-எஸ்.ராமகிருஷ்ணன்
இந்த ஆண்டு சென்னைப் புத்தகச் சந்தையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிஞர் விக்ரமாதித்யனைப் பார்த்தேன். நண்பர்கள், இளைஞர்கள் புடைசூழ மிதமான போதையும் சிரிப்புமாக அலைந்துகொண்டிருந்தார். அருகில் சென்று அண்ணாச்சி என்று அழைத்தவுடன் முகத்தில் பரவசம் மின்னக் கைகளைப் பிடித்துக்கொண்டு உரிமையும் அன்புமாக விசாரித்தார். அடர்ந்து நரைத்த தாடி சற்றே தளர்ச்சியடைந்து போன தோற்றம். எதற்கெனத் தெரியாத படபடப்பு. எப்போதும் போலவே புதிதாகக் கவிதை எழுதத் துவங்கியுள்ள இளம் கவிஞர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அண்ணாச்சி நீங்க அப்படியே இருக்கீங்க என்று சொன்னவுடன் வெடித்துப் பீறிட்டது சிரிப்பு. பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தெரிந்த இன்னொரு நண்பருக்குக் கையசைப்பு. கையில் என்ன புத்தகம் வைத்திருக்கிறேன் என்று வாங்கிப் பார்க்கும் ஆர்வம். சமீபத்தில் படித்த நாவல் பற்றிய விமர்சனம். புதிதாக வந்துள்ள சிறு பத்திரிகைகள் பற்றிய விசாரிப்பு என்று பத்து நிமிசத்திற்குள் அவர் மனதில் இருந்ததைப் பகிர்ந்து தந்து விட்டு வேறுசில நண்பர்கள் அழைக்க என்னைக் கடந்து சென்றுவிட்டார்.
விக்ரமாதித்யனிடம் எனக்குப் பிடித்தது அவரது அசலான சிரிப்பு. மற்றும் எப்போதும் தன்னைச் சுற்றி இளைஞர்களோடும் கொண்டாட்டத்துடனும் உள்ள இயல்பு. நான் அறிந்தவரை தமிழ்க்கவிஞர்களில் இவரைப் போல இளம்கவிஞர்களை வாசித்து, பாராட்டி, கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வைக்கும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட கவி வேறு எவருமில்லை. இதை ஒரு கவிஇயக்கமாகவே செய்கிறார் எனலாம்.
அந்த வகையில் நவீனத் தமிழ்க் கவிதையுலகின் மிக முக்கியமான ஆளுமை விக்ரமாதித்யன். எப்போதும் என் நினைவிலுள்ள அவரது கவிதைகளில் ஒன்று.
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்
*
எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன் கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்து இன்றும் சென்னையில் தனக்கெனத் தனியாகத் தங்குமிடம் இன்றி, கையில் காசின்றி பெருநகரப் பாணனைப் போலத் தன் வீரியம் குறையாமல் கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பை சாத்தியமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பத்திரிகை அலுவலகங்களில் தற்காலிக வேலைகள், நண்பர்களின் உதவி என்று நிரந்தரமான வருமானம் குறித்து எவ்விதமான உத்தரவாதமும் இன்றி மனைவி பிள்ளைகள் என்று சொந்த வாழ்வின் நெருக்கடிகள் காலைக் கவ்விய போதும் கூடத் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாது அதே உற்சாகத்துடன் செயல்பட்டவர் விக்ரமாதித்யன். இருபத்தைந்து ஆண்டுக் காலமாகச் சென்னைக்கு வருவதும் போவதுமாகவிருக்கிறார். எந்த அறையில் தங்குகிறார். யார் யாரைச் சந்திக்கிறார் என்பது ஒவ்வொரு முறையும் புதிராகவேயிருக்கும்.
அவரது பயணங்களின் பின்னால் உள்ள இடர்களும் சிரமமும் நான் அறிவேன். பறவைகள் இளைப்பாறுதலுக்காக வழியில் உள்ள மின்சாரக் கம்பிகளில் அமர்வது போன்றதுதான் அவரது சென்னைப் பயணங்கள். சொந்த வலிகள் குறித்து அதிகம் பகிர்ந்து கொள்கின்றவர் இல்லை அவர். அவர் கவிதைகளில் வெளிப்படும் ஆதங்கம் அளவுகூட நேர்ப் பேச்சிலிருக்காது. ஆனால் தன்னைச் சந்திக்கின்றவர்களை உற்சாகப்படுத்துவதில் அவர் தனித்துவமானவர்.
ஒரு வகையில் வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, சி. மோகன், கந்தர்வன், துவங்கி, நான், கோணங்கி, ஜெயமோகன், வித்யாசங்கர், லட்சுமி மணிவண்ணன், அஜயன்பாலா, குறுமலை சுந்தரம், சமயவேல், பிரான்சிஸ் கிருபா, சங்கர ராம சுப்ரமணியம், தளவாய் சுந்தரம், பாலைநிலவன், முத்துமகரந்தன், மலைச்சாமி, திருப்புவனம் சரவணன், கனகசபை, ராஜகோபால், ரமேஷ் வைத்யா, யவனிகா ஸ்ரீராம், கைலாஷ்சிவன், சிவா, அப்பாஸ், ஸ்ரீநேசன் என நீளும் மூன்று தலைமுறைப் படைப்பாளிகள் அனைவரின் படைப்புகளுக்கும் பின்னால் விக்ராமதித்யனின் நெருக்கமான பகிர்தலும், உண்மையான அக்கறையும் கலந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
*
கவிஞனாக மட்டுமே வாழ்வது என்பது தமிழ்ச் சூழலில் ஒரு பெரிய சவால். வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் இழுபட மறுபக்கம் கவிதைக்கான உரிய அங்கீகாரம் இன்றியும் படைப்பு சார்ந்த எதிர்வினைகள் , மறுவாசிப்புகள் அற்றும், புறக்கணிக்கபட்ட தனிமையில் தள்ளப்படுவதே காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒரு வேளை தமிழ்ப்பாரம்பரியமே இதுதான் போலும். கவிஞனாக உரிய கௌரவத்துடனும் சுதந்திரமான மனதோடு எக்காலத்திலும் ஒரு கவிஞன் கூட வாழ்ந்தாக நான் அறியவில்லை.
மனம் நிறைய கவிதைகளுடன் காடு, மலை, கடல் என நடந்து அலைந்து புரவலனின் இடம் தேடிச் சென்ற கவிஞர்களைத்தான் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கவிதை பாட வயதும் இளமையான பெண் உடலும் தடையாக இருக்கிறது என்று முதுமை கொள்கிறாள் ஔவையார். உலக இலக்கியத்தில் கவிதைக்காக இப்படி உருச்சிதைவு செய்துகொண்ட கவிஞர் வேறு எவரும் இருப்பார்களா எனத் தெரியவில்லை.
தமிழ் மரபில் கவிஞனாக வாழ்வது விரும்பி ஏற்றுக்கொண்ட சாபம் என்றே தோன்றுகிறது.
கவிஞனாக வாழ்வது என்பது ஒரு எதிர்ப்புணர்ச்சி. தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே வாழ்வைக் கொண்டு செல்ல முடியும் என்று உயர்நம்பிக்கை. கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பு அர்த்தப்படுகிறது என்ற பேருண்மை.
ஆனால் நடைமுறை வாழ்க்கை சாதாரண மனிதன் மீது சுமத்தும் பிரச்சினைகள், மனத்துயர்கள், வெளிக்காட்ட முடியாத அக நெருக்கடி போல நூறு மடங்கைக் கவிஞன் மீது அழுத்துகிறது. கற்பனைக்கும் நடப்பிற்கும் இடையில் அலைபடும் பாவை போலச் சிக்கித் தவிக்கிறான் கவிஞன். இத்தனையும் மீறி அவனை முன்னெடுத்துச் செல்வது கவிதைக்கான மனநிலை மற்றும் இன்னும் கவிதை மீது அக்கறை கொண்ட நிஜமான வாசகர்கள்.
புதுமைப்பித்தனில் துவங்கி நேற்று முதல்கவிதைத் தொகுதி வெளியிட்டவர்கள் வரை பலரும் எழுத்தை நம்பி வாழ்ந்துவிடலாம் என்று சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எப்போதுமே எழும்பூர் ரயில் நிலையம் எனக்கு ஒரு பலிபீடம் போலத்தான் தோன்றும். காரணம் இங்கே வந்து இறங்கி எத்தனையோ கனவுகளுடன் நகருக்குள் வாழவந்தவர்கள் எத்தனை ஆயிரம் கலைஞர்கள். அவர்களில் அறியப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள். புதைசேறு இழுத்துக் கொள்வதைப் போல சப்தமின்றி சென்னை மாநகரம் வந்தவர்களைத் தன்னுள் இழுத்துக் கொண்டுவிடுகிறதா?
சென்னையில் தங்க இடமில்லாமல், வேலை இல்லாமல், எழுத்தாளராக , கவிஞராக மட்டுமே வாழ்வது என்று வந்து இறங்குவது பெரும் சாகசம். இந்த சாகசத்தில் என் வாழ்வின் பதினைந்து வருடங்கள் சென்னையில் வீசி எறியப்பட்ட வாழைப்பழத்தோலைப் போல எந்த முக்கியமும் அடையாளமும் இன்றிக் கழிந்திருக்கின்றன. ஆனாலும் இந்த வலி, நிராகரிப்பு, வெளிக்காட்ட முடியாத அவமானம் இவைதான் என்னை எழுத வைத்தன. எனக்கான இடத்திற்கான போராட்டத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன.
உலகின் பெரும்கவிஞர்கள் பலரும் கொண்டாட்டத்தைத் தன்னோடு கூடவே வைத்திருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் மனது சகலகோடித் துயர்களையும் தாண்டி ஒவ்வொரு நிமிசமும் புதிதாக உள்ள வாழ்வினைப் பருகவே முனைந்திருக்கிறது.
லோர்க்காவின் கவிதைகளை வாசிப்பவன் அடையும் நெருக்கம் அவன் வாழ்வைப் பற்றி அறியும் போது இன்னும் அதிகமாகிறது. பிரெஞ்சுக் கவிஞனான ழான் காக்தூ கலகக்கவிஞன் என்னும் சிறப்பு அடையாளத்துடன் குடி, கொண்டாட்டம், கலையை மட்டுமே நம்பி வாழ்வது என்று இயங்கிய தீவிரம் இன்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.
போராட்டமே உலகம் என்று உரத்துக் குரல் கொடுத்த பாப்லோ நெருதாவின் வாழ்வில் எத்தனை காதல்கள், எவ்வளவு கொண்டாட்டங்கள். நடனம், இசை, குடி, பெண்கள் என்று வாழ்வை அவர் ருசித்த விதம் அலாதியானது. அவ்வளவு இசைக்கும் காதலின் பிரிவுகளுக்கும் இடையில்தான் அவர் சமூகவிடுதலைக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்.
*
தமிழ்க் கவிஞர்களில் விக்ரமாதித்யன் ஒருவர் மட்டுமே தன்னைச் சுற்றி எப்போதுமே கொண்டாட்டத்தையும் பெரிய இளைஞர் கூட்டத்தையும் உடன் வைத்திருப்பவர். ஒருவகையில் விக்ரமாதித்யனின் சந்திப்பு என்பது கொண்டாட்டத்திற்கான துவக்கமாகவே எவருக்கும் இருக்கிறது.
விக்ரமாதித்யன் வேதாளத்தைச் சுமந்துகொண்டு திரிவதாகப் புனைகதை சொல்கிறது. நான் அறிந்த வரையில் கவிஞர் விக்ரமாதித்யன் தான் வேதாளம். எப்போது அவர் விக்ரமாதித்யனாக இருப்பார். எப்போது வேதாளமாக மாறி தன்னைச் சுமக்கவிடுவார் என்பது சூழலும் விருப்பமும் பொறுத்தது.
எழுத்தாளர்களில் நகுலனுக்குப் பிறகு விக்ரமாதித்யன் குறித்தே அதிகம் புனையப்பட்ட கதைகள் உள்ளன. குறிப்பாக விக்ரமாதித்யன் இலக்கியக் கூட்டங்களில் நடந்து கொண்ட விதம், தனிப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதில் உருவான நகைச்சுவை, கவிஞர்கள் பற்றிய அவரது பதிலடிகள், அவர் எழுதிய குறுங்கவிதைகள் என்று அவர் ஒரு நாட்டார்தெய்வம் போல எண்ணிக்கையற்ற கதைகளும் கற்பனைகளும் சூழப்பட்டிருக்கிறார். அக்கதைகளில் சிறிதளவாவது உண்மையிருக்கும் என்பதே நிஜம். ஆனால் அந்தக் கதைகள் சுவாரஸ்யமானவை. ஒரு எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக, எதிர்ப்புக் குரல் தரும் கலைஞனாக இருந்திருக்கிறான் என்பதற்கான சாட்சிகள் அவை.
தமிழ் இலக்கியத்தில் அண்ணாச்சி என்னும் சொல் விக்ரமாதித்யன் ஒருவரை மட்டுமே குறிக்கக்கூடியது. பலநேரங்களில் அவரைவிட வயதில் மூத்த சிலர் கூட அவரை அண்ணாச்சி என்றே அழைப்பதைக் கண்டிருக்கிறேன். அண்ணாச்சியைப் பார்த்தேன். அண்ணாச்சி கூடப் போயிருந்தேன் என்று சொல்லும் இளைஞர்களின் கண்களில் உற்சாகம் வழிந்து கொண்டிருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
ஒரேயொரு கவிதையை எழுதி முடித்திருந்த இளைஞனைக்கூட உலகின் ஒப்பற்ற கவிதையை அடையாளம் கண்டுவிட்ட சந்தோஷத்தைப் போலப் பாராட்டிப் பேசிச் சிறப்பிக்க வேறு எவருக்கு மனதிருக்கிறது. விக்ரமாதித்யனின் பாராட்டும் தொடர்ந்த அக்கறையும் பலரைக் கவிஞர்களாக்கியிருக்கிறது.
தன்னைச் சுற்றிய இளைஞர்களை இவ்வளவு சந்தோஷமாக ஒரு மனிதனால் வைத்திருக்க முடியுமா என்று பொறாமை கொள்ளுமளவு உற்சாகி விக்ரமாதித்யன். அதே நேரம் இத்தனை நண்பர்களிருந்தும் பல நேரங்களில் பின்னிரவில் படுக்க இடம் கிடைக்காமல் யார் யாருக்கோ போன் செய்து எங்காவது ஒரு அறை தேடிச் சென்று குப்பை படிந்த மூலையில் பையைத்தலைக்கு வைத்து உறங்கிச் செல்லும் அடிநிலையும் இவருக்கு மட்டுமே நேரக்கூடியதாக இருக்கிறது.
