Wednesday, March 18, 2009

ஸ்லம்டாக் மில்லியனர்: ஏழ்மையின் பாலின்பம் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது இருபதுகளின் கடைசியில் எழுதப்பட்ட Katherin Mayoவின் நூலான Mother India பற்றி காந்தி சொன்ன அந்தச் சூடான வார்த்தைகள்: ‘a drain- inspector's report’ (சாக்கடை அதிகாரியின் அறிக்கை). ஒருவேளை காந்தி நம் நாட்களில் வாழ்ந்திருந்து இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்திருந்தால் இது மலசலக்கூடக் கண்காணிப்பாளரின் அறிக்கை எனக் கூறியிருப்பார். இந்தப் படத்தில் மலசலக் கூடத்திற்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. காதரின் மயோவின் படைப்புக்கும் இந்தத் திரைப் படத்திற்கும் சில முக்கியக் கலாச்சார இணைவுகள் இருக்கின்றன. அவை பற்றி இந்த வியாசத்தில் ஒரு பொருத்தமான இடத்தில் சொல்லுவேன்.

இந்தக் கதையில் உங்களை இருக்கையின் விளிம்பில் வைப்பதற்கான பிரதானமான தடயங்கள் ஒன்றும் இல்லை. கந்தைத் துணியில் இருந்தவன் காசுள்ள கனவானாக மாறுவதற்கான முயற்சியைப் படம் சித்தரிப்பதுபோல் இருந்தாலும் கதையின் உள்ளுறைப் பொருளில் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பொடியனின் முழுக்குறிக்கோளும் பணத்தைப் பற்றியது அல்ல. அந்தச் சாய்வாலாவிற்குக் காசைவிடக் காதல்தான் முக்கிய மாகப்படுகிறது. அவன் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றியது, அவனுடைய காதலியின் கவனத்தைப் பெறுவதற்காகவே.

நாவலும் திரைக்கதையும்: பின்புலம்

இந்த ஸ்லம்டாக் கதைக்குப் பின்னால் ஒரு ‘சின்ன’ இலக்கிய வரலாறு இருக்கிறது. இந்தத் திரைக்கதை விக்காஸ் சுவராப் 2005இல் எழுதிய Q & A நாவலின் ஒரு சாடையான தழுவல். வசனம்-சார்ந்த படைப்புகள் காட்சி-சார்ந்த சாதனத்தினூடாக மறு உரு எடுக்கும்போது சில எதிர்பாராத இழப்புகளும் வெறுமையாக்கல்களும் ஏற்படுவதுண்டு. இது இந்தப் படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. சில முக்கிய வித்தியாசங்களை மட்டும் தருகிறேன். நாவலில் அந்தப் பதினெட்டு வயதுக் கதாநாயகனின் பெயர் ராம் முகமது தாமாஸ். திரையில் ஜாமால் மாலிக். இந்தக் கதையின் கதா நாயகனுக்கு நடந்தவை எந்த இந்தியருக்கும் நிகழக்கூடும் என்ற வகையில் ஒரு குறியீடாக சுவராப் வைத்த நாமம் இப்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியர் என்ற அகன்ற அடையாளம் நீக்கப்பட்டு ஒரு குறுகிய மத அடையாளம் முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் தேவையற்ற ஆனால் தவிர்க்க முடியாத, ஒரு இடைச் செருகல்: இந்திய சரித்திரத்தைத் திசைதிருப்பிய ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்ற 21 வருடங்களுக்குப் பிறகு, இந்த அட்டூழியங்களுக்கு ஈடுசெய்யுமாறு 1940இல் லண்டன் Caxton Hallஇல் Michael O'Dywer என்றவரை ஒரு இந்தியர் சுட்டுக்கொன்று விடுகிறார். இந்த O'Dywerதான் Reginald Edward Harry Dyer விடுத்த கட்டளையில் ஆங்கிலத் துருப்புகள் கண் மூடித்தனமாக இந்தியரைக் கொன்று குவித்தபோது பஞ்சாபின் ஆளுநராக இருந்தவர். ஆங்கிலேயரைக் கொலைசெய்தவரை உன் பெயர் என்னவெனக் கேட்டபொழுது அந்த இந்தியர் சொன்ன விடை: Ram Mohahmed Singh Azad. இந்தப் பழிதீர்ப்பை எந்த இந்தியருமே செய்திருக்கலாம் என்று ஒரு குறியீட்டுப் பட்டமாக இந்தப் பெயர் சொல்லப்பட்டது. இதைச் சொன்னவர் உத்தம் சிங் என்னும் சீக்கியர். நவீனம் முக்கியப்படுத்திய திவ்விய விவரிப்புகளில் ஒன்று இந்தியர் என்ற பொது அடையாளம். தேசிய முன்னுரிமைகளை வலியுறுத்தும் சின்னமாக இந்தப் பரந்த பார்வை கருதப்பட்டது. பின்-நவீனம் ஆக்கம் செய்த குழப்பமான உன்னதங்களில் ஒன்று வட்டார, சாதி, சமய தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் மீளுருவாக்கம் செய்தது. மூல நாவலிருந்த விசாலமான சமதன்மையுள்ள இந்தியர் என்னும் ஒற்றை அடையாளம் சிதைக்கப்பட்டு இந்தப் படத்தில் கதாநாயகன் ஒருமுக நோக்குள்ள சமயம் சார்ந்த இந்தியனாக ஆக்கப்பட்டது மட்டுமல்ல, முஸ்லிமாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளான். சமய மாற்றம் மட்டுமல்ல, இவனுக்கு வகுப்பு மாற்றமும் நேர்ந்திருக்கிறது. சுவராபின் கதைக்குப் பின்னால் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கிறது. How to be a millionaire பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Major Charles Ingram ஏதோ மோசடிசெய்து வெற்றியடைந்தார் என்று மிஜிக்ஷி அலைவரிசை அமைப்பாளர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். இந்தச் சம்பவந்தான் நாவலுக்குக் கருவாக அமைந்தது என்று சுவராப் கூறியிருக்கிறார். சமுதாயத்தில் அந்தஸ்து பெற்ற ஒரு மேஜரின் ஏமாற்று வேலை சாதிப்பு, சுவராப்பின் கற்பனையில் கீழ்நிலைக் குடிமகன் செய்வதாகத் தகவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

சரி, மறுபடியும் நாவலுக்கும் திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசங்களுக்கு வருவோம். மூலக் கதையில் கதாநாயகன் ஒரு அனாதை. ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிறித்தவக் குருவானவரால் காப்பாற்றப்பட்டு ஒரு கிறித்தவ இல்லத்தில் வளர்கிறான். திரையில் அவனுக்கு முஸ்லிம் தாயும் வம்பனான ஒரு சகோதரனும் இருக்கிறார்கள். சுவராப் கதையில் கவர்ச்சியான சிமித்தா ஷா என்னும் ஒரு பெண் வழக்கறிஞர் வருவார். அவருக்குத்தான் பொலிசில் மாட்டுவிக்கப்பட்ட ராம் முகமத் தாமஸ், எப்படித் தன் வாழ்க்கையில் எதிர்பாராத தருணங்களில் நடைபெற்ற பனிரெண்டு சம்பவங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடியதாக அமைந்தன என்று விவரிப்பான். திரைப்படத்தில் ஜமால் மாலிக் செம்மையாகக் காவல் துறையினரால் உதைவாங்கிக்கொண்டு பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இப்பிரான் கானுக்கு விளக்கம் கொடுப்பான்.

பண்பாட்டுப் பரிமாணங்கள், மதிப்பீடுகள்

திரைக்கான மாற்றங்கள் பற்றி அதிகம் கவலையில்லை. ஆனால் இந்தத் திரைப்படம் வெளிப்படுத்தும் மறைமுகமான கலாச்சாரத் தாத்பரியங்கள் பற்றித் தான் ஆழ்ந்த கவனிப்பு தேவையாயிருக்கிறது. திரைப் படங்கள் கபடமற்றவை அல்ல. வறுமை இங்கு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. அதைவிட மேற்கத்தியர் களின் ஆழ்மனத்தில் கெட்டியாக ஊறிப்போயிருக்கிற அனுகூலமற்ற இந்தியாவைப் பற்றிய மாறாநிலையான அச்சிடுகள் (stereotype) மீண்டும் மறுகூறு செய்யப்பட்டிருக்கின்றன. திரைப்படம் சித்தரிக்கும் வார்ப்பெண்ணங்கள்: வறுமை, பாலிய விபச்சாரம், கொலை, பலாத்காரம், குறுகிய மதவாதம், சுரண்டல் தன்மை. இந்தியக் கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே படுமோசமானவர்கள். ஜமாலின் காதலி லத்திக்காகூட. அடிமட்ட மக்கள் மட்டுமல்ல மேட்டுக்குடியினரும் கார குணமுள்ளவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜமாலின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பணக்கார இந்தியர்களே. அவனைக் காவல் துறையினரிடத்தில் ஒப்படைத்ததும், அவனது உடம்பைப் பின்னி எடுப்பதும் அவனைவிடப் பல மடங்கு வசதிபடைத்தவர்களே. இந்த மும்பைப் பொலிஸ் கைதிகளுக்குத் தரும் ஆக்கினைகளைப் பார்த்தால் Abu Gharib அமெரிக்கச் சித்திரவதையாளர்களே மூச்சடைத்துப்போய்விடுவார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் காதரீன் மாயோவின் அன்னை இந்தியாவைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். காலனிய ஆட்சிக்காலத்தில் அரசின் உதவியுடன் இந்தியாவின் நிலை பற்றிக் காவல் துறை அறிக்கைகள், மருத்துவ நிலையப் புள்ளிவிவரங்கள், அரசாங்கக் கோப்புகளை அலசி எழுதிய நூலில் அன்றைய சமூகச் சிதைவுகளை மாயோ ஆவணப்படுத்தியிருந்தார். காதரீன் மாயோ அந்த நாட்களின் பெண் Naipual என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் சீரழிவுக்கான காரணங்களாக அவர் தந்தவை: பின்தங்கிய பெண்கள், துப்பரவற்ற வாழ்க்கைமுறை, பால்ய விவாகம், இந்திய ஆண்களின் தீவிரக் காம இச்சை, அவர்களின் சுய இன்பச் செயல்கள், அவர்களிடையே காணப்படும் ஓரின ஈர்ப்பு. காலனிய ஆட்சிக் காலத்தில் மாயோவின் பிரதி தந்த செய்தி: இந்தியா இன்னும் சுய ஆட்சிக்குத் தயாராகவும் இல்லை; தகுதியும் பெறவில்லை. பின்காலனிய நாட்களில் Danny Boyleஇன் சினிமா தரும் தகவல் சேரிகளும் தாதாக்களும் அடியாட்களும் மனித உரிமை மறுப்புகளும் காவல் துறை பலாத்காரங்களும் பணம் சம்பாதிப்பதற்காகச் சிறுவர்களின் கண்களைக் குருடாக்குகிறவர்களும் இருக்கும்வரை இந்தியா உலக வல்லரசாகும் வாய்ப்பு இல்லை. மாயோ தந்த புள்ளிவிவரங்களை அன்றைய கலாச்சாரத் தேசியவாதிகள் மறுக்கவில்லை. அவர் கொடுத்த அதே பட்டியலைத் திசைதிருப்பி இந்தியாவின் கீழ்மட்ட நிலைக்குக் காலனிய ஆட்சியே காரணம் என்று வாதிட்டார்கள். இன்றைய சேரிகளுக்கு இந்தியா மட்டுமே முழுப் பொறுப்பல்ல. உலகமயமாக்கல், சுதந்திரச் சந்தை, சர்வதேச வர்த்தக ஒழுங்கமைப்புகள், சக்தி வாய்ந்த பன்னாட்டு வணிகக் குழுமங்கள், சமனில்லாத தொழில்நுட்பப் பரவல்கள் ஏற்படுத்தும் பொருளாதார சமத்துவமற்ற சமூகப் பிரிவினைகள் குடிசைகளும் சேரிகளும் வளர்வதற்குக் கணிசமான பங்குண்டு. இயக்குநர் Danny Boyle சேரிகள் ஏதோ இந்தியக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்த அம்சமாகக் காட்டியுள்ளார்.

வணிக சினிமா சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லதல்ல. ஆனால் மறைமுகமான ஒரு பதில் இந்தப் படத்தில் இருக்கிறது. மனிதத் தன்மையற்ற அந்த இருண்மையான சூழலிலிருந்து ஜமால் தன்னை விடுவித்துக்கொள்ள பயன்படுத்திய உபாயம் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இதில் ஒரு நுண்ணியம் வாய்ந்த உப செய்தி பொதிந்திருப்பதைக் காணலாம். இன்றைய பரவிக்கிடக்கும் சேரிகளுக்கு சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பங்கை ஞிணீஸீஸீஹ் ஙிஷீஹ்றீமீ ஒப்புக்கொள்ளத் தயங்குவது மட்டுல்ல சேரி வாழ் மக்களின் மீட்பு மேற்கில் உருவாகிய உபகாரணங்களில்தான் இருக்கிறது என்கிறார்.

இந்த ஆண்டின் திரைப்படங்களுக்கான பரிசுகள் அனைத்தும் ஸ்லம்டாக் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன என நினைக்கிறேன். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது ஆஸ்கார் பரிசுகூடக் கிட்டியிருக்கலாம். இந்தப் படம் மேற்குலகில் ஏற்படுத்திய பரபரப்புக்கான காரணங்கள் புதிராகவே இருக்கின்றன. ஒரு வேளை படத்தின் சுப முடிவு, ஒரு அடிமட்டக் குடிமகன் வலுவான சக்திகளுக்கு எதிராகப் போராடிப் பெறும் வெற்றி, அலுப்புத் தட்டாமல் கதை சொன்ன விதம், அந்தச் சிறுவர்களின் துடிப்பான நடிப்பு, ரசிகர்களிடையே படம் ஏற்படுத்தும் சுக உணர்ச்சி போன்றவை இந்தப் படத்தின் வியக்கத்தக்க வெற்றிக்குக் காரணமாய் இருக்கலாம். படம் முடிந்து அரங்கைவிட்டு வெளிவரும்போது ஒரு ஆங்கிலேயர் இன்னொருவருக்குச் சொன்னது: very energetic. இது ஒரு சமர்த்தான (smart) படம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மகத்தான சினிமாவுக்கான தடயங்கள் இல்லை.

இந்திய இயக்குநர்கள் சித்தரிக்கத் தயங்கும் அசல் இந்தியா முதன்முதலாக இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் பிரம்மையை ஸ்லம்டாக் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பொய்யான பிம்பத்திற்குக் காரணம் இப்போது வாரந்தோறும் இறக்குமதி செய்யப்படும் பம்பாய், கோடம்பாக்கம் மசாலாப் படங்களே. வங்காள வறுமையைப் பதேர் பாஞ்சாலியில் 1955லேயே சத்தியஜித் ரே தத்ரூபமாகப் படம்பிடித்திருக்கிறார். இன்று மானிடத்திற்கு அஞ்சலி என்று புகழப்படும் இதே படம் அன்றைக்கு வறுமை வியாபாரமாக ஆக்கப்பட்டிருகிறது என்று குறை கூறப்பட்டது.

பொலிசாரால் அடிபடும் ஜமால் அமெரிக்கச் சுற்றுலாத் தம்பதிகளுக்குச் சொல்லுகிறான்: You want to see the real India. This is real India. இந்தத் திரைப்படம் கொடூரமான, இருண்மையான, கடுமையான, நெறி தவறிய, ஒரு பக்க இந்தியாவைக் காட்டுகிறது. இந்த எதிர்மறையான உருப்படிவங்கள் (ஸீமீரீணீtவீஸ்மீ வீனீணீரீமீs) இந்தியாவிற்குப் பொருந்தமாட்டா எனச் சொல்லவில்லை. இந்தியாவிற்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அதன் தாராளம், பன்மைத்தன்மை, ஜனநாயகப் பண்பு, சகிப்பு, இரக்கம் ஆகியவையும் இந்தியாவின் குணாதிசயங்கள்தான். இந்தப் படம் எழுப்பும் கேள்வி சிக்கலான முரண்பாடான விஷயங்களை ஒற்றைப் பரிமாணச் சாதனமான சினிமாவால் எடுத்துக்காட்ட முடியுமா?

