Monday, December 04, 2006

பாதித்தது....!

சில மாதங்களுக்கு முன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரேசிலிய இளம்பெண் தனது அனுபவங்களை டயரிக்குறிப்புக்களாய் எழுதி அது புத்தகமாக்கப்பட்டு சர்ச்சைக்குரியதாயிருக்கின்றது என்று வந்திருந்த பத்திரிகை குறிப்பை கத்தரித்து வைத்திருந்தேன். Portuguese மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு அடுத்த வருடம் பெப்ரவரி வரை காத்திருக்க வேண்டும்.

இவ்வாறான நூல்களை முழுமையாக வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் உண்டெனினும், வாங்கவேண்டிய புத்தகங்களின் வரிசையில் இதையும் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஏற்கனவே Hip-Hop, R&B பாடல்களுக்கு வீடியோவில் பின்னணி ஆடும் ஒரு பெண் எழுதிய சுயசரிதையை (Confessions of a Video Vixen) வாசிக்கத்தொடங்கி இடைநடுவில் நிறுத்தியிருந்தேன். உடலுறவு என்பது குறித்த புரிதல் இல்லாமலே பதினமத்தின் ஆரம்பத்தில் எப்படி அவர் புணர்ச்சியிற்கு -குழுவாய்- ஆளாக்கப்பட்டார் என்பதை விபரித்ததை வாசித்தபின் -அதற்கு மேல் தொடர்ந்து வாசிக்கமுடியாது- என்ற மன அவதியில் இடையிலேயே மூடி வைத்துவிட்டேன்.

இன்று பிரபலமாய் இருக்கும் ராப் பாடகர்கள் பலரின் -நமக்குத் தெரியாத இன்னொரு பக்கம்- பற்றி அதில் நிறைய எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முக்கியமாய் தன்னைப் போல ராப் கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீட்டை விட்டு ஓடிவரும் இளம்பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்பதற்கும், வெளியே தெரியும் வர்ணவெளிச்சங்கள் மட்டுமில்லை, நாமறியாத/நாம் நினைத்தே பார்க்கமுடியாத இருட்டுப் பக்கங்களும் ராப்பில் இருக்கின்றன என்பதை பெண்களுக்கு தெரியப்படுத்தவுமே... தான் இந்தச் சுயசரிதையை எழுதியதாக அந்தப்பெண் நூலின் அறிமுகக்குறிப்பில் எழுதியிருந்தார். அதேவேளை கடந்துவந்த பாதையை அசிங்கம்/இழிவு என்று பார்க்காமல் அந்தந்தப்பொழுதுகளில் தனக்குப் பிடித்ததைச் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தனது தவறுகளையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நூலை -நான் வாசித்த அளவு வரை- வளர்த்துச் சென்றிருந்தார்.

பாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் என்று ஏற்கனவே வாசித்திருந்தேன். இப்போது அந்நூலுக்கு அ. முத்துக்கிருஷ்ணன் நல்லதொரு திறனாய்வு செய்திருந்தது கண்ணில்பட்டது. கீற்றுத் தளத்திலிருந்து நன்றியுடன் இங்கே பதிகின்றேன்..


நிர்வாணத்தின் நிழலும் மனமும்
-அ. முத்துக்கிருஷ்ணன்


ஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தை பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ருபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழிலாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்த புத்தகம் Fictionல் என்.எஸ்.மாதவன் மற்றும் Non-Fictionல் எம்.பி.பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது)

கணவனின் மரணத்துக்கு பிறகு தனது மாமியார் ஜமீலாவின் குழந்தைகளை பராமரிக்க தினமும் ஐந்து ரூபாய் கேட்கிறார். அது வரையில் ஜமீலா வேலை பார்த்த தட்டோடு நிறுவனத்தில் பெற்ற தினக்கூலி ரூ.4.50. கணவரின் மரணம் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தும் முதலாளி கைகளை விரித்து விட்டார். வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாக தனது நண்பர் அறிமுகப்படுத்திய ரோசிச்சேச்சியை நாடுகிறார். அன்றைய இரவை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால் ஐம்பது ரூபாய் தருவதாக ரோசிச்சேச்சி கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஜமீலா மனதில் தோன்றியது - அடுத்த பத்து நாட்களுக்கு தனது குழந்தைகள் நிம்மதியாக பசியாறும் என்பது மட்டுமே. உடனடியாக சம்மதித்து ரோசிச்சேச்சியுடன் திருச்சூரிலுள்ள ராமா நிலையத்துக்கு சென்றார். ராமா நிலையம் திருச்சூரிலுள்ள அரசாங்கத்தின் தங்கும் விடுதி. அங்கு தான் கேரளாவின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கடி தங்குவார்கள்.

