Thursday, August 28, 2008

இல‌ண்ட‌ன் விசா

-இளைய அப்துல்லாஹ்


லண்டனில் அகதிகள் கையெழுத்திடும் நிலையங்கள் இப்பொழுது சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

கொழும்பில் டுபிளிகேஸன் ரோட்டில் உள்ள பிரித்தானியாவுக்கு விசா வழங்கும் அலுவலகம் திங்கள் தொடக்கம் வியாழன்வரை காலை 8 மணியில் இருந்து மாலை 3 மணிவரையும் வெள்ளிக்கிழமை காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரையும் திறந்திருக்கும். சனி - ஞாயிறுகளில் மூடப்பட்டிருக்கிறது.

அகதிகள் கையெழுத்திடும் நிலையங்களில் அனேகமாக வேலை செய்யும் அலுவலர்கள் பஞ்சாபிகள், இந்தியர் கள். ஏன் அவர்களைப் போட்டார்கள் என்று தெரியாது. தமிழர்களைத்தான் போட வேண்டும். அதிகமாகக் கையெழுத்து போட வருபவர்கள் அவர்கள்தான் அல்பானியர் கொசோவாக்கார், ஈராக்கியர், ஆப்கானிஸ்தானியர் என்று அகதி நிலையங்கள் எப்போதும் நிரம்பி வழியும் இந்தக்காலங்களில் அகதி அந்தஸ்தை பிரித்தானியா மிகவும் குறைத்துக் கொண்டுவிட்டது. மொழி புரியாமல் தடுமாறும் தமிழர்கள், அல்பானியர், ஈராக்கியர், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று இந்த அலுவலகங்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது.

மழை தூறிக்கொண்டிருந்தது. கொழும்பு பிரித்தானியாவுக்கான விசா வழங்கும் அலுவலகம் முன்னால் வரிசையாகத் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்று லண்டன் போவதற்கு விசாவுக்காக மக்கள் திரண்டு போய் நின்றிருந்தார்கள். எவ்வளவு பாடுபட்டும் அவர்களை வரிசைப்படுத்த முடியாமல் செக்கியூரிட்டி தடுமாறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு இளமையானவர். மொட்டை அடித்திருந்தார்.

லண்டன் போனவுடன் எப்படித்தான் இந்த ஒழுங்கு முறையெல்லாம் தானாகவே வருகிறது என்று நினைத்தேன். ஈற்றன் ஹவுஸ் அகதிகள் கையெழுத்திடும் நிலையத்தில் எல்லோரும் கதவு திறப்பதற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

“விசா உடனே தருவாங்களோ!” மழைத் தூறலில் நனைந்தபடி ஒரு மனிசி பக்கத்தில் நின்றவரைக் கேட்டது.

"காலமை மூண்டரை மணியிலை இருந்து இதிலை நிக்கிறன் காலும் நோகுது" என்று தனக்குப் பின்னால் நின்ற இன்னொரு பெண்ணுக்கு, தன் இம்சையைத் தெரியப்படுத்தினார் அறுபத்தைந்து வயதாளிப் பெண்மணி. மற்றப் பெண் இப்பொழுது தான் வந்து இடித்துக்கொண்டு வரிசையைக் குழப்பப் பார்க்கிறா. பின்னால் நின்ற விசயம் தெரிந்த சிங்களப் பெண் ஒன்று தாம் தூம் என்று குதித்தது. ஆங்கிலத்தில் பேசினா. அதனால் பரவாயில்லை இனபேதம் விளங்காது. ஆங்கிலம் பொதுவானதாக எங்கள் எல்லோரினது மனதிலும் இருக்கிறது. சிங்களமும் தமிழும் மோதக்கூடாது. கதவளிப்படக் கூடாது. ஆங்கிலமும் சிங்களமும் ஆங்கிலமும் தமிழும் எவ்வளவு சண்டை பிடித்தாலும் மோதல் இல்லை வராது.

லண்டன் போகும் ஆசை, தேவை பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பார்க்க, ஏற்கனவே திருப்பி லண்டனில் இருந்து அனுப்பப்பட்டவை, வியாபாரம், ஆமத்துறு, பாதிரியார், வயசாளிகள், பெண்கள், சிறுவர்கள் என்று பலதரப்பட்ட மன ஓட்டங்கள் - அவசரம் -பதகளிப்பு . . .

