Wednesday, October 15, 2008

'எங்க‌ள் காய‌ங்க‌ளும் வெறுமைக‌ளும் வேறுவித‌மான‌வை'

இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதை நூலை முன்வைத்து…
-தேவகாந்தன்-

சமீபத்தில் வெளிவந்த இளம் கவிஞர்களின் ஆக்கங்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைத் துறையின், எதிர்காலச் செல்நெறியைச் சுட்டிக்காட்டும் கூறுகள் புலப்பட ஆரம்பித்திருப்பதை ஒரு தீவிர வாசகர் எதிர்கண்டிருக்க முடியும். அவ்வாறான ஆக்கங்களில் இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தொகுப்பை ஒரு முக்கிய வரவாக நான் காண்கிறேன்.

‘நாடற்றவனின் குறிப்புகள்’ எல்லா கவிதைத் தொகுப்புகளையும் போலவே மோசமானது, சுமாரானது, நல்லது, மிகநல்லது என்ற பகுப்புகளுள் அடங்கக்கூடிய விதமாக அமைந்து, 53 கவிதைகளைக் கொண்டிருக்கிற நூல்தான். ஆனாலும் இது அழுத்தமாகக் காட்;டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறதை இத் தொகுப்பில் முக்கியமாகக் காணக்கிடந்தது.

சென்ற நூற்றாண்டின் அந்திமம் வரை ஈழத்துப் புலம்பெயர்ந்த கவிஞர்களின் பாடுபொருள் பெரும்பாலும் தம் இழந்த மண்ணும், வாழ்வும், கலாச்சாரமும் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் மறுதிரும்புகையின் போதான துயர்களைப் போன்றதோடுகூட இவர்களுக்கு ஒரு திரும்புகை இருந்துவிடாது என்பதை அரசியல் வலிதாய் உணர்த்தி நிற்கையில், இன்று மண்ணும் வாழ்வும் கலாச்சாரமும் பற்றிய ஏக்கம் அவற்றை இழந்ததனாலாய துயரங்களை வைத்துப் பார்க்கையில் இவர்கள் கவிதைகளில் பின்தள்ளப்பட்டிருப்பதாகவே சொல்லக்கூடியதாய் இருக்கிறது. இன்று புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களே அதைப் பிரச்சினையென உணராதபோதிலும், புலம்பெயர்ந்ததினாலான மூலத்திலிருந்து கிளர்ந்திருப்பவை என்பதை சமூக அக்கறையாளரால் எளிதில் உணரமுடியும். அதனால் இந்த பழையனவற்றின் இழப்பும், புதிய புலத்தின் உழல்வும், ஒரு நவ கலாச்சாரக் கலப்பினால் அவைபற்றிய உணர்வும் கூடியோ குறைந்தோ அவர்கள் படைப்புக்களில் அழுத்தமாவதை தவிர்க்கவே முடியாதிருக்கும்தான். இச் செல்நெறியின் ஆகக் கூடிய உதாரணமாகும் தொகுப்புகளில் முதன்மையானது ‘நாடற்றவனின் குறிப்புகள்’ என்பதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், ஒளவை போன்றவர்களுடைய கவிதைகளின் பாடுபொருளைவிட, கி.பி.அரவிந்தன், பா.அ.ஜயகரன், திருமாவளவன், செழியன் போன்றோரினதை விடவுமே, இளங்கோ, தான்யா, பிரதீபா, தமிழ்நதி, ஆழியாள், றஞ்சினி ஆகிய புதிய தலைமுறையினரின் பாடுபொருள் வித்தியாசமானது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் முன்னையவர்களினதைவிட விரிவானது. ஒருபொருளிலிருந்து இன்னொரு பொருளாய் சூக்கும மாற்றமுற்றது. பெண்ணிலை வாதக் கருத்துக்களும், புகலிடத்தின் அவலங்களும், பல்வேறு சமூகங்களின் இதுபோன்ற துயரங்களின் அவதானிப்பும், அதனாலேயே இப் பொதுத் துயரத்துக்கு மூலாதாரம் கண்டு ஒன்றிணையும் எத்தனிப்பும் இவர்களின் கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. தமிழ்ச் சமூகமென்ற ஒற்றைத் தடத்திலிருந்து விலகி உலகமளாவ எத்தனிப்பது.