அன்று அந்த அறையில் இருந்தது மூத்த காவல்துறை அதிகாரி. பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரிவுச்சார விழா பரிசாக ஜமீலாவை வரவழைத்திருந்தனர் அவருடைய சக அதிகாரிகள். அந்த நபர் ஆடைகளை களைய சொன்னதும் ஜமீலா சம்மதிக்க மறுத்தார், எப்படியோ ரோசிச்சேச்சி தலையிட்டு ஜமீலா தொழிலுக்கு புதுசு என விளக்கி அவரை சமாதானப்படுத்தினார். அந்த தகவல் காவல் துறை அதிகாரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு பிறகு அவருடைய ஓட்டுநர் ஜமீலாவை நிர்பந்தித்தார். இரவு பேருந்து வசதிகள் வல்லாததால் ராமா நிலையத்திலேயே இருவரும் தங்கிவிட்டார்கள்.

விடியல் புதிய அனுபவங்களை தந்தது - அன்று இந்த தொழிலின் பாலப்பாடத்தை கற்றுக் கொண்டார் ஜமீலா. ரோசிச்சேச்சியையும், ஜமீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஜமீலா அடித்து துன்புறுத்தப்பட்டார். இந்த செயல் பின்நாட்களில் வாடிக்கையானது. வாடிக்கையாளர் இல்லாமல் இந்த தொழில் இயங்காது. உடலுறவு கொள்ள பணத்துடன் வருபவர் அவரே. எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரை பாதுகாக்கும் கடமையை காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டாளரை அரசு பாதுகாப்பது இயல்பாகிப் போனது. பணத்தை எப்படியோ தன் மாமியாரிடம் சேர்த்து விட்டார் ஜமீலா. இந்த தகவல் வெளியே தெரிய வர அவர் குடியிருந்த பகுதியிலிருந்து துரத்தப்பட்டார். தொழிலுக்கு போன முதல் நாளே தனது வேலையையும் வீட்டையும் இழந்தார் ஜமீலா. குழந்தைகள் நிம்மதியாய் மாமியாரிடம் வளர்ந்தனர்.

பாலக்காடு மாவட்டத்திலுள்ள கம்பெனி வீடுகளில் பல காலமிருந்தார். அது மிகவும் பாதுகாப்பான இடம். பெரிய நிலப்பரப்பில் விஸ்தாரமான வீடுகள். அதை தரவாடு என்று அழைப்பார்கள். பெண்கள், காப்பாளர்கள் மற்றும் தரகர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். தரவாடுகளின் முன் பகுதியில் பல மாடுகள் கட்டிக் கிடக்கும். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அதுமாடுகள் வாங்கி விற்கும் இடம் போலவே காட்சியளிக்கும். விஷயம் அறிந்தவர்கள் அங்கு வந்து தரகர்களிடம் விலை பேசுவார்கள், தொகை திகைத்தால் அவர்கள் வீட்டினுள் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.

