நண்பரொருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'பாலஸ்தீனிய எதிர்ப்பு இசை'பற்றிய ஒரு ஆக்கத்தை மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தேன். Hip-Hop, Rap சார்ந்தே அக்கட்டுரை இருந்தது என்றாலும், மேலதிக விபரங்களைப் பெறுவதற்காய் இணையத்தைத் தோண்டியபோது Deeyah (Deepika) கிடைத்திருந்தார்.
இந்தப் பாடல் 'பேசுவதற்கான சுதந்திரத்தை' (Freedom of Expression) முக்கியப்படுத்துகிறது என தியா கூறுகின்றார். (நமக்குப் பரிட்சயமான தென்னிந்திய இசைக்குறிப்புக்களும் இப்பாடலின் நடுவில் வருகிறது)
இவர் நோர்வேயில் பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தவராவார். ஒரு முஸ்லிமாக இருப்பதால் அவர்படும் துயரங்களை அவரது நேர்காணலின் நீங்கள் கேட்டுப்பார்க்கலாம். அடிப்படைவாதிகளால் இவர் இஸ்லாம் மதத்திற்கு எதிரானவர் எனக்கொலைப் பயமுறுத்தல்கள் விடப்பட்டு இப்போது நோர்வேயை விட்டு வெளியேறி இலண்டனில்(?) வசிக்கின்றார். முஸ்லிம்கள் குறித்து பொதுப்புத்தி எப்படி மேற்குலகில் இருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். அதேசமயம் தனது தெரிவுகளின் அடிப்படையில் தனது வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது.
நேர்காணலில் தியா கூறுவார், 'நான் Veil அணிய விரும்பும் பெண்ணின் உரிமையை எந்தப்பொழுதிலும் மறுக்கமாட்டேன். ஒருவர் அவ்வாறு அணிவதைத் தேர்ந்தெடுத்தால் அதை நான் மதிப்பதோடு அவரின் உரிமைக்காய் குரல் கொடுக்கவும் செய்வேன். ஆனால் அதேபோன்று ஒரு பெண் Veil அணிவதை விரும்பவில்லை என்றாலும் அதற்கு நாம் அனுமதிக்கவேண்டும். அது அவருக்கான சுதந்திரம். அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்' என்று கூறியிருப்பார்.
உண்மையில் (ஏற்கனவே எழுதியுமிருக்கின்றேன்) முஸ்லிம் பெண்களின் ஆடைகள் குறித்த தெரிவுகளை அவர்கள் வசவே விடவேண்டும். வெளியாட்களாக இருக்கும் நாம் அவர்கள் இவ்வாறு இருக்கவேண்டும்/இருக்கக்கூடாது என்று எம் முடிவுகளைத் திணிக்கமுடியாது. ஆனால் இந்தப் பெண்கள் தமது தெரிவுகள் இதுதான் என்கின்றபோது அவர்களுக்கான ஆதரவுக்கரங்களை நீட்டுவதில் தயக்கங்கள் கொள்ளத் தேவையில்லை.
அந்தவகையில் நாம் தியா தேர்ந்தெடுத்துக்கொண்டதை ஆதரிக்கவேண்டும்.
உண்மையில் இது தியா போன்ற போன்ற முஸ்லிம்பெண்களின் பிரச்சினை மட்டுமில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கும் அவர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் எழும் பெரும் சிக்கல்களே இவை. இந்தக்காலகட்டத்தை தமிழர்களாகிய நாங்களும் எதிர்கொள்ளும் காலமும் கணிந்துகொண்டிருக்கிறது.
இரண்டு கலாசாரங்களில் வாழும் சிக்கல்களை ஆழமாக விளங்கிக்கொள்ளாதவரையில் நாம் எந்தத் தீர்ப்புக்களையும் எழுதிவிடமுடியாது என்பதை மட்டுமே இப்போது சொல்லமுடிகின்றது.
இந்நேர்காணலை கட்டாயம் கேட்டுப்பாருங்கள்...எப்படி புலம்பெயர்ந்த நாடுகளின் ஊடகங்களில் குடிவரவாளர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதையும், தங்கள் சமுகத்தில் தனக்கான பிரச்சினைகளையும் மிகத் தெளிவாகப் பேசுகின்றார் தியா.
2 comments:
தகவலுக்கு நன்றி டிசே.....ரொம்ப நாள உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் எதுவும் போடாமலேயே போயிடுறன். அதான். மற்றது இசை குறித்தான உங்கள் மொழிபெயர்புகளை படிக்கும் வாய்ப்பை எனக்கு நீங்கள் வழங்கிணால் மகிழ்வேன். :)
சோமி, தமிழாக்கம் செய்துகொண்டிருப்பது, பாலஸ்தீனிய ராப்பர்களைப் பற்றி ஆவணப்படம் எடுத்த ஒரு பெண்மணியின் நேர்காணலை... ஒழுங்காய்த் தமிழாக்கம் செய்தால்(?) அதை இங்கே பதிவாகவோ அல்லது உங்களுக்குத் தனி மின்னஞ்சலிலோ அனுப்பிவிடுகின்றேன்.
Post a Comment