நானோ, கோணங்கியோ செல்லும் இலக்கற்ற பயணங்களில்கூட எங்களை அறியாத சில தயக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். விக்ரமாதித்யனிடம் அது கிடையாது. உண்மையில் அவர் ஒரு தீராத சஞ்சாரி. கிடைத்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு, மனம் விரும்பிய ஊரில் இறங்கி, கவிஞர்கள், நண்பர்கள், இளம்வாசகர்கள், இலக்கியப் பரிச்சயமே அறியாதவர்கள் என்னும் பேதமின்றி எவரோடும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் ஆகிவிடக் கூடியவர்.
கவிதை குறித்தும் அவர் எவரையும் மிரட்சி கொள்ள வைக்கின்றவர் இல்லை. கவிதை எழுவது எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒரு மனநிலை என்று சொல்வதோடு தான் போகின்ற இடங்களில் எல்லாம் கவிதைகள் சொல்லி எழுத வைத்து நிரூபணமும் செய்கின்றவர். சங்ககாலப் பாணர்களைப் போல அவர் செல்லுமிடம் எல்லாம் கவிதைக்கான நிகழ்வெளிகளே.
குடிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தபோதும் எந்த போதையின் உச்சத்திலும் கூட அவர் வழிமாறிப் போய்விடுவதில்லை. மாமிசம் உண்டதில்லை. அறியாத நபரைத் தவறாக ஒரு சொல் பேசிவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் வரையில் குடி என்பது சேர்ந்து உரையாடுவதற்கான பரிமாற்ற பானம் மட்டுமே. குடிக்காதவர்களை அவர் கட்டாயம் செய்வதில்லை. தான் குடிக்கக் கூடாது என்று மறுப்பவர்களை அலட்சியம் செய்யத் தவறுவதுமில்லை.
எனக்கு விக்ரமாதித்யன் என்னும் ஆளுமையைப் பிடிக்கும். அவர் கவிதைகளை ரொம்பவும் பிடிக்கும். அன்னம் வெளியீடாக ஆகாசம் நீல நிறம் என்னும் விக்ரமாதித்யனின் முதல் கவிதைத் தொகுப்பு நவகவிதை வரிசையில் 1982ஆம் ஆண்டு வெளியானது. அன்னம் வெளியிட்ட மிக முக்கியமான பங்களிப்பு இந்த நவகவிதை வரிசை.
இதில்தான் வண்ணநிலவன், கோ. ராஜராம், அப்துல்ரஹ்மான், மீரா, முதலியவர்களின் கவிதைத் தொகுதிகள் வெளியாகின. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவற்றைத் தேடித்தேடி வாங்கிப் படித்தேன். விக்ரமாதித்யனை அப்போது அறிமுகமாகவில்லை.
அதன் சில வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை கோணங்கியோடு குற்றாலம் செல்லப் புறப்பட்ட போது தென்காசிக்கு ஒரு காலை நேரம் வந்திறங்கினோம். இளமஞ்சள் வெயிலோடு கூடி விட்டுவிட்டு சாரல் அடித்துக்கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் அருகில் தான் விக்ரமாதித்யனின் வீடு இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்றார். இருவரும் வீட்டைத் தேடிப் போனோம்.
கோவிலின் அருகாமையில் ஒண்டுக்குடித்தனங்கள் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாதி இருள் மங்கிய வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாக இருந்தது. மின்சார மற்றுப்போன பகலில் ஓலைவிசிறியால் வீசியபடியே அக்னிநதி நாவலைப் படித்துக் கொண்டிருந்தார் விக்ரமாதித்யன். மெலிந்த உடம்பு. சீவப்படாத தலை. புகைப்பதற்கான பீடிகள், தீப்பெட்டி. ஒரு பக்கம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்து மூடப்பட்டிருந்த உணவு. வீட்டில் வேறு யாருமில்லை.
எங்களைப் பார்த்த மாத்திரத்தில் அவரது முகத்தில் புன்னகை ததும்பத் துவங்கியது. மாப்ளே என்று உரிமையுடன் கோணங்கியை அழைத்து அருகில் உட்கார வைத்தார். என்னை, கோணங்கி அறிமுகம் செய்து வைத்தவுடன் யோவ் உன்னைத்தான்யா.. ராமச்சந்திரன் சொல்லிக்கிட்டே இருந்தான். உன் கதை ஒண்ணைப் பத்தி ரொம்ப நல்லாச் சொன்னான்யா.. அவன் சாதாரணமா யாரையும் பத்தி சொல்லமாட்டான். உன்னைப்பத்தி ரொம்பச் சொன்னான்யா என்று உற்சாகத்துடன் பேசத் துவங்கினார்.
அவர் சொல்வது வண்ண நிலவனைப்பற்றி என்று கோணங்கி குறுக்கிட்டு என்னிடம் சொன்னார். என்னுடைய சிறுகதை குறித்து வண்ணநிலவன் சொன்ன விஷயத்தை அன்றைய உரையாடலில் நாலைந்து முறை நினைவுபடுத்தியதோடு நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன், எது போன்ற புத்தகங்களில் விருப்பம் அதிகம் என்று விக்ரமாதித்யன் கேட்டார்.
நான் ரஷ்ய இலக்கிய புத்தகங்களைப் பற்றிச் சொன்னவுடன் 'முதல்ல நீ கெஸ்டா பெர்லிங் சாகாபடி. சல்மா லாகெர்லெவ்வோட நாவல். மதகுருங்கிற பேர்ல க.நா.சு தமிழ்ல மொழிபெயர்த்திருக்கிறார். அது கிடைக்கலேன்னா தேவமலர் படி. கோணங்கி, உன்கிட்டே ஒளிச்சிவச்சிருப்பியே. அதுல இருந்து எடுத்து படிக்கக் குடுறா' என்று உரிமையோடு சொன்னார்.
கோணங்கியிடம் அப்படியொரு ரகசிய சேமிப்பு அறையிருந்தது. அதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நாவல்கள் அத்தனையும் இருந்தன. மதகுருவைப் படிக்கத் தருவதாக உறுதியாகச் சொன்னார் கோணங்கி. பின்பு மூவரும் குற்றாலம் புறப்பட்டுச் சென்றோம். நல்ல சீசன். வழி முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அருவியின் பெரும்சப்தம் ஊரை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. மங்குஸ்தான் பழம் விற்பவர்களின் குரல்கள் கடந்து சென்றோம்.
சித்திரசபைக்குப் போய்விட்டுப் பிறகு அருவியில் குளிக்கலாம் என்றார். சித்திரசபை சிவனின் ஐந்து சபைகளில் மிக முக்கியமானது. அங்கே நாங்கள் சென்றபோது அதிகம் ஆட்கள் இல்லை. அங்கிருந்த ஒவ்வொரு ஓவியமாக விளக்கிச் சொல்லிக்கொண்டே வந்த போது மரபு இலக்கியங்கள் குறிப்பாக சைவ சித்தாந்த இலக்கியங்களில் அவருக்கு உள்ள புலமையை அறிந்துகொள்ள முடிந்தது.
அருவிக்குச் சென்று குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு வந்தபோது நடை சாத்தியிருந்தது. கல்தூண்கள் உள்ள பிரகாரத்தில் நின்றபடியே ஈரத்தலையுடன் அவர் திரிகூட ராசப்ப கவிராயர் எழுதிய குற்றாலக்குறவஞ்சியைப் பற்றிச் சொல்லத் துவங்கினார். உணர்ச்சி வேகத்தில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து ஆழ்ந்த பெரு மூச்சுடன் அங்கிருந்த சிவனை நோக்கி வணங்கிவிட்டு மௌனமாகிவிட்டார்.
ஈரஉடைகளுடன் பெண்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். குரங்குகள் இரண்டு மரக்கிளையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. செண்பகப்பூவைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அருவியின் மீது ஒளிர்ந்துகொண்டிருந்தது சூரியன். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. திரும்பி வருவதற்காகப் பேருந்தில் ஏறிய போது விக்ரமாதித்யன் இரண்டு வரிக் கவிதை சொல்லி அதைக் குறித்துக் கொள்ளும்படியாகச் சொன்னார்.
விக்ரமாதித்யனின் பெரும்பான்மைக் கவிதைகள் அவர் அவ்வப்போது நண்பர்களிடம் சொன்னவை. அவர் சொல்லி இளம் வாசகர்களால் எழுதப்பட்டவை. பயண நேரங்களில் டயரிகளில் குறிக்கப்பட்டவை. நாலைந்து இளம் கவிஞர்களுடன் ஒன்று சேர்ந்து நீள் கவிதைகள் படைப்பது வரையிலான தடையற்ற மனச்சுதந்திரம் அவருக்கு இருந்தது.
விக்ரமாதித்யன் கவிதைகளில் நான்கு குரல்கள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. ஒன்று கவிஞனாக தான் வாழ்வதின் இடர்ப்பாடுகள் குறித்த ஆதங்கம். மற்றது, பெண்கள் மற்றும் பாலுணர்வு குறித்து அடக்கி வைக்கப்பட்ட மனநிலை. மூன்றாவது, மரபான தமிழ் இலக்கியம் குறித்த அவரது உயர்வெண்ணம் மற்றும் அது கவனிப்பாரற்றுப் போய்விட்டதே என்ற கோபம். நான்காவது, தன்னைச் சுற்றிய உலகின் துவேசங்கள். அதிகார நெருக்கடிகள், எதிலும் சார்பு கொள்ள முடியாது தவிக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இந்த நான்கும் பல நேரம் ஒரே கவிதையிலும் வெளிப்படும். கவிதை குறித்து அதிகக் கவிதைகள் எழுதியவர் இவரே.
இவரது கவிதையில் அதிகம் உருவகங்கள், கவித்துவப்படிமங்கள் இடம்பெறுவதில்லை. மாறாக இயல்பான அன்றாட மொழியைக் கவிதையின் மொழியாக உயர்த்துவதே இவரது வெற்றி. அத்தோடு நேரடியான சொல்லும் தன்மை அவர் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது மரபான தமிழ்க் கவிதையின் குரல். அத்தோடு தான் ஒரு நவீனக் கவிஞன் அல்லன். மாறாக, தமிழ்மரபின் பாணன் என்று சொல்லிக் கொள்ளும் கவித்துவ வெளிப்பாடு . இவையே விக்ரமாதித்யன் கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வைக்கின்றன.
இவரது கவிதைகள் குறித்துப் பொதுவான குறையும் அதன் நேரடியான எளிமையான கூறலே. பல கவிதைகள் வெறும் ஸ்டேட்மெண்ட்டுகளாக முடிந்துவிடுகின்றன. சில கவிதைகள் அது உருவாக்கப்படும் அதிர்ச்சிக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. போதும் என்ற அளவை மீறிய சுய ஆதங்கம். கவிதையின் ஊடாடும் மௌனமின்மை என்பது போன்ற குறைகளைத் தாண்டி இவரது கவிதைகள் தனித்த வகையாக அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து முக்கியக் கவிதைகளாகக் கவனம்பெறுகின்றன.
முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் விக்ராமதித்யன். சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள், தனிப்பாடல்கள் வரை தேர்ந்து கற்றவர். அதே நேரம் தமிழின் முக்கிய படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தேடித்தேடிப் படிக்கும் இயல்பும் அவருக்கு உண்டு. எனது நாவல்கள் அத்தனைக்கும் வெளியான சில வாரங்களில் படித்து விட்டு விரிவான விமர்சனம் செய்தவர் விக்ரமாதித்யன். ஜெயமோகனும் கோணங்கியும் இதை நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் விக்ரமாதித்யனின் கவிதைகள் மொத்தத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கின்றன. சிறுகதைகள், கவிதைகள் குறித்த கட்டுரைகள் தனி நூல்களாக வெளியாகியிருக்கின்றன. விக்ரமாதித்யன் கவிதைகள் குறித்து இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தேவையுள்ளது.
*
விக்ரமாதித்யனோடு உள்ள என்னுடைய உறவு எண்ணிக்கையற்ற நினைவுகளால் நிரம்பியது. யோசிக்கையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பயணத்தில் ஏதாவது ஒரு ஊரில் அவரைச் சந்திக்காமல் இருந்ததேயில்லை என்றே தோன்றுகிறது. திருப்புவனத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு நான் போய் இறங்கும் போது உள்ளிருந்து ஈரத்தலையும் சிரிப்பாக வெளியே வந்துநின்றார் விக்ரமாதித்யன். அந்த அளவு இலக்கியமே வாழ்வு என்றலையும் சஞ்சாரி அவர்.
ஒரு முறை பத்தமடையில் உள்ள எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வீட்டில் நான், கோணங்கி, ஜோதிவிநாயகம், விக்ரமாதித்யன் நால்வரும் தங்கியிருந்தோம். கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தார்கள் என்பதால் தமிழ்ச்செல்வன் மட்டுமே தனியாக இருந்தார். நாங்கள் சென்றபோது அவரும் தன் வேலைக்காகக் கிளம்பி திருநெல்வேலி சென்றுவிட்டார்.
நாங்களாக சமையல் செய்து சாப்பிட்டபடியே இரண்டு நாட்கள் பகலிரவு பாராமல் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்ச்செல்வனின் வீடு அருகே ஆற்றின் படித்துறை உள்ளது. குளிப்பதற்கு மிக அழகான இடம். குளிப்பதும் வீடு திரும்பி பேசுவதுமாக நீண்டது பகல். அன்றிரவு விக்ரமாதித்யன் மிக அதிகமாகக் குடித்திருந்தார். வீட்டில் இருந்த மாவடு உள்ள ஜாடியை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு போதையுடன் தான் ஒரு கதை எழுத விரும்புவதாகச் சொல்லி என்னை எழுதும்படியாகச் சொன்னார்.
நான் உடனே ஒரு பேடும் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். மணி பத்தரையிருக்கும். கதையைச் சொல்லத் துவங்கினார். இரண்டு வரிகள் எழுதியிருப்பேன். அதற்குள் திரும்பப் படித்துக் காட்டச் சொல்வார். கதை ஒரு டாக்சி டிரைவரைப் பற்றியது. கதையின் துவக்கத்தில் அவன் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குக் கிளம்புகிறான். திருநெல்வேலிக்குள்ளாகவே ஒவ்வொரு இடமாக நின்று நின்று டாக்சி போகின்றதே அன்றி, கதை ஒரு துளிகூட நகரவேயில்லை.
இடையில் அவராக மறைவில் போய்க் குடித்துவிட்டு வருவார். வந்தவுடன் ஊறுகாய் சாப்பிடுவார். பின்பு கதையைத் தொடரச் சொல்வார். இப்படியாக கதையில் டாக்சி திருநெல்வேலியை விட்டுத் தாண்டுவதற்குள் விடிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதற்குள் பதினைந்து பக்கங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. எனக்கோ தூக்கம் தாங்க முடியவில்லை. அவரும் தூக்கமும் கதைசொல்லும் உற்சாகமும் ஒன்று சேர்ந்திருந்தார்.
முடிவில் பேனாவின் ரீபில் தீர்ந்துபோனது. நல்லவேளை தப்பிவிட்டேன் என்பது போல நினைத்து நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். ஆனால் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த கோணங்கி எழுந்து வந்து பேனா இல்லேன்னா என்ன பென்சில் தர்றேன் என்று புதிதாக ஒரு பென்சிலைச் சீவி எடுத்து வந்து தந்தார். விடிய விடிய அந்தக் கதையை எழுதினோம். கதை முடியும்போது தமிழ்ச்செல்வன் வீட்டிலிருந்த ஒரு ஜாடி மாவடு ஊறுகாய்களும் ஒரே இரவில் காலியாகிப் போயிருந்தது.
