விருதுகள் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியனவாகவே இருக்கின்றன. எந்த விருதும் அது சார்ந்திருக்கும் அமைப்பின் விருப்பு/வெறுப்புக்களை மீறி அனைவரையும் போய்ச்சேருதல் அவ்வளவு சாத்தியமில்லை. எனினும் விருது கொடுப்பவர்களின் அரசியலை நாம் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலம் பொதுவெளியில் அம்பலப்படுத்தமுடியும். அவ்வாறு அந்த நபர்களின்/அமைப்புக்களின் அரசியலைப் புரிந்துகொண்டபின் எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமில்லையென அதைவிட்டு நகர்வதுதான் நமக்கு நல்லது.
கனடாவில் வழங்கப்படும் இயல் விருதின் அரசியல் குறித்து நான் உட்பட பல நண்பர்கள் கடந்த காலங்களில் கேள்விகள் எழுப்பியிருக்கின்றோம். முக்கியமாய் இவ்விருதின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென வெளிப்படையாக தங்களை அறிவித்துக்கொள்ளவேண்டும் என்றும், இயல் விருதுக்கு உரித்தானவர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு உரியமுறையில் விளக்கம் தரப்படவேண்டும் என்றும் கேள்விகள் எழுபியிருக்கின்றேன்/றோம்.
இம்முறை விருது லக்சுமி ஹோம்ஸ்ரோம் ற்கு வழங்கப்பட்டபின் கனவிலிருந்து விழித்து வந்த நவீன தேவதூதுவராய் ஜெயமோகன் களமிறங்கியிருக்கின்றார். லக்சுமி ஹோம்ஸ்ரோமிற்கு அல்ல, பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் ற்கு 2005 இயல்விருது வழங்கப்பட்டபோதே இயல்விருதின் வீழ்ச்சி குறித்து பேசியிருக்கின்றேன். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழிற்காய் சிறு துரும்பை எடுத்துப்போட்டவர்கள் எவராயிருப்பினும் அவர்கள அங்கீகரிக்கப்படவேண்டும் எனபதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களில்லை. ஜோர்ஜ் எல் ஹார்டோ அல்லது லட்சுமி ஹோம்ஸ்ரோம்ற்கோ அவர்களின் உழைப்பிற்காய் விருது கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல எனது விழைவு. சில வருடங்களுக்கு முன் நானெழுதியதியதன் ஒரு பகுதியை மீளவும் பதிகின்றேன்...
...சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமித்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.
அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும்...
இயல்விருதின் பின் நிற்பவர்கள் யாரென நாம் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளின் நிமித்தாலோ என்னவோ, சென்ற ஆண்டு தாசீசியஸிற்கு இயல் விருது வழங்கிய நிகழ்வில் தேர்ந்தெடுத்த நடுவர்களின் பெயர்கள் முதன்முதலாக வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன் (வீ.அரசு அவர்களில் ஒருவர்; மற்றவர்களின் பெயர்கள் இப்போது நினைவினில்லை). இந்த முறையும் நான்கு நடுவர்கள் இருந்தார்களென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வெளிப்படையான அறிவிப்பு நல்லதொரு விடயமே. இம்முறை ஜெயமோகன் நடுவர்களோடும் அழுகுணி ஆட்டம் ஆடுவதற்கு அவருக்குரித்தான் அரசியலே காரணம். ஜெயமோகனிற்கு, நுஃமான் மீதான காழ்ப்புணர்வுக்கு அவரொரு மார்க்சியவாதியாக இருப்பதுவும், ஆ.இரா. வெங்கடாசலபதி மீதான காய்தலுக்கு சலபதியின் திராவிட இயக்கங்கள் மீதான பற்றென்பதையும் நாம் நன்கறிவோம் (தனிப்பட்டு சலபதி மீது நிறைய விமர்சனங்கள் உண்டு, அது இப்போது தேவையும் அல்ல).