முடிக்கும் முன் இன்னுமொரு இடைச் செருகல்: இந்தப் படம், தினசரிகளில் தலைப்புச் செய்திகள் எழுதும் துணை ஆசிரியர்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். நீங்கள் வாய்விட்டுச் சிரிக்காவிட்டாலும் உள்ளூரப் புன்னகைக்கச் சில நக்கலான தலைப்புகள்: ஐபிஎல் ஏலத்திற்கு அடுத்த நாள் Kevin Peterson தன்னுடைய விக்கட்டை மிகக் குறைச்சலான ஓட்டங்களுடன் இழந்தபோது Times கிரிக்கட் விமர்சகர் பீட்டர்சனுக்குக் கொடுத்த பட்டம்: Slum slog millionaire. இன்றைய பண நெருக்கடிக்குக் காரணமாகவிருந்த கறைபட்ட வங்கி ஆளுநர்களுக்கு Sun பத்திரிகை வழங்கிய பட்டம் Scumbag Millionaires. மலிவான ஆட்டக்காரக் குழுவான Stroke City பல கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள Manchester Cityயை உதை பந்தாட்டதில் தோற்கடித்தபோது Independent எழுதிய தலைப்பு Slumdogs beat Millionaires.

கிறிஸ்தவ நற்செய்தியில் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வசனம் இருக்கிறது: ‘ஏழைகள் உங்களுடன் எப்போதும் இருப்பார்கள்’. அதேபோல் நாவலாசிரியர்களும் சினிமா இயக்குநர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் இயேசு சொல்ல மறந்தது: இவர்களில் யார் ஏழைகளைத் தங்களுடைய வளர்ச்சிக்கு இலாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்?

e-mail: rssugi@blueyonder.co.uk

ந‌ன்றி: கால‌ச்சுவ‌டு (மார்ச், 2009)

3 comments:

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன் ..

இந்தியாவின் மற்றய முகங்கள் காட்டப்படுகையில் அது இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதானே..? உண்மையில் இது சரியான நேரத்தில் வெளிவந்த சாமர்த்தியமான படம் என்பதுதான் என்னுடைய எண்ணமும் மற்றப்டி ஒற்றைப்போக்கான கலக எழுத்தாளர்கள் சொல்வது போல அதி உச்சமான சினிமா என்பதெல்லலாம்...


;)

இளங்கோ-டிசே said...

/பின்-நவீனம் ஆக்கம் செய்த குழப்பமான உன்னதங்களில் ஒன்று வட்டார, சாதி, சமய தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் மீளுருவாக்கம் செய்தது. மூல நாவலிருந்த விசாலமான சமதன்மையுள்ள இந்தியர் என்னும் ஒற்றை அடையாளம் சிதைக்கப்பட்டு இந்தப் படத்தில் கதாநாயகன் ஒருமுக நோக்குள்ள சமயம் சார்ந்த இந்தியனாக ஆக்கப்பட்டது மட்டுமல்ல, முஸ்லிமாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளான். /

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கேயேன் பின்‍ ந‌வீன‌த்துவ‌த்தை இழுக்கின்றார் என்பதுதான் விள‌ங்க‌வில்லை. பின் ந‌வீன‌த்துவ‌ம் ப‌ன்மைத் த‌ன்மைக‌ளை வ‌ர‌வேற்கின்ற‌தென்ற‌ பின் ந‌வீன‌த்துவ‌த்தின் அடிப்ப‌டைப்ப‌ண்பைக் கூட‌ த‌லைகீழாக்கிக் காட்டுகின்றார். உதார‌ண‌மாய் இந்தியாவின் தேசிய‌ப்பெருங்க‌தையாட‌ல்தான் இந்திய‌ர் என்ற‌ ஒற்றைத் த‌ன்மையை ம‌ட்டும் க‌ட்டிய‌மைக்கும். பின் ந‌வீன‌ச்சூழ‌ல் ஒருவ‌ர் இந்திய‌ராக‌ இருப்ப‌தை ஏற்றுக்கொள‌வ‌தோடு அவ‌ர் த‌மிழ‌ராய் இருப்ப‌தையும் ஒரே நேர‌த்தில் அங்கிக‌ரீக்கின்ற‌து. என‌வே ஒருவ‌ர் 'ராம் முகமது தாமாஸ்' என‌ த‌ன்னை வெளிப்ப‌டுத்தியிருந்தால், ஒற்றை அடையாள‌த்தைச் சிதைத்த‌ல் என்ற‌வ‌கையில் தேசிய‌த்தைவிட‌ பின் ந‌வீன‌த்துவ‌மே அதிக‌ம் வ‌ர‌வேற்றிருக்கும். மார்க்சிச‌ம் வ‌ர்க்க‌ப் போராட்ட‌த்தை ம‌ட்டுமே முன்வைத்தபோது (எளிமையாக‌ச் சொல்வ‌தாயின்)பின் ந‌வீன‌த்துவ‌ம் ப‌ல்வேறு சூழ‌ல்க‌ள் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ப்ப‌ட‌வேண்டும்; ஒன்றுக்காய் ம‌ட்டுமே போராடுத‌ல் ச‌ரிய‌ல்ல‌ என்று மார்க்சிச‌தோடு முர‌ண்ப‌ட்ட‌து. ஒரு உதார‌ண‌த்துக்கு வ‌ர்க்க‌ப் போராட்ட‌த்திற்கு வ‌ரும் ஒரு பெண் வ‌ர்க்க‌ரீதியில் சுர‌ண்ட‌ப்ப‌டுகின்ற‌ அதேவேளை அவ‌ள் த‌ன‌து ஆண் துணையால் பால் வேறுபாட்டு ரீதியிலும் ஒடுக்க‌ப்ப‌டும்போது, வ‌ர்க்க‌த்தை ம‌ட்டுமே முன்வைத்து போராடினால் எல்லாம் தீர்ந்துவிடுமா என்று பின் ந‌வீன‌த்துவ‌ம் கேள்விக‌ளை எழுப்பிய‌து. என‌வே பின் ந‌வீன‌த்துவ‌ம் ஒருவ‌ரை ஒற்றை அடையாள‌த்துக்குள் வைப்ப‌தை ம‌றுக்கிற‌தே த‌விர‌ சச்சிதானந்தன் சுகிர்தராஜா கூறுவ‌துபோல‌ அல்ல‌ என்ப‌தைத் தெளிவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து.

ம‌ற்ற‌து ச‌ச்சிதான‌ந்த‌னின் வ‌ரிக‌ளிலுள்ள‌, 'வட்டார, சாதி, சமய தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் மீளுருவாக்கம் செய்தது' என்ப‌து ப‌ற்றிய‌து. ஏன் பின் ந‌வீன‌த்துவ‌ம் இவ‌ற்றை மீளுருவாக்க‌ம் செய்தது என்று அவ‌ர் யோசித்துப் பார்க்க‌வேண்டும். விளிம்புநிலைம‌னித‌ர்கள் ப‌ற்றிப் பேச‌த்தொட‌ங்கிய‌போதே இவ‌ற்றை