Thursday, January 10, 2008

தமிழவனின் நேர்காணல்

சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்துவிட்டார்கள்

நேர்காணல்: தமிழவன்


தமிழ் சமகால இலக்கிய உலகில் தமிழவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அமைப்பியல் தத்துவத்தை தமிழ்ச் சமூகத்திற்குள் கொண்டு வந்தவர். ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’, ‘வரலாற்றில்படிந்த நிழல்கள்’ போன்ற நாவல்களை நவீன வடிவத்தில் எழுதி வெளியிட்டவர். இதன் மூலம் புது வகையான நடையை மேற்கொண்டவர். வார்ஸா பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு தமிழ் போதித்துவிட்டு தற்சமயம் ஆந்திர மாநிலம் திராவிடன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து வருகிறார். இவரது சமீபத்திய நாவல், ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’. இவரின் அசல் பெயர் கார்லோஸ். தீராநதிக்காக ஆந்திரமாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது.

தீராநதி: இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இருக்கும் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற உங்களின் புதிய நாவலை தோதாக வைத்துக் கொண்டு நமது பேச்சைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நாவலின் வடிவம், கதைக்களம், பின்புலம் பற்றி முதலில் சுருக்கமாகச் சொல்லுங்கள்?

தமிழவன் : வார்ஸாவுக்கு நான் 2001_ல் தமிழ்ப் பேராசிரியராக வேலை செய்யச் சென்றேன். எனக்கு முன்னால் தி.சு. நடராஜன், இராமசுந்தரம், க. சுப்பிரமணியம், நாச்சிமுத்து, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் அங்கு சென்று தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்து விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். அதில் இந்திரா பார்த்தசாரதி மட்டும்தான் நாவலாசிரியர். நானும் சென்று வழக்கமான தமிழ்ப்பேராசிரியர் வேலையைத்தான் செய்துகொண்டு இருந்தேன். கடைசியில் ஆறுமாதம் பணி நீட்டிப்பு எனக்குக் கொடுத்தார்கள். அங்கு சென்று வேலை செய்து கொண்ட காலங்களில் ‘பொலிஷ்’ மொழி இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ‘பொலிஷ்’ மொழியில் வேகமாக வாசிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லாததால் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஆங்கிலப் புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள் மிகவும் குறைவு. ஒரு சில கடைகளில் மட்டும்தான் ஆங்கில நூல்கள் விற்பனைக்கு இருக்கும். ‘அமெரிக்கன் புக் சென்டர்’ என்ற ஒரு ஆங்கிலப் புத்தக விற்பனையகத்திலிருந்துதான் நான் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன்.

இந்தியாவில் இருந்த காலங்களில் வேலைப் பளு காரணமாக எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க நேரம் இல்லாமல் தவித்தேனோ அந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்கி அங்கிருக்கும்போது படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக எல்லாவிதமான ‘கிளாசிக்’ நூல்களையும் வாங்கி வாசித்தேன். அப்படிப் படிக்கும் சமயத்தில் அதற்கான சிந்திப்பிலேயே சதாசர்வகாலமும் இருந்தேன். என்னைப் பொறுத்தளவில் நான் இரண்டு துறைகளிலும் கால் ஊன்றிக் கொண்டிருப்பவன். ஆய்விலும் என்னுடைய பங்களிப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். தற்கால இலக்கியத்திலும் எனக்கு தொடர்ச்சியான ஈடுபாடு இருக்கிறதென்றும் நினைக்கிறேன். இப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போது இன்றைய சமகால நாவல் உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தப் புரிதலால் எனக்குள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற உத்வேகம் உண்டானது. ஏற்கெனவே இந்தியாவில் நான் நாவல் எழுதிக் கொண்டிருந்தவன் என்பதால் இந்த ஆவல் இயல்பானதொன்றாகவே உணர்ந்தேன்.

முதலில் ‘காதலோடு கூடிய போர்க் காலம்’ என்ற ஒரு ஸ்கிரிப்ட்டைத்தான் தயார் செய்தேன். 1965_ல் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து அந்த நாவலை எழுதி இருந்தேன். இன்றைக்குள்ள பல இளைஞர்களுக்கு இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி போதுமான புரிதல் இல்லாததனால் அந்தத் தகவல்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதி அந்த நாவலை எழுதி முடித்தேன். மொத்தம் இருநூறு பக்க அளவில் முடி.ந்தது அந்நாவல். அதற்கு பிற்பாடு எனக்கு நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இல்லாது போனது. இந்த சமயத்தில் திடீரென்று ஆறுமாதம் நீட்டிப்பு கிடைத்ததால் சரி, நாம் ஏதாவது ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். நாவல் எழுதுவததற்கு மன ஒருமைப்பாடு என்பது ரொம்ப முக்கியம். இந்த சமயத்தில் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை நாவல் எழுதுவதற்கு ஒதுக்கி விடவேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டேன். அங்கிருந்து வெளியாகும் ‘ஆன் லைன்’ வெப் சைட்டுகளில் ஒரு சில அனுபவ ரீதியிலான சின்னச் சின்ன கட்டுரைகளை எழுத மட்டுமே நேரம் கிடைத்த எனக்கு, இந்தப் பெரிய ஓய்வு என்பதை உருப்படியான காரியத்திற்குச் செலவிட்டாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைச் சூழலிலிருந்து சென்றவன் என்ற வகையில் எனக்கு இங்கிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளோடு உள்ள உறவு இந்தக் காலத்தில் தடைப்பட்டுப் போனது. சுத்தமாக தொடர்பே இல்லாமல் உறவு அறுந்து போய்விட்டது. ஆகையால் இங்கே உள்ள இலக்கியச் சூழலில் என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் போய் விட்டது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் வெறும் பனி மட்டுமே பொழிகின்ற ஒரு நாட்டில் நான்கு வருடங்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு இலை தழைகளைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் வெறும் பனி மட்டுமேதான் கண்களுக்குத் தெரிகின்ற ஒரு சூழலில் ஒன்று, நமக்கு சிறு வயது ஞாபகங்கள் மிதந்து வரும். அதற்காக ஒரு நாவலை எழுதினேன். அது, காதலோடு கூடிய போர்க்கலம். இரண்டு _ அனைத்துலக வாசகர்களை மனதில் வைத்து ஒரு தமிழ் நாவல் எழுத வேண்டும் என்பதற்காக ஒரு நாவலை எழுதினேன். அனைத்துலக வாசகர்களைக் கருத்தில் வைத்து எந்தத் தமிழ் நாவல்களும் வெளிவருவதில்லை என்ற எண்ணம் எனக்கிருந்ததனால் (இதை தற்பெருமைக்காக நான் சொல்லவில்லை. அதற்கான கட்டத்தை நான் தாண்டிவிட்டேன். சிறு வயதில் சில காரியங்களை அகங்காரமாக எடுத்துக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி யிருக்கிறேன். இப்போது நான் அப்படி நிச்சயமாக பேசுவதில்லை) இந்த எண்ணத்தை முன் வைத்து ஒரு நாவலையும் எழுதி முடித்தேன். அந்த இரண்டாம் நாவல்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்.’ முதல் நாவல் இன்னும் பிரசுரமாகவில்லை.

நான் கன்னட மொழிச் சூழலில் இருந்த காலத்தில் அப்போது கன்னடமொழி நாவல்கள் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுமா? என்ற ஒரு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் தான் சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இந்திய நாவல்கள் எதுவும் சரியாக இல்லை. அனைத்துலக வாசகர்களை மனதில் கொண்டு நாவல் வெளி வருவதில்லை என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் சல்மான் ருஷ்டி சொல்வதென்னவோ உண்மைதான். இந்திய மொழிகளில் வெளிவருகின்ற நாவலை அனைத்துலக வாசகனுக்கு மொழி பெயர்த்துக் கொடுத்தால் அவன் அதை அனைத்துலக நாவலாக எடுத்துக் கொள்ளமாட்டான்.

இன்றைக்கு உதாரணமாக ஹாருக்கி மொரகாமி என்பவர் எழுத ஆரம்பித்திருக்கிறார். ரொம்ப கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர் அவர். ஜப்பானிய பின்னணியிலிருந்து அவர் எழுதுகிறார். ஆனால் அனைத்துலக வாசகர்களை இலக்கு வைத்து எழுதுகிறார். நமது இந்திய மொழிகளில் இந்த மாதிரி இலக்கு வைத்து எழுதுகின்ற எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் நமது கலாசாரத்தில் நாவல் எழுவதற்கு ஒரு எல்லையை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குள்ளாகத்தான் நாம் எழுதுகிறோம். இப்படி எழுதவில்லை என்றால் நமது வாசகன் அதற்குள் பழக்கப் படமாட்டான். இவனுக்கு பழக்கப்பட்ட விதத்தில்தான் நீங்கள் சொல்ல வேண்டும். இதற்காக நாம் ஒரு சின்ன எல்லையை உருவாக்குகின்றோம். ஆனால் இதற்கும்மேல் அனைத்துலக வாசகர்கள் என்ற ஒரு பெரிய எல்லை இருக்கிறது. தமிழிலக்கியத்தில் அனைத்துலக வாசகர்களைக் குறி வைத்து எழுதக்கூடிய எழுத்து ஒன்றை முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்கின்ற இந்த நாவலை நான் எழுதினேன்.

தீராநதி: இந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?

