Monday, March 29, 2010

‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல் - பகுதி 02


காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்

11. தொண்ணூறுகளின் ஆரம்பம் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்த ஈழத் தமிழர் வாழ்நிலைக்கு ஒரு தளும்பலைக் கொடுத்தெனின், அதிலிருந்து தப்பிக்க இங்கிலாந்து நோக்கியும், வடஅமெரிக்கா நோக்கியுமான ஓர் இரண்டாவது புலப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கொள்ள முடியும். உங்களது கனடாவுக்கான பெயர்வும் இது சுட்டியதா?

ஒன்று படித்தவர்களிடம் ஆங்கில மோகம் இருந்தது. பிரான்ஸ், ஜேர்மனியில் இருந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியில் படித்தால் ஊருக்குத் திரும்பும்போது இடைஞ்சல். என்ற கனவு. இரண்டாவது, இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடம்; இறுதிவரை கொடுக்கமாட்டார்கள். எப்போதும் நீங்கள் அந்நியர்தான். நல்ல உதாரணம் பிரான்ஸில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி மக்கள். அவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் அவர்கள் இன்றுவரை பாண்டிச்சேரிக் கனவிலேயே இருக்கிறார்கள். புலம் பெயர்ந்ததவர்குளுக்கு; தரத்தில் கனடா ஒரு புண்ணிய பூமிதான். யுத்தத்தால் அகதியாக வெளியேறிய ஒருத்தன் கௌரவமாக வாழ்வதற்குரிய இடம் கனடாதான். ஐரோப்பாவில் இருந்தபடியால் கூறுகிறேன்.



12. கனடாவுக்கு தமிழர் புலப்பெயர்வு அதிகரித்த வேளையில் அதன் குவிமையம் மொன்றியலாக இருந்திருக்கிறது. இங்கே உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு ஆரம்பித்தன?

ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் மொன்றியலுக்குத் தான் வந்தார்கள். உண்மையில் தமிழர்களின் மையமாக மொன்றியலே அமைந்திருக்க வேண்டும். நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. அப்ப நான் 3 மாதம் நிறைந்த ஒரு மகனுடன்தான் வந்திருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரே ஒரு தொடர்பு ‘மணிமுடிகள் தான் சாம்பலுக்குள்ளே அம்பும் வில்லுமா’ , ‘எனது கூவல் நிறைய எனது சோலை வேண்டும்’ போன்ற கவிதைகளைத் தந்த ஹம்சத்வனி என்ற கவிஞர், அவர் இப்போது எழுதுவதில்லை, அவர்தான் விடயங்களை எங்கே பெறலாம் என்று கூறியிருந்தார்.

வந்து நான்கு நாட்களுக்குள் யாரிடமோ விசாரித்து தமிழ்ஒளிக்கு பத்திரிகை படிப்பதற்காக அங்கே செல்லத் தொடங்கிவிட்டேன். அங்கேதான் பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் மோசமான வடிவில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் எண்ணினேன். போது எழுதுவதற்கு படைபப்பாளிகள் இல்லை. தொடர்புகள் இல்லை. கணனியில் தமிழ் எழுத்துகள் இல்லை. கையெழுத்து சஞ்சிகை. எனவே தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் மறுபிரசுரம் செய்துதான் பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் புறப்பட்டேன். உள்ளுர் விடயங்கள் சிலவற்றையும் இலங்கையில் இருந்து சரிநிகர் அரவிந்தன் போன்றவர்கள் அனுப்பிய ஆக்கங்கள் சிலவற்றையும் இட்டு அப்பப்போ சிறிதாக எழுதக் கூடியவர்களையும் தேடி அச் சஞ்சிகையை நடத்தினேன். அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்தபிரசாத், குமார் மூர்த்தி போன்றவர்கள். இவர்களும் எழுதத் தொடங்கிய பின் மொன்றியள் மூர்த்தியின் வடிமபைப்புடன் சஞ்சிகையின் தரம் மாறுகிறது.

இப்படி ஒரு நாளில் 1987ல் பூட்டிக் கிடந்த தமிழர் ஒளி காரியாலயத்தின் நான் காத்துக் கொண்டிருந்த போது, மெல்லிய உடலுடன் ஒருவர் முழுசிக் கொண்டிருந்தார்.

“என்ன விடயமாக இங்கு காத்திருக்கின்றீர்கள்?” என்று அவரைக் கேட்டேன்.

‘இந்திய இராணுவம் இலங்கையில் நடாத்திய படுகொலைகள் திகதி வாரியாக தொகுக்கப்பட்டு இலங்கையில் இருந்து தபாலில் வந்துள்ளது என்றும், அதை பல பிரதிகள் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தமிழர் ஒளிக்கு வந்ததாக அவர் கூறி, அதற்கு உதவமுடியுமா?’ என்று அவர் கேட்டார்.

அதை நிச்சயமாகச் செய்யலாம் என்று கூறிய நான் “உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டேன். “செழியன்” என்று கூறினார்.

“மரணம் கவிதை எழுதிய செழியனா?”என்று ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆம்|” என்று சொன்னார்.

'ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஆயுதமும் வைத்திருந்த கவிஞர்’ என்று நாங்கள் பாரிசில் சொல்லித்திரிந்த கவிஞரை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. அதில் இருந்து பார்வையில் அவரும் எழுதத் தொடங்கினார்

‘தற்போது காலம் நடத்துகிறீர்கள். ஆனால் பார்வை தந்த பிரமிப்பு இதில் இல்லை. அதற்கு கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு’ என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அதில் பெரும்பான்மையானவை மறுபிரசுரங்களதொடர்ச்சியாக நான் பதினைந்து இதழ்களைச் செய்திருக்கிறேன். அதில் பின்பு ஒரு சிக்கல் வருகிறது.

பார்வைக்கு ஆனந்தபிரசாத் ஒவ்வொரு முறையும் கவிதை தருவார். அவர் ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு செல்கையில் ஏதோ பிரச்சனையில் தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடிபட்டு மண்டைஉடைபட்டுக்கொண்டனர்;. இது எந்தக் காலம் என்றால், மொன்றியலில் உலகத் தமிழர்கள் நடாத்திய நிகழ்சியில் மது போதையில் சென்றவர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் பிரச்சனை நடந்து, அது பற்றி மொன்றியல் மூர்த்தி ‘உலகத் தழிழருக்கும், உலகத்தில் இல்லாத தமிழருக்கும் அடி தடி” என்று எழுதிய நாட்களாகும்.

ஆனந்தபிரசாத்துக்கு அங்கே அவர்கள் அடித்துக் கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அதை கருவாக வைத்து “கடராம் வென்றபின்’ கடல்கடந்து வந்தாலும் பண்டைதமிழரின்பாரம்பரியங்கள் மண்டை உடைப்பதால் மகத்துவம் பெறுகிறது, ‘சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்’ என்று கருத்துப்பட ஒருகவிதை எழுதினார். அந்தக் கவிதை பிரதியாக பார்த்த தமிழர் ஒளியைச் சார்ந்த ஒருவர் உலகத்தமிழர் அமைப்பிடம் சென்று உங்களுக்கு எதிராக ஒரு சஞ்சிகை வருகிறது என்று கூறியிருக்கிறார். இவருக்கு பார்வையில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது.

உண்மையில் உலகத் தமிழருக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கவிதை வாசித்ததும் இல்லை. உலகத் தமிழர், தமிழர் ஒளியுடன் தொடர்பு கொண்டனர். தமிழர் ஒளி பொறுப்பானவர் என்னிடம் , “அந்தக் கவிதையை எடுத்து விட்டு பார்வையை வெளியிடுமாறு” எனறு மன்றாடினார். நானோ அவ்வாறு எடுக்கமுடியாது என்று கூறிவிட்டு, எனக்கு பார்வைக்காக எல்லா உதவிகளும் செய்த ராஐவும் அதை விட்டு வெளியேறி விட்டோம்.


