1
986ல் கனடாவின் மேற்குக்கரையோரத்திலிருக்கும் நியூபவுண்டலாண்ட் கரையோரமாய், நூற்றி ஜம்பது ஈழ அகதிகள் இரண்டு படகுகளில் மிதந்துகொண்டிருக்கையில் கனடா மீனவர்களால் அவர்கள் காப்பற்றப்பட்டது நிகழ்ந்திருக்கிறது. அன்றைய பொழுதில் அது ஒரு முக்கிய நிகழ்வாய் ஊடகங்களில் காட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட பத்து கிலோமீற்றர்களை இவ்விரு 'உயிர்காக்கும்' படகுகள் கடந்திருந்ததுடன், உள்ளேயிருந்தவர்களின் உடல்நலம் மிக மோசமாகவும் இருந்தது. இப்படிக் 'கள்ளமாய்' படகில் வந்தவர்களைத் திரும்பி அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டுமெனவும், இல்லை கனடாவில் அவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யவேண்டுமென விவாதங்கள் அன்றையபொழுதுகளில் நடந்திருகின்றன. இறுதியில் படகுகளில் தத்தளித்தவர்கள் அகதிகளாக ஏற்கப்பட்டு கனடாவில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இலங்கை என்ற சிறுதீவும் அங்கிருந்த அங்கிருக்கும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளும் கனடா மக்களிடையே ஒரளவு தெரியவந்தது இந்நிகழ்வின் பின்னால் என்றும் கூறலாம். இந்த நிகழ்வு குறித்துத்தான் சேரன் போன்றவர்கள் ஒர் ஆவணப்படம் எடுத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
இன்று கனடாவில் கிட்டத்தட்ட 300, 000 ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்களெனக் கணிக்கப்படுகிறது. ஈழத்திற்கு வெளியே அதிக ஈழத்தமிழர் சனத்தொகை கனடாவிலே இருக்கிறது. அதேபோன்று ஈழப்பிரச்சினை குறித்த புரிதல்கள் அண்மைய வருடங்களில் கனடாவிலிருக்கும் பிற சமுகத்தினரிடையே பரவலாகச் சென்றிருக்கிறது. அண்மையில் றொரொண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் விமுத்தி ஜெயசுந்தராவின் திரைப்படமான 'இரண்டு உலகங்களுக்கு இடையில்' வெளியிட்டபோது கூட, ஈழத்தவர் அல்லாத பிற சமுகத்தவர் ஒருவரால் ஈழப்பிரச்சினை குறித்த கேள்வியொன்று எழுப்பப்பட்டிருந்தது.
இந்த வாரவிறுதியில் கனடாவின் மேற்குப்பகுதியிலிருக்கும் வன்கூவரில் (விக்ரோரியா)ஒரு படகில் 76 பேர் வந்திறங்கியிருக்கின்றார்கள். ஈழத்திலிருந்தே இவர்கள் வந்திருக்கின்றார்களென நம்பப்படுகின்றது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. எந்தவகையில் கனேடிய அரசாங்கம் இந்த விடயத்தைக் கையாளப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அதிதீவிர வலதுசாரிகள் வந்ததன்பின் குடியேற்றவாதிகள் தொடர்பான விடயங்களில் இறுக்கமான கொள்கைகளைக் கையாளுவதை நாமனைவரும் அறிவோம். சென்ற இருவருடங்களில் அகதி அந்தஸ்து கோரியவர்களில் 20,000ற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மையாக மெக்சிக்கோவிலிருந்து வந்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. சென்றமாதமளவில் இதுவரை வழக்கில்லாத விடயமான கனடாவிலிருந்து மெக்சிக்கோவிற்குச் செல்பவர்கள் விஸா எடுக்கவேண்டும் என்ற சட்டத்தையும் கொன்சர்வேட்டிக் அரசு கொண்டுவந்திருந்தது கவனத்திற்குரியது.
(மேலே எழுதியது 4 நாட்களுக்கு முன்)
2.
கனடாவின் சட்டத்தின்படி, ஒருவர் கனடாவிற்குள் வந்து அகதி அந்தஸ்து கோரும்போது, 48 மணித்தியாலங்களுக்குள் அவர் விசாரிக்கப்படவேண்டும் (Detention Review Hearing). அத்துடன் ஒருவர் அகதி தஞ்சம் கோரும்போது அவர் அகதியாக வந்த நாட்டு அரசுடன் குறித்த நபர் குறித்த எந்த விபரங்களையும் பெறக்கூடாது என்பதும் இருக்கிறது. இதற்கு மாறாக 76 ஈழத்தமிழர் கனடாவின் எல்லைக்குள் நுழைந்த 48 மணித்தியாலங்கள் ஆனபின்னரும், 16 பேர் மட்டுமே கனேடிய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட வந்த 60 பேருக்கு கனடாவிலிருக்கும் உறவுகள் -குறித்த நபர்களின் அகதி அந்தஸ்து விசாரணைகள் நிகழும்வரை- அடிப்படை வசதிகளைப் பொறுப்பு எடுத்துக்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால் இன்றைய அரசாக இருக்கும் வலதுசாரி கட்சி இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்குமா என்றும் தெரியவில்லை. அண்மைக்காலமாய் பல மாற்றங்களை குடிவரவாளர்கள் சம்பந்தமாய் சட்டத்தில் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமது மாற்றுக்கருத்தாளர்கள் என்று தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டு, புலி ஆதரவாளர்களின் உடுப்புப்பிடிக்கு சற்றும் குறையாத குலக்கொழுந்துகள், இப்படி வந்தவர்கள் எல்லாம் புலிகள் அவர்கள் திருப்பி அனுப்ப்படவேண்டும் என்று கூக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். முதலில் வந்திறங்கியவர்கள் புலிகளாகவோ, முன்னாள் புலிகளாகவோ இருந்தாற்கூட அவர்களை மனிதாபிமானத்தன்மையுடன் அணுகும்தன்மையே நம்மிடம் வேண்டியிருக்கிறது. மனிதாபிமானத்தைத்தாண்டி புலி ஆதரவு X எதிர்ப்பு தன்மையை ஊதிப்பெருப்பித்ததில் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடையே அதிகம் இருந்தது என்ற உண்மையையும் நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
இப்போது மீண்டும் இந்த 76பேர் விடயத்திற்கு வருவோம். அவர்கள் முன்னாள் புலிகளாக இருந்தால் கூட, அவர்களுக்கு அகதி அந்தஸ்தோ, அரசியல் தஞ்சமோ கொடுப்பதில் தவறென்று எவரும் -முக்கியமாய் ஆயுதம் ஏந்திய மற்ற இயக்கத்தவர்கள் கூட- கோரமுடியாது. எனெனில் அவர்களும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிலே ஈழத்திலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். அரச பயங்கரவாதத்தாலோ அல்லது புலிகள் மாற்று இயக்கங்களைத் தடைசெய்து அழித்தொழிக்க முயன்றபோதோதான் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அவ்வாறு வந்த இவர்கள் கூட, இப்போது வந்திறங்கியவர்கள் (ஒரு உதாரணத்திற்கு புலிகளாய் இவர்கள் இருந்தால்கூட) திரும்பி இலங்கைக்குப் போவென்று கூறுவதற்கோ எழுவதற்கோ எத்தகைய தார்மீக உரிமையுமில்லை என்றே கூறவேண்டியிருக்கிறது.
அத்துடன் கனடா போன்ற நாடுகளில் புலிகளில் இருந்த பலர் அரசியல் தஞ்சம் கோரியது ஏற்கனவே நிகழ்ந்துமிருக்கிறது. இன்னும், டிபிஎஸ் ஜெயராஜ் தனது பத்தியொன்றில் எழுதுவதுபோல சமாதான காலம் எனப்பட்ட 2003-2005ல் நிறையப் புலிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் கவனத்திற்குரியது. இப்படி எத்தனையோ விடயங்கள் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும்போது நாம் இன்று கப்பலில் வந்திருப்பவர்கள் புலிகளாய் இருந்தால் கூட அவர்களை மனிதாபிமானத்துடன் கனேடிய அரசு உள்வாங்கவேண்டுமென்று கோரிக்கை விடவேண்டுமே தவிர, திருப்பி இலங்கைக்கு அனுப்பவேண்டுமென இனவாதிகளின் குரலில் நின்று பேசமுடியாது.
.....
உண்மைகளைப் பேசாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் பொய்களை உண்மைகள் போலப் பேசாதிருந்தல் முக்கியம். எங்களைப் போன்ற 80களின் சந்ததியிற்கு தெரிந்த ஒரு இயக்கமாய் புலிகள் மட்டுமே இருந்தனர். அவர்களே எமக்கான உரிமைகளுக்காய்ப் போராடுகின்றார்கள் என்ற பெரும் நம்பிக்கை பதின்மவயதுகளில் இருந்தது என்பதும் உண்மையே. அந்த நம்பிக்கைகள் எவ்வாறு தூர்ந்துபோயின என்பதை மிகத்தெளிவாக தீபச்செல்வனின் 'உயிர்மை'த் தொடர் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த பலர் 'உண்மை' தெளிவாகத்தெரிந்தபின்னும், புலிகள் இறுதிப்போரின்போது பலவந்தமாய்ப் பிள்ளைகளைச் சேர்க்கவில்லை என்றும், கிளிநொச்சி இழப்பின்பின் மக்களை மிக மூர்க்கமாய் எதிர்கொண்டனர் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை. இன்று தீபச்செல்வன் தனது மூத்தசகோதரரைக் முகமாலைக் களமுனையில் இழந்த துயரத்தோடுதான், தனது 14 வயது தங்கை கட்டாயமாக களமுனையில் புலிகளால் நிறுத்தப்பட்டார் என்பதை முன்வைத்து புலிகளின் தார்மீக அறங்கள் எவ்வாறு இழந்துபோயின என்பதை விமர்சிக்கின்றார். அதுமட்டுமில்லை, த.அகிலன் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிபெற்ற(?) தனது தம்பியை புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக் காவுகொடுத்ததை மிகுந்த துயரத்தோடு தனது கவிதையொன்றில் பதிவு செய்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுகின்ற சித்தாந்தன், திருமணமான தனது நண்பனும் இவ்வாறு கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு களத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதைப் பதிவுசெய்திருக்கின்றார். அவ்வாறில்லாது பேச்சுவாக்கில்..., இன்னும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்... இவ்வாறான நூற்றுக்கணக்கான சம்பவங்கள் கூறப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது. இன்னும் நூற்றுக்கணக்கான கதைகள் பேசப்படாமலே புதைந்துபோயுமிருக்கும். புலிகளின் இந்தத்தவறுகளே அவர்களை மக்களிடமிருந்து அந்நியமாக்கி அவர்களின் வீழ்ச்சியை இன்னும் விரைவுபடுத்தியது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காய் புலிகளின் தவறுகளால், ராஜபக்ஷே அரசு -புலிகளை முன்வைத்து- செய்த இனப்படுகொலைகளை மூடிமறைததுக்கொண்டிருக்கவும் முடியாது. ஒருவரின் தவறு இன்னொருவரின் தவற்றைச் சரியென மாற்றிவிடமுடியாது.
மற்றும்படி எந்தக் குற்றத்தைச் செய்தவரும் அதை அனுபவிக்கும் காலம் என்றேனும் ஒருநாள் வந்துவிடும் என்பதில் எனக்குத் தீர்க்கமான நம்பிக்கை உண்டு. அதேயே தான் இன்றைய படுகொலைகளின் காரணமான அனைவரும் என்றேனும் ஒருநாள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றதென்று நண்பரொருவரிடம் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் 'அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம், ஆனால் இன்று அப்பாவிகளாய் இந்தப் படுகொலைக்கு ஆளானவர்களுக்கு அதனால் என்ன கிடைக்கப்போகின்றது?' என்று திருப்பிக் கேட்டார் நண்பர். உண்மைதான். அவர்களுக்குக் கொடுப்பதற்கோ சொல்வதற்கோ நம்மிடம் எதுவுமில்லை. எனெனில் நாங்களும் ஏதோவொருவகையில் இந்தக்காலத்தைய குற்றவாளிகள்தான்.
No comments:
Post a Comment