தமிழவன்: இதுவரை நான் பேசியது முழுக்க இந்நாவல் எழுதுவதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது என்பதை ஒட்டியது. இங்கிருந்து வார்ஸாவுக்கு ஆசியவியல் நிறுவனத்திற்கு தமிழ் போதிக்கும் ஆசிரியராக போய் சேர்ந்தேன் இல்லையா? அப்போது இரண்டு வகையான பாதிப்புகள் எனக்குள் ஏற்பட்டது. ஒன்று _ நான் கர்நாடகத்தில் முழுக்க தமிழ்ப் பேராசிரியனாக இருந்தவன். யாராவது என்ன பேராசிரியர் நீங்கள் என்று கேட்டால் தமிழ்ப்பேராசிரியர் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை குறைவாக எடைபோட்டு விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை. இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையோடு வார்ஸாவுக்குச் சென்றால் என்னை தமிழ்ப்பேராசிரியன் என்பதற்காகவே முதன்முதலாக பெருமைப்படுத்தியது அந்த வார்ஸா பல்கலைக்கழகம். அங்கிருந்த மாணவர்கள் என்னிடம் நான் தமிழ் படிக்கின்றேன் என்று பெருமிதத்தோடு சொன்ன போது குற்ற உணர்வில் குமைந்தேன். இது நாள் வரை ஒரு சிறு பிராந்திய மொழிக்குள் அகப்பட்டுக் கொண்டு முட்டாள் தனமாக தாழ்வு மனப்பான்மையில் உழன்று இருக்கிறோமே என்று சங்கடப்பட்டேன். அனைத்துலகப் புகழ் பெற்ற தமிழ்மொழிப் பேராசிரியன் நான் என்று பெருமைப்பட்டல்லவா இருக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.

தமிழ் மொழி மற்ற இந்திய மொழிகளைப் போன்ற ஒரு மொழியல்ல; இந்தி என்ற செயற்கையான மொழி ஒன்றை செயற்கையாக பிரபலப்படுத்தி ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன் போன்ற மொழிகளுக்கு இணையாக யுனஸ்கோ உள்ளிட்ட அளவில் மதிப்புக் கொடுத்து உலகம் முழுக்க உள்ள பல பல்கலைக்கழகங்களின் மூலம் இன்றைக்கு பரப்பப்படுகிறது. இதற்காக மத்திய அரசு கோடிக் கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. என்னுடைய பேராசிரியர் பணி என்பது இந்தியத் தூதரகத்துடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பிராந்திய மொழிப் பேராசிரியர்கள் எல்லோருக்கும் இந்தியத் தூதரகம்தான் மாதச் சம்பளத்தினை வழங்கும். உலகம் முழுக்க உள்ள 110 இந்தியத்தூதரகங்களில் இந்தி மொழியைப் பரப்புவதற்கென்றே கலாச்சார செயலாளர் என்ற பதவி ஒன்று இருக்கிறது. அந்தப் பதவியில் இருக்கின்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளின் தலையாய வேலைகளில் ஒன்று இந்தி மொழியைப் பரப்புவது என்பது. இந்தி எதிர்ப்பு என்பதெல்லாம் இனித் தேவையில்லை. அதற்கான காலகட்டங்களெல்லாம் போய்விட்டது என்று பல அரசியல் தலைவர்கள் சமீபகாலமாக தமிழ் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நினைப்புகளெல்லாம் தவறானவை. இந்தி மொழி ராஜஸ்தான் என்ற மொழியைக் கொன்று கொண்டிருக்கிறது. ‘மைதிலி’ என்ற மொழியின் இருப்பையே இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஆக இந்தி மொழி என்பது வருங்காலங்களில் பிராந்திய மொழிகளை பயங்கரமாக கொல்லப் போகிறது. அதனால் இந்தி எதிர்ப்பு என்பது ஒவ்வொரு மொழியிலும் இருந்தால் தான் அந்தந்த மொழிகளும், வட்டார கலாச்சாரங்களும் உயிர் பெற முடியும் என்பது எனக்குப் புரிய வந்தது. போலந்து நாட்டில் முப்பது ஆண்டுகளாக தமிழ் படிக்கும் பாரம்பர்யம் இருக்கிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் இராமசுந்தரம். இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலாக குண்டு போடப்பட்ட நகரம் வார்ஸா நகரம். புதிய உலகத்தினுடைய ஒரு வரலாறு படைக்கப்பட்ட ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற புத்தி ஜீவிகள் எல்லோரும் கம்யூனிஸ வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது நான் அதிர்ந்துபோனேன். ஏனென்றால் நான் தென் இந்தியாவைப் பொறுத்தளவில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்ஸிய மரபின் வழியிலிருந்து பல விஷயங்களைப் புரிந்து கொண்டு உருவான ஒரு புத்திஜீவி. மார்க்ஸியத்தின் மூலமாகத்தான் உலகத்தைப் பார்க்கிறேன். நான் வார்ஸாவுக்குச் சென்றபோது மார்க்ஸியம் என்ன ஆயிற்று என்ற கேள்வியோடுதான் அங்கு சென்றேன்.

முதன் முதலாக நான் வார்ஸா கடைத்தெருவிற்குத் சென்றபோது என் அருகாமையில் நின்ற காரைப் பார்த்து ஒருவன் ‘அதை பார்க்காதே. அது கம்யூனிஸ காலகட்டத்தினுடையது. நன்றாக இருக்காது. ஆகவே பார்க்காதே?!’ என்றான். அதே போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நான் காரில் சென்றபோது அந்த வண்டியின் டிரைவர் வலது பக்கம் கை காட்டி ‘‘அதோ தெரிகிறதே பார் ஒரு கட்டிடம். அது ஒரு காலத்தில் எங்களை பயங்கரமாக பயமுறுத்திய கட்டடம்’’ என்றான். என்ன கட்டடம் என்று நான் கேட்டதற்கு ‘‘கம்யூனிஸ கட்சியின் தலைமைச் செயலகம்’’ என்றான். அதே போல வார்ஸாவில் மிக பிரமாண்டமான ஒரு டவர் இருக்கிறது. அந்தப் பக்கம் செல்லும் எல்லோருமே அதைப் பார்த்து ‘‘இதை நாங்கள் வெறுக்கிறோம்’’ என்பார்கள். ஏன்? என்று நான் விசாரித்த போது ‘‘ஸ்டாலின் கொடுத்த கொடை இது. அந்த ஆள் எங்களுக்கு கொடை வழங்குகிறானாம்?!’’ என்று கிண்டல் செய்தார்கள். போர்டிங் ஸ்கூல்களில் நமது பிள்ளைகளை கொண்டு போய்ச் சேர்த்தால் நமது பிள்ளைகள் அந்தப் பள்ளியை வெறுப்பார்கள். அங்குள்ள ஃபாதர்கள் பிள்ளைகளை நடத்துகின்ற முறையைப் பார்த்து குழந்தைகள் அப்படி நினைக்கும். அது போல ஒரு ஆட்சி போலந்தில் நடந்து இருக்கிறது. பல்கலைக் கழகங்களிலெல்லாம் ஒற்றர்கள் இருப்பார்களாம். யாரை எப்போது கைது செய்வார்கள் என்பதே தெரியாதாம். இந்த மாதிரியான ஒரு கம்யூனிஸ ஆட்சிதான் ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான திருப்பம். இதற்கு பின்புலமாக அவர்களுக்கு மதத்தை நோக்கிய ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. இதையெல்லாம் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற என்னுடைய நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். கிழக்கத்திய கலாச்சாரத்தை நோக்கி அவர்களுக்கு எப்படி ஓர் ஈர்ப்பு வருகிறது என்பதை நாவலில் சொல்லி இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் எனக்குச் சொல்லப்பட்ட பல நிஜக் கதைகளையெல்லாம் கற்பனையான பாத்திரங்களின் மூலமாக இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நாவலை வடிவத்திலேயும், உள்ளடக்கத்திலேயும் முற்றிலும் புதிய வகையான வாசகர்களை மையமாக வைத்து எழுதி இருக்கிறேன். இதை மொழிபெயர்த்து போலீஷ்காரர்களுக்கு கொடுத்தால் இதை அவர்கள் எங்களுடைய நாவல் என்று சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது வாசகர்களின் வாசக ஈர்ப்பும் குறையக் கூடாது. இந்தப் புள்ளியை மையமாக வைத்து இதை நான் எழுதி இருக்கிறேன்.

தீராநதி: நீங்கள் குறிப்பிட்ட ஹாருக்கி மொரக்காமி என்ற எழுத்தாளர் ஜப்பானிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர். அவர் அங்கிருந்துகொண்டு சர்வதேச பின்புலத்தோடு ஜப்பானிய கலாச்சாரத்தை முன்வைக்கிறார். ஆனால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குக் குடியேறிய நமது எழுத்தாளர்கள் அங்கு சென்றும் இந்தியாவில் தாங்கள் கழித்த பால்ய பருவத்தையே ழிஷீstணீறீரீவீணீ மனநிலையில் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் எழுத்துக்களில் ழிஷீstணீறீரீவீணீ வின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த ழிஷீstணீறீரீவீணீ வை தாண்டவே முடியாதா? ஏன் இந்த விபத்து நிகழ்கிறது?

