ஈழத்தில் மிகப்பெரும் அழிவுகள் நிகழ்ந்த மிக இருண்ட ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைவில் இருந்தாலும் நமது கரங்களிலும் மறைமுகமாக குருதி வடிய வடிய இயன்றவளவு பின்புறம் கரங்களைக் கட்டி மறைத்தபடி உரையாடிக்கொண்டிருக்கின்றோம். எமது குற்றவுணர்வை கொஞ்சமேனும் குறைப்பது என்பது இன்னும் இடைத்தங்கல் முகாங்களில் தங்கியிருக்கும் மக்களின் மறுவாழ்விற்கான முயற்சிகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்வதே என்பதே முதன்மையாக இருக்குமென நம்புகின்றேன். இலங்கை இராணுவமே அண்மையில் நடந்த போர் நடவடிக்கையில் தனது 6000 படைவீரர்களை இழந்தும் 10,000ற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும்போது, புலிகளின் இழப்பும், உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் எண்ணிக்கையும் இதைவிட இரண்டு மடங்கிற்கும் மேலானதாய் இருக்கக்கூடும். இதைவிட இரண்டு தரப்பாலும் தங்களின் வெற்றிக்காய்ப் பயன்படுத்தப்பட்ட மக்களின் இழப்புக்களும், உடல் சேதாரங்களும் கணக்கிடப்படக்கூடாதவையாக இருக்கும்.
ஆனால் இவ்வாறு ஒரு பேரழிவு நிகழ்ந்தபின்னும், நாம் இன்னும் 'அவர்கள் இவர்களைவிட.../ இவர்கள் அவர்களை விட 'நல்லவர்கள்' என்ற சிறுபிள்ளைத்தனமான அரசியலைச் செய்துகொண்டிருக்கும்போது மிகுந்த அலுப்பே வருகின்றது. ஈழத்தில் இருந்த அதிகார அமைப்புக்கள் மட்டுமில்லை, புலம்பெயர்ந்தவர்களும் கூட இந்த அழிவில் பெரும் பங்காற்றியிருக்கின்றார்கள் என்பது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆக இவ்வாறு பட்டவர்த்தமாய் எல்லோர் கரங்களிலும் கறையென நிரூபிக்கப்பட்டதன் பின்னாலும் இன்னமும் ஒரு அமைப்பைவிட இன்னொரு அமைப்பு நல்லது கெட்டது என விவாதிக்கொண்டிருப்பதில் எந்த நன்மையும் முக்கியமாய் தொடர்ச்சியான போரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாய் இருக்கும் மக்களுக்கு வந்துவிடப்போவதில்லை.
இன்று ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்தது குறித்து பல்வேறு நிலைகளிலிருந்து பல கட்டுரைகள் ஈழத்திலிருப்பவர்களாலும், புலத்திலிருப்பவர்களாலும் எழுதப்படுகின்றன. வாசிப்பவர்கள்,அவரவர் அவரவர்க்குப் பிடித்தமான கருத்துக்களை எடுத்துக்கொண்டும்/ ஏற்றுக்கொண்டும் பிறரது கருத்துக்களை மூர்க்கமாய் நிராகரிக்கின்றனர். உண்மைகள் என்பது ஒருபோதும் ஒற்றை உண்மையாக இருப்பதில்லை. சி.புஸ்பராஜாவின் 'ஈழப்போராட்டதில் எனது சாட்சியம்' எப்படி ஒரு பக்க உண்மைகளைக் கூறி பிறபக்கங்களை வெற்றிடமாக விட்டதோ, அவ்வாறே இன்று ஈழத்தில் இறுதியில் நிகழ்ந்தது என்ன என்பது மாதிரியாக எழுதப்படும் கட்டுரைகளை வாசிப்பதற்கான முன் நிபந்தனை அவசியமாகின்றது. இன்றைய காலத்தில் இல்லாவிட்டாலும், இனி வருங்காலங்களில் இக்கட்டுரைகள் அனைத்தும் ஒன்றாகத் தொகுப்படும்போதோ, இவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் விரிவாக எழுதும்போதோ பலவேறு உண்மைக்ள் வெளிப்படலாம்.
இன்றுவரை முக்கியமாய் ஈழத்தவர்களாகிய நாம் உணர்ச்சி அரசியலையே செய்து வந்திருக்கின்றோம். அந்த அரசியலின் உச்சமே புலிகளை மக்களிடமிருந்து பிரித்து அந்நியப்படுத்தியிருந்தது ஒருபுறம் என்றால், புலத்திற்கூட இந்த உணர்ச்சி அரசிய்லை விடுத்து மேலைநாடுகளில் நிகழும் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள புலிகளின் அரசியலைச் செய்தவர்களால் முடியவில்லை. அதனால்தான் இறுதிக்கட்டங்களில் தொடர்ச்சியாய் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்போடு நிகழ்ந்த எந்த ஊர்வலமோ/ஆர்ப்பாட்டமோ பெரிய மாற்றம் எதையும் ஈழத்தில் ஏற்படுத்தாது வீணே போயிற்று. புலி ஆதரவாளர்களுகு மட்டுமில்லை புலி எதிர்ப்பு அரசியலைச் செய்தவர்களும் புலி அரசியலை மட்டுமே சார்ந்து அரசியல் செயததால் இந்தப் பேரழிவு நிகழ்ந்து புலிகள் அழிக்கப்பட்டபின்னும் அடுத்து என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றார்கள். அந்தப் பெருங்குழப்பமே இதுவரை 'மாற்று' அரசியலைச் செய்தவர்களென அடையாளப்படுத்திய பலரை இலங்கை அரசு சார்ந்து இயங்கச் செய்திருக்கின்றது. முக்கியமாய் இந்த இரண்டு வகைத்தரப்பிலும் -முக்கியமாய் இயங்கிக்கொண்டிருந்தவர்கள்- கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் ஆகையால் ஈழத்தின் அண்மைக்கால நிகழ்வுகளை யதார்த்த நிலைகளில் வைத்து விளங்கிக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.
அண்மையில் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்குதலே இனி எம் மக்களுக்கான தீர்வைத் தரும் என்று நம்பிக்கையில் இருந்த நண்பர்களின் கலந்துரையாடலுக்குச் சென்றபோது, இலங்கை அரசாங்கம் செய்த பேரழிவுகளை ஏற்றுக்கொள்ளவும், உங்களின் இதுவரை கால அரசியலை விமர்சித்துக்கொள்ளவும் தயாரா என்று வினாவியபோது அவர்களால் தெளிவான பதில்களைத் தர முடியாதபோது எல்லோருடைய அரசியலும் சுத்திச் சுத்திச் சுப்பன்ரை வீட்டுப் பின்பக்கத்திலை என்பதாய்த் தெரிந்தது. அவர்கள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்க விரும்புவதால் அது செய்த படுகொலைகளை விமர்சிக்கவே தயங்குகின்றார்கள் என்கின்றபோது இவ்வாறுதானே புலிகளின் அனைத்துத் தவறுகளையும் 'மக்க்ளின் நலத்திற்காய்' விமர்சிக்கவேண்டாம் என்று கேட்ட புலிகளின் ஆதரவாளர்களின் நினைவும் வருகின்றது.
இனியான காலத்திற்கு புலிகளின் அரசியலில் இருந்து மட்டுமில்லை, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஈறாக எல்லா இயக்கங்களின் அரசியலிருந்தும் நாம் முதலில் விடுபடுதல் என்பது மிக முக்கிய முன் நிபந்தனையாக இருக்கிறது. அஹிம்சைப் போராட்டங்கள், சத்தியாக்கிரகங்கள் தொடங்கி ஆயுதப்போராட்டங்கள் ஈறாக நாம் அனைத்து போராட்ட வடிவங்களிலும் வீழ்ச்சியைச் சந்தித்தோம் என்றால், இதுவரை நாம் நடந்து வந்த/நடத்திவரப்பட்ட நம் போராட்ட பாதைகளின் அகத்திலும் புறத்திலும் மிகப்பெரும் பலவீனங்கள் இருக்கின்றதென்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இனியான போராட்டம் என்பது ஆயுதப்போராட்டமாய் எந்தப்பொழுதிலும் மாறிவிடக்கூடாது என்பதில் நாம் எல்லோரும் கவன்மாயிருக்க வேண்டியிருக்கின்ற அதேவேளை, இனி மக்களுக்குள்ளேயே மக்களுக்காய் மட்டுமே அரசியலை (கவனிக்க) யதார்த்தத்தளத்தில் முன்மொழிகின்றவர்களை மட்டுமே நாம் கவனப்படுத்தியிருக்கிறது. முக்கியமாய் அதை -எல்லா நிலைகளிலும் தங்களைத் தாரைவார்த்த- ஈழத்திலிருப்பவர்களே செய்யவேண்டும்; தங்களுக்கு எது வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதைச் செய்வதற்கான தோழமைக் கரங்களை நீட்டுவதே புலம்பெயர்த்த தேசத்திலிருப்பவர்களுக்கு இருக்கவேண்டும். அவர்களைக் காரணங்காட்டி தங்கள் தலைகளில் கிரீடங்களைச் சூட்டி சிம்மாசனங்களில் இருக்கவிரும்பும் புலத்திலிருப்பவர்களின் ஆசைகளை நாம் முற்றுமுழுதாக நிராகரித்தாக வேண்டியிருக்கிறது
3 comments:
Thanks for this post.
Thanks Selvanayaki. I plan to write series of current events. Lets see how it will go.
D.J....
by accidenly I read this....
really good...
yes! we have to think something new...
in everything.....to fight for freedom...
thanks
MeRaBaRaTi
Post a Comment