தன்னை இந்த தொழிலிருந்து விடுவித்து நிம்மதியான குடும்ப வாழ்க்கை நோக்கி சென்றிட பல முறை முயற்சித்தார் ஜமீலா. இருமுறை திருமணம் செய்தார். எந்த வாழ்வும் நிலைக்காமல் மீண்டும் தொழிலுக்கு வந்தார். மூன்றாவது திருமணம் 12 ஆண்டுகள் நீடித்தது. கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, தனது 17 வயது மகளுடன் நடுத்தெருவில் நின்றார். இந்த முறை தொழிலுக்கு செல்லும் பொழுது புதிய நிர்பந்தமாக தன் மகளின் அனுமதியை பெறுவதில் உணர்ந்தார் ஜமீலா. அனுமதி வாங்கும் வரை அந்த பகுதியிலிருந்த கோவில் மற்றும் மசூதியின் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுத்த குழந்தைகளை பராமரித்தார்.
பாலியல் தொழிலாளர் இயக்க பணிகளில் ஈடுபட்டார். கேரளாவிலுள்ள பிற சமூக-அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் சங்கம் பல பிரச்சனைகளுக்காக போராடியுள்ளது. அப்படியான பொது தளங்களில் புறக்கணிப்பும், அவமரியாதையுமே காத்திருந்தது. இந்த இயக்கத்தில் கேரளாவில் மட்டும் 8000 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

தாய்லாந்தில் நடந்த ஆவணப்பட பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஜமீலாவுக்கு கிட்டியது. அவருக்கு அங்கு பட்டரை முடிவில் வீடியோ காமிரா வழங்கப்பட்டது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் தொழிலாளரின் - ஒரு நாள் வாழ்வு என்ற ஜமீலாவின் முதல் ஆவணப்படம் 2003ல் வெளியானது. தற்சமயம் சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் பயணித்து பல கருத்தரங்குகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.

இந்த சமூகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்காக பேசம் குரல்களே இல்லை. அந்த தொழிலின் அவல நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்கிறார் ஜமீலா. இந்த மௌனத்தை தகர்க்கவே நான் ஒரு பாலியல் தொழிலாளி என உறக்க அறிவிக்கிறார். விஞ்ஞானி தனது மூளையின் சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்கிறார். ஆசிரியர் தனது வார்த்தை ஜாலங்களை, தொழியலாளர் தனது கரங்களை அது போலவே பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடம்பை. ஜமீலா தனது உள் உணர்வுகளை மிகத் தெளிந்த மொழியில் சுலபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். திருமணத்தின் போதாமை நிறைந்த வாழ்க்கையில் பெண்கள் சிறைப்பட்டு கிடக்கிறார்கள். தனது பிடிக்காத ஆணுடன் கட்டாயமாக வாழ் நிர்பந்திக்கச் செய்கிறது 95% குடும்ப வாழ்க்கை. அங்கே துன்பம், அவமானம், வன்கொடுமை, மற்றும் வீட்டு பலாத்காரம் நிரம்பிக் கிடக்கிறது என்கிறார்.

52 வயதாகும் நளினி ஜமீலா மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார். அவருடைய அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து எழுத்துப் பிரதியை எடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் கோபிநாத். ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

நளினி ஜமீலா பத்திரிகையாளர் சந்திப்புகளில் பல கேள்விகளை எதிர்கொள்கிறார். அவரிடம் எல்லா கேள்விகளுக்கு எந்த பயமோ, கூச்சமோ இல்லாமல் தெளிந்த பதில் காத்திருக்கிறது. தன் பெண் குழந்தை இஷ்டபட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் அதை தடுத்திருக்க மாட்டேன் என்றார் ஒருமுறை. 20 ஆண்டுகள் இந்த தொழில் ஜமீலாவை பொறுத்தவரை இயந்திரத்தனமான கலவியாகவே இருந்தது. மிகவும் அபூர்வமாகவே மனதுக்கு பிடித்த நபர்களை சந்தித்துள்ளார். ஜமீலாவை காதலித்த பலரை மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்பங்கள் நோக்கி அனுப்பி உள்ளார். ஜமீலாவின் மணம் சிலரிடம் அரூபமாக நெகிழ்ந்து, கசிந்துள்ளது.

