியப் பாதுகாப்பு என்பதன் பேரால் பாதுகாப்புத் தரப்பு முழுமையாக அதிகாரத்தைச் சுவீகாரம் பண்ணிவைத்திருக்கின்றது. ஜனாதி பதிக்குச் சமதையாக இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர். ஒருவர் கோத்தபாய ராசபக்சே மற்றவர் மற்றவர் பஸில் ராஜபக்சே. இந்த இருவரும் ஜனாதிபதியின் சகோதரர்கள். பாதுகாப்பு விவகாரங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பவர்கள்.

மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான சித்திரம் அரசிடம் இல்லை என்பதற்குப் போதுமான ஆதாரம், இந்த முரண்பட்ட கருத்துகள் மட்டுமல்ல இன்னும் ஒருமாதமேயுள்ள நிலையில் அதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதும். உண்மையில் கண்ணிவெடிகள் இல்லாத பகுதிகளாகவும் அழிவுகள், சேதங்கள் குறைந்த பகுதிகளாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ள பிரதேசங்களிலாவது இந்த மக்களை அரசாங்கம் குடியமர்த்தலாம். ஆனால் அதற்கு அது மறுப்புத் தெரிவித்தே வருகிறது. இப்போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நிரந்தர முகவரியைக் கொண்ட ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் விடுவிக்கப்பட்டபோது எந்தச் சிறு உதவியும் அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. வெறுங்கையுடன் இந்த மக்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்கள் எங்கே செல்வது? இவர்களுக்குச் சொந்த வீடு இருக்கிறதா? தொழில் வாய்ப்புகளை எப்படி ஏற்படுத்திக்கொள்வது? வருமானம் என்ன? என எதைப் பற்றியும் சிந்திக்காமல் இந்த மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நிவாரண வசதிகள்கூட இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தடுப்பு முகாம்களிலிருந்து தப்பினால் போதும் என்ற தவிப்புடன் இருந்ததால் ‘தப்பினோம் பிழைத்தோம்’ என்று மக்கள் வெளியேறினார்கள். ஆனால் யுத்தத்தினால் முழுதாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான இந்த மக்களை இப்படி வெளியே அனுப்பியது மகா கொடுமை. இது பற்றி எந்த அரசியல் கட்சியும் எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை. இந்த மக்களின் விடுவிப்பை அரசாங்கம் மிகப் பிரமாண்டமாகச் செய்து தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டது.

வெளியே சென்றவர்கள் மொத்தம் நான்காயிரத்துக்கு உட்பட்டவர்களே. மிகுதி மூன்று லட்சம்பேர் முகாம்களில்தான். தற்காலிக ஏற்பாடுகளின் மூலம் இந்த மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள் ஒரு திசையிலும் அரசாங்கம் இன்னொரு திசையிலுமாக நிற்கின்றன. பாதிக்கப்படுவது மக்கள் தான். இது பற்றிச் சில தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வலிந்து பேச முற்படும்போது அவர்கள் அதிகாரத்தோடு பொறுப்பற்ற பதில்களையே சொல்கிறார்கள். ‘இதற்குமேல் எதையும் நம்மால் செய்ய முடியாது, மேலிடத்து உத்தரவு’ என்கிறார்கள்.

யுத்தம் முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எம்மைப் பொறுத்தவரை அது தொடர்வதாகவே கொள்ள முடியும். குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் உண்டு. இன்னும் இந்தச் சனங்கள் எந்த வன்முறையிலிருந்தும் மீளவில்லை. எந்த வலியிலிருந்தும் விடுபடவில்லை. யாராவது வந்து இந்த முகாம்களைப் பார்த்தால் புரியும். இந்தக் கூடாரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியுடையனவா என்று. இந்த மக்கள் மனிதர்களா என்று. அப்படி மனிதர்களுக்குரிய சாயல் ஏதும் இவர்களிடம் உண்டா என்று. முழு உலகத்தினாலும் வஞ்சிக்கப்பட்டு, எல்லாவகையான அரசியலுக்கும் பலியாடப்பட்ட பின்னர் நிர்க்கதியான நிலையில் தண்டனைக் கைதிகளாக்கப்பட்டிருக்கும் இவர்கள் இன்றைய உலகின் மனசாட்சி எவ்வளவு சொத்தையும் நஞ்சூறியது மாக இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி.

யுத்தம் நடந்தபோது அதிலிருந்து மீண்டுகொள்வதற்காக இவர்கள் சர்வதேசச் சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்தார்கள். ஏன் இந்தியாவின் ஆதரவைக்கூட முழுதாக எதிர்பார்த்து நம்பியிருந்தார்கள். யுத்த நிறுத்தம் வரும் என்று பார்த்தது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடமிருந்தும் பாதுகாப்பாகத்தாம் வெளியேறுவதற்கோ அல்லது மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தம் - கண்காணிப்புடன் ஒரு பாது காப்பு வலயத்தில் இருப்பதற்கோ சர்வதேசச் சமூகத்தினதும் இந்தியாவினதும் ஏற்பாடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது எதுவுமே இவர்களுக்குச் சாதகமாகக் கிடைக்கவில்லை. இப்போதாவது சர்வதேசச் சமூகத்தினதும் இந்தியாவினதும் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு குறைந்த சதவீதத்தினரிடமே உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏனெனில் கடந்த சந்தர்ப்பங்களில் அப்படி இந்தத் தரப்புகளிடம் நம்பிக்கைவைத்து ஏமாந்துவிட்டனர் இவர்கள். புலிகளை அழிப்பதற்கு முழு உலகமும் ஓரணியில் திரண்டு நிற்கின்றது என்பதும் யுத்தத்தை நடத்துவதே இவர்கள் எல்லோரும்தான் என்பதையும் ஒரு கட்டத்தில் நன்றாகப் புரிந்துகொண்டனர். ஆனாலும் மக்களை எப்படியாவது பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை இவை செய்யக்கூடும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நடைமுறை நிகழ்ச்சிகள் உலக அரசியல் என்ன, எப்படியானது, எதன்பாற்பட்டது, எதற்கானது, யாருக்கானது என்பதை இவர்களில் பெரும்பாலானோர் புரிந்துகொண்டனர். அந்த அனுபவமே இவர்களில் அநேகரிடம் பல புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. அனுபவத்தை விடவும் சிறந்த பாடங்கள் வேறில்லை என்பார்கள். எனவேதான் இந்தியா குறித்தும் பிற சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மேற்கு நாடுகள் குறித்தும் தமிழ்த் தேசியம் குறித்தும் இவர்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்த முகாம்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக இதுவரையில் வெளியுலகத்தினால் எந்த உருப்படியான காரியத்தையும் செய்ய முடியவில்லை. சிறுவர் உரிமைகள், பெண்ணுரிமைகள், மனித உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள் என எவ்வளவோ விசயங்களைச் சாசனப்படுத்தியிருக்கும் இந்த மாண்புடைய உலகத்தினால் இந்த அகதிக்கைதிகள் விடயத்தில் எதையும் செய்ய முடியவில்லை. மீள்குடியேற்றத்தை வலியுறுத்துகின்றன அமெரிக்காவும் இந்தியாவும் யப்பானும் இன்னும் பல நாடுகளும். அதேபோல பல அமைப்புகளும். ஆனால் இவை வெளியே இவ்வாறு கோரிக்கைகளை விடுக்கின்றனவே தவிர, உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடவேயில்லை. அதிகம் ஏன்? யுத்தத்தின்போது அல்லது இப்போது அகதிமுகாம்களில் மக்கள் துயரப்படும் இந்த நிலையிலே இந்திய மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பிரதானிகள் யாரும் வந்து எந்த நடவடிக்கையையும் துரிதப்படுத்த முயலவில்லை. பதிலாக எல்லோரும் அரசாங்கத்துக்கு அன்பாணைகளைச் செல்லமாக விடுக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கமோ வன்னியிலிருந்து வந்த அனைவரையும் புலிகள், புலிகளுடன் இருந்தோர், புலிகளுக்கு ஆதரவளித்தோர் என்றே பார்க்கிறது. அதனால் இவர்களை வெளியே நடமாட அனுமதிப்பது ஆபத்தானது என்று சொல்கிறது. இதே வேளை மீள்குடியேற்றம் நடைபெறும் என்று கதைப்பதும் நடக்கிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 4000 வரையான மக்கள் யாழ் - வவுனியா மாநகரசபை சீதர்சன் பிரட்சம நட வடிக்கைகளுக்காகவே என்றே தோன்றுகிறது. எனவே எந்த வகையிலும் இந்த மக்களின் மீட்சிக்கு யாரும் உதவுவதாக இல்லை. மெய்யாக நடந்துகொள்வதாகவும் இல்லை.

தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள்கூட இந்த பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிய அளவுக்கேனும் நடைமுறைச் சாத்தியமான அளவில் உதவுவதற்குச் சிந்திப்பதாக இல்லை. இங்கே முகாம்களிலிருந்து நாம் அறிகின்ற அளவுக்குத் தமிழக அரசோ தமிழக மக்களோ தமிழக அமைப்புகளோ புலம்பெயர் மக்களோ அமைப்புகளோ புத்திபூர்வமாகச் சிந்திப்பதாகவும் செயல்படுவதாகவும் இல்லை. அவர்கள் இன்றும் தினவெடுக்கும் தமிழ்த் தேசியம் பற்றி - அந்தச் சொத்தை அரசியல் பற்றியே கதைக்கிறார்கள்; கதைவிடுகிறார்கள். தமிழ்த் தேசியம் என்பதை இங்கே நாம் எப்படி விமர்சிக்கிறோம் என்பது கவனத்திற்குரியது. நமது தமிழ்த் தேசியம் என்பது உண்மையில் தலிபான்களின் சிந்தனைக்கு ஒப்பானதாகவே உள்ளது. அதில் பன்மைத்துவத்துக்கு இடமில்லை. ஜனநாயகத்துக்கும் விமர்சனத்துக்கும் இடமில்லை. அது ‘இனமானம்’ என்று இனவாதம் நிரம்பியதாகவே உள்ளது. இந்தக் குறைபாட்டால்தான் அரசியல்ரீதியாக எந்த வெற்றிப் புள்ளிகளையும் தொட முடியவில்லை. வெறும் உணர்ச்சிப் பெருக்கில் முஷ்டியை முறுக்கிக் குத்தலாம்; தொண்டை கிழியக் கத்தலாம். பிறரை வசைபாடலாம், திட்டலாம். அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் இந்தத் தரப்புகளின் ஆவேசப் பேச்சுகளும் விவேகமற்ற நடவடிக்கைகளும் எங்களையல்லவா சிறைப்படுத்துகின்றன. வன்னியில் - புலிகளின் பிடியிலிருந்தபோதும் நாங்களே துன்பப்பட வேண்டியிருந்தது. இப்போது அரசின் பிடியில் இருக்கும் போதும் நாமே துன்பப்படுகின்றோம்.

புதுமாத்தளன், வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்ததைப் போல, அவலப்பட்டதைப் போலவே இங்கும் நாம் வெளியேறும் வழியில்லாமலிருக்கிறோம். அங்கே உயிருக்கு உத்திரவாதமில்லாத சூழல். சாப்பாட்டுக்குக் கெதியில்லை. ஆனால் இங்கே அதற்கெல்லாம் பிரச்சினையில்லை. ஏனையவையே - வாழும் உரிமை - நடமாடும் சுதந்திரம் இங்கே பிரச்சினை.

உண்மையில் எங்கள் பிரச்சினையில் தனியே இலங்கை அரசாங்கம் மட்டும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை. எங்களின் துன்பங்களுக்குப் பரிகாரமாக ஏதோ நன்மை செய்கின்றோம் என்று நினைத்துக்கொண்டு எதிர் மாறான விளைவுகளை உருவாக்கும் ‘தமிழீழக் கனவு’வாதிகள் கொஞ்சம் அமைதியாக இருந்தால்போதும். இதை மன்றாட்டமாகவும் உருக்கமாகவும் கேட்கின்றோம். யதார்த்த நிலை புரியாமல் வெளியுலகில் நடத்தப்படும் இந்த மாதிரி நடவடிக்கைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் விடப்படும் அறிக்கைகளும் இந்த மூன்று லட்சம் மக்களின் கழுத்திலேயே சுருக்காக விழுகின்றன.

