Thursday, May 17, 2007

அலறியின் இரண்டு தொகுப்புகள்

அண்மையில் வந்த குங்குமம் இதழ்களில் அனாரின் கவிதைகள் நாலைந்து தொடர்ந்து வந்ததாய் நினைவு. பிறகு அலறியின் ஒருசில கவிதைகள் பிரசுரிக்கப்பட்டதையும் வாசித்திருக்கின்றேன். குங்குமம் இதழின் வணிகச்சூழல் குறித்த விமர்சனம் ஒருபுறமிருந்தாலும், வெகுசன இதழினூடாக ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைகள் பரவலான வாசிப்பைப் பெறுவது நல்லதொரு விடயம் என்று சமரசம் செய்யமுடிந்திருந்தது.

கீழே காலச்சுவட்டில், ராஜ்மார்த்தாண்டன் அலறியின் கவிதை தொகுப்புகளுக்கு எழுதிய விமர்சனத்தை காலச்சுவடு மே இதழிலிருந்து நன்றியுடன் பதிவுசெய்கின்றேன். ராஜ்மார்த்தாண்டன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து அக்கறையுடன் வாசித்து அறிமுகஞ் செய்வது குறித்து தனிப்பட்ட மதிப்பு அவரிடம் எனக்குண்டு.. அத்தகைய மதிப்பு -பலவிதங்களில் முரண்பட்டாலும்- ஜெயமோகன்,தேவசகாயகுமார் போன்றவர்கள் மீதும் உண்டு. ஆனால் என்னை தனது எழுத்துநடையால் வசீகரிக்கும் படைப்பாளியான, விழித்திருப்பவனின் இரவிலிருந்து, தத்துவஞ்சார்(?) கட்டுரைகளை இன்று விகடனில் எழுதிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு விழித்திருக்கும் இரவிலாவது வால் நடசத்திரமாய் ஈழப்படைப்புகள் தென்படாதா என்று நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். உடனே, வெங்கட்சாமிநாதன் சொன்னமாதிரி,ஏன் தமிழக எழுத்தாளர்களின் கடைக்கண் பார்வை ஈழ/புலம்பெயர் படைப்புகளுக்கு கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? என்ற வாசகத்தோடு எவரும் ஓடிவரவேண்டாம்.. அந்தப் புரிதல் எப்போதோ வந்துவிட்டது, ஆனல் எழுத்துக்களால் நெருக்கமான ஒருவர் என்ன கூறுவார் என்று எதிர்பார்ப்பது ஒரு சாதாரண வாசகரின் இயல்பாய் இருக்குமல்ல்வா :-)?

(~டிசே)


மதிப்புரை: ராஜமார்த்தாண்டன்

பறவை போல சிறகடிக்கும் கடல்
முதல் பதிப்பு: ஜூலை 2006
பக். 36. ரூ. 100

பூமிக்கடியில் வானம்
முதல் பதிப்பு: மார்கழி, 2005
பக். 58. ரூ. 100
(கவிதைகள்)

அலறி

வெளியீடு:
மெஸ்றோ பப்ளிகேஷன்
கல்முனை, ஸ்ரீலங்கா

அதிகார, இன வெறி கொண்ட அரசின், அமைப்புகளின் வன்முறைகளால் மனித உயிர்களும் வாழ்க்கை இயல்புகளும் பாழ்பட்டுப்போவதை மிகுந்த துக்கத்துடனும் இயலாமையுடனும் தன் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் அலறி. சிலபோது நம்பிக்கையும் சிலபோது நம்பிக்கையின்மையும் கவிதைகளில் வெளிப்படுவது இன்றைய ஈழத்துச் சூழலில் இயல்பானதே. இந்த வலிகளும் துக்கங்களும் ஏக்கங்களும் இயலாமையும் கோபமும் பெரும்பாலும் ஈழத்துக் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளிலும் வெளிப்படும் உணர்வுகள்தான். இவ்வுணர்வுகள் அலறியிடம் எவ்வாறு கவிதைக் கலையாக உருமாற்றம் பெற்றுள்ளன என்பதே ஒரு கவிதை வாசகன் பொருட்படுத்த வேண்டிய விஷயம், அடிப்படை அம்சம்.

அலறியின் வாழ்க்கைச் சூழல் அரச பயங்கரவாதத்துடன் சகோதர இன மோதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது கவிதைகளின் மூலம் அறியலாம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போதுதான் 'ஒருவன் கொல்லப்படும் போது' கவிதையில் வெளிப்படும் துக்கமும் விரக்தியும் இயலாமையும் பேரதிர்ச்சியுடன் புலப்படும். அந்தக் கவிதை -
ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது
குருதி பெருகி வடிந்து
பச்சை பசும் புல் தரை
செவ்வரத்தம் பூக்கள் போலாகப் போகின்றது
மலக் குழிக்குள் பதுங்கியிருக்கும்
ஈக்கள்
இரட்டைச் சிறகு முளைத்துப் பறந்து
மொய்க்கப் போகின்றன
இன்னும்
மல்லிகை மணம் கசியும் காற்று
பிணநெடி சுமந்து வீசப் போகின்றது
அழும் குரல்கள் கணப் பொழுதில்
ஓய்ந்துவிடப் போகின்றன
இவை தவிர
ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது
இன்னுமொருவன் கொல்லப்படுவான்
என்பதைத் தவிர.
(பறவை போல சிறகடிக்கும் கடல்; ப . 26)