இன்று திண்ணையில் ஒரு பொது வேண்டுகோளை ஜெயமோகன் வைத்திருக்கின்றார். ஏற்கனவே மேலே கூறியதுமாதிரி ஒவ்வொரு விருதுக்குமான அரசியல் தவிர்க்கமுடியாதவை. அதே சமயம அவற்றின் அரசியலைப் புரிந்துகொள்ளலும் தெளிதலுமே, விருதுகளின் அமைப்புக்கு வெளியில் இருக்கும் நம்மைப்போன்றவ்ர்கள் செய்ய வேண்டியவை. இவ்வாறு எல்லா விருதுகள் குறித்தும் அக்கறைப்படும் ஜெயமோகன் (அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து நடத்திய ) 'சொல் புதிது' இதழ்களைக் கொண்டுவந்தபோது அவர் தனக்குரியவர்களுக்கு மட்டுமே சிறப்பிதழ்கள் வெளியிட்டும் தன்னைப் பாராட்டுபவர்களைத்தான் முன்னட்டையில் போட்டும் பாராட்டியிருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனக்குக் கிடைத்த சொற்ப 'சொல் புதிது' இதழ்களில் வெங்கட் சாமிநாதன், யோகி ராம்சுரத்குமார், எம்.யுவன் போன்றவர்களே முன்னட்டையை அலங்கரித்ததும் சிறப்பிதபிதழார்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஜெயமோகனுக்கு நான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே தனது அரசியலுக்கு அப்பாலிருப்பவர்களை முன் நிறுத்தி உரையாடல்களை ஆரம்பிக்க விரும்ப்பாத ஒருவர் 'ஐயகோ விருதுகள் எல்லாம் பாழ்/விருதுகளுக்கு அரசியல் இருக்கிறது' என்று ஒப்பாரி வைக்கும்போது அவருக்குப் பின்னால் நிற்கவேண்டும் என்றோ அல்லது அவரின் குரலைச் செவிமடுக்கவேண்டுமென கேட்பதன் அரசியலை எவ்வாறு விளங்கிக்கொள்ளுவது? இன்று இன்னும் விருது கிடைக்காத அவர் பட்டியலிடுகின்ற 'முன்னோர்களில்' அவருக்கு எதிர்த்தளத்தில் இயங்கிய/இயங்கிக்கொண்டிருக்கும் தொ. பரமசிவம், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, பொதியவெற்பன் போன்றவர்களுக்கு இடமேயில்லை.
'விளக்கு' விருதில் இன்னமும் நம்பிக்கை கொள்கின்ற ஜெயமோகனுக்கு ஏன் விளக்கு அமைப்பாளர்கள், தமிழக இலக்கியவாதிகளுக்கு மட்டும் விருதை வழங்குகின்றார்கள் என்பது குறித்து எந்தக்கேள்வியுமில்லை. தமிழகத்தில் மட்டுந்தானா தமிழ் இருக்கிறது? தமிழகத்தவர்கள் மட்டுந்தானா இலக்கியவாதிகளாக இருக்கின்றார்கள்? எனவே விளக்கு விருதை எம் முன்னோருக்கு எந்த இடமும் வழங்க இடங்கொடுக்காத விருதென ஒரு ஈழ/புலம்பெயர்ந்தவனாய் நிராகரிக்கவே செய்கின்றேன்.
இதுவரை இயல் விருது வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் பல அரசியல்கள் புரியும். சிலதை இங்கு பார்ப்போம்...
(1) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால்...
சுந்தர ராமசாமி + வெங்கட் சாமிநாதன் + லட்சுமி ஹோம்ஸ்ரோம் = ...?
(2) மார்க்சிசம் பேசி அதைத் தமது வாழ்வாக வரித்துக்கொண்டவர்களுக்கு இயல் விருதில் இடமேயில்லை. தமிழகத்தை விடுவோம், ஈழத்தில் எமக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த நிறைய இலக்கியவாதிகள்/விமர்சகர்கள் இடதுசாரிகளாய்த்தான் இருந்திருக்கின்றார்கள். எனவே நாங்களும் ஜெயமோகன் கூறுகின்றமாதிரியே - எம் முன்னோர்களை இன்னமும் அங்கீகரிக்காத- இயல்விருதில் எங்களுக்கும் உடன்பாடில்லையெனவே சொல்கின்றோம்.
இயல்விருதோடு அண்மைக்காலங்களில் வேறு சில உப பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அதை வெளிப்படையாகப் பட்டியலிப்படுகின்ற தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பதில்லையென நினைக்கின்றேன் (எனெனில் வீ.அரசு தாம் பிறத் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லையெனச் சொன்னதாய் நினைவு). சென்ற ஆண்டு கவிதைக்கான விருது சேரனின் 'மீண்டும் கடலுக்கு' வழங்கப்பட்டிருந்தது. நான் வாசித்தளவில் இதுவரை வந்த சேரனின் தொகுப்புகளில் இதுவே மிக மோசமான தொகுப்பு என்று நினைக்கின்றேன். ஆகக்குறைந்து சேரனுக்குத்தான் விருது வழங்கவேண்டும் என்று அவரது ஆர்வலர்கள்/இரசிகர்கள் விரும்பியிருப்பின் சேரனின் அனைத்துத் தொகுப்புகளுக்குமென பொதுவாய் விருதை வழங்கியிருக்கலாம். சேரனின் பிற தொகுப்புக்களுக்கு வந்தமாதிரி இதற்கு பெரிதாக திறனாய்வுகளும் வரவில்லை. சு.ரா இருந்தாலாவது நட்புக்காய் ஒரு விமர்சனம் எழுதி, இயற்கையின் உபாசகன், காதலின் மன்மதன் (இரண்டும் ஒன்றா, அப்படித்தான்...சும்மா சத்தம் போடாமல் வாசியுங்கள்) என்றாவது குளிர வைத்திருப்பார். மகன் கண்ணனிற்கு சுற்றுப் பயணங்களிற்கும், (அண்மைக்காலமாய்) அ.மார்க்ஸோடு தொடை தட்டவுமே நேரம் போதாதிருப்பதால் (ஓ...ராஜ மார்த்தாண்டன் துணைக்கு இருக்கின்றார்தானே?) இப்போதைக்கு சேரனின் தொகுப்பை உயிர்க்க வைக்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது.
