Friday, November 09, 2007

பார்த்து இரசித்த சில குறும்படங்கள்

குறும்படங்களை எடுப்பதில், நடிப்பதிலென அக்கறையுள்ள ஒரு நண்பருக்காய் என்னாலும் ஏதேனும் ஒரு சிறு துரும்பை எடுத்துக்கொடுக்க முடியுமா என தமிழல்லாத குறும்படங்களைக் குடைந்துகொண்டிருந்தேன். குறும்படங்களுக்கான நேர அளவீடுகள் கதையின் களங்களுக்கேற்ப வேறுபடலாம் என்றாலும், பத்து நிமிடத்திற்கப்பால் நீளும் படங்களைப் பார்க்க நிறையப் பொறுமை வேண்டும் (என்னைப் பொறுத்தவரை ஐந்து நிமிடத்திற்குள் எடுத்தால் இன்னும் சிறப்பாகவிருக்கும்). நான் பார்த்த அனேக தமிழ்க்குறும்படங்களில் குடும்பம்/அரசியல்/உணர்ச்சிகள் என்ற எல்லையைத் தாண்டிச் சென்ற படங்கள் குறைவே என்றே சொல்லவேண்டியிருக்கின்றது. இவ்வாறான எல்லைகளுக்குள் படங்கள் எடுப்பது அவசியமானது என்றாலும், அதற்கப்பாலும் விரிவுபடுத்த வேண்டிய பார்வைகள் இருக்கின்றன என்ற புரிதலுக்காய் நான் பார்த்த குறும்படங்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துத் தருகின்றேன்.


SPIN

இதொரு டீஜேயின் விரல்களில் அசைவில் நகரும் சிறு உலகைப்பற்றிய கதை ('கடவுள்' கூட ஒருவகையில் டீஜேதான் என்ற பாரவையைக்கூட இப்படம் தரக்கூடும்). எவ்வளவு அழகாக இதைப் படமாக்கியிருகின்றார்கள் எனப்பாருங்கள். டீஜே ஒவ்வொருமுறையும் ஸ்பின் பண்ணும்போது அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற சுவாரசியம் நமக்குள் வந்துவிடும்போதே படம் நம்மில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. எத்தனையோ தீயவர்கள்/தீயவிடயங்கள் இருந்தாலும், ஒரு நல்ல விடயத்தால் (ஒரு chain reaction போல) எப்படி இந்த உலகமே அழகாய் மாறிவிடுகின்றதென்ற கரு வசீகரிக்கின்றது.

Wrong side of the bed

இக்குறும்படம், இரண்டு நிமிடங்களுக்குள் முடிவடைந்துவிடுகின்றது. ஒரு நாளில் ஒரு தவறான தெரிவைச் செய்வதால் வரும் விளைவுகளை நகைச்சுவையுடன் எடுத்திருக்கின்றார்கள். இப்படி ஒரு தவறான முடிவால், நாள் முழுக்க... சிலவேளைகளில் வருசக்கணக்காய் எல்லாம் வேதனைப்பட வேண்டி வந்திருக்கும் அல்லவா நமக்கும்?

Death Is My Co-Pilot

மரணம் எப்படி நம்மைப் பின் தொடர்கின்றதென்பதை பயமுறுத்தாமல் மெல்லிய நகைச்சுவையுடன் இதில் கூறியிருக்கின்றார்கள். பார்த்துமுடிக்கையில் ஒரு புன்சிரிப்பு வருவதைத் தவிர்க்கவே முடியாது.

Snap

இப்படம் நமது பொதுப்பார்வையை எள்ளி நகையாடுகின்றது. ஆரம்பக்காட்சிகளுக்கு எதிர்மறையான இன்னொரு பார்வையை அதன் முடிவு தருகின்றது.

10 minutes

பத்து நிமிடங்களுக்குள் இருவேறு உலகங்களுக்குள் நடக்கும் இருவேறு சம்பவங்களை காட்சிப்படுத்துகின்றது. பத்து நிமிடங்களுக்குள் எத்தனை பேரின் வாழ்வு அழிக்கப்படுகின்றது....ஆனால் அது குறித்த அக்கறையில்லாது இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்ற பார்வையை நம்மிடையே விதைக்கின்றது. இதை ஞானதாசோடு இருந்து (ஈழத்தில் இருந்துகொண்டு குறிப்பிடும்படியான குறும்படங்களைத் தந்திருக்கின்றார்) பார்த்திருக்கின்றேன்... படத்தின்பின் ஒரு சிறுகுழுவாய் இப்படம் குறித்து உரையாடியதும் நல்லதொரு அனுபவம்.

(Thanks: YouTube)

5 comments:

Anonymous said...

டிசே,

//பத்து நிமிடத்திற்கப்பால் நீளும் படங்களைப் பார்க்க நிறையப் பொறுமை வேண்டும்//

மூன்றரை மணித்தியால சிவாஜி படத்தைப் பார்ப்பதற்கே பொறுமை இருந்ததென்றால், இதெல்லாமென்ன?

cable sankar said...

please visit www.shortfilmindia.com for more shortfilms in tamil and all indian languages.
sankaranarayan

ஜமாலன் said...

நண்பருக்கு...

உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படங்களை அலுவலகத்தில் பார்ப்பது இயலாது. வீட்டில் பார்க்க net இல்லை.பதிவிறக்கம் செய்ய வழி இருக்கிறதா? முடிந்தவரை நானும் உங்களைப்போல குறும்படத் தேடலில்தான் இறங்கியுள்ளேன். சில படங்கள் பதிவிறக்கம் ஆவதற்கான வழிமுறையுடன் உள்ளன. You Tube-ல் ஏதெனும் வழி இருக்கிறதா? அலுவலகத்தில் படம் பார்க்கலாம் ஒலியில்லாமல். அது பயனற்றது.

டிசே தமிழன் said...

/மூன்றரை மணித்தியால சிவாஜி படத்தைப் பார்ப்பதற்கே பொறுமை இருந்ததென்றால், இதெல்லாமென்ன?/

அநாமதேய நண்பர்: சிவாஜியில் ஷ்ரேயாவும், அண்மையில் பார்த்த வேலில் அஸினும் -படம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும்- வருவது பத்து நிமிடங்களுக்கு குறைவுதான் என்றும் நானொரு காரணத்தைக் கூறமுடியும் :-).
....
சங்கர்: இணைப்பிற்கு நன்றி. பார்க்கின்றேன்.
....
/பதிவிறக்கம் செய்ய வழி இருக்கிறதா? /
ஜமாலன், youtubeல் தான் இப்படங்களைப் பார்த்திருந்தேன். அதனூடாக தரவிறக்கம் செய்யமுடியாதென்றே தோன்றுகின்றது. இதற்கு ஏதேனும் வேறுவழிகள் இருப்பின் அது குறித்த தெரிந்த நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் நன்றாகவிருக்கும்.

கானா பிரபா said...

youtube downloader என்னும் கழட்டியை உபயோகித்து டவுண்லோட் பண்ணலாம். ஆனால் இந்த கழட்டியை கணினியில் நிறுவும் போது கணினிக்கு வேறு சில ஒவ்வாமைகள் ஏற்படும் என்று பாதிக்கப்பட்டவ்வர்கள் தம் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள்.