நித்தமும் மரணத்துள் வாழும் அவல வாழ்க்கையிலிருந்தும் அதன் தீராத வலியிலிருந்தும் விடுதலை கிடையாதா என்ற இயலாமை கலந்த ஏக்கமும் அதன் காரணமான துக்கமும் விரக்தியுடன் வெளிப்படும் கவிதை இது. எல்லாவிதமான அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உயிர்ப் பலிகளுக்கும் எதிரான உணர்வை வெளிப்படுத்தும் கவிதை. படிமங்கள், குறியீடுகளின் பின்புலமோ, சூசகமான வெளியீட்டுப் பாங்கோ இல்லாத நேரடியான இந்தக் கவிதை, சமீப காலத்தில் தமிழில் வெளியான சிறந்த கவிதைகளில் ஒன்றெனக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது.

ஈழத்தின் வடபகுதியிலிருந்து முஸ்லிம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது குறித்தும் புலிகள்-முஸ்லிம் தமிழர்கள் பிரச்சினை குறித்தும் மறைந்த கவிஞர் சு. வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் போன்றோர் தங்கள் உணர்வுகளைக் கவிதைகளில் கனத்த மனத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் பார்வை ஒரு பார்வையாளனின் அனுபவம் சார்ந்தது; அலறியின் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் அனுபவம் சார்ந்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். உதாரணத்துக்குத் 'துயில் கொள்ளா இரவு' கவிதை.
அங்கிருந்து அல்லது
எங்கிருந்தோ
அவர்கள் வருவதாக
கிக்கிலி கத்திப் பறந்த
ஓர் இரவில்,
பெரும் அச்சத்துடன் கண் விழித்துப் பதுங்கியிருக்கும் கவிதைசொல்லி, அதிகாலையில் பின்வருமாறு கேட்டுக் கொள்கிறார்:
இருள் விலகி
அதிகாலை அண்மித்தும்
தூக்கம் தொடாது
கண்கள் கனத்துப் பாரிக்க
மங்கிக்கரையும் வெள்ளிகளிடம்
வினவினேன்
அவர்கள் இரவும்
இப்படித்தான் கழியுமோ?
ஜீப் வண்டி வருகையில்.
(பூமிக்கடியில் வானம்; பக் . 13 - 14)

தமிழில் புதுக்கவிதை மேலை நாட்டு நவீனக் கவிதையமைப்பின் தாக்கத்தினால் தோற்றம் கொண்டதெனினும் காலப்போக்கில் அது சங்கக் கவிதை மரபின் தொடர்ச்சியாகவே வெளிப்படலாயிற்று. சங்கக் கவிதையின் கச்சிதமான வடிவமைப்பையும் சூசகத்தன்மையையும் தமிழகத்துக் கவிதைகள் உள்வாங்கிக்கொண்டன. இயற்கை சார்ந்த பின்னணியை - பின்புலத்தை - ஈழத்துக் கவிதைகள் உள்வாங்கிக்கொண்டன. கவிதைப் போக்கில் பெரும்பான்மையாகக் காணக்கிடைக்கும் கூறுகள் சார்ந்ததே இந்த வகைப்பாடு. விதிவிலக்குகள் இரு பிரதேசத்துக் கவிதைப் போக்கிலும் உண்டுதான்.

அறுபதுகள், எழுபதுகளில் ஈழத்துக் கவிதைகளில் இயற்கைச் சூழலின் பின்புலம் விலாவாரியாகவே பதிவு செய்யப்பட்டது. மருதமும் நெய்தலும் முயங்கிய ஈழத்தின் இயற்கையமைப்பும் இதற்கொரு காரணமெனலாம். மரங்கள், செடிகொடிகள், பூக்கள், பறவைகளின் பின்னணியுடன்தான் ஒரு இருப்பிடம் அல்லது கவிதை சொல்லியின் இருப்பும் மனநிலையும் சொல்லப்பட்டன. அதன் பின்னான உக்கிரமான நீண்டகாலப் போரினாலும் அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியினாலும் ஏற்பட்ட மனித அழிவுகளுக்கு நிகரான பெரும் துக்கத்துடனும் ஏக்கத்துடனும் சமீபத்திய ஆழிப் பேரலையால் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் ஈழத்துக் கவிதைகளில் வெளிப்படுகின்றன. அலறியின் கவிதைகள் பலவும் இவ்வகையிலானவை. இவற்றுள் 'போயின போயின காலங்கள்', 'நிழல் தேடும் சூரியன்', 'கட்டுமரத்துக்கு முந்திய முதுமரம்', 'ஆறுகள் அஞ்சும் காலம்', 'மரம் பற்றிய 3 தகவல்கள்', 'நதியின் கதை அல்லது அழுக்காறு' ஆகியன குறிப்பிடத்தகுந்தவை.