நவீன தேவ தூதுவராய் களமிறங்கியிருக்கும் ஜெயமோகனுக்கு மீண்டும் சொல்ல விழைவது இதுதான். எல்லா விருதுகளுக்கும் ஒரு அரசியல் உண்டு. அதைப் புரிந்துகொள்ளலே அவசியம். ஜெயமோகனுக்கும் ஒரு அரசியல் உண்டு. எம்மைப்போன்றவர்களுக்கு அது நன்கு தெளிவாய்த் தெரியும். சங்கச்சித்திரங்கள் என்று எல்லாம் வியந்து எழுதிவிட்டு, அண்மைய கட்டுரைத் தொகுதியில் (உயிர்மைப் பதிப்பு) சங்க காலத்தில் -அவ்வாறான சங்க இலக்கியத்தில்- கூறப்பட்டமாதிரி வாழ்வு முறை இருக்கவில்லை அவ்வாறொரு வாழ்வை அமைப்பற்கான கனவுகளே சங்க இலக்கியங்கள் என்பதுமாதிரியாக எழுதியுமிருக்கின்றார். (அடுத்த புள்ளி எங்கே நகரபோகின்றார் என்பதும் நாமறிவோம்). இப்படி எழுந்தமானமாய் எழுதுவதற்கெல்லாம் எங்கே ஆதாரங்களை அகழ்வாராய்ந்து எடுத்தீர்கள் என்ற நம் ஊடலை இன்னொரு பொழுதில் வைத்துக்கொள்வோம்.
பி.கு1: பொழுது போகாதபோது நானுமொரு பட்டியல் இயல் விருதிற்கு சிலவருடங்களுக்கு முன் கொடுத்திருக்கின்றேன். இம்முறை நடுவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் மொழிபெயர்ப்பைக் கவனத்தில் கொண்டதாய்த் தெரிகின்றது. இயல் விருது போல பணமோ, இலக்கியப் பின்னணியோ இல்லாவிட்டால் என்ன, நான் என்னுடைய விருதை இம்முறை என் சார்பில் வ.கீதாவுக்கு வழங்கிவிடுகின்றேன். ஆங்கிலம்<-->தமிழ் என்று இரண்டு திசைகளிலும் மொழிபெயர்ப்புக்களை வ.கீதா செய்திருக்கின்றார். அண்மையில் பெருமாள் முருகனின் நாவலை ஆங்கிலத்தில் வ.கீதா மொழிபெயர்த்திருந்தது கிடைத்திருந்தது. வ.கீதா, இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார் என்பதோடு, தமிழில் நேரடியாக நிறையவே எழுதியுமிருக்கின்றார். எனவே வ.கீதா விருதுக்குப் பொருத்தமானவரே. மற்றது எனக்கும் அரசியல் உண்டு.
பி.கு 2: ஜெயமோகனின் இயல் விருது முதற்கட்டுரையை வாசித்தபோதே இவை குறித்து எழுத நினைத்திருந்தேன். எனினும் இயல் விருதின் அரசியல் குறித்து ஒரளவு தெளிவு இருந்ததால் திரும்பவும் மல்லுக்கட்ட விரும்பவில்லை. இப்போது ஜெயமோகன் ஏதோ தான் தான் இயல்விருதின் வீழ்ச்சியைக் கண்டெடுத்தமாதிரி 'கர்சித்து' தொடர் பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பதன் எரிச்சலே இதை எழுத வைத்தது. நன்றி.
19 comments:
இதுக்கெல்லாம் ஜெயமோகன் பதில் சொன்னா நல்லாருக்கும் குறைந்த பட்சம் அவர் பதிவிலாவது..
நிலைப்பாடு நவீனம்.. நிலைப்பாட்டிலிருந்து பிறழ்தல் பின் நவீனம் னு புது அவதாரம் எடுக்காம இருந்தா சரி :)
செம காரமான கட்டுரை டிசே..நன்றி
அவரோட கட்டுரை இப்பதான் படிச்சேன் குஷ்பூக்கு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லன்னு சொல்லியிருக்கார்..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா ..இன்னும் காரமா எழுதியிருக்கலாம் டிசே
இதற்கான ஜெயமோகனின் பதில்என்னவாக இருக்கும் என அறிய ஆவல்.