13. ரொறன்ரோவில் அப்போது நிலைமை எப்படி இருந்தது? உங்கள் முயற்சிகளையெல்லாம் முதலிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கவேண்டி இருந்திருக்குமே!

ரொறன்ரோவுக்கு வருகிற காலமும் கிட்டத்தட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்ததும் ஒரே காலம் என நினைக்கிறேன். ஆனால், அங்கிருந்து வந்தவுடன் ரொற ன்டோ சூழல் பெரிய அதிர்வாக இருந்தது. எல்லோரும் இரண்டு, மூன்று வேலை என்றிருந்தார்கள். காசு உழைச்சு ஒரு மனிசனாக வேண்டும் என்று சுற்றிவர உள்ள உறவுகளின் புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு இப்படி இருப்பது என்பது கடினமாக இருந்தது. அவ்வேளை சில நண்பர்களின் தொடர்பு ஜயகரன் ஊடாக கிடைத்தது.

வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்திப்பில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் அப்பொழுதான் கன்டாவிற்கு புதிதாக வந்திருந்த அந்த இளைஞர்கள் சிலரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. பல இளைஞர்கள் அப்பொழுதான் புதிதாக வந்து தாங்கள் நாட்டை மறக்க இயலாது, ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் வயது மூத்தவர்களாக தெரிந்திருக்கலாம். எங்கள் சொல்லை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏதாவது செய்வம் ஆனால் எல்லாம் புத்தகம், கலை இலக்கியங்களுக்கூடாகவே செய்வோம் என நான், குமார் மூர்த்தி போன்றோர் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் குமார் மூர்த்தி, செழியன் போன்றோரையும் இவர்களுடன் இணைத்தேன். என்ன செய்வோம் என்றதற்கு நான் தேடல் என்றொரு சஞ்சிகை செய்வோம் என்றேன். உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. செய்வம் அண்ணே, காசு பிரச்சினையில்லை என்றார்கள். எங்கே அச்சடிப்பது என்றால் அச்சகத்தில் கொடுத்து அடிப்போம் என்றார்கள். அச்சகத்தில் தமிழ் எழுத்தில்லையே என்றேன். அப்ப என்ன செய்யலாம் என்றனர். தமிழ் தட்டச்சு இயந்திரம் வாங்க வேண்டும் என்றேன். சம்மதித்தார்கள். ஒரு கிழமையில் இந்தியாவில் இருந்து அது வாங்கப்பட்டது. எப்படி தட்டச்சு செய்வதென்றே தெரியாது.

திடீரென ஒரு கடைக்குப் பின்னிருந்த கராஜ் ஒன்றை வாடகைக்குப்பெற்று ஒரு வாசிகசாலையை தேடகம் என பெயரிட்டு ஆரம்பித்தார்கள். இது சரியாக அமிர்தலிங்கம் இறந்த அந்தக் கிழமைதான் நடந்தது. தமிழர் விடுதலையை ஆதரித்து விடுதலைப்புலிகள் சாரா, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அமைப்பு உலகத்தில் முதல்தடவை நிறுவனரீதியாக ஆரம்பிக்கப்படுகிறது.

அந்தக் கிழமைதான் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாது இன்னொரு விடயம் நடைபெற்றது. வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்தியில் தாயகம் என்ற சஞ்சிகையை சிறுவன் ஒருவன் விற்பனை செய்துகொண்டிருந்தான். அதுதான் நான் நினைக்கிறேன் கனடாவில் முதலில் கணணியில் ரைப் செய்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை. அப்போதுதான் இது நல்ல விடயமாயிருக்கிறதே என அந்த ஆசிரியரைத் தொடர்புகொண்டோம். அவர்தான் ஜோர்ஜ். பின் அவரின் உதவியுடன் தேடலையும் அச்சாக்க எண்ணி தேடலின் ஆசிரியர் குழுவில் நான், ஜயகரன், செழியன் இணைந்தோம்.