ஏற்கனவே தமிழ் அரசியல் தீர்மானங்கள் பிழைத்துவிட்டன. அவற்றின் விளைவுகளை இப்போதும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். இதற்குள் மீண்டும் பிழையான அணுகுமுறைகளும் நடவடிக்கைகளுமா? அதற்கு வன்னி மக்கள்தான் வாய்த்தார்களா? பிரபாகரன்மீதான கோபத்திற்கும் புலிகள் மேலான அச்சத்திற்குமாக இந்தச் சனங்களை இலங்கை அரசு இப்படி வைத்திருக்கிறது என்பதை வேண்டுமானால் உலகத்துக்கும் இலங்கை அரசுக்கும் தெளிவுபடுத்தலாம். எதுவாயினும் முதலில் இந்தச் சனங்களை விடுவிப்பதற்கான உபாயங்கள் குறித்தே சகலமும் சிந்திக்க வேண்டும். எதிர்ப்பு அரசியல் இப்போதைக்குச் சாத்தியமில்லை.

22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் பெறுமானம், புலம் பெயர் மக்களின் ஆதரவு, தமிழக மக்களின் எழுச்சி, விடுதலைப் புலிகளின் போர், அதற்கான ஆயுதங்கள், படையணிகள் எல்லாமிருந்தும் சிறிலங்கா அரசாங்கத்தை வெல்ல முடியவில்லை. இப்போது எல்லோரும் வெறுங்கையுடன் நிற்கிறோம். இந்த நிலையில் வெறும் வாய்ப் பேச்சும் வெற்று அறிக்கைகளும் இந்த மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கே கொண்டு போகும். ஆகவே புத்திபூர்வமான சிந்தனையும் செயல்பாடுமே முக்கியமாகும்.

தோற்கடிக்கப்பட்ட மக்களாக, வாழக் கடினமான மக்களாக (வாழ்வதற்குக் கதியற்றவர்களாக) நிலைகுலைந்திருக்கும் இந்த மக்கள் இன்று உலகத்தின் நவீன இரும்புத் திரைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள். எதற்காக இப்படியெல்லாம் நாம் பழிவாங்கப்படுகிறோம், எதற்காக இந்தப் பலியிடல்கள்? யாருக்காவது இது பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள். ஒரு வழி சொல்லுங்கள்.

இந்த உலகத்தில் எத்தனையோ சாலைகள் உண்டு? ஆனால் ஒரு தெருவிலும் நடப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை. இந்தப் பூமியெங்கும் ஏராளம் உறவுகளும் உரித்தாளர்களும் உள்ளனர். யாரோடும் நாம் சொந்தங்கொண்டாட வழியில்லை. சூரியன் வருகிறது, போகிறது. இரவும் பகலும் வந்துபோகின்றன. ஆனால் நாளோ திகதியோ எமக்குத் தெரிவதில்லை. எல்லா வாசல்களும் மூடப்பட்டு எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட தகவல் யுகத்தின் மனிதர் நாம். வன்னி அகதிக்கு இந்த உலகில் என்னதான் இருக்கிறது?

Tuesday, October 06, 2009

சுட‌ருள் இருள்: நிக‌ழ்வு - 02

சுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02

திரைப்ப‌ட‌ம்:
The Boy in the Striped Pyjamas

க‌விதைத் தொகுப்புக‌ள் திற‌னாய்வு:
பெண்ணியாவின் 'இது ந‌தியின் நாள்' - நிவேதா
ம‌ல‌ராவின் 'புதிய‌ இலைக‌ளால் ஆத‌ல்' - த‌ர்ச‌ன்

சிறு அறிமுக‌ம்:
'உன்ன‌த‌ம்' / 'நூல‌க‌ம்' - சுத‌ன்

புனைவிலிருந்து சில‌ பக்க‌ங்க‌ள் வாசிப்பு:
'வேருல‌க‌ம்' - மெலிஞ்சிமுத்த‌ன்

Dating Violence ப‌ற்றிய க‌ல‌ந்துரையாட‌ல்:
தொட‌க்க‌க் குறிப்புக‌ள் - ஜ‌ல‌ஜா

இட‌ம்: Sunday, Oct, 11 (2.00 P.M)
கால‌ம்: Scarborough Civic Centre


ஏதிலிக‌ள்: http://eathilikal.blogspot.com/
(647) 829-9350/(416) 725-4862/(647) 293-0673




வ‌டிவ‌மைப்பு: விசாக‌ன் / புகைப்ப‌ட‌ம்: இர‌ம‌ணி

Monday, September 28, 2009

புத்தகக் கண்காட்சி: Word on the Street

புத்தகக்கண்காட்சியோடு, இசை, படைப்பாளிகளின் உரை மற்றும் அவர்களின் படைப்புக்களிலிருந்து சிலவற்றை வாசித்தல் என்று பல நிகழ்ந்தன.

Diaspora Dialogues என்று தனியே கூடாரமைத்து பலவித நிகழ்வுகள் நடந்தேறின. முதன்முதலாக Funny Boy, Cinnamon Gardens, Swimming in the Monsoon Sea ஆகிய புதினங்களை எழுதிய ஷியாம் செல்வதுரையை நேரில் காணவும் அவரோடு கொஞ்ச நிமிடங்கள் தனியே உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.

புதிதாக ஒரு நாவலை எழுதும் ஷியாம் அதிலிருந்து சில பகுதிகளை வாசித்துக்காட்டியிருந்தார். முக்கியமாய் அவரது பதின்ம/பல்கலைக்கழக வாழ்வைச் சொல்கின்ற நாவலாய் அதுவிருக்கின்றது. யோர்க் வளாகத்தை முக்கிய பின்னணியாகக் கொண்டு அதை எழுதுகின்றார். ஷியாம் யோர்க்கில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷ்யாம் வாசித்த பகுதியில், தானொரு gay என்பதைத் தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய பகுதிகளாய் அது இருந்தது. இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தாங்கள் ஓரினப்பாலினர் என்று அடையாளப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை நாமனைவரும் அறிவோம். அதிலும் ஷியாமின் நாவலில், கதாபாத்திரம் தானொரு ஓரினப்பாலினன் என்று அறிவிக்கும்போது அதுகுறித்து அறியாமையில் ஒருவித மோஸ்தர் போலாக்கும் என்று அவரது தாயார் நினைத்து, how many times you had trained yourselves for being gay என்று கேட்பதாய் உரையாடல்கள் போய்க்கொண்டிருக்கும். ரொறொண்டோவைச் சுற்றியே கதை நிகழும் பரப்பு இருப்பதாலும், இவ்வாறான விடயங்களில் பிற்போக்காயிருக்கும் எங்கள் சமூகத்திலிருந்து தன்னையொரு gay எனத் துணிவாக அறிவிக்கும் அந்தப் பாத்திரத்தையும் வாசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

தனியே கதைத்துக்கொண்டிருந்தபோது, இந்நாவல் வருவதற்கான காலத்தைத் தீர்மானித்துவிட்டீர்களா என்று ஷ்யாமிடம் கேட்டபோது, நாவல் வெளிவரும் காலத்தைத் தன்னால் கூறமுடியாதிருக்கிறது என்றிருக்கின்றார்.
.....
புத்தகக்கண்காட்சியில் பின்னேரம் போல Margaret Atwood பேச்சு இருந்தாலும், மாலை நடைபெறவிருந்த பிரேம்ஜியின் புத்தக வெளியீட்டுக்காய் அட்வூட்டின் உரையைக் கேட்கமுடியாமற் போய்விட்டது.

கிராபிக்ஸ்/கொமிக்ஸ் புதினங்கள் என்ற கூடாரத்தில், ஒரு பெண்மணி தனது கதையைப் படங்களுடன் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார். 'அழகென்பது உண்டி சுருங்குதல்' என்ற Stereo Typed விடயத்தையே கேள்விக்குட்படுத்தியிருந்தார். பதின்மத்தில் ஆரம்பத்திலிருக்கின்ற பெண்களை முன்வைத்தே தான் இந்த கிராபிக்ஸ் நாவலை எழுதினேன் என்றும் இதற்காய் மூன்று வருடங்கள் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கண்காட்சித்திடலில் நிறைய இந்தியச் சாமியார்கள் பற்றி பல boothகள் இருந்தன.



