Wednesday, March 31, 2010

காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் (நிறைவுப்பகுதி)

காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 03

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்

21. நாடகம், கூத்து இவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் பற்றிக் கூறுங்கள்!

உண்மையில் இவைபற்றி படித்ததோ, எந்தப் பின்னணியோ எனக்கு இருந்ததில்லை. பார்த்த அநுபவங்களே உண்டு. இங்கு ‘நிரபராதிகளின் காலத்தை’ இயக்கினேன். பின்னர் ஒரு அபத்த நாடகத்தை இயக்கினேன். அதுவும் வெற்றியாக வரும்போது தேடகம் நூலகம் எரிந்ததால் அது இடைநின்றது. அதன்பின் மகாலிங்கத்தின் ‘சிதைவுகள்’ வெளியீட்டின்போது ‘விட்டுவிடுதலையாகி’ எனும் நாடகத்தை காலத்துக்காக புராந்தகன் செய்தார். பின் காலத்துக்காக ஞானம் லம்பேர்ட் மூலம் ‘நிராபதிகளின் கால’த்தையும், ஜயகரன் மூலம் மூர்த்தியின் ‘சப்பாத்து’ சிறுகதையையும் நாடகமாக்கினேன்.

‘மனவெளி’ எனும் அமைப்புக்கான முயற்சியின் ஆரம்பம் எங்கள் வீட்டில்தான் உருவாகியது. இருந்தும் இரண்டாவது கூட்டத்தோடு நான் அங்கு செல்லவில்லை. மனவெளி நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. நாடகத்துக்கு பெருந்தொகையான பார்வையாளர்களைக் கொண்டுவந்ததில் மனவெளிக்குப் பெரும் பங்கிருக்கிறது.

நாட்டுக் கூத்துபற்றி சிறுவயது முதலே வாசிப்பறிவும், பார்த்தறிவும் எனக்கிருந்தது. அதிலிருந்து இங்கு நடைபெற்ற ஒரு மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையில் இருக்கும் இசையை மையமாக வைத்து நாட்டுக் கூத்து வடிவில் ஒரு நாடகம் செய்தேன். அது மிகவும் தோல்வியடைந்தது. அதன்பின் இலங்கையில் ஒரு அண்ணாவியாரைத் தொடர்புகொண்டு அங்கிருக்கும் நாட்டுக் கூத்து இராகங்களைத் தொகுத்து கொஞ்ச காசு செலவுசெய்து தென்மோடி நாட்டுக்கூத்தில் இருக்கும் பா வகைகளை வைத்து ஒரு இறுவட்டு வெளியிட்டேன். அதன் பின் கட்டபொம்மன் கூத்து, நான் நினைக்கிறேன் ரொறன்ரோவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்தில் மிகமுக்கியமானது, இவை இரண்டும்தான் நான் கூத்தென்ற வகையில் செய்தவை. என் நண்பர்கள் றெஜி, அன்ரன் போன்றவாகள் இக் கூத்துக்களைச் செய்வதற்கு மிகுந்த உதவி புரிந்தார்கள்.

விருப்பிருக்கிறது ஆனால் அவை இங்கிருக்கும் சூழுலில் பெரும் வேலைகள். கூத்தென்பது மிகவும் கடினமான விடயம். எங்கள் ஊர்களில் ஆடியில் கூத்தென்றால் தை மாதத்திலேயே கொப்பி போடுவர்கள். ஆறு மாதம் பழகுவார்கள். கூத்தென்றால் ஆடவேண்டும், பாடவேண்டும். அத்தோடு பி;ற்பாட்டு. இசையும் அதனுள் ஒரு கதையும் இருக்கவேண்டும். ஆனால் இங்கே அவை கடினம். இங்கே இவை எடுபடவும்மாட்டாது. ஒன்று, இது புதிய தலைமுறை. மற்றது, தென்மோடிக் கூத்து கத்தோலிக்க பின்னணியுள்ள கலை. அதை இங்கே வந்து கொக்குவில், கோண்டாவில் மக்களுக்கு போட்டுக் காண்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தென்மோடிக் கூத்துப்பற்றி எந்தப் பரிச்சயமும் இல்லாதவர்கள். கருநாடக இசையைக் கேட்பதென்றால் கொஞ்சமாவது பரிச்சயம் வேண்டும். அவ்வாறே நாட்டுக் கூத்தும். கேட்ட பரிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் இவற்றை தொடக்கி வைத்தது என்றளவில் இன்று எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது.

22. இங்கேயுள்ள இன்றைய வாசகர்கள் பற்றி கூறுங்கள்.?

இங்கே பத்திரிகை, புத்தகம் விற்பதென்ற அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் யாரோ புதிது புதிதாக ஓரிருவர் வந்துகொண்டே இருப்பார்கள். நான் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் இரு இளைஞர்கள் வருவார்கள். அசோகமித்திரன் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆக இப்படித்தான் வலு குறைவாக, காலம் முழுக்க இருக்கிறது. தமிழ் பற்றி யோசிக்கும்போது எப்போது நாங்கள் மேன்மையடைந்திருந்தோம். எப்போது? ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஏதோ புதுமை நடந்தது போல் ஒரு எட்டுப்போர் வருமிடத்தில் நாலுபேர் வராதுபோனால் யாரோ புதியவர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களால் நம்பிக்கை வருகிறது.


23. ஈழப்போராட்டம் பற்றி………..

சூடு அடித்து விளைந்த களம் சுடுகாடாய் போனது என்று வில்வன்ரை பாட்டொன்று காதுக்குள் ஒலிக்கின்றது.

எங்கள் ஊரில் ஒரு நொடி ஒன்றுஒருவர் சொல்வார்: ‘தம்பி வருமென்றால் பயமாக்கிடக்கு. வந்தால்; பெரியசுகம்.’ என்னவென்றால் பைத்தியம். அவ்வாறே மே 18ற்குப் பின் எனக்குதோன்றுகிற மனநிலை. எனக்கு கூத்துபற்றிய நினைவுதான் வருகிறது. கூத்தில் வந்து பார்த்தீர்களானால் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். 11 மணிக்குத்தான் நிறையும். விடிய மங்களம் பாடினால் எல்லோரும் எழுந்து சென்றுவிடுவார்கள். எங்கள் போராட்டமும் அப்படித்தான் இருந்திருக்கவேணும் கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மங்களம்பாடாமல் முடிவடைந்துள்ளது. இடியும் புயலும் வந்து கொட்டைகையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது. சனமெல்லாம் சிதறி ஓடிவிட்டது. நடித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் ஒப்பனை கரையக் கரைய ஓடிவிட்டார்கள். ஓற்ரைஅடி பாதையில் போன பிள்ளைகள் காலம் முழுக்க அவர்களை விமர்சித்துஇருக்கிறோம் அழிய வேண்டும் என்று விரும்பியது இல்லை சொன்னதிற்க்காக வாழ்ந்தவர்கள் அதற்க்காக செத்தவர்கள் ஆனால் கூத்து திரும்ப போடத்தான் வேணும் வேறவகையில. மனிதன், தமிழன் என்ற வகையில் இது ஒரு கொடுமையான நிகழ்வு. எங்களுக்கு எங்கள் இயக்கங்கள்; பற்றி பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக ஆயுதங்கள் மாத்திரமல்ல. ஆயுதங்கள் வந்தவுடன் எங்கள் பெடியளுக்கு வந்த அகங்காரம். தோல்விக்கு அது காரணமல்ல. தோல்விக்கு பல காரணங்கள். இன்று ஒரு கையறுநிலையில் உள்ளோம். எத்தனை இழப்புகள்! எங்கள் கிராமத்தை எடுத்துப்பார்த்தால் எத்தனை விதவைகள்! எத்தனை பேர் கடலில் சென்று காணாமல் போனார்கள்! இதுபற்றி கனக்க கதைக்கிற மனநிலையில்லை சேரனின் கவிதையொன்று காற்று வீசவும் அஞ்சும் ஓர் இரவில்நட்சத்திரங்களின் இடைவெளி என்னவென்று திகைத்த ஒரு கணம்… என்று தொடங்கி பொய்கைக் கரைகளில் அலைகளை பார்த்திரு என முடியும் இந்தளவொடு இதை விடுவோம்


24. வன்னி இலக்கியம் என்ற கருத்தாக்கமொன்று உருவாகி வந்துகொண்டிருந்தது. கவிதை மைய உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக இருந்தது. இந்தக் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிலாந்தன் நண்பன். கருணாகரன் ஒரு நவீன எழுத்தாளன். புதுவை இரத்தினதுரை மரபுசார்ந்த சந்தங்கள் கொண்ட எழுத்தாளன். அவரின் சில வரிகளை இரசித்துள்ளேன். ஆனால் கருணாகரன் நவீன கவிதையில் முக்கியமானவர். இன்றைக்கு அவர்கள் மிகப் பெரிய ஒரு வற்றாத கவலையையும் சூழலையும் அநுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்து பெரிய விமர்சனங்களையோ சரி பிழைகளையோ சொல்;வதற்குரிய மனநிலை இப்போது இல்லை. பெரிய அவலப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துள்ளார்கள். அவைபற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.


25. பொதுவாக அலசப்பட் ஒரு கேள்வி. இவ்வளவு அழிவு தமிழனத்துக்கு நடந்தும் அது பற்றி ஒரு படைப்பும் வெளிவரவில்லையே என்பது.

இல்லை, அது வரும். அங்கிருந்தே நிச்சயமாக வரும். அதற்கான சூழல் தற்போது இல்லை எனலாம். ஆனால் நிச்சயமாக ஈழ அழிவுகள் குறித்த படைப்புகள் வெளிவரும். ஆனால் முப்பது வருட போராட்டம்பற்றிய படைப்புகளே இன்னமும் முழுமையாக, பெரிதாக வெளிவரவில்லை. சோபா சக்தி நன்றாக எழுதுகின்றார்.

வி.புலிகளை அழிப்பதற்கு எத்தனைவிதமான விடயங்களைப் பாவித்திருக்கிறார்க ள்;. ஆவர்கள்தலித்தியம் பேசுவது வி.புலிகளை அடிப்பதற்கு,; பெண்ணியம் பேசுவது விடுதலைப் புலிகளை அடிப்பதற்கு. தனிப்பட்டவகைப் பாதிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு வி.பு எதிராகப் பேசுவதால் முற்போக்கு என்று காட்டிக்கொண்டாh’கள். இவையெல்லாம் மிகவும் கவலைக்குரிய விடயங்கள். இவர்கள் விடுதலைப் போராட்டத்திலும் இல்லை. தாங்கள் கூறும் தலித்தியத்திலும் நம்பிக்கை இல்லை. இவர்களின் முதல் எண்ணம் புலி எதிர்ப்புத்தான். நானும் எனது வரலாற்றில் புலிக்கு சார்பாக நடக்கவில்லை; தமிழ் மக்கள் விடுதலை சம்பந்தமாக நேசிக்கும் ஒருவன். hலிகள் இந்த விடயங்களில் அதாவது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றில் இவைபற்றிக் கூறுபவர்களைவிட நன்றாகத்தான் இருந்துள்ளார்கள். அது கண்கூடாகத் தெரிகிறது. நிறைவாக என்றில்லாவிட்டாலும் இதுபற்றி பேசிய புலம்பெயர்ந்தவர்களைவிட நன்றாகத்தான் செய்துள்ளார்கள். முக்கியமான வி~யம் என்னவென்றால், தோல்வி வெற்றி என்றில்லை, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தங்கள் மக்களை நேசிக்கவில்லை. காந்திக்கும் பிரபாகரனுக்கும்சின்ன ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் மிகவும் நேர்மையானவர்கள், சரியான கடுமையானவர்கள். ஒருவரிடம் ஆயுதம் இருந்தது. மற்றவரிடம் அது இல்லை. காந்தி ஆயுதத்தை எடுக்காது விட்டதற்கு, அது வெள்ளையரை எதிர்ப்பதைவிட தமது மக்களுக்கே திரும்பக்கூடும் என்ற பயத்தில்தான் என்று நான் நினைக்கிறேன்.