மறுநாள் காலை கதையைத் திருத்தம் செய்து தன்னிடம் வாங்கி வைத்துக்கொண்டார். பின்பு அதை எடிட் செய்து காலம் என்னும் தலைப்பிட்டு வெளியிட்டதோடு அதை எனக்கே சமர்ப்பணமும் செய்திருந்தார். ஒருவகையில் அந்த நிகழ்வு வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் அவருக்குள் இருந்த கதை சொல்லும் உத்வேகத்தைக் காட்டுகிறது. இதைப் போலவே கலாப்ரியா நடத்திய கவிதைப் பட்டறைகள், முன்றில் கருத்தரங்கு. பிரமீளுடன் ஆன விக்ரமாதித்யனின் நட்பு, கழுகு மலையில் நடந்த இலக்கிய விவாதம் என்று மனம் ததும்பும் அளவு அவரோடு சந்தோஷமான நட்பும் நினைவும் சாத்தியமாகியிருக்கின்றன.
*
விக்ரமாதித்யனின் கவிதைகள் எளிய மனிதர்கள் பால் மிகுந்த அக்கறை கொண்டவை. நடுத்தர வயதில் வேலையற்றுப்போன ஒரு மனிதன் வேலை தேடி, குடும்பத்தைப் பிரிந்து செல்லும் ஒரு அதிகாலையைப் பற்றிய அவரது கவிதை வலி நிரம்பியது. அந்தக் கவிதை பல நேரங்களில் என் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு பயணத்திலும் அந்தக் கவிதையை நினைத்துக்கொள்வேன்.
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர்வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது
கண்ணுக்குள் . . .
பொருள்வயின் பிரிவு கவிதையிலிருந்து
நன்றி: உயிர்மை(ஜூலை, 2008)
Wednesday, July 30, 2008
Wednesday, July 23, 2008
அணைத்து அழிக்கப்படும் தலித் அடையாளம்
-அழகிய பெரியவன்
அண்மையில் இலக்கிய நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. ‘தலித் இலக்கியம் முடிவுக்கு வந்துவிட்டது' என்றார் அவர். பிடிக்காத ஒருவரின் கதையை முடித்த மன நிறைவு, அவரின் குரலில் தெரிந்தது. யார் முடிவுக்கு கொண்டு வந்தது என்று அவரிடம் கேட்டேன். அதுவாகவே வந்து விட்டது என்றார் அவர். ஒரு வேளை நேரிலே இருந்திருந்தால் இனிப்பையோ, தேநீரையோ கூட, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அவர் வாங்கி தந்திருப்பார். அத்தகைய ஓர் அரிய வாய்ப்பு பறிபோனதில் எனக்கு சற்றே வருத்தம்தான்!
தொடர்ந்த பேச்சினூடே அவர் இமையத்தின் கட்டுரையைக் குறிப்பிட்டார். அக்கட்டுரை தலித் அறிவு ஜீவிகள் மற்றும் விகாஸ் அத்யாயன் கேந்திரா ஆகியோரால், பிப்ரவரி மாதம் 8 அன்று தொடங்கி மூன்று நாட்கள் சென்னையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. ‘குமுதம் தீராநதி' யில் சூன் மாதம் வெளியான சோ. தர்மனின் நேர்காணலையும், ‘புதிய புத்தகம் பேசுது' சூன் மாத இதழில் வெளியான சா. கந்தசாமியின் நேர்காணலையும் அவர் மேலும் குறிப்பிட்டுச் சொன்னார். இவை மூன்றையும் சேர்த்து வாசித்துக் கொண்டிருந்த போது ‘உங்கள் நூலகம்' ஏப்ரல்-மே இதழில் வெளிவந்த கவிஞர் சுகுமாரனின் நேர்காணலையும் அவற்றோடு இணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
கவிஞர் சுகுமாரனின் தலித் இலக்கியம் குறித்த கருத்து தன்னிலை விவரிப்பாகவும், தத்துவார்த்த தளத்துடனும் இருக்கிறது. தலித் இலக்கியம் பொது இலக்கியத் தளத்திலோ, தனி மரபாகவோ உருவாக வேண்டும் என்பது அவரின் விருப்பமாகத் தெரிகிறது. ஆனால் இமையத்தின் கட்டுரையோ, சா. கந்தசாமி, சோ. தர்மன் ஆகியோரின் நேர்காணல் கருத்துக்களோ அப்படியாக இல்லை. அவர்களின் கருத்துக்கள் தலித் இலக்கியத்தை வேறொரு புள்ளியிலிருந்து அணுகுகின்றன.
மேற்கண்டவற்றைப் படித்து முடித்தவுடன் தமிழ், தலித் இலக்கியவாதி என்று அறியப்படுகின்ற வகையில் எனக்கான சில கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்ற விருப்பம் உண்டானது. உடனே என் இலக்கிய நண்பருக்குப் பேசி கட்டுரை எழுதுவதாகச் சொன்னேன். அவர், பார்த்து செய்யுங்கள் என்றார்.
குழந்தைகள் சேர்ந்து விளையாடும்போது கவனித்திருக்கலாம். விளையாட்டு மும்முரமாக போய்க்கொண்டிருக்கும். ஒரு பக்கம் தொடர்ந்து வெற்றிகள் குவியும்; அல்லது அடுத்தடுத்து வெற்றிகளோ, வெற்றிபெறும் நிலையோ உருவாகும். உடனே கூச்சல்கள் தொடங்கிவிடும். இதுவரை ஆடிய விளையாட்டைக் கலைத்து விடலாம். முதலில் இருந்து தொடங்கலாம் என்று சில குழந்தைகள் சொல்வார்கள். இப்படியாக அந்தக் களேபரம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
தமிழ் இலக்கியத்திலும் இப்போது அப்படித்தான் சில குரல்கள் ஒலிக்கின்றன. உரையாடலை முதலில் இருந்து தொடங்கலாம் என்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஒன்றைப் பேசுவதைப் போன்றதொரு சலிப்பு வேறொன்றுமில்லை. வெற்றி பெற்ற திரைப்படங்களை அடியொற்றி ‘மம்மி' திரும்புகிறது, ‘டைட்டானிக்' திரும்புகிறது என்று ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் படங்களை எடுத்து அனுப்புவதைப் போல, சிலர் இங்கே கேள்விகளோடே திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தலித் இலக்கியம் குறித்து அவநம்பிக்கையுடன் இன்று எழுப்பப்படும் வினாக்கள் அத்தனையும் தொடக்கத்திலேயே எழுப்பப்பட்டவைதான். ஒவ்வாமையும் வெறுப்பும் அப்போது உச்சத்தில் இருந்தன என்பதை அப்போது வெளியான கட்டுரைகள், நேருரைகள் அனைத்திலும் பார்க்க முடியும். இந்த வெறுப்பும் ஒவ்வாமையும் ஒரு திசையிலிருந்து மட்டுமே அன்று வரவில்லை. ஏறக்குறைய அனைத்து திசைகளிலிருந்தும் வந்தன. அனைத்து முகாம்களில் இருந்தும் வந்தன. ஆனால், ஒரு நம்பிக்கை இருந்ததை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை, மூர்க்கமாகவோ, அமைதியுடனோ அன்று விழுந்தன. ஆனால் இன்று அப்படியான எந்த விடைகளுமே இவ்வினாக்களுக்கு இல்லை. யாராலும் அவை வழங்கப்படுவதில்லை. யாரும் அதற்கு தயாராக இல்லை என்பதே உண்மை.
பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப்பிறகு இங்கு 90 களில் ஏற்பட்ட எழுச்சிதான், அன்று இவ்வினாக்களுக்கான விடைகளை வைத்திருந்தன. அரசியல், கலை, இலக்கியம், என எல்லா தளங்களிலும் அன்று எழுச்சி இருந்தது. தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் வினாக்களும், எதிர் வினாக்களுக்கான விடைகளும் எழுந்தன. இன்று நிலைமை வேறாக இருக்கிறது.
தொடக்க காலத்தில் தலித் இலக்கியம், அரசியல், தத்துவம் குறித்து எழுதப் புகுந்தவர்களில் யாரும் இன்று அவைகளுக்காக எழுதுவதில்லை. அரசியலில் தலித் உரிமை பேசுவது இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தலித் உரிமை என்பது வெகுசன அதிகார அரசியலில், இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தையே பெறுகின்ற ஒன்றாக இருக்கிறது. தேவையெனில் அந்த அடையாளம் தூக்கி எறியப்படவும் கூடும். விரிந்த பொதுத்தளத்திலிருந்து அடையாள அரசியலை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் தலித் மக்களுக்கு இருந்தது. இன்றும்கூட அந்தக் கட்டாயம் அற்றுப் போய் விடவில்லை. அடையாள அரசியல் வந்தது. அது நிலைபெறும் முன்னரே பொதுத்தள அரசியலின் பக்கம் தலித் அமைப்புகள் செல்லத் தொடங்கிவிட்டன.
தமிழ் நாட்டுக்கே உரிய திராவிட அடையாளமோ, தமிழ் அடையாளமோ இன்று தலித் அமைப்புகளுக்கும் தேவைப்படுவதாகக் கருதப்படுகின்றது. அதன் விளைவாகத்தான் தலித் அரசியல் அமைப்புகளில் தம்மையும் கடைசியாக இணைத்துக் கொண்டிருக்கும் அருந்ததியர் அமைப்புகளில் ஒன்று ‘ஆதித்தமிழர்' என்ற பெயரை தன் அமைப்புப் பெயருடன்இணைத்துக் கொண்டுள்ளது. தலித் கலைகள் இன்று நாட்டுப்புறக் கலைகளாக மீண்டும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
அரசின் ஆதரவுடன் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பொது அடையாளத்துடனேயே தலித் கலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னமும் ஒரு படி மேலே போய் தமிழக அரசு, ‘தலித்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானது, தவறு என்று ஆணை வெளியிட்டிருக்கிறது. தலித் இலக்கியம் தேவையில்லை; அது சாதி ஒழிப்பு இலக்கியம் அல்ல என்று இலக்கிய உலகில் இன்று பழைய விவாதங்கள் சூடுபடுத்தப்படுகின்றன. ஆக, தலித் என்ற அடையாளம் கைவிடப்பட்டிருக்கிறது; அல்லது கைவிடப்படும்படி புறச்சூழலும், அகச்சூழலும் நெருக்கடியை உருவாக்கி விட்டிருக்கின்றன.
சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட சாதிகளிடையேயான ஒற்றுமை ஆகிய கருத்துகளில் இருந்து தான் ‘தலித்' என்ற சொல் உருவாக்கம் கொண்டது. ஆனால் அச்சொல் இங்கு ஏற்றுக் கொள்ளப்படவும், புரிந்து கொள்ளப்படவும் இல்லை. அதற்குள்ளாகவே அது நிராகரிக்கப்பட்டது. தலித்தை கைவிடுதல் என்ற நிலை சாதி ஒழிப்பை எட்டியதின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவா? அப்படி ஒரு நிலை வந்தால் அச்சொல் தானாகவே வழக்கொழிந்து விடும். ஆனால் இன்றும் நிலைமை வேறாகத்தானே இருக்கிறது.
உத்தப்புரம் சாதிச்சுவர் போன்ற எண்ணற்ற தீண்டாமை வடிவங்கள் பலம் பொருந்தியவையாக உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு தளங்களிலும் தேசிய நீரோட்டமாக சாதி இருந்தபடியே இருக்கிறது. இப்படியானதோர் நிலையிலே கைவிடப்படும் தலித்நிலை தற்கொலைக்கும், புறமுதுகிடுவதற்கும் ஒப்பானதாகவே இருக்கும். அரசியலின் அதிகார ஈர்ப்பு யாருக்கும் உவப்பானதுதான். அதிலும் குறிப்பாக அதிகாரத்தை அனுபவத்திராத தலித்துகளுக்கு அது மேலும் உவப்பானதாகவே இருக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அம்பேத்கரியலின் ஓர் அடிப்படைக்கூறு. ஆனால் அவற்றுடன் இணைந்த வேறு சில முக்கியக் கூறுகளும் இருக்கின்றன.
அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் வகுப்புகளின் பேராய மாநாட்டில், நாகபுரியில் அம்பேத்கர் 1930 ஆகஸ்டு 8 அன்று உரை நிகழ்த்துகையில், இதைக் குறித்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இழிநிலைக்கு அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது. விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது. இழிவழக்குகளை ஒழித்தல், வாழ்க்கை மாற்றம், கல்வி பெறுதல், சமமான மனித உரிமைகள் ஆகியவற்றைப் பெறும் போதுதான் விடுதலை சாத்தியம் அடையும் என்கிறார் (தொகுதி 37, பக். 75). அதிகாரத்தை நோக்கிய நமது செயல்திட்டம்,மேற்கண்டவைகளை உள்ளடக்கியது ஆகும்.
ஆனால் கெடுவாய்ப்பாக, நாம் இத்திட்டங்களில் பின்னடைவையே பெற்றிருக்கிறோம். பொதுத் தளங்களில் நுழைவதற்கான தலித் எனும் அடையாள கடவுச் சீட்டு முடக்கப்படுவதற்கான நெருக்கடியில், நாம் அதை இழப்பதற்கு துணிந்துவிட்டோமா?
இழி வழக்குகள் தொடர்கின்றன. மலம் சுமக்கவும், பிணம் தூக்கவும் இன்னும் ஒரு தலித்தே தேவைப்படுகிறான். பொருளாதார அளவுகோலின் முதல் அய்ந்து சென்டி மீட்டரில் கூட தலித் இன்னும் வரவில்லை. கல்வி பெறுவதிலும் நிலைமை ஓரளவே மாற்றம் கண்டிருக்கிறது. உயர் கல்வியையும், தொழில் நுட்பக் கல்வியையும் பெறுவதில், தலித் மிகுந்த பின்னடைவு நிலையில் இருக்கிறான். அவனுக்கு சமமான மனித உரிமைகள் இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
தலித் அடையாளம் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. பொது அடையாளத்தின் போர்வையில் தனி அடையாளங்களை சிதைப்பது, தலித் அடையாளக் கோரலால் தடுக்கப்பட்டது. மிகத் தந்திரமாக பல்வேறு அரசியல் மற்றும் பொது சொல்லாடல்களின் வழியே, பொது அடையாளத்தினரால் இடையூராகக் கருதப்படும் தலித் அடையாளம் கைவிடப்படும்படி நெருக்கப்படுகிறது.
இந்த முனைக்கும் அந்த முனைக்குமாக, ஒடுக்கப்பட்டோரை விரட்டிக்கொண்டே இருப்பதற்கானதொரு உத்திதான் இது. தலித் அடையாளம் கைவிடப்படுவதின் விளைவாக இன்று உட்சாதி அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உட்சாதி முரண், உள் இட ஒதுக்கீடு ஆகிய தளங்களிலே எதிரொலிக்கிறது. தலித் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்துதல், கைவிடுதல் என்ற நிலை, தமிழ் இலக்கியத்தில் தீவிரமடைந்த தருணத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. பிற தளங்களில் இல்லாத தலித் அடையாளம், எழுத்தில் மட்டுமே இடையாறாது இன்று வரை பேணப்பட்டு வருகிறது என்பதே உண்மை. ஆனால், இந்த அடையாளம் இன்று மீண்டும் மிகப்பழைய வினாக்களால் எதிர்கொள்ளப்படுகின்றன. துரு பிடித்த வினாக்கள் அவை.
தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதிலேயே இன்னும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இமையம் தன் கட்டுரையை, ‘தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல' என்ற பிரகடனத்துடனேயே தொடங்குகிறார். அவரின் கட்டுரை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. தலித் எழுத்துக்களை பொது அடையாளத்துடன் அணுக வேண்டும் என்பது முதல் பகுதி. தலித் எழுத்தாளர்களுக்கு எந்த கருத்தியல் சார்பும் இருக்கக்கூடாது என்பது இரண்டாம் பகுதி. மார்க்சியமோ, பெண்ணியமோ, தலித்தியமோ எல்லாமே தடைகள் தான் என்பது அவர் கருத்து. அனுமானங்களையும், யூகங்களையும் கடந்து சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்று புத்தி சொல்கிறார் அவர்.
அப்படிப் பார்த்தால், சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியம் தான் என்பதை அந்த எழுத்துக்களின் உள்ளடக்கம் மற்றும் தன்மையினைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். சாதி எதிர்ப்பின் அடிப்படையிலேயே தலித் எழுத்துக்கள் உருவாயின. சாதி எதிர்ப்பு என்ற அடிப்படை இன்றி தலித் எழுத்துக்கள் இல்லை; அதற்கான தேவையும் இல்லை. இலக்கியம் சுத்தச் சுயம்புவானது. அது கலப்படமற்றது. அது புனிதமானது என்பதைப் போன்ற கருத்துக்கள் அனைத்துமே போலியானவை; உள் நோக்கம் கொண்டவை. எழுதத் தொடங்கும் வரையிலும் அதற்குப் பிறகும் கூட ஒரு படைப்பாளி சாதி சூழலில் தானே இயங்குகிறான். அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருகிறவர்கள் எத்தனைப் பேர் இருந்துவிட முடியும்? படைப்பாளிக்கான அரசியல் என்று எதுவுமே இல்லையா என்ன?
ஒரு படைப்பாளியின் மிகச்சரியான கருத்து நிலையே அவனின் படைப்புகளை மேன்மையுறச் செய்கிறது. சாதிய விடுதலை, பெண் விடுதலை, பொதுவுடைமை போன்ற கருத்துக்களை அவன் தன் எழுத்தில் கொள்ளாமல் வேறெதைக் கொண்டால் அவன் படைப்பு சிறப்படையும்? இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் அளவுகோல்களுக்கு படைப்பாளி ஆட முடியாது. எழுத்தில் இது வேண்டாம், அது வேண்டாம் என்று அவர்கள் சொல்வதற்கு, எழுத்தாளன் உடன்படத் தேவையில்லை. சர்க்கஸ் சிங்கமாகவோ, யானையாகவோ படைப்பாளி ஒருபோதும் இருக்க முடியாது. தங்க கூண்டுக் கிளிகளுக்கு வானம் தெரியாது.
"தலித் இலக்கியத்தை ஒப்புக்கொண்டால் பிராமண இலக்கியமும் உண்டு, முதலியார் இலக்கியமும் உண்டு, தேவர் இலக்கியமும் உண்டு'' என்கிறார் சா. கந்தசாமி, தன் நேர்காணலில். ‘இலக்கியத்தில் முற்போக்கு பிற்போக்கு என்று இல்லை. தலித் இலக்கியம் மராட்டியத்தில் பிராமணர்களால் தொடங்கப்பட்டது' என்பதும் அவர் கருத்து. தலித் இலக்கியம் எதிர்ப்பு இலக்கியம். அது உலகளாவிய புரட்சிகர இலக்கியங்களுடன் உறவு கொள்ளும் தன்மையுடையது. மானுட விடுதலை, சமூக விடுதலை என்பது அதன் அடிப்படை. பார்ப்பன இலக்கியத்திற்கும், முதலியார் இலக்கியத்திற்கும், தேவர் இலக்கியத்திற்கும் இப்படியான அடிப்படையாக என்ன இருக்க முடியும்? இலக்கிய வகையைப் புரிந்து கொள்ளாமல், அதை சிறுமைப் படுத்துவதைப் போன்ற வேறொரு அறியாமை இருக்க முடியுமா?
இலக்கியத்தில் மட்டுமின்றி சமூக, அரசியல் மற்றும் தத்துவ நிலைகளிலும் எப்போதுமே இருந்து வரும் எதிர்ப்புக் குரலை அங்கீகரிக்காத போக்கு, என்றென்றும் நிலவுகின்ற ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியம் பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டது என்று சொல்வதும் கூட அப்படித்தான். ‘தலித் இலக்கியம்' என்னும் தமது நூலில் அர்ஜுன் டாங்ளே, தலித் இலக்கிய வரலாற்றை தெளிவாக சித்தரிக்கிறார். இவ்வகை இலக்கியம் புத்தர் காலத்திலேயே தொடங்கியது. சொக்கமேளா (கி.பி. 14ஆம் நூற்றாண்டு), ஜோதிராவ் புலே (1828 - 90) எஸ்.எம். மாதே, பாபாசாகேப் அம்பேத்கர் என்று அது தொடர்ந்து வந்தது என்கிறார் டாங்களே. அவரின் கருத்துக்கு துணை செய்யும் வகையில் ஜோதிராவ் புலேவின் எழுத்துக்கள் உள்ளன. 1885 மே 24 அன்று நடைபெற்ற மராத்தி எழுத்தாளர் மாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டபோது அதை மறுத்து, அம்மாநாட்டுக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்:
"மனித உரிமைகள் பற்றி பொதுவாக நினைக்காதவர்களின் புத்தகங்கள் மற்றும் மாநாடுகள், அதைப் பிறருக்கு அளிக்காதவர்கள், தங்களது நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் பிறருக்கு அளிக்காதவர்கள், நமக்கு நல்லஅர்த்தத்தை வழங்க முடியாது. நமது புத்தகங்களில் நாம் சொல்ல முயலுகின்றவற்றோடு அவர்கள் ஒத்துப் போக முடியாது'' (புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்). அன்று தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு வகையில் எதிர்க் குரல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழிலும் பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி ஒரு மரபு உண்டு. எல்லா மொழிகளிலும் இப்படி இருக்க முடியும் என்று சொல்லலாம். அதை உள்வாங்காமல் தலித் இலக்கியம் ஆதிக்கசாதியினரால் தொடங்கப்பட்டது என்று சொல்வது அநியாயமானது.
தயாபவார், நாராயணன் சர்வே, ராபா ஆதவ், கோதாவரி பருலேகர் போன்ற ஆதிக்க சாதி மற்றும் பார்ப்பன எழுத்தாளர்கள் சிலர் மராத்தியில் தலித் ஆதரவு எழுத்தாளர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களின் சாதிய அடையாளத்தைக் கண்டு கொள்வதிலிருந்தே இக்கருத்துக்கள் தந்திரமாகக் கிளம்புகின்றன. இங்கு குறிப்பிடப்படும் சமகால எழுத்தாளர்களுக்கு முன்பே பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அவர் கல்லூரி மாணவர் குழாம் ஆகியோரிடமிருந்து தொடங்கியதுதான் அங்கே தலித் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
தலித் இலக்கியம் குறித்த அடிப்படைப் புரிதல் இன்மை பெரிய எழுத்தாளர்களிடம் நீடித்திருக்கிறது என்பதற்கு இவ்வகை கருத்துக்களே ஆதாரம். "ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் பற்றியோ அல்லது இந்த இலக்கியத்தின் பங்கு பற்றியோ ஓர் இலக்கிய அல்லது கல்விக் கோட்பாட்டுப் பார்வையிலிருந்து மட்டுமே ஆய்வு செய்யும் போது, அதை மதிப்பிடுவதில் ஒரு முற்றான கருத்துருவாக்கத்தை முன்வைப்பதில் தவறிவிடுவோம். ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் சமூக ஆய்வியல் கோட்பாடுகளிலிருந்து மதிப்பிடப்பட வேண்டும்'' என்கிறார்
அர்ஜுன் டாங்ளே, தனது ‘தலித் இலக்கியம்' எனும் நூலில். கருப்பு இலக்கியமும், புலம் பெயர்ந்தோர் இலக்கிமும், மார்க்சிய இலக்கியமும் உலக அளவிலே இந்த அளவுகோலின் படிதானே மதிப்பிடப்படுகின்றன. பிறகு ஏன் தலித் இலக்கியம் மட்டும் தொடர்ந்து சாதிய ஆய்வியல் கோட்பாடுகளிலிருந்து மதிப்பிடப்படுகிறது? கலைக்கோட்பாடு கருத்துச் செல்வாக்கிலிருந்து மீளாமல், தலித் இலக்கிய அடிப்படை பற்றிய வரலாற்றுப் புரிதல் இல்லாமல், வெறுப்பையும், தவறான தகவல்களையும் உதறித்தள்ளாமல் இருக்கும் வரை இப்படியான கருத்துக்கள் தொடர்ந்து வரும் என்றே தோன்றுகிறது.
சோ. தர்மன் கூட தன் நேர்காணலில் இப்படித்தான் பேசியிருக்கிறார். தமிழின் மேன்மை தங்கிய எழுத்தாளர்களாகக் கருதும்படி சொல்லப்படுகின்ற சிலரின் படைப்புகளில் தென்படும் ஒருசில வரிகளை தூக்கி வைத்துக் கொண்டு, புளங்காகிதப்பட்டு கலை, கலை என்று சொல்கிறார் தர்மன்.அப்படி வரிகளால் மதிப்பிடப் புகுந்தால், புறக்கணிக்கப்பட்ட படைப்பாளிகளின் ஆக்கங்களில் ஆயிரம் தேறும். ‘தலித் கதைகளில் தலித் எண்ணெய் தேய்க்காமல் பரட்டைத் தலையுடன் இருப்பான், கோபப்படுவான், சண்டை போடுவான், தலித் பெண் சோரம் போவாள் என்று தான் இருக்கின்றன' என்கிறார் அவர்.
முழுக்க படித்து விட்டுதான் சொல்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது; அல்லது அவருக்குப் பிடித்த மேன்மை தங்கிய படைப்பாளிகளின் தலித் சித்தரிப்புகளைத் தான் குழம்பிப் போய் மாற்றிச் சொல்லிவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. வாசிக்காமல் சொல்கிற கருத்துகளுக்கு என்றுமே மதிப்பில்லை. தலித் இலக்கியம் பற்றிப் பேசுகிற பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள், ஒன்றும் இல்லை என்று. சரி போகட்டும், எதையாவது சொல்லித்தானே ஆக வேண்டும். நாணயமாக ஜெயகாந்தன் சொன்னதைப் போல, ‘நான் புதிதாக எழுதுகிறவர்களின் எழுத்துக்களைப் படிப்பதில்லை' என்றாவது இவர்கள் சொல்லி விடலாம். கலை என்பதை சாக்கிட்டு கதைகள் அவற்றின் வரிகளுக்காக, நேர்த்தியாக மட்டுமே மதிப்பிடப்படும் என்றால், இலக்கியத்தின் அடிப்படை செத்துவிடும். அதையே சோ. தர்மன் செய்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பு வாய்ப்புகள், பட்டங்கள், விருதுகள், உதவித் தொகைகள், அங்கீகாரங்கள் எல்லாமும் இங்கு கவனத்துக்கு வராத தலித் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதேயில்லை. தலித் அடையாளத்தை விமர்சிப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் தான் அவை போய் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட ‘தலித் எழுத்தாளர்கள்' அவர்கள்! எதிர்க் கருத்துகளுக்கான மதிப்பு, விலைவாசியைப் போல ஏறிக்கொண்டே செல்லும் போல் தோன்றுகிறது. தலித் இலக்கியம் ஏன் பின்னடைவு கொண்டுள்ளது என்பதையும், இந்த நெருக்கடிகளை உருவாக்கும் குழுக்கள் எவை என்பதையும் தான் இன்று மெய்யாகவே ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தலித் மக்கள் மனிதர்களாகக் கருதப்படாமல் தான் வரலாறு நெடுகிலும் இருந்தனர். முகமற்றவர்களாக, குரலற்றவர்களாக, அடையாளமற்றவர்களாகக் கருதப்பட்டனர். இதற்கு நேரெதிராக பொது அடையாளம், ஆதிக்க சாதியினுடையதாக இருந்தது. இன்றளவும் அதுவே நீடிக்கிறது. பொது என்ற போர்வையில் தலித்துகளின் அடையாளம் உள்ளடக்கப்பட்டு சிதைக்கப்பட்டது; இழிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்தே இங்கு தலித் என்ற தனி அடையாளம் முன் வைக்கப்பட்டது. கருப்பினம் அடிமைப் படுத்தப்பட்டபோது, கருப்பே விடுதலையின் கருவியாக ஆக்கப்பட்டதைப் போலத்தான் தலித் என்ற சொல்லே இங்கு சமூகத்தின் சாதிய விடுதலைக்கான முழக்கமாக்கப்பட்டது. அம்முழக்கமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, துணிச்சலை, உரிமையை பெற்றுத் தரும் கருவியானது.
இந்த அடையாளத்தை விரும்பாத பொது (சாதி) சமூகத்தினர் இதை எதிர்த்தே வந்தனர். இன்று அவர்கள் தனி அடையாளம் எதற்கு, பொதுவுக்கு வாருங்கள் என்கின்றனர். பொதுவில் நமக்கான சம இடம் இருந்தால் போய்விடலாம். ஆனால், அப்படி ஏதும் இல்லை என்பதுதான் எதார்த்தம். அரசியலிலோ, இலக்கியத்திலோ, பண்பாட்டுத் தளத்திலோ, கல்விப் புலத்திலோ, அரசு நிர்வாகத்திலோ, அடையாள அரசியலை முன்னெடுத்த பின்புதான் தலித்துகளுக்கு இப்போது இருக்கும் சொற்ப இடமே கூட கிடைத்திருக்கிறது என்பது, வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
இந்தச் சூழலில் தலித்துகள் பொது சமூகத்தினரோடு ஊடாடுவதன் மூலம், அவர்களிடம் இருக்கும் சாதிய கருத்துகளைத் தகர்க்க வேண்டியுள்ளது. தலித்துகளின் அரசியலை ,உரிமைக் கோரலை பொது சமூகம் புரிந்து கொள்வதற்கு இன்று வரை தயாராக இல்லை. இலக்கியத்திலும் தலித் படைப்புகள் சாதிய இலக்கியமாகவே கொச்சைத்தனமாக வகைப்படுத்திப் பார்க்கப்படுகின்றன. இப்பார்வைகளும், கருத்துகளும் முற்றிலுமாக மாறும் வரை, தலித்துகள் தமது அடையாளத்தை எறிந்து விடுவது தற்கொலைக்கு சமமானதாகவே இருக்கும்.
