Friday, January 26, 2007

பேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு

அ. மார்க்ஸ்
நன்றி: உங்கள் நூலகம் (கீற்று வழியே)


தமிழகம் நன்கறிந்த ஈழப் பேராசிரியர்களில் ஒருவர் சின்னையா மௌனகுரு அவர்கள். அவரது நூலொன்று தமிழகத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன்.

மௌனகுரு பல பரிமாணங்கள் உடையவர். முதன்மையாக அவர் ஒரு கலைஞர். ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளிலும் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய நாடகங்களில் அவரது கூத்துச் சிறப்பை மற்றவர் கூற வாசிக்கையில் நாம் பார்க்க இயலாது போன வருத்தம் ஏற்படுவது இயல்பு. இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது.

மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளருமாவார்.

அவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்ப தோடு கிழக்குப் பல்கலைக் கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு.

பேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம் தவிர விபுலானந்தரின் கருத்துலகம் முதலான துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு. நீலவாணன், சுபத்திரன் முதலான ஈழக் கவிஞர்களைத் தொடர்ந்து இந்நூலில் அவர் பாரதிதாசனை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

மௌனகுரு மட்டக்களப்பைச் சார்ந்தவர். ‘மட்டக்களப்புத் தமிழகம்’ எனக் குறிப்பிடும் அளவிற்கு அங்குள்ள பண்பாடு பிற ஈழத் தமிழ்ப் பண்பாடுகளில் வேறுபட்டது. தனித்துவமான கூறுகளைக் கொண்டது. கூத்து மரபிலும் மட்டக்களப்பு மரபு தனித்துவமானது. இக்கூத்துக் கலைக்குரிய முக்கியத்துவத்தையும் கல்வித்துறையில் வலியுறுத்தி உரிய இடத்தைப் பெற்றுத் தந்தவர்களில் பேரா. அ. வித்தியானந்தன் அவர்களுக்கும் மௌனகுரு அவர்களுக்கும் பெரும் பங்குண்டு. கூத்துக் கலையை நவீன முறையில் ஆய்வு செய்து அதன் செவ்வியல் கூறுகளை நிறுவியவர். கூத்துக்களைத் தவிர மட்டக்களப்புக் குரிய இசை, வழிபாடுகள், வணக்கமுறை குறித்த பேராசிரியரின் பங்களிப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆக ஓர் அரங்க ஆய்வாளர் / கலைஞர், கல்வியாளர், எழுத்தாளர், (கவிதை, கதை) வரலாற்று / இலக்கிய ஆய்வாளர் என்கிற வரிசையில் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் பரிமாணங்களை நாம் வரிசைப்படுத்த முடியும். ‘பாரதிதாசனின் தேசியக்கருத்து நிலையும் ஈழத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும்’ என்கிற இந்நூல் மூன்று கட்டுரைகளை உள்ளடக்கியது. சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறை சார்பாக நடத்தப்பட்ட (2004) அறக்கட்டளைச் சொற்பொழிவுகளே இம்மூன்றும்.

1960கள் வரை ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியலின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இங்கிருந்த அதாவது தமிழ்நாட்டில் இருந்த அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகளே அங்குள்ள தமிழர் அரசியலில் நிலையைச் சுட்டிக்காட்ட முடியும். இங்குள்ள பிரச்சினைகளுக்காக அங்கே போராட்டங்கள் நடத்திய வேடிக்கை அல்லது அபத்தங்களும் உண்டு. 1948ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலத்தில் இங்கு இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஈழத்திலும் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜூலை 31, 1948ல் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பிற்கு எதிராகக் கொழும்பில் ஒரு போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 22ல் கொழும்புவில் ஒரு இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது.

இங்குள்ள கட்சிகளின் பெயர்களிலேயே அங்குக் கட்சிகளும் உருவாக்கப்பட்டன. 1932ல் பெரியார் இலங்கை சென்றிருந்தார். தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம், மதாபிமானம் ஆகிய நான்கு பற்றுகளையும் விட்டொழித்தலே விடுதலைக்கான முதல் நிபந்தனை என்கிற அவரது புகழ் பெற்ற பேச்சு அங்குதான் பொழியப் பெற்றது. இதை ஒட்டி இலங்கைச் ‘சுயமரியாதை இயக்கம்’ உருவாக்கப்பட்டது. இங்கே சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கலந்தபோது ஈழத்திலும் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ‘இலங்கை நீதிக்கட்சியாக’ப் பெயர் மாற்றம் பெற்றது (ஜூலை 14, 1945) தமிழகம் போலவே பின்னர் அங்கே நீதிக்கட்சி, ‘இலங்கை திராவிடர் கழக’மாக மாறியது. 1949ல் திமுக உருவானபோது இலங்கைத் திராவிடர் கழகம், ‘இலங்கை திராவிட முன்னேற்ற கழகமாக’ (இ.தி.மு.க.) பரிணாமம் பெற்றது.

