"சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்"
(அமைதியின் மணம், 2001)
சில தினங்களுக்கு முன் நண்பர்களாய்ச் சேர்ந்து கோப்பிக்கடையொன்றில் உரையாடிக்கொண்டிருந்தோம். கோட்டோவியங்கள் வரைகின்ற நண்பரொருவர் பல வருடங்களுக்கு முன் தான் வரைந்த ஒவியமொன்றைச் சுட்டிக்காட்டி, இந்த ஓவியம் அண்மையில் கண்கள் கட்டப்பட்டு பின் தலையில் சுடப்பட்டு கொல்லப்படுகின்ற இளைஞனின் வீடியோ காட்சியுடன் ஒப்பிடக்கூடியதென்றார். சமகாலத்தில் நிகழ்ந்த இக்கொடூரத்தை ஆவணப்படுத்தல் முக்கியமென்ற வகையில் அவ்வோவியம் விரைவில் வரப்போகின்ற தனது தொகுப்பிற்கு முன்னட்டையாக வரவிரும்பியதாகக் கூறினார். எனினும் பதிப்பாளர் இவ்வாறான சாயலுடைய ஓவியம் ஏற்கனவே வெளிவந்ததால் வேண்டாமென கூறியிருக்கின்றார்.
நான் இந்த வீடியோ காட்சியைப் பார்க்கவில்லை; இந்த வீடியோ என்று மட்டுமில்லை ஈழத்தில் இறுதிப்போரில் நிகழ்ந்த கோரங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் என்ற எதையும் பார்க்கவில்லை. இவற்றை வேண்டுமென்று தவிர்க்கவேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல; அவை தரும் மன உளைச்சல்களைத் தாங்க முடியாது என்என்பதால் மட்டுமே. போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் இங்குள்ள பத்திரிகைகள் பலதின் முகப்பில் இவ்வாறான புகைப்படங்கள் வெளிவந்தபோதும் அவற்றைப் புரட்டிப் பார்க்கத் துணிவு வந்ததில்லை.
கண்கள் கட்டப்பட்டு இந்த இளைஞன் அவனின் பின் தலையில் கொல்லப்படும் வீடியோவை -மொன்றியலுக்கு பயணித்தவேளையில்- ஒரு பதினான்கு வயதுப் பதின்மன் தனது பேஸ்புக்கில் வைத்துக் காட்டியபோது, I dont have courage to watch it, have you watched it? என்று நான் கேட்டபோதுபோது அவன் தான் அதைப் பார்த்ததாகக் கூறினான். அடுத்த தலைமுறைக்கு எமது தலைமுறை எதை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்ற பயம் எனக்குள் படிந்தது.
ஆனால் இந்த வீடியோ காட்சியைப் பார்க்கவில்லையே தவிர, இந்த வீடியோ சார்ந்து எழுதப்பட்ட பதிவுகளையும், கவிதைகளையும் விரிவாக வாசித்திருக்கின்றேன். அதைவிட ஒரே 'பொய்யை' திரும்பச் திரும்பச் சொன்ன சுகனின் கோயபஸ்தனத்தையும் கவனித்திருக்கின்றேன். சுகன் ஒரே பின்னூட்டத்தை பல்வேறு இணையத்தளங்களில், 'இது புலிகளின் வதைக்கூடத்தில் புளொட் உறுப்பினர்களைக் கொன்ற வீடியோ காட்சி'யெனக் கூறியபோது, இருக்கவும் சாத்தியமிருக்கிறதென யோசிக்கக்கூடியவனாக இருந்திருகின்றேன்.