பெரும்பகுதியானவர்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று திரும்பவேயில்லை. இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவித கொண்டாட்ட மனநிலையை வந்தடைந்துள்ளார். பல புதுவித அனுபவங்கள், புதிய வாடிக்கையாளர்கள். திருச்சூர் - திருவனந்தபுரம் மற்றும் கோச்சி - கோழிக்கோடிடையே செல்லும் ரயில்களில், குளிருட்டப்பட்ட பெட்டிகளில் சில வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டுடன் காத்திருக்கிறார்கள். ஜமீலாவுடன் தங்கள் மனச் சுமையை பகிர்ந்து கொள்ள மட்டுமே சிலர் அழைக்கிறார்கள். பலவிதமான ஆண்களை, வெம்பிக் கிடக்கும் மனங்களை, சந்தித்த ஜமீலா இந்த சமூகத்தில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை, ஆண்களின் மனங்களில் வெவ்வேறு விதமான பெண்களை சந்திக்கும் ஆவல் அடங்காது என்கிறார்.

சந்தை கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் இந்த உலகத்தில் பெண் போகப் பொருளாக ஒவ்வொரு நிமிடமும் நுகரப்படுகிறாள். சோப்புக் கட்டி முதல் வலை உயர்ந்த கார்கள் வரை பெண்ணின் சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியே வியாபாரம் நடக்கிறது. மாறும் கற்பு எனும் புனிதப் போரை நிகழ்த்த கலாச்சார போலிஸ்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிட்நைட் மசாலாவுக்கு விளம்பரதாரர்களை தேட மேலதிகாரிகள் உத்தரவின் பெயரில் எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் தெருக்களில் அலைகிறார்கள். சதை விற்பனையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் போட்டா போட்டி.

பாலியல் தொழில் பெண்ணின் ஒழுக்கம் தொடர்புடையதாக சமூக மனதில் பதிந்துள்ளது. இந்த தொழிலுக்கு வரும் ஆண் குற்றவாளியாகவோ, ஒழுக்கக்கேடானவனாகவே கருதப்படுவதில்லை. விடுதி அறையில் பிடிபடும் பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது. ஆண்களை தப்பித்தோட அனுமதிக்கிறது. நாம் என்றும் அழகன்கள் கைது என்ற செய்தி பத்திரிகைகளில் பார்த்ததில்லை. இது ஆண்களின் மேலாதிக்கத்தில் இயங்கும் சமூகம். சட்டம், அரசு, காவல்துறை, மதம் என எல்லா ஆண் படைத்தவை ஆணுக்காகவே படைத்தவை. இந்த நிலை நீடிக்கும்வரை ஆணுறை இல்லாமல் ஆண் அலையலாம்.

எல்லா ஊர்களில் இருக்கும் கோவில் நிர்வாக விடுதிகள் தான் மலிவு விலையில் கிடைக்குமாம் - அதில் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் விடுதி சிறந்தது, செல்போன்களின் வருகை தொழிலை லகுவாக்கி உள்ளது என்கிறார் ஜமீலா. பாலியல் தொழிலாளியாக உருமாறியிருக்காவிட்டால் சமூக சேவகராக, இயக்குனராக, எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்க முடியாது என்கிறார் சிரித்துக்கொண்டே. முன்பு என்னை தெருவில் நடக்கும் பொழுது தேவடியா மகள்னுதான் கூப்பிடுவாங்கள், இப்ப அப்படி இல்லை, இப்ப நான் நளினி ஜமீலா மகள் என்கிறார் பெருமிதத்துடன் ஜீனா.

பலவித நிறங்களோடு ஒவ்வொரு நாளும் ஜமீலாவுக்கு புதியதாய் விடிகிறது. வழக்கமான வாழ்வில் கசப்புகள், குரோதங்கள், சந்தோஷங்களுடன் பயணிக்கிறார் ஜமீலா. இருப்பினும் அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல் சலசலத்து ஓடுகிறது. என்னால் என் குழந்தைக்கு யார் தகப்பன் என தீர்மானிக்க இயலும். அவர் போலீஸ் அதிகாரியா அல்லது மாஜிஸ்ட்ரேடா என - ஜமீலா கூறிக்கொண்டே செல்லும் பொழுது குடும்பம், சமூகம், மதம் என எல்லா கட்டுமானங்களும் அதிர்வுற்று நிற்கின்றன.

2 comments:

Anonymous said...

//ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.//

;-)

Thanks for pointing, nice article.

--FD

இளங்கோ-டிசே said...

Thankx for your comment FD.