தமிழவன்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை இரண்டு விதங்களில் நான் பார்க்கிறேன். ஹாருக்கி மொரக்காமியை பொறுத்த அளவில் அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் நாவல் வரை எல்லா எழுத்துக்களையும் நான் படித்துவிட்டேன். அதே போல போர்ஹெஸின் சகல எழுத்துக்களையும் நான் வாசித்துவிட்டேன். மொரக்காமி மதுவைக் கலந்து விற்பனை செய்கின்ற ஒரு சின்ன கடையை நடத்திக் கொண்டிருந்தவர். அவர் மெத்தப் படித்த படிப்பாளியோ அல்லது பெரிய எழுத்தாள குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரோ இல்லை. திடீரென்றுதான் அவர் நாவல் எழுத ஆரம்பித்து உலகப் புகழ் பெற்றார். அதற்கு பிற்பாடு பெரிய செல்வந்தராகி அமெரிக்காவில் இப்போதுதான் குடியேறி இருக்கிறார் போலுள்ளது. அதற்கப்புறம்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரது எழுத்துக்கள் அமெரிக்காவிலும் புகழடைந்தன.

இதற்கு என்ன காரணம் என்றால் அவர் நவீன ஜப்பானைத்தான் எழுதுகிறார். சிறுவயதிலிருந்தே பழைய கடைகளில் அவர் வாசித்திருந்த அமெரிக்க நாவல்களின் தாக்கத்தினால் அவரது எழுத்துக்கள் இயல்பாகவே உலககளாவிய வடிவத்தில் வெளிப்பட்டன. ஐரோப்பிய கலாச்சாரத்தைப் போல ஒரு ஜப்பானிய கலாச்சாரம் இன்று வளர்ந்து கொண்டு வருகிறது பாருங்கள், அந்த நவீன வாழ்க்கையைத்தான் அவர் தனது எழுத்தின் மையமாக எடுத்துக் கொள்கிறார். மரபார்ந்த ஜப்பானிய கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ளும் மொரக்காமி அனைத்துலக விஷயங்களையும் தனது நாவல்களில் சேர்த்துக் கொள்கிறார்.

அடுத்து நீங்கள் கேட்ட ழிஷீstணீறீரீவீணீ விஷயத்திற்கு வருவோம்?! வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களை மொத்தமாகச் சேர்த்து ‘ஈழத்தமிழ்க் கவிதைகள்’ என்ற முழுதொகுப்பை நான் கொண்டு வந்திருக்கிறேன். இதை கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தேன். அவர்களின் போராட்டம் பிற மொழிக்காரர்களுக்கும் தெரியவர வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன். அதில் எல்லா கவிதைகளும் இந்த ழிஷீstணீறீரீவீணீ தன்மையைச் சேர்ந்ததாகவே இருந்தன. நமது வீட்டை விட்டு ரொம்பக்காலம் வெளியில் சென்றவுடன் நம்மை இரண்டுவிதமான மனோபாவங்கள் விரட்டுகின்றன. ஒன்று_நமது சிறு பருவமும், நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளும். அதுதான் நம்மை ழிஷீstணீறீரீவீணீ விற்குள் இழுத்துக் கொண்டு வந்து தள்ளுகிறது.

இரண்டு _ தாய் வழிபாடு என்கின்ற ஒரு மரபு நமக்கு இருக்கிறது இல்லையா அதுதான் நம்மை தொடர்ந்து ழிஷீstணீறீரீவீணீவிற்குள் ஆட்படுத்துகிறது. தாய்வழிபாடு என்று வேறு தேசத்து எழுத்தாளர்களும் எழுதினாலும் அவர்கள் ழிஷீstணீறீரீவீணீ என்கின்ற அம்சத்தில் அப்படியே விழுந்துவிடுவதில்லை. அதை தாண்டிச் செல்கிறார்கள். இது தமிழ் மற்றும் இந்திய எழுத்தாளர்களுக்குள் நடப்பதில்லை. நமது எழுத்துக்கள் வட்டார எழுத்துக்களாக சுருங்கிப் போவதற்கான காரணம் இதுதான். இது ஒரு கலாச்சாரப் பிரச்னை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தளவில் ஒரு எல்லைக்கு மேல் சென்று என்ன சொல்வேன் என்றால், நாவல் இலக்கியம் என்பது மேற்கைப் பார்த்து இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வந்தது. அப்படி உருவான நாவல்கள் இந்தியத் தன்மைக்கு ஏற்ப மறு வடிவம் கொண்டது. பாருங்கள் அங்கேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது.

நமது இந்தியத் தன்மைக்கு ஏற்ப ஜோக்ஸ் அது இது என்று எல்லாவற்றையும் சேர்த்து நம் வாசகர்களைக் கவரும்படியான ஒரு வடிவத்தில் நாவலை முதன்முதலில் கொடுத்தார்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலில் இதற்கான எல்லா அம்சங்களின் வேர்களையும் நீங்கள் தேடிப்பிடிக்கலாம். நமது வாசகர்களைக் கவரும்படியாக இருக்க வேண்டுமென்றால் நமது பிரச்னைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து நாவலைச் செய்தார்கள். நமது பிரச்னைகளை எழுதும் போது நாவல் வடிவத்தில் ஏதோ ஒரு அனைத்துலக தன்மை குறைபட்டுப் போய்விட்டது. ஆக, நாம் எழுதுவது எல்லாம் நம் நாவல்களே ஒழிய அனைத்துலக நாவல்கள் அல்ல; ஒரு விதத்தில் நாவல் அல்லாத நாவல்களை நாம் எழுதிக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியும் இதற்குள் வருகிறது.

தீராநதி : அனைத்துலக நாவலுக்கான தன்மையை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாதிரியான அம்சம் என்பது ஆரோக்கியமானதொன்று. ஆனால் அலெக்ஸ் ஹேலி, சினுவா ஆச்சிப்பி போன்றவர்கள் அவர்களின் மரபார்ந்த விஷயங்களை, கலாச்சாரங்களை, பிரச்னைகளை ஒரு நாவலாகச் சொல்லும் போதுகூட அதில் அனைத்துலக வாசிப்புத்தன்மை என்பது இருக்கிறது. இந்தச் சிக்கலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழவன் : இந்தச் சிக்கலுக்கு முக்கியமான காரணம் தமிழ் நாவல்களுக்கு ‘எடிட்டிங்’ என்பது இல்லாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். இதுவரை எந்தப் பதிப்பகமும் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து முறையாக வெளியிட்டதாக தகவலே இல்லை. ‘‘லிட்ரரி எடிட்டிங்’’ என்பது நமது கலாச்சாரத்திலேயே இல்லை. வெளிநாடுகளில் உள்ள பதிப்பகங்கள் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து வெளியிடுவதில் அக்கறை காட்டுகின்றன. அப்படி எடிட்டிங் செய்யக் கொடுக்கும் போது எடிட்டர் என்பவர் இதுவெல்லாம் அனைத்துலக வாசகனுக்கு வேண்டாதது என்று முடிவு செய்வார். இந்த மாதிரி நாமும் நமது நாவலை ‘இன்டர்நேஷ்னல் எடிட்டிங்’கிற்கு உட்படுத்தினாலே அது நாவலுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கும். சினுவா ஆச்சிப்பியின் நாவலில் செய்திருப்பது இதைத்தான். ஹாருக்கி மொரக்காமியின் பெரிய நாவலொன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வரும்போது பாதிக்குமேல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். ஜெர்மன் மொழியில் அது மொழி பெயர்க்கப்பட்டு வெளியான போது தொலைக்காட்சிகளில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அப்போது அவர்கள் சொன்னார்கள் ‘‘இது அசலான ஜப்பானிய நாவல் அல்ல; நமக்காக மறு உருவாக்கம் செய்யப்பட்ட நாவல்’’ என்று. தமிழ் நாவலில் ஏன் ‘எடிட்டிங்’ என்பதே இல்லை என்றால் இவை எல்லாம் தமிழனுக்காக எழுதப்படுகின்ற நாவல்கள். மனதிற்குள் நான் ராஜராஜசோழன் என்றோ, பாண்டியன் என்றோ, சங்ககாலத்துப் பெருமை இது என்றோ பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவை உங்களுக்குப் பயன்படாது. இந்தியாவிற்குள் நாம் இருக்கின்றவரை நாம் அடிமைகள்தான். நமது அடிமைத் தனத்தைப் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

சமீபத்தில் கலைஞர் ‘ராமர் பாலம்’ பிரச்னை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்தபோது அனைத்திந்திய மீடியாக்கள் முழுவதும் கலைஞருக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட்டன. ஏதோ தமிழ்நாட்டில் பயங்கரமான பிரச்னை ஒன்று நடந்துவிட்டதைப் போல சித்திரித்தார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் தமிழர்கள் தங்களுடைய அனைத்துலக அடையாளத்தை மறு உருவாக்கம் செய்து பார்க்கின்ற ஓர் அறிவுப்பூர்வமான அரசியல் இங்கு வராமல் போனதால்தான். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் மனிதவள மேம்பாட்டு துறைக்கான அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற மாட்டார்கள். கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். அதே போல என்.பி.டி.னுடைய தலைவராக ஒரு தமிழன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கூட ஆசைப்பட்டதில்லை. கன்னட மொழிக்காரர்கள் அந்தத் துறை தனக்குத்தான் வேண்டுமென்று சண்டை போட்டு வாங்குகிறார்கள். சாகித்ய அகாடமியின் தலைவராக வரவேண்டும் என்று இந்தி மொழிக்காரனும், பெங்காலி மொழிக்காரனும், கன்னட மொழிக்காரனும்தான் சண்டைபோட்டுக் கொண்டு இருக்கிறானே ஒழிய, தமிழனுக்கு அந்த மாதிரி ஒரு பதவி இருக்கிறதென்றே தெரியாது.

கலாச்சாரம் என்பது உங்களுடைய வரலாற்றை எப்படித் தீர்மானிக்கிறது என்பதை கட்டாயம் நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும். இன்றைக்கு படு வேகமாக மாறிவரும் நவநாகரிகமான விஷயமாகட்டும் அல்லது வேறு எந்தவிதமான விஷயமாகட்டும் அதைப் புரிந்து கொள்வதற்கு கலாச்சார புரிதல் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு மத்திய மந்திரியாக இருப்பவரைவிட நாவல் எழுதுகின்ற ஒருவர் தமிழனுக்கு முக்கியமானவர் என்பேன். அரசியல்வாதி என்பவர் இரண்டாம் பட்சம்தான். கலாச்சாரவாதி என்பவர் பெரிய ஆளுமை. ஆனால் தமிழ்நாட்டில் குட்டி நடிகர்களும் நடிகைகளும்தான் கலாச்சாரவாதிகளாக முன் நிறுத்தப்படுகிறார்கள். இதுவெல்லாம் துக்கமான விஷயமில்லாமல் வேறென்ன? நாவல் என்கின்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் அரசியலுக்குப் போகவேண்டும். வரலாற்றுக்குப் போகவேண்டும். அரசியலும் வரலாறும் அரசியல்வாதியிடம் இல்லை நாவலாசிரியனிடம் தான் உள்ளன. அதனால்தான் சொல்கிறேன், அரசியல்வாதியை விட நாவலாசிரியன் முக்கியமானவன். இப்படியெல்லாம் ஒரு விவாதத்தை நாம் முன்னெடுத்துக் கொண்டுபோக வேண்டும்.

தீராநதி: இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும் இருக்கிறது. அது கலாச்சாரத்தின் தலைநகரமாகவும் அதே சமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும் கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்னைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்துமுறையாகவே உள்ளது என்று ஜானதன் கல்லர் குறிப்பிடுகிறார். உங்களின் தத்துவ பின்புலத்திலிருந்து ஒரு படைப்புக்கு கலாச்சாரம் முக்கியமானதா? அழகியல் முக்கியமானதா? என்றால் நீங்கள் இதற்கு முன்னால் கலாச்சாரம்தான் முக்கியமானது என்ற முடிவை எட்டி இருக்கிறீர்கள்! அழகியலை விட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை எப்படி முக்கியமானதாக நீங்கள் நிறுவுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

தமிழவன் : ரொம்ப ஆழமான ஒரு பிரச்னை இது. இதை நீங்கள் சரியாக கேட்டிருக்கிறீர்கள். கலாச்சாரத்திற்கும் அரசியலுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட கட்டங்களில் இரண்டிற்கும் முரண்பாடு இருந்தாலும் இரண்டிற்கும் ஒரு தொடர்பு என்பது எப்போதும் உண்டு. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். தி.மு.க. வின் காலகட்டத்தில்தான் கலாச்சாரத்திற்கும் அழகியலுக்குமான ஒரு தொடர்பு இல்லாமல் போனது. தி.மு.க.வின் அரசியல் காலகட்டத்தில் இந்த இரண்டிற்குமான தொடர்பு இல்லாமல் போனதற்கான வரலாற்றுக் காரணம் என்னவென்று பார்த்தால் இந்த அழகியலை முன்வைத்தவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள் என்பதுதான். மணிக்கொடி, எழுத்து, கசடதபற போன்ற பத்திரிகைகள் அழகியலை வலுவாக முன்வைத்தன. தி.மு.க.வைப் போலவே இடதுசாரிகளும் அழகியலுக்கு எதிரானவராக தங்களை முன் நிறுத்திக் கொண்டார்கள். இந்த காலகட்டத்தில்தான். க.நா.சு.வை நான் ஆதரிக்கிறேன். நான் க.நா.சு.வை ஆதரித்தவுடன் தி.மு.க.வினரும், இடதுசாரிகளும் அவரை ஒரு பிராமணர் என்று சொல்லி ஒரு போர்வையைப் போட்டு அமுக்கப் பார்த்தார்கள். தமிழ்க் கலாச்சாரத்திற்குள் வரலாற்று ரீதியாக தொடர்ந்து நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்களென்றால் அழகியலை எல்லோருமே கொலை செய்திருக்கிறார்கள். ‘எழுத்தில்’ தொடங்கிய இந்த சிறுபத்திரிகை மரபுதான் தொடர்ந்து அழகியல் பக்கம் நின்று கொண்டிருந்தது. சென்னையில் முற்போக்கு எழுத்தாளர்களின் தேர்தல் நடந்தபோது, க.நா.சு. அவர்கள் எதிரி அணியில் நின்றார் என்று சொல்லி அவரை ஒரு பாஸிஸ்ட்டாக சித்திரித்தார்கள். அழகியல்வாதிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை க.நா.சு.வே எடுத்திருக்கிறார். எனவே இந்த விஷயத்தில் க.நா.சு.வும் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான் என்பதில் ஐயமில்லை. வரலாற்றின் காலகட்டத்தில் க.நா.சு எதிரிகளின் பக்கமாக சாய்ந்துவிட்டார். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த நிலைப்பாட்டை மாற்றினார்

ஆனால் க.நா.சு.வின் இன்னொரு முகமான அழகியல் முகத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். இதை நான் ரொம்ப முக்கியமான செய்தியாகச் சொல்ல விரும்புகிறேன். 1980_களில் வெளியான ‘படிகள்’ போன்ற பத்திரிகைகளும் வேறு சில நண்பர்களும் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தோம். ஆக பிராமணர்களின் கூட்டத்திலிருந்து அழகியலை நாங்கள் மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். இதற்கு பிராமணர்களின் மத்தியிலும் பல எதிர்ப்புகள் இருந்தன.

அழகியல் என்பது பிராமணர்களுக்கு உரியது. அதனால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்ற பேச்சுகள் எல்லாம் அர்த்தமற்றது. அப்படி யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட ஒன்றல்ல அழகியல் என்பது. அழகியலையும் கலாச்சாரத்தையும் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜானதன் கல்லர் விஷயத்திற்குள் வருவோம். அழகியலுக்கும் கலாச்சாரத்திற்கும் சில வேளைகளில் முரண்பாடு வரும். ஆனால் இரண்டுமே இணைந்து போகக்கூடிய கூறுகள் இன்றைக்கு வந்திருக்கின்றன. பின்நவீனத்துவம் என்று சொல்லக் கூடிய புதிய கலாச்சாரம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கலாச்சாரமும் அழகியலும் ஒன்றாக இணைகின்றன. இணைந்தால்தான் சரியான ஓர் உலகப்பார்வை உங்களுக்குக் கிடைக்கும்.

தீராநதி : அப்போது நீங்கள் உங்களின் பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறி வந்து இருக்கிறீர்கள் இல்லையா?

தமிழவன் : உங்களின் பார்வை சரியானதுதான். ஆரம்பகட்டத்தில் நான் வெறும் கலாச்சாரத்தின் மட்டத்திலேயே நின்றால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கலாச்சாரத்திற்குள் அழகியல் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஏனென்றால் நானும் எனது கருத்துக்களை இடதுசாரிகளிடமிருந்து கற்றுக் கொண்டவன் என்பதால் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன்.

தீராநதி : நாம் இதற்கு முன் நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ரொலாண்ட் பார்த் தனது ‘பிரதி தரும் இன்பம் (ஜிலீமீ ஜீறீமீணீsuக்ஷீமீ ஷீயீ tலீமீ tமீஜ்t) என்ற கட்டுரையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்காக ஆசிரியன் கண்ணீர் வடிப்பதும், அதைப் படித்துவிட்டு வாசகர்களும் கண் கலங்குவதும் ஒருவித தற்காலிக மனச்சிதைவு நோய் என்கிறார். நமது மொழியில் வருகின்ற பல நாவல்கள் இந்தத் தன்மையோடுதானே வெளிவருகின்றன?

தமிழவன் : இந்தக் கேள்வியும் ஒரு ஆழமான விஷயத்தை எழுப்பக்கூடிய ஒன்றுதான். இலக்கியத்திற்கு என்ன பயன்பாடு இருக்கிறது? இலக்கியத்திற்கு நவீன வாழ்க்கையில் என்ன இடம் இருக்கிறது? இப்படி பிரச்னைகள் சார்ந்த விஷயம் இது. உங்களை ஏதோ ஆழ்ந்த கனவுக்குள்ளாக ஆழ்த்துவது, ஏதோ ஒரு மாய இன்பத்தை வழங்குவது என்று இலக்கியத்திற்கு ஒரு தன்மை இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பின்நவீனத்துவத்திற்கு முக்கிய இடமிருக்கிறது என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்தக் குறைகளையெல்லாம் பின் நவீனத்துவம் தான் கண்டுபிடித்திருக்கிறது. ‘சுய பிரதிபலிப்பு’ என்ற ஒரு கருத்தாக்கம் பின் நவீனத்துவத்தில் இப்போது வந்திருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் நாவல் எழுதும்போது ‘இது நாவல்’ என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். எம்.ஜி.ஆரின் படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ஓÊட்டுப்போடப் போகிற மனோபாவம்தான் இலக்கியத்திற்குள்ளும் நடக்கிறது.

இலக்கியத்திற்குள் இருக்கின்ற அழுகுணித் தன்மையை எப்போதுமே பரிசோதிக்கவும் அதிலிருந்து மனிதர்களை பாது காக்கவும் கூடியதுதான் இலக்கிய விமர்சனம். அந்தப் பாதுகாப்பும் விமர்சனமும் நமக்குத் தேவையாகிறது. இந்த மாதிரியான கும்பல் இலக்கியத்திற்கும் நல்ல இலக்கியத்திற்குமான வேறுபாட்டை க.நா.சு.தான் முதலில் சொன்னார். அதற்காக அவர் ‘‘நான் சொல்கின்ற பட்டியலை மட்டுமே படி’’ என்றார். அப்படி ஒரு பட்டியலை அவர் வெளியிட்டதுகூட நல்ல காரியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த அளவில் நீங்கள் எழுப்பிய இந்தப் பிரச்னையை ரொம்ப ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் எல்லோரும் உணர்ச்சி மயமானவர்கள் என்று அரசியல்வாதிகளிலிருந்து சாதாரண ஆட்கள் முதற்கொண்டு சொல்கிறார்கள். உணர்ச்சிவசமான இந்த மனிதக் கூட்டத்திற்கு இந்த விவாதம் ரொம்ப முக்கியமானதாக நாம் எடுத்துக் கொண்டு சர்ச்சித்து இருக்க வேண்டும். ஆழமாக விவாதித்திருக்க வேண்டும். எனவே ‘பிரதி தரும் இந்த இன்பம்’ இருக்கிறதல்லவா இது பல கொடூரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். ரொலாண்ட் பார்த் சொல்வது உண்மைதான். என்னுடைய நாவல்களில் வாசகனை நோக்கி கேட்கக்கூடிய ஒரு குரலைக் கொண்டு வருவதை முக்கியமான விஷயமாக முயற்சித்திருக்கிறேன்.

தீராநதி : உங்களுடைய பிரதிகளை வாசிக்கும் போது ஒரு வாசகன் என்பவன் இவ்வளவு முயற்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார் என்ற மைய இழையைப் பிடிக்க முடியும். இதை கட்டமைப்பதற்கான சகல வேலைகளையும் நுட்பமாகச் செய்திருக்கிறீர்கள். ‘‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலில்’ பௌத்தம் பற்றிய எதிர் கருத்துக்களை இலங்கைத் தமிழன்தான் எழுதுவதாக சொல்லப்படுகிறது. மைய இழையாக, உட்பொருளாக, ஆழமாக நீங்கள் வைத்த பிரதியை அதே ஆழத்தோடு கூடிய ஒரு வாசிப்பு இங்கு நடந்திருக்கிறதா?

தமிழவன் : ஒரு வகையில் தோல்வியுற்ற விமர்சகன் என்று என்னை நான் சொல்லிக்கொள்கிறேன். பல காலங்கள் கழித்து இப்போதுதான் தமிழ்த்துறைத் தலைவராக வந்திருக்கிறேன். நான் என்றைக்கும் தமிழ்த்துறை பக்கம் தலைகாட்டியவனே கிடையாது. என்னுடன் பணிபுரிகின்றவர்கள், நண்பர்கள் யாருமே என்னுடைய எழுத்தைப் படித்தவர்கள் கிடையாது. அனந்தமூர்த்தி போன்றவர்கள் என்னிடம் ‘‘உங்களுடைய எழுத்தையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்களா? ஏதாவது அங்கீகரிக்கிறார்களா?’’ என்று கேட்பார்கள். அதற்கு, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறேன். இந்த மாதிரியான புதிய குரல்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் அங்கீகரிக்கவில்லை. நானும் சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். நச்சினார்க்கினியரைப் பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் அந்த எழுத்தில் ஒரு மாறுபட்ட தன்மை இருக்கிறது. யாருமே அதை எடுத்துக் கொண்டு பிரச்னைக்கு உட்படுத்தி அறிவுபூர்வமாக விவாதித்ததில்லை. ஒரு சிலர் நான் ‘திருப்பாவை’ பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ‘இவன் அபாயகரமான மனிதன்’ என்று சங்கேதமாக பேசி அக்கருத்தைப் பரப்பி இருக்கிறார்கள். வைஷ்ணவ மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.

தீராநதி : அமைப்பியல் என்ற தத்துவ பின்புலத்திலிருந்து தொடங்கிய உங்களின் சிந்தனை படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு பின் நவீனத்துவம் வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. தமிழவன் என்றாலே ஞானக் கூத்தன் கவிதைகளை முதலில் விமர்சித்து பிறகு அந்நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆதரித்து எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. தற்கால தமிழ்க் கவிதைகளின் தொடர் வாசகனாகவும், விமர்சகனாகவும் இருந்து வருகிறீர்கள். பின்நவீனத்துவ கோட்பாடு கவிதைகளை நிராகரிக்கின்றது. கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது. மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டுதான் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று ரொலாண்ட் பார்த் சொல்கிறார். கூடவே பொதுப்படையாகப் பார்த்தால் கவிதை என்பது பொருட்களின் அந்நியப்படுத்தப்படாத அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருப்பதே என்றும் எழுதுகிறார். நீங்கள் பின் நவீன கருத்தாக்கத்தைக் கொண்டு கவிதை என்ற வடிவத்தை நிராகரிக்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?

தமிழவன் : சமீப காலமாக கவிதைகளைப் பற்றி எழுதுவதை தவிர்த்துக் கொண்டு வருகிறேன். புதுக் கவிதைகள் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற வகையில் எங்கு புதுக் கவிதைகள் பற்றி எழுதுகின்ற வாய்ப்புக் கிடைத்தாலும் உடனடியாக அதைப் பயன்படுத்தி எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறேன். வார்ஸாவுக்குச் சென்ற நான்கு ஆண்டுகளில் தமிழில் நடந்திருக்கும் பெரிய மாற்றத்தை நான் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டேன். சமீப காலமாக, குறிப்பாக நான்கு ஆண்டுகளாக பெண்கள் தமிழ்க் கவிதைகளில் செய்திருக்கின்ற மாற்றத்தை முக்கியமானதொன்றாக நான் பார்க்கிறேன். ஆழமாக இதைப் புரிந்து கொண்டு இவற்றைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

தீராநதி : ரொலாண்ட் பார்த் சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன்?

தமிழவன்: தமிழில் இதுவரை இல்லாத ஒரு பெரிய மாற்றம் கவிதைகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மொழிகளிள் யாப்பைத் துறந்த சமயத்திலும்கூட விடாமல் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மொழியில் இந்த மாற்றம் அதிரடியானது. புதுக்கவிதைக்குள் ஏதோ ஒரு ரகசியம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரொலாண்ட் பார்த்துக்கு வேண்டுமென்றால் ஃபிரெஞ்ச் மொழிகளில் நடக்கின்ற ரகசியங்களை பிடிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஃபிரெஞ்ச்சை விட ஆழ்ந்த பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள எனக்கு இப்போது தமிழில் நடந்து கொண்டிருக்கிறதில் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்றே படுகிறது. 1980களில் இருந்த இலக்கிய விமர்சனத்தை இன்றைக்கு எல்லோரும் அழித்து விட்டார்கள். அன்று அடிதடி, தகராறுகள் எல்லாம் நடக்கும். ஆனால் அதோடு கூடிய தத்துவ விவாதமும் இருந்துகொண்டேயும் இருக்கும். சண்டை போட்டுதான் பல விஷயத்தை நாம் கற்றுக் கொள்வோம். இதைத்தான் சமீபத்தில் இப்போது எம்.எல்.ஏ.யாக இருக்கும் ரவிக்குமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது வலியுறுத்தினார்.

தீராநதி : தமிழில் சமகாலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் கைனோகிரிடிசிஸம் (ரீஹ்ஸீஷீநீக்ஷீவீtவீநீவீsனீ) என்பது செழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (கைனோ கிரிடிசிஸம் என்பது பெண் எழுத்தாளர்களிடத்திலும் பெண்களுடைய அனுபவத்தைச் சித்திரிப்பதிலும் அக்கறை கொண்ட பெண்ணிய விமர்சனமாகும்) ஆனால் இங்கு அந்தப் பெயர்களில் பெண்ணிய எழுத்துக்கள் அணுகப்படுவதில்லை...

தமிழவன் : கைனோகிரிடிசிஸம் என்பதெல்லாம் இங்கே வராது. அமைப்பியலை நாங்கள் இங்கு கொண்டு வந்தபோது கூட தமிழுக்கு ஏற்ற தன்மையில் அது வலியுறுத்தப்பட்டது. பின் அமைப்பியலுக்கும் இது பொருந்தும். தமிழ் மக்களுக்கு வாழ்க்கை என்பது முக்கியம். வாழ்க்கைக்கான சில விஷயங்கள் கலாச்சாரத்தில் இருக்கிறது. அதோடு இணைத்துதான் நம்முடைய சிந்தனையும் போக வேண்டும். அதற்காகத்தான் தொல்காப்பியத்திற்கு நான் தேடிப் போனேன். அமைப்பியலை முன் வைத்த மேலை நாட்டவர்களுக்கும் நமது தொல்காப்பியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அமைப்பியலும் மொழியியலிலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள். நமக்கும் மொழியியல் பற்றிய ஆழ்ந்த பார்வைகள் தொல்காப்பியத்தில் இருக்கிறது. அவர்களைவிட பழைமையான சிந்தனை நமது தொல்காப்பியத்தில் இருக்கிறதே! அதையெல்லாம் தெரியாமல் உடனே அவர்கள் சொல்வது போல் அதே பாதையில் செல்லக் கூடாது. இல்லையென்றால் நமது பார்வை போலித்தனமாக மாறிவிடும். ஆக, மேற்கத்திய பெண்ணியவாதிகளின் அதே தன்மைகள் இங்கேயும் வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. தமிழ்த் தன்மை கொண்ட பெண்ணியக் கவிதைகள்தான் இங்கே உருவாகும்.

தீராநதி : என்னுடைய கேள்வியை முடிப்பதற்குள் முன்னதாகவே பேச ஆரம்பித்துவிட்டீர்கள். சரி, அதுவும் ஒருவிதத்தில் நன்மைதான். பெண்ணியக் கோட்பாடு இருவிதமான இழைகளை உள்ளடக்கியுள்ளது. ஒன்று அது உளப் பகுப்பாய்வை அதனுடைய உறுதியான பாலியல் அடிப்படைகளுக்காகப் புறக்கணிக்கிறது. மற்றது ஜாக்குலீன் ரோஸ் (யிணீஹீuமீறீவீஸீமீ ஸிஷீமீs), மேரி யெ கொபஸ் (விணீக்ஷீஹ் யிஷீநீஷீதீus), மற்றும் காஜா சில்வர்மன் (ரிணீழீணீ ஷிவீறீஸ்மீக்ஷீனீணீஸீ) போன்ற பெண்ணிய அறிஞர்கள் உளப்பகுப்பாய்வைச் சிறப்புற மறுவெளிப்பாடு செய்திருப்பதை இணைத்துக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளை இயல்பாக்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். அந்த அம்சத்தைக் கொண்டுள்ள உளப்பகுப்பாய்வின் மூலமே பெண்களின் இக்கட்டை ஒருவரால் புரிந்து கொள்ளவும் மறு கற்பனை செய்து பார்க்கவும் நம்பிக்கை கொள்ளவும் முடியும். இலக்கியப் பெரும் திரட்டை (லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் நீணீஸீஷீஸீ) விரிவாக்கியதன் மூலம் புதிய விவாதப் பொருள்களின் பரப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் பெண்ணியம் அதனுடைய பல்வகைத் திட்டவரைவுகளினூடே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இலக்கியக் கல்வியில் முக்கியமான மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் இங்கு பெண்ணியம் சார்ந்த கவிதைகள் வெளியான அளவிற்கு அதன் தத்துவங்கள் எழுதப்படவில்லை. அறிமுகப்படுத்தப்படவில்லை. தத்துவப் பார்வை இல்லாததனால் இவை மலினமான அணுகுமுறையோடு அலசப்படுகின்றனவா? அதைப் பற்றி கேட்கிறேன்?

தமிழவன் : நீங்கள் சொல்வது சரியானது. ‘உடல் அரசியல்’ என்ற சொல் இருக்கிறதில்லையா அதை ஆங்கிலத்தில் ‘பாடி பாலிடிக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஆங்கில வார்த்தையைத்தான் இவர்கள் தங்களுக்குத் தெரிந்த பொருளில் எடுத்து மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய தத்துவப் பரப்பில் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பேர்கள் எந்தளவுக்கு முக்கியமானவை என்பது எனக்குத் தெரியவில்லை. லுசி ஈரிகரே என்பவரின் புத்தகத்தை வார்ஸாவில் நான் இருந்த போது வாசித்தேன். அவர் கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரத்தைப் பற்றி அதில் எழுதி இருக்கிறார். அவர் ஒரு உளப்பகுப்பாய்வாளர். தீவிரமான யோகாவில் ஈடுபட்டு, அதில் பெண்களுக்கு ஏற்படும் மனோநிலை என்ன? அதனால் உண்டாகும் பிரச்னைகள் என்ன? என்று ஆராய்ந்து பெண்ணிய நோக்கில் ஒரு புதுப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். பெண்ணியத்தில் கிழக்கத்திய சமூகங்கள் எப்படி யோக நிலையில் ஈடுபாடு கொள்கிறார்கள் என்று நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார்.

ஆண் பெண் உறவில் ஏற்படும் அழுத்தத்தை நமது நாட்டில் சமணம் வந்த பிற்பாடு அடக்கி இருக்கிறது. இவர் அதைப் பற்றி தரவாக வைத்து ஆராய்ந்து அந்த அழுத்தத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்கிறார். மனித மனநிலை நாகரிகத்தினால் இறுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவத்திலும் கூட அது இறுக்கப்பட்டிருக்கிறது. சிறையில் அடைப்பதைப்போல மனித உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை கொஞ்சம் நெகிழ்த்தினாலும் கூட பெரிய எதிர்ப்புகள் நமது கலாச்சாரத்தில் ஏற்படுகின்றன. சமீபத்தில் நடிகை குஷ்புவின் பிரச்னையில் அதுதான் நடந்திருக்கிறது. சங்க இலக்கியம் என்பது இந்தக் கட்டுப்பாடை மீறியதொரு வாழ்க்கை. தொல்காப்பியத்தில் ‘களவியல்’ என்பது இயல்பானதொன்று. பரத்தையிடம் போதல் என்பது இயல்பானதொன்றாக சொல்லப்படுகிறது. ‘கள்’ உண்ணுதல் என்பதும் கூட சங்க இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகவே இருந்திருக்கிறது. மகிழ்வான ஒரு நிகழ்வு அது.

சமண கருத்துகளுக்கு தமிழ்ச் சமூகம் ஆட்பட்ட பிற்பாடு தொல்காப்பிய கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையான கருத்துகள் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. சமண மரபில் வந்த வள்ளுவர் ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரத்தையே எழுதுகிறார். ஆக, ‘மகிழ்வு’ என்பதை பெண் கவிதைகளில் பார்க்கும் போது முதன் முதலாக இந்தப் பிரச்னையை தொடத் துவங்கி இருக்கிறார்கள். பெண்களும் தங்களுடைய உடலை மகிழ்ச்சியோடு பார்க்கலாம் என்று ஒரு புதுக் குரல் உள்ளே வந்திருக்கிறது. அது ஆழமாக சிந்திக்கக் கூடிய ஒரு விஷயமாக எனக்குப் படுகிறது. நமது சமூகத்தில் இந்தக் குரல்கள் இப்போதுதான் உள்ளே வந்திருக்கின்றன. இதை முற்றிலும் ‘போலி’ என்று ஒதுக்கவும் முடியாது. அதே சமயத்தில் விமர்சன தளம் ஒன்று இதற்கெல்லாம் இங்கே இல்லாதிருப்பதுதான் பெரிய ஆபத்தென்றும் நினைக்கிறேன்.

தீராநதி: இதுவரை கல்வி புலமாக இது வளர்த்தெடுக்கப்படாமல் இருக்கிறதல்லவா அந்தச் சிக்கலைப் பற்றி கேட்கிறேன்?

தமிழவன்: இந்தத் தோல்விக்கு முதற் காரணம், ‘போலி’ பல்கலைக் கழகங்கள். கோடிக்கணக்கான மத்திய தரவர்க்கத்தினுடைய பணத்தை ஹிநிசி என்பது இங்கே அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் மக்களுடன் இணைந்த ஆய்வுகளோ ஆராய்ச்சிகளோ நடத்துவதே இல்லை. ஒரு சிறுபத்திரிகைக்காரனையாவது அழைத்து எந்தப் பல்கலைக்கழகமாவது ஆராய்ச்சி செய்கிறதா? பெண் கவிதைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் நமது சமூகத்தில் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரடி பிரச்னைகள். இந்த விவாதங்களையெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் எடுத்துக் கொண்டு விவாதித்திருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தோற்றுப் போய்விட்டன. துணை வேந்தர்கள் தோற்றுப்போனார்கள். நமது கல்வி அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள். அகாடமிகள் தோற்றுப் போயின. சிறுபத்திரிகைகள்தான் இதை தூக்கிக்கொண்டு கடினமாக உழைக்கின்றன. பல மொழி பெயர்ப்புகளை சொந்தச் செலவில் வெளியிடுகின்றன.

முழுச் சுதந்திரம் கொடுத்து பல்கலைக் கழகம் ஒரு துறையை உருவாக்குவதற்கு இன்றைக்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கும் நேரத்திலும் கூட முழுவதுமாக இந்தக் குரலை என்னால் உள்ளே கொண்டு சேர்க்க முடியவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

தீராநதி: தத்துவ அறிவு என்பது வாழ்க்கைக்கு தேவையானதொன்று. தத்துவம் என்பது குழப்பமடைந்த மனித இனம் மீண்டும் சரியாகச் சிந்திப்பதற்குச் செய்யும் முயற்சியாகும் என்று சமகால தத்துவ ஆய்வாளரான எட்வர்டு கிரெய்க் சொல்கிறார். நீட்ஷேவோ தத்துவவாதியை ‘ஒரு பயங்கரமான வெடி மருந்து; அவனிடமிருந்து எதுவும் பாதுகாப்பாகத் தப்பிக்க முடியாது’ என்கிறார். தத்துவ அறிவை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?

தமிழவன்: இது ஒரு மையமான பிரச்னை. சிறுபத்திரிகைகள் சூழலில் இயங்குகின்ற நண்பர்கள் மத்தியில் தத்துவம் பற்றிய ஆராய்ச்சி விவாதமெல்லாம் மீண்டும் வந்திருக்கிறது. முன்பெல்லாம் நான் மேலைக் கலாச்சாரத்தில் இருக்கிற தத்துவ கருத்தாக்கங்களை அப்படியே கொண்டு வந்து இங்கே வைத்து விவாதித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தமிழ்த் தேசிய மனோபாவத்திற்குள் (சுமார் ஆறுகோடித் தமிழர்கள் மத்தியில் இயங்கக் கூடிய மனோபாவத்தின் அடையாளத்தை நான் தமிழ்த் தேசிய மனோபாவம் என்று குறிப்பிடுகிறேன்) தத்துவம் பற்றிய விவாதம் மிக மிக முக்கியமானது. சைவ சித்தாந்த மரபு, பௌத்த மரபு, சமண மரபு என்று பல தத்துவ மரபுகள் தமிழ்ச் சமூகத்திற்குக் கண்டிப்பாக இருந்திருக்கிறது. தற்கால தத்துவ மரபு என்பதை நாம் மேற்கத்திய சிந்தனையாளர்களோடு இணைத்து வைத்து இன்றைக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தத்துவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான போக்குகள் உண்டு. ஒன்று: தத்துவம் வாழ்க்கைக்குத் தேவையானது என்பது. இரண்டு: தத்துவம் அழிவைக் கொண்டு வந்துவிடும் என்பது.

உலகத் தத்துவ மரபில் நீட்ஷேவின் தத்துவம் மிக முக்கியமானது. தன் வாழ்நாள் முழுவதும் தத்துவத்திற்கே செலவழித்த ஒரு தத்துவவாதியான நீட்ஷேதான் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்தையும் சொல்லி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால் தான் தெரிதா கூட தனது சிந்தனைகளை விளக்க இலக்கியத்தை கையில் எடுக்கிறார். போகப்போக தெரிதா தத்துவவாதியா? இலக்கியவாதியா? என்ற சந்தேகம் எழுகிறது. நமது தத்துவத்தை தேசியமயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சைவசித்தாந்தத்தில், மணிமேகலையில், பக்தி இலக்கியத்தில் இருக்கக் கூடிய வைஷ்ணவம் போன்ற தத்துவ மரபுகளை ஆழமாக மீண்டும் நாம் வாசிக்க வேண்டும். தொல்காப்பியம் இன்று மறுபடியும் ஒரு ஃபேஷனை போல மேலெழுந்திருப்பதின் அர்த்தம் அதுதான். இன்றைக்கு எல்லோரும் உரைமரபுகள் மிகவும் முக்கியமானவை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். 1980_களில்தான் இந்தப் பார்வை வலியுறுத்தப்பட்டது. அதற்குக் காரணம் என்னவென்றால் தெரிதாவினுடைய கருத்துக்களை நம்முடைய உரைமரபுகளோடு இணைத்துதான் புரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு குரல் இங்கு உருவானது. ஆக, நான் என்ன சொல்கிறேன் என்றால் தத்துவத்தை தமிழர்கள் மிகவும் தீவிரமான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பரிதாபம் என்னவென்றால் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவத்துறையில் எந்த மாணவர்களும் சேர்வதேயில்லை. பெங்களூர் பல்கலைக்கழகத்திலுள்ள தத்துவத்துறையை சமீபத்தில்தான் மூடினார்கள். சிறுபத்திரிகைகளின் தத்துவ இயக்கத்திற்கு எந்த அரசும் பணஉதவி செய்வதில்லை. ஆனால், சாகித்ய அகாடமியில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. டெல்லியிலிருந்து சாகித்ய அகாடமியின் உயர் அலுவலர் ஒருவர் சென்னைக்கு வருகிறார் என்றால் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விமானச் செலவுக்காக வழங்கப்படுகிறது. இந்தச் செலவில் அடிக்கடி விமானத்தில் பலர் பறந்து கொண்டிருக்கிறார்கள். யாராவது கணக்கெடுப்பு நடத்தினால் சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது, விமானச் செலவுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்று பார்த்தால் 90 சதவீதப் பணம் விமானச் செலவுக்காக மட்டுமே செலவழிக்கப்படுவது தெரிய வரும். வருடத்திற்கு புத்தகத்திற்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 25 ஆயிரத்தை அதிகப்படுத்தச் சொல்லி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கக் கூடிய நிர்வாகத்தினர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் நாம் பொது தளத்திற்குள் விவாதிக்கத் தொடங்கவில்லை என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது.

தீராநதி : உங்களின் தொடர் பேச்சில் மைய இழையாக ழான் பொத்திரியாரின் (யிமீணீஸீ ஙிணீஸீபீக்ஷீவீறீறீணீக்ஷீபீ) ஹைபர் ரியாலிட்டி என்ற கருத்தாக்கம் வந்துகொண்டே இருக்கிறது. ‘‘உண்மை இறந்து விட்டது. இங்கு எதுவுமே நிஜம் இல்லை. நகல்களின் பிம்பங்களை பொழிந்த படிதான் டி.வி. கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகை, விளம்பரங்கள் யாவுமே இருக்கின்றன. இந்த நகல்கள்தான் நமது கலாச்சாரத்தின் உண்மைகள்’’ என்று அவர் சொல்கிறார். நமது தமிழகத்தில் கூட சமீப காலமாக ‘சேகுவேரா’ என்ற டி_ஷர்ட் பிம்பம் உண்மை பிம்பத்தைவிட கவர்ச்சியாகவும், வியாபார நுகர் பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்? இன்றைய அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள இவை உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கின்றன?

தமிழவன் : ஒரு விதமான பின் நவீனத்துவ அரசியல் என்பது இங்கேயும் செயல்படுகின்றது என்பது உண்மைதான். இந்தியாவிலேயே இந்தப் பிம்பங்களின் கவர்ச்சியில் அதிகமாக சிக்கி கலாச்சாரத்தை இழந்தவர்கள் நமது தமிழர்கள்தான். சினிமாவில் வருகின்ற பிம்பங்களை நிஜமெனக் கருதி அவர்களை தங்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய தலைவர்களாக பார்த்து பிரமித்தார்கள். தொலைக்காட்சியைப் பார்த்து அதில் பேசுகின்ற மொழியை இன்றைக்கு நமது பிள்ளைகள் பழகத் தொடங்கி இருக்கிறார்கள். இதுபோல வாழ்க்கையே சினிமாவாக மாறி இருக்கிறது. வரலாற்று ரீதியாக விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்கு வந்தபோது பெரும்பாலான தெலுங்கர்கள், பிறமொழியினர் எல்லாம் நம் சமூகத்திற்குள் வருகிறார்கள். இவர்களிடம் ஒரு சாராம்சத்தன்மை என்பது இல்லை. வீட்டுக்குள் ஒரு மொழியைப் பேசிக்கொண்டு வெளியில் ஒரு மொழியைக் கையாண்டார்கள். இன்றைக்குப் பிறமொழி பேசுகின்றவர்களை நான் தமிழர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். இவர்களும் தமிழர்கள்தான். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள் இல்லையா அதுதான் பின் நவீனத்துவ அடையாளத்தின் அடிப்படை.

தமிழர்கள் அல்லாதவர்கள் கூட தன்னை வெளிச்சமூகத்திற்குள் ‘தமிழன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு பின் நவீனத்துவ ‘ஐரனி.’ இங்கே ஒரு மலையாளி முதல்வராக வரலாம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக ஆட்சி செய்ய முடிந்திருக்கிறது. இந்த மாதிரி பின் நவீனத்துவ ‘ஐரனி’ தமிழ்ச்சமூகத்திற்கு பலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பின் நவீனத்துவக் கோட்பாடு இல்லாமல் வேறு எந்த அடிப்படையிலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதுவும் இதன் அடிப்படைதான். பழைய காலத்தில் பெரியார் சொன்னதுபோல இவர்களை கூத்தாடிகள் என்று சொல்லி ஒதுக்க முடியாது. பெரியாரும் சினிமாக்காரர்களை தொலைக்கப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்து விட்டார்கள். இன்று பெரியாரைக் காணவில்லை. அவரைத் தேட வேண்டியதாக இருக்கிறது. இதுவெல்லாம் பொத்திரியார் சொல்லும் ‘உண்மை இறந்துவிட்டது’ என்ற கருத்தோடு பொருந்திப்போகக்கூடிய ஒன்றுதான்.

சந்திப்பு : கடற்கரய்

நன்றி: தீராநதி (தை, 2008)

7 comments:

அற்புதன் said...

டிசே கட்டுரையைப் படி எடுத்துப் போட்டமைக்கு நன்றிகள்.
சில விடயங்கள் எனக்குக் குழப்பமாக இருக்கிறது, யாராவது விளங்கப்படுத்த முடியுமா?

//இன்றைக்கு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தமிழ்த் தேசிய மனோபாவத்திற்குள் (சுமார் ஆறுகோடித் தமிழர்கள் மத்தியில் இயங்கக் கூடிய மனோபாவத்தின் அடையாளத்தை நான் தமிழ்த் தேசிய மனோபாவம் என்று குறிப்பிடுகிறேன்) //

// இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள் இல்லையா அதுதான் பின் நவீனத்துவ அடையாளத்தின் அடிப்படை.//

பின் நவீனத்துவம் என்பதே தேசிய அடையாளம் என்பதை மறுதலிப்பதாக ஒரு பக்கத்தில் பெரும் கதையாடல் நடக்கிறது.இங்கு இவர் சொல்லும் தமிழ்த் தேசிய மனோபாவம் என்பது என்ன?
ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி எழுப்பவது என்பதே பின் நவீனத்துவ அடையாளம் எனில், உண்மையில் பின் நவீனத்துவம் என்றால் என்ன?

வழக்கமான, அது எல்லாமுமானது எங்கும் நிறைந்திருப்பது என்னும் கதையாடல்கள் தயவு செய்து வேண்டாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இம்மாத தீராநதியில் இந்த நேர்காணலைப் படித்தேன்.

அனைத்துலக வாசகர்களை மனதில் கொண்டு நாவல் எழுதச் சொல்லுவது எந்த அளவிற்குச் சரியாக இருக்கும்.

அனைத்திந்தியாவைக் கருத்தில் கொண்டு எடுக்கப் படும் ஷங்கர் படங்கள் / ரஹ்மான் இசை பிராந்திய குணாம்சங்களை ஒதுக்குகின்றன என்பது கண்கூடு.

ஒரே உலகம், ஒரே ரசனை, ஒரே பொருள் என்பது consumerismத்தின் இலக்கல்லவா.?

இது பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயுள்ளேன்...

Anonymous said...

படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்

you mean, this interview :)

Anonymous said...

ஏமாற்றம்.

'ஏற்கனவே சொல்லப்பட்ட தமிழவன்' அல்ல இவர்.

அனைத்துலகுக்கும் பொதுவான இலக்கியம் என்றால் என்ன? அப்படி ஒரு படைப்புக்கு நிசமாகவே சாத்தியம் இருக்கிறதா? எவ்வளவுக்கு எவ்ளோ லோக்கலாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது க்ளோபலாக ஆகும்.

எண்பதுகளில் கலகக்காரராக அறியபெற்ற சாருநிவேதிதா இப்போது கோமாளியாகக் காட்சிஅளிப்பதற்கு என்ன காரணம் என்று இப்போது புரிகிறது, with all due respects to thamizavan that is :-)

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பரகளே.

இளங்கோ-டிசே said...

அற்புதன், உங்களின் கேள்விகளுக்கு யாரேனும் விரிவாகப் பதிலளிப்பார்கள் என நம்புகின்றேன். அந்தப் பதிலகள் எனக்கும் உதவக்கூடும்.
நிற்க.
/ வீட்டுக்குள் ஒரு மொழியைப் பேசிக்கொண்டு வெளியில் ஒரு மொழியைக் கையாண்டார்கள். இன்றைக்குப் பிறமொழி பேசுகின்றவர்களை நான் தமிழர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். இவர்களும் தமிழர்கள்தான். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள் இல்லையா அதுதான் பின் நவீனத்துவ அடையாளத்தின் அடிப்படை./

தமிழவன் கூறியது வெவ்வேறு மொழிகளை தமது தாய் (வீட்டு மொழி?) ஆகக்கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் அடையாளத்தோடு ஒன்றிணைய முடியும் என்றுதான் அர்த்தம் கொள்கின்றேன். கர்நாடகத்திலோ அல்லது இன்னபிற மாநிலங்களிலோ மொழி சார்ந்த தேசியத்தை வலியுறுத்தி பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை அந்நியராக உணரச்செய்ததுமாதிரி தமிழ்நாட்டில் செய்தல் அவ்வளவு சாத்தியமில்லை எனத்தான் கூறுகின்றார். பெரியாரிலிருந்து ,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றும் இலக்கியம் என்றுவருகின்றபோது கி.ரா, திலீப்குமார், ஜெயமோகன் வரை தமிழ்மொழியை தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. எனினும் தமிழ் உலகம் அவர்களைத் தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இன்றும் இவர்கள் மீது அந்நியர் என்ற சொல்லாடல்களை தேசியர்கள் முன் வைக்கும்போது தமிழ்ச்சூழலில் எடுபடமுடியாமற்போவதற்கு இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்ட மனநிலையே காரணம் எனக்கொள்ளலாம். இப்படி தமிழர்கள் என்பவர்கள் யாரெனத் தெளிவாக வரையறுக்கமுடியாத ஒரு அடையாளமற்ற அடையாளத்தை (குழப்புகின்றேன் என்று சொல்ல்லப்போகின்றீர்கள்) தமிழ்ச்சூழல் தருவதையே தமிழவன் பின் நவீனத்துவ் முறை எனச்சொல்கின்றார் எனக்கொள்கின்றேன்.. தேசியம் வைக்கின்ற தமிழ் அடையாளத்துக்குள் தெலுங்கையோ இன்னபிற மொழியைத் தாய் மொழியாக கொண்டவ்ர்களை அது அந்நியரெனவே ஒதுக்கிவைக்கும். தமிழ்நாட்டுச் சூழலில் இருக்கும் இந்த -வரையறுக்க முடியாத- அடையாளமற்ற அடையாளமே முக்கியமானதும், எவரையும் எதன்பொருட்டும் அந்நியராக வெளியேற்றமுடியாத தன்மையைக் கொண்டிருக்கின்றது எனவும் நம்புகின்றேன். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமுமில்லையென இப்பவே தப்பித்துக்கொள்கின்றேன் :-).

இளங்கோ-டிசே said...

எப்போதும் படைப்புக்கு முன் துருத்திக்கொண்டிருக்கும் படைப்பாளியின் குரல் அலுப்பைத் தருபவை. அதைத்தான் தமிழவன் தனது புதிய நாவலுக்கு செய்துகொண்டிருக்கின்றார். உலகத்தரமளவில் எழுதப்பட்ட நூலை இப்படித்தான் வாசிக்கவேண்டும்/விளங்கிக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகள் எல்லாம் முன்முடிவுகள் எதுவுமின்றி வாசிக்கவிடாத தடைக்கற்கள்தான். பின் - அமைப்பியல் என்ற நீண்ட புத்தகத்தை எழுதிய தமிழவனுக்கே தனது நாவலை அதன்பாட்டில் உரையாடவிட்டு அமைதியாக இருககவேண்டும் என்பது புரியாதது புதிரே. ஆகககுறைந்து நாவல் வெளியே வந்து விமர்சனங்கள் வரத்தொடங்குகின்றபொழுதிலாவது இன்னொரு வாசகராய்த் தனது புதினம் பற்றி தமிழவன் உரையாடத் தொடங்கியிருக்கலாம்.
............
/ஒரே உலகம், ஒரே ரசனை, ஒரே பொருள் என்பது consumerismத்தின் இலக்கல்லவா.?/
&
/அனைத்துலகுக்கும் பொதுவான இலக்கியம் என்றால் என்ன? அப்படி ஒரு படைப்புக்கு நிசமாகவே சாத்தியம் இருக்கிறதா? எவ்வளவுக்கு எவ்ளோ லோக்கலாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது க்ளோபலாக ஆகும்./

சுந்தர் & பிரகாஸ்,
உங்களின் கருத்துக்களோடு அதிகம் ஒத்துப்போகின்றேன். தமிழவனே நிறையக் குழம்பித்தான் நேர்காணலில் உரையாடுகின்றார். ஒருவர் உலகத்தரமான எழுத்தை எழுதியபின் பிறகு எதற்கு லிட்ரசி எடிட்டிங் தேவை? எந்தப் புதினமும் அதன்பாட்டில் எழுதப்படவேண்டும். பிறகு உலகத்தரத்திற்கு(?) கொண்டுபோகும் மாற்றங்களை/திருத்தங்களைச் செய்யலாம். உலகத்தரம் என்பதன் அளவீடுகள் என்னவென்பது முளைக்கும் இன்னொரு கேள்வி. எல்லோருக்கும் பொதுவான வாசிப்பு சாத்தியந்தானா? இன்னும், நான் உலகத்தரத்திற்கு எழுதியிருக்கின்றேன் என்று தமிழவன் சொல்லியிருப்பது கூட ஒருவித லேபிள்தான்.

தமிழவனின் குழப்பங்களை நேர்காணல் கண்ட கடற்கரய் வெகுவாக வெளிக்கொண்டு வந்துவிடுகின்றார்...
/அனைத்துலக நாவலுக்கான தன்மையை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாதிரியான அம்சம் என்பது ஆரோக்கியமானதொன்று. ஆனால் அலெக்ஸ் ஹேலி, சினுவா ஆச்சிப்பி போன்றவர்கள் அவர்களின் மரபார்ந்த விஷயங்களை, கலாச்சாரங்களை, பிரச்னைகளை ஒரு நாவலாகச் சொல்லும் போதுகூட அதில் அனைத்துலக வாசிப்புத்தன்மை என்பது இருக்கிறது./ என்று.

வட்டார வழக்கை நிராகரிக்கும் தமிழவனின் போக்குகள் எல்லாம் வியப்பைத்தருகின்றது என்று சொல்வதைத்தவிர வேறொன்றுமில்லை :-(.