ஜோர்ஜினுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் ஆதரவு அவருக்கும் கிடைக்கிறது. ஜோர்ஜ் இங்கிருக்கும் தமிழ்ச் சூழலுக்கு ஒரு முக்கிய காரணி. ஜோர்ஜிற்கு நல்ல தொழில்நுட்பம், ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஒரு சுதந்திரமான பத்திரிகை கொண்டுவரவேண்டும் என்ற ஒரு விருப்புத்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த சிலர் அவரைச் சினமூட்டி அவரை ஒரு புலியெதிர்ப்பாளராக உருவாக்கி விட்டார்கள். எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு கலை, இலக்கியத்தில் பெரிய ஆழம் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் ஒரு சுயசிந்தனையாளன். ஒரு விடயத்தை எழுதினால் அதை மிக அழகாக எழுதுவார். ஆசிரிய தலையங்கம் எழுதினால் மிக அருமையாக இருக்கும். பைபிளில் ஒரு வசனம் வருகிறது, ‘ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து அவர் சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினார்’ என. யோசித்துப் பார்த்தால் நாங்கள் எவ்வளவுதான் புத்தகங்கள் வாசித்தாலும் இவையெல்லாம் எங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஜோர்ஜ் நிறைய வாசிப்பு இல்லாமலே சுயசிந்தனையில் எழுதுவதென்பது சிறப்பே. ஜோர்ஜிடம் இருந்தது ஒரு நேர்மை. இது அன்றைய நான் சந்தித் ஜோர்ஜ். ஆனால் அந்த வீச்சில் வந்திருந்தால் இன்று ஒரு நல்ல படைப்பாளியாக அவர் இருந்திருப்பார்.

இந்தப் பக்கம் நிறைய உற்சாகமான, மானிட நேயத்தை விரும்பிய இளைஞர்கள், நியாயமாக நடத்தல் வேண்டும் என விரும்பியவர்கள், இதைக் கலை, இலக்கிய ஈடுபாடு என்று நான் கூறமாட்டேன், இவ்வாறான போக்குள்ளவர்கள் இத்தேடகத்தை உருவாக்கி ஒரு மாற்றுக் கருத்தினது (இன்று அது சலிப்புற்ற வார்த்தை) அமைப்பாக்கினார்கள். 89ல் உலகத்துத் தமிழ் சமூகத்தினிடையில் எங்குமில்லாத ஒரு மாற்றுக் கருத்து மையம். மூன்று பத்திரிகைக்குப் பின் என்னை மெதுவாக வெளியேற்ற முனைந்தார்கள். ஏனெனில் நான் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனில்லை. இலக்கியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடியிருக்கவேண்டும். அதைக் குறிப்பாக அறிந்து நானும் பின்னர் செழியனும் மெதுவாக தேடலைவிட்டு வெளியேறுகிறோம். அதுதான் உண்மை.

எனக்கு கலை, இலக்கியம்தான் முக்கியமானது. அதிலும் தீவிரஇலக்கிய தளத்தில் சிறுபத்திரிகை போன்ற தளமூடாக முதலில் சிறிதளவு மாற்றத்தையும் அதனூடு சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருதல் எனும் எண்ணத்தில் ‘காலம்’ சஞ்சிகையை வெளியிட முயற்சித்தேன். அது தொடர்பான வேலைகளிற்கு நாட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் நான் இலங்கைக்கு செல்கிறேன். அவ்வேளை இந்தியாவில் தங்கவேண்டியிருந்தது. இந்தியாவில் சி.மோகன் என்ற விமர்சகரின் உதவியோடு ‘காலம்’ என்ற சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் இந்தியாவில் அச்சாகியது. அதில் இலங்கையில் இருந்து கிருஸ்ணகுமார், கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது. இலங்ககை;கு பொறுப்பாக குகமூர்த்தியும், பாரிசுக்கு சபாலிங்கமும் பொறுப்பாக இருந்தனர். இருவரும் இப்போ உயிருடன் இல்லை.

14. ‘பார்வை’ தன் சாத்தியப்பாடுகளை இழந்துவிட்டதாக ஏன் கருதினீர்கள்? அவ்வாறு கருதவில்லையெனில் காலம் என்ற பெயர் பார்வையைவிடவும் இறுக்கமான் உள்ளடக்க அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதாக நினைத்தீர்களா?