புலிகளின் வரலாறு அப்படியொன்றும் சொல்லிக்க்கூடியதும் அல்லவே. அதைவிட இறுதிப்போர் நடந்தகாலக்கட்டங்களில் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட பல இணையத்தளங்கள் கிசுகிசுப்பாணியினால் பல செய்திகளை வெளியிட்டு தமது 'நம்பகத்தன்மையை' வெளிக்காட்டியுமிருக்கின்றார்கள். உதாரணமாய் கற்சிலைமடுக்குளம் உடைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டதென்றும், இராணுவம் கைதுசெய்த இளைஞர்களின் உடலுறுப்புக்களை உயிரோடு இருக்கும்போது திருடுகின்றதென்றும்...என இன்னும் பற்பல செய்திகள். பொய்களைப் பரப்புவதற்காக எடுக்கப்பட்ட சிரத்தையைக் கூட, புலம்பெயர் மக்களிடம் களத்தில் நிகழும் உண்மைகளை வெளிச்சொல்ல எடுக்கவில்லை. தீபன், கடாபி, விதூஷா, துர்க்கா போன்ற புலிகளின் நீண்டகாலத் தளபதிகள் இறந்தபோதுகூட உண்மையைச் சொல்லவில்லை; மிகக் கவனமாக மறைக்கப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியான மவுனமே புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபோதும் நீட்சித்து... களத்தில் தாம் நம்பியதற்காக (அது சரியா அல்லது பிழையா என்பது ஒருபுறமிருக்க) இருந்தவர்களுக்காக கூட மனம் விட்டு அழக்கூடச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக 100நாட்களுக்கு மேலாக இரவும் பகலுமாய் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்தப் பக்கம் நடந்துபோனாலே அங்கேயிருந்த தாய்மார்கள் -அழும் தொனியில்- ஒலமிட்டுக்கொண்டிருந்த குரலைக் கேட்டால் உங்களையும் உள்ளிழுக்கக்கூடியதாக மனதைப் பிசையும். தமது பிள்ளைகளுக்காக -அது புலியாக இருந்தாலென்ன, புலியன்றியிருந்தாலென்ன- அந்த அம்மார்களின் உண்மையான கதறல்களுக்கு 'சர்வதேசம்'தான் செவி சாய்க்கவில்லை; ஆற்றாமையோடு விட்டுத்தள்ளுவோம்.ஆனால் உண்மைகளை உண்மைகளாக சொல்லாது தவிர்த்து, நம் அம்மாமார்களின் கண்ணீரோடும் கதறலோடும் கூடத்தானே அரசியல் நடத்தியிருக்கின்றோம்? எங்கள் அம்மார்களே எமதெல்லாம் முடிந்துவிட்டது; நம்மிடம் இப்போது மிச்சமிருப்பது கண்ணீரும், குருதியும், கறைகளும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லாது தவிர்த்த அறமற்ற செயலுக்காய் நாம் யாரிடம் மன்னிப்புக் கோரப்போகின்றோம்?
இதைப் புலிகளின் ஆதரவாளர்கள் செயதபோது, அது நமக்குப் புதிதானது அல்லவே. ஈழப்போராட்ட வரலாற்றில் இதை தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தாம் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவர்களாக வேடமிட்டுக்கொண்டு, தாம் மறுத்தோடிகள் எனவும் எதிர்ப்பு அரசியலே தங்கள் அரசியலே என்று கூறிக்கொண்டவர்கள் இவ்வாறான ஒரு கோயபஸ்தனத்தில் இறங்கிக்கொள்கின்றபோது, நாம் அவர்கள் வெளியீட்டு விழாக்களில் ஒரு கலகமாய் முன்வைத்த விளக்குமாறாலும் தும்புக்கட்டைகளாலும் திரும்ப விளாச வேண்டியிருக்கிறது. ஒரு பொய்யைச் சொல்வதைவிட மவுனமாய் இருப்பது எவ்வளவோ மேலானது. தங்களால் எது உண்மையென்று தெளிவாக உறுதி செய்யத்தெரியாவிட்டால் கூட அதை ஏதோ தாங்களே நேரடியாகப் பார்த்ததாகப் பார்த்தாக பாவனை செய்துகொண்டு எழுதுகின்ற பலர் இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிக் கூறத்தேவையில்லை.
இந்த இளைஞன் பின்பக்கத்தில் மிக அண்மையாக வைத்துச் சுடப்படுகின்றதை இலங்கை இராணுவம் செய்யவில்லையென தொடர்ச்சியாக சுகன் மறுதலித்துக்கொண்டேயிருந்தார். அந்த எரிச்சலைப் பலரும் பல்வேறு வகையில் சுட்டிக்காட்டியிருந்தனர். முக்கியமாய் ஷோபாசக்தி 'பிறழ் சாட்சியம்' என்று சுகனின் நேர்மையீனத்தை அறம் சார்ந்து அணுகியபோதும் அங்கேயும் தேய்ந்த ஒலிநாடா போல கூறிய ஒன்றையே திரும்பவும் சுகன் முனகிக்கொண்டிருந்தார். வளர்மதி தொடர்ச்சியாக இந்தப்பின்னூட்டங்களைத் தொகுத்து ஏன் இன்னும் முதற்பின்னூட்டம் எழுதிய ஜான் மாஸ்ரர் என்பவர் இதைத் தெளிவாக்க திரும்ப வரவில்லையென ஒரு இணையத்தளத்தில் வினாவியிருக்கின்றார் (அந்த இணைப்பு எங்கென மறந்துவிட்டது). இந்த வீடியோவில் புலிகளால் செய்யப்பட்டதுதான் என்று சுகன் கூறியதற்கு முன்வைத்த முக்கிய வாதம், இதிலிருப்பவர் ஒரு புளொட் உறுப்பினரென ஜான் மாஸ்டர் எழுதியிருக்கின்றாரென்ற ஒற்றைப் பின்னூட்டம்.
எப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதைப் போலவோ, இல்லாவிட்டால் எல்லாவற்றையும் சந்தேகி என்பதற்கிணங்கவோ சுகனின் கேள்விகளை எனக்குள் வைத்துக்கொண்டிருந்தேன். இந்த வாரவிறுதியில் எனக்கான கேள்வியைத் தெளிவுபடுத்தும் சந்தர்ப்பம் வாய்த்தது. 'வியூகம்' சஞ்சிகை வெளியீட்டின்போது சுகன் குறிப்பிடுகின்ற ஜான் மாஸ்டரைச் முதன் முதலில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சுகனின் இந்தப் பின்னூட்டம் குறித்தும், உண்மையில் இந்த வீடியோவில் இலங்கை இராணுவம் கொலை செய்யவில்லையா என்று வினாவியபோது, முதலில் தனக்கு சுகனோடு நேரடியாக எந்தப் பரீட்சயமில்லையெனவும், வீடியோவில் இருப்பது புலிகள் கொல்கின்ற புளொட் உறுப்பினர் என்று தான் எங்கும் கூறவில்லையெனக் குறிப்பிட்டார்.(அத்துடன் தான் இது குறித்து எதுவும் எங்கும் எழுதவில்லையெனவும் கூறியிருந்தார்). ஜான் மாஸ்டரும், இன்னொரு நண்பரும் 'ஜான் மாஸ்டர்' என்ற பெயரில் அவருக்குப் பிடிக்காத 'இன்னொரு நபரே' இவ்வாறான போலிப் பின்னூட்டங்களை எழுதிக்கொண்டிருக்கின்றாரென தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
ஆக மறுத்தோடி சுகன் இப்போது இதற்கு என்ன காரணம் சொல்லப்போகின்றார்? ஒரு பொய்யை உண்மையாகச் சொல்லும் திறமை புலிகளின் ஆதரவாளர்களுக்கு மட்டுமில்லை; புலி எதிர்ப்பரசியல் செய்பவர்களுக்கும் இலகுவாகக் கைவருகின்றது என்பதைப் பார்க்கும்போதும், இந்த மறுத்தோடி அரசியல் என்பது புலிகளின் அரசியலுக்கு எதிராக இருந்ததேயின்றி உண்மையான எதிர்ப்பரசியலாக இருக்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஜான் மாஸ்ரர் சொல்வதை நம்பவேண்டும் என்ற அவசியம் கூட இப்போதில்லை.
இன்று மிக உறுதியான ஆதாரத்தோடு இந்த வீடியோ உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டு செய்தி வந்திருக்கின்றது. ஆதாரத்தைப் பார்க்க: Sri Lankan war crimes video is authentic, Times investigation finds