மீளுருவாக்க‌ம் செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ஏற்ப‌ட்ட‌து. இந்திய‌ர்க‌ளாக‌ இருக்கும் எல்லோருக்கும் ஒரே வித‌மான‌ 'நீதி, சுத‌ந்திர‌ம் ச‌ம‌த்துவ‌ம்' வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌தா? இந்திய‌ர் என்று சொல்ல‌க் கூட‌ அல்ல‌,த‌மிழ‌ர்க‌ள் என்று பெருமையாக‌ச் சொல்ல‌க்கூட‌ த‌ங்க‌ளால் முடியாது என்றுதான் த‌மிழ‌க‌த்து த‌லித்துக்க‌ள் கூறுகின்றார்க‌ள். எனெனில் த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ ஒற்றைச் சொல்லாட‌லுக்குள் எல்லாத் த‌மிழ‌ர்க‌ளும் உள்வாங்க‌ப்ப‌ட்டார்க‌ளா? சாதியை முன்வைத்து த‌மிழ்ச்ச‌மூக‌ம் ம‌க்க‌ளை விளிம்புநிலை ஆக்க‌வில்லையா? இவ்வாறான‌ ஒற்றை அடையாள‌ங்க‌ளுக்குள் (விரித்துச் சொல்வ‌த‌னால் பெருங்க‌தையாட‌லுக்குள்) இந்த‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளுக்கு எத்த‌கைய‌ ப‌ய‌னும் இருக்காது என்ற‌போதே த‌ங்க‌ளை முற்றுமுழுதாக‌ பிரித்து த‌ம‌க்கான‌ அடையாள‌ங்க‌ளுட‌ன் போராடிய‌தைத்தான் பின் ந‌வீன‌த்துவ‌ச் சூழ‌ல் வ‌ர‌வேற்ற‌து. என‌வே இவ்வாறு த‌னித்த‌ன்மைக‌ளை வேறுப‌டுத்தி மீளுருவாக்க‌ம் செய்த‌தில் என்ன‌ த‌வ‌றிருக்கிற‌து? ஃபூக்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ரும் இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்களே -இனியான‌- கால‌ங்க‌ளில் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்த‌வும், போராட்ட‌ங்க‌ளுக்கு த‌லைமை தாங்க‌வும் வேண்டுமென‌ அடிக்க‌டி தெளிவுப‌டுத்தியிருக்கின்ற‌ன‌ரே த‌விர‌, இவ்வாறான‌ போராட்ட‌ங்க‌ளை ஏற்க‌ன‌வே சுர‌ண்டிக்கொண்டிருப்ப‌வர்க‌ளும், அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைமைதாங்கி ந‌ட‌த்த‌ச் சொல்ல‌வில்லை. உட‌னே இப்போது நினைவுக்கு வ‌ருவ‌து, Milk திரைப்ப‌ட‌ம். அதில் Milk சுப்ப‌ர்வைச‌ர் ப‌தவிக்காய் தேர்த‌லில் நிற்கும்போது ஓரினப்பாலாருக்கான‌ உரிமையை ம‌ட்டும் முன்வைக்க‌வில்லை, வ‌ய‌துபோன‌வ‌ர்க‌ளுக்கு, வேலை செய்யும் பெண்க‌ளுக்கான‌ என‌ -ச‌மூக‌ம் அதிக‌ம் க‌வ‌னிக்காது விட்ட‌வ‌ர்க‌ளுக்கான‌- உரிமைக‌ளை முன்வைத்துத்தான் தேர்த‌லில் நிற்கின்றார்.

