Friday, December 19, 2008

நீயும் நிழ‌லும் நாம் ந‌ம்பிய‌வையும் க‌ரைந்துபோன‌ வ‌ச‌ந்த‌கால‌த்தின் குறிப்புக‌ள்

-க‌லீஸ்தினோ மிகுந்த‌ன்

xx.xx.20xx
இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தால்தான் அந்தப்படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது. விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளி விட்டுப்போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.

xx.xx.20xx
நீ சிலவேளைகளில் குழந்தையாய், பலவேளைகளில் உக்கிரமான காளியாய் விசுவரூபம் எடுக்கிறாய். நீ பேசுகின்ற/உபயோகிக்கின்ற மொழி, பல தடவைகளில் நான் கேள்விப்படாத மொழியாக இருக்கிறது. இந்த உக்கிரமான மொழியைத்தான் எனது அம்மாவும் அக்காவும் பேசவிரும்பி தங்களுக்குள் அடக்கிக்கொண்டிருக்கவும் கூடும். உனது தனித்துவமான இந்த மொழி எந்த நேரமும் இதத்தைத் தருகின்றது என்று பொய் சொல்லமாட்டேன். சிலவேளைகளில் அவையென் மனக்குளத்தில் கல்லெறிந்து அலையலையாய் கேள்விகளை உருவாக்குகின்றன. என்னை, எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற பதட்டத்தை எனக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.


xx.xx.20xx
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.


xx.xx.20xx
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது. துரோகங்களையும் பழிவாங்கல்களையும் அப்படியே இன்னொரு சகமனிதருக்கு பிரதிபலித்துக் காட்டுவதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் அறிந்து வைக்கின்ற நாம், உறவுகளை ஆழமாய் பிணைத்து வைத்திருக்கக்கூடிய அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவதுதான் மிகவும் அவலமானது.


xx.xx.20xx
சூரியன் இந்த நாளை மிக மிக வேகமாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றது. Patioவில் இருந்து மூன்று பியர்களும், ஒரு 5oz ஷொட்டும் அடித்து முடிக்க மழை பொழியத் தொடங்குகிறது. நாம் சிலிர்த்த, நம்மால் சிலிர்க்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசும்போது மனம் முழுதும் நிரம்பும் விகசிப்பும் நிதானமும் ஏன் நண்பா நாம் அரசியல் பேசும்போது மட்டும் வருவதில்லை? முகமெல்லாம் இருண்டு உலகின் கடைசிக்கணம் மாதிரியல்லவா நாம் குரைக்கத் தொடங்கிவிடுகின்றோம். உனக்கு ஏறிவிடுகின்றது; கெட்ட வார்த்தைகள் கலந்து உனக்கான அரசியலைப் பேசத்தொடங்குகின்றாய். வழமைபோல நானும் ஒமோம் போட்டபடி கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இடைமறித்து உரையாடத் தொடங்குகின்றேன். உனது குரல் உனக்குரிய தார்மீக ஆவேசத்துடன் உயரத்தொடங்குகின்றது. மழையில் அரையும் குறையுமாய் நனைந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து waitress பெண், Why don’t you guys come inside and talk here? என்கிறார். நண்பா, நமக்குள் இருக்கும் விமர்சனங்கள்/பலவீனங்களை மீறி, நமக்குரிய ஒரே ஆதர்சனம் ‘சே’ என உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல நமக்கான கடைசி நம்பிக்கையாய் இன்னமும் நம்மில் தேக்கிக்கொண்டிருப்பது மார்க்சிசத்தையும், பெரியாரியத்தையும் என்பதையும், இதோ விழுந்துகொண்டிருக்கும் இந்த மழைத்துளிகளும், பச்சை patioவுக்கு கருமை வர்ணம் பூசும் இந்த இரவும் மிக நன்கு அறியும்.


xx.xx.20xx
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் மனிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.


xx.xx.20xx
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என் அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது.


ஏற்க‌ன‌வே ப‌திவிலிட்ட‌ ப‌குதிக‌ள்:
(1)க‌விழ்ந்த‌ வான‌த்தில் மேல் முளைத்த‌ காளான்க‌ள்
(2)உறைந்த‌ ந‌தியின் மீது ப‌ற‌ந்துகொண்டிருந்த‌ கொள்ளிவால்பிசாசுக‌ளை ஆடு தின்ற‌ ஆதிக்க‌தை
(3)மேய்ப்பரின் களவுபோன ஆடுகளைத் தேவதைகள் தேடிப்போன குளிர்காலத்தின் கதை
(4)சிற‌கு முளைத்த‌ க‌விதைக‌ளைச் சிதைத்துப்போன‌ கோடையைக் கொல்ல‌ விரும்பிய‌வனின் க‌தை
(5)க‌ரைக‌ளையுடைத்து பாய்ந்த‌ ந‌தியை தும்புக்க‌ட்டையில் ப‌ற‌ந்த‌ சூனிய‌க்காரி குடித்து முடித்த‌ க‌தை
(6)ஜிப்சிக‌ளுட‌ன் க‌ள்ளுக்குடித்துக்கொண்டிருந்த‌வ‌னோடு கோபித்துப் ப‌ற‌ந்துபோன‌ புறா த‌ன் சாம்ப‌ல் வ‌ர்ண‌த்தைப் வான‌த்திற்குத் தாரை வார்த்த‌ க‌‌தை

1 comment:

Anonymous said...

"நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் மனிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்."

முற்றிலும் உண்மை.

"
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என் அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது."

அருமை வாழ்த்துகள்