Friday, June 01, 2007

மரணவெளிகளே கவிதைகளாய்....

-வீ. அரசு

"தனித்துத் திரிதல" கவிதைத் தொகுப்பை இருமுறை வாசித்தேன். ஈழத்துக் கவிதைகளை நிறைய வாசிக்க வேண்டிய வேறொரு தேவை அண்மையில் எனக்கு நேர்ந்தது. இயல்பாகவே கவிதை வாசிப்பில் அதிக ஆர்வம் காட்டாத மனநிலை... ஒரு வேளை தமிழ்நாட்டுக் கவிதை மொழியால் ஏற்பட்ட எதிர்விளைவாகக்கூட இருக்கலாம். ஈழத்துக் கவிதைகளை வாசித்தபோது, அவற்றில் 98 சதவீதம் போரும் போர் சார்ந்த நிகழ்வுகளின் பதிவுகளுமாகவே இருந்தன. கடந்த 25 ஆண்டு ஈழத்துக் கவிதைகளின் மொழி போர் தொடர்பான மொழியாகவே உருப்பெற்றிருக்கிறது. தங்களுக்கு வேறு விவகாரங்களையும் எழுதத் தெரியும் எனக் காட்டிக்கொண்ட ஒரு சில கவிதைகளைத் தவிர, மற்ற அனைத்தும் போர்க் கவிதைகளே.

தமிழ்நாட்டின் மேதாவிக் கவிஞர்கள் சிலர், இதனை வெறும் ஓலம், காலத்தால் நிற்காது என்று சோதிடம் கூறக்கூடும். அவர்கள் அப்படிக் கூறுவது அவர்களுக்கான நியாயம். இவ்வகையான வாதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ஈழத்துக்கவிதைகளுக்குள் பயணம் செய்யும்போது புறநானூற்றுக் கவிதை மரபுகள், இன்றைய தேவை கருதி புதிய மரபுகளாக தமிழில் தொடர்கிறது என்று கூற முடியும். புறநானூற்றுக் கவிதைகளைப் பாடியவனுக்கும் அதனைத் தொகுத்தவனுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறித்த அக்கறையோடு அவற்றை வாசிக்கும்போது, மனிதர்களுக்குள் ஏற்படும் முரண்களால் பாதிக்கப்படும் நபர்கள் குறித்த பதிவுகளாகவே அவை இருக்கின்றன.

போரில் கணவனை, உறவினர்களை, மகனை என்று உறவு சார்ந்த இழப்புகளால் துன்பப்படும் பெண் புறநானூற்றுக் கவிதைகளில் முதன்மையாக இருக்கிறாள். அதனை 'பிரிவுஃ எனும் இலக்கிய உத்தியாக அப்பாடல்களைத் தொகுத்தவர்கள் வரையறை செய்து பதிவு செய்திருக்கிறார்கள். ஈழப் போர் தொடர்ந்து, கடந்த கால் நூற்றாண்டில் அதன் பல பரிமாணங்களோடு நிகழ்ந்து வருகிறது. அதன் வெளிப்பாடாகவே ஈழத்துக் கவிதைகள் உள்ளன. அக்கவிதைகளிலும் மிகுந்த துயருக்கு உட்படுபவராகப் பெண் இருக்கிறார். சங்க இலக்கியத்தில் உள்ள அளவிற்குப் பெண் குரல்கள் தமிழ்க் கவிதையில் பிற்காலங்களில் இல்லை. காரைக்கால் அம்மையாரையும் ஆண்டாளையும் மட்டுமே காண்கிறோம்.

இன்று, ஈழத்தில் சுமார் நூறு பெண் கவிஞர்கள், தங்கள் உணர்வுகளை கவிதை மொழியில் பதிவு செய்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் தமிழக மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, ஆறில் ஒரு பங்குகூட இல்லாத மக்கள் பிரிவில், நூற்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் எழுதுவது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி. தமிழ்நாட்டில் இருபதுபேர் தேறுவார்கள். இத்தன்மையிலும் சங்ககால மரபு அங்கு தொடர்வதைக் காண்கிறோம்.

மேற்சொன்ன மனநிலையோடு, மலர்ச்செல்வனின் 'தனித்துத்திரிதல்’ தொகுப்பை வாசிக்கும்போது ஏற்பட்ட மனப்பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இவரது கவிதைகள் போர்ச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு அமைகின்றன. ஒரு சில வேறு கவிதைகளை அவர் எழுத முயன்றாலும் அவையும் அதற்குள் வந்துவிடுவதைக் காண்கிறோம்.

கவிதை என்பது அதன் அடித்தளத்தில் உணர்வுகளின் வெளிப்பாட்டு மொழிதான். உணர்வுகள் என்பவை தர்க்கங்களால் பதிவு செய்யும்போது கவிதை ஆகுமா? என்பது கேள்வி. தர்க்கமொழி உரைநடைக்கு உரியது. தர்க்கத்துக்குள் ஆட்பட்ட கவிதையும்கூட உரையாடலாக இருக்கும் அளவிற்குக் கவிதையாக இருக்குமா? என்று சொல்ல முடியாது. மலர்ச்செல்வன் கவிதைகள், கனத்த மனத்தின் உணர்வுச் சுழிப்புகளாகப் பதிவாகின்றன. இவ்வகையான சுழிப்புகள் அவருக்கான பலம் - பலவீனங்களை உள்ளடக்கியதே. தன்னைச் சுற்றியுள்ள வெளியை அவர் உணரும் தன்மை சார்ந்து, உணர்வுகளாகப் பதிவு செய்திருக்கிறார்.

''கருணை வடிவான மாந்தர்கள்/வேண்டுதலை ஓங்காரமிட்டு/ இழந்துபோன நாள்களின்/ நினைவுகளோடு.../ தனித்த வெளி...”

போர்க் கவிதைகளில் காணப்படும் வெளி பற்றிய விவரிப்புகள் மற்றும் விவரணங்கள், மனித உணர்வுகளின் பாரத்தைக் காட்டுவன. மனித சமூகம், கூட்டாகவோ அல்லது சக மனிதர்களுடனோ இருக்கும் மனநிலைக்கும், தனித்து விடப்படும் மனநிலைக்கும் இடையில் உள்ள மன உணர்வுகளை அநுபவமாகப் பெறும்போது, அதனைப் பதிவாக்குகிறார்கள். பதிவு செய்பவர் மனநிலைக்கு வாசிப்பவன் செல்ல முடியுமா? என்பது கேள்வி.

ஆனால் பதிவு செய்பவன் மொழி, அதனை வாசிப்பவனுக்குத் தரலாம். மலர்ச்செல்வன் கவிதைகள் அத்தகைய அநுபவத்தைத் தருபவைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கவிதை வாசிப்பிற்குப் பிறகும் ஏற்படும் மனப்பாரம், தனித்த வெளியை உணர வைக்கிறது. இது ஒரு வகையில் கூக்குரலாகக்கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக:

நீள் உயிர்வெளிப் பயணத்தின் / ஒரு சற்றுநேர ஓய்விற்காக / மீண்டும் நான் வந்திருக்கிறேன் / நீதான் பிதற்றுகிறாய் / மூன்று காலில் வந்திருப்பாய் / துயர் கொள்கிறாய் / அந்நேரம் / மழைக்கால இருள்வெளியில் / நான் மறைந்து போனதை... / நீ பெருமை கொள்வாய்.

இக்கவிதையில் உரையாடலுக்கு உட்படுத்தப்படும் பொருண்மை, போர்க்காலச் சூழலின் இருப்பை உணர்த்துவதாக இருக்கிறது. போரின் அவலமும் இருப்பும் இணைந்தே இருப்பதை ஓலம் என்று எளிதாகக் கூறிவிட முடியும். ஓலம் என்பது வெறும் ஓலமன்று. அது உயிரின் குரல். அக்குரலைப் புரிந்து கொள்வது அவசியம்.

கெரில்லா போர்ச் சூழலில் இவரது கவிதைகள் பின்வருமாறு பேசுகின்றன.

யார் எதிரி? / யார் துரோகி? / யார் நண்பன்? / எமக்குப் புரியவில்லை.... ரணப் பட்ட ஒவ்வோர் / ஆத்மாவும் / கதறுகிறது / ''நாம் ஏன்...? / ''நமக்கேன் இந்த விதி?”...

ஈழத்தின் கவிதைகளில் வெளிப்படும் சுய இரக்கம், எள்ளல், அழுகை, ஓலம் ஆகிய அனைத்துப் பண்புகளும் சாதாரண குடிமைச் சமூகத்தில், புரிந்துகொள்ளும் சொற்களுக்கான பொருளைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு கணமும் வாழ்தல் என்பது மரணத்தை எதிர்நோக்கியும் மற்றும் மரணத்தை எழுதிக் கொண்டிருக்கும் தன்மையது. அத்தன்மைக்குள், கவிதையின் சொற்கள் தரும் பொருள் பரிமாணங்கள், அச்சூழலிலிருந்து வெளியே இருப்பவர்களால் எந்த அளவிற்கு உள்வாங்க முடியும்? என்பது கேள்விக்குறி.

ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கை அல்லது இருப்பு என்பதே மரணந்தான் என்ற புரிதல் விரவியுள்ளது. மரணத்தை எதிர்த்து வாழ்தல் என்பதும் மரணத்தோடு வாழ்தல் என்பதும், மரணத்துள் வாழ்தல் என்பதும் ஈழக்கவிதைகளின் பல பரிமாணங்கள். இத்தொகுப்பும் அவ்வகையான தன்மைகளைக் கொண்டிருப்பதை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கவிதைகள் என்பவை படிமங்களால், மனங்களில் தொடர்ந்த சஞ்சரிப்பை உருவாக்குபவை. கவிதை வரிகள் என்பவை எழுத்துகளாகப் பதிவதில்லை. இவ்வரிகளுக்குள் உள்ள படிமக் காட்சி, வாசகனின் மனதில் தங்குகிறது. வாசிப்பு எனும் பெயரில் காட்சியே கவிதையில் நடைபெற வேண்டும்.

காட்சி இல்லா கவிதைச் சொற்கள், வெற்றுச் சொற்களாகவே அமையும். காட்சிகளின் வழி பெறப்படும் உணர்வுகள்தான் கவிதையின் உயிர்ப்பாக அமைகிறது. ஈழக் கவிதைகளைப் பொறுத்தவரை, அவர்கள் படிமங்களைத் தேடிப் போகவேண்டிய அவசியமில்லை. அவர்களது மனங்களில் ஏற்படும் உணர்வுகள் என்பவை, சூழ்ந்துள்ள வெளியின் படிமங்களாகவே கட்டமைக்கப்படுகின்றன. எங்கும் மரணவெளி... இருப்பு என்பதே மரணம் எனும் மனநிலைகளே கவிதைகளாகின்றன. ஈழக் கவிதைகளின் அண்மைக்கால எதார்த்தம் இது. மலர்ச்செல்வன் கவிதைகளில் அதற்கான கூறுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன.

தனித்துத் திரிதல், க. மலர்ச்செல்வன், மறுகா வெளியீடு, ஆரையம்பதி-3, மட்டக்களப்பு, இலங்கை.
விலை: இந்தியா: ரூ.40/-, இலங்கை ரூ.150/-


நன்றி: கவிதாசரண் (ஜனவரி - ஜூலை 2007)

3 comments:

சோமி said...

மட்டக்களப்பின் எழுத்து சூழலில் இன்னும் களத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர் மலர்ச்செல்வன்.
வாசுதேவன் ,மலர்ச்செல்வன் போன்றவர்களொடு நெருங்கிப் பழகும் இயங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
இன்றைய மட்டக்களப்பு சூழலில் இவர்களின் இயக்கம் நிறைய ஆறுதல் தருகிற ஒன்று.

நானும் இவர்களோடு அந்த மண்ணில் மீண்டு இயங்குகிற நாள் வராதா?

Anonymous said...

டிசே,
ஈழத்தின் கவிதைகள் *பெரும்பாலும்* தமிழக விமர்சகர்களாலே ஒன்றில் முழுக்க உவப்பாக - ஒரு கனவுமயப்பட்ட, கவர்ந்திழுத்துக்கொள்ளும் போர்க்கால, போராட்டத்துயரின் பாற்பட்டு - விதந்தோத்தப்படுகின்றன; அல்லது, முழுக்கவே, போராட்டச்சூழலை எதிர்த்து (இது மனிதநேயம்/உரிமை என்ற போர்வையிலும் பல சந்தர்ப்பங்களிலே நுழையும்) வெட்டித்தள்ளப்பட்டு, போராட்டச்சூழலை மறுக்கும் படைப்புகள் சிறப்பாக எடுத்துக்காட்டப்படுகின்றன. மூன்றாவது நிலையொன்றும் உண்டு - ஈழத்தினைச் சாராத, ஆனால், ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டதன் காரணமாக, படைப்பாளிகளின் ஈழம் சாராத படைப்புகளையும் ஈழத்துப்படைப்புகளாகப் போட்டு விமர்சனம் -பாதுகாப்பாக- நிகழ்கின்றது. இவை தவிர்ந்து வெளியே நின்று படைப்பினை அதன் பொருளையும் களத்தையும் கண்டுகொள்ளும்போது, அதன் மீதிக்கூறுகளையும் (மொழியாளுமை, உணர்வுவெளிப்பாடு சம்பந்தப்பட்டு) காணும் தன்மை அநேக சந்தர்ப்பங்களிலேயிருப்பதில்லை. இது ஈழக்கவிதைகளுக்கோ வேறெந்தப்படைப்புகளுக்கோ நல்லது செய்வதில்லை. ஈழக்கவிதைகளை விமர்சிக்கும் தமிழகவிமர்சகர்களிலே எத்தனை பேருக்கு சோலைக்கிளியைத் தெரிந்திருக்கப்போகின்றதென்பது கேள்விக்குறியே. பௌஸர்கூட நிதர்சனம்.கொம், ஷோபாசக்தியாலேயே விரும்பலும் இகழ்தலும் கொள்ளப்படுகின்றார்; அதற்கப்பால், அவரின் மூன்றாவது மனிதன் சஞ்சிகை குறித்து எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்? (ஒரு முறை குமுதம்-யாழ்மணம் அவரின் செவ்வியை அள்ளிப்போட்டதல்லாது வேறொன்றும் இணையத்திலே காணவில்லை)

விமர்சனம் என்பது விமர்சிக்கின்றவரின் விமர்சிக்கப்படும் படைப்புச்சார்ந்த புலம், நிலை குறித்த கேள்விஞான அறிதலோடு அவரது சொந்த அரசியல்,சமூக விருப்புவெறுப்புச்சார்ந்த கருத்துவெளிப்பாடு வாகனமாக மட்டுமே முடியும் அவலம் நிறைந்திருக்கின்றது. புலம், நிலை சார்ந்த தேடுதலோ, பயன்படுமொழிசார்ந்த போதாமையை அறிதலினால் நிரப்பிக்கொள்ளும் தன்மையோ குறைவாகவே காணப்படுகின்றதென்பது எனது புரிதல். வீ. அரசு அப்படியானவர் அல்லர் என்றே இதுவரைநாள் நம்பிக்கை. அவ்வகையிலேயே இவ்விடுகையிலே இப்பின்னூட்டத்தினை இடுகிறேன்.

நீங்கள் முன்னரிட்ட ஷோபா சக்தியின் செவ்வியிலே கேட்கப்பட்ட கேள்விகளின் அபத்தம் இதை எழுதத்தூண்டியது. ஷோபா சக்தி புலம்பெயரெழுத்துலகிலே மட்டுமல்ல, பொதுவாக முழுத்தமிழெழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்துக்கொண்ட ஒருவரென்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவருடைய தனியான மொழியாளுமையும், எழுத்துநளினமும் பிறருக்குக் கைவருதலும் இலகுவல்ல. ஆனால், இன்னும் ஓரிரு ஆண்டுகள்போனால், தமிழ்நாட்டின் சில இலக்கியப்பிரிவினர் ஷோபா சக்தியைச் சிலுவையிலே தூததென நிறுவுவதற்கென்றே அறைந்து கல்வாரி மலையிலே புதைத்துவிட்டு, மூன்றாம் நாளுக்காகக் காத்திருக்கும் அவலமும் நிகழ்ந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய பதில்களினைக்கூட அவருடைய ஆரம்பகாலச்செவ்விகளிலேயிருக்கும் பதில்களோடு ஒப்பிட்டுப்பாருங்கள். ஒருவகையான பொய்மைத்தோற்றம் -விடை இதுவென இருக்கவேண்டுமெனக் கேட்கப்படும் வினாவுக்கேற்பத் தன்னைத் தயாரித்துக்கொள்வதிலே- வந்து விழுகின்றது. தன் தலையைச் சுற்றி ஒட்டப்பட்ட ஒளிவட்டத்தை அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுபோலத்தான் தோன்றுகின்றது. அதனால், தமிழ்ப்படைப்புலகுக்குத்தான் இழப்பு. மனிதர்களின் நலனைவிடப் படைப்பொன்றும் முக்கியமானதல்லத்தான்; ஆனால், இச்செவ்விகள் மனிதர்களைக்கூட மாற்றுக்கோணங்களிலே அவரவர்க்குரிய இடங்களைக் கொடுத்து அணுவதாகத் தெரியவில்லை. தனக்குப் பிடிக்காததெல்லாவற்றினையும் பாசிசிப்பைக்குள்ளே அமுக்கும் ஷோபா சக்திக்குத் தனக்குப் பெயர்களிட்டுக் குறிசுடுவதிலேமட்டும் ஒவ்வாமையென்றால், இதை எங்கே சொல்லி முட்டுவது. ஆனால், இதையெல்லாம், செவ்வி கண்டவர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வேண்டியது ஷோபா சக்தியிடமிருந்து இன்னவின்ன கருத்துகள் இந்தவிந்தவிதமாக வரவேண்டுமென்பதுமட்டுமே... பிறகு அதற்கு ஈழம்+அரசியல்+தலித்+புலம்பெயர்வு+போராட்டம்+புலி எல்லாம் கீறிட்ட இடநிரப்பலாகப் போட்டுக்கொள்ளலாமென்பதாக மகிழ்ச்சியடைந்திருக்கலாம். இவர்களுக்கு மற்றப்பக்கத்திலே நிற்பவர்கள் காசி ஆனந்தன் சந்தம் போடுவதையும் புதுவை இரத்தினதுரை வசனம் எழுதுவதையும் கவிதை என்று ஏற்கனவே தம்முள்ளே நிறுவிக்கொண்டு, கேள்வியை எழுப்புகின்றவர்கள். அவரவர் அவரவர் வாசகர்களுக்கு வேண்டிய தீனியைக் கொடுக்கும் முயற்சியிலே அமெரிக்க "நிகழ்நிலைத்தொலைக்காட்சி" விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். எடுகோள்களும் வருவிப்புகளுமே விமர்சனங்களாகவும் செவ்விகளாகவும் முடிந்து போய்விடுகின்றன.

இளங்கோ-டிசே said...

சோமி: பகிர்தலுக்கு நன்றி.
....
பூச்சிமருந்தும்.... : உங்களது பல கருத்துக்கள் எனக்கும் உடன்பானவையே.