'நதியின் கதை அல்லது அழுக்காறு' கவிதை பின்வருமாறு முடிகிறது:
இப்போது
கடலின் கரையைக் கண்டடைய முடியாமலும்
ஓடையாய் ஒடுங்கி ஓடிட முடியாமலும்
குட்டையாகி விட்டது.
(பறவை போல சிறகடிக்கும் கடல்; ப . 34)
தமிழகத்து 'நதியின் கதை'களும் இன்றைய நிலையில் இவ்வகையிலானவைதான்.
கவிதைகளினூடே தெறித்துவிழும் வித்தியாசமான கற்பனைகள், புனைவுகளுடன் மெல்லிய கேலியும் கலந்த பார்வை அலறியின் தனித்துவம். இதனைக் கவிஞர் சோலைக்கிளியின் ஆரோக்கியமான பாதிப்பின் பெறுபேறெனவும் கொள்ளலாம். உதாரணத்துக்குச் சில வரிகள் -
ஒரு கோப்பைத் தண்ணீர்
கொடுப்பாரின்றித் தவிக்கிறது குளம்.
(பூமிக்கடியில் வானம்; ப. 23)
இதோ!
துளிர்த்துப் பெய்கிறது மழை
கொதிக்க வைத்துச் சூடாக்குது வெயில்
மாலை
தேனீர் தயாரிக்கலாம்.
(பூமிக்கடியில் வானம்; ப. 24)
காற்றுக்குள் யானை புகுந்த
புயல் நாளொன்றில்
(பறவை போல சிறகடிக்கும் கடல்; ப . 11)
பழமுண்ட பறவையின் எச்சம்
தெறித்த இடத்தில்
கேட்டது
மரம் விழுந்த சப்தம்.
(பறவை போல சிறகடிக்கும் கடல்; ப . 29)

'ஆமைப்பாலம்', 'கடலோரம்', 'பூத்து பின் உதிர்ந்து', 'பொத்துவில்', 'விதி' போன்ற மிகச் சாதாரணமான கவிதைகளும் இத்தொகுப்புகளில் உண்டு ('ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் / வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்' என்னும் பாடல் வரிகளின் புதுவடிவம்தான் 'விதி' கவிதை). எனினும் முன்னர் குறிப்பிட்டுள்ள நல்ல கவிதைகள் தரும் திருப்தியில் இவற்றை எளிதில் கடந்துவிடலாம்.

'பறவை போல சிறகடிக்கும் கடல்' தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில், '. . . அலறியின் இந்தத் தொகுதிக் கவிதைகள் ஒருங்கிணைவு குறைந்துள்ளமையும் உணரக்கூடியதாகவுள்ளது' என்கிறார் கவிஞர் கருணாகரன். இந்தக் கணிப்பை முழுமையாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. எனது பார்வையில், அலறியின் இத்தொகுப்பின் முதல் கவிதையே - 'பின் தொடரும் நிழல்' - கச்சிதமான வடிவமைப்பும் வித்தியாசமான பார்வையும் கொண்டதாகும். 'பூமிக்கடியில் வானம்' தொகுப்பிலுள்ள வற்றைவிடவும் 'பறவை போல சிறகடிக்கும் கடல்' தொகுப்பிலுள்ள கவிதைகளே செறிவானவையாகவும் வடிவ அமைதி கொண்டனவாகவும் செய்நேர்த்தி கூடிவரப் பெற்றவையாகவும் உள்ளன. 'பூமிக்கடியில் வானம்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்துமே நெகிழ்ச்சியான அமைப்புக் கொண்டவை எனக் கூறிவிடலாம் - 'ஒரு ஒழுங்கை' கவிதையைத் தவிர்த்து. ஈழத்துக் கவிதைப் போக்கின் பொதுவான தன்மையாக இதனை நியாயப்படுத்தக்கூடும். எனினும், செறிவான அமைப்பினைக் கொண்ட கவிதைகளடங்கிய 'பறவை போல சிறகடிக்கும் கடல்' தொகுப்பே ஒரு கவிதை வாசகனுடன் பெரிதும் இணக்கம் கொள்கிறதென்பதே எனது வாசிப்பனுபவம்.

'பெருங் காத்திருப்பின்போது திடீரெனக் கிடைக்கிறது ஒரு நல்ல கவிதை . . . அலறியிடம் காத்திருக்கலாம். நெடுந்தொலைவுக்குப் பயணிக்கலாம். அவரிடம் நமக்குத் தருவதற்கான திரவியங்கள் நிறையவுண்டு' என்கிறார் கருணாகரன். சற்றும் மிகையற்ற கணிப்பு இதுவென்பதற்கு, 'ஒருவன் கொல்லப்படும் போது' என்னும் கவிதை ஒன்றே போதும்.

(நன்றி: காலச்சுவடு)

No comments: