இம்முறை நிகழ்ந்த 35வது ரொறொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இவ்விழாவில் "City to City" என்னும் புதிய பிரிவை அறிமுகப்படுத்தி ரெல் அவிவ்வை (Tel Aviv) நகரை முன்னிலைப்படுத்தும் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இப்பிரிவில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து அதை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களை திரையிடும் எண்ணம் நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கு இருக்கின்றதெனக் கூறப்பட்டாலும், ஒரு ஆக்கிரமிப்பு நிலமாக இருக்கும் இஸ்ரேலின் ரெல் அவிவ்வை ஏன் தேர்ந்தெடுத்தாகள் என்பது சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கின்றது. நூற்றாண்டு விழாக் கொண்டாடுவதாலேயே ரெல் அவிவ்வைத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறப்பட்டாலும் அந்நகரானது அதற்குமுன் அங்கே வாழ்ந்த பாலஸ்தீனியர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டது என்பதே வரலாறு கூறும் உண்மை. இதன் காரணமாக திரைப்பட உலகைச் சேர்ந்த பலர் இம்முறை ரொறொண்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவைப் புறக்கணித்துள்ளார்கள். இன்னும் சிலர் வெளிப்படையாக தமது எதிர்ப்பைக் கையெழுத்திட்டுக் காட்டிவிட்டு நிகழ்வில் பங்குபற்றியிருக்கின்றனர்.
ரொறொண்டோ திரைப்படவிழாவில் முக்கியம்பெறும் திரைப்படங்கள், அதன் பின்னர் நடக்கும் ஒஸ்காரிலும் கடந்தகாலத்தில் விருதுகளைக் குவித்திருப்பதால் இம்முறை மக்கள் தெரிவு விருதிற்கு(People's Choice Award) தெரிவாக எத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்பதில் பலருக்கு ஆர்வமிருந்திருக்கிறது. இம்முறை பதின்ம வயதில் குடும்பவன்முறையால பாதிக்கப்படும் ஒரு பெண்ணில் கதையைக் கூறும் Precious என்ற படம் விருதுக்காய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதை ஒபரா வின்ஃபரே (Oprah Winfrey) இணைந்து தயாரித்துள்ளார். தனது சொந்தத் தகப்பனாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் கதையான The Colour Purple என்ற படத்தில் ஒபரா ஏற்கனவே நடித்தும் அதன் தயாரிப்பாளார்களில் ஒருவராகவும் இருந்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது. அலிஸ் வோக்கரின்( Alice Walker) புலிட்சர் விருதுபெற்ற அற்புதமான கதையை அதே பெயரில் (Colour Purple) திரைப்படமாக்கப்பட்டபோதும் ஸ்டீபன் ஸ் ரீல்பேர்க் (Steven Spielberg) அதன் உயிரோட்டத்தை இல்லாமற்செய்துவிட்டார் என்கின்ற விமர்சனமிருக்கின்றது. கறுப்பினப் பதின்ம வயதுப்பெண்ணின் கதையைக் கூறும் Preciousஐ கறுப்பினத்தவரான லீ டானியல் (Lee Daniels) இயக்கியிருக்கின்றார்.
கடந்த வருடங்களில் ரொறொண்டோ சர்வதேச திரையிடலில், 'மக்கள் தெரிவு விருதில்' விருதுகள் பெற்ற படங்களான American Beauty,Hotel Rwanda, Tstotsi, Slumdog Millionaire போன்ற படங்கள் ஒஸ்காரிலும் விருதுகளைக் குவித்ததால் இம்முறை Precious ற்கும் பல விருதுகள கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத் தவிர விருதுகளைக் பெறாவிட்டாலும், பெத்ரோ அல்மதோவரின் 'Broken Embraces'ம், அமெரிக்கப் பெருநிறுவனங்களை கடுமையாக விமர்சிக்கும் மைக்கல் மூரின் Capitalism: A Love Story 'ம் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன.
('உன்னதம்' ஒக்ரோபர் இதழில் வெளிவந்தது)
No comments:
Post a Comment