வேறுபாடு என்னவென்றால் ஈழத்தில் வி.புலிகளோ ஏனைய இயக்கங்களோ எந்த மக்களுக்காகப் போராட முற்பட்டார்களோ அம்மக்களை நேசிக்கவில்லை. நேசித்திருந்தால் போராட்ட வடிவம் மாறுபட்டிருக்கும

26. பிடித்த எழுத்தாளர்கள்…?

வெங்கட் சாமிதநாதன் ராமகிருஸ்ணன் நாஞ்சில்நாடன்………….முத்துலிங்கம் சோபாசக்தி மிக முக்கியமானவர்கள். முத்துலிங்கம் எனது நண்பரும் கூட. சந்தித்தவர்களில் ஏ.ஜே யும், சுராவும் என்னை நிறையப் பாதித்தவர்கள்.

ஜெயமோகனில எனக்கு பிரியம் அதிகம். தமிழில் மிகமுக்கியமான எழுத்தாளர். ஆனாலும் அவரின ; சில எண்ணங்களில்எனக்கு உடன்பாடில்லை. நான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசித்து கலங்கினேன .அதில் வவரும் அருணாசலத்தின் கடிதம் இன்றைக்கும் ஆறுதல்தரும்; துன்பமான வேலையில் எடுத்து வாசிப்பேன். விஸ்ணுபுரத்தின் எழுத்துநடையும் காவியப் பாங்கும் தமிழிற்க்கு;; புதிது பி.தொ.நி.குரலும், ஏழாவது மனிதனும் எனக்கு மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. அடிக்கடி நான் ஜெயமோகனையும் சு.ரா.வையும் கூறுவதால் சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். எனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்ஒருவர் திடீரென வெளியேறிய வேளையில், நான் விஷ்ணுபுரத்தை வாசிக்கும்படி வற்புறுத்தியதால் அவர் வெளியேறியதாக நகைச்சுவையாகக் கதையை கட்டிவிட்டார்கள். அவ்வளவுக்கு எனக்கு ஜெயமோகனின் எழுத்துப் பிடிக்கும். ஆனால் சு.ரா. இருந்திருந்தால் ஈழப்பிரச்சினை தொடர்பில் ஜெ.மோ வின் கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்.

ஒரு படைப்பாளிக்கு கட்சி, தேசம், மொழி போன்றவை முக்கியப்பட்டால் அவன் இலக்கியத் தரத்தில் சிறிது குறைந்தே போவான். நான் உட்பட. நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்பட்டீர்களோ அங்கே குறைவு வந்துவிடும். தளையசிங்கம் மகத்தானவர். ஆனால் இறுதியில் வந்து சர்வோதயத்தோடு இணையும்போது திடீரென இவர் யார் என்னை அங்கே விடுவதற்கு என வரும். ஆனால் சு.ரா. இலங்கையில் இந்தியன் ஆமியின் கொடுமை ;போது முதல்தடவையாக தனது பத்திரிகையில்தான் இந்தியன் ஆமியின் கொடுமைபற்றி கடிதம் என்றை பிரசுரித்தர். அவருடன் இருந்த ஒருவர் கூறினார், அவர் தனித்தவர்கடசி வலுவோ வேறுபின்னணிகளோ இல்லாதவர் பிடிபட்டிருந்தால் நொருக்கியிருப்பார்கள் என. அவர் தன்னை இந்தியனாகவோ, தமிழனாகவோ உணர்பவர் அல்ல.

27. இலக்கியத்தோட்டம் பற்றி கூறுவீர்களா?

இலக்கியம் தொடர்பாக நல்ல விடயங்கள் நடைபெற்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் பின்நிற்பதில்லை. அப்படித்தான் இலக்கியத் தோட்டமும்.
இலக்கியத்தோட்ம் அதுபற்றியும் பலபேர் பலதைச் சொல்வார்கள். வாழ்நாள்சாதனை விருது இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லையயென…ஆனால் இயல்
விருதுபெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று யாரும் சொல்லமுடியாது.
இலக்கிய தோட்டம் இதுவரை செய்த பணிகள் தமிழுக்கு முக்கியமானவை. அதில் நானும் ஒரு தொண்டனாய்இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதைவிட அது பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. அது ஒரு நல்ல முயற்சி.


28. இது ஒரு நீண்ட நேர்காணலாக இருக்கப் போகிறது. முழுமையாக ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூர் இதழின் விருப்பமாகும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தாங்க அது தயாராகவே இருக்கிறது. காலம்பற்றி, காலம் தொடர்ந்து வெளிவருவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ஆறு காலம் இதழ்கள் சி.மோகனின் வயல் அச்சுக் கூடத்தால் வெளிவந்தன. திடீரென இந்தியாவில் நடந்த பிரச்சினையால் மோகனையும் தொடர்புகொள்ள முடியாத சூழல் வந்தது. இதழை நிறுத்தவேண்டிய நிலை. இங்கே வெளியிடுவதென்றால் மிகவும் செலவாகும். மகாகவி இதழ் ஆயத்தம் செய்துவிட்டிருந்தேன். வெளியிடமுடியாத சூழலில்தான் ராம் சிவதாசன் முன்வந்தார்.

அவர் ஒரு வீடு விற்பனை முகவராக அறியப்பட்டாலும் இலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ‘யாழ் நூலை’வெளியிட்டமையும், தளையசிங்கத்தின் முழுப்படைபுகளையும் தொகுப்பாகக் கொண்டுவந்தமையும் மறக்கப்பட முடியாதன. அவர் அவற்றில் நட்டமடைந்திருக்கலாம.; ஆனால் அவ்விரண்டு புத்தகங்களின் வெளியீடும் முக்கியமானவை. அவர் எனது நண்பரும் கூட. அப்பொழுது அவரே ‘செல்வம் எனக்கு மைக்கு காசு தாருங்கள், நான்செய்து; தருகிறேன்’ என்றார். நான் கைவிடவேண்டிய சூழலில் எனக்குக் கைதந்திருந்தார்.

பின்னர் ஜோர்ஜ்ஜிடம் ஒன்று செய்தேன். பின்னர் தேடகம் இளங்கோவிடம் ஒன்று செய்தேன். இவ்வேளையில்தான் மாற்கு மாஸ்ரர் பற்றி ஒரு இதழ் வெளியிடுவதற்காக டிஜி கருணாவிடம் சென்று கதைத்தபோது, ‘நான் எல்லா உதவியும் செய்து தருகிறேன். கொஞ்சம் காசு தாங்கோ’ என்று அதை வெளியிட உதவி செய்தார். கருணா ஒரு நல்ல கலைஞன். மட்டுமில்லை. மாற்கு மாஸ்ரரின் மாணவனும். ஐயர் கூறுவார். அந்தக் காலம் இதழிலிருந்து அது வேறு ஒரு பக்கத்தை எடுக்கிறது என்று. அவ்விதழ் மிக முக்கியமானது. 2000ல் அச்சிறப்பிதழ் வெளிவந்தது. இன்றுவரை மாற்கு மாஸ்ரர் பற்றிய நல்ல ஒரு பதிவாக உள்ளது அது. புpன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் கனக்க கதைக்கலாம் இபலபேருக்கு கடமைபடடிருக்கிறேன் … இது நீண்டு போகும்

இவ்வளவு வேலைப்பளுவில் சோர்வுகள் வரும்போது ஐயரையே யோசிப்பேன். அவர் எனக்கு ஒரு பெரிய பக்கபலம். எனக்கொரு முன்னோடி. அவரளவிற்கு செயலாற்றமுடியாது. அவர் எதையும் எழுதவில்லை. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவரைக் கழித்துவிட்டு எதையும் காணமுடியாது. எனக்குப் பின்னால் இருந்து இயங்கும் ஒருவர் அவர். இங்கே நான் காலம் செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பவர் மகாலிங்கம். அவர் ஈழத்தில் ‘பூரணி’ என்ற சஞ்சிகையொன்றை நடத்தியிருந்தார். தளையசிங்கத்தின் பரம்பரையில் வந்தவர். இங்கு நடக்கும் விடயங்களில் எனக்கு அவரும் செழியனும் ஆத்ம பலம் ;குமார் மூர்த்தி இறந்து 8 வருடங்கள் முடிந்து விட்டது. கலை இலக்கியம் ஊடாகககிடைத்த ஒரு ஆத்மார்த்மமான நண்பர். தோன்றாத் துணையாய் என்னுடன் கூட நடப்பவர். என் குடும்பத்தையும் கஸ்ரப்படுத்தியிருக்கிறேன் நான் எனது பெயரை இட்டாலும் இவர்கள்தான்; காலம் இதழ் மற்ற இலக்கிய வேலைகளில் பங்கேற்பவர்கள்.

(நிறைவுற்றது)
நன்றி: கூர்

Monday, March 29, 2010

‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02


காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்

11. தொண்ணூறுகளின் ஆரம்பம் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்த ஈழத் தமிழர் வாழ்நிலைக்கு ஒரு தளும்பலைக் கொடுத்தெனின், அதிலிருந்து தப்பிக்க இங்கிலாந்து நோக்கியும், வடஅமெரிக்கா நோக்கியுமான ஓர் இரண்டாவது புலப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கொள்ள முடியும். உங்களது கனடாவுக்கான பெயர்வும் இது சுட்டியதா?

ஒன்று படித்தவர்களிடம் ஆங்கில மோகம் இருந்தது. பிரான்ஸ், ஜேர்மனியில் இருந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியில் படித்தால் ஊருக்குத் திரும்பும்போது இடைஞ்சல். என்ற கனவு. இரண்டாவது, இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடம்; இறுதிவரை கொடுக்கமாட்டார்கள். எப்போதும் நீங்கள் அந்நியர்தான். நல்ல உதாரணம் பிரான்ஸில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி மக்கள். அவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் அவர்கள் இன்றுவரை பாண்டிச்சேரிக் கனவிலேயே இருக்கிறார்கள். புலம் பெயர்ந்ததவர்குளுக்கு; தரத்தில் கனடா ஒரு புண்ணிய பூமிதான். யுத்தத்தால் அகதியாக வெளியேறிய ஒருத்தன் கௌரவமாக வாழ்வதற்குரிய இடம் கனடாதான். ஐரோப்பாவில் இருந்தபடியால் கூறுகிறேன்.



12. கனடாவுக்கு தமிழர் புலப்பெயர்வு அதிகரித்த வேளையில் அதன் குவிமையம் மொன்றியலாக இருந்திருக்கிறது. இங்கே உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு ஆரம்பித்தன?

ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் மொன்றியலுக்குத் தான் வந்தார்கள். உண்மையில் தமிழர்களின் மையமாக மொன்றியலே அமைந்திருக்க வேண்டும். நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. அப்ப நான் 3 மாதம் நிறைந்த ஒரு மகனுடன்தான் வந்திருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரே ஒரு தொடர்பு ‘மணிமுடிகள் தான் சாம்பலுக்குள்ளே அம்பும் வில்லுமா’ , ‘எனது கூவல் நிறைய எனது சோலை வேண்டும்’ போன்ற கவிதைகளைத் தந்த ஹம்சத்வனி என்ற கவிஞர், அவர் இப்போது எழுதுவதில்லை, அவர்தான் விடயங்களை எங்கே பெறலாம் என்று கூறியிருந்தார்.

வந்து நான்கு நாட்களுக்குள் யாரிடமோ விசாரித்து தமிழ்ஒளிக்கு பத்திரிகை படிப்பதற்காக அங்கே செல்லத் தொடங்கிவிட்டேன். அங்கேதான் பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் மோசமான வடிவில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் எண்ணினேன். போது எழுதுவதற்கு படைபப்பாளிகள் இல்லை. தொடர்புகள் இல்லை. கணனியில் தமிழ் எழுத்துகள் இல்லை. கையெழுத்து சஞ்சிகை. எனவே தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் மறுபிரசுரம் செய்துதான் பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் புறப்பட்டேன். உள்ளுர் விடயங்கள் சிலவற்றையும் இலங்கையில் இருந்து சரிநிகர் அரவிந்தன் போன்றவர்கள் அனுப்பிய ஆக்கங்கள் சிலவற்றையும் இட்டு அப்பப்போ சிறிதாக எழுதக் கூடியவர்களையும் தேடி அச் சஞ்சிகையை நடத்தினேன். அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்தபிரசாத், குமார் மூர்த்தி போன்றவர்கள். இவர்களும் எழுதத் தொடங்கிய பின் மொன்றியள் மூர்த்தியின் வடிமபைப்புடன் சஞ்சிகையின் தரம் மாறுகிறது.

இப்படி ஒரு நாளில் 1987ல் பூட்டிக் கிடந்த தமிழர் ஒளி காரியாலயத்தின் நான் காத்துக் கொண்டிருந்த போது, மெல்லிய உடலுடன் ஒருவர் முழுசிக் கொண்டிருந்தார்.

“என்ன விடயமாக இங்கு காத்திருக்கின்றீர்கள்?” என்று அவரைக் கேட்டேன்.

‘இந்திய இராணுவம் இலங்கையில் நடாத்திய படுகொலைகள் திகதி வாரியாக தொகுக்கப்பட்டு இலங்கையில் இருந்து தபாலில் வந்துள்ளது என்றும், அதை பல பிரதிகள் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தமிழர் ஒளிக்கு வந்ததாக அவர் கூறி, அதற்கு உதவமுடியுமா?’ என்று அவர் கேட்டார்.

அதை நிச்சயமாகச் செய்யலாம் என்று கூறிய நான் “உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டேன். “செழியன்” என்று கூறினார்.

“மரணம் கவிதை எழுதிய செழியனா?”என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆம்|” என்று சொன்னார்.

'ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஆயுதமும் வைத்திருந்த கவிஞர்’ என்று நாங்கள் பாரிசில் சொல்லித்திரிந்த கவிஞரை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. அதில் இருந்து பார்வையில் அவரும் எழுதத் தொடங்கினார்

‘தற்போது காலம் நடத்துகிறீர்கள். ஆனால் பார்வை தந்த பிரமிப்பு இதில் இல்லை. அதற்கு கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு’ என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அதில் பெரும்பான்மையானவை மறுபிரசுரங்களதொடர்ச்சியாக நான் பதினைந்து இதழ்களைச் செய்திருக்கிறேன். அதில் பின்பு ஒரு சிக்கல் வருகிறது.

பார்வைக்கு ஆனந்தபிரசாத் ஒவ்வொரு முறையும் கவிதை தருவார். அவர் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு செல்கையில் ஏதோ பிரச்சனையில் தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடிபட்டு மண்டைஉடைபட்டுக்கொண்டனர்;. இது எந்தக் காலம் என்றால், மொன்றியலில் உலகத் தமிழர்கள் நடாத்திய நிகழ்சியில் மது போதையில் சென்றவர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் பிரச்சனை நடந்து, அது பற்றி மொன்றியல் மூர்த்தி ‘உலகத் தழிழருக்கும், உலகத்தில் இல்லாத தமிழருக்கும் அடி தடி” என்று எழுதிய நாட்களாகும்.

ஆனந்தபிரசாத்துக்கு அங்கே அவர்கள் அடித்துக் கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அதை கருவாக வைத்து “கடராம் வென்றபின்’ கடல்கடந்து வந்தாலும் பண்டைதமிழரின்பாரம்பரியங்கள் மண்டை உடைப்பதால் மகத்துவம் பெறுகிறது, ‘சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்’ என்று கருத்துப்பட ஒருகவிதை எழுதினார். அந்தக் கவிதை பிரதியாக பார்த்த தமிழர் ஒளியைச் சார்ந்த ஒருவர் உலகத்தமிழர் அமைப்பிடம் சென்று உங்களுக்கு எதிராக ஒரு சஞ்சிகை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவருக்கு பார்வையில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது.

உண்மையில் உலகத் தமிழருக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கவிதை வாசித்ததும் இல்லை. உலகத் தமிழர், தமிழர் ஒளியுடன் தொடர்பு கொண்டனர். தமிழர் ஒளி பொறுப்பானவர் என்னிடம் , “அந்தக் கவிதையை எடுத்து விட்டு பார்வையை வெளியிடுமாறு” எனறு மன்றாடினார். நானோ அவ்வாறு எடுக்கமுடியாது என்று கூறிவிட்டு, எனக்கு பார்வைக்காக எல்லா உதவிகளும் செய்த ராஐவும் அதை விட்டு வெளியேறி விட்டோம்.


13. ரொறன்ரோவில் அப்போது நிலைமை எப்படி இருந்தது? உங்கள் முயற்சிகளையெல்லாம் முதலிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கவேண்டி இருந்திருக்குமே!

ரொறன்ரோவுக்கு வருகிற காலமும் கிட்டத்தட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்ததும் ஒரே காலம் என நினைக்கிறேன். ஆனால், அங்கிருந்து வந்தவுடன் ரொற ன்டோ சூழல் பெரிய அதிர்வாக இருந்தது. எல்லோரும் இரண்டு, மூன்று வேலை என்றிருந்தார்கள். காசு உழைச்சு ஒரு மனிசனாக வேண்டும் என்று சுற்றிவர உள்ள உறவுகளின் புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு இப்படி இருப்பது என்பது கடினமாக இருந்தது. அவ்வேளை சில நண்பர்களின் தொடர்பு ஜயகரன் ஊடாக கிடைத்தது.

வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்திப்பில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் அப்பொழுதான் கன்டாவிற்கு புதிதாக வந்திருந்த அந்த இளைஞர்கள் சிலரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. பல இளைஞர்கள் அப்பொழுதான் புதிதாக வந்து தாங்கள் நாட்டை மறக்க இயலாது, ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் வயது மூத்தவர்களாக தெரிந்திருக்கலாம். எங்கள் சொல்லை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏதாவது செய்வம் ஆனால் எல்லாம் புத்தகம், கலை இலக்கியங்களுக்கூடாகவே செய்வோம் என நான், குமார் மூர்த்தி போன்றோர் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் குமார் மூர்த்தி, செழியன் போன்றோரையும் இவர்களுடன் இணைத்தேன். என்ன செய்வோம் என்றதற்கு நான் தேடல் என்றொரு சஞ்சிகை செய்வோம் என்றேன். உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. செய்வம் அண்ணே, காசு பிரச்சினையில்லை என்றார்கள். எங்கே அச்சடிப்பது என்றால் அச்சகத்தில் கொடுத்து அடிப்போம் என்றார்கள். அச்சகத்தில் தமிழ் எழுத்தில்லையே என்றேன். அப்ப என்ன செய்யலாம் என்றனர். தமிழ் தட்டச்சு இயந்திரம் வாங்க வேண்டும் என்றேன். சம்மதித்தார்கள். ஒரு கிழமையில் இந்தியாவில் இருந்து அது வாங்கப்பட்டது. எப்படி தட்டச்சு செய்வதென்றே தெரியாது.

திடீரென ஒரு கடைக்குப் பின்னிருந்த கராஜ் ஒன்றை வாடகைக்குப்பெற்று ஒரு வாசிகசாலையை தேடகம் என பெயரிட்டு ஆரம்பித்தார்கள். இது சரியாக அமிர்தலிங்கம் இறந்த அந்தக் கிழமைதான் நடந்தது. தமிழர் விடுதலையை ஆதரித்து விடுதலைப்புலிகள் சாரா, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அமைப்பு உலகத்தில் முதல்தடவை நிறுவனரீதியாக ஆரம்பிக்கப்படுகிறது.

அந்தக் கிழமைதான் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாது இன்னொரு விடயம் நடைபெற்றது. வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்தியில் தாயகம் என்ற சஞ்சிகையை சிறுவன் ஒருவன் விற்பனை செய்துகொண்டிருந்தான். அதுதான் நான் நினைக்கிறேன் கனடாவில் முதலில் கணணியில் ரைப் செய்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. அப்போதுதான் இது நல்ல விடயமாயிருக்கிறதே என அந்த ஆசிரியரைத் தொடர்புகொண்டோம். அவர்தான் ஜோர்ஜ். பின் அவரின் உதவியுடன் தேடலையும் அச்சாக்க எண்ணி தேடலின் ஆசிரியர் குழுவில் நான், ஜயகரன், செழியன் இணைந்தோம்.

ஜோர்ஜினுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் ஆதரவு அவருக்கும் கிடைக்கிறது. ஜோர்ஜ் இங்கிருக்கும் தமிழ்ச் சூழலுக்கு ஒரு முக்கிய காரணி. ஜோர்ஜிற்கு நல்ல தொழில்நுட்பம், ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஒரு சுதந்திரமான பத்திரிகை கொண்டுவரவேண்டும் என்ற ஒரு விருப்புத்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த சிலர் அவரைச் சினமூட்டி அவரை ஒரு புலியெதிர்ப்பாளராக உருவாக்கி விட்டார்கள். எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு கலை, இலக்கியத்தில் பெரிய ஆழம் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் ஒரு சுயசிந்தனையாளன். ஒரு விடயத்தை எழுதினால் அதை மிக அழகாக எழுதுவார். ஆசிரிய தலையங்கம் எழுதினால் மிக அருமையாக இருக்கும். பைபிளில் ஒரு வசனம் வருகிறது, ‘ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து அவர் சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினார்’ என. யோசித்துப் பார்த்தால் நாங்கள் எவ்வளவுதான் புத்தகங்கள் வாசித்தாலும் இவையெல்லாம் எங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஜோர்ஜ் நிறைய வாசிப்பு இல்லாமலே சுயசிந்தனையில் எழுதுவதென்பது சிறப்பே. ஜோர்ஜிடம் இருந்தது ஒரு நேர்மை. இது அன்றைய நான் சந்தித் ஜோர்ஜ். ஆனால் அந்த வீச்சில் வந்திருந்தால் இன்று ஒரு நல்ல படைப்பாளியாக அவர் இருந்திருப்பார்.

இந்தப் பக்கம் நிறைய உற்சாகமான, மானிட நேயத்தை விரும்பிய இளைஞர்கள், நியாயமாக நடத்தல் வேண்டும் என விரும்பியவர்கள், இதைக் கலை, இலக்கிய ஈடுபாடு என்று நான் கூறமாட்டேன், இவ்வாறான போக்குள்ளவர்கள் இத்தேடகத்தை உருவாக்கி ஒரு மாற்றுக் கருத்தினது (இன்று அது சலிப்புற்ற வார்த்தை) அமைப்பாக்கினார்கள். 89ல் உலகத்துத் தமிழ் சமூகத்தினிடையில் எங்குமில்லாத ஒரு மாற்றுக் கருத்து மையம். மூன்று பத்திரிகைக்குப் பின் என்னை மெதுவாக வெளியேற்ற முனைந்தார்கள். ஏனெனில் நான் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனில்லை. இலக்கியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடியிருக்கவேண்டும். அதைக் குறிப்பாக அறிந்து நானும் பின்னர் செழியனும் மெதுவாக தேடலைவிட்டு வெளியேறுகிறோம். அதுதான் உண்மை.

எனக்கு கலை, இலக்கியம்தான் முக்கியமானது. அதிலும் தீவிரஇலக்கிய தளத்தில் சிறுபத்திரிகை போன்ற தளமூடாக முதலில் சிறிதளவு மாற்றத்தையும் அதனூடு சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருதல் எனும் எண்ணத்தில் ‘காலம்’ சஞ்சிகையை வெளியிட முயற்சித்தேன். அது தொடர்பான வேலைகளிற்கு நாட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் நான் இலங்கைக்கு செல்கிறேன். அவ்வேளை இந்தியாவில் தங்கவேண்டியிருந்தது. இந்தியாவில் சி.மோகன் என்ற விமர்சகரின் உதவியோடு ‘காலம்’ என்ற சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் இந்தியாவில் அச்சாகியது. அதில் இலங்கையில் இருந்து கிருஸ்ணகுமார், கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது. இலங்ககை;கு பொறுப்பாக குகமூர்த்தியும், பாரிசுக்கு சபாலிங்கமும் பொறுப்பாக இருந்தனர். இருவரும் இப்போ உயிருடன் இல்லை.

14. ‘பார்வை’ தன் சாத்தியப்பாடுகளை இழந்துவிட்டதாக ஏன் கருதினீர்கள்? அவ்வாறு கருதவில்லையெனில் காலம் என்ற பெயர் பார்வையைவிடவும் இறுக்கமான் உள்ளடக்க அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதாக நினைத்தீர்களா?

உண்மையாக காலத்தைப் பிரதிபலிப்பது இலக்கியம் என்பதால் வைத்தேன். அதன்பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி காலம் என்ற பத்திரிகையை வைத்திருந்ததையும் அறிந்தேன். இலக்கியத்தை முக்கியப்படுத்துவதற்காக இந்தப் பெயரில் இவ்விதழைக் கொணர்ந்தேன். 90ம் ஆண்டில் இரண்டு இதழ் வெளிவந்தது. இன்றுவரை 33 இதழ்கள் வெளிவந்துள்ளன.


15. செறிவான இலக்கிய முயற்சிகளிலிருந்து கனடாவில் இருந்த தீவிர தமிழ்ப் படைப்பாளிகளின் அக்கறைகளை இயக்க அரசியல் ஊறுபடுத்தியதான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. தேடகத்தின் முடக்கம் இதன் உதாரணமாக சொல்லப்படுகிறது. இது அப்படித்தானா என பல அபிப்பிராய பேதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் கூரிய அரசியல் நிலைப்பாடுதான் ஒருபோது தீவிர படைப்பாளிகளின் மையமாக இருந்த அதன் சரிவை விரைவுபடுத்தியது என்பதில் உள்ள உண்மை என்ன?

இப்படியொரு கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட இதை இவ்வாறு பார்க்கலாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாறுதான் இப்படித் தொடர்ந்தது எனலாம். ஏனெனில் இலங்கையில் இலக்கியம் என்று சொல்லப்பட்டது அல்லது வலியுறுக்கப்பட்டது இவ்வாறுதான் இருந்தது. அதாவது அரசியலுக்குத்தான் இலக்கியம் இருந்தது. அதை அழகாக கூறினாலும் அதாவது சமூகவிடுதலைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று கூறினாலும் அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும், எல்லாவற்றையும் பார்க்கிறேன். எமது ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு இதுதான். சமயம் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித்ததோ, இன்று விடுதலைக்காக அல்லது விடுதலைக்கு எதிராக வேறு பலதிற்காகவும் இலக்கியத்தைப் பாவிக்கிறோம். இலக்கியம் என்பது வேறு ஒரு விடயம் என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்தில் அரசியல் வரலாம், இலக்கியத்தில் இயக்கங்கள் பற்றி வரலாம், இலக்கியத்தில் விடுதலைபற்றி வரலாம் ஆனால் இலக்கியம் என்பது வேறு ஒன்று என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்வதில்லை. தமிழில் இருக்கும் ஒரு பெரிய குறை இது. இதுவே காலத்தின்மீது வைக்கும் கேள்விக்கும் ஒரு பதிலாக இருக்கும்.

தேடகம் ஒரு முக்கியமான முயற்சி. ஆனால் தேடகத்தில் என்ன பிரச்சினை என்று கூறினால்… கலை இலக்கிய மன்றம் என்று வைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஆனால் உற்சாகத்தினால் தாங்கள் ஏதோ பெரிதாகச் செய்யலாம் என்ற எண்ணத்தில், இருந்த பெயர் பொருத்தம் காணாது என்பதாக அதை மாற்றி ‘தமிழர் வகைதுறை நிலையம்’ என்ற பெயரை வைத்தனர். நாலுபட்ட கருத்துள்ள, வௌ;வேறு இயக்கங்களில் இருந்து மனவருத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு பொதுக்கருத்துக்காக பணிபுரிகையில் சில முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது.


16. தேடகம் தன் தோற்ற நியாயத்தை நிறைவேற்றவில்லை என்கிறீர்களா?

தேடகத்தின் சாதனைகள் பல இருக்கின்றன. அதன் அதிமுக்கியமான செயற்பாடுகள் தேடல் என்ற பத்திரிகையை வெளியிட்டது, ஒரு மாற்றுக் கருத்து மையத்தை நடத்தியமை, தமிழருக்கான நூலகத்தை ஏற்படுத்தியமை, நவீன நாடகத்தின் தொடக்கத்தை ஆரம்பித்தமை, தேடல் பதிப்பகத்தை நடத்தியமை. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதை நூல்களை அது வெளியிட்டது. இவற்றைவிட முக்கியமானது அந்தந்த நேரத்தில் எது முக்கியமோ தனது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு பொது நன்மைக்காக செயற்பட்டமை. உதாரணத்திற்கு இந்தியன் ஆமி இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது முழுமையாக அதை எதிர்த்து தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்தது. தேடகம் நிறுவனமாக இயங்கியது. விடுதலைப் புலிகளின் கருத்துக்குள் இல்லாவிடினும் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த எவரும,; தங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறமுடியாத அளவுக்கு தேடகத்தின் பின்னணியில் நேர்மை இருந்தது. மனிதநேயப் பண்பிருந்தது. ஆனால் இடைக்காலத்தில் தேடகத்தினுள் இணைந்த வேறுபல புதியவர்கள் அதைக் கைப்பற்றி பிரச்சனைப்பட்டு இன்று மீளவும் அது பழைய இடத்திற்கு வந்துள்ளது.


17. இன்று அவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது?

பழைய இடத்துக்கு வந்ததும் அவர்கள் செய்த முதல்வேலை விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தமை. இன்றுவரை அந்த நேர்மை தொடர்கிறது. ஆனால் இதை கனடாவில் விடுதலைப்புலிகளோ வேறுயாருமோ செய்யவில்லை. இன்றைக்கும் அவ்வாறான நேர்மையான செயல்பாடு இருந்திருக்காவிட்டால் தேடகம்தான் சிறீலங்கா இனவாத அரசின் இயங்கும் மையமாக அமைந்திருக்கும்.

18. தொண்ணூறின் இறுதியிலிருந்து ஒரு புதிய வாசகப் பரப்பு உருவானதாகக் கொள்ளமுடியும். பிரதியை வாசித்து அதன் கட்டுமானத்தை, கருத்தைக் கட்டுடைத்த போக்கினை வாசக விமர்சனமாக அது இத் தீவிர வாசகப் பரப்பு ஏற்றுக்கொண்டது. படைப்பாளியை முற்றுமுழுதாக படைப்பிலிருந்து அந்நியமாக்கியது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்றது பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு. இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடாக சஞ்சரிக்க ஆரம்பித்த வேளையில் பதிப்பு முறையும் மாற்றம் கண்டது. ஆனாலும் அதுவே ஒரு அசுரப் பிறவியாக வளர்ந்து பதிப்பகத்தின் சர்வாதிகாரமாக உருவாகியிருப்பதாகச் சொல்லமுடியும். அதனால்தான் காலம் பதிப்பகத்தைத் தொடக்கினீர்களா?


ஆனந்த பிரசாத் நான் சந்தித்த நல்ல கலைஞன். காலம் ஆரம்பிக்கும்போது 100 டொலர் தந்து தானும் அதில் இணைந்தவர்;. அப்போது காலத்தில் இருந்தது நான், ஆனந்தபிரசாத், செழியன், குமார் மூர்த்தி. பின் ஆனந்தபிரசாத்தும் செழியனும் விலகிவிட்டனர். ஆனந்தபிரசாத்தின் கவிதைகளில் எனக்கு விருப்பம். மிக இலகுவான, நையாண்டியான, சந்தத்துடனான கவிதை. அதை தமிழ்நாட்டில் யாரும் வெளியிடப்போவதில்லை. அதனால் சி.மோகனிடம் கேட்டு ‘அகதியின் பாடல்’ என்ற அவரது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டேன்.

இரண்டாவதாக மூர்த்தியினது புத்தகம். பின் மகாலிங்கத்தின் சிதைவுகள். காலம் 6 மகாகவி சிறப்பிதழாக செய்யதேன். பின் யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தானைச் செய்கிறேன் என்றில்லாமல் இருக்க நீலாவணன் சிறப்பிதழ் செய்தேன். அவ்வேளை எஸ்.பொவிடம் நல்ல கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். அப்போது எஸ்.பொ அதை மித்ர பதிப்பகத்தின் ஊடாக புத்தகமாக போடுவதாகவும் குறிப்பிட்டளவு பணம் தரும்படியும் கேட்டிருந்தார். இவ்வாறாக இவ்வாறாக காலம் பதிப்பகத்தின் ஆரம்பம் இருந்தது.

எனக்கு எப்பவுமே ஒரு பதிப்பகம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது இன்னமும் சுமையானது. இந்த இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின் தீவிர பக்கத்தில் இயங்குகிறோம். வெளியிலும் மதிப்பில்லை.

அவ்வாறே வீட்டிலும் மதிப்பில்லை. நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு குறிப்பிட்ட சிலருக்கு அறிமுகமாய் இருக்கின்றேன். நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்து கொண்டே கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன்.

இது ஒரு வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது. இங்கு காலத்தில் எழுதும் மெலிஞ்சி முத்தன் என்ற கவிஞன் கூறுவதுபோல் ‘நான்கு பக்கத்திலும் கடனால் சூழப்பட்டு’ என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. ‘கெழுறு பிடித்த கொக்கு மாதிரி’ என்ற பழமொழிபோல விழுங்கவும் ஏலாது துப்பவும் ஏலாது. இது மனவருத்தமல்ல. இயல்பைக் கூறுகிறேன நீங்கள் ஏன் விடியப்புறம் எழுந்து எழுதிக்கொண்டிருக்கறீர்கள் என யோசிப்பேன். இந்த வயதிலும் உங்களால் அதை விடமுடியாது இல்லையா? அதுதான். இலக்கியம் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையென்பது மாதிரி.



19. வாழும் தமிழ் தமிழ் புத்தக்; கண்காட்சி பற்றி…..

சிறியளவில் வீட்டில் நூல்களை வைத்திருந்த என்னை குகன், நவரஞ்சன், எல்லாளன் போன்றவர்களின் உற்சாகத்தில் பெரும் எடுப்பில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி 1991 ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாள இருபது வருடங்களாகிவிட்டது. வருடாந்தம் குறைந்தது ஒரு புத்தகக் கண்காட்சியாவது நிகழுகின்றது. நல்ல புத்தகம் நல்ல மனிதனை உருவாக்கும் என்று சொலலிக்கொண்டு இருக்காமல் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி. இன்று வியாபாரி என்ற பெயரை சமபாரித்துக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பத்தின் உதவி கிடைத்தது. பின்னர் இது ஒரு லூசுத்தனமான வேலை என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். சும்மாவோ, பணத்திற்காகவோ ஒரு போதும் கொடுக்க முடியாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றது.

ஒவ்வொரு முறையும் நண்பர்களையே வருத்துகின்றேன். கண்காட்சி முடிய
நண்பர் மயில் சொல்வார் “அண்னை இருபது பெட்டி கொண்டுவந்தனாங்கள்… இப்ப இருபத்தி ஒரு பெட்டி இருக்கின்றது” என்று. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு புதியவர்களாவது வருகின்றார்கள். இந்த முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிக்காவிட்டாலும் புத்தகம் வாங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்.


20. காலத்தை புலம்பெயர்ந்தவர்களின் பத்திரிகையாக நடத்துகிறீர்களா?

உண்மையில் எனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. நாம் புலம்பெயர்ந்து இருப்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றும். ஆனால் நான் இதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையாகவே பார்க்கிறேன். தமிழ் இலக்கியப் பத்திரிகையிலும் ஒரு சிறு பத்திரிகையாகவே பார்க்கிறேன். ஈழத்து இலக்கியகாரர்களில் முக்கியமானவர்கள் என வாயால் சொல்லாது எழுத்தால் காட்டவேண்டும். அதற்கு எல்லோரும் பார்க்கக்கூடிய தளத்தில் அவர்கள் எழுத்தை வரச்செய்தல்வேண்டும். எங்கள் பதுடப்புகள் நல்லதோ இல்லையோ இந்தியாவில் கிடைப்பது கடினம். இது இந்தியாவின் ஒரு அராஜகப் போக்கே தவிர வேறொன்றும் இல்லை. அங்கிருந்து படைப்புகள் இங்கே வரும். ஆனால் இங்கிருந்து படைப்புகள் அங்கே செல்வதில்லை. எடுத்துக்காட்டாக தெணியானின் படைப்புகள். தெணியான்பற்றி யாரும் பேசியது கிடையாது. தெணியானின் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாது. தெணியானின் எழுத்துக்கள் செயற்பாடுகள் பற்றி ஜெயமோகனின் கட்டுரையோடு, வெங்கட் சாமிநாதனின் கட்டுரையோடு, அசோகமித்திரனின் கட்டுரையோடு இணைத்து நான் வெளியிடுகிறேன். அப்போது ‘ஓ இவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்லது இல்லை’ என அறிகின்றனர்.

வாயால் மட்டும் நாங்கள் திறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதாக எங்களை ஒதுக்கவில்லை. சில மனக்குறைகள் இருக்கின்றன. அதாவது, ஈழத்தவர்களின் மொழி விளங்கவில்லை என்பது. கி.ரா. வின் இரண்டாவது கதையிலேயே எனக்கு அவரின் கரிசல் மொழி பிடிபட்டது. ஆனால் இன்றுவரையிலும் ஈழத்தமிழ் கொஞ்சம் கடினமாது என்று சொல்வது எரிச்சலூட்டுவாதாகும். இதைத் தவிர, கைலாசபதியை இன்றுவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். டானியலை ஒரு பகுதியினர் போற்றுகிறார்கள். தலித்தினுடைய முதல் எழுத்தாளர் என்கிறார்கள். மு. தளையசிங்கத்துக்கு பெரிய வாசக வட்டமும், அவரை ஒரு தத்துவவாதியாக ஏற்றுக்கொள்பவர்களும் அங்கே உள்ளனர். பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரை மிஞ்சியவர் என்று கூறுபவர்கள் உள்ளனர். கைலாசபதிதான் தமிழ்மொழியில் சமுதாயத்துக்கும் மனிதனுக்குமான உறவை இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக் கொண்டவர் என்கின்றனர். தமிழ்நாட்டில்தான் கூறுகிறார்கள். சிவத்தம்பியை மிகப்பெரிய குருவாக ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். இன்று சோபா சக்தியும் முத்தலிங்கமும் விற்பனையில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்கள். இதிலெல்லாம் எங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று எங்கும் காணமுடியாது.

திரும்ப திரும்ப என்னைக் காணும்போதெல்லாம் இது புலம்பெயர்ந்த இலக்கியம் இல்லை, இது தமிழ்நாட்டு இலக்கியம் என்போர் உளர். நான் எங்கும் இதை ஒரு புலம்பெயர்ந்த ஏடு என குறிப்பிடவில்லை. இது ஒரு தமிழ் இலக்கிய ஏடு. அவ்வளவே.

அந்த அடிப்படையிலேயே நான் பார்க்கிறேன். ஆனால் நான் பிறந்த நாட்டின் எழுத்தாளர்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு வேறு கருத்துக்கிடையாது. சில வேளைகளில் நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை. அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சிலதைச் செய்வது. நான் எஸ்.பொ.வுக்கு, ஏ.ஜே.க்கு, டொமினிக் ஜீவாவுக்கு, பத்மநாப ஐயருக்கு என இவர்களை அட்டைப்படமாக இட்டுத்தான் இந்தியாவில் இப்புத்தகங்களைச் செய்கிறேன். இப்பெயர்களை சிலவேளை இந்தியாவில் சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.புலம்பெயர்ந்து வந்து ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ மட்டும் ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.

(தொடரும்)
நன்றி: கூர்

Sunday, March 28, 2010

‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 01


 "இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் காலம் நடந்துகொண்டே இருக்கிறது

‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்


1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம்.

முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. ஏனென்றால் இங்கு எவ்வளவோ இலக்கிய ஆளுமைகள் இருக்கின்றார்கள். நான் எதைச் செய்திருக்கின்றேன் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில் சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன். நான் ஒரு கத்தோலிக்க கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் வீட்டில் இரவில் செபமாலை சொல்லப்படும். அதன் பின்னர் இரவு சாப்பாடு முடிய அம்மா அம்மானை வாசிப்பார். ஞான சவுந்தரி, நல்ல தங்காள், அந்தோணியார்….. என எதாவது ஒரு அம்மானைக் கேட்டபடி நான் படித்துக் கொண்டே இருப்பேன். தவக்காலம் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் வியாகுல பிரசங்கம் பாடிக்கொண்டிருப்பார்கள். எதாவது வீட்டில் இருந்து கூத்துப் பாட்டோ, சினிமாப் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கும்.இரவில் ஊரிலும் ஊரைச்சுற்றிய கிராமங்களிலும் வருசத்திற்கு நாலு, ஐந்து நாட்டுக் கூத்துக்களும், அதோடு நாடகங்களும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இவையெல்லாம் ஒருமாதிரியான மனநிலையை என்னிடத்தில் ஏற்படுத்;தியிருந்ததாகவே இப்ப நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு அந்தக் காலத்திலேயே இதொன்றுதான் சரிவரும் என்றுபட்டது. அதாவது இலக்கியம் வாசிப்பது. அங்கிருக்கும்போது ஓரிரு தடவை ‘நான்’ என்றொரு சஞ்சிகை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றினால் வெளியிடப்பட்டது, அது இன்றும் வெளிவருவதாக நினைக்கிறேன், அதில் சில கட்டுரைகளை சும்மா எழுதிப்பார்த்திருக்கிறேன். அது பிரசுரமானது பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. என்னுடைய படைப்பு வந்ததென்று நீண்டகாலமாக அதைக் காவித் திரிந்துள்ளேன். இது 70களின் நடுப்பகுதி, பிற்பகுதி என்று ஞாபகம். அத்துடன் சுதந்திரனுக்கு எழுதிய ஒன்றிரெண்டு கடிதங்கள் வெளிவந்திருக்கவேண்டும். இதைத்தவிர ஈழத்தில் பெரிதாக நான் ஒன்றும் எழுதவில்லை. வாசிப்பு முக்கியம்தானே. படைப்பு எவ்வளவு முக்கியமோ, விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ இதைவிட வாசிப்பு மிக முக்கியம் என்று கருதுகின்றேன். ஆசிரியர் இறந்து விட்டார் என்று சொல்லலாம், பிரதி இறந்து விட்டது என்று சொல்லலாம் ஆனால் வாசகன் இறந்து விட்டான் என்று சொல்லலாமா? தீராத வாசகன்தான் பெரிய இலக்கியகாரன் என்ற நினைப்பு எனக்கு இருக்கின்றது.


2. அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தை அல்லது இலங்கையைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியப் பிரச்சினை இருந்தது. இந்தப் பிரச்சினை உங்களை எவ்வாறேனும் பாதித்திருந்ததா?

நான் ஒரு தமிழரசுக்கட்சி பாரம்பரியத்திலிருந்து வந்தவன். என்னுடைய சிந்திப்பு அந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை தவிர்த்திருக்க முடியாதுதான். ஆனால் வாசிப்புகள் இருந்திருக்கு. மல்லிகையை பார்த்திருக்கின்றேன். …… வாசிக்கவில்லை. அகஸ்தியருடையவை, எஸ்.பொ வினுடையவை வாசித்திருக்கிறேன். ஆனாலும் முற்போக்குப் பத்திரிகைளில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. எனக்கு தமிழரசுக்கட்சிப் பின்னணி இருந்தபடியால் தேசியப் பிரச்சினைபற்றிக் கதைக்காமல் வேறொன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்களே என்று. மற்றது சாதி பற்றி கதைத்தமை எனக்கொரு மனத்தாங்கலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பல மாற்றங்கள் வந்துள்ளன. அன்றிருந்த மனநிலை இன்றில்லை. ஆனால் அன்று அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

3. உங்கள் ஊரைப்பற்றி அதன் மண்மணம் வருவதுமாதிரி உங்கள் மனப்பதிவு என்ன?

என்னுடைய ஊர் வந்து முற்றிலுமான ஒரு கத்தோலிக்க வெள்ளாம் ஆட்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம்.. இன்று ஊர் தலைகீழாகி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கின்றது. ஊரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் பெரியதொரு கடலும், கடற்கரையும் இருந்தன.

மிகவும் துக்கமாக இப்பவும் நினைப்பது என்னவென்றால், சைவ வேளாளர்தான் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு காரணமாக இருந்தது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தளவில் எனது அனுபவங்கள் சார்ந்து நான் கூறுவது கத்தோலிக்க உயர்சாதியினர் மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறார்கள் என்பதே. நான் கூறுவது எல்லோரையும் அல்ல. பெரும்பான்மையானவர்களை. கைகள் விரித்து சிலுவையில் அறையுன்ட இயேசுவின் சிலைக்கு முன்னால், இருக்கிற இடத்தில் சாதிக்கொரு இடம் பிரித்துக் கொடுத்திருந்த மனப்பான்மையை எவ்வாறு இந்த கிறிஸ்தவம் தாங்கிக் கொண்டது என்பது இன்றுவரையும் எனக்கு கேள்வியாகவே இருக்கிறது.

அங்கை பறையர் சமூகம் எனப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகள் மிகமிக துக்கத்தைத் தருவன. நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். படிக்கும் காலத்தில் வெள்ளாம் ஆசிரியர் ஒருவர், ஒரு பறை சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை, மற்ற இரு மாணவர்களைக் கொண்டு இரண்டு கையையும் பிடிக்க சொல்லிவிட்டு கொள்ளிவால் எறும்பை பிடித்து சேட்டினுள் விடுவார். அச்சிறுவன் நெளிவதைப் பார்த்து வகுப்பு முழுவதும் சிரிக்கும். பாடசாலையில் கடைசிப்பாடம் என்னவென்றால் பாடசாலை முடிவடைந்ததும், வெள்ளாம் பெடியள் பறைப் பெடியளுக்கு அடிப்பது. அப்ப அவர்கள் பாடசாலை முடிய புத்தகங்கள் எல்லாம்; எடுத்துக்கொண்டு ஓடத் தயாராக இருப்பார்கள். இப்பிடித்தான் எங்கள் சமூகம் இருந்தது. ஒரு 60-70 வயதான பறைய சமூகத்து முதியவரை என்னுடன் நான்காம் வகுப்பு படிக்கும் பெடியன் ‘டேய்’ என்றுதான் கூப்பிடுவான். டேய் நல்லான், டேய் நீக்கிலான் என்று கூப்பிடுவான். இதை எந்த மனச்சாட்சியுமில்லாது அங்கிருந்த பெரியாக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஒருவர் வந்து இப்படி சொல்லக் கூடாது என்று சொன்னதில்லை. ஏனென்றால் ஆசிரியர்மாரே அப்படியாகத்தான் இருந்தினம். டேய் பறையா என்று ஆசிரியரே மாணவனைக் கூப்பிடும் வகுப்பில் நான் இருந்திருக்கிறேன்.

எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆட்கள் பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள். கடைசியாக அந்த சமூகம் ஈ.பி.ஆh.;எல்.எப்ஃ இன் கதையைக் கேட்டு கடைசியாக தங்களிடம் இருந்த அந்த மேளங்களை எல்லாம் சந்தியில் கொண்டுவந்து போட்டு எரிச்சுப்போட்டு இருந்தது. 2004ல் நான் அங்கே போகும் போது அச்சமூகம் அப்படியே குலைந்து போயிற்று. ஊர் மாறி, தேசம் மாறி எல்லாம் போயிற்று. விடுதலைப் போராட்டம் தொடங்கியதன் பின் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.

அவர்களுக்கு எந்தக் குரலுமில்லை. ஆனால் கோயிலுக்கு காசு கட்டவேணும். மற்றவர்கள் கட்டுவதுபோலத்தான் கட்டவேண்டும். கோயிலின் பராமரிப்பு வேலை செய்யவேணும். ஆனா அவைக்கு எந்த உரிமையும் அங்கே இல்லை.

இதுதான் எங்கள் கிராமம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் கலையும் பக்தியும் நிறைந்த ஒரு நல்ல கிராமம்தான். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையிடம்தான் அந்தக் கிராமம் இருந்தது. நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. வயல், கடல் ஊரின் நடுவில் யாழ்ப்பாணத்திலேயே மிக அழகான கோயில் என ஒரு அமைதியான சூழலுடனும் எனது ஊர் இருந்தது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமைகளை யோசிக்கிறேன். ஆனால் ஊரில் இருந்தபொழுது சந்தோசமாகவே இருந்துள்ளேன்.

எங்கள் வாழ்க்கை விடிய 6 மணிக்கு திருந்தாதி கேட்டால் 6:30க்கு கோயிலுக்கு செல்லவேண்டும். 6:30 பூசை முடிய திரும்ப வந்து 8:00 மணிக்கு பாடசாலை போக வேண்டும். பாடசாலையால் திரும்பியவுடன் மாலைத் திருந்தாதி மணி அடிக்கும்வரை கேட்பாரற்று வயல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் திரிவோம். இப்படியொரு வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு இல்லை என நினைக்கும்போது மிகவும் மனவருத்தமாயிருக்கிறது. எப்படித்தான் அந்த வாழ்க்கை குறையிருந்தாலும் எங்கள் சந்ததிக்கு இனி எந்தக் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை. நாங்கள் பெரிதாக இழந்தது எதுவென்றால் இவைதான். நான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழந்திருக்கிறேன். இந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அந்த வாழ்க்கை, மண்ணோடு மனிசருக்கிருந்த உறவிருக்கல்லவா, அந்த உறவுடன் கூடிய வாழ்க்கை, அற்புதமானது.


4. உங்கள் புலப்பெயர்வின் காரணம் என்ன?

நான் பிரான்சுக்கு 81 முடிவில வருகிறேன். நாட்டில அப்போ ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது. இயக்கங்கள் பெரியளவில் அடையாளப்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எடுத்து வரப்பட்டது. அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. யாழ்ப்பாண பண்ணைவெளியில் வெட்டிப் போடப்பட்டிருந்த செல்வம்,இன்பத்தின் உடல்களைப் பார்த்து பயந்து விட்டேன்.நான் புலம்பெயர்ந்த காரணம் உண்மையில் பெருளாதார நெருக்கடிதான். மற்றது இங்கு தமிழருக்கு ஒரு வாழ்வில்லை என்றும் உறுதியாயிற்று. தமிழருக்கு வாழமுடியாதுதான். ஆனால் உடனடியாக வெளியேறியதற்கு பொருளாதாரம் தான் காரணம். அந்த அடிப்படையில்தான் வெளிநாட்டிற்கு புறப்பட்டு திசை தெரியாமல் நான் பிரான்சுக்கு சென்றிருந்தேன்.

5. அடுத்த கட்ட உங்கள் கலை இலக்கிய ஈடுபாட்டினை நீங்கள் புலம்பெயர்ந்ததன் பின் கொள்ளலாமெனில் அதன் கூர்மையடைதலுக்கு எவற்றைக் காரணமாக நினைக்கிறீர்கள்?

வெளிக்கிட்டு வரும்போது, ஒரு வேதாகமும், ஒரு பாரதியார் கவிதைப் புத்தகம்தான் இருந்தது. நான் பயணம் கூறச்செல்கையில் எங்கள் மாமி வீட்டு முற்றத்தில் பாரதியார் கவிதைப் புத்தகம் இருந்தது. அதை எடுக்கலாமா எனக் கேட்டேன். ‘ஓம்’ என்றார். எடுத்துவந்தேன். பிரான்சுக்கு வந்ததும் இதைத் தவிர வேறொன்றுமே வாசிக்க இருக்கவில்லை. ஊரில் யாழ்ப்பாண நூலகம் எரியுமட்டும் என்னிடம் நான்கைந்து புத்தகங்கள் தினசரி இருந்து கொண்டிருந்தன. இப்ப பிரான்சில பெரிய இடைவெளி. வாசிக்க ஒன்றுமில்லை என்பது மட்டுமல்ல. நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் வரலாற்றில் தமிழர் எதிர்கொள்ளாத பிரச்சினைகள். ஏனென்றால் புதிய நாடு, புதிய மொழி, புதியு கலாச்சாரம், போக்குவரத்துப் பிரச்சினை, சாப்பாட்டுப் பிரச்சினை, கையில் காசில்லாத பிரச்சினை. இவை எல்லாவற்றுக்கும் என்னைவிட சிக்கலுக்குள் இருந்த எனது மைத்துனரின் உதவியையே நம்பி இருந்தேன். இந்தப் பிரச்சினைகளுக்குள் வாசிக்கவும் ஒன்றுமில்லாவிட்டால்; எழுத வேண்டும் போல் இருந்தது. எழுதவேணும் போல இருக்கும்போது இரவில ரொயிலெற்றுக்குள் இருந்து, அல்லது எங்காவது இருந்து எழுதவேணும். எழுதினால் அதை வெளியிடுவதற்கு ஒன்றும் பத்திரிகை, சஞ்சிகையும் இல்லை.

அங்கு என்னுடன் இருந்த நண்பர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இ;ல்லை. அவர்களும் என்னைப்போல அந்த புதிய நாட்டை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிருந்தனர். ஒரு வேலை கிடைக்குமா? ஒரு வதிவிட ‘பேப்பர்’ கிடைக்குமா என்ற பிரச்சினைகளுக்குள் தலை உடைத்துக் கொண்டிருந்தோம். ஊரில் புத்தகங்கள் வாசித்து, கூத்துகள், நாடகங்கள், அரசியல் என்று வாழ்ந்த எனக்கு இந்த அகதி வாழ்கை அவமானமாய், மனப்போராட்டமாய், அவலமாய் இருந்தது. எந்த நேரமும் திரும்பிப் போயிடவேண்டும், திரும்பிப் போயிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.

அப்ப மெல்ல மெல்ல இயக்கங்களினுடைய கிளைகள் அங்கே நிறுவப்பட்டன. அந்த நேரத்திலதான் தற்செயலாக ‘தமிழ்முரசு’ என்ற ஒரு சஞ்சிகையை இன்னொரு நண்பர் வீட்டிற்கு செல்கையில் பார்த்தேன். உடனே புத்தக அலுவலகத்துக்கு இந்தப் புத்தகத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். அப்போதுதான் முதன்முதலில் காலஞ்சென்ற நண்பர் உமாகாந்தனுடன் எனக்கு தொடர்பு ஏற்படுகிறது. உமா காந்தனிடம் சென்றபொழுதுது ஒரு யன்னல் திறந்தது போல் இருந்தது. எங்கள் உறவுதாண்டி என்னை ஒத்த கருத்துள்ளவர்களைச் சந்திப்பதற்கு உமாகாந்தன் ஒரு வெளிச்சத்தை தருகிறார்.

அந்தக் காலகட்டத்தில் எனக்கு வேறு விதமான ஒரு உறவுமுறையால் ஈரோஸ் அமைப்பினுடைய தொடர்பு ஏற்பட்டிருந்தது. 82ன் பிற்பகுதியாக இருக்கலாம், அங்கிருந்த ஈரோஸ் அமைப்பில் வந்து இணையும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சந்தித்து போராட்டம் பற்றியும், மார்க்ஸியம் பற்றியும் கலந்துரையாடல்கள் செய்கிறோம், நீங்கள் வாருங்கள்’ என அழைத்தார்கள். அப்பொழுது எனக்கும் அது ஒரு ஆறுதலாகத் தோன்றியது. இது உமாகாந்தனைச் சந்திப்பதற்கு முன்னரே நடைபெற்று விட்டது. அங்கு பேர்ராளிகளின் முன்னோடியான தோழர் அழகிரியின் மனைவி றஞ்சி அக்கா வீட்டில்தான் சந்திப்புகள.; குகன் என்ற தோழர் இருந்தார். அவர் ஈரோஸ் அமைப்பால் சில பயிற்சிகள் பெற்றவர். அங்கேதான் எனக்கு ஊரில் தெரியாத பல விடயங்களை, செய்திகளை, மார்க்ஸியம் பற்றிய அறிவுகளைப் பெற்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவற்றை கலந்துரையாடலாக நடத்துவார்.பின்னர் உமாகாந்தனின் தொடர்பால் உமாகாந்தனின் தம்பி குகன், கலாமோகன், அருந்ததி, தேவதாசன், சபாலிங்கம் போன்ற நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தன.

இதில் கலாமோகன் மிக முக்கியமான நண்பர். அவரை நான் நாட்டுக்கு வெளியே சந்தித்த ஒரு நல்ல கலைஞனாகக் கருதலாம். இருபத்தினான்கு மணித்தியாலமும் ஒரு இலக்கியகாரனாக நடக்கவேண்டும் என நினைக்கிற ஒரு ஆள். அதோடு அவருக்கு இன்னொரு சிறப்பிருந்தது. அந்த நேரத்தில் அவர் பிரன்சு மொழியை கொஞ்சம் கற்று, பேசக்கூடியவராக புலமையானவராய் இருந்தார். அத்Nhடு அங்குள்ள பெரிய தொழில்சங்கத்தில் அங்கத்தவராய் இருந்தார்அவர் எனக்கு ஒரு நல்ல பாதிப்பைக் கொடுத்திருந்தார்.



6. இயக்க நெறிப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் போக்குகள், தமிழ்ப்பரப்பில் கவனத்தைக் குவித்துவந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடலை பலவீனப்படுத்தியதாகச் சொல்லமுடியுமா?

அப்படியென்று கூறமுடியாது. ஏனெனில் அந்தக்காலத்தில் வந்தவர்கள் எல்லோரும் ஏதோ கட்டத்தில ஏதோ ஒரு வகையில விடுதலைப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுடைய நண்பர்கள் அல்லது எழுத்து முயற்சியிலிருந்தவர்கள். பாரிசினுடைய அன்றைய தமிழ்ச் சூழல் தமிழ் இடதுசாரிகளின் கைகளிலேயே இருந்துள்ளது. ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்றவர்களின் கைகளில். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக அங்கே இயங்கவில்லை. உத்தியோபூர்வகமாக இயங்கியவர்கள் ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்தான்.

பின்னால் 83க் கலவரத்திற்கு பின்பு பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்கியதன் பின்னர் சூழல் மாறிவிட்டது. ஏனெனில் முழுக்க முழுக்க தமிழ் தேசியம் தொடர்பானவர்கள் வந்து குவியத்தொடங்கிவிட்டனர். நான் சந்தித்ததில் சபாலிங்கம் ஒரு முக்கியமானவர். சபாலிங்கம் உண்மையில் ஒரு ஆரம்ப கட்டப் போராளி. அவருக்கு பெரிய இலக்கிய வாசிப்புகள் இல்லை. ஆனால் திடீரென எங்களுடன் இணைந்தது அவரையும் இந்தப் புத்தகங்கள் பக்கம் திருப்பி விட்டது. ஏனென்றால் அவருக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது. அவர் ரெலோவில் இருந்தவர். அவருக்கு எந்தப் பொறுப்பையும் ரெலோ கொடுக்கவில்லை. அவர் சிறியுடன் கதைத்துப்பார்த்தார். ஏனோ அவர்கள் கொடுக்கவில்லை. அதன் மூலம் சபாலிங்கத்துக்கு ஒரு விரக்தி வந்து இந்தப் புத்தகங்கள் பக்கம் வருகிறார். ஏறத்தாழ அந்த நேரத்தில் நான் சபாலிங்கத்தை சந்திக்கும்பொழுது எங்கள் பத்மநாப ஐயரின் ஒரு மறுபதிப்பாகத் தெரிந்தார். ஏராளமான புத்தகங்கள் சேகரித்து, ஏராளமான விடயங்களுடன் இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு கேஸ் எழுதுதல் எனும் வேலையையும் செய்துகொண்டிருந்தார். அவருடைய தொடர்பு கிடைத்ததன் பின்னர் பழையபடி எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் சூழல் உருவாகிறது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபாட்டோடிருந்தார். நான் அவரிடமே மு.தளையசிங்கம், நுஃமான் போன்றோரின் நூல்களைப் பெற்று வாசித்தேன். அவருக்கு அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்று தெரியாது. ஆனால் அந்தநேரத்தில் அவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார். காலப்போக்கில் திரும்பவும் இயக்கம் என செயலாற்றினார்.

அக் காலகட்டத்தில் புஸ்பராஜா போன்றோரும் வந்திருந்தனர். கலாமோகனைத் தவிர்த்துப் பார்த்தால், கலாமோகனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ல் தொடர்பிருந்தது, மற்றவர்கள் எல்லோருக்கும் முக்கியம் இலக்கியம் அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் என்றும் சொல்லமாட்டேன். தான், தான் சேர்ந்த இயக்கமே முக்கியமாக இருந்தது. இது இப்புலம்பெயர்ந்த இலக்கியத்துள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவரும் வந்து சுதந்திரமாக இயங்கவில்லை என்றுதான் நான் கூறுவேன். இலக்கியத்தை ஒரு வாகனமாகப் பாவிப்போம் என்ற பொதுவான ஒரு எண்ணம்தான் அவர்களிடத்தில் இருந்துள்ளது. கலாமோகனுக்கு எஸ்.பொன்னுத்துரையோடு தொடர்பிருந்தபடியால் கலாமோகன் இலக்கியத்தை ஒரு பகுதியாகச் செய்யலாம் என்று நினைத்தார். மற்றவர்கள், உமாகாந்தன் உட்பட, எல்லோரும் இலக்கியத்தை ஒரு வாகனமாக, எவ்வாறு மதமும் அரசியலும் வாகனமாக பாவித்ததோ அவ்வாறு இலக்கியத்தை இவர்கள் பாவிக்க வெளிக்கிட்டார்கள். அந்தளவில் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கு. அது தடையாகவும் இருந்திருக்கிறது என்றே இப்போது கருதுகிறேன்.


7. இது ஓரளவுக்கு உங்கள் இலக்கிய முயற்சிக்கான பின்புலத்தை உருவாக்கி இருக்கிறதா? அவ்வாறாயின் நீங்களே தொடக்கிய இலக்கிய முயற்சி என்ன?

அப்பொழுது ஏதாவது இலக்கியத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக ‘இரவுச் சூரியன்’ என்ற தலைப்பில் எல்லா இயக்கத்திலும் இருந்து இறந்த மூன்று போராளிகளை வைத்து ஒரு கவிதை எழுதி ‘தமிழ்முரசு’க்கு அனுப்பியிருந்தேன். அதற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருந்தது. அப்பொழுது பெரியதொரு அறியப்பட்ட கவிஞன் நீ… நீதான் கவிஞன் …என்றார்கள். கிட்டத்தட்ட நான் கனடா வரும்வரைக்கும் ஒவ்வொரு தமிழ்முரசிலும் கவிதையோ கட்டுரையோ வெளிவந்துகொண்டிருந்தது. அப்படி இவர்களோடு நெருக்கமாக இருந்துகொண்டு நான் ஈரோஸ் அமைப்பில் வேலைசெய்தேன். அது அங்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஈரோசுக்கு நான் தமிழ்முரசில் எழுதுவது இடைஞ்சலாக இருந்தது. என்னை அங்கே எழுதவேண்டாம், அவர்கள் சரியில்லை என எச்சரித்தார்கள். இப்போது போன்றதுமாதிரியான எச்சரிக்கையல்ல அது. கருத்தளவிலான மாறுபாட்டை உசிதமாகத் தெரிவிக்குமளவிற்கே அன்றைய மாறுகருத்துள்ளவர்கள் இருந்தார்கள்.

எனக்கு 86களில் திருமணம் நடக்கிறது. எனக்கு சில உறவினர் இருந்தனர். மனைவிக்கு யாருமில்லை. எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் முழுக்க ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் நண்பர்கள்தான். இவற்றை இப்பொழுது நினைத்துப் பார்த்தால், இலக்கியம் தவிர்த்துப் பார்த்தால், சிரிப்பாக இருக்கிறது. அழகிரியும் சபாலிங்கமும் முன்நின்றனர். சபாலிங்கம் லட்டு செய்துகொண்டு வந்திருந்தார். உமாகாந்தன் கேக் செய்திருந்தார். கலாமோகன் கையால் எழுதிய திருமணப் பத்திரிகையை கொடுத்திருந்தார்.

என்னுடன் தொடர்புடனிருந்த பாண்டிச்சேரி நண்பர்கள் 80பேருக்கு சமைத்தார்கள். இப்பொழுது போலுள்ள வசதியல்ல அப்பொழுது. 80 பேருக்கு சமைப்பது என்பது கற்பனை செய்யமுடியாதது. சமைத்துக்கொண்டிருந்த பொழுது புகை வந்ததால் பொலிஸ் வந்து சாப்பாட்டைக் கொண்டுசென்று விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சமைக்கக் கூடாத இடத்தில் வைத்து சமைத்திருந்தார்கள். பின்னர் நண்பர்கள் சென்று பொலிசுடன் கதைத்து திரும்பப் பெற்று வந்தார்கள். இவ்வாறு பல நிகழ்வுகள். கத்தோலிக்க முறைப்படி மணம் முடித்தபடியால் மணப்பெண்ணுக்கு தலையில் வேல் எனப்படும் முகத்திரை போடவேண்டும். நண்பர் ஒருவர் தான் கொணர்வதாக கூறியிருந்தார். காலை 8:00மணியாகிறது, எட்டுமணிக்கு சடங்கு அவர் வரவில்லை. மணப்பெண் தான் தேவாலயத்திற்கு வரமுடியாது என்றுவிட்டார். இதைக்கூட எடுக்கவில்லையா என காலையிலே சச்சரவு தொடங்கியிருந்தது. பின்னர் நடா என்றொரு நாடகக்கார நண்பர் 7:55க்கு அதைக் கொணர்ந்து மனைவியை சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்துவந்தார். கோயிலில் பாடகர் என்று யாரும் இல்லை. மனைவிக்கோ கோயில் பூசையில் ஒரு பாட்டாவது யாராவது பாடவேண்டும் என்று ஆசை. எனவே மனைவி தானே பாடிவிட்டார். ஆனால் பூசை பிரென்சு பாதிரியாரால் நடத்தப்பட்டது. நண்பர்களுக்கோ வினோதமாக இருந்தது.


8. உங்கள் வாசிப்பு அப்போது எவ்வாறிருந்தது? நீங்கள் ஒரு தீவிர வாசகன் என்று கூறாதபடியால்..?

சோசலிசம் வந்து விட்டால் மனிதனுக்கு எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும் என்ற எண்ணம் எனக்கு ஈரோஸ் தொடர்பால் அப்போது ஏற்பட்டிருந்தது. கிருஸ்ணகுமார் என்பவரை உமாகாந்தன் வீட்டில் சந்தித்தேன். அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்னணி உள்ளவர். அவருக்கும் பத்மநாப ஐயருக்கும் உள்ள தொடர்பால் எனக்கு வேறு புத்தகங்கள் கிடைக்கத் தொடங்கின. ‘அலை’ போன்றவை கிடைத்தன. அதன்பின் ‘மரணத்துள் வாழ்வோம்’ கிடைத்தது. இப்பொழுது என் எண்ணங்களில் தளையசிங்கம் ஒரு முக்கியமானவராக வருகிறார். எனக்கு இன்றைக்கு ஒரு வேலையும் வீடும் கிடைத்தால் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடுமோ என்ற கேள்வி வரும்போதுதான் எனது வாசனைத் தளம் மாறுகிறது. அப்போ அலையில் மு.பொன்னம்பலம் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. யார் இவர், இவ்வாறு எல்லாம் எழுதுகிறார் என்று நினைக்கையில் என் வாசனைத்தளம் மாறுகிறது. நான் வெளியைத் தாண்டி உள்ளடுக்குகளை கொஞ்சம் சிந்திக்கத் தொடங்குகின்றேன்.

அப்பொழுது கலாமோகனுக்கு பொன்னுத்துரையின் மகன் அனுப்பிய ஜே.ஜே சில குறிப்புகள் அவருக்கு வந்து கிடைக்கும்பொழுது பொன்னுத்துரையின் மகன் மித்தி கடலில் இறந்துபோகிறார். அப்போ கலாமோகன் அப்புத்தகத்தை வைத்து ஒரு கதையை எழுதி எனக்குக் காட்டுகிறார்.. அப்பொழுது கலாமோகனிடம் ஜே.ஜே சில குறிப்புகளை பெற்று வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய பாதிப்பைக் கொடுத்தது. செயல் அல்ல செயலின் ஊற்றுக் கண்ணான சிந்தனையைப் பாதிப்பதே என் வேலை….. பல பக்கங்கள் மனப்பாடமாக நான் இப்பவும ;சொல்லுவேண். நான் அதற்கு முன் ஜெயகாந்தனை ஊரில் நூலகத்தில் வாசித்திருந்தேன். ஜானகிராமனை வாசித்திருந்தேன். எனக்கு சுந்தர ராமசாமி புதிதாக இருந்தது. ஜெயகாந்தனுக்குள்ளால் தான் தீவிர வாசிப்புக்கு வருகிறேன். அதன் பிறகு ஜானகிராமனிடம் மிகப்பெரிய பிரியம் வருகிறது. அந்த நேரத்தில்தான் நான் ஊரைவிட்டு வெளியேறினேன். அதற்கிடையில் எனக்கு வேறு யாருமில்லை…. நன்றாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம்; இருந்தது தவிர என்னை அவர்கள் குலைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமியிடம் வரும்போதுதான் ஒரு அதிர்வு வருகிறது. வாழ்க்கை பற்றிய கேள்வி வருகிறது. வாழ்க்கை பற்றிய பார்வைகள் மாறுகிறது. அந்தத் தருணத்தில் தளையசிங்கத்தை வாசிக்கும்போது இன்னமும் அது பொருந்திப் போவதுபோல் இருக்கிறது. மார்க்ஸியமும் தேவை, ஆனால் அதைத்தாண்டியும் மனிதனுக்கு தேவை இருக்கிறது, மார்க்சிய கோட்பாடுகளால் மட்டும் திருப்பதிப்பட முடியாது என்ற எண்ணம் உருவாகிறது. அதனால்தான், அந்த நேரத்தில்தான் எனக்கு ஈரோஸோடு பிரச்சினை உருவாகிறது. ஆனாலும் எது எப்படி இருந்தாலும் பெண்கள் தலைமை தாங்கி (பெண்ணியம் என்று இன்று சொல்லப்படுகின்ற பெண், ஆண் ஆவதல்ல) தனிச்சொத்து வரையறுக்கப் பட்ட ஒரு சமூகம் உருவாகுமானால் இன்றுள்ள பல துண்பங்கள் மனிதருக்கு இல்லாமல் போயிருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.


9. உங்கள் கட்டடிடக் காடு கவிதை நூல் குறித்து

தமிழ் முரசில் எனது கவிதைகள் வரும்போது உமாகாந்தன் அது பற்றிக் கதைப்பார். புலம்பெயர் முதல்கவிதைகள் என்று என்னை உற்சாகப்படுத்துவார். அப்பொழுது வரதராஜப்பெருமாள் அங்கே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். உமா காந்தன் மெல்ல மெல்ல ஈ.பி.ஆர்.எல்.எஃப் பக்கம் போய்விட்டார். அதனால் சங்கே முழங்கு என்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் வருடாந்த கலைநிகழ்வி;ல் இடம்பெறும் கவிதா நிகழ்வில் எனது கவிதை முக்கியமாக இருக்கும். அவற்றைப் புத்தகமாகப் போடுதல் வேண்டும் என்று உமாகாந்தன் கேட்டார். நான் மறுத்தேன். ஏனென்றால் அவை எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை. ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. ஒன்று எனது ஊரின் பிரிவு. இரண்டு அங்கே எதிர்கொண்ட பிரச்சினைகள். மூன்றாவது தேசவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தமை. இந்த மூன்றும் என்னை அலைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது தனிப்பட்ட விதமாயும் மனஉளைச்சல். அந்நேரம் சபாலிங்கம் கூறினார், “நான் ஏசியா என்றொரு புத்தக வெளியீடு கொண்டுவரப்போகிறேன், செல்வத்தின் பாட்டுத்தான் அதில் முதல் போடுவது” என்று. நான் அதில் அக்கறைப் படவில்லை. புத்தகமாக வரும்போது அதன் பலவீனங்கள் எனக்குத் தெரியும். நான் அப்பொழுது வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் நான் இங்கே கனடாவுக்கு வந்ததன்பின் சபாலிங்கம் தனது இரண்டாவது வெளியீடாக அதைச் செய்திருந்தார்.



10. பிரான்ஸில் வளர்ந்துவந்த தமிழ் தீவிர கலை இலக்கிய முயற்சிகளில் பிரான்ஸிய இலக்கியப் புதுநெறிகளின் குறிப்பாக பின்அமைப்பியலின் செல்வாக்கு எவ்வாறு இருந்ததாகக் கருதுகிறீர்கள்?

அப்படி ஒன்றும் நிகழவில்லை. நான் அறிய கலாமோகன் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவராக இருந்தார். இதில்தான் சல்வடோர் டாலி தேத்தண்ணி குடித்திருந்தார். இதிலதான் பிகாசோ வந்து கோப்பி குடித்திருந்தார். இதுதான் பிகாசோவின் மாளிகை, இதில்தான் பிகாசோவின் ஓவியங்கள் என கலாமோகன் இவற்றை எனக்கு காட்டித்தருவார்.

பாரிசின் பெரிய நூலகத்திற்கு நான் அடிக்கடி செல்வேண். எனக்கு பிரென்சு வாசிக்கத் தெரியாது. இலட்சக்கணக்கான நூல்களில் இரண்டு தமிழ் புத்தகங்கள் இருக்கலாம். அந்தச் சூழலுக்காக மட்டும் அங்கே முன்னால் சென்று இருப்பேன். அந்தச் சூழலுக்குள் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் இந்தியப் படவிழா நடைபெறுவதாக விளம்பரம் பார்த்தேன். அப்பப்போ பத்திரிகைகளில் வாசித்ததினால் சத்தியஜித் ரே, மிர்ணாள் சென் போன்றோரின் பெயர்கள் பரிச்சயமாகியிருந்தன. படத்திற்குப் போனால் அங்கே பிரெஞ்சு மொழியில் எழுத்துகள் போடுவார்கள். ஒன்றும் விளங்காது. இருந்தும் நான் தொடர்ந்து போவேன். கிருஸ்ணகுமாரை ஒவ்வொரு நாளும் படவிழாவில் காண்பேண். கிருஸ்ணகுமாரைப் பொறுத்தளவில் உமாகாந்தன் வீட்டில் சந்தித்தாலும் நான் அவருடன் நட்பாகவில்லை. பிரெஞ்சுக்காரர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு விளங்காவிட்டாலும் இதற்குள் ஏதோ இருக்கிறது என தொடர்ந்து போய் வந்தேன். ஒரு நாள், நாயக் என்று நினைக்கிறேன், அப்படத்தைப் பார்த்துவிட்டு கிருஸ்ணகுமாரிடம் “ உண்மையில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இதில் என்ன இருக்கிறது, எழுந்து நின்றெல்லாம் கைதட்டுகிறார்கள்” என்று கேட்டேன். கிருஸ்ணகுமார் கொஞ்சம் விளங்கப்படுத்தியபின் உம் வீட்டுக்கு வரலாமா எனக்கேட்டார். பின்னர் இது பெரும் நட்பாக மாறியது என்னை தீவிர இலக்கியத்திற்கு கொணர்ந்ததற்கு கிருஸ்ணகுமாருக்கு பெரும் பங்கிருக்கிறது. ஆனால் அவர் பெரிதாக எழுதுபவர் அல்லர். நல்ல வாசகன். கல்விப் பின்னணி உள்ளவர்.

நாங்கள் இருந்த காலத்தில் யாருக்கும் பின்னவீனத்துவம் பற்றி தெரியாது. அது பின்னுக்குத்தான் வந்தது. ஆகக் கூடினால் மாபசானைத் தெரியும். நான் இருந்த வீட்டின் அண்மைய சப்வேக்கு பெயர் கப்ரியல் பெரி. இந்த சப்வேயில் எத்தனையோ வருடங்களாக நான் சென்று வந்துள்ளேன். ஆனால ஒரு சஞ்சிகையில் எஸ்.வி.ராஜதுரை கப்பிரியல் பெரியின் கவிதை மொழிபெயர்ப்பைப் பார்த்ததன் பின்தான் ஓ நான் ஒரு கவிஞனின் பெயர்கொண்ட சப்வேயில்தான் இருக்கிறேன், அருகில் தான் எனது வீடு என்று பெருமைப்பட்டேன். இதுதான் அப்ப இருந்த பிரான்ஸ் சூழல். ஒருவருக்கும் நாம் ஒரு மிகப்பெரிய நாட்டில் இருக்கிறோம், ஒரு கலைப் பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை. மொழிப் பிரச்சினையும் அவற்றை அணுகும் மன அவகாசங்கள் அன்று இல்லாதிருந்தமையும் அதற்குக் காரணம். ஒருவருக்கும் மொழியைப் படித்து வளரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எப்பவும் ‘எப்படி வந்த கடன் அடைப்பது? எப்படி மணம்முடிப்பது? எவ்வாறு குடும்பத்தைக் காப்பாற்றுவது?’ என்ற மனநிலைதான். அதைவிட இடைஞ்சலாக இருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம்.

(தொடரும்...)

(எனது தளத்தில் 'காலம்' செல்வத்தின் நேர்காணலை வெளியிட விரும்பியபோது, 'கூர்'த் தொகுப்பில் வெளிவந்த இந்நேர்காணலை மின்னஞ்சலில் அனுப்பி உதவிய  தேவகாந்தனிற்கு நன்றி)

Saturday, March 13, 2010

போருக்குப் பின்பான ஈழம் பற்றிய CNN ஆவணப்படம்




இந்த ஆவணப்படம் CNN ற்காய் Sara Sidner ரால் எடுக்கப்பட்டது.

-CNN ஆவணப்படத்தில் part-3 ல் கண்ணிழந்து, கால்களிழந்த ஒரு இளம்பெண் கதைப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு அடைத்துக்கொள்கிறது (twitter)

-இந்த நேரடிச் சாட்சியங்கள் பேச்சோடு மகிந்தா திமிரோடு கதைப்பதையும் பாருங்கள்; இன்னும் மகிந்தாவோடு எடுபிடிகளாய் இருப்பவர்களும் இதைப் பார்க்கவேண்டும் (twitter)