உண்மையாக காலத்தைப் பிரதிபலிப்பது இலக்கியம் என்பதால் வைத்தேன். அதன்பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி காலம் என்ற பத்திரிகையை வைத்திருந்ததையும் அறிந்தேன். இலக்கியத்தை முக்கியப்படுத்துவதற்காக இந்தப் பெயரில் இவ்விதழைக் கொணர்ந்தேன். 90ம் ஆண்டில் இரண்டு இதழ் வெளிவந்தது. இன்றுவரை 33 இதழ்கள் வெளிவந்துள்ளன.


15. செறிவான இலக்கிய முயற்சிகளிலிருந்து கனடாவில் இருந்த தீவிர தமிழ்ப் படைப்பாளிகளின் அக்கறைகளை இயக்க அரசியல் ஊறுபடுத்தியதான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. தேடகத்தின் முடக்கம் இதன் உதாரணமாக சொல்லப்படுகிறது. இது அப்படித்தானா என பல அபிப்பிராய பேதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் கூரிய அரசியல் நிலைப்பாடுதான் ஒருபோது தீவிர படைப்பாளிகளின் மையமாக இருந்த அதன் சரிவை விரைவுபடுத்தியது என்பதில் உள்ள உண்மை என்ன?

இப்படியொரு கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட இதை இவ்வாறு பார்க்கலாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாறுதான் இப்படித் தொடர்ந்தது எனலாம். ஏனெனில் இலங்கையில் இலக்கியம் என்று சொல்லப்பட்டது அல்லது வலியுறுக்கப்பட்டது இவ்வாறுதான் இருந்தது. அதாவது அரசியலுக்குத்தான் இலக்கியம் இருந்தது. அதை அழகாக கூறினாலும் அதாவது சமூகவிடுதலைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று கூறினாலும் அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும், எல்லாவற்றையும் பார்க்கிறேன். எமது ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு இதுதான். சமயம் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித்ததோ, இன்று விடுதலைக்காக அல்லது விடுதலைக்கு எதிராக வேறு பலதிற்காகவும் இலக்கியத்தைப் பாவிக்கிறோம். இலக்கியம் என்பது வேறு ஒரு விடயம் என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்தில் அரசியல் வரலாம், இலக்கியத்தில் இயக்கங்கள் பற்றி வரலாம், இலக்கியத்தில் விடுதலைபற்றி வரலாம் ஆனால் இலக்கியம் என்பது வேறு ஒன்று என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்வதில்லை. தமிழில் இருக்கும் ஒரு பெரிய குறை இது. இதுவே காலத்தின்மீது வைக்கும் கேள்விக்கும் ஒரு பதிலாக இருக்கும்.

தேடகம் ஒரு முக்கியமான முயற்சி. ஆனால் தேடகத்தில் என்ன பிரச்சினை என்று கூறினால்… கலை இலக்கிய மன்றம் என்று வைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஆனால் உற்சாகத்தினால் தாங்கள் ஏதோ பெரிதாகச் செய்யலாம் என்ற எண்ணத்தில், இருந்த பெயர் பொருத்தம் காணாது என்பதாக அதை மாற்றி ‘தமிழர் வகைதுறை நிலையம்’ என்ற பெயரை வைத்தனர். நாலுபட்ட கருத்துள்ள, வௌ;வேறு இயக்கங்களில் இருந்து மனவருத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு பொதுக்கருத்துக்காக பணிபுரிகையில் சில முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது.


16. தேடகம் தன் தோற்ற நியாயத்தை நிறைவேற்றவில்லை என்கிறீர்களா?

தேடகத்தின் சாதனைகள் பல இருக்கின்றன. அதன் அதிமுக்கியமான செயற்பாடுகள் தேடல் என்ற பத்திரிகையை வெளியிட்டது, ஒரு மாற்றுக் கருத்து மையத்தை நடத்தியமை, தமிழருக்கான நூலகத்தை ஏற்படுத்தியமை, நவீன நாடகத்தின் தொடக்கத்தை ஆரம்பித்தமை, தேடல் பதிப்பகத்தை நடத்தியமை. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதை நூல்களை அது வெளியிட்டது. இவற்றைவிட முக்கியமானது அந்தந்த நேரத்தில் எது முக்கியமோ தனது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு பொது நன்மைக்காக செயற்பட்டமை. உதாரணத்திற்கு இந்தியன் ஆமி இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது முழுமையாக அதை எதிர்த்து தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்தது. தேடகம் நிறுவனமாக இயங்கியது. விடுதலைப் புலிகளின் கருத்துக்குள் இல்லாவிடினும் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த எவரும,; தங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறமுடியாத அளவுக்கு தேடகத்தின் பின்னணியில் நேர்மை இருந்தது. மனிதநேயப் பண்பிருந்தது. ஆனால் இடைக்காலத்தில் தேடகத்தினுள் இணைந்த வேறுபல புதியவர்கள் அதைக் கைப்பற்றி பிரச்சனைப்பட்டு இன்று மீளவும் அது பழைய இடத்திற்கு வந்துள்ளது.


17. இன்று அவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது?

பழைய இடத்துக்கு வந்ததும் அவர்கள் செய்த முதல்வேலை விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தமை. இன்றுவரை அந்த நேர்மை தொடர்கிறது. ஆனால் இதை கனடாவில் விடுதலைப்புலிகளோ வேறுயாருமோ செய்யவில்லை. இன்றைக்கும் அவ்வாறான நேர்மையான செயல்பாடு இருந்திருக்காவிட்டால் தேடகம்தான் சிறீலங்கா இனவாத அரசின் இயங்கும் மையமாக அமைந்திருக்கும்.

18. தொண்ணூறின் இறுதியிலிருந்து ஒரு புதிய வாசகப் பரப்பு உருவானதாகக் கொள்ளமுடியும். பிரதியை வாசித்து அதன் கட்டுமானத்தை, கருத்தைக் கட்டுடைத்த போக்கினை வாசக விமர்சனமாக அது இத் தீவிர வாசகப் பரப்பு ஏற்றுக்கொண்டது. படைப்பாளியை முற்றுமுழுதாக படைப்பிலிருந்து அந்நியமாக்கியது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்றது பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு. இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடாக சஞ்சரிக்க ஆரம்பித்த வேளையில் பதிப்பு முறையும் மாற்றம் கண்டது. ஆனாலும் அதுவே ஒரு அசுரப் பிறவியாக வளர்ந்து பதிப்பகத்தின் சர்வாதிகாரமாக உருவாகியிருப்பதாகச் சொல்லமுடியும். அதனால்தான் காலம் பதிப்பகத்தைத் தொடக்கினீர்களா?


ஆனந்த பிரசாத் நான் சந்தித்த நல்ல கலைஞன். காலம் ஆரம்பிக்கும்போது 100 டொலர் தந்து தானும் அதில் இணைந்தவர்;. அப்போது காலத்தில் இருந்தது நான், ஆனந்தபிரசாத், செழியன், குமார் மூர்த்தி. பின் ஆனந்தபிரசாத்தும் செழியனும் விலகிவிட்டனர். ஆனந்தபிரசாத்தின் கவிதைகளில் எனக்கு விருப்பம். மிக இலகுவான, நையாண்டியான, சந்தத்துடனான கவிதை. அதை தமிழ்நாட்டில் யாரும் வெளியிடப்போவதில்லை. அதனால் சி.மோகனிடம் கேட்டு ‘அகதியின் பாடல்’ என்ற அவரது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டேன்.

இரண்டாவதாக மூர்த்தியினது புத்தகம். பின் மகாலிங்கத்தின் சிதைவுகள். காலம் 6 மகாகவி சிறப்பிதழாக செய்யதேன். பின் யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தானைச் செய்கிறேன் என்றில்லாமல் இருக்க நீலாவணன் சிறப்பிதழ் செய்தேன். அவ்வேளை எஸ்.பொவிடம் நல்ல கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். அப்போது எஸ்.பொ அதை மித்ர பதிப்பகத்தின் ஊடாக புத்தகமாக போடுவதாகவும் குறிப்பிட்டளவு பணம் தரும்படியும் கேட்டிருந்தார். இவ்வாறாக இவ்வாறாக காலம் பதிப்பகத்தின் ஆரம்பம் இருந்தது.

எனக்கு எப்பவுமே ஒரு பதிப்பகம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது இன்னமும் சுமையானது. இந்த இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின் தீவிர பக்கத்தில் இயங்குகிறோம். வெளியிலும் மதிப்பில்லை.

அவ்வாறே வீட்டிலும் மதிப்பில்லை. நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு குறிப்பிட்ட சிலருக்கு அறிமுகமாய் இருக்கின்றேன். நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்து கொண்டே கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன்.

இது ஒரு வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது. இங்கு காலத்தில் எழுதும் மெலிஞ்சி முத்தன் என்ற கவிஞன் கூறுவதுபோல் ‘நான்கு பக்கத்திலும் கடனால் சூழப்பட்டு’ என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. ‘கெழுறு பிடித்த கொக்கு மாதிரி’ என்ற பழமொழிபோல விழுங்கவும் ஏலாது துப்பவும் ஏலாது. இது மனவருத்தமல்ல. இயல்பைக் கூறுகிறேன நீங்கள் ஏன் விடியப்புறம் எழுந்து எழுதிக்கொண்டிருக்கறீர்கள் என யோசிப்பேன். இந்த வயதிலும் உங்களால் அதை விடமுடியாது இல்லையா? அதுதான். இலக்கியம் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையென்பது மாதிரி.



19. வாழும் தமிழ் தமிழ் புத்தக்; கண்காட்சி பற்றி…..

சிறியளவில் வீட்டில் நூல்களை வைத்திருந்த என்னை குகன், நவரஞ்சன், எல்லாளன் போன்றவர்களின் உற்சாகத்தில் பெரும் எடுப்பில் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி 1991 ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாள இருபது வருடங்களாகிவிட்டது. வருடாந்தம் குறைந்தது ஒரு புத்தகக் கண்காட்சியாவது நிகழுகின்றது. நல்ல புத்தகம் நல்ல மனிதனை உருவாக்கும் என்று சொலலிக்கொண்டு இருக்காமல் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து ஒரு அறிவார்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த முயற்சி. இன்று வியாபாரி என்ற பெயரை சமபாரித்துக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் குடும்பத்தின் உதவி கிடைத்தது. பின்னர் இது ஒரு லூசுத்தனமான வேலை என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். சும்மாவோ, பணத்திற்காகவோ ஒரு போதும் கொடுக்க முடியாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றது.

ஒவ்வொரு முறையும் நண்பர்களையே வருத்துகின்றேன். கண்காட்சி முடிய
நண்பர் மயில் சொல்வார் “அண்னை இருபது பெட்டி கொண்டுவந்தனாங்கள்… இப்ப இருபத்தி ஒரு பெட்டி இருக்கின்றது” என்று. ஆனாலும் ஒவ்வொரு முறையும் இரண்டு புதியவர்களாவது வருகின்றார்கள். இந்த முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிக்காவிட்டாலும் புத்தகம் வாங்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள்.


20. காலத்தை புலம்பெயர்ந்தவர்களின் பத்திரிகையாக நடத்துகிறீர்களா?

உண்மையில் எனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. நாம் புலம்பெயர்ந்து இருப்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றும். ஆனால் நான் இதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையாகவே பார்க்கிறேன். தமிழ் இலக்கியப் பத்திரிகையிலும் ஒரு சிறு பத்திரிகையாகவே பார்க்கிறேன். ஈழத்து இலக்கியகாரர்களில் முக்கியமானவர்கள் என வாயால் சொல்லாது எழுத்தால் காட்டவேண்டும். அதற்கு எல்லோரும் பார்க்கக்கூடிய தளத்தில் அவர்கள் எழுத்தை வரச்செய்தல்வேண்டும். எங்கள் பதுடப்புகள் நல்லதோ இல்லையோ இந்தியாவில் கிடைப்பது கடினம். இது இந்தியாவின் ஒரு அராஜகப் போக்கே தவிர வேறொன்றும் இல்லை. அங்கிருந்து படைப்புகள் இங்கே வரும். ஆனால் இங்கிருந்து படைப்புகள் அங்கே செல்வதில்லை. எடுத்துக்காட்டாக தெணியானின் படைப்புகள். தெணியான்பற்றி யாரும் பேசியது கிடையாது. தெணியானின் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாது. தெணியானின் எழுத்துக்கள் செயற்பாடுகள் பற்றி ஜெயமோகனின் கட்டுரையோடு, வெங்கட் சாமிநாதனின் கட்டுரையோடு, அசோகமித்திரனின் கட்டுரையோடு இணைத்து நான் வெளியிடுகிறேன். அப்போது ‘ஓ இவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்லது இல்லை’ என அறிகின்றனர்.

வாயால் மட்டும் நாங்கள் திறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதாக எங்களை ஒதுக்கவில்லை. சில மனக்குறைகள் இருக்கின்றன. அதாவது, ஈழத்தவர்களின் மொழி விளங்கவில்லை என்பது. கி.ரா. வின் இரண்டாவது கதையிலேயே எனக்கு அவரின் கரிசல் மொழி பிடிபட்டது. ஆனால் இன்றுவரையிலும் ஈழத்தமிழ் கொஞ்சம் கடினமாது என்று சொல்வது எரிச்சலூட்டுவாதாகும். இதைத் தவிர, கைலாசபதியை இன்றுவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். டானியலை ஒரு பகுதியினர் போற்றுகிறார்கள். தலித்தினுடைய முதல் எழுத்தாளர் என்கிறார்கள். மு. தளையசிங்கத்துக்கு பெரிய வாசக வட்டமும், அவரை ஒரு தத்துவவாதியாக ஏற்றுக்கொள்பவர்களும் அங்கே உள்ளனர். பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரை மிஞ்சியவர் என்று கூறுபவர்கள் உள்ளனர். கைலாசபதிதான் தமிழ்மொழியில் சமுதாயத்துக்கும் மனிதனுக்குமான உறவை இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக் கொண்டவர் என்கின்றனர். தமிழ்நாட்டில்தான் கூறுகிறார்கள். சிவத்தம்பியை மிகப்பெரிய குருவாக ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். இன்று சோபா சக்தியும் முத்தலிங்கமும் விற்பனையில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்கள். இதிலெல்லாம் எங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று எங்கும் காணமுடியாது.

திரும்ப திரும்ப என்னைக் காணும்போதெல்லாம் இது புலம்பெயர்ந்த இலக்கியம் இல்லை, இது தமிழ்நாட்டு இலக்கியம் என்போர் உளர். நான் எங்கும் இதை ஒரு புலம்பெயர்ந்த ஏடு என குறிப்பிடவில்லை. இது ஒரு தமிழ் இலக்கிய ஏடு. அவ்வளவே.

அந்த அடிப்படையிலேயே நான் பார்க்கிறேன். ஆனால் நான் பிறந்த நாட்டின் எழுத்தாளர்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு வேறு கருத்துக்கிடையாது. சில வேளைகளில் நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை. அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சிலதைச் செய்வது. நான் எஸ்.பொ.வுக்கு, ஏ.ஜே.க்கு, டொமினிக் ஜீவாவுக்கு, பத்மநாப ஐயருக்கு என இவர்களை அட்டைப்படமாக இட்டுத்தான் இந்தியாவில் இப்புத்தகங்களைச் செய்கிறேன். இப்பெயர்களை சிலவேளை இந்தியாவில் சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.புலம்பெயர்ந்து வந்து ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ மட்டும் ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.

(தொடரும்)
நன்றி: கூர்

No comments: