Tuesday, March 04, 2008

குறும்படங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்வு

-நிழல் ப.திருநாவுக்கரசு

புலம்பெயர்வு என்பது பல காரணங்களுக்காக நடந்ததை மனித இன வரலாறு முழுவதிலும் காணலாம். அவற்றில் இரண்டு காரணிகளுக்காகவே பெருமளவு புலப்பெயர்வு நடந்துள்ளது.
1.உணவு தேடல்,
2.வெற்றி கொண்ட இனம், தோல்வி அடைந்தவர்களை விரட்டியதால் ஏற்பட்டது.
மனித இனம் தொடக்க காலத்தில் உணவுத் தேடலுக்காகப் பல இடங்களில் அலைந்து தமக்கான இடத்தினைத் தேர்வு செய்து நிலையாகத் தங்கிவிட்ட பின்னர், போர்களினால்தான் பெருமளவு புலம்பெயர்ந்துள்ளனர்.

வணிக நிமித்தம் சோழர்காலத்தில் சென்ற வணிகக்கூட்டம் மலேஷியாவில் தங்கி இன்று மலாக்கா செட்டிகள் என்ற தமிழ் மொழி அறியாத ஒரு பிரிவினராக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போலவே, 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கில, பிரஞ்சு இந்தியக் கம்பெனிகளால், அவர்களது காலனிகளுக்குத் தேவையான கூலிகளாக தமிழ்நாட்டுத் தமிழர்கள், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பிஜி, மொரிஷியஸ், மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, ரியூனியன், செசெல்ஸ், பர்மா, மாட்டினித் தீவுகள், ட்ரினிடாட்-டுபாக்கோ, பிரஞ்சு கயானா முதலிய நாடுகளுக்கு கொண்டு செல்ப்பட்டு, மொழி, இனம் இழந்து இன்றும் வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

மேலே கண்டவைகளிலிருந்து வித்யாசப்பட்டது, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு. அரசியலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளினால் ஒதுக்கப்பட்டு, இன அழிப்புக்கு அஞ்சி, புகலிடம் தேடி இன்று மேலை நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வினை ( Diaspora) யூதர்களின் புலப்பெயர்வோடு ஒப்பிடுவார் எஸ்.பொ. கி.மு 538-இல் யூதர்கள் யூதரல்லாதோரால், யூதர்களின் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று, 1983க்குப் பின்னர் தமிழர்களுக்கும் இந்தக்கதி ஏற்பட்டது. புகலிடத்தில் புலம் பெயர்ந்தோர் படைத்தவைகளே புலம்பெயர்ந்தோர் படைப்புகளாயின.

ஐவகை நிலங்களையே அறிந்திருந்த தமிழர், புகலிடம் சென்ற பின்னர் ஆறாம் திணையாக பனிப்பாலையைக் கண்டனர். அதற்குரிய கருப்பொருட்கள், உரிப்பொருட்கள் அவர்களது படைப்பில் இடம்பெறலாயின. புதிய நிலம், மனிதர்கள், மொழி, உணவு, உடை, பண்பாடுகளை இன்றைய புலம்பெயர்ந்தோர் படைப்பிலே காணக்கூடியதாக உள்ளது.

தங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தபோது கிடைக்காத ஜனநாயகம், புகலிடத்தில் கிடைத்ததால், கதை, கவிதை, நாவல், போன்ற இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. இவற்றில் மற்ற ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளைக் கவிதையில் சொல்ல முடிந்ததால், இத்துறையில் பெருமளவு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே குறும்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். பலரும் தொழில்முறை சாராதவர்களே ஆவர். தொழில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் வாழ்ந்தாலும், கேமரா போன்ற கருவிகளை வாடகைக்கு எடுத்தே தயாரிப்பு வேலையில் ஈடுபடுகின்றனர். வாடகைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் படம் எடுப்பதற்கான நேரத்தை சுருக்கவேண்டிய தேவை இருப்பதாகவும், இதனால் படத்தில் தரம் பாதிக்கப்படுவதாகவும் பலரும் தெரிவித்தனர். பொதுமக்கள் பலரும் பெரிய திரையில் நாட்டம் மிகுந்தவர்களாக இருப்பதால், குறும்படப் படைப்புகளுக்கு மதிப்பு குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். பொருளாதாரரீதியாக எதையும் எதிர்பார்க்காததால் தாங்கள் உணர்ந்தவைகள், பார்த்தவைகளை மட்டுமே படமாக்குகின்றனர். தங்கள் நாடுகளில் விலக்கப்பட்டவைகள் / ஒதுக்கப்பட்ட பல பிரச்சனைகளையும் குறும்படங்கள் பேசுகின்றன. பெருமளவான குறும்படங்கள் சுவிஸ், கனடா பிரான்ஸ் முதலிய நாடுகளிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் அஜீவன் ஊடகக் கல்வியைப் பெற்றவர். பலருக்கும் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பவர். அவர் எச்சில் போர்வை, கவிக்குயில், யாத்திரை போன்ற படங்களைத் தந்திருக்கிறார். கவிக்குயில் படத்தில் மூன்று பெண்கள் Even in my home; I See என்ற பாடலைப் பாடித்திரிகின்றனர். அப்போது லாரியில் இருந்து வீசியெறியப்பட்ட சி.டியில் இருந்து 'ஊரு சனம் தூங்கிடுச்சி, /ஊதக்காத்தும் அடிச்சிடுச்சி, /
பாவி மனம் தூங்கலையே...' என்ற பாடலை மீண்டும் மீண்டும் முணுமுணுக்கிறாள் ஒரு இளம்பெண். இழந்துபோய்விட்ட ஊர் ஞாபகம் வருகிறது. பிறகு இப்பாடலைப் பழகி பலர் முன்னிலையில் பாடுவதுடன் படம் முடிகிறது. ஊர் பற்றிய மன ஏக்கத்தை (நாஸ்டால்ஜியா) இக்குறும்படம் சித்தரித்தது.

எச்சில்போர்வையின் கதை, சராசரியாக புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்தது. ஒரே பாத்திரம் கடிதம், பின்னணிக்குரல் இவற்றினூடாக படத்தின் தளம் விரிகிறது. வெளிநாடு வந்து ஆறுமாதம் கழித்து கடிதம்போட்ட அண்ணனுக்குத் தங்கை எழுதிய கடிதம். இவனோ இங்கு வேலையற்று, தஞ்சம் மறுக்கப்பட்ட நிலை. புகலிட நாட்டிற்கு வந்த பணத்தைக் கொடுக்காததால் ஏஜெண்டின் மிரட்டல், இவற்றிற்கிடையில் தங்கையின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்கிற குழம்பிய மனநிலையை லூயிஸ் என்ற நடிகர் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

நிழல் யுத்தம் படம் புலம்பெயர்ந்து வரும் பெண்ணின் மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. வெளிநாட்டுக் கணவனுடன் சுதந்திரமாக வாழலாம் என்கிற சந்தோஷத்துடன் வரும் மணமகளுக்குத் திருமண வாழ்க்கையே சிறையாகிப் போகிறது. அம்மாவோடு தொலைபேசியில் பேச முடியவில்லை; கணவனுடன் இன்பமாக இருக்க முடியவில்லை; இச்சூழலில் இவர்களுக்குள் நிழல் யுத்தம் தொடங்குகிறது. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்கிற கேள்வியை புலம்பெயர்ந்து வந்துள்ள குடும்பங்களிடம் முன் வைத்துள்ளனர்.

யாத்திரை படம் பாதி குறும்படமாகவும், மீதி ஆவணப்படப் பாணியிலும் செல்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் இளைஞனின் மனவுணர்வுகளைச் சொன்னது. அதற்கான காரணம் நாட்டிலும், புலம்பெயர்ந்த இடத்திலும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையை மாறி, மாறி காண்பிக்கப்பட்டு படம் கொண்டு செல்லப்படுகிறது.

ஜெயாகரனின் நல்லதோர் வீணை செய்து படத்தின் கதை, சியாமளா என்ற பெண், தாயாரின் வற்புறுத்தலால் வெளிநாட்டிற்கு வருகிறாள். அவளைத் திரமணம் செய்துகொள்ளப்போகும் பிரகாஷுடன் தங்குகிறாள். ஒருநாள், தான் சிங்கள ராணுவத்தால் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட நிலையை விவரிக்கிறாள். பிரகாஷ் தன் நண்பனுடன் பேசிவிட்டு, பரவாயில்லை, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான். சியாமளா இதை மறுத்து, தான் மீண்டும் நாட்டிற்குச் சென்று போராடப்போவதாகச் சொல்கிறாள். இனியும் கோணேஸ்வரிகளும், கிருசாந்திகளும் தோன்றக் கூடாது என்கிறாள். இவள் எந்த முடிவு எடுத்தால் உங்களுக்கு சம்மதம் என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

முடிவல்ல படம் சிறு சம்பவத்தை அடியொற்றியது. சங்கர், சிவா என்ற இரு இளைஞர்கள் ஐரோப்பிய நாடொன்றிற்கு ஏஜண்டால் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுடன் சுமதி என்ற பெண்ணும் இணைந்து கொள்கிறாள். சுமதி தன் எதிர்கால கணவனுடன் சென்று விடுகிறாள். மற்ற இருவரும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர் என்பதோடு படம் முடிகிறது.

பால்ராஜா இயக்கியுள்ள மீண்டும் வருவோம் படம், தாய்நாட்டுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும், அவர்களின் பாட்டிக்குமான உரையாடலால் படம் நகர்த்தப்படுகிறது. இப்படம் மேலை நாட்டில் வாழ்பவர்களுக்கும் நாட்டில் இருப்பவர்களுக்குமான தொடர்பை விளக்குகிறது.
சுவிஸ் பாலகிருஷ்ணனின் தாப்பு சீரழிவும் இளைஞர்களின் அரசியல்துரோகம் பற்றிப் பேசுகிறது. சுதந்தனின் எச்சரிக்கை படம் எயிட்ஸ் நோயாளியான இளைஞனைப் பற்றியது. சுதன் ராஜாவின் அலைகள் படத்தில், வெளிநாடு சென்ற இளைஞன் கனவொன்று காணுகிறான். அதில் கொலைக்கரம் ஒன்று தன்னைத் துரத்துவதுபோல் உணர்கிறான். இப்படத்தில கதைக்கேற்ப கேமராவும் அலைகிறது.

அகதி நிலையை மறந்து மேற்கத்திய வாழ்வில் கரைந்துபோன இளைஞனைப்பற்றிய படம் ரூபன் இயக்கிய தாகம். இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட படமான நிறப்பிரிகை மதத்தின் பெயரால் இரு சிறுமிகள் பிரிக்கப்படுவதைக் காட்டிய படம். கலைச்செல்வனின் பனிப்பூக்கள் எம்.கே.டி. பாலகுமாரனின் படிவுகள் முதலிய படங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்களின் பழைய பாணியிலான பிள்ளை வளர்ப்பை எதிர்க்கும் படங்களாகும். உயிரே உன்னை அழைத்தேன் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவடினின் காதலையும், தற்கொலையையும் சொல்லும் படம்.

வசந்த காலப்பூக்கள் புலம் பெயர்ந்து வந்த இளைஞனொருவனின் மனம் பேதலித்த நிலையை விளக்கியது. ‘Escape from Geneside இனப்படுகொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து, நிறவாதக் குடியேற்றக் கொள்கைகளால் படும் அவதிகளை விளக்கும் இந்த ஆவணப் படத்தை இயக்கியவர் ராஜேஸ்வரி பால சுப்ரமணியம். ‘The ball’ நார்வேயில் வாழும் ஒரு குழந்தைக்கும், பந்துக்குமான ஒப்புமைகளைப் பேசியது.

சிங்கப்பூருக்குக் கூலியாக வரும் தமிழக இளம்பெண்ணின் துயரம் சந்தோஷமான வாழ்வை, மூர்த்தி இயக்கிய கூலி படம் விளக்கியது. நிறைய சம்பளம் தருவதாக ஆசைகாட்டி சிங்கப்பூருக்கு அனுப்புகிறது ஏஜென்ஸி. அங்கு போனவுடன் சொன்ன தொகையில் கால்பங்குதான் தருகிறார்கள். இதனால் ஏமாறறமடையும் தொழிலாளிகளின் நிலையை விளக்கி N.R.I A/C என்கிற படத்தினை சபா இயக்கியிருந்தார்.

புலம்பெயர்ந்தோர் படங்களில், தொழில்நுட்பத் தேர்ச்சியைக் கனடாவிலிருந்து வெளிவந்த படங்கள் காட்டுகின்றன. வேலையிலிருந்து திரும்பும் கணவன், வீட்டில் மனைவி இல்லாமல் இருப்பதைப் பார்த்து, சந்தேகப்பட்டு, அடுத்தடுத்து நிகழ்வதை பேட்ரிக் பத்மநாபனின் அந்த ஒருநாள் சித்தரித்தது. இதில் கேமரா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இளம் தலைமுறை எவ்வாறு உருவாகி வருகிறது, தலைமுறை இடைவெளி எவ்வாறு ஏற்படுகிறது, இதை எவ்வாறு சமப்படுத்துவது என்கிற செய்திகளை முதன்மையாகக் கொண்டு சகா என்கிற படத்தை திவ்வியராஜன் இயக்கியுள்ளார். கனடாவில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு மோசமான பகுதியை எடுத்துக்காட்டும் வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளுக்குச் சென்ற பெண்கள், சுதந்திரமான உணர்வைப் பெற்றுள்ளனர் என்பதை சுமதி ரூபன் எடுத்துள்ள படங்கள் காட்டுகின்றன. ஆண்களால் கைவிடப்பட்ட இரு பெண்கள் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். லெஸ்பியன் உறவை எந்தவித வக்ரமும் இல்லாமல் இயல்பான முறையில் விளக்கியது ‘You too?’
வேலைக்குச் சென்று களைத்து வரும் மனைவி வீட்டுக்கு வந்ததும், வீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகளையும் செய்துவிட்டு கணவனின் விருப்பத்திற்கும் பலியாக வேண்டிய நிர்ப்பந்தத்தை மனுஷி படம் தெளிவுபடுத்துகின்றது. சிறு குழந்தைகளைப் பாலியல் வக்ரத்துக்கு உட்படுத்தம் போக்கைத் தோலுரிக்கிறது உஷ் படம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் சென்ற நாடுகளில் அவர்களுக்கு முதலில் கிடைக்கும் வேலை ஹோட்டல்களில் கோப்பை கழுவும் வேலை. அப்படிப்பட்ட ஒருவன் தான் குடித்த கோப்பையைத் தான் கழுவாமல் மனைவியே கழுவ வேண்டும் என்று விட்டுச் செல்வதை கோப்பை படம் காட்டியது.

பொது இடங்களில் மனைவி மற்றவர்களுடன் சாதாரணமாகப் பேசுவதைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாததைச் சித்தரித்த படம் உனக்கொரு நீதி. மூன்று குழந்தைகளையும் மனைவியையும் விட்டு வேறு பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பின்னர் தன் குடும்பத்திற்கே திரும்பும் கணவனைப் பற்றிய படம் வாழ்வு எனும் வட்டம். வயதான தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் மகன், மருமகளுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படம், ஊருக்குப் பயணம். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் கனடா கே.எஸ். பாலச்சந்திரன்.

மனசு என்கிற படத்னை சுதாகரன் இயக்கியுள்ளார். இப்படம், வெளிநாட்டில் வாழும் மணமகனுக்க, மணமகளின் படத்தை அனுப்புகின்றனர். அதைப்பார்த்த வில்லன், மணமகளைத் தன் வசப்படுத்தி மணந்து கொள்கிறான். இதைப்பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணமகன் அறிகிறான். இது ஈழத்தமிழர்கள் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம். இதை அற்புதமாகப் படமாக்கியுள்ளார் சுதாகரன்.

புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால் குழந்தைகளின் கல்வி வீணாக்கப்படுவதை, சுவிஸ் பாலகுமார் இயக்கிய வகுப்பு படம் காட்டியது. பரா இயக்கிய பேரன், பேத்தி தாய்மொழியைப் படிக்காமல், புகலிட மொழியை வீட்டுமொழியாக்கிக்கொண்ட சிறுவர்கள் தம் தாத்தாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள இயலாததால் மரணத்தக்க இலக்காகி விடுவதை இப்படம் பேசியது.

நோய்வீதி என்கிற படத்தினை இயக்கியிருப்பவர் ப்ரான்ஸ் பிரேமா. ப்ரான்ஸில் உள்ள தமிழ் இளைஞர் குழுக்களிடையே வன்முறை எவ்வாறு தலைதூக்குகிறது என்கிற செய்தியினை இப்படம் பேசியது. ஓசைமனோ இயக்கியிருந்தபடத்தில் நாட்டிலிருந்து வந்த தாத்தா புகைக்கும் சுருட்டு மணத்தை பேரப்பிள்ளைக் வெறுக்கும் சூழலைப் பேசியது. பாஸ்கி எடுத்திருந்த ஒரு படத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள், வீண் ஆடம்பரச் செலவு செய்வதை விடுத்து நாட்டு மக்களுக்கு இவர்கள் பயன்பட வேண்டும் என்ற செய்தியைச் சொன்னது.

மைக்கேல், ப்ரேமா போன்ற இளைஞர்கள் ப்ரான்ஸில் குறும்படங்களுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏ.ரகுநாதன் என்ற முதிய படைப்பாளியும் நிறைய குறும்படங்களை எடுத்துள்ளார். குறும்படங்களைத் தவிர்த்து புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பிடிக்கல, பிடிக்கல என்கிற, சாம் ப்ரதீபன் இயக்கி வெளிவரும் தீபம் தொலைக்காட்சித் தொடர பல்வேறு கோணங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையை விளக்குகிறது.

மேலே கண்ட படங்களில் புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளான கல்விமொழி ஜ் வேலைமொழி; நாஸ்டால்ஜியா; பெண்பார்ப்பது; சீரியல் பார்ப்பது; கோப்பை கழுவுவது; குழந்தைகளைக் கவனிக்காதிருப்பது; வீண் ஆடம்பரம், வெளிநாட்டில் இருப்பவர்களிடம் காசு கேட்டுத் துன்புறுத்தவது; ஏஜென்ஸிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது, இளைஞர்களின் வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் பேசின. புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில் அகதி வாழ்வு மறுக்கப்படுதல், நிறவாதத்தால் பழிவாங்கப்படுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை புலம் பெயர்ந்தோர் படங்கள் அழுத்தமாகப் பேசவில்லை என்று தெரிகிறது. புலம்பெயர்ந்தோர் குறும்படங்களில், ஈழத்து வட்டார வழக்கு மொழியைப் பயன்படுத்தாமல் இந்தியத் தமிழைப் பயன்படுத்துவது அப்படங்களுக்கான யதார்த்தத்தை இழக்கச் செய்கிறது.


புலம்பெயர்ந்தோர் எடுத்த குறும்படங்கள்.

1. எச்சில் போர்வை - அஜீவன் - ஸ்விஸ்,
2. கவிக்குயில் - அஜீவன் - ஸ்விஸ்
3. நிழல்யுத்தம் - அஜீவன் - ஸ்விஸ்,
4. யாத்திரை - அஜீவன் - ஸ்விஸ்,
5. நல்லதோர் வீணை செய்தே - ஜெயாகரன் - ஜெர்மனி,
6. முடிவல்ல - ஜெயாகரன்- ஜெர்மனி
7. மீண்டும் வருவோம் - பால்ராஜ்,
8 தாப்பு - பாலகிருஷ்ணன் - ஸ்விஸ்,
9 எச்சரிக்கை - சுகந்தன்
10. அலைகள் - சுதன் ராஜா - ப்ரான்ஸ்
11. தாகம் - ரூபன் - ப்ரான்ஸ்,
12. நிறப்பிரிகை - !க.எம்.டி பாலகுமார் - இங்கிலாந்து,
13 படிவுகள் - கே.எம்.டி. பாலகுமார் -இங்கிலாந்து,
14. உருகும் பனிப்பூக்கள் - கலைச்செல்வன் -
15. Escape from genocide - ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்- இங்கிலாந்து
16. உயிரே உன்னை அழைத்தேன் - குமரேஷ்வரன் - இங்கிலாந்து
17. வசந்தகாலபூக்கள் - குமரேஷ்வரன் - இங்கிலாந்து
18. The ball - தமயந்தி - நார்வே
19. கூலி - கனடா மூர்த்தி - சிங்கப்பூர்
20. N.R.I A/C - சபா - சிங்கப்பூர்
21. கனவுகள் நிஜமானால் - புதியவன் - இங்கிலாந்து
22. மாற்று - புதியவன் - இங்கிலாந்து
23. பூண்டு - ப்ரேம்
24. அந்த ஒருநாள் - பேட்ரிக் பத்மநாபன் - கனடா
25. சகா - திவ்வியநாதன் - கனடா
26. Its All about - ரஞ்சித் யோசப்
27. பெயரிடப்படாதது - ரூபன் - கனடா
28. To be continued - ரூபன் - கனடா
29. மனசு - சுதாகரன் -
30. இளிச்சவாயன் - யேசன் - கனடா
31. கழுவாய் - யசோதா கந்தையா
32. தொடரும் நாடகம் - எஸ்.சண்முகம்
33. மனுஷி - ரூபன் - கனடா
34. Untitled - சுதாசன்
35. உஷ் - சுமதி ரூபன் -
36. சப்பாத்து - சுமதி ரூபன்
37. மனமுள் - சுமதி ரூபன்
38. You Too - சுமதி ரூபன்
39. உனக்கொரு நீதி - கே.எஸ். பாலச்சந்திரன் -கனடா
40. வாழ்வு எனும் வட்டம் - கே.எஸ்.பாலச்சந்திரன் -கனடா
41. ஊருக்குப் பயணம் - கே.எஸ்.பாலச்சந்திரன் -கனடா
42. அம்மா - ப்ரீஜீவி துரைராஜா
43. ஹூ வாஸ் இட் - வலன்ரையன் ஞானாநத்தன்
44. பிள்ளை - சுமதி
45. உபசாந்தி - செல்வக்குமார்
46.பேரன், பேர்த்தி - பரா - ஃப்ரான்ஸ்,
47.வகுப்பு - பாலகுமார் - சுவிஸ்
48.நோய்வீதி - ப்ரேமா
49.சாரல் - ஏ.ரகுநாதன் - ப்ரான்ஸ்
50.நீரைக் காணாத வேர்கள் - சுரேஷ் - லண்டன்

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்
1. புலம்பெயர்ந்தோர் சினிமா - யமுனா ராஜேந்திரன் - முகம் வெளியீடு
2. சொல்லப்படாத சினிமா - நிழல் ப.திருநாவுக்கரசு நிழல் வெளியீடு
3. நிழல் இதழ்கள்


(கோவை காந்திகிராம பல்கலைக்கழகத்தில் புலம்பெயர்ந்தோர் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை)

.......................
(இக்கட்டுரையை வாசிக்க அனுப்பியும்..., இப்பதிவில் பிரசுரிக்க அனுமதியும் தந்த நண்பருக்கு நன்றி)

3 comments:

ஆ.கோகுலன் said...

புலம்பெயர்வாளர்களின் குறும்படம் பற்றிய விரிவான விபரத்திற்கு நன்றி. இவற்றை இணையதளம் வழியாக பார்க்க இயலுமா? இயலுமானால் தயவு செய்து இணைய முகவரியை அறியத்தரவும். நன்றி.

டிசே தமிழன் said...

கோகுலன், மேலோட்டமாய்த் தேடிப்பார்த்தில் சில குறும்படங்கள் கண