//இன்று இன்னும் விருது கிடைக்காத அவர் பட்டியலிடுகின்ற 'முன்னோர்களில்' அவருக்கு எதிர்த்தளத்தில் இயங்கிய/இயங்கிக்கொண்டிருக்கும் தொ. பரமசிவம், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, பொதியவெற்பன் போன்றவர்களுக்கு இடமேயில்லை.//
ithu mukkiyamaanathu DJ
இப்ப என்ன பிரச்சனை?
இயல் விருதினை யார் முன்னால் சாடினார்கள் என ஒரு விருது தரலாமா?
இருவரின் கருத்தும் ஒன்றே. தனி மனிதர்களுக்கும் அரசியல் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் தாய் கூட அரசியல் செய்கிறாள் அதனால் அதைப் புரிந்துகொண்டு சும்மா இருந்தால் போதும் என்கிறது எப்படி?
ஜெயமோகன் தன் பங்குக்கு கண்டனத்தை முன்வைக்கிறார்.. ஏறக் குறைய நீங்கள் சுட்டியிருக்கும் எல்லா காரணங்களுக்காகவும், அதில் குறை கூறுவதற்கு என்ன இருக்குது.
எல்லாரும் சமாதானமா, நல்லாயிருங்கப்பூ. சும்மா எதிர் எதிர் சாடிக் கொண்டிருந்தால் வீழ்வது 'நாம் எதை வளர்க்க' சாடிக்கொண்டிருக்கிறோமோ அதுதான்.
சரியான எதிர்வினை DJ,
ஆனால் ஜெயமோகன் இதுவரையில் எந்த விமர்சனத்திற்கு பொறுப்பாக பதில் சொன்னதில்லை.
தன் மனைவியின் பெயரில் அப்பட்டமான ஒரு திருட்டுக் கட்டுரையை எழுதியதை பொ. வேல்சாமி கையும் களவுமாக பிடித்த பிரச்சினையிலும்கூட.
டிசே,
எந்த விருது யாருக்கு கொடுப்படவேண்டும், கொடுக்கக்கூடாது என்பது பற்றியோ, ஜெயமோகனின் கருத்து பற்றியோ சொல்ல எதுவுமில்லை.
உங்கள் எழுத்துக்களைப் வாசிக்கும்போது அவற்றில் விரவிக் கிடக்கும் "ற்கு" ஏனோ எனக்கு எப்போதும் நடக்கும்போது காற்கட்டைவிரல் சிறு கற்களில் இடறுவது போல இடறுகிறது.
ஜெயமோகனிற்கு => ஜெயமோகனுக்கு
ஹோம்ஸ்ரோமிற்கு => ஹோம்ஸ்ரோமுக்கு
பயணங்களிற்கு => பயணங்களுக்கு
தாசீசியஸிற்கு => தாசீசியஸுக்கு
கண்ணனிற்கு => கண்ணனுக்கு
ஹார்ட் ற்கு => ஹார்ட்டுக்கு
மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்களோடு நான்காம் வேற்றுமை உருபு 'கு' சேரும்போது 'க்கு' என்று தான் முடிய வேண்டும். :-)
I'm disappointed, as I expected you to give Iyyal award to Asin :). By giving it to V.Geetha and not to Asin you have hurt the sentiments of crores of Asin fans like me :).
//மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்களோடு நான்காம் வேற்றுமை உருபு 'கு' சேரும்போது 'க்கு' என்று தான் முடிய வேண்டும்.//
சுந்தரமூர்த்தி அவர்களே,
'ற்கு' என்று முடியும் சில சொற்களை எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன்.
தொ.பரமசிவன் அவர்களுக்கு விருது கொடுக்காததற்கும் கண்டனம் தெரிவித்து அவரது சாதனையை சற்று விளக்கமாகவே பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன், தனது இணையப்பக்கத்திலே கீழ்க்கண்டவாறு :
"நானே சொல்கிறேன். நாற்பதாண்டுக்காலமாக தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அலைக்காக உழைத்தவர் தொ. பரமசிவம். நமக்கு சம்பிரதாயமான ஒரு வரலாற்று ஆய்வுமுறையே இருந்துவந்தது. கல்வெட்டுச்சான்றுகள். தொல்பொருளாதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை வகுப்பது. அது வரலாற்றை மேலிருந்து எழுதுவது. பண்பாட்டு வரலாற்றை கீழிருந்து எழுதும் ஒரு பெரு முயற்சியின் முன்னோடி தொ. பரமசிவம்.
