வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாங்களுக்கு ஒரு பத்திரிகையாளராக சென்ற நண்பன் சஜீதரனின் கட்டுரை, எவ்வாறு மெனிக் பாமில், அகதிகள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், எவ்வாறான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் விபரிக்கின்றது. வலயம் பூச்சியமெனக் குறிக்கப்படும், கதிர்காமர் இடைத்தங்கல் முகாமே ஒரளவு அடிப்படை வசதியுடையதாக இருக்கின்றது. அதனுள்ளே இயங்கத்தொடங்கியிருக்கும் பாடசாலை,வங்கி, தபாற்கந்தோர் என்பவற்றைப் பார்க்கும்போது, இம்முகாமிலே உள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களிலே மீளக்குடியமர்த்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லைப் போலத்தான் தெரிகிறது. வலயம் 4 எனப்படும் மெனிக் பாமிலுள்ள அகதிமுகாமில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வந்த மக்கள் எந்தவகையான அடிப்படை வசதிகளுமில்லாது இருப்பதை மிகச் சொற்ப நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பொழுதில் கண்டறிந்து சஜிதரன் எழுதியிருக்கின்றார். இவர்கள் இறுதி யுத்தம்வரை இருந்ததனால், மிகப்பெரும் உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை வார்த்தைகளில் கூறத்தேவையில்லை.
கூடவே ஒரு உபரிக்குறிப்பாய், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இடைத்தங்கல் முகாங்களிலுள்ள மக்களுக்குச் சொன்ன செய்தியையும் சேர்த்து வாசிக்கவேண்டும். இனி முல்லைத்தீவு மாவட்டம் உயர்பாதுகாப்பு வலயமாக ஆக்கப்படும். அங்கே பூர்வீகமாய் வசித்த மக்கள் இனி அங்கே மீளக்குடியமர்த்தப்படமாட்டார்கள் என்பது. இத்தோடு, நாகார்ஜூனன் தமிழாக்கிய அகம்பென்னின்
'முகாம் என்பது யாது?' கட்டுரையையும் சேர்த்து வாசித்தால், இடைத்தங்கல் முகாங்களிலுள்ள மக்களின் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கப்போவதில்லை என்பது உறுதி.
அண்மையில், சில கனடியர்கள் இடைத்தங்கல் முகாமிலிருக்கின்றார்கள் என்பதை கனேடிய அரசாஙகமும் உறுதி செய்துள்ளது. அங்கே தங்கவைக்கப்பட்டுள்ள கனடிய பிரஜாவுரிமையுள்ள ஓர் இளைஞர், 'இங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படுவது கவுன்சிலிங்' என்று குறிப்பிட்டதும், இம்முகாங்களுக்கு சென்ற ஒரு கனடிய பாராளுமன்ற உறுப்பினர்,
இடைத்தங்கல் முகாங்களில் நல்ல வசதியுடன் இருப்பவை, வசதி அற்று இருப்பவை என்ற கருத்துக்களுக்கு இடமில்லை. இடைத்தங்கல் முகாங்கள் என்பதே அடிப்படையில் மிகவும் கோரமானவை என்றும் கூறியிருக்கின்றார்.
சஜீதரனின் லக்பிமநியூஸில் வந்த கட்டுரையை
இங்கே வாசிக்கலாம்... ......
வளர்மதி, ஈழப் பிரச்சினை குறித்து எழுதத் தொடங்கியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ எவரினதோ முகமூடிகள் கழன்று விழுந்தபடியே இருக்கின்றன. வளர்மதி தனிப்பட்ட காழ்ப்புணர்வின்றி ஆதாரங்களுடன் தனது இக்கட்டுரையைத் தொடர்வாரென நம்புகின்றேன். பொதுவெளிக்கு வந்தால் யாரும் விமர்சனங்களில் இருந்து தப்பமுடியாது. முக்கியமாய் தாங்கள் தனித்துவமானவர்கள், மாற்றானவர்கள் என்று கலகம் செய்வதான பாவனையில் முட்டாள்தங்களை நோக்கிப் பயணித்துக்கொள்பவர்களை, அவர்களைத் தட்டி எழுப்பவாவது எதிர்வினைகள் அவசியமாகின்றன.
வளர்மதி குறிப்பிடுவதைப் போன்று, இனி சிறுபான்மையினர் என்ற பெயரே அகராதியில் இருக்கக்கூடாது என்கின்ற ராஜபக்சவிடம், மலையகத்தமிழர், முஸ்லிம் மக்கள், தலித் மக்கள் என்ற சிறுபான்மையினரின் குரல்களைச் செவிமடுக்கவேண்டுமென அகிலன் கதிர்காமர் போன்றவர்கள் கூறிக்கொண்டிருப்பதைக் கேட்கும்போது எங்களுக்கு ஏற்கனவே காதில் பூச்சுற்றியாகிவிட்டது என்றுதான் வேண்டியிருக்கிறது.. அண்மையில் புலிகள் அல்லாத வேறொரு இயக்க நண்பர் தங்கள் நிகழ்வொன்றுக்கு வரச்சொல்லியிருந்தார். போயிருந்தபோது அங்கே ஒருவர் கூறியதுதான் வளர்மதியின் கட்டுரையை வாசிக்கும்போது நினைவுக்கு வந்தது.... 'இனி என்ன சொன்னாலும், வெள்ளாளன் எங்கள் தலையில் குதிரை ஓட்டப் போகின்றான், பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்'.
கவனிக்க, இவ்வாறு கூறியவர் ஒரு பழம்பெரும் மார்க்சியவாதி
வளர்மதியின் கட்டுரையை
இங்கே வாசிக்கலாம்... ....
அநாமதேயன், யாழ்ப்பாணச் சூழலில் இருந்து தனது குறிப்புக்களை மீண்டும் காலச்சுவடில் எழுதியிருக்கின்றார். இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில்போது, வெள்ளவத்தையில் நிகழ்ந்ததாய்க் கூறப்படுவதாய்க் குறிப்பிடும் சம்பவங்கள் நானறியாதன. சிலவேளைகளில் பெருப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நடந்திருக்கூடிய சூழல்தான் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின்போது, சிங்கள் மக்கள் சிலர் கூறிய கருத்துக்களாய் அவர் குறிப்பிடுவதுதான் அச்சமூட்டக்கூடியவை.
அதேசமயம், யாழ்ப்பாணத்திலுள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் சந்தித்த புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் கூறிய வாக்குமூலமும் முக்கியமானது. அந்தக் குரல்களையும் செவிமடுக்காது, நாம் நாடு கடந்த அரசு குறித்தோ வேறு எந்த விடயமோ கதைப்பதுகூட பம்மாத்தாய்தான் போய்முடியும்.
அநாமதேயனின்
கட்டுரைக்கு...
.....
யமுனா ராஜேந்திரனின் ஈழம் தொடர்பான அண்மைக்காலத்தைய கட்டுரைகள் நீண்ட உரையாடலுக்கான களங்களைத் திறப்பவை. இனி ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பிறகான காலகட்டத்தில் எப்படி நகர்வது என்பதையும், ஈழத்தமிழர்கள் தங்களை எப்படித் தகவமைத்துக் கொள்வது என்பது பற்றியும் -உலக வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ளாது- எதையும் செய்துவிடமுடியாது. யமுனாவின் முன்பு எழுதிய ஒருகட்டுரைக்கு நீண்ட பின்னூட்டம் எழுதிவிட்டு நிறைவில்லாத நினைப்பில் அதை அனுப்பாது விட்டிருந்தேன். புலிகளின் ஆயுதப்போராட்டதின் தோல்விக்கு 9/11 முக்கிய காரணம் போல, பின்-காலனித்துவக் காரணிகளும் கண்ணுக்கு வகையில் இருந்து செயற்பட்டிருந்தை முக்கியப்படுத்தவேண்டுமெனத்தான் -அந்த அனுப்பாத பின்னூட்டத்தில்- எழுதியிருந்ததாய் நினைவு.
இப்போது உயிரோசையில் யமுனா எழுதியுள்ள இந்தக் கட்டுரையும்
முக்கியமான ஒரு கட்டுரையே...