Tuesday, October 16, 2007

ஈழத்துக்கவிஞர்கள் ---> கவிதைகள்

ஈழத்துப்பெண் கவிஞர்கள் மூவரின் கவிதைத்தொகுப்புகள் விரைவில் வரப்போகின்றது என்று காலச்சுவடின் அறிவிப்பு -அதன் மீதான விமர்சன்ங்களைத் தாண்டி- மகிழ்ச்சியைத் தருகின்றது. அனாரின், 'எனக்கு கவிதை முகம்' (அனாரின் இரண்டாவது தொகுப்பு என நினைக்கின்றேன்), ஆகர்ஷியாவின், 'நம்மைப் பற்றிய கவிதை', வினோதின்யின், 'முகமூடி செய்பவள்' ஆகிய தொகுப்புக்களே அவையாகும். ஏற்கனவே இரண்டொரு இடங்களில் குறிப்பிட்டமாதிரி, தேக்கம்டைந்த ஈழ/புலம்பெயர் கவிதையுலகை முன்னகர்த்தும் நம்பிக்கையைப் பெண் படைப்பாளிகளே இன்றைய பொழுதில் தருகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றவிதமாய் இவர்களது கவிதைத் தொகுப்புககளும் துலங்கட்டுமாக..
(~டிசே)


------------------
வெறித்தபடி இருக்கும் கனவு
-அனார்

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.
--------------

நம்மைப் பற்றிய கவிதை
-ஆகர்ஷியா


ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக்கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

ஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது.
-----------------

முகமூடி செய்பவள்
-வினோதினி

அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

வினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

நன்றி: காலச்சுவடு( கவிதைகளுக்கும், எழுதியவர்கள் பற்றிய குறிப்புகளுக்கும்)

4 comments:

நளாயினி said...

மகிழ்ச்சியைத் தருகின்றது. vaalthukal.

டிசே தமிழன் said...

வருகைக்கு நன்றி நளாயினி.

Anonymous said...

Hello D J Thamilan,

Thanks for posting my poetry link/page appeared in Kalachuvadu.

Vinodhine

டிசே தமிழன் said...

வருகைக்கு நன்றி வினோதினி.
.....
உங்களின் வேறு சில கவிதைகள் இங்கே வரும் 'வைகறை' பத்திரிகையில் முன்னரே பிரசுரமானபோது வாசித்திருந்தேன். அதிலிருந்த குறிப்பை வாசித்தபோது, அட நீங்களும் நான் ஈழத்திலிருந்தபோது சென்ற கல்லூரியில்தான் படித்திருந்தீர்களென நினைவிலிருத்திக்கொண்டேன் :-).