“விசா கிடைக்குதாமோ இல்லை ரிஜக்ட் பண்ணுறாங்களோ” மூன்று பைல்களை வைத்திருந்த முப்பத்தைந்து வயதாளி ஒருவர் பக்கத்தில் நின்றவரிடம் கேட்டார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. என்னிடம் “உங்களுக்குக் கிடைக்குமப்பா நல்லா கடவுளைக் கும்பிட்டுட்டுப் போங்கோ” என்றாள் மனைவி.

அதிகாலை இரண்டரைக்கு எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு முதல் நாள் ஒரு திறீவீலர் காரருக்குச் சொல்லி மொபைல் போனில் எலாம் வைத்து இரண்டு முப்பதுக்கு அவரை எழுப்பி இரத்மலானையில் இருந்து அந்த நடுச்சாமத்திலை திறீவீலருக்கு பெற்றோல் அடித்து பொலிஸ் இடையில் மறித்து, அவர்களுக்கு இந்த இரண்டுங்கெட்டான் நேரத்திலை எங்கே போகிறோம் என்று விளக்கம் சொல்லி பம்பலப்பிட்டி போய் டுபிளிகேஸன் வீதிக்கு வர அதிகாலை மணி 3.45.

அகதிகளுக்கு இப்பொழுது கையெழுத்து வைப்பதென்பது ஒரு உளவியல் இம்சை. பனிக்குளிர் தாங்க முடியவில்லை. எப்படியும் கையெழுத்து வைக்கப் போகவேண்டும். இல்லாவிடில் வீடு தேடி வந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏலாததுகள், வயதாளிகள், ஆண்கள், பெண்கள், பாரிசவாதக்காரர் என்று எந்தவித அனுதாபமுமில்லாமல் எல்லோரும் கையெழுத்து வைக்க வேண்டும். கையெழுத்து என்பது எப்படித் தமிழில் வந்ததோ தெரியாது. ஒவ்வொரு அகதிக்கும் ஒரு முறை இருக்கிறது. சிலருக்கு வருடத்துக்கு ஒரு முறை, சிலருக்கு ஆறுமாதம், சிலருக்கு மாதா மாதம், சிலருக்கு வாரமொருமுறை, கொடுமை என்னவெனில் சிலர் ஒவ்வொரு நாளும் போய்ப் பதிய வேண்டும். எஸ்.ஏ.எல் போம் இருக்கிறது. அதில் அகதியின் எல்லா விடயங்களும் எழுதியிருக்கும். அவர் கவுண்டரில் கொடுக்க வேண்டியதுதான். அடுத்த வரவு திகதியைப் பதிந்து தருவார். அதற்கு ஏன் கையெழுத்திடுவது என்று பெயர் வந்ததோ தெரியாது. சில அகதிகள் எரிந்து விழுவார்கள். லண்டனில் தேவையில்லாமல் யாரையும் ஏசவோ அடிக்கவோ முடியாது. அகதிகள் தமது மனக் குமுறல்களை ஓபிஸருடன் காட்டுவார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கையெழுத்திடும் இடங்களுக்குப் போவார்கள் அதுதான் திருப்பி அனுப்பும் இடமும்கூட.

“தெரியாத்தனமா இஞ்சை வந்திட்டம் என்ன செய்யுறது. ஐயா சேகரிச்ச 10 ஏக்கர் மல்லாவியிலை இருக்குது. லண்டன் லண்டன் எண்டு வந்திட்டு இப்ப குளிர் குத்து பிடிச்சிட்டுது நாரியிலை. உவங்கள் கோதாரியிலை விழுவாங்களும் ஒரு முடிவும் சொல்லுறாங்களில்லை” ஈற்றன் ஹவுஸ் வரிசையில் நின்று ஒருவர் தனக்குத் தானே புறுபுறுத்தார்.

“கொழும்பிலை மழை புடிச்சால் நிக்காது” வழுக்கைத் தலையைத் தடவியபடி ஒரு படித்தவர் தனது அனுபவத்தை சிரித்தபடி சொன்னார். பக்கத்தில் நின்றவர் இறுகிக் கிடந்தார். அவருக்கு விசா கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கவலை. கியூவில் மக்கள் நிற்கிறார்கள். எரிச்சல் தெரிகிறது முகங்களில். மழை தூறிக்கொண்டிருக்கிறது. தள்ளுப்பட்டு உரசி நெருக்கி மக்கள் எப்படியாவது நூற்றுக்குள் ஒரு நம்பரை எடுத்துவிட வேண்டும் என்று பதகளிப்படுகிறார்கள்.

“மே பலண்ட ஒயா மே பத்த எண்ட எப்பா” வரிசையில் நின்ற வெள்ளை நிறமான வாட்டசாட்டமான மேக்கப் போட்டுக்கொண்டு வந்த ஒரு பெண் உரத்துச் சொன்னா. அவ லண்டன் விசாவுக்காக கியூவில் ஒரு மணி நேரமாக நிற்கிறாவாம். இன்னும் கொழும்புக் காகங்கள்கூட எழும்பவில்லை. கியூவின் இடையில் படித்த தமிழ்மனிசி ஒன்று வந்து நுழைகிறது. தமிழிலும் இங்கிலீஸிலும் சொல்கிறது “நானும் நேரத்தோடைதான் வந்தனான்.”

சடார் புடார் என்று பெரிய மழை எல்லோரும் நனைகிறார்கள். நனைந்து தோய்ந்தாலும் லண்டன் போக வேண்டும். 4 மணி காலை.

இரண்டு சிங்கள செக்கியூரிட்டிகள் நீலக்காற்சட்டையும் கை மடித்த சேட்டும் போட்டிருக்கிறார்கள். “ஒக்கம போலி ம எண்ட. போலிம நத்துவ கண்டபே உதய பாந்தர பளண்டகோ. அபிடஹமதாம ஏம தமாய்” (எல்லோரும் வரிசையில் வாங்கோ. வரிசையில் நிற்காவிட்டால் உள்ளே எடுக்க முடியாது. விடிய வெள்ளணை எவ்வளவு பிரச்சனை. எங்களுக்கு ஒவ்வொருநாளும் வேதனைதான்.)

கொஞ்சம் சிரித்தபடி கொஞசம் கடுப்பாக ஆனால் முகத்தில் வலிந்த சிரிப்பு இருக்கிறது. சொன்னார்கள். இப்பொழுது செக்கியூரிட்டிகள் 4 பேர் ஆகிவிட்டது. சிரிக்கச் சொல்லி பெரியவர் அவர்களை சொல்லி அனுப்பியிருப்பாராக்கும்.

“எனக்கு இது மூன்றாவது முறை” சத்தமிடும் பரிசோதனைக் கருவியை உடம்பில் தடவும் இளைஞனை செக்கியூரிட்டி வாலிபனிடம் சொல்கிறேன். “ஓவ் தண்ணுவா” என்னவென்றே தெரியாது. காலி வீதியில் இருக்கும் யு.கே. எம்பஸிக்குப் போய் விசா போம் கேட்டேன். அவர்கள் இலக்கம் 367 டுபிளிகேஸன் ரோட் விலாசத்தை ஒரு துண்டில் அச்சடித்து வைத்திருந்ததைத் தந்தார்கள். அதில் திங்கள் முதல் வியாழன்வரை 8 மணியில் இருந்து மாலை மூன்று மணிவரை வரலாம் என்று அடித்திருந்ததைப் பார்த்து லண்டனில் இருந்து ஸ்போன்ஸர் லெட்டர் கிடைத்த பின்பு அரக்க பறக்க திங்கட்கிழமை மாலை 2.30இற்குப் போனேன் செக்கியூரிட்டி சிரித்தார். என்னை இந்த விடயத்தில் அறிவிலி போலப் பார்த்தார். “இன்று துண்டு எல்லாம் கொடுத்து முடிந்தது” என்றார். வேறொரு அலுவலர் சொன்னார் “காலமை ஏழு மணிக்கே வாங்கோ” செவ்வாய்க்கிழமை காலமை 5 மணிக்கே எழும்பி காலைக் கடன்களை முடித்து குளித்து முழுகி டுபிளிகேஷன் ரோட்டுக்கு வந்தால் இன்னொரு இடிமாலை. “உங்களுக்குத் தெரியுமா நாங்கள் விடியப்பறம் 4 மணிக்கே துண்டுகள் எல்லாம் குடுக்கத் துவங்கினால் 4.45 அளவிலை 100 துண்டுகள் குடுத்துவிடுவோம். நீங்கள் அதிகாலை 3 மணிக்கு வந்தால் வரிசையில் நிண்டு துண்டு எடுக்கலாம் நாளைக்கு அப்பிடி செய்யுங்கோ ஹொந்தாய்” என்று முறுவல் முகத்துடன் ஒரு செக்கியூரிட்டி சொன்னார். இதுதானோ நடைமுறை. ஆமோ! அப்பிடியோ!

அடுத்த நாள் புதன் கிழமைபாப்பம் வெல்லுவம். மனதில் நினைத்தபடி மொபைல் போனில் எலாம் வைத்து படுத்து 2.30 இற்கு எழும்பி பேசி வைத்திருந்த திறீவீலர் காரனைத் தட்டி எழுப்பி வந்தாச்சு. மூன்று நாளும் திறி வீலருக்கு காடாத்திலை போன காசு 1500 ரூபா.

சும்மா ஈற்றன் ஹவுஸைப் பார்த்தாலே தமிழ் அகதிகளுக்குப் பிடிப்பதில்லை. அதிலும் சைன் பண்ணக் கூப்பிட்டால் அகதிகளை வைத்து ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள். முன்னால் வரிசையில் நின்ற ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. “ஈற்றன் ஹவுஸுக்கு முன்னாலை நிண்டு தீக்குளித்து சாக வேண்டும் போல கிடக்கு” அவ்வளவிற்கு விரக்தி. அவர் கிழமைக்கொரு தரம் சைன் பண்ண வருகிறார்.

“எனக்கெண்டால் தரமாட்டாங்கள். சும்மா கண்டியிலையும் கம்பளையிலையும் இருந்து வாறவையளுக்குக் குடுக்கிறாங்கள். அண்ணை நான் உண்மையிலை இயக்கத்திலை இருந்தனான் இஞ்சை பாருங்கோ நான் றெயினிங் எடுத்தனான். ஆமி புடிச்சது. ஆனையிறவு செக்பொயின்டிலை வைச்சுத்தான் புடிச்சவங்கள். புறகு 4ம்மாடி, பூசா பேந்து வெலிக்கடை எண்டு கிடந்து போட்டு உயிரைக் கையிலை புடிச்சுக் கொண்டு இஞ்சை வந்தால் உந்தக் கோதாரியிலை விழுவாங்கள் ஒண்டும் சொல்லுறாங்கள் இல்லை. அலைக்கழிக்கிறாங்கள்.”

“எனக்கெண்டால் உவங்களிலை இருந்து கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அத்துப் போச்சு. என்ன வழக்கு. என்ன நீதவான்.” கொஞ்சம் இடைவெளி விட்டு மூச்சு வாங்கினார். உரத்துப் பேசியதில் வாய்வழிய எச்சில் வந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன.

“நான் தற்கொலை செய்யப்போறன் என்னாலை இனியும் பொறுக்க முடியாது இரண்டு முறை தற்கொலை செய்யப் போனனான். என்னைக் காப்பாத்தி போட்டினம். ஆனால் உந்த உக்காரமெல்லாம் இனி பலக்காது. நான் தற்கொலை செய்தனெண்டால் இலங்கை அகதிகளுக்கு பிரிட்டிஷ் அரசு ஏதும் குடுக்குமண்டால் அதுக்கும் நான் தயார். எனக்கு தலைக்குள்ளை கிறு கிறுக்குதண்ணை.”

மிகப்பிரமாண்டமான ஈற்றன் ஹவுஸ் நீள அகலமாகக் கிடந்தது. இரண்டு மாடிகளிலும் அகதிகள் தொடர்பான பைல்கள்தான் வைத்திருப்பார்களாக்கும். இலட்சக்கணக்கான அகதிகளை எப்படிச் சமாளிப்பார்கள்.

ஒருகால் லண்டன் போய்விட வேண்டும் என்ற ஆசையில் வயதானவர்கள் வந்திருந்தார்கள். பேரப்பிள்ளைகளை இந்தக் குளிர் நேரத்திலும் பார்த்துவிட வேண்டும் எனும் சோட்டை முகத்தில் இருந்தது.

வரிசையில் மனிசி ஒன்று நுழையப் பார்த்தது “ஐ. யு. நோ” என்றெல்லாம் சொன்னது யாருமே கேட்காமல் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். நடுச்சாமத்தில் இருந்து வரிசையில் நிற்கும் கடுப்பு ஒவ்வொருவரிடத்திலும்.

“முந்தியென்றால் 250 பேருக்குக் கொடுத்தோம். இப்போ 100 பேருக்குத்தான் துண்டு” என்று ஒரு செக்கியூரிட்டி சொன்னார்.

ஆம்பிளை பொம்பிளை எல்லோரையும் மெசினால் தடவிப் பார்த்துவிட்டு செக்கியூரிட்டி சொன்னார் “மொபைல் போன்களை ஓப் செய்யுங்கோ எல்லோரும்” சிலர் உள்ளுக்குள் வந்தாப் பிறகும் ஓப் செய்யாமல் இருந்தனர். அதிகாலை 4.45 அளவில் நூறு துண்டும் கொடுத்து பதிந்து “ஏசி” போட்டு நீலக்கலர் கதிரையில் உட்கார வைத்துவிட்டுக் கண்ணாடிக் கதவை மூடிவிட்டார்கள் அதற்குப் பிறகு செக்கியூரிட்டிகள் கண்ணாடிக்குள் நின்று உதட்டைப் பிதுக்கி கையை விரித்து “துண்டு முடிந்துபோய்விட்டது” என்பதனை சைக்கினை மூலம்தான் சொன்னார்கள். அவர்களும் என்ன செய்வார்கள். அதிகாலை 3 மணிக்கு நாங்கள் விசா எடுக்கப்போகின்றவர்கள் ஒரு முறைதான் காலையில் விழிக்கவேண்டும். அவர்கள் தினமும்.

காலை 2.30 இலிருந்து பயணம், வரிசை, துண்டு, அமருதல் காலை 8 மணிக்குத்தான் துண்டு கூப்பிட ஆரம்பித்தார்கள். பிரித், தேவாரம், செபம், நினைத்தது நடப்பதற்கு அல்லது அலுவலர் அதிகம் எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று குர்ஆன் வசனங்கள், துஆ என்று மக்கள் எல்லாக் கடவுள்களிடமும் பாரப்படுத்திவிட்டு உட்கார்ந்திருந்தனர்.

9.00 மணி வயிறு புகைச்சல் எடுக்கிறது. காலையில் குளித்து முழுகி யோகாசனம், கொஞ்ச நேரம் தியானம், பின்னர் தேன் ஒரு கரண்டி, ஈச்சம்பழம் கொஞ்சம், வாழைப்பழத்தோடு பட்டர் பூசிய பணிஸ் ஒரு ஜோடி, நல்லதொரு பால் தேத்தண்ணி. மனைவி தருவா.

இப்பொழுதுதான் ரோஸ் கலர் நம்பர் 6 போகிறது. ஏற்கனவே ஈரோப் போனவர்களுக்குப் பச்சை நம்பர். போகாதவர்களுக்கு ரோஸ். வெளியில் போய் தேத்தண்ணி குடித்தால் நல்லது. வெளிவாசலுக்கு வந்துவிடும் என்ற பயம். பரவாயில்லை. போய் ஒரு தேத்தண்ணீர் குடித்தேன் என்ன தண்ணியில் ஊத்துகிறானோ? பிறகு ஒரு சிறிய உசார் ஒன்று வந்தது சுடுதண்ணீர் போனதன் பின்பு. பிறகும் ரோஸ் நம்பரோடு காத்திருந்தேன். எனது இலக்கம் 29.

“ஏனண்ணை அவரைப்புடிச்சு வைச்சிருக்கினம் எக்கணம் அனுப்பப் போகினமோ? “ஈற்றன் ஹவுஸ்” இற்குள் வந்துவிட்டால் திரும்பிப் போகும் வரைக்கும் நிம்மதியில்லை ஒருவருக்கும் “என்னவாம்” ஒருவர் பக்கத்திலை போய்க் கேட்டார். அவருக்கு முகம் சுண்டி இருந்தது. தெரியாது இருக்கட்டாம்.”

“அண்ணை உவரை அனுப்பப் போறாங்கள் போல கிடக்கு” வேறொருவர். உட்கார்ந்திருந்தவரைப் பற்றி பலரும் பல ஆலோசனை சொன்னார்கள். “அண்ணை நீங்கள் பாஸ்போட் போமில்லை சைன் பண்ணின நீங்களே!” “ஓம்” ஏனண்ணை உந்த விசர் வேலை பாத்தனீ

“உவங்கள் என்னையும் சொல்லித் தானே பாத்தாங்கள் சைன் பண்ணச் சொல்லி நான் என்ன மடையனே. நான் மயிரைத்தான் பண்ணினன்” அவர் பாஸ் போட் போமில் சைன் பண்ணாததை பெருமைப்படும்படியாகவும் அதனால் தன்னைத் திருப்பி அனுப்பமுடியாது என்பது போலவும் பேசிக்கொண்டிருந்தார்.

“அண்ணை சைன் பண்ணுற போம் எங்கை” அவர் கவுண்டர் பக்கம் கையைக் காட்டினார் “அப்ப சரி இண்டைக்கு ஏத்திடுவாங்கள். உங்களோடை ஆரும் வந்தவையே....” என சும்மா வரிசையில் நின்றவர்கள் ஆளாளுக்கு ஆலோசனையும் அபசகுனமும் சொன்னார்கள்.

“எனக்கு தினமும் வரமுடியாது உங்கடை மயிர் சைனுக்கு எனக்கு ஒவ்வொரு நாளும் 10 பவுண்ஸ் டிக்கட் எடுத்து வாறதுக்குப் பணம் இல்லை. நாஸ் தாற காசையும் நிப்பாட்டிப் போட்டாங்கள் நாசமறுப்பாங்கள். எனக்கு எரிச்சலாக இருக்கு தினம் காலையிலை 10 பவுண்ஸுக்கு எங்கை போறது. வேக்போமிற்றையும் பறிச்சுப் போட்டீங்கள். நான் என்ன செய்யுறது. அனியாயக்காரங்கள்” ஆப்பிரிக்க நாடுகளில் ஏதோ ஒன்றைச் சேர்ந்தவர் அலுவலர் உடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

“என்னால் ஒன்றும் செய்யமுடியாது கொம்பியூட்ர் சொல்வதை மட்டும்தான் எங்களால் செய்ய முடியும். முடிவு எடுப்பது நாங்கலல்ல. அதை செய்வது பிரித்தானிய உள்துறை அமைச்சு”.

“என்ன கொம்பியூட்டர் பெரிய கொம்பியூட்டர். நீங்கள் நாடுகளைப் பிடிக்கும்போது கொம்பியூட்டரைக் கேட்டா பிடித்தீர்கள். எங்கள் வளங்களைக் களவெடுக்கும்போது எங்களைக் கேட்டா எடுத்தீர்கள். எங்கள் மூதாதையர்கள் அடிமைப்படுத்தினீர்கள்! உங்களுக்கு அழிவு உண்டாகட்டும்” என்று ஆங்கிலத்தில் சபித்தார்.

அலுவலர் ஒன்றுமே பேசவில்லை. ஆப்பிரிக்க நாட்டவரின் குரல், பேச்சு, கைப்பாசை அசைவு எல்லாம் மிகவும் கடுமையாக இருக்கும் நாளைக்கு சைன் பண்ண வேண்டும் என்று அலுவலர் எழுதி திகதி போட்டுக் கொடுத்தார். அகதிகளுக்கான இந்த 'ரோச்சர்' அவர்கள் நாட்டை விட்டு போக வேண்டும் என்பதே.

நேரம் காலை 11.32 எனது ரோஸ் கலர் இலக்கம் கூப்பிடப்பட்டது. மேலே போகச் சொன்னார் அலுவலர். போனால் அங்கும் வரிசையாக கதிரைகள். வரிசையாக மனிதர்கள் பல எதிர்பார்ப்புகளுடன்.

வரிசையாக மூன்று பேர் விசா போமை சரிபார்க்க ஒரு பெண் 2 ஆண்கள். அதில் ஒரு ஆண் மிகவும் கடுகடுப்பாகவே நடந்துகொண்டார். அதை எடு இதை எடு என்றார். பின்னர் சிலரிடம் போய் அதைக்கொண்டு வா! என்று அனுப்பிவிட்டார். அதிகாலை மூன்று மணிக்கே வந்தவர்கள் மனம் நொந்து போகிறார்கள்.

எனது விசா போம் பார்த்தார்கள். ஸ்போன்ஸர் சரி, அவர் அனுப்பியவர் பிரித்தானிய பிரசையா? ஓம், அவரா டிக்கட் தருவது? ஓம், ஏன் போகிறீர்கள்? ஒரு விழாவுக்கு! சரி. ஏழாயிரத்து முன்னூற்று எண்பது ரூபா கட்டுங்கோ! சரி.

ஒரு நாளைக்கு நூறு துண்டு குத்து மதிப்பாக கிழமையில் 5 நாட்களுக்கு 500 துண்டு ஒரு சாதாரண விசாவுக்கு 30000 ரூபா மாசம் 20 நாட்களில்... உழைப்பு எல்லாம் உழைப்பு. பிஸ்னஸ் விசாவுக்கு வேறு. அதிகம் ஆனால் விசா கிடைக்காமல் விட்டால் மீள வழங்கப்பட மாட்டாத பணம் அது. லண்டன்தானே போகிறீர்கள் கட்டுங்கள் என்பதுதான் அது. பணம் எல்லாம் வாங்கிக் கொண்டு சொன்னார்கள். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வந்து பாருங்கள். உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். மொட்டையான பதில். ஒரு சிங்கள மனிசி சொன்னது. நான் மூன்றாவது தரம் இது. இரண்டு முறை ரிஜக்ட் செய்துவிட்டார்கள். அவர்கள் ரிஜக்ட் செய்யும் காரணம் எதுவும் எனக்குப் பொருந்தாது.

ஒவ்வொருத்தராக சைன் பண்ணும் பேப்பரைக் கொடுத்து திகதிகள் பதிந்து கொண்டு செல்கிறார்கள். வெளியில் இருக்கும் அகதிகள் நெஞ்சுக்குள் தண்ணியில்லாமல் கொதித்துக் கொண்டிருக்க கவுண்டருக்குள் அலுவலர்கள் ஆண்களும் பெண்களும் கேலி பேசுவதும் சிரிப்பதுமாக இருக்கிறார்கள். இது சூழலுக்கு ஒவ்வாத இரண்டு அந்தரப்பட்ட மனநிலையை உருவாக்குகிறது.

இதுவரை மூன்று பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகளைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் எதனையும் பார்ப்பதில்லை. பிடித்தோமா அனுப்பினோமா என்றுதான் இருப்பார்கள். அவர்களுடைய உடுப்புக்கூட வீட்டில் இருந்து எடுக்க விடமாட்டார்கள்.

நேரம் மாலை 5.00 மணி ஈற்றன் ஹவுஸ் மூடப்படும் நேரம். திடீரென்று மூன்று செக்கியூரிட்டிமார் வந்து சொன்னார்கள். “வாங்கோ வந்து வண்டியில் ஏறுங்கோ” பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக்கொண்டார்கள் “இன்றிரவு ஒன்பதரை எயார்லங்காவில் ஏத்தப் போறாங்கள்.”

செவ்வாய்க்கிழமை டுபிளிகேஸன் ரோட்டில் 100 பேரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் உள்ளே போய் அமருங்கள் செக்கியூரிட்டி சொன்னார். 4 மணி போல ஒரு பெரிய வெள்ளை என்வலப்பில் போட்டு பாஸ்போட்டைத் தந்தார்கள். அதனுள்ளே இரண்டு டைப் செய்யப்பட்ட தாள்கள்.

- உங்களுக்கு ஸ்போன்ஸர் செய்தவர் உங்களுக்கான லண்டன் ரிக்கற்றை ஒரு பொது நிதியில் இருந்து தருவார் என்று நான் நம்பவில்லை.

- உங்களால் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கு வழக்குகள் எனக்குத் திருப்தியில்லை.

- நீங்கள் வெறும் 15 நாட்கள் காலம் விசா கேட்டதால் உண்மையானவரா நீங்கள் என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது. இந்தக் காரணங்களினால் உங்களுக்கு விசாவை நான் வழங்கவில்லை.

பின்குறிப்பு: நீங்கள் 82 (1) குடிவரவு குடியகல்வு அகதிகள் சட்டம் 2002 இன் படி இந்த விசா தொடர்பாக அப்பீல் செய்ய முடியாது.

*
ந‌ன்றி: உயிர்மை (ஓக‌ஸ்ட், 08)

Friday, August 15, 2008

ஏலாதி இலக்கிய விருதுக்கான ஏற்புரை

பொய்த்துப் போன பருவங்கள்

'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'


சிறுவ‌ய‌திலேயே உயிருக்காய் த‌ப்பியோடி ஓடி அக‌தி வாழ்க்கை ப‌ழ‌க்க‌மாயிற்று விட்ட‌து. ப‌தினமூன்று வ‌ய‌துக்குப் பிற‌கு முற்றாக‌ நான் வாழ்ந்த‌ ஊருக்குப் போக‌ முடியாத‌ அள‌வுக்கு போர் மிக உக்கிர‌மாகியிருந்தது. அவ்வ‌ப்போது 'ச‌மாதான‌ச் சூழ‌ல்' வ‌ந்து ஆக‌க்குறைந்த‌து தாம் வாழ்ந்த‌ இருப்பிட‌த்தைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ப‌ல‌ருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, இராணுவ‌ உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌ம் (High Security Zone) ப‌குதிக்குள் வ‌ருவ‌தால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க‌ முடிந்ததில்லை. இஃதொரு பெரிய‌ இழ‌ப்புமில்லை. இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் போர் ‍ -நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தைவிட‌ - இன்னும் ப‌ல‌ம‌ட‌ங்கு உக்கிர‌மாய் ப‌ல நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளை ப‌லி கொண்டும், இட‌ம்பபெய‌ர்க்க‌வும் செய்து கொண்டிருக்கும்போது என‌க்காய் விதிக்க‌ப்ப‌ட்ட‌ அகதி வாழ்வில் நான் ஒர‌ள‌வு 'ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்' என்றுதான் சொல்ல‌வேண்டும். ஏனெனில் இன்று ஆக‌க்குறைந்த‌து, உயிருக்காவ‌து உத்த‌ர‌வாத‌ம‌ளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க‌ முடிகிற‌து; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.

போரிற்குள் சிறுவ‌ய‌திலிருந்து வாழ்ந்ததாலோ என்ன‌வோ, மூர்க்க‌மாய் விம‌ர்ச‌னங்க‌ளை வைக்க‌வும் எதிர்கொள்ள‌வும் ப‌ழ‌கிய‌ அள‌வுக்கு பாராட்டுக்க‌ளையோ வாழ்த்துக்க‌ளையோ எப்ப‌டி ஏற்றுக்கொள்வதென்று தெரிய‌வில்லை. எழுதிய‌ ஒரு ப‌டைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடே அதை உள்வாங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து.

எழுதுவ‌தில் பிரிய‌முடைய‌ ஒருவ‌ருக்கு தான் எழுதிக்கொண்டிருப்ப‌து ம‌லையிடுக்குக‌ளில் ச‌ல‌ன‌ம‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌தோ என்ற‌ நினைப்பை, எவ‌ரின‌தோ க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌மோ, சிறு பாராட்டோ நெகிழ‌ச் செய்துவிடுகின்ற‌து. பிற‌ர் த‌ன‌து எழுத்தைக் க‌வ‌னிக்கின்றார்க‌ள் என்ற‌ நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக‌ எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.

ஒரு புதிய‌வ‌னுக்கு, அவ‌ன் யாரென்று அவ‌ன‌து பின்புல‌ங்க‌ள் அறியாது, அவ‌ன‌து ப‌டைப்பை ம‌ட்டுமே முன்னிறுத்தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஒரு விருது என்ற‌வ‌கையில், த‌மிழ்நாட்டு க‌லை இல‌க்கிய‌ ம‌ன்ற‌ம் - தக்கலை சார்பாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் நீங்க‌ள் என‌து தொகுப்பான‌ 'நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகளுக்கு' வ‌ழ‌ங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை என‌க்கான‌ அங்கீகார‌மாய் அல்லாது, இனி எழுதுகின்ற‌போது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வ‌துமாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ நினைவூட்ட‌வே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் என‌க் கூறிக்கொள்ள‌ விரும்புகின்றேன்.

இவ்விருதை வ‌ழ‌ங்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் ந‌ன்றி சொல்கின்ற‌ அதேவேளை 'அடையாள‌ம்' சாதிக்கிற்கும் என‌து த‌னிப்ப‌ட்ட‌ நன்றியைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன். எழுதுகின்ற‌ ஒருவ‌னுக்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திப்பாள‌ர் ‍அதுவும் த‌மிழ்ச்சூழ‌லில் கிடைப்ப‌து அரிது. எவ்வ‌ள‌வோ தொலைவிலிருந்தாலும், என‌து க‌விதைக‌ளைத் தொகுப்பாக்க‌ வேண்டுமென்று பிரிய‌ப்ப‌ட்ட‌போது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது ம‌ட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிர‌திக‌ளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கின‌தும், உங்க‌ள் அனைவ‌ரின‌தும் க‌ர‌ங்க‌ளை நெகிழ்வுட‌ன் ப‌ற்றிக்கொள்கின்றேன். இறுதியாக‌, நான் சிறுவ‌ய‌தில் அக‌தியாய் அலைந்ததைவிட‌ மிக‌க் கொடுமையான‌ சூழ்நிலைக்குள் இன்று ஈழ‌த்திலும் உல‌கெங்கிலும் சிறார்க‌ள் அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார்க‌ள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னும் இவ்விருதுட‌ன் வ‌ழ‌ங்கும் பணமுடிப்பைத் த‌மிழ‌க‌த்திலுள்ள‌ ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌ம் ஏதாவ‌தொன்றுக்கு வ‌ழ‌ங்குமாறு என் சார்பின் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் 'அடையாள‌ம்' சாதிக்கிடம் கேட்டுக்கொள்கின்றேன். ந‌ன்றி.

(விருதுக்குத் தொகுப்புத் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌தென்று அறிந்து மிக‌க்குறுகிய‌ நேர‌த்தில் த‌யார் செய்து, இவ்வுரையை அடையாள‌ம் சாதிக்கிற்கு அனுப்பியிருந்தேன். நிக‌ழவில் இதை வாசிக்க‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்த‌தா என்ப‌து குறித்து அறிய‌ முடிய‌வில்லை)