(2) ச‌ச்சிதான‌ந்த‌ன் சுகிர்த‌ராஜ‌னின் க‌ட்டுரையை இங்கே மீள‌ப்ப‌திவு செய்த‌மைக்கு அவ‌ர் எழுதிய‌ அனேக‌ க‌ருத்துக்க‌ளோடு உட‌ன்ப‌டுவ‌தாலேயே. முக்கிய‌மாய் மேற்க‌த்தைய‌ நாடுக‌ள் எப்ப‌டியின்னும் கீழைத்தேய‌ நாடுக‌ளிலுள்ள‌வ‌ர்க‌ள் 'காட்டுமிராண்டிக‌ள்', தாங்க‌ள் ம‌ட்டும் க‌ட‌வுளுக்கு நிக‌ரான‌வ‌ர்க‌ள் என்ற‌ விம்ப‌த்தைக் க‌ட்டிய‌மைக்க‌ முற்ப‌டுவ‌தை இக்க‌ட்டுரை முக்கிய‌ப்ப‌டுத்துகின்ற‌து. அதேவேளை இவ்வாறான‌ ஒரு க‌ட்டுரையை, இங்கிலாந்து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌மொன்றில் பேராசிரிய‌ராயிருக்கும் ச‌ச்சிதான‌ந்த‌ன், ஆங்கில‌த்தில் எழுதி அங்குள்ள‌ ஏதேனும் ஒரு ப‌த்திரிகையில் பிர‌சுரிப்பாரா என்ற‌ கேள்வியும் வ‌ருகிற‌து.

Anonymous said...

/மற்றப்படி ஒற்றைப்போக்கான கலக எழுத்தாளர்கள் சொல்வது போல அதி உச்சமான சினிமா என்பதெல்லலாம்.../

தமிழன்-கறுப்பி,

இவ‌ர்க‌ளின் எல்லாவ‌ற்றுக்கும் 'ஆமாம்' போடாது உங்க‌ள் நிலையில் வைத்து ஆராய்ந்து க‌ட‌ந்துவ‌ர‌முடிகின்ற‌து அல்ல‌வா? அதுதான் ந‌ம்மெல்லோருக்கும் முக்கிய‌ம் என்று நினைக்கின்றேன்.