பொது சமூகம் தலித்துகளோடு இணைய வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக தலித்துகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அவர்களோ நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றுதான் இன்று வரையிலும் அழைப்பு விடுக்கின்றனர். பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலின் உள்வாங்கி செறிக்கும் உத்தியின் அடிப்படையிலேயே அவர்களின் அழைப்பு இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாத தலித்துகள் உயர்வு நவிற்சி உணர்வோடு, அவர்களின் அழைப்புக்கு செவிசாய்த்து விடுகின்றனர். இது பரவலாக எல்லா தளங்களிலும் நடந்து வருகிறது. தனித்த அடையாளங்களுடன் நாம் இணைவது தான் சரியான இணைவாக இருக்கும். நமக்கான இடத்தோடு பொது அரங்கம் கட்டப்பட வேண்டும்.
இலக்கியத்தில் தலித் படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் தனித்ததொரு மரபாக ஏற்கப்பட்டு, பொது இலக்கியத் தளத்தோடு இணைக்கப் படவேண்டும். அதுவரை தலித் மக்கள் எல்லா தளங்களிலும் தமது அடையாளத்தை இழக்கத் தேவையில்லை.
நன்றி: கீற்று & தலித் முரசு(ஜூன், 2008)

Thursday, July 10, 2008
1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை
எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை
-மைக்கல் றொபேர்ட்ஸ்
தமிழில்: சேரன்
இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை.
தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள். ஒருவர் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் பிறந்து வளர்ந்தவர். காலியில் நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தோம். இப்பொழுது அவருக்கு 53 வயது. நாங்கள் அவரை டேமியன் என்று அழைக்கலாம். டேமியன் உயர்ந்த தொழிலில் இருந்தவர். அவருடைய நண்பர்கள் பலரைப் போல அன்றி, இலங்கையை விட்டு எப்போதுமே வெளியேறாதவர். இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் அவருக்கு இருக்கவும் இல்லை. அவருடைய மனைவி தமிழரல்லர். டேமியனும் மனைவியும் கத்தோலிக்கர்கள். கொழும்பில், காலி வீதியில் இருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தது டேமியனின் வீடு. டேமியனின் தந்தை வழிப் பெயர் தமிழ்ப் பெயராகவே இருந்தது.
ஜூலை இனப்படுகொலையின்போது கொழும்பில் எல்லா இடங்களிலும் திரிந்து, தேடித் தேடிக் கொலைசெய்தவர்கள் வாக்காளர் விவரப் பட்டியலைக் கையில் வைத்திருந்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வீடு அல்லது எந்தச் சொத்து தமிழருடையது என்பதை நீங்கள் இலகுவில் இனங்கண்டுவிட முடியும். டேமியன் தன்னுடைய இனத்துவ அடையாளத்தைப் பற்றி என்னதான் கற்பனை செய்துவைத்திருந்தாலும் அவருடைய பெயர் அவரைத் தமிழராகக் கொலையாளிகளிடம் இனங்காட்டிவிட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தமிழர்களில் பலர் தப்பியோடித் தமது சிங்கள நண்பர்கள், அயலவர்கள் வீடுகளில் தஞ்சம் பெற்றனர். பல சிங்கள மக்கள் தமிழர்களை இவ்வாறு பாதுகாத்திருந்தனர். வன்முறையின் தொடக்ககட்டங்களில் உடைமை அழிப்பும் கொள்ளையுமே முக்கியமாக இடம்பெற்றிருந்தன. பிற்பாடுதான் இந்த வன்முறை தமிழர்களைப் பெருமளவில் கொன்ற இனப்படுகொலையாக மாறிற்று. டேமியன் தப்பியோடவில்லை. கலவரத்தையும் அழித்தொழிப்பையும் வேடிக்கை பார்க்கிற ஒருவரைப் போல அவரும் காலி வீதியில் கும்பலோடு கும்பலாக உலவித் திரிந்தார். சிங்கள மொழியில் சரளமாக உரையாடினார். அதனால் உயிர் தப்பிவிட்டார். இன்றும்கூட அந்த அனுபவத்தைப் பற்றிப் பேசுவதானால் சிறு புன்னகையோடு தட்டிக்கழித்துவிடுவார்.
எனது நண்பர் வீஜியும் இப்படித்தான் தப்பியவர். ஆனால், வீஜி தப்பியது மயிரிழையில். கண்டியில் பிறந்து வளர்ந்தவர் வீஜி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தபோது நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். நீண்ட காலமாக நாங்கள் சந்திக்கவில்லை. வீஜி வெளிநாட்டவரைத் திருமணம் செய்து நீண்ட காலமாக வெளிநாடுகளிலேயே கற்பித்துவந்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1983 ஜூலையில் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். இனப்படுகொலை தொடங்கியபோது பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வீஜி சென்றுவிட்டார். நிலைமை சற்றுத் தணிந்ததும் வீஜியினுடைய இன்னொரு நண்பர் (இவரை தொ. வே. என்று அழைக்கலாம்) வீஜியைத் தன்னுடன் அழைத்துச்சென்றார். வீஜியும் தொ.வேயும் கிரில்லப்பனை மற்றும் கொழும்பு தெற்கு மருத்துவமனைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இனவன்முறைகள் மறுபடியும் ஆரம்பித்துவிட்டமை அவர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அந்தப் பாதையில் போவதைத் தவிர்த்து வேறு பாதைக்கு வண்டியைத் திருப்பினார் தொ.வே. ஆனால், அந்தப் பாதையிலும் எரிவும் அழிப்பும் கொலைகளும் நடந்துகொண்டிருந்தன. காரைத் தெருவோரமாக நிறுத்திவிட்டு நடந்து செல்வதே பாதுகாப்பு என்று கருதிய தொ.வே. காரை நிறுத்திவிட்டு யாரிடமாவது உதவிபெறலாமா எனத் தேடிச் சென்றார்.
இப்பொழுது வீஜி காருடன் தனித்து நின்றாலும் அருகில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் உரையாடினார். ஆனால், அவருடைய சிங்கள மொழி முறையான சிங்களம் அல்ல. அப்பொழுது கத்தி, கோடரி, தடி, பொல்லுகள் சகிதம் ஒரு கும்பல் அவரை நோக்கி வந்தது. கும்பலில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் சாரம் (லுங்கி) கட்டியிருந்தார்கள். சிலர் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்கள். பொதுவாக வயது நாற்பதிலிருந்து ஐம்பதுவரை இருக்கும். சாதாரணப் பொதுமக்கள். கோபத்திலும் ஆத்திரத்திலும் அவர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கவில்லை. மிக நிதானமாக, சாதாரணமான முறையில் நல்ல பணிகளைச் செய்வதுபோல இயல்பாக நடந்துகொண்டார்கள். இப்பொழுது அவர்கள் கவனம் முழுவதும் வீஜி நோக்கித் திரும்பியிருந்தது. அவர்களில் ஒருவன் வீஜியினுடைய பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினான். தனது தமிழ்ப் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளையும் வைத்துக்கொண்டு பொய்யான ஒரு சிங்களப் பெயரை வீஜி அவனுக்குச் சொன்னார். (பார்த்தீர்களா, எவ்வாறு தந்தை வழியான வரலாறு இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றிணைக்கிறது என்பதை). உன்னுடைய குடும்பப் பெயரென்ன என்று கேட்டார்கள். லொகுகே என்று பொய் சொன்னார் வீஜி. உன்னுடைய ஊர் எது? வெலிக்கடை.
இந்தக் கேள்விகள் கொலை செய்வதற்கு முன்பாக ஒருவர் தமிழரா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும். கும்பல் முற்று முழுதாகத் திருப்தி அடையவில்லை. எனினும் வீதியை விட்டு நகர்ந்து சென்றது. ஆனால், யாரோ ஒருவர் தொ. வே. அந்த இடத்தை விட்டு ஏற்கனவே நகர்ந்துவிட்டதை அவதானித்து இருந்தார். தொ. வே. குள்ளமானவர். கறுப்பானவர். தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்ற படிவார்ப்பு சிங்கள மக்களிடம் இருந்தது. கும்பலில் ஒரு சிலர் வீஜியிடம் திரும்பிவந்தனர். எங்கே அந்தப் பெரிய தமிழ்த் தடியன் என்று தொ.வேயைப் பற்றிக் கேட்டார்கள். தொ. வேயின் உண்மையான பெயரை வீஜி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், கும்பலால் அதை நம்ப முடியவில்லை. இப்பொழுது வீஜி தமிழரா சிங்களவரா என்பதில் கும்பலுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
கொஞ்சம் தமிழர்களை அடுத்த தெருவில் தாங்கள் கொன்றிருப்பதாகவும் அந்தக் கும்பல் வீஜியிடம் கூறியது. குருதி வழியும் கோடரியை வீஜியிடம் காட்டினான் ஒருவன். கொல்லப்பட்டவர்களின் உடம்புகளைப் பார்க்கத் தங்களோடு வர விருப்பமா என்று வீஜியைக் கேட்டனர் அவர்கள். வீஜி தமிழரா சிங்களவரா என்பதை உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு அமிலப் பரிசோதனையாக அது இருந்திருக்க வேண்டும் என்று வீஜி என்னிடம் பிற்பாடு தெரிவித்தார். ஒரு நல்ல சிங்களவர் இத்தகைய படுகொலைகளில் ஈடுபட வேண்டும் அல்லது அவற்றுக்குச் சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குருதியைப் பார்ப்பது தனக்கு அலர்ஜி என்று வீஜி அவர்களிடம் சொன்னார். அவர்களுடைய சந்தேகம் பலபடிகள் அதிகரித்தன. தொ. வேயின் காரை எரித்துவிடலாம் என்று கும்பல் முடிவெடுத்தது. அவர்கள் காரை எரிக்கத் தயாரானபோது வீஜி அவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்று தொ.வே. ஒரு சிங்களவர் என்று வலியுறுத்தினார். சிங்களவருடைய காரை எரிப்பது எவ்வளவு மோசமானது என்று வீஜி அவர்களிடம் வாதாடினார். காரின் கதவைத் திறந்து அதற்குள் இருந்த தொ. வே.யின் பெயர் பொறித்த ஆவணம் ஒன்றை எடுத்துக் கும்பலுக்குக் காட்டினார். அப்பொழுதும் அந்தக் கும்பல் நம்பிக்கைகொள்ளவில்லை. அந்தக் கணத்தில்தான் ஒரு போலிஸ் வண்டியில் தொ. வே. அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால், அப்போதும் அந்தக் கும்பல் அசையவில்லை. வந்திருந்த போலிஸ்காரர்களைவிடக் கும்பலில் ஏராளமானபேர் இருந்தனர். வீஜி சிங்களவர் அல்லர் என்று தெரிந்தாலும் வீஜியைச் சிங்களவர் போலவே நடத்தினர் வந்திருந்த போலிஸ்காரர்கள். தொ. வே. சிங்களவர்தான் என்பதை அவருடைய சிங்களம் மட்டுமின்றி அவருடைய நடையுடை பாவனைகளும் இப்போது தெளிவாகக் கும்பலுக்கு உணர்த்தின. வீஜியை போலிஸார் பாதுகாப்பாக ஜீப்பில் அழைத்துச் சென்றனர். தொ. வே. தன்னுடைய காரில் அவர்களுக்குப் பின்னால் சென்றார்.
ஒரு படுகொலை: நண்பனை இழந்தேன்
அருமைநாயகம் யாழ்ப்பாணத் தமிழர். எனது நண்பர் என்று கூறுவதைவிட நன்கு அறிமுகமானவர் என்பதே பொருத்தமானது என்று சொல்லத் தோன்றுகிறது. நல்ல அறிமுகத்துக்கும் நட்புக்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான வெளியில் இருந்தது எமது உறவு. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சிங்கள மொழியில் கற்பித்துக்கொண்டிருந்தபோது அருமைநாயகம், வரலாற்றுத் துறையில் தமிழ் மொழியில் கற்பித்துக்கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் அவருடைய நியமனம் தற்காலிகமானதாக இருந்தது. பிற்பாடு இலங்கை அரசின் வருமான வரித் திணைக்களத்தில் உயர்பதவியில் இணைந்துகொண்டார். கொழும்பில்தான் வாழ்வும் வேலையும். அருமைநாயகத்துடன் நான் ஒருபோதும் சிங்கள மொழியில் பேசியதில்லை. எனினும், அவரது சிங்களப் பேச்சு சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஒருவரது சிங்களம்போலக் கொச்சையாக இருந்திருக்கும் என்பதே எனது ஊகம். படுகொலைக் காலங்களில், தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்று கூறுவார்கள்.
படுகொலைகள் தொடங்கியபோது, அருமைநாயகமும் குடும்பத்தினரும் பாதுகாப்பாக வேறு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பிற்பாடு கொழும்பில் தமிழர்களுக்காக அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட அகதி முகாம்களில் ஒன்றுக்குப் போய்த் தங்கினார். சில நாள்களின் பின் நிலைமை மெல்லமெல்ல வழமைக்குத் திரும்பியது. எனினும் ஒருவகையான இறுக்கமான சூழலே நிலவிற்று. அருமைநாயகமும் அவரது தமிழ் நண்பர் ஒருவரும் கடற்கரைப் பக்கம் சென்று வரலாம் எனத் தீர்மானித்துக் காரில் புறப்பட்டனர். ஆனால், அன்று திடீரென நிலைமை தலைகீழாயிற்று. அன்று ஜூலை 29, 1983. பதற்றமும் பீதியும் வதந்திகளும் கொழும்பை மூடிய ஒரு காலை. மீண்டும் படுகொலைகள் தீவிரமாக இடம்பெற ஆரம்பித்தன. அகதி முகாமுக்குத் திரும்பிவருகிற வழியில் அருமைநாயகத்தையும் அவரது நண்பரையும் ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டது. அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அருமைநாயகத்தின் கதையை எனக்குச் சொன்னவர் அருமை நாயகத்தோடு ஒரே காலத்தில் கல்வி பயின்ற ஒரு சிங்கள நண்பர். சாதாரணமான ஒரு அலுவலகத்தில் சாதாரணமான நாற்காலியில் இருந்து சாதாரணமாக இந்தக் கதையைக் கேட்டேன். எவ்வகையிலும் ஆச்சரியமோ வியப்போ எனக்கு ஏற்படவில்லை; தலையில் கை வைக்கவில்லை. சிலவேளைகளில் என்னுடைய இயல்பு இதுதானோ என்னவோ? ஆனால், என்னால் மறக்க முடியவில்லை. அருமைநாயகத்துக்கு நான் எழுதும் அஞ்சலிக் குறிப்பு இதுதான். அவலமும் அவலத்துள் எதிர்ப்பும், இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது. ஆனால், கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.
பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார். அவருடைய 'தார்மீக சமூகம்' என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும். அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83: மேலும் ஒரு சம்பவம்". இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு. கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது; அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான். எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும். அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அருமை நாயகத்துக்கு ஏற்பட்ட அவலத்தை மட்டுமன்றி, அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது. அது மட்டுமன்று. பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது: பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய, அழிக்க முடியாத எதிர்ப்பே அது. வரிக்கு வரியாக இதோ அந்தக் கவிதை:
ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்
இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.
1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ. 'வெகு சாதாரணமாக' என்பதை அழுத்திச் சொன்னார். "ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன். போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை. சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது. இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது. எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை" என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ. அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன. அவருடைய கவிதை மத்தியதர வர்க்கத்தின் மீதான விமர்சனம் மட்டுமல்ல; ஜூலை படுகொலைகளின்போது நடந்த சம்பவங்களைப் புறத்தே ஏற்றுக்கொண்டுவிட்டாலும் அச்சம்பவங்கள் அகத்தே எழுப்பிவிட்ட கிளர்ச்சியை எதிர்கொள்ளும் முயற்சிதான் பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஆனால், என்னுடைய அக்கறையோ அந்த ஊர், பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது. முகம் தெரியாத அந்தத் தமிழரின், ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல், வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று. அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது; அது ஒரு கிளர்ச்சியின் செயல்; வன்மையான கண்டனம். மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது. அவருடைய துணிவு, மன உரம், தனது செயல் மூலம் அவர் வெளிக்காட்டிய மிகத் துல்லியமான கருத்து என்பன என்றென்றைக்குமாக எனது ஆன்மாவில் படிந்துவிட்டன. மற்றவர்களுக்கு இதனைப் பற்றி வேறுவகையான அர்த்தப்பாடுகள் எழலாம். ஒவ்வொரு பிரதியும் பல சாத்தியப்பாடுகளைக் கொண்டது. எனவே, பலவகையான வாசகப் பரப்புகளைச் சாத்தியமாக்குவது. பெயர் தெரியாத அந்தத் தமிழர் என்ன சொல்லியிருப்பாரோ என்பதை என்னால் எளிமையான அவுஸ்திரேலியப் பேச்சு வழக்கில் மொழிபெயர்க்க முடியும். ஆனால், என்னுடைய மொழிபெயர்ப்பு அந்தத் தமிழரின் வார்த்தைகளுக்கு நியாயம் செய்ய முடியாது. எளிமைக்கும் சாதாரணத்துக்கும் அப்பாற்பட்டவை அவரது வார்த்தைகள்.
இன்பத் திளைப்பு - 1
இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டோர், கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும். எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள், எரியூட்டுவோர், கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர். இவர்கள் வெறுமனே 'காடையர்கள்; காட்டுமிராண்டிகள்' அல்லர். இத் தகைய வரைவிலக்கணங்களுக்குள் இருப்போர் சிலரும் படுகொலைக் காலங்களில் சேர்ந்துகொள்ளக்கூடும் என்பது உண்மைதான். எனினும் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் கண்டுபிடித்த அடைமொழிகள்தாம் இவை. அசாதாரணமானவர்களால்தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்; சாதாரண மனிதர்க்கு இவை அப்பாற்பட்டவை என்பதே அவர்கள் கருதுவது. ஆனால், இத்தகைய படுகொலைகளை மிகச் சாதாரணமான சராசரி மனிதரும் புரியலாம் என்பதைத்தான் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம். அவர்கள் நிதானமாகத் திட்டமிட்ட முறையில் மாக்கிய வெல்லியன் (Machiavellian) பாணியில் இயங்கியிருக்கலாம் அல்லது அடங்காத வெஞ்சினத்துடன் வெறிபிடித்தோராகக் கும்பல்களாய் மக்கள் இயங்கியிருக்கலாம். இனப்படுகொலைகள், இனக்கலவரங்களின்போது கொலையாளிகளை வர்ணிக்க அறிவுஜீவிகளும் கௌரவமான பூர்ஷ§வாக்களும் பயன்படுத்தும் வழமையான தொடர்தான் 'வெறிபிடித்த' என்பது. இது பிழையன்று. வீஜியை விசாரணை செய்தவர்கள் வெளிப்படுத்திய நிதானமும் குதூகலமும் ஒருபுறமிருக்க, பழிக்குப் பழி என்பதாகக் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவதும் இலங்கை இனக்கலவரங்களிலும் இனப்படு கொலைகளிலும் தாராளமாகக் காணக்கிடைக்கிறது. எனினும், இந்த மாதிரிச் சூழலில் வெளிப்படுவது வெஞ்சினம் மட்டுமன்று. இன்பத் திளைப்பு, வெற்றிக் களிப்பு, இளிப்பு, கேளிக்கை என்பவையும்தான்.
ஜூலை83இல் இத்தகைய வெற்றிக்களிப்பின் கணங்களில் ஒன்றை உள்ளூர்ப் படப்பிடிப்பாளர் ஒருவர் படம் எடுக்க நேர்ந்தது. ஆடை களையப்பட்டு, பீதியுடன் இருக்கும் தமிழர் ஒருவரைச் சூழ நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களையும் மனிதர்களையும் அந்தப் படம் காட்டியது (படம் 1). அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில், 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் 'கறுப்புத் திங்கள்' என்று சிலர் அழைக்கிறார்கள். ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும். பழிக்குப் பழியாகக் கொலை என்பது கொண்டாட்டமாகவும் களிப்போடும் செய்யப்படுகிற ஒன்று. சம்பந்தப்பட்டவர்களின் முகங்களிலும் உடலிலும் களிப்பும் குதூகலமும் மிகத் தெளிவாக உயிர் பெறுகின்றன.
இன்பத் திளைப்பு - 2
இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது. இன்னொரு சிங்கள நண்பர் எனக்குச் சொன்னது இந்தக் கதை: கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு 'கௌரவமான' தெருவில் குடியிருந்தவர் அவர். ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன. தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது. தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக, ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது. எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் (Alsation) நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது. அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம். பெரும் கேளிக்கை.
ஐயம்/குழப்பம்
1991, ஒரு நல்ல வெயில் நாளில், கண்டியிலிருந்து மாத்தளைக்கு வரும் வழியில் ஒரு முஸ்லிம் முதியவருக்கு எனது காரில் இடம் கொடுத்தேன். அவரைத் திரு. கிவீ என அழைக்கலாம். திரு. கிவீ அவர்களுக்கு மாத்தளையில் கடையன்றிருந்தது. ஜூலை 83 இல் மாத்தளையில் என்ன நடந்தது என்று பேச்சுவாக்கில் திரு கிவீ அவர்களைக் கேட்டேன். கடைத் தெருவிலிருந்த தமிழர் கடைகளைச் சில சிங்களவர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்றார் திரு கிவீ. தான் வெளியே வந்து பார்த்தபோது, சிங்கள இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு அழிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டதாகவும் 'தேச சேவை'யாகவே இதனைச் செய்வதாக அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பியதாகவும் சொன்னார். திரு கிவீ அவர்களிடம் மேலும் விரிவாக நான் கேள்விகளைக் கேட்காமையால் இந்தக் கதைக்கு விரிவும் ஆழமும் போதாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுடைய கோஷத்தில் இருந்த முரண் நகை என்ன தொனியில் வெளிப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.
அழித்தொழிப்பிலும் ஒரு தேசிய இலட்சியம் இருக்கிறது என்று அந்த இளைஞர்கள் எண்ணியிருப்பார்களா? இனப்படுகொலைகளை அவர்கள் புரிந்துகொண்ட முறையில் அவநம்பிக்கை சார்ந்த புத்திசாலித் தனம் இருந்திருக்குமா? அல்லது அவர்களது நடவடிக்கைகளில் ஒரு தீவிரமான உரிமை கோரல் இருந்ததா? தேசிய வேட்கையும் இனவெறியும்தான் அவர்களது களிப்புமிக்க நடவடிக்கைகளுக்கு அடிநாதமாக இருந்ததா? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.
படம் 1: கொலைக்கு முன்பாக களிக்கூத்து.
பொறள்ளை சந்தி. அதிகாலை. 24.07.1983
இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர். படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார். கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க என்னிடம் தெரிவித்தார்.
படம் 2: எரிப்பும் களிப்பும்: கொழும்பு
24-25, ஜூலை 1983
நன்றி: காலச்சுவடு (ஜூலை,08)

Friday, July 04, 2008
சங்க இலக்கியத்தில் பாலியல்: ஆண் பெண் உறவு நிலை
-ந.முருகேசபாண்டியன்
சமூக இருப்பில் மனித உயிரானது தனது நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்வதில் மொழி அடிப்படையாக விளங்குகிறது. மொழி இல்லாவிடில் மனித உயிர்கள் இருக்கும்; மனித சமுதாயங்கள் இருக்காது; வரலாறு இருக்காது. முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற நிகழ்வுகள் அல்லது எதிர்கொண்ட அனுபவங்களின் நினைவாக மொழி இருப்பதனால், வரலாற்றை மனிதன் மீது சுமத்துவதன் மூலம், இடையறாத சமுதாய இயக்கத்தினைச் சாத்தியப்படுத்துகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ்மொழி, தமிழ் நிலம், சங்க இலக்கியம் போன்ற கருத்தியல்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். `வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்று பனம்பாரனர் வரையறுத்துள்ள நிலப்பரப்பு அரசியல் நோக்கமுடையது. இங்குத் தமிழ் மொழியானது பரந்துபட்ட நிலப்பரப்புடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது; தமிழரின் புழங்கும் வெளி வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழரின் வாழ்க்கை சார்ந்த நிலமானது ஐந்தினையாகப் பாகுபடுத்தப்பட்டது தற்செயலானது அல்ல. நிலமானது மொழியின் வழியே தமிழ்ச் சமுதாயத்தின் பொது நினைவினுக்குள் தகவமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு இனக்குழுக்களாகவும் குடிகளாகவும் வேறுபட்டிருந்த மக்களைத் தமிழ் என்ற மொழி அடையாளம் ஒருங்கிணைத்தது. இயற்கையான நிலப்பரப்பானது, மொழியின் வழியே நினைவுகளாக உருமாறி, காலப்போக்கில் நாடாக மாற்றம் பெறும் அரசியல் நடந்தேறியது. இனக்குழுவினரின் பாரம்பரியமான வாழ்க்கை முறை, சடங்குகள், விலக்குகள், குலக்குறிச் சின்னங்கள், பலிகள், தொல்சமய நம்பிக்கைகள் போன்றனவற்றைச் சிதைத்துவிட்டுப் புதிய வாழ்க்கை முறையை வாழவேண்டிய நெருக்கடியை எற்படுத்தின மாறிவரும் அரசியல் நிலமைகள். இதனால்தான் மனிதர்களிடையே இயல்பூக்கமாகப் பொதிந்துள்ள காதலும் சண்டையும் சங்க இலக்கியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டன. எதிர் இனக்குழுவை போரில் வென்று, அக்குழுவினரின் நிலப்பரப்பைத் தனது நிலத்துடன் இணைக்கும்போது, பிரச்சினைகள் தோன்றுகின்றன. இத்தகு சூழலில் பாணர்கள், புலவர்கள் மூலம் நடைபெற்ற சமூக ஒருங்கிணைப்புகள் முக்கியமானவை. `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பூங்குன்றனாரின் பாடல், போரில் தோற்றுப் போய், இன்னொரு குழுவினருக்கு அடிமைப்பட்ட மக்களுக்குத் தேறுதல் சொல்லுவதற்காகப் பாடப்பெற்றது என்று கருத இடமுண்டு. குடி, கணம், மன்பதை என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு குழுவைச் சார்ந்த இளம்பெண்ணுக்கு, முற்றிலும் அந்நியமான குழுவிலிருந்து வரும் இளைஞனுடன் உறவு கொள்ளக் `காதல்' மட்டும் போதுமானது என்ற கருத்து சங்கப் பாடல்களில் பொதிந்துள்ளது. ஒரே இனக்குழுவிற்குள் நிகழும் காதல் எனில், இலக்கிய ஆக்கத்தில் இத்தகைய முக்கியத்துவம் தரப்பட வாய்ப்பில்லை.
அகம், புறம் என இரு எதிரிணைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட சங்க இலக்கியப் பிரதியானது, ஏற்கெனவே நிலவிய தாய் வழிச் சமூக அமைப்பின் சிதைவினுக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது. (எனினும் தாய் வழிச் சமூக அமைப்பின் எச்சங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன.) சக உயிர் என்ற நிலையில் பெண்ணை ஆணுக்கு எதிராக வைக்காமல், ஆணை மட்டும் முதன்மைப்படுத்தும் போக்கு உருவாக்கப்பட்டது. அக வாழ்வில் காதல் மூலம் பெண்ணை வெல்வதும், புற வாழ்வில் போர் மூலம் நிலத்தை வெல்வதும் ஆணின் இலக்கணமாகப் புனையப்பட்டன. தமிழரின் அடிப்படை நினைவாகக் காதலும் வீரமும் முன்னிறுத்தப்பட்டன. போர் என்பது இனக்குழுச் சமூகத்தில் கூட்டுக் களிப்பைக் குறிக்கும் கொண்டாட்டம். வன்முறை மூலம் பிற இனக்குழுவினரின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் வாயிலாகச் சமூக விரிவாக்கமும், ஆணின் மேலாதிக்கமும் நடந்தேறுகின்றன. அகநிலையில் பிற குழுவைச் சார்ந்த பெண்ணுடல்கள் உள்பட பெண்ணுடல் என்பது ஆணுக்கான துய்ப்பு மையமாகின்றது. புறநிலையில் நிலமானது போரின் மூலம் ஆணுக்கான துய்ப்பு நிலமாக மாறுகின்றது. நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவை என்ற பொதுப் புத்தி சங்க இலக்கியத்தில் சூட்சுமமாகப் பொதிந்துள்ளது.