தமிழ்நாட்டு திராவிட இயக்கத் தலைவர்களான டார்டோ ஜனார்த்தனம், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் முதலியோர் அங்கு அடிக்கடி சென்று வீர உரைகள் ஆற்றுவதுண்டு. இளஞ்செழியன், மாறன் முதலிய பெயர்களில் அங்கு தலைவர்கள் உருவானதும் ‘அறிவுமணி’ என இதழ் வெளியிடப்பட்டதும் நிகழ்ந்தன. இ.தி.மு.கவின் கொள்கை விளக்க அறிக்கை “இலங்கையை தாயகமாக கொண்ட திராவிட மக்கள் (தமிழ் பேசும் மக்களின்) நலன் பேணிக்காப்பதே இ.தி.மு.கவின் குறிக்கோள்” என்ற முகப்பு வசனத்துடனேயே துவங்கியது. இந்தப் பின்னணியில்தான் ஈழக்கவிஞர்கள் மத்தியில் பாரதிதாசன் சொல்லாட்சியைக் காணவேண்டும்.

மௌனகுருவின் முதற் கட்டுரை தேசியம் குறித்த நவீன சிந்தனைகளை மேலோட்டமாக அறிமுகம் செய்து பின் அதை ஒட்டித் தமிழ்த் தேசியத்தை ‘இந்தியத் தமிழ்த் தேசியம்’, ‘திராவிட தமிழ்த் தேசியம், ‘சைவ வேளாளத் தமிழ்த் தேசியம் என்பதாகப் பிரித்து இனம் காண்கிறது. ‘தேசியம் ஒரு கற்பிதம்’ முதலிய கருத்தாக்கங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலில் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப் பட்டுள்ளன. நூலாசிரியர் இதனைக் கவனத்திற் கொண்டிருக்கலாம். ‘காங்கிரஸ் கட்சியின் போதாமை ஜஸ்டிஸ் கட்சியையும், ஜஸ்டிஸ்கட்சியின் போதாமை திராவிடர் கழகத்தையும், திராவிடர் கழகத்தில் போதாமை, திராவிட முன்னேற்ற கழகத்தையும் தோற்றுவித்தமை வரலாறு” எனப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

போதாமை என்பதைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் இரண்டு தேசியம் கற்பிக்கப்பட்டதன் விளைவாக இதைக் காணவேண்டும். தமிழ்ப் பண்பாடு, மொழி, இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாகக் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் தவிர்க்க இயலாமல் சைவப்பின்புலத்துடனேயே விளங்கியது. பாரதிதாசனின் தமிழ்த் தேசியமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கதை வசனம் எழுதிய ‘பொன்முடி’ திரைப்பட உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால் எந்த அளவு சைவ தமிழ்ப் பெருமையை வேர்பதித்து நின்றது என்பது விளங்கும். சைவத் தமிழ் வீரனொருவன் வடநாட்டாரை வென்ற கதையே பொன்முடி.

மௌனகுருவின் இரண்டாம் கட்டுரை பாரதிதாசனின் கருத்து நிலை மாற்றங்களைக் காலப்பகுப்பு செய்கிறது. 1891-1908 பழமை வாதக் கருத்துநிலை; 1908-1930 இந்திய தேசியக் கருத்து நிலை; 1930-1945 திராவிட தேசியக் கருத்து நிலை; 1945-1960 தமிழ்த் தேசியக் கருத்துநிலை என்றதாக இப்பாகுப்பாடு அமைகிறது. பாரதிதாசன் கவிதைகளைத் துணிந்து ஆய்வதே இம்முடிவை மௌனகுரு வந்தடைகிறார். இயற்றிய நாடகம் பாரதிதாசனிடம் வெளிப்படும் சாதி மத எதிர்ப்பு, தொழிலாளர் ஆதரவு, பெண் விடுதலைக் கருத்துக்கள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுகிறார்.

நூலில் இறுதிக்கட்டுரை ஈழத்து நவீனக் கவிதை மரபில் பாரதிதாசனின் கருத்து நிலை ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்கிறது. 1950, 1960களில் வாழ்ந்த ஈழ கவிஞர்கள் எல்லோரிடமும், பாரதிதாசனின் தாக்கம் இருந்ததைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் குறிப்பாக ஈழக்கவிதையை அந்தக் கட்டத்திற்கு நகர்த்திய கவிஞர்களான மகாகவி, முருகையன், நீலவாணன் ஆகியோரிடமும் பாரதிதாசன் கருத்துநிலை வகித்த செயல்பாட்டை மேற்கோள் ஆதாரங்களுடன் நிறுவுகிறார். வாழும் கவிஞர்களில் காசி ஆனந்தன், புதுவை இரத்தினத்துரை ஆகிய ஈழத்து தேசியக் கவிஞர்களில் பாரதிதாசன் செல்வாக்கைச் சுட்டிக்காட்டுவதோடு பசுபதி, சுபத்திரன் முதலான பொதுவுடைமைக் கவிஞர்களில் பாரதிதாசன் கருத்துநிலையின் தாக்கத்தையும் சொல்கிறார். பாரதிதாசன் தாக்கம் பெற்ற இன்றைய கவிஞர்களாக வேலழகன், சிகண்டிதாசா, வாகரைவாணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

ஈழத்துத் தமிழ் கவிஞர்களில் படைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் தமிழகத்தில் விரும்பிப் படிக்கப் பட்டுள்ளதை அறியலாம். நவீன தமிழ்க் கவிதைகளிலும் இன்றைய ஈழக் கவிஞர்களின் செல்வாக்கு காணப்படுவதும் கண்கூடு. இன்றைய போர்ச்சூழலால் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரை இக்கவிஞர்கள் புலம்பெயர்ந்தும், பெயராமலும் பதிவு செய்துள்ளனர். அவர்களின் நீண்ட பட்டியல் ஒன்றை நாம் இங்கே சொல்லமுடியும். இன்றைய தமிழ்க் கவிதைகளை, ஈழத்து தமிழ்க் கவிதைகளைப் படிப்பவர்களாக அவர்களையே நாம் சொல்ல முடியும். முக்கிய சில பெண் கவிஞர்களும் இதில் அடக்கும். ஆனால், இவர்களின் பெயர்கள் எதுவும் பாரதிதாசன் கருத்தியலால் தாக்கம் பெற்ற கவிஞர்களின் பட்டியலில் இடம் பெயராதது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கவிதை இன்று மிகப் பெரிய வளர்ச்சியையும் தள மாற்றங்களையும் கண்டுள்ளது. புதிய கவி மொழி இங்கு உருவாகியுள்ளது. கருத்துக்களையும், கொள்கைகளையும் உரத்துப்பேசும் வானம்பாடி மரபும் இன்று இற்று வீழ்ந்து விட்டது. எதுகை, மோனைகளுக்குப் பதிலாக வந்த படோபடமான படிமங்களின் காலமும் இன்று மலையேறி விட்டது. உலகைப் புரட்டிடும் நெம்புகோல் கவிதை எழுதியவர்கள் எல்லாம் இன்று ‘ஹைகூ’ போன்ற வடிவங்களில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரதி, பாரதிதாசன் முதலானோர் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அரசியலின் கருத்து நிலையின் வெளிப்பாடு. இன்று அந்த காலங்கள் கடந்து விட்டன. பாரதியிடம் விளங்கிய ஒரு பன்முகத்தன்மை (variety) யும் கூட பாரதிதாசனில் காண்பது அரிது. தேசிய முரண் வலுவாக வெளிப்படும் நிலை இங்கைக் காட்டிலும் ஈழத்தில் இன்று அதிகமாகவே இருந்தபோதிலும் இயக்கம் சார்ந்த கவிஞர்களாக காசி ஆனந்தன், பூவை. இரத்தினதுரை போன்றவர்கள் மட்டுமே இன்றும் பாரதிதாசனால் ஊட்டம் பெற முடிகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

பல்கலைக் கழக ஆய்வுரை என்கிற வகையில் விரிவாக மேற்கோள் ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருந்தால் நூல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். பேராசிரியர் மௌனகுரு அவர்களின் நாடக ஆக்கங்களும், கலை, பண்பாடு, தொடர்பான நூல்களும் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படுவது அவசியம்.

பாரதிதாசன் தேசியக் கருத்துநிலையும் ஈழத்து கவிஞர்களின் செல்வாக்கும்

ஆசிரியர்: பேரா. மௌனகுரு, வெளியீடு : என்.சி.பி.எச்., சென்னை - 98, விலை : ரூ. 40.00.

Wednesday, January 24, 2007

சேலை பார்க்கும் படலம்

நான் ஒரு தமிழன்.
என்னுடைய கலாச்சாரம் தமிழ்க்கலாசாரம்.
தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்ந்து தமிழனாய் சாகவும் விரும்புகின்றேன்.
ஆகவே.....
எனக்கு தமிழ்க்கலாசாரமான சேலை கட்டிய பெண்ணை மட்டுந்தான் பிடிக்கும்.

பஞ்சாபி அணிந்த பெண்கள் என்றால் அவர்கள் பஞ்சாபிகளாய்த்தான் இருக்கவேண்டும். எனவே எனக்கு அவர்களைப் பிடிக்காது. அவர்கள் தமிழில் பேசினாலும், பஞ்சாபியோ, சல்வார் கமிஸோ, சுடிதாரோ (எல்லாம் ஒன்றா?) அணிந்தால் அவர்களை 'தமிழ்ப்பெண்' என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நன்கு sight அடிப்பேன்.

பெண்களுக்கு: நீங்கள் அனுப்பும் படத்தில் சேலையைத்தவிர வேறு எதுவும் அணிந்திருப்பீர்கள் என்றால் 'எங்கள் தமிழ் கலாசாரத்தை கெடுக்கவந்த மூதேவியே' என்றொரு வசையுடன் சேலை ஒன்று இலவசமாய் வைத்து உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் (எதற்கு என்கிறீர்களா? இனியாவது சேலையை அணிந்து ஒரு தமிழ்ப்பெண்ணாய் திருந்தி வாழ்த்தான் ).

பெண் பார்க்கும்போது 'தமிழ்கலாசாரத்தில்' பெண்களைப் பாடச்சொல்வார்களாம். ஆகவே mp3 formattல் 'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குகிறியே?' என்ற பாடலையோ அல்லது 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு?' என்ற பாடலையோ உருக்கமாய் பாடி அனுப்பிவிடவும்.

கனடாவில் வசிக்கும் ஆருரனின் பதிவில் விதண்டாவாதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை தந்திருப்பதால் - நான் இங்கே எழுதியது விதண்டா(வா)வதம் இல்லையென்றாலும்- அவருக்கு ஆதரவு கூறி இதைப்பதிவு செய்துகொள்கின்றேன்.

இப்படி இன்னும் பல சங்கிலிப்பதிவுகளைப் போட்டு நமது தமிழ்க்கலாசாரத்தை காப்பாற்றும்படி நண்பர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரிய அஸினுக்கும் எச்சரிக்கை:


asin

நாளை நீங்கள் சேலை கட்டாமல் causual ஆடையில் வந்து 'நீயில்லாமல் என்னால் உயிர் வாழமுடியாது' என்று அழுது அடம்பிடித்தாலும் என்னால் உங்களை எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று 'தமிழ்க்கலாசார சேலை அணிவோரை ஆதரிப்போர் சங்கத்தினூடாக சபதம் எடுத்துக்கொள்கின்றேன்
.

தொடர்பதிவாய் தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய கூறுகளான (திணிக்கப்பட்டு பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) சீதனம், தாலி கட்டுதல், சாதி பார்த்தல் என்பவை பற்றியும் சேலை கட்டிய தமிழ்ப்பெண்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்.

பெண்களே எமது கண்கள்; தமிழ்க்கலாசாரமே எங்களின் உயிர்மூச்சு!

Friday, January 19, 2007

*சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்

'புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்' என்ற சுஜாதாவின் நூல் சில்வருடங்களுக்கு முன் வெளிவந்தபோது பலவித எதிர்வினைகள் வந்திருந்ததை வாசித்தது நினைவு. உயிர்மையில் இருந்த பழைய கறள் மற்றும் யார் சிற்றிதழ் உலகில் அதிகாரத்திலிருப்பவர்- என்ற போட்டியில் ஒழுங்காய் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கக்கூடிய விவாதத்தை, காலச்சுவடு X உயிர்மை வெற்றுவிவாதமாய் அது முடிவடைந்திருந்தது.. இப்போது மதிவாணன் எழுதிய 'சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்' நூலிற்கான மதிப்புரையை வாசிக்கும்போது மதிவாணன் நேர்மையாக இந்நூலை அணுகியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

நன்றி: உங்கள் நூலகம் (கீற்று இணையத்தளத்தினூடு)
~டிசே
-----------------------------------------------------------

சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்
இராம.சுந்தரம்



“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
(பிறம் : 195)

பல நூற்றாண்டுகாலப் பழமை உடைய நூல்களைப் புதிய நோக்கில், புதிய மொழிநடையில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இன்று பலரிடமும் காணப்படுகிறது. இதற்குப் பைபிளும் விதிவிலக்கன்று. கிரேக்க மொழியிலிருந்து 17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் King James ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இருநூறாண்டுகள் அது வழக்கிலிருந்தது. அதற்கு ஒரு திருந்திய பதிப்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. அந்த மொழி நடையைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் பைபிளின் மூலக்கருத்தில் சிதைவு ஏற்படாத வண்ணம், மொழிபெயர்ப்புப் பணி நடந்தது. இந்தப் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு 1964-இல் வெளியானது. அந்த நூலின் பெயர்: The New English Bible - New Testament. இதைத் தொடர்ந்து பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டது.

பழைய ஆங்கில மொழிநடையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல், கிரேக்க மொழிக்கல்வியின் சரிவு ஆகியன இதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. தமிழிலும் பைபிளின் பழைய மொழிபெயர்ப்பைத் திருத்தி, புதிய மொழிநடையில் மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலந்தோறும் மொழியிலும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலிலும் ஏற்படும் மாற்றங்கள் இந்தத் தேவைக்கான காரணங்களாகும். பழைய நூல்களின் மூலக்கருத்தின் உள்ளடக்கத்தில், சிதைவு ஏற்படா வண்ணம், புதிய மொழியில் அதை விளக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மு. வரதராசன், வ.சுப. மாணிக்கம், ச.வே. சுப்பிரமணியன், மார்க்க பந்துசர்மா, தமிழண்ணல், புலியூர் கேசிகன் எனப் பலர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் சங்க இலக்கியப் புத்துரை நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் நாவலாசிரியரும், கணினியியலாளருமான சுஜாதா திருக்குறளுக்கு விளக்கம் தந்த கையோடு, புறநானூறுக்கும் ஓர் எளிய அறிமுகம் தந்துள்ளார். அவரது புறநானூறு: ஓர் எளிய அறிமுகம் என்ற நூல் சில கடுமையான மதிப்பீடுகளை / விமர்சனங்களை எதிர்கொண்டது. அவற்றை முன்வைத்த அவரது எதிர்வினையும் ‘தடாலடியாக’ இருந்தது.

அவரது நூலுக்கு மதிப்புரை எழுதியவர்களுள் ஒருவர் ‘சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்’ என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் பா. மதிவாணன். ‘இந்தியாடுடே’ இதழில் (ஜூலை 9, 2003) வந்த அந்த மதிப்புரையின் விரிவான பதிவு இந்த நூலில் 76 பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

மதிவாணன் ஒரு நம்பிக்கையோடு சுஜாதாவின் நூலைப் படிக்கத் தொடங்கியதும், நூலுக்குள் உள்ள “குறைபாடுகளும் குளறுபடிகளும் தவறுகளும் தடுமாற்றங்களும் பிழைகளும்” அவரை அதிர்ச்சியடையச் செய்ததாகக் குறிப்பிடுகிறார் (பக். 17). மூலமும் உரையும், பலபொருள் ஒரு சொல், பழஞ்சொல்லே பொருளாதல், பிழையான பொருள், ஒலியொத்த சொல் பொருளாதல், நேர்மாறான பொருள், பிறழவுணர்தல், உவமையும் பொருளும், மையக்கருத்து மயக்கங்கள் என ஒன்பது தலைப்புகளில் ஏறத்தாழ 175 குளறுபடிகளை, தவறுகளை எடுத்துக்காட்டுகிறார். இறுதியில் உரை எழுத விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் பற்றி விரிவாக எழுதுகிறார். மனம் போன போக்கில் உரை எழுதுதல் மூல நூலைச் சிதைத்து அதன் பெருமையைக் குறைத்துவிடும் என்பது இதன் உள்ளீடாகும்.

அவர் சுட்டிக்காட்டும் குறைகளில் சிலவற்றைக் காணலாம்:- ‘தண்ணடை நல்கல்’ (பா. 312) என்பதை மூலபாடமாகக் கொண்டு “ஒழுக்கமுள்ளவனாக்குதல்” என சுஜாதா பொருள்தர, இந்தப் பொருள் “நன்னடை நல்கல்” என்கிற பாடத்துக்குரியது என்கிறார். உ.வே.சா. பதிப்பில் ‘தண்ணடை’ பாட பேதமாகத் தரப்பட்டுள்ளது. மர்ரே பதிப்பில் ‘தண்ணடை’ மூலபாடமாக உள்ளது. இதற்கு ஏற்ற பொருள், ‘வென்றவீரர்க்கு நீர்வளம் மிக்க மருத நிலம் நல்குதல்’ என்பதாகும் (பக். 24). இதைக் காட்டும் மதிவாணன் தண்ணடை நல்கல் என்பதே பொருத்தமான பாடம் என்கிறார். ஆனால், சுஜாதா தரும் பொருள்தான் பொருத்தமில்லை.

பல பொருள் ஒரு சொல் என்கிற பகுதியில், ‘அவன் எம் இறைவன்’ (பா.48. மதிவாணன் நூலில் பாடல் எண் விடுபட்டுள்ளது பக். 25) என்பதற்கு ‘அவன் தெய்வம்’ என்று சுஜாதா பொருள் காண்கிறார். இது பிழை என்றும், தலைவன் / அரசன் என்பதே சரி என்றும் கூறுகிறார். 145-வது பாடலில் வரும் ‘பாரமும் இலமே’ என்பதற்கு ‘வேலைச் சுமையும் இல்லை’ என்பது சுஜாதா தரும் பொருள். இதற்கு ஏற்ற பொருள் ‘சுற்றம்’ என்பதாகும். புறப்பாடல் 35, பதிற்றுப்பத்து பாடல் 14 இரண்டிலும் இடம் பெறும் ‘பாரம்’ என்பது ‘ஒருவரது குடியைக்’ குறிக்கும்.

குறிஞ்சிப்பாட்டில் இது ‘பருத்திப்பூ’வைக் குறிக்கும். ஆக, 4 இடங்களில் தான் ‘பாரம்’ சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது. தமிழ்ப் பேரகராதியில் 145-வது பாடலிலுள்ள பாரம் என்பதற்குப் பெருங்குடும்பம், Big Family, Considered a burden எனப் பொருள் தரப்பட்டுள்ளது. புறநானூறு சொல்லடைவு (வ.அய். சுப்பிரமணியம்) ‘பாரம், responsibility’ எனப் பொருள் தருகிறது. இது எந்த அளவு பொருத்தமுடையது எனத் தெரியவில்லை. ‘வேலைச்சுமை’ என்பது தற்காலத்துக்கேற்றதேயன்றி, சங்ககாலத்திற்கு ஏற்றதன்று.

இதே போல, ‘சான்றோன்’, ‘சான்றீர்’ ஆகிய சொற்களுக்கும் இடத்துக்கேற்ற பொருள் கொள்ள வேண்டும். ‘பல்சான்றீரே’ எனத் தொடங்கும் 301-வது பாடலுக்கு. சுஜாதா ‘பெரியவர்களே’ எனப் பொருள் தருகிறார். புறநானூறு சொல்லடைவு ‘அமைந்த குணங்களை உடையீர்’ எனப் பொருள் தருகிறது. இங்கு மதிவாணன் சுட்டுவது போல, இது ‘வீரர்களே’ என்ற பொருள் உடையதாகும். புறநானூற்றில் ‘சான்றீர்’ 3 பாடல்களில் 9 முறையும், ‘சான்றோர்’ 9 பாடல்களில் 10 முறையும், ‘சான்றோன்’ 2 பாடல்களில் 3 முறையும் ஆக 14 பாடல்களில் 22 இடங்களில் இடம் பெறுகின்றன. புறம் பாடல் 63, 301, 302 ஆகியவற்றில் ‘போர் வீரன்’ என்ற பொருளில் வருகிறது. பதிற்றுப்பத்தில் ‘சான்றோர்’ என்பது ‘வீரர்’ என்ற பொருளில் 3 பாடல்களில் (55,67,82) இடம் பெறுகிறது. புறம் பா. 312-இல் வரும் ‘சான்றோன்’ என்பது ‘வீரன்’ என்ற பொருளில் வர, ஏ.கே. இராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட் ஆகியோர் தங்களது மொழிபெயர்ப்பில் noble, noble man எனத்தரக் காணலாம். அந்த, முறையில் சுஜாதாவும் பொருள் தந்திருக்கலாம். ஆனால், புறநானூற்று உரை இவ்வாறு பொருள் தரவில்லை. இது ஒரு தனியாய்வுக்குரியது, மதிவாணன் இதை மேற்கொள்ளலாம்.

எளிய அறிமுகம் செய்ய விரும்பும் சுஜாதா பழஞ்சொற்களை அப்படியே கையாண்டிருப்பது தற்கால வாசகர் பிறழ உணர வழிவகுக்கும் என்கிறார் நூலாசிரியர். ஒன்றிரண்டு இடங்களில் சரியாகப் பொருள் தருவதையும் சுட்டிக்காட்டுகிறார். ‘மதிலைக் கடந்து’ (பா. 392, பக். 27) எனத் தருதற்குப் பதில், ‘மதிலைத் தகர்த்து’ என்பது எளிமையானது என்னும் மதிவாணன், சுஜாதா, பா. 11ல் ‘அரண்கடந்து’ என்பதற்கு ‘அரண்களைத் தகர்த்து’ எனச் சரியாக எழுதியுள்ளதைக் குறிப்பிடுகிறார். ‘மதில்களின் பக்கத்தில்’ என்பதற்குப் பதில் ‘மதில்களின் சிறைக்குள்’ (பா. 44) எனத் தருவதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்.

‘ஐம்பெரும் பூதம்’ (பா. 2, பக். 28) ‘மடிவாய் இடையன்’ (பா. 54, பக். 29) ‘கொண்டி’ (பா. 78, பக். 29) ‘ஐவனம்’ (பா. 159) ‘பருத்தி வேலி’ (பா. 299, பக். 30) ஆகியவற்றிற்கு முறையே ‘ஐம்புலன்’, ‘கோணல் வாய் இடையன்’, ‘படை’, ‘ஐவகைப் பயிறு’ எனப் பிழையான பொருள்கள் தரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி, இவற்றின் சரியான பொருள்களை (பஞ்சபூதம், சீட்டி ஒலி எழுப்பமடியும் உதடு, திறை, மலைநெல்) தந்துள்ளார், 22 இடங்களில் பிழையான பொருள் தரப்படுள்ளதைக் காட்டுகிறார்.

மள்ளர் - மல்லர், முயங்கினேன் - மயங்கினேன் என்பன போன்ற ஒலி ஒப்புடைய சொற்களில் சுஜாதா மயங்கியுள்ளதையும் காட்டுகிறார்.

தமிழ் இலக்கணப் பயிற்சி இன்மைகாரணமாக ஏற்படும் தவறுகள் முதன்மையானதாகும். சிறந்தன்று, ஒத்தன்று என்பன முறையே சிறந்தது, ஒத்தது எனப் பொருள்தரும். சுஜாதா இவற்றைச் சிறந்ததில்லை, இசைவல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டமைக்கு, இலக்கணப் பயிற்சிக்குறைவே காரணமாகும்.

பிறழஉணர்தல்: “இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா” (பா. 44) “கூட்டத்தோடு உழவர் குளம் இல்லாமல் - என்பது பிறழவுணர்தலின் உச்சம். தொழுதி - கூட்டம், கயம் - குளம், என்கிற இரு சொற்கள் தவிரப் பாட்டுக்கும் உரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண் யானைகள், பெண் யானைக் கூட்டத்தோடு பெரிய நீர்நிலையில் படியாதனவாக - என்பது பொருள் (பக். 35)” சுஜாதா 42 இடங்களில் பிறழ உணர்ந்துள்ளார்.

இன், புரையும், கடுக்கும், ஏய்ப்ப முதலிய உவம உருபுகளின் தன்மை அறியாது பொருள்கூறி வாசகர்களை மயங்க வைக்கிறார் சுஜாதா. “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு (பா. 111) - நீலமலர் அணிந்த கரியகண் விறலியர் (பிழை) கண்ணுக்கு உவமையாக வந்த மலரை விறலியர்க்குச் சூட்டி விடுகிறார் சுஜாதா (பக். 44).”

பா. 220- இன் மையக் கருத்தை உரையாசிரியர் சுஜாதா புரியாது இடர்ப்படுவதை எடுத்துக்காட்டுகிறார் (பக். 52).

குறைகளைச் சுட்டிக்காட்டியவர், சுஜாதா சில இடங்களில் குறிப்பிட்ட சில சொற்களுக்குச் சரியான பொருள் தந்திருப்பது பற்றியும் (பக். 27, 29) புறநானூறு, சங்க இலக்கியம் பற்றி அவர் சில தரமான நூற்களைப் படித்துள்ளது குறித்தும், அவரது சுயமான முயற்சி பற்றியும், நூலமைப்பு குறித்தும் பாராட்டுகிறார். சில இடங்களில் அச்சுப்பிழை காரணம் ஆகலாம் என்று கூறிச் சுஜாதாவைக் காப்பாற்றுகிறார்.

தமிழ்ச் செவ்விலக்கியங்களுக்கு உரைகாண முயல்வோர், அவற்றில் தக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; மூலபாடத்தைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும்; முந்தைய உரைகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வுரைகள் முதலியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; பழந்தமிழ் இலக்கண அறிவு தேவை; சொல்வழக்குகளில் போதிய அறிவு வேண்டும்; இலக்கியப் படைப்பின் காலச் சூழலை அறிதல் தேவை. இந்த உரைநெறி முறைகள் எல்லோருடைய கவனத்திற்கும் உரியன. உரை எழுதுவோர்க்கு மதிவாணன் தரும் இந்த நெறிமுறைகள் நல்வழிகாட்டியாகும்.

தமது மதிப்புரையைச் சுவை குன்றாமல், தக்க ஆதாரங்களோடு, ஓர் ஆய்வுரை போலத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. பா. 84, 192 ஆகியவற்றிக்கு இவர் தரும் விளக்கம் சிறப்பாக உள்ளது. தமது கருத்துக்கு ஆதாரமாகச் சில நூல்களை அடிக்குறிப்பில் தந்துள்ளதும் பாராட்டுக்குரியது.

‘கள்ளுடைமை ஆமூரின் வளத்திற்கு அடையாளம்’ / ‘கள்ளை மல்லனுக்குக் கொடுத்து மயக்கிவிட்டார் சுஜாதா (பக். 36)’ / “லேசான புதுக்கவிதைபோல் சொல்ல முயலும்’ சுஜாதா பழங்கவிதை நயத்தையும் கோட்டை விட்டதுதான் (உரை) கண்டபலன் (பக். 41)”.

“சுஜாதா வையாபுரிப்பிள்ளை முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதல்லாமல் வேறென்ன செய்வது?” (பக். 57).

இப்படி, மதிவாணன் உரை நடையில் ஒருவித கிண்டல், எள்ளல் தொனிகேட்கிறது. சுஜாதாவின் நூல்பற்றிய இந்த மதிப்புரை அனைவரது கவனத்துக்கும் உரியதாகும். பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவதாகச் சொல்லிக் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் உண்டு பண்ணுவதோடு, அந்த இலக்கியங்களின் சீர்மையையும் சுவையையும் குறைத்துவிடக் கூடாது. தம்மை முன்னிலைப் படுத்தும் நோக்கோடும் சில இலக்கிய மரபுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கோடும், சிலர் புதிய உரை / விளக்கம் தரமுற்படுகின்றனர். அணிந்துரையில் சு.வேங்கடராமன் கூறுவதுபோல இவை ‘ஒவ்வொன்றின் பின்னும் ஓர் அரசியல் உள்ளது.’ இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் என்ற நூல்வழி மதிவாணன் உணர்த்துகிறார்.

இந்த மதிப்புரையில் பக். 20-ல் சுஜாதாவின் ஐந்து வினாக்களுக்கு விளக்கம் தருவதன் மூலம் அந்த வினாக்களை விளங்கிக் கொள்ளலாம் என்கிறார். இந்த sudoku வுக்குப் பதில் வினாக்களைத் தந்து விளக்கத்தையும் தந்திருக்கலாம்.

பக். 23: சுஜாதா ‘ஆயிவாளர்’ (பா. 390) எனப் பாடம் கொள்ள மதிவாணன் ‘ஆயிலாளர்’ எனப்பாடம் கொள்கிறார். புறநானூறு சொல்லடைவில் ‘ஆயிவாளர்’ இடம் பெற்றுள்ளது. பொருள் தரப்படவில்லை. இது குறித்த விளக்கம் தேவை.

‘படப்பை’ (பா. 326) எனப்பாடம் கொண்டு சுஜாதா ‘மடையிலே பிடித்த’ எனப் பொருள்தர, இந்தப் பொருளுக்கு ஏற்றது ‘படுமடை’ என்ற பாடமே என்கிறார் மதிவாணன். உ.வே.சா. வையாபுரிப்பிள்ளை (சங்க இலக்கியம்) பதிப்புகளில் படமடை என உள்ளது. மடை = கீழ்மடை என்று புறநானூறு சொல்லடைவு பொருள் தருகிறது. பட என்பது தரப்படவில்லை. எது சரியான பாடம்?

பக். 50 புலைத்தி என்பதற்கு இரண்டு பொருள். ஒன்று புலைமகள். (பா. 259) மற்றது வண்ணாத்தி (பா.311) குறத்தி என்ற பொருள் பொருந்துவதாக இல்லை. சாமியாடுவது குறத்தியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புறநானூறு சொல்லடைவு இந்த இரண்டு பொருள்களையும் (புலைமகள், வண்ணாத்தி) தருகிறது.

இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள சில மதிப்புரைகள் தரமானவையாகும். மதிவாணனின் இந்த நூலை மதிப்பீடு செய்ததன் மூலம் நான் சில புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புத்துரை எழுத விரும்புவோர், புத்துரை படிக்க விரும்புவோர் என இருதரப்பினரும் இந்த நூலைப் படிப்பது காலத்தின் கட்டாயம்.

சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்

ஆசிரியர்: பா. மதிவாணன்,
வெளியீடு: குகன் பதிப்பகம்,
5, வி.கே.கே. பில்டிங்,
வடுவூர் - 19,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
விலை : ரூ. 75.00.