Shyam Selvadurai





























Monday, September 21, 2009

பலூனில் பறந்த அனுபவம்

இவ்வாறான பலூனில் பறப்பது என்பது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமமாகின்ற நேரத்தில் பொதுவாக நடைபெறுகின்றது. எங்களது பலூன் பறப்பானது காலை 7.30 மணிக்கு என்றார்கள். கிட்டத்தட்ட 8.00 மணியளவில் பலூன் மேலே பறக்கத் தொடங்கியது. காலநிலையைப் பொறுத்தே பலூன் பறப்பதா இல்லையென்பதைத் தீர்மானிக்கின்றார்கள்; நாங்கள் பறப்பதற்கு முதல்நாள் காற்று அதிகமாக இருந்ததனால் பறக்கவில்லை.

நாங்கள் சென்ற பலூனில் 12 பேரளவில் பறக்கமுடியும். அத்தோடு ஒரு flight pilot இருப்பார். அன்றைய நாளுக்கான காற்றே எந்தத் திசையில் பலூன் பறப்பதைத் தீர்மானிக்கும். உயரம் மேலே செல்ல/ கீழிறங்க மட்டுமே பைலட்டால் கட்டுப்படுத்தமுடியும். பறக்கும் திசையைக் காற்று மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே பலூன் ஏறிய அதேயிடத்திலேயே பலூன் கீழிறங்கும் என்று (என்னைப் போல) நீங்கள் யோசிக்கக்கூடாது.

நாங்கள் சில மைல்கள் அப்பாலிருந்த அறுவடை செய்த நிலத்தில் இறங்கியிருந்தோம். நாங்கள் பறந்த அன்று காலநிலை மிகவும் சுமுகமாக இருந்ததால் எந்த adventures ஜயும் நாங்கள் சந்திக்கவில்லை. பலூன் பக்கவாட்டுக்குப் போகும் வேகத்தை காற்றுத் தீர்மானிக்கும். மேலிருந்து கீழேயோ/ கீழிலிருந்து மேலேயோ போவதை gas தீர்மானிக்கும். கிட்டத்தட்ட ஒரு நிமிடத்தில் ஆயிரம் அடி உயரப்போகலாம் என்று பைலட் கூறினார்.

மறக்கமுடியாத அனுபவம் என்றால் சோள வயற்காட்டுக்குள் சோளப்பயிர்களைத் தொட்டவாறு பறந்தது. அதேபோல பார்த்துக்கொண்டிருந்த சொற்ப நிமிடத்தில் சட்டென்று நாமறியாமலே மேலேயுயர்ந்து சென்றதையும் கூறலாம்.

மெய்சிலிர்ப்பதற்கு எதுவுமில்லையென்றாலும், நினைவில் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக பலூனில் பறத்தல் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பறந்தோம். இப்படியான பலூனில்தான் முன்பு உலகையெல்லாம் வலம் வந்தார்கள்/வரமுயற்சித்தார்கள் என்று நினைக்கும்போது சற்று வியப்பு ஏற்படுகின்றது. அது உண்மையில் ஒரு adventureதான்.

கீழேயிறங்கியபின் பறத்ததின் வெற்றியைக் கொண்டாட champagne போத்தல்களை உடைத்தார்கள். நான் என்றுமே நல்ல 'ஆண்' என்பதால் முகர்ந்து பார்த்ததோடு சரி. பறக்கும்போது வராத மயக்கம் champagneஐ முகர்ந்து பார்த்தபோது வந்ததில் பலூனில் பறப்பதைவிட champagnஐ முகர்வதுதான் ஆபத்தானது எனபது நன்கு விளங்கியது :-).

(படங்களை அழுத்திப் பெரிதாக்கியும் பார்க்கலாம்)












































(ரிக்கேட்டுக்களை complimentsயாய் 'வைகறை'யில் ஒருகாலத்தில் எழுதிய பாவத்திற்கு எங்களுக்குத் தந்த ரவிக்கு நன்றி :-) )