(2)
சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள் ஏற்றத் தாழ்வான நிலையில் பரவலாக வழக்கிலிருந்தன. உணவுக்காக வேட்டையாடுதல் என்ற நிலையிலிருந்து சில குழுக்கள் மாறியிருந்தன. காட்டை எரித்து வேளாண்மை செய்தல், மாடு வளர்த்தல் காரணமாக மக்களின் வாழ்க்கைமுறை மாற்றமடைந்திருந்தது. மனித இருப்புக் குறித்த அக்கறையும் சமூக விழுமியங்கள் குறித்த ஈடுபாடும் மொழியின் வழியே நினைவில் பதிவாகியது, கருத்தியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பௌத்த, ஜைனக் கருத்துகளுடன் வைதிக சமயக் கருத்துகளும் மக்களிடையே பரவியுள்ளதனை சங்க இலக்கியத்தில் கண்டறிய முடிகின்றது. இந்நிலையில், தமிழ் நிலப்பரப்பில் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த தமிழரிடையே நிலவிய ஆண்-பெண் உறவு, பாலியல் பற்றி இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கருத்துகளும் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
சங்க இலக்கியப் பிரதிகள் சித்திரிக்க விரும்பும் பெண் பற்றிய பிம்பம் முக்கியமானது. அந்தப் பெண்ணின் சமூக மதிப்பீடுகள் யாவை? சமூகத்தில் தொடர்ந்து பெண் பற்றிய புனைவுகளைக் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் யாது? பெண்ணைக் குடும்ப நிறுவனத்திற்குள் இணைத்து அவளுடைய ஒவ்வொரு செயற்பாட்டினையும் வரையறுத்திடச் சமூகச் சூழல் முயலுவது ஏன்? பிரிந்துபோன கணவனுக்காகப் பொறுமையுடன் வீட்டில் ஆற்றாயிருக்க வேண்டியது பெண்ணின் இயல்பு என்ற போதனையில் பொதிந்துள்ள அரசியல் யாது? இப்படிப் பல கேள்விகள் தோன்றுகின்றன. பெண்ணின் மனவுணர்வுகள், பாலியல் விருப்பம் போன்றவற்றைச் சிதைத்து, அவளை வெறும் உடலாக மாற்றி, ஆணின் மேலாதிக்கத்தினுக்கேற்ப மாற்றும் முயற்சிக்கான தடயங்கள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுவது ஆழ்ந்த ஆய்விற்குரியது.
ஒப்பீட்டளவில் பெண்ணுடல் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. மாதவிலக்கும் மகப்பேறும் பெண்ணுடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆணைப் பொறுத்தவரையில் மர்மமானவை. பாலூட்டி என்ற நிலையில், இயற்கையாகவே குழந்தைகள் மீது அன்பு மிக்க பெண், காலப்போக்கில் தன்னைச் சுற்றி ஒரு குழுவை உருவாக்கும் திறனுடையவள். வன்முறை என்பது பெண்ணுக்குத் தேவையற்றது. ஆண் முழுமையாக வளர்ந்தவுடன், தான் சார்ந்த குழுவை விட்டு விலகித் தனக்கான இடத்தை நிறுவ முயலுகிறான். இந்நிலையில், எதிர்க் குழுவினரை அழித்தொழித்து நிலப் பரப்பைக் கையகப்படுத்தும்போது பெண்ணையும் தன்னுடைய அதிகாரத் திற்குள் கொண்டு வர முயலுகிறான். ஆணின் அடிப்படைக் குணம் `மறம், வீரம்' என்ற சொல்லாடலில் பெண்ணின் சமூக இடம் வெறும் பதிலியாக மாறுகின்றது. சமூக இருப்பில் பெண்ணுடலை இரண்டாம் தரப்படுத்திடச் செய்திடும் முயற்சிகள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. உடல்ரீதியில் பெண்ணுடலைக் கட்டுப்படுத்திட முயலும் சமூகச் சூழலில், பெண்கள் மடமகளாக, அறிவு மெல்லியராகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மடநடை, மடமா, அரிமா, மடமகள் போன்ற சொற்கள் பெண்ணைக் குறித்திட பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெண் பூப்படைவதிலிருந்து முழுமையானவள் என்ற கருத்து சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. கன்னிப் பெண், குடும்பத் தலைவி, பரத்தை, விதவை ஆகிய நான்கு நிலைகளில் உடல்ரீதியாகப் பெண்ணை அணுகிடும் போக்கு சங்க இலக்கியம் முதலாக இன்றுவரை தொடர் கின்றது. பெண்ணுக்கு ஒரு கணவன் மட்டும் தான் என்ற வரைமுறை வலுவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண் குடும்பத்திற்கு வெளியே தான் விரும்பியவனுடன் பாலுறவு கொள்வது பற்றிய சிந்தனைப் போக்கு நடைமுறையில் இல்லை. பெண் தனித்து இயங்கும் ஆற்றலை மட்டுப் படுத்தி, அவளை முழுக்க ஆணைச் சார்ந்து இயங்கும் சூழலை ஏற்படுத் தியது, ஆணின் உடைமையானது பரம்பரை வழியாக மகனுக்குச் சேர வேண்டுமென்ற ஆண்மையைப் போக்கின் விளைவாகும். பெண்ணின் உடல், மனத் தூய்மையைக் குறிக்குமாறு `கற்பு' என்ற சொல் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர், பொருள் தேடல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவனுக்காக வீட்டில் காத்திருத்தல் சிறந்த பெண்ணின் அடையாளமாகக் கருதப்பட்டது. பெண் தன்னுடைய பாலியல் விருப்பத்தை அடக்கிக் கொண்டு, கணவனின் நலத்தைப் பேணி மென்மையான பண்புகளுடன் வாழ்வது கற்புடைய மகளிரின் இலக்கணமாகப் போதிக்கப்பட்டது.
`கடவுட் கற்பு', `வடமீன் போல்... கற்பினள்', `அருந்ததி அனைய கற்பு', `அணங்குறு கற்பு' போன்ற தொடர்கள் கற்பு பற்றிய புனிதப் புனைவுகளைக் கட்டமைக்க முயலுகின்றன. இதனால்தான் பெண் தனித்துப் பொருள் ஈட்டிய நிலையிலும், வறுமையில் வாடிய போதிலும், பரத்தையிடம் கணவன் சென்று விட்ட சூழலிலும், அவள் கணவனைப் பிரிந்து, தான் விரும்பிய ஆணுடன் பாலுறவு கொண்டதாகக் குறிப்புகள் எதுவுமில்லை. எத்தகைய பிரச்சினைகளில் சிக்கி வாழும் சூழலிலும், பெண் குடும்ப நிறுவனத்தில் அடங்கியொடுங்கி இருப்பது வலியுறுத்தப்பட்டது.
கணவன் இறந்தவுடன் வளையல் நீக்குதல், முடி களைதல், பாயின்றி படுத்தல், இழை களைதல் போன்றவற்றை விதவை மேற்கொள்ள வேண்டுமெனச் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. ஆனால், மனைவியை இழந்த கணவன் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் பற்றியோ, ஆணின் கற்பு பற்றியோ மதிப்பீட்டு நிலையில் கூட எதுவும் பதிவாகிடவில்லை. தான் விரும்பிய ஆணுடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டுக் கிளம்பும் பெண், குடும்பத்தில் அடங்கியொடுங்கி `கற்பு' பற்றிய புனைவுடன் வாழ்தல் வலியுறுத் தப்படுகிறது.
ஆண் மேலாதிக்கச் சமூகத்தின் இன்னொரு முக்கியமான விளைவு `பரத்தமையை உருவாக்குதல்'. சங்க கால ஆண் தன்னுடைய மனைவியுடன் வாழும் போதும் பரத்தையை நாடிச் செல்கிறான். ஆண் தனது பாலியல் தேவையைப் பரத்தையிடமிருந்து பெற்றது குற்றமாகக் கருதப்படாத சூழல் அன்று நிலவியது. அதாவது பரத்தையை முன்னிறுத்தி ஆணின் ஒழுக்கம் மதிப்பிடப்படவில்லை. குடும்பத்தில் கணவனாக இருக்கும் ஆண், தன்னுடைய விருப்பம் போல காமக்கிழத்தி, காதற்பரத்தை போன்ற பெண்களிடம் பாலுறவு கொள்வதை ஒழுக்கக் கேடாக அன்றைய சமூகம் கருதவில்லை. மனைவி வீட்டிலிருக்கும் போது, பரத்தையை வீட்டிற்கு அழைத்து வந்து உடலுறவு கொள்ளும் ஆண் பற்றிய பதிவு தற்செயலானது அல்ல. கற்பொழுக்க நெறியில் வாழும் மனைவி, தன்னுடைய கணவனின் பரத்தமைத் தொடர்புக்காக ஊடல் கொள்ளலாம். அவ்வளவுதான் அவளால் முடிந்தது.
சங்க காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினைகள் அளவற்றவை. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் மூலம் பெண் பற்றிய புனைவுகளைக் கட்டமைக்க வேண்டிய தேவை ஆண்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பது முக்கியமானது. சமூகத்தில் ஆண் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கிட கற்பு பற்றிய சித்திரிப்பைச் சங்கப் பாடல்கள் முன்னிறுத்தியுள்ளன.
(3)
குடும்பம் என்ற சமூக நிறுவனத்தின் உருவாக்கத்தில் பெண்ணின் இடம் முதன்மையானது. குழந்தை பிறப்பினுக்காகப் பாலுறவு கொள்ளுதல், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு எனப் பெண்ணின் அன்றாடப் பணிகளைக் குடும்ப அமைப்புச் சுருக்கினாலும், வாரிசுகளை உருவாக்குவது என்பது முக்கியமானது. சமுதாயத்தில் குடும்பம் சிறிய அலகெனினும், கருத்தியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்தி, வரலாற்றுத் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துகின்றது. சங்க இலக்கியத்தில் குடும்பம் என்ற சொல் இல்லை. குடி என்ற சொல் குழு, குடும்பம், ஊர், குடியினர், குடியிருப்பு என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனை, இல் ஆகிய சொற்களும் ஒரு நிலையில் குடும்பம் பற்றிய கருத்தாக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையன.
சங்க இலக்கியம் சித்திரிக்கும் குடும்பம் என்ற அமைப்பு பாலுணர்வின் நெறிமையை மையமாகக் கொண்டுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட தனிக் குடும்பமே நடைமுறையிலிருந்தது. குடிப் பெருமையை முன்னிறுத்தும் இனக்குழுச் சமூக அமைப்பில் குடும்பம் இரண்டாம் நிலை பெற்றுள்ளது. குடியின் தலைவன் குறுநில மன்னன் போல அதிகாரம் மிக்கவன் அல்ல. இனக் குழுத் தலைவன், வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்க வாளை ஈடு வைக்குமளவு பொருளியல் வளமற்றவன்; அவனுக்குக் கள் விற்பவன், கடனுக்குக் கள் தர மறுக்குமளவு குடியினரின் நிலைமை எளிமையாக இருந்தது. இத்தகைய குடிச் சூழலில் பெண்ணின் தனித்துவத்தை மதிப்பிட வேண்டும். சங்க காலம் என மதிப்பிடப் பெறும், 500 ஆண்டுகளில் தகவல் தொடர்பு வசதியற்ற நிலையில், வேறுபட்ட இனக்குழுக்களின் பண்பாடு பன்முகத்தன்மையுடையதாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் முன்னிறுத்தும் குடும்பப் பெண் ஒற்றைத் தன்மையுடையதாக இருப்பது ஏற்புடையதாக இல்லை.
சங்க இலக்கியப் பெண் தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுத்து அவனுடன் பாலுறவு கொண்டு, பின்னர் அவனுடன் உடன் போக்குச் செல்லுமளவு சுதந்திரம் மிக்கவளாக விளங்குகிறாள். பெண்ணுக்குப் பரிசம் அளித்து அவளை மணக்க முயலுதல், பெண்ணின் வீட்டில் சில மாதங்கள் தங்கி அக் குடும்பத்தாரின் நன் மதிப்பைப் பெற்று மணம் செய்ய முயலும் ஆண் போன்ற மணமுறைகள், சமூகத்தில் பெண் மதிப்பை உறுதி செய்கின்றன. இத்தகைய முறைகள் பெண் வழிச் சமுதாயத்தின் எச்சங்கள். பெண்ணின் வீட்டில் திருமணம் நடைபெற்ற போதிலும், மணமான பெண் பிறந்த வீட்டில் இல்லை என்பதும் குழந்தைகள் தாயின் குலத்தைச் சார்ந்தவர்களாகக் கருதப்படுவது இல்லை என்பதும் பெண் பற்றிய மதிப்பீட்டில் முக்கியமானவை. ஒப்பீட்டளவில் தாய்_மகள் உறவு, தாய்-மகன் உறவு அழுத்தமாகச் சித்திரிக் கப்பட்டுள்ளன. இதனால் குடும்ப உறவில் பெண்ணின் இடம் வலுவானது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. சங்க இலக்கியத்தில் உறவினர் தொடர்பை விட, தான் சார்ந்து வாழும் குடியினருடனான வாழ்க்கையைப் பெரும் உறவாகக் கருதும் நிலை நிலவியது.
காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமனிலையை உருவாக்குகிறது என்றும் பெண்ணின் தனித்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் பொதுவாக நம்பிக்கை உள்ளது. சங்க இலக்கியப் பிரதிகளை நுணுகி ஆராய்ந்திடும்போது, காதல் வயப்பட்ட நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதனை அறிய முடிகின்றது. ஆணின் உடைமைக்கு வாரிசு உருவாக்கிடவும் இனக்குழுச் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றவும் பெண்ணின் தூய உடல் தேவைப்படும் நிலையில் `காதல்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் வாழ்க்கையில் காதல் இருக்கும்; காதல் பற்றிப் புனிதமாக இட்டுக் கட்டப்படும் நிலை இருக்காது. காதல் அதியற்புதமானது; தெய்விகமானது; புனிதமானது; ஒரே ஒருமுறை தான் ஒருவர் வாழ்வில் மலரும்; சொர்க்கத்தில் கடவுளால் நிச்சயிக்கப்படுகிறது; போன பிறவியின் தொடர்ச்சி; எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும் மேன்மையானது... இவ்வாறு காதல் பற்றி இட்டுக் கட்டப்பட்டவை முழுக்கப் பெண்ணைக் குறி வைத்துத்தான் செயற்படுகின்றன. தூய்மையான காதலை முன்னிறுத்தி, காதலுக்காகக் காத்திருக்கும் பெண்ணுடல்களைக் கட்டமைத்திடும் சமூகச் சூழலில், காதல் என்பது பெண்ணுக்குச் சிறை. சுதந்திரமாக வெளியில் புழங்கிக் கொண்டிருந்த பெண்ணை, அவளுடைய இயல்பான பாலியல் விருப்பத்தை அடக்கி விட்டு, அதற்கு மாற்றாகக் காதலை முன்னிறுத்துவது, அவளைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். காதல், கற்பொழுக்கம் என்பது பெண்ணுக்கெனவும், காதல் களவொழுக்கம், பரத்தமை ஆகியன ஆணுக்கானதாகவும் சங்க காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ஆண்_பெண் பாலியல் உறவு கேள்விக்குள்ளாகிறது. எதிர் இனக் குழுவினரைப் போரில் வென்று, அக்குழுப் பெண்களைக் கவர்ந்து வந்து, கொண்டி மகளிராக்கிப் பரத்தமையில் ஈடுபட்டது ஆணின் வீரமாகப் போற்றப்படும் நிலையில், பெண்ணின் இருப்புக் கேள்விக்குள்ளாகின்றது.
சமூக அமைப்பில் பெண்ணின் நிலையானது தொடர்ந்து ஆண் மையம் நோக்கி ஈர்க்கப்படுவதாகச் சங்கக் கவிதைகள் சித்திரிக்கின்றன. பெண்ணுடல் புணர்ச்சிக்குரிய காதலி, பரத்தை, மனைவி, காமக்கிழத்தி, புணர்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தோழி என்று எப்பொழுதும் தன்னைப் புணர வரும் ஆணுடலுக்காகவே காத்துக் கிடக்கின்றது. காதல் என்ற மனவுணர்வு மூலம் தனக்கான ஆண் உடலைக் கண்டவுடன், தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துத் தன்னிலை இழக்கிறது பெண்ணுடல். அடக்கியொடுக்கப்பட்ட பெண்ணுடலிலிருந்து, தான் விரும்பிய பிரதியான உடலைப் பிரதியெடுத்து, அதைப் பிரதிக்குள் (Text) புதைப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் ஆணுக்கு அடிமையான பெண்ணுடலை உற்பத்தி செய்யக் `காதல்' போதை போலப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சங்க இலக்கியப் படைப்புகளில் பதிவாகியுள்ள காதல் பற்றிய சித்திரிப்புகள், லட்சிய நோக்குடன் மேட்டுக் குடியினர் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய விருப்பங்களை முன்னிலைப்படுத்துகின்றனவாக உள்ளன. ஏவலர்கள், அடிமைகள், கொண்டி மகளிர் போன்ற அடித்தட்டு மக்கள் விரும்பிய களியாட்டங்களுக்கும், காதல் கொண்டாட்டங்களுக்கும் சங்கப் பிரதிகளில் அடையாளம் எதுவுமில்லை.
(4)
சங்க காலச் சமுதாயத்தினர் பாலியலை மிக இயற்கையானதாகக் கருதினர். அதனைக் குற்றமானது, சிற்றின்பம், தீமையானது என்று இழிவாகக் கருதி ஒதுக்கும் போக்கு அறவே இல்லை. அதுபோல பாலுறவை மையப்படுத்தி காமத்தை உடலிலிருந்து பிரித்துக் காமக்கலையாக (eroticism) மாற்றும் முயற்சியும் இல்லை. ஆணும் பெண்ணுக்குமிடையிலான உடலுறவை இயல்பானதாகக் கருதும்போக்கு சங்க இலக்கியப் பிரதிகளில் காணப்படுகிறது. போர், நாடு, உடைமை என விரிந்திடும் ஆணின் வாழ்க்கையில் பாலியல் வேட்கை மட்டுப்படும் வேளையில், வீட்டில் காத்திருக்கும் பெண்ணின் பாலியல் விருப்பம் அளவற்றுப் பொங்கி வழிகின்றது. இந்நிலையில், பாலியல் விழைவை எப்படி எதிர்கொள்வது என்பது சில பாடல்களில் சூசகமாக வெளிப்பட்டுள்ளது.
சங்க இலக்கிய மரபானது பாலியல் விருப்பம், புணர்ச்சி, கலவியின்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உடல், மனரீதியில் அனுபவிக்கும் அனுபவங்கள், மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. காதலன் தன்னுடைய காதலியிடமிருந்து பெறும் சுகத்தைப் பெரிதும் கொண்டாடுகிறான். அவளை ஒரு தடவை புணர்ந்து விட்டால், அதற்குப் பின்னர் அரை நாள் வாழ்க்கை கூடத் தேவை இல்லை என்கிறான் ஒருவன்; கடலால் சூழப்பட்ட உலகமும் நாடும் கூட தன் காதலியின் பூப் போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது என்கிறான் இன்னொருவன். பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கிடவில்லை. தலைவன் வாழும் மலையிலிருந்து வரும் நீரில் மிதந்து வருகின்ற காந்தள் மலரை முயங்குவது தனக்கு ஆறுதலாக உள்ளது என்கிறாள் ஒருவள்; `காம நோயுற்று அதனால் துயர் பொறுக்கல்லேன்' தோழி' என்று ஒரு பெண் காமவயப்பட்டுக் கதறுகின்றாள். காதலனுடைய மார்பைத் தழுவிப் புணர்ந்து பெற்ற இன்ப நினைவைத் தன் தோழியிடம்.
... வேட்டோர்க்கு
அமிழ்தத்தனை கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படா அ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே''
என்று பகிர்ந்து கொள்கிறாள்.
காதல் வயப்பட்டு உள்ளத்தால் ஒருங்கிணைந்து ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதை இயல்பானதாகச் சங்க இலக்கியம் சித்திரிக்கின்றது. புணர்வதில் ஆர்வம் மிக்க காதலர் இருவரும், மிகவும் விருப்பத்துடன் அச்செயலில் ஈடுபடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்தினால் பிரிவேற்பட்ட போது, பால் வேட்கையுடன் புலம்பித் தவிக்கின்றனர். திருமணத்திற்கு முந்தைய உறவுக் காலத்திலும் காதலர் பாலுறவு கொள்வது சங்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. காமம் என்ற சொல் காதலுடன் நெருங்கிய தொடர்புடையதாக விளங்கியது. பெண்ணுக்குத் தன் இளமை எழில் ஆடவரின் வேட்கைக்கு உள்ளாகாமல் வீணே கழிவது வருத்தத்தைத் தருகிறது. பெண்ணின் புழங்கு வெளியையும் மனவோட்டத்தையும் தடைப்படுத்திட முயலும் சமூகச் சூழலில், அவளுடைய காமம் பற்றிய வெளிப்பாட்டிற்கு ஆதரவான நிலை நிலவியது. இனக்குழுவினருக்கிடையிலான சண்டைகளில் போராடி மடிய ஆணுடல்களை உற்பத்தி செய்திட பெண்ணின் காமம் போற்றப்பட்டுள்ளது. `ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே' என்ற வரிகள் பெண்ணின் அடையாளத்தை உணர்த்துகின்றன. (சங்க இலக்கியத்தில் பெண் குழந்தை பற்றிய பதிவு எதுவுமில்லை என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது) ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் `மெய்யுறு புணர்ச்சி' மூலம் துய்த்திடும் இன்பத்தின் வாயிலாகக் காமம் விளங்கியது. பெண் தன்னுடைய காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
முட்டுவென் கொல்? தாக்குவென் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ அல் எனக் கூவு வேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் உயிர்க்கே
(குறுந்தொகை : 28)
என் காதல் நோயின் கொடுமை அறியாமல் தென்றல் காற்று அலைக்கழிக்கிறது; அதனை அறியாமல் ஊரும் உறங்குகிறது. என் நிலையை எப்படிக் கூறுவேன்? முட்டுவேனோ? தாக்குவேனோ? கூவுவேனோ? என்ற ஔவையாரின் பாடல் வரிகள் பெண்ணின் காமம் மிக்க மனத்தைத் துல்லியமாகச் சித்திரித்துள்ளன. பாலியல் துய்ப்பில் பெண்ணும் கொண்டாட்டம் மிக்கவளாக விளங்குகிறாள். பொதுவாக ஆணின் எதிர் பால் வேட்கை என்பது உடலுறவு என்ற மைய நிகழ்வினை நோக்கியதாக உள்ளது. பெண்ணின் காம வேட்கை வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக் கூடியதாக இருக்கிறது. காதலனின் வருகையைப் பார்த்தால் போதும், காதலனின் மார்பில் சாய்ந்தால் போதும் என்று பெண்ணின் காமம் பன்முகத் தன்மையுடையதாக விரிகின்றது. பெண் தன்னுடைய காமத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிடம் ஆண் கொண்ட அன்பை மட்டும் எண்ணி, அவனுடைய தொடர்பை முன்னிறுத்தி மகிழ்கின்றாள்.
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பு நாட எம்
தொடர்பு தேயுமோ நின்வயி னானே
(குறுந்தொகை : 42)
காமத்தைத் தவிர்த்துப் பெண்ணின் மனம் கொண்டாடும் நட்பு, ஆணுக்கு முற்றிலும் அந்நியமானது. பெண்ணின் மனத்தைப் புறக்கணித்துப் பெண்ணுடலைத் தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்து அதிகாரம் செலுத்த முயலும் ஆணுடன் ஒப்பிடும்போது, பெண்ணின் காமம் மனம் சார்ந்து விரிகின்றது.
ஆண் சமூக வாழ்க்கையில் புறவுலகினால் ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு வெளியே அலைந்து திரிகின்றான். பெண் வீட்டில் ஆணுக்காகக் காத்திருக்கின்றாள். பிரிவினை எண்ணி வருந்தும் பெண்ணின் மனம் துடிக்கின்றது; புலம்புகின்றது.
உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
வாய்ப்புணர்வு இன்மையில் வாரார் கொல்லோ
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யா அவரி நிழல் துஞ்சும்
மா இருஞ்சோலை மலை சிறந் தோரே!
(குறுந்தொகை : 252)
அடர்ந்த காட்டினைக் கடந்து சென்ற காதலன்/கணவன், தன்னை நினைக்காமல், இருந்து விட்டாரோ அல்லது செயல் முடித்துத் திரும்பும் வாய்ப்பற்று அங்கேயே தங்கி விட்டாரோ என்று பிரிவினால் பெண் வருந்துவதில், அவளுடைய பாலியல் வேட்கை பொதிந்துள்ளது. கார் காலம் தொடங்குவதற்கு முன் என்னுடைய தேர் முந்தும் எனச் சொல்லி வினை முடிக்கப் போனவன், கார் காலம் தொடங்கிய பிறகும் வரவில்லையே என வேதனைப்படும் பெண்ணின் காம வேட்கை அள வற்றுப் பொங்குகின்றது. அவளுக்கான பாலியல் தேவை நிறை வேற்றப்படாமல் காத்திருக்கின்றாள்.
பிரிந்து சென்ற கணவன் பரத்தையின் வீட்டில் தங்கிவிட்ட பிறகு, பெண்ணின் மனம் படும் துயரம் அளவற்றது. `நீ எனக்கு யார்? நான் ஊடல் கொள்வதற்கு நீ என்ன உறவு? நீ பரத்தையிடம் போ. உன்னைத் தடுக்க யார் உள்ளார்?' என்று மனம் வெதும்புகிறாள் பெண். தன்னை விட்டுப் பிரிந்து போன கணவனை எதுவும் செய்யவியலாமல் துயரமடையும் பெண்ணை அள்ளூர் நன்முல்லையார் நுட்பமாகச் சித்திரித்துள்ளார்.
(5)
சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர்; பலர் பாடல்கள் இயற்றினர். ஆண்களால் தொகுக்கப்பெற்றுள்ள தொகை நூல்களில் நாற்பத்தொன்று பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண் நிலை, மனவுணர்வு, உடல் பற்றிய வருணனை போன்றன தனித்து விளங்குகின்றன. பெண்ணின் பாலியல் மனநிலையை ஆழமாக விவரித்துள்ளன.
மகப்பேற்றுக்குப் பின்னரே பெண்ணுடல் முழுமையடையும் என்று கருதுகின்றார் வெள்ளி வீதியார்.
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மானமக் கவினே
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில்
சிந்தியது போல, கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் அல்குல் தடத்து மாமை அழகு அவளுடைய கணவனுக்கும் மட்டுமின்றி, அவளுக்கும் பயனில்லாமல் பசலை உண்ணும் நிலையைப் பெற்று விட்டதே என்று வருந்துகிறாள். பெண் தன்னுடைய உடலை அடையாளங் கண்டு, ஆணுடனான உடலுறவின் மூலம் துய்க்கும் இன்பம் கிடைக்காமல் போகிறதே என்று எவ்விதமான மனத்தடைகளற்றுக் கூறுகின்றாள்.
இரவுப் பொழுதில் நிச்சயம் வருவதாகக் கூறிய காதலன் வராத நிலையில் ஏக்கத்துடன் தூங்குகிறாள் ஒரு பெண். காதலனுடன் பாலுறவு கொண்டதாகக் கனவு கண்டு மயங்கிப் பின்னர் விழித்தெழுந்து, குழப்பத்துடன் அவள் அருகில் படுத்திருக்கிறானோ எனத் தடவிய பெண் பற்றிய கச்சிப்பேட்டு நன்னாகையாரின் பாடல், காம வயப்பட்ட பெண்ணின் ஆழ்மனத்தை பதிவாக்கியுள்ளது.
`பல நாட்கள் வந்து பழகி, உறவு கொண்டு பெண்ணின் மனத்தை நெகிழ வைத்தவன் எங்கே இருக்கிறான்' என்ற வருமுலையாரித்தியின் பாடல் பெண்ணின் பிரிவுத் துயரை வெளிப்படுத்துகிறது.
பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய் வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங் கொண்டது. பெண்ணுறுப்புகள் பற்றிய பெண் கவிஞர்களின் பார்வையில் பாலியல் நோக்கமுடையதெனினும், தனித்து விளங்குகின்றன.
பொருள் தேடிப் பிரிந்து போன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் நுணுக்கமாக விவரித்துள்ளார்.
வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே
பெண், `தன்னுடைய முலைகளிடையே துயிலுவதை விடுத்துக் கொடிய பாலை வழி சென்றாரே கணவன்' என்று வருந்துகிறாள். பிரிவு பற்றி யோசிக்கும் போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவம்.
சங்கக் கவிதைகளிலிருந்து பாலியல் ரீதியில் கற்றுக்கொள்ள நிரம்ப விஷயங்கள் உள்ளன. ஏனெனில் சங்க காலத்திற்குப் பின்னர் மதங்கள் தமிழரின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தியவுடன் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. உடலை வருத்தித் தவமிருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துப் போக்குகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கின; பாலியல் என்பது குற்றமனம் தொடர்புடையதாக மாறியது. சிற்றின்பம் என்று இழிவுபடுத்தப்பட்ட பாலியல் புறக்கணிப்பு, மனிதர்களை அதிகாரத்துக்குட்பட்ட வெறும் உடல்களாக மாற்றி விட்டது. ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு என்பது பெரும் பேறு; அற்புதமானது.
இன்று அடிப்படை மதவாத அமைப்புகள் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவ முயன்று வருகின்றன. அவை ஹிட்லரின் பாசிச அரசு கருதியது போல பெண்களை வெறும் பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாக மாற்ற முயலும். பெண்ணின் ஆடைகள் தொடங்கிப் பெண் நடத்தை வரை எல்லாவற்றையும் கண்டிக்க முயலும் பண்பாட்டுப் போலீஸ்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருப்பது அபாயகரமானது.
இன்னொருபுறம் ஆபாசத்தையும் பாலியல் வக்கிரத்தையும் தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களினால் இளைய தலைமுறையினர் மனக்குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். பாலியல் பற்றிய தவறான புரிதலைப் புறந்தள்ளிவிட்டு, அதை இயற்கையானதாகக் கருதி வரவேற்கும் மனநிலை இன்று தேவைப்படுகிறது. இத்தகு சூழலில் சங்கக் கவிதைகள் சித்திரிக்கும் இயல்பான பாலியல் பற்றிய பார்வை, வாசிப்பில் பன்முகத்தன்மையை ஏற்படுத்துகின்றது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்களிடமிருந்து பாலியல் ரீதியில் கற்றுக்கொள்ள விஷயமிருப்பது வரலாற்றின் விநோதம்தான்.
நன்றி: தீராநதி (ஜூலை, 2008)
Subscribe to:
Posts (Atom)