அதாவது மக்கள் வாழ்க்கைசார்ந்த பண்பாட்டுக்கூறுகளை வைத்து நம் வரலாற்றை ஆராய்வது தொ. பரமசிவம் போன்ற முன்னோடிகளால்தான் உருவாக்கப்பட்டது. சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றையெல்லாம் வரலாற்றை ஆராய பயன்படுத்தலாம் என்று வழிகாட்டியவை அவ்வாய்வுகள். அழகர்கோயில் பற்றிய அவரது ஆய்வுமுறையை ஒரு ‘கிளாசிக்’ என்று எந்த ஆய்வாளரும் சொல்வார். கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பன்னிரண்டு ஆண்டுக்கால கள ஆய்வின் விளைவு அது. தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக அவர் இயங்கிவருகிறார். அவரது ஆய்வு முறை இன்று வலுப்பெற்றுதான் ஒரு பொ.வேல்சாமி வரை வரும் புதியவரிசை ஆய்வாளர்களே உருவாகி தமிழ்பண்பாட்டு ஆய்வே தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய தமிழின் முக்கியமான அறிவுச்செயல்பாடுகளில் ஒன்று இது.
தொ.பரமசிவம் பற்றி ஆங்கிலத்திலும் இணையதளத்திலும் தேடினால் கிடைக்காது. பல்கலைக் கழக அங்கீகாரங்கள் முன்னரே வாங்கிய விருதுகள் இல்லை. ஏன், அவருக்குப் பின் அவரது பானியில் ஆய்வைச் செய்த சி.ஜெ.·புல்லர் போன்ற வெளிநாட்டினரைப்பற்றி நீங்கள் தேடினால் கிடைப்பதன் நூறில் ஒருபங்கு கூட அவரைப்பற்றி கிடைக்காது. நண்பரே , தமிழ் முன்னோடிகளை அளக்க அது அல்ல அளவுகோல்.
இன்னொன்றும் இங்கே சொல்கிறேன். தொ.பரமசிவம் எனக்கு நேர் எதிரான அரசியல் கொண்டவர். என் ஒரு சொல்லைக்கூட ஏற்கமாட்டார். அவரது பெரியாரிய தீவிரப்போக்கு எனக்கும் கடுமையான கசப்பு உள்ள தளம். ஆனால் எப்போதும் ஒரு முன்னோடி ஆய்வாளராக தனிப்பட்டமுறையிலும் எனக்கு வழிகாட்டுபவராகவே இருந்து வந்திருக்கிறார்."
இது தொடர்பான திரு.கிரிதரனுடனான பின்வரும் தொடர் தகவல் பரிமாற்றங்களை அவரது இணையப்பக்கத்தில் காணலாம் :
1. ‘இயல்’ விருதின் மரணம்
2. இயல் விருது சில விவாதங்கள்
3. இயல் விருது - ஒரு பதில்
4. இயல் விருது பற்றி ஒரு கடிதம்
பார்க்க : http://www.jeyamohan.in/
உங்களது சில கேள்விகளுக்கும் (கனவிலிருந்து விழித்தெழுதல் தொடர்பானது உட்பட்ட) அதிலேயே விடை உள்ளது.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
அய்யனார்... என்னோட ரெண்டனா:
---குஷ்பூக்கு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லன்னு சொல்லியிருக்கார்..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா---
தமிழ் இலக்கியத்திற்கு குஷ்பு என்ன தந்திருக்கிறார்? அப்படி சாதிக்காத, ஆனால் புகழ்பெற்ற, பட்டிமண்டப மேடைகளில் படியேறும், புத்தக விழாக்களில் கலக்கும், 'பாப்' கவர்ச்சி ஆசாமிகளுக்கு தந்து விடக்கூடும்.
அப்படித்தான் குஷ்புவை அங்கு சொன்னது.
---இதுக்கெல்லாம் ஜெயமோகன் பதில் சொன்னா நல்லாருக்கும்---
அவருக்கு மின்மடலில் சுட்டி அனுப்பிவைக்கலாமே :)
சுந்தரமூர்த்தி குறிப்பிட்ட சொற்றவறுகளில் 'பயணங்களிற்கு' என்பது சரியான வடிவமென்று கருதுகிறேன். ஏனையவை தவறான வடிவங்களே.
இங்கு உயர்திணை, அஃறிணை தாம் சிக்கலென்று கருதுகிறேன்.
உயர்திணைகளுக்கு 'ற்கு' வராமல் 'க்கு' வரவேண்டும். (கண்ணணுக்கு, மோகனுக்கு, கீதாவுக்கு....) அஃறிணைகளுக்கு இரண்டு வடிவங்களும் வரலாம்.
இதுபோற்றான் இல், உள் என்ற ஒட்டுக்களும்.
'இவர்களில்' என்பது தவறு, 'இவர்களுள்' என்பதே சரி என்றளவில் எனக்கு விளக்கமுண்டு. அதாவது உயர்திணைகளுக்கு 'உள்' என்ற ஒட்டும், அஃறிணைகளுக்கு 'உள்', 'இல்' (இவைகளுள் / இவைகளில் எது பெரியது?...) ஆகிய ஏதாவதொன்றும் வரலாம்.
இதற்குமேல் தமிழிலக்கணப் பண்டிதர்கள்தாம் சொல்லவேண்டும்.
சுந்தரமூர்த்தி, முன்பொருமுறை 'வாழ்த்துக்கள்' வாழ்த்துகள்' சிக்கலின்போது (இப்போது 'வாழ்த்துகள்' தான் சரியென்று கலைஞர் முடிபு கொடுத்துள்ளாராம்) ஆராய்ச்சிசெய்து முடிபு அறிவித்ததுபோல் இப்போதும் தெளிவுபடுத்துங்களேன்.
பாபா: நடிகை / பெண்கள் இப்படின்னாவே ஒரு இளக்காரமான பார்வை நம்மாளுங்களுக்கு இருக்கு... ஏன் இவரலால வைரமுத்துக்கோ வாலிக்கோ கொடுத்தாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லன்னு சொல்ல முடியல?..குஷ்பூ - வைரமுத்து -வாலி என்ன பெரிய வித்தியாசம்?
தொடர்ச்சியா குஷ்பூவ சம்பந்தமில்லாம நோண்டுவதில் இவர்கெளுக்கென்ன குரூர திருப்தி?
என்ன கேட்டா தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வாலி வகையறாக்கள விட குஷ்பூ வகையாக்களால பெரிய ஆபத்து ஒண்ணுமில்ல..
ஜெயமோகனுக்கு தனியா மடல் போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நெனக்கிறேன்.. அவரும் டிசே வின் ரசிகரா இருக்கலாம் யார் கண்டா :)
பின்னூட்டங்களிட்ட நண்பர்களுக்கு நன்றி.
...
இப்பதிவின் நோக்கம் எனது குரலை ஜெயமோகனின் அடர்த்தியான குரலுக்கெதிராய்ப் பதிவு செய்தலே முக்கிய நோக்கமாயிருந்தது. ஏற்கனவே, இயல்விருதுக்கு எதிராய் எழுப்பப்பட்ட குரல்கள் ஜெயமோகனின் அடர்த்தியான குரலிற்கு முன் மறைக்கப்படக்கூடாதென்பது எனது அவாவாக இருந்தது. அந்தளவில் நான் சொல்லவிரும்பியதை ஒரளவாவது பதிவு செய்திருக்கின்றேனென நம்புகின்றேன். இதற்கப்பால் எதையும் எழுதினாலும் சொன்னதைத் திருப்பச் சொன்னதாகவும், சொல்லிய ஒவ்வொரு வரிக்கும் குறுகிய எல்லைக்குள் நின்று நியாயம் கேட்பதாய் முடியும் என்பதால் இப்பதிவிலிருந்து -இவ்விடயத்தில்- நகரவே விரும்புகின்றேன். நன்றி.
....
பொன்.முத்துக்குமார்: தொ.பரமசிவம் குறித்து ஜெயமோகன் எழுதியதை எடுத்துப்போட்டதற்கு நன்றி. அப்பதிவுகளில் அநேகமானவற்றை வாசித்தே இருந்தேன். ஆனால், உலகத்தமிழ் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பதிவை வாசித்துப் பாருங்கள். அங்கே ஜெமோ பட்டியலிட்ட முன்னோடிகளில் தொ.பரமசிவம் இல்லை. ஏன் தவறவிட்டபட்டார்? பெரியாரை மதிக்கும் தொ.பரமசிவம் ஜெமோவுக்கு எதிர் அரசியல் தளத்தில் இருப்பதால் தானே. இதைத்தான் எல்லோருக்கும் அரசியல் உண்டென்கின்றேன். அந்த அரசியலுக்குள்தான் ஜெமோவும் இருக்கின்றார் எனத்தான் இப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். தனக்கு வழிகாட்டியாக இருக்கின்றதாய் தொ.பவைக் குறிப்பிடுகின்ற ஜெயமோகன் தனது முன்னோடிகளில் ஒருவராய் ஏன் தனது பட்டியலில் ஆக்கவில்லை? அங்கேதான் நாம் நின்று யோசிக்கவேண்டும்.
அரசியலும் இலக்கியமும் கலக்கவே கூடாது என்று ஜெமோ பதிவுகள் (அல்லது திண்ணை) விவாதக்களத்தில் எழுதியபோது அது எப்போதும் சாத்தியமேயில்லை என அவரோடு நானும் வேறு சில நண்பர்களும் எதிர்வினை செய்ததையும் இந்தக்கணத்தில் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.
....
சு.மு மற்றும் அநாமதேய நண்பர்கள்:
..க்கு/..ற்கு என்பது குறித்த விளக்கங்களுக்கு நன்றி. எனினும் நான் தெளியவில்லை என்பது வேறு விடயம் :-). ற்கு அல்லது க்கு இரண்டுவிதமாய் எங்கும் உயபோகிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உயர்திணை/அஃறிணை விடயங்கள் எனக்குப் புரிகின்றது. ஆகக்குறைந்தது அவற்றிலாவது இனிக் கவனம் எடுக்க முயல்கின்றேன். மற்றது நீங்கள் எல்லோரும் இப்படிக்குறிப்பிட்டுச் சொல்லும்போது நண்பர் ஒருவர் கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. இப்படி நிறைய இலக்கண/எழுத்துப் பிழைகளோடு எழுதினால் எவரும் காலப்போக்கில் உனது பதிவுகளை வாசிக்கமாட்டார்கள் என்று அந்த நண்பர் சொல்லியிருந்தார். அவருக்கு, இப்புதிய வருடத்திலாவது ஒரு பதிவாவது பிழைகளில்லாது எழுதிக்காட்டுவதாய் சபதம் செய்திருக்கின்றேன். இக்காலம் விரைவில் கனியட்டுமென எல்லோரும் பிரார்த்திப்போமாக :-).
....
/..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா /
அய்யனார், அந்தப்பதிவை வாசித்தபோது நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்கும் உறுத்தியது. அந்த விடயத்தைத் தொடாமல் இப்பதிவை எழுதியதற்கு அது தனியாக எடுத்து விவாதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே. குஷ்புவின் கலகத்திற்கு முன் வாய்க்கு/வார்த்தைக்கொரு கலகம என்ற சொல்லை இலக்கியவுலகில் சும்மா பாவிப்பவர்கள் எல்லாம் தலைகுனிந்து நிற்கவேண்டும்.
ஜாலி ஜம்பர்,
இலக்கணம் படித்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதைக்கு கைவசம் இருப்பது 'தமிழ் நடைக் கையேடு' என்ற நூல் மட்டுமே. பள்ளி இலக்கண நூல்கள் உள்ளன. இவற்றில் அவசரத்தில் தேடியதில் சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே எழுத்து/வாசிப்புப் பழக்கத்தை வைத்து மட்டுமே ஏதாவது சொல்ல இயலும்.
'க்கு', மெய்யெழுத்தில் முடியும் சொற்களுக்கும், 'ற்கு' உயிர்மெய்யில் முடியும் சொற்களுக்கும் உரியன என்பது என் புரிதல்.
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர் - அவருக்கு
அது - அதற்கு
அவை - அவற்றிற்கு
மெய்யெழுத்தில் முடியும் பெயற்சொற்களில் உயர்திணை, அஃறிணை என்று பிரித்து உயர்திணைக்கு 'க்கு'ம், அஃறிணைக்கு 'ற்கு', 'க்கு' இரண்டுமே சரிதான் என்கிறார் அனாமதேய நண்பர் (யாரென்று தெரியும். நான்கைந்து சொற்களைக் கோர்த்து ஒற்றைச் சொல்லாக்கும்போது கூட புணர்ச்சிவிதிகளை மீறாமால், சந்திப்பிழைகளின்றி கவனத்துடன் எழுதக்கூடிய ஆள் என்பதால் அவர் சொல்வதை மறுப்பதற்கில்லை :-) ).
இந்த பதிவு/பின்னூட்டங்களில் விருது+கு என்பது விருதிற்கு, விருதுக்கு என இரண்டு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது. இரண்டின் ஓசை நயமும் சரியாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது.
விருது பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஒரு விஷயத்தை சொல்லவேண்டியுள்ளது.
ஓர் இலக்கியவாதி என்ற முறையில் ஜெயமோகன் இயல் விருதுத் தேர்வை குறித்து தன் விமர்சனத்தை வைக்கலாம். ஆனால் கிரிதரன் எதிர்வினை எழுதியது சரியில்லை. ஓர் அமைப்பின் உள்விவகாரகங்களை ஒரு நடுவர் இப்படி பொதுவில் வைப்பது அறநெறிகளுக்கு எதிரானது. விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வமாகக் கூட பதிலளிக்க வேண்டுமென்ற அவசியமில்லாதபோது நடுவர் குழு உறுப்பினர் ஒருவர் தற்காப்புக்காக இப்படி எழுதுவது முறையற்றது. இப்படி எத்தனை விமர்சனங்களுக்கு விளக்கமளித்துக்கொண்டிருக்கப் போகிறார்? தற்போதைய நடைமுறையின் மீது விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தால் அவற்றை கருத்தில்கொண்டு, அவை நியாயமாகத் தோன்றினால் அக்குறைகளை வருங்காலத்தில் களைவது தான் முறையானது. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோமை விருது கொடுத்து கௌரவித்த மாதிரி தெரியவில்லை. தங்கள் தெரிவுக்கு விளக்கம் கொடுத்து அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியச் சூழல் எந்த வகையிலுமே--விருதாகட்டும், விமர்சனமாகட்டும், நடுவர்களாகட்டும்--இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதை ஜெயமோகனும், கிரிதரனும் மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சு.மூ: நீங்கள் மேலதிக விளக்கந்தரும்போது சற்று விளங்குவதுமாதிரி இருக்கின்றது. இணையத்தில் எழுத வந்த ஆரம்பங்களில் ஒரு நண்பர் எம்.ஏ.நுஃமானின் அடிப்படைத் தமிழ் இலக்கணம் நூலை எனது இலக்கண அறிவைச் செழுமைப்படுத்த பரிந்துரைத்திருந்தார். இப்போது நூலகத்திலும் கிடைக்கிறது. ஆறுதலாக வாசிக்கவேண்டும். நன்றி.
'ற்கு,க்கு' சந்தேகத்திற்கு விளக்கமளித்த சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,அனானி அவர்களுக்கும் மிக்க நன்றி.
ஜெயமோகனும் இயல் விருதும்:
மு.புஷ்பராஜன்
நண்பர் டிசெதவுக்கு (டிசெதவிற்கு),
தற்செயலாக இந்த வலைப்பதிவுக்கு வந்த பொழுது 'இயல்விருது' விவாதம் பற்றி அறிய முடிந்தது. அதில் சுந்தரமூர்த்தி அவர்கள் 'ஓர் இலக்கியவாதி என்ற முறையில் ஜெயமோகன் இயல் விருதுத் தேர்வை குறித்து தன் விமர்சனத்தை வைக்கலாம். ஆனால் கிரிதரன் எதிர்வினை எழுதியது சரியில்லை. ஓர் அமைப்பின் உள்விவகாரகங்களை ஒரு நடுவர் இப்படி பொதுவில் வைப்பது அறநெறிகளுக்கு எதிரானது' என்று எழுதியிருப்பது பற்றி.... முதலாவது நடுவர்கள் மேற்படி அமைப்பினைச் சேர்ந்தவர்களல்லர். அடுத்த்து மேற்படி இலக்கியத் தோட்டம் அமைப்பே தனது இணையத்தளத்தில் நடுவர்கள் பற்றிய விபரங்களைப் பகிரங்கமாகப் பிரசுரித்துள்ளதால் இத்தகைய விமர்சனங்களுக்கு நடுவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களது பதில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. ஒளிவு மறைவுகளுக்கு இங்கு இடமேயில்லை.
அடுத்து '‘க்கு’, மெய்யெழுத்தில் முடியும் சொற்களுக்கும், ‘ற்கு’ உயிர்மெய்யில் முடியும் சொற்களுக்கும் உரியன என்பது என் புரிதல்....' என்பது பற்றி.. இது பற்றிய என் புரிதலையும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஆறுமுகநாவலரின் தமிழ் இலக்கணத்தில் இது பற்றிய விரிவான விளக்கமுண்டு. உதாரணமாக 'பெயர்கள் உருபேற்கும் முறை' (பக்கம் 107; பதிப்ப்கம்: முல்லை நிலையம்) பார்க்கவும்.
உயிரையும் , மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும். உ-ம்.
கிளி - கிளியிற்கு பொன் - பொன்னிற்கு நாகு - நாகிற்கு
ஆ, மா, கோ என்னும் இம்மூன்றும் பெயர்களும் உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி , னகரச் சாரியையும் பெறும். குவ்வுருபு னகரச் சாரியையோடு உகரச் சாரியையும், னகரச் சாரியையினறி உகரச் சாரியையயும் வரும்.
ஆவிற்கு ஆனுக்கு ஆவுக்கு
அவை, இவை, உவை , எவை , கரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றஃறிணைப் பமைப் பெயர்கள், உருபேற்குமிடத்து , ஈற்றகாரங் கெட்டு அற்றுச் சாரியையும் பெறும். நான்கனுருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன்சாரியையும் பெறும். உ-ம்.
அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு
இது போல் பலவற்றிற்கு , சிறியவற்றிற்கு, .... மரத்திற்கு (மரத்துக்கு) என்றெழுதவதெல்லாம் சரியே
ஜெயமோகனுக்கு, ஜெயமோகனிற்கு
ஹோம்ஸ்ரோமிற்கு , ஹோம்ஸ்ரோமுக்கு (மரம்
பயணங்களிற்கு , பயணங்களுக்கு
தாசீசியஸிற்கு , தாசீசியஸுக்கு
கண்ணனிற்கு , கண்ணனுக்கு
ஹார்ட் ற்கு , ஹார்ட்டுக்கு
இவையெல்லாம் 'உயிரையும் ,மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்' என்பதற்கொப்ப சரியானவையே.
நட்புடன்,
வ.ந.கிரிதரன்
Post a Comment