புகலிட அவலங்கள் அனாதியானவை. விவிலியம் இது குறித்த முதலாவது பதிவின் சாட்சியமெனக் கூறமுடியும். சங்ககாலத்துப் பாணர் பாடினிகளின் பாடல்களில் தெரிவது இதுபோன்ற துயரத்தின் ஒரு சாயல்தான்.
அப் பகுதிக்கு புதிதாக வந்த பாணன்தான் அவன். முதல்நாளிரவு அவன் ஓர் இல்லிலிருந்து பாடியிருக்கிறான். அதைச் சுட்டும் விதத்திலேயே அவன் ஒரு பெண்ணால் அவமானப்படுத்தப்படுவதாக ஒரு சங்கப் பாடல் உண்டு. அதன் கருத்து இது:
‘நேற்றிரவு ஒரு சத்தம் எழுந்துகொண்டிருந்தது எங்கிருந்தோ. அதைக் கேட்ட என் அன்னை பேய் கத்துகிறது என்றாள். என் தங்கையோ, நாய் குரைக்கிறது என்றாள். நான்தான் நீ பாடுகிறாய் என்று சொன்னேன்.’
‘பேயென்றாள் அன்னைதான்பேதை என் தங்கையும்நாயென்றாள், நீயென்றேன் நான்’ என்று வருவதான அடிகள் கலித்தொகையில் உள்ளதாக ஞாபகம்.

இதைவிட ஒரு பாடும் பரதேசியை அவமானப்படுத்தும் வார்த்தைகள் இருக்கமுடியுமா? தமிழ்ப் பரப்பில் அலைந்துழல்வின் மேலான அவலத்தின் முதல் பதிவாக இதைக் கொள்ள முடியும்.

அலைந்துழல்வு சங்கமளாவிய பழைமை எனினும் இன்றைய புதுமையும்தான். புதுமையற்ற பழைய அனுபவங்களில் புதுமையைக் காண்பதே கவிதை அல்லது இலக்கியத்தின் நோக்கம் என்று ~வ்லோவ்ஸ்கி சொல்லிய வாசகங்களை வைத்து நோக்குகையில் இந்த உண்மை இன்னும் உறுதிப்படும். ஆனாலும் இது தனிப்பட்ட படைப்பாளியின் ஆக்கத் திறனின் அம்சமாகவும் இருக்கிறது என்பதும் உண்மையே. அதை இளங்கோவின் கவிதைகளினூடாக அலசலாம்.

காதலில் காமத்தையும், காமத்தில் காதலையும் பிரிவறக் காணும் திணைக் காலத்திலிருந்து உருவான தமிழ் மரபு, முதன்முறையாக தெளிவான வேறுபாடுகளுடன் இளங்கோவின் கவிதைகளில் காட்டப்படுகிறது.

நினைவுகளின் செட்டையைக் கழற்றிவிட்டு
இறகுகளின் மிருதுவான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக் காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப் பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத் தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத் தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு’

என்பதிலும்,

‘குடித்துக் கிறங்கி
உனையணைத்த பின்னிரா வேளையில்’
என்பதிலும்,
‘உடல்கள் உராய்ந்து
ஆசைத்தீ கனன்றெரிந்த
மாலைப்பொழுதொன்றின் பிற்பாடு’
என்பதிலும் தெரிவது காமம்பற்றிய அனுபவப் பகிர்வுகளே. அவை காதலோடு பின்னமற்றவையாய் மயங்கவைக்கப்படவில்லை இங்கே. அது ஒரு வித்தியாசமான இலக்கியப் பிரிவாகவே தன்னை வெளிப்படுத்தும்.
பாலைத் திணையின் ஒழுக்கம் பிரிதல் ஆகும். கணவன் வாழ்வின் ஆதாரமான பொருள் தேடச் செல்லுதலை மய்யமாய்க் கொண்டு இது வரையறைபட்டது. இதில் பெண் கணவன் சொல்லிச்சென்ற காலம்வரை காத்திருத்தலே பெருவழக்கு. சிலவேளை பெண்டிரும் உடன்செல்லுதல் உண்டு. இதை உடன்போக்குப் பாலையெனக் கூறுகிறது திணைப் பகுப்பு. அதுபோல் இளங்கோ காட்டும் பிரிவை ‘உடன்பாட்டுப் பிரிவு’ என வகை செய்யலாம்போலப் படுகிறது. காதலனும் காதலியும் தம் உறவு கைகூடப் போவதில்லையெனத் தெரிந்து பிரிவை மிக்க இயல்பானதுபோல் கொண்டு தம் உறவை அறுத்து அகல்வர். தமிழ்க் கவிதைப் பரப்பில் இந்தத் துறை புலம்பெயர் கவிதையின் பாடுபொருளாக அமைவதைக் கவனிக்கவேண்டும். நிலைபேறுள்ள தனி மனிதர்களின் ஒழுக்கவியலாக இது இல்லை. அலைந்துழல்வோரின் ஒரு கூறாகவே இதைக் காணமுடிகிறது.

‘இனியென்ன
எதிரெதிர்த் திசைகளில் எம் பயணமும்
தற்செயலாய்ச் சந்திக்கையில்
சின்னதாய்ச் சிரிப்பும்

இவைபோதும் எனக்கும்
உனக்கும்’

என்ற வரிகளும்,

‘நாளைக்குப் பயணம் கனடாவிற்கெனக் கூறி
பார்வையைத் தூரத்தில் தொலைத்த பொழுதில்
நெருங்கிவந்து இதழ் பதித்தகன்றாய்

நான் நிசப்தமாயினேன்
நின்ற புள்ளியில்
நீயோ நடந்துசென்றாய்
திரும்பிப் பாராது
இனி நிலைப்பதற்கு
உறவெதுவும் இல்லாமற்போல்’
என்ற வரிகள் இடம்பெறும் ‘பனையும் அரசமரமும்’ என்ற ஒரு முழுக் கவிதையுமே இந்த நவஅறத்தைத்தான் சொல்கின்றன.

தொகுப்பில் உள்ள 2000, 2001, 2002ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகளில்தான் இத்தகைய போக்கினைக் காணக்கிடக்கின்றது என்பதையும் இங்கே மனங்கொள்ள வேண்டும். ஆனால் 2005, 2006 ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகள் தம்தொனியை சடுதியில் மாற்றத் தொடங்கிவிடுகின்றன.
2002 க்குப் பின் 2003, 2004ஆம் ஆண்டுகளின் கவிதைகளைக் காணாதிருக்கும் இத் தொகுப்பில் 2005 உம், 2006உம் ஊருக்குத் திரும்பிவிடும் மனம் ஆங்குள்ள வதைபாடுகளைப் பாடத் தொடங்கிவிடுகிறது. இவை ‘எங்கள் காயங்களும் வலிகளும் வித்தியாசமானவை’யென ஆணித்தரமாய் நிறுவுபவை. நினைவுகள் வலியை ஏற்படுத்தும். எவருக்கும் இயல்பானது இந்நிலைமை. ஆனால் மரணத்தை ஏங்குமளவுக்கு இந் நினைவுகள் வதையாவது இளங்கோவின் கவிதைகளில் உள்ள விசே~ம். மதுவிலும், மாதர்களிலும் தம் வலிகளை மறந்து திரிந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். மரண வலிகொண்டு மறைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இளங்கோ சொல்லும் முறையானது இதில் தனித்துவமானது. வாழ்தலின் நியதியோடு மரணத்தை ஏங்கும் வதை இது.

‘தடயங்களின்றி
இந்த ஆண்டு, இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்பகின்றேன்
எனது மரணத்தை’
என்றும்,
‘தேவதைகளைக் கொன்ற
சாத்தான்கள் நுழைந்த திசை
வெளுக்கத் தொடங்கையில் மட்டும்
மறக்க முடிவதில்லை
இது
தற்கொலை செய்வதற்குரிய
தருணம் என்பதை’
என்றும் கூறும் வரிகள் மரணத்தை யாசிக்கும் வலி படர்ந்திருப்பதன் அடையாளங்கள்.

மேலும், ‘சாத்தானின் காற்று / நள்ளிரவைச் சிலுவையில்அறைய /அதிர்கிறது / பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்’, ‘மதுக் குவளையின் விளிம்பிலமர்ந்த / எலுமிச்சையாய் / நிலவு மிதக்குமோர் பொழுதில்’ போன்ற வரிகளில் இந்தத் தலைமுறைக்கேயுரித்தான புதிய உவமானங்கள் மின்னுகின்றன.

மட்டுமில்லை. 2005, 2006ஆம் ஆண்டுக் கவிதைகளே கவிதைத் தரம் கூடியவையுமாகும். மொழியின் அதியுயர்ந்த சாத்தியப்பாட்டை இளங்கோ அளவில் அவை அடைந்துள்ளதோடு, உத்திவகையாகவும் மேனிலை கொண்டிருக்கின்றன. அதே வாழ்விலும் சூழ்நிலையிலும் வாழ்ந்துகொண்டுதான் இந்த வகையான பின்நவீனத்துவ உத்திகளுள் ஒருவரால் பிரவேசிக்கமுடியும். ‘கரையொதுங்கும் புறாவின் சிறகுகள்’, ‘ஆழப் புதையுண்ட வேர்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இத் தொகுப்பில் குறைகளே இல்லாமலில்லை. ஆனாலும் அதை வேறுவிதமாகக் கூறலாமென எண்ணுகின்றேன்.
ஒரு தொகுப்பில் பல உணர்வுகளும் கொண்ட கவிதைகள் இடம்பெறலாம். ஆனாலும் அந்த உணர்வுகள் ஒரே கவிதையில் புலப்பாடடையும்போது விகற்பமாய்த் தோன்றும். பூவுக்குள் புரட்சி தோன்றுவதுபோல, அறச் சீற்றம் கொள்ளும் தருணத்தில் புணர்ச்சி விழைவு சுண்டத் தொடங்கிவிடுகிறது இளங்கோவின் கவிதைகளில்.

இதற்கு படைப்பாளியின் மனம் அந்தக் கணத்திலேனும் நிறுதிட்டம் கொள்ளாதிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இது அனுபவக் குறைவாக, இலக்கற்ற சிந்தனைத் தொகுப்புள்ள வெறும் வாசிப்பு மனம் கொண்டதாக மட்டுமே இனங்காணப்படும். அந்தக் குறையை இப் படைப்பாளி கொண்டிருந்ததை தொகுப்பைப் பன்முறை வாசித்த வேளையிலும் என்னால் உணர முடிந்திருந்தது. இது முக்கியமாகச் சீர்செய்யப்படவேண்டிய ஒரு குறைபாடாக எனக்குத் தெரிகிறது. அதுவரை இன்னும் சிறந்த கவிதைகளை நாம் இளங்கோவிடத்தில் எதிர்பார்ப்பதில் ஞாயமில்லை.

00000

ந‌ன்றி: தாய் வீடு (ஒக்ரோப‌ர், 2008)

2 comments:

Sri Rangan said...

//இத் தொகுப்பில் குறைகளே இல்லாமலில்லை. ஆனாலும் அதை வேறுவிதமாகக் கூறலாமென எண்ணுகின்றேன்.
ஒரு தொகுப்பில் பல உணர்வுகளும் கொண்ட கவிதைகள் இடம்பெறலாம். ஆனாலும் அந்த உணர்வுகள் ஒரே கவிதையில் புலப்பாடடையும்போது விகற்பமாய்த் தோன்றும். பூவுக்குள் புரட்சி தோன்றுவதுபோல, அறச் சீற்றம் கொள்ளும் தருணத்தில் புணர்ச்சி விழைவு சுண்டத் தொடங்கிவிடுகிறது இளங்கோவின் கவிதைகளில்.

இதற்கு படைப்பாளியின் மனம் அந்தக் கணத்திலேனும் நிறுதிட்டம் கொள்ளாதிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இது அனுபவக் குறைவாக, இலக்கற்ற சிந்தனைத் தொகுப்புள்ள வெறும் வாசிப்பு மனம் கொண்டதாக மட்டுமே இனங்காணப்படும். அந்தக் குறையை இப் படைப்பாளி கொண்டிருந்ததை தொகுப்பைப் பன்முறை வாசித்த வேளையிலும் என்னால் உணர முடிந்திருந்தது. இது முக்கியமாகச் சீர்செய்யப்படவேண்டிய ஒரு குறைபாடாக எனக்குத் தெரிகிறது. அதுவரை இன்னும் சிறந்த கவிதைகளை நாம் இளங்கோவிடத்தில் எதிர்பார்ப்பதில் ஞாயமில்லை.//


டி.ஜே,வணக்கம்! தேவகாந்தன்தம் இவ்விமர்சனம் குறித்துக் கொஞ்சமாவது சொல்லத்தான்வேண்டுமென்று நினைக்கிறேன்.

கவிதைகளை-கதைகளை-மற்றும் எந்தக் கலைவடிவத்தையுஞ்சரி ஒருவர்கொண்டிருக்கும் அநுபவத்துக்கும்,அவரது கல்விக்கும்,முன் தீர்ப்புகளுக்கும் இசைவாகிவரக்கூடியவுணர்வு நிலைக்குட்பட்டு விமர்சிக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்.இது பனுவலை எனது தெரிவுக்குள் இழுத்துவரும் அனாவசியமான முயற்சியைத் தவிர்பதற்கானவொரு நோக்காகவும் இருக்கலாம்.கவிதையென்ற வடிவத்துள் எழுதுபவரின் உள்ளத்தை-வாழ்வைத் தேடி, அதை நம்மோடு-புறவுலகத்தோடு பொருத்திப்பார்க்கத்தக்க இசைவோடு நாம் அதனோடு உறவாடுவதே மிக உண்மையானது.அதைவிடுத்து எழுதுபவரின் உணர்வை இன்னொரு தரப்பு நியாயத்தைக் கொண்டு அதன் தளத்துக்கு அல்லது ஒப்பீட்டுக்கமைய நெறுத்துப்பார்த்தலை ஒருபோதுஞ் செய்து கொள்ளமுடியாது.இது, கொலைக்கு ஒப்பானது.இன்றைய விமர்சனங்கள் யாவும்,இத்தகைய ஒப்பு நோக்குகளுக்குக்கொடுக்கும் முயற்சியைக் கவிதை எழுதியவரின் உள்ளத்தை அறிந்து அந்த மனதின் உண்மையான உணர்வை அறிய முயற்சிப்பதில்லை.

தேவகாந்தன் உங்கள் எழுத்துக்கள் ஊடாகத் தனது விருப்பத்தைச் சுமத்த முனைகிறார்.இது கவிதைகள் குறித்த பார்வையிலிருந்து ஒரு படிமமான மரபுவழிபப்பட்ட எதிர்பார்ப்பு.ஒவ்வொரு கவிதைக்கூடாகவும் அதற்குள் குவிந்து உருவமுறமுனையும் உணர்வோடும் அதன்வழி நிழலாடும் தன்னிலைகளோடும் உறவாடிக்கொண்ட அநுபவமே கவியுள்ளம் கண்டு கற்கமுனையும் புதிய மரபு.இது நமது விமர்சகர்களிடம் கிடையவே கிடையாது.உயிருள்ள வாழ்நிலைகள்பல அங்கே மரபுவழிப்பட்ட விழிகளுக்குத் தெரியாமல் குற்றுயிரோடு கிடக்கின்றன.இவைகளின் இருத்தலை அங்கீகரிப்பதே நமது தலையாயக்கடமை.அதை அங்கீகரிப்பதினூடாகத்தாம் நாங்கள் பன்முகத்தன்மைகளை அங்கீகரிப்பதும் கூடவே முன் தீர்ப்புகளை அடியோடகற்றித் தன்னிலைகளின்மீதான அங்கீகாரத்தைப் பொதுநிலைக்கு உந்தித் தள்ளுகிறோம்.

இதை-இத்தகைய நோக்கை, இலக்கியமென்ற எமது இரண்டாவது வாழ்வில்-இயற்கையில் செழுமைப்படுத்த முடியாதுபோனால் நாம் எதற்கும் இலாயக்கு இல்லாதுபோய் வரட்டுத்தனமான மரபுகளின்மீது இடறிவிடுவோம் என்பது எனது தெரிவு.

அதற்கு உதாரணமாகத் தேவகாந்தனின் குறிப்புக்களை எடுக்கலாம்.


ஒரு தொகுப்புக்குள் அவ்வளவு இலகுவாக வாழ்ந்துவிடமுடியாது.அதற்கு நாம் அனைத்தையும் இழந்துவிட்டு(நாம் கொண்டிருக்கும் புலமைசார் அறிவு-தெளிவு-தெரிவு)பாமரத்தனமான குழந்தை மனதோடு உள் நுழைந்து பார்க்கணும்.அப்போது மட்டுமேதாம் எழுதியவனின் மனத்தோடு நெருங்கி அவனது சூழலையும் விருப்பையும்"எனக்குள்"தரிசிக்கமுடியும்.


தரிசிப்பு என்பது என்ன?


நான்காணும் உள்வாழ்வை-எனக்குள் தேடும் என்னை-என்னுள் நெருங்கும் எனது நிஜத்தை எனக்குள் கொலைசெய்யும் நான், வெளிப்படுத்தமுடியாதளவுக்குக் கோழையாகிய நிலையில், இத்தகைய தளைகளையுடைத்து இன்னொருவர் வாழும்போது அதை நான் ஏற்று என்னை அத்தோடு இணைத்து அங்கீகரித்து என்னைப் புனரமைப்பது-வாழ்வது,சாவது,செத்துப் புதியனவாய்-புதிதாய் பிறந்துகொள்வது.

தேவகாந்தனின் எழுத்துகளின்வழி உங்கள் கவிதைகள் குறித்தான இறுகிய கண்ணோட்டம் விரிகிறதென்ற உணர்கிறேன்.

ஸ்ரீரங்கன்.

டிசே said...

அன்பின் சிறிர‌ங்க‌ன்,
விரிவான‌ பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி.
....
வாசிப்ப‌வரின்/வாசிப்புச் செய்ப‌வ‌ர்க‌ளின் வெளிக‌ளில் குறுக்கீடு செய்ய‌க் கூடுமென்ப‌த‌ற்காய்,என் தொகுப்புக் குறித்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்குப் ப‌தில‌ளிப்ப‌தில்லையென‌வே முடிவுசெய்திருக்கின்றேன். அவ்வாறு ப‌தில‌ளிப்ப‌தாய் இருப்ப‌தாயிருந்தாலும், இன்னொரு ச‌க‌ வாச‌க‌ராயிருந்தே எதிர்வினை செய்ய‌முடியுமே த‌விர‌, தொகுப்பிற்குரிய‌வ‌னாக‌ இனியொருபொழுதும் பேச‌முடியாது என்ப‌தே என‌து எண்ண‌ம். அத‌ன் கார‌ண‌மாக‌வே இத் தொகுப்பின் வெளியீட்டு விழாவின்போதும், பின்ன‌ர் த‌னியே ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌க்கூட்ட‌த்திலும் எக்க‌ருத்தையும் என் சார்பில் வெளியிடாது ஒரு ச‌க‌ வாச‌க‌னாய் ம‌ட்டுமே க‌ல‌ந்து கொண்டிருக்கிறேன். வைக்க‌ப‌டும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை எந்த‌ள‌வுக்கு ஏற்றுக்கொள்கின்றேன் என்று அறுதியிட்டுச் சொல்ல‌முடியாவிட்டாலும், எல்லா வ‌கையான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் கேட்டுக்கொள்வ‌தில் ஆர்வ‌மாக‌வேயிருக்கின்றேன்.
....
உங்க‌ள‌து, தேவ‌காந்த‌ன‌து வாசிப்புக்க‌ள் என்னைச் செழுமைப்ப‌டுத்த‌ ஏதோவொருவ‌கையில் உத‌வும் என்றே ந‌ம்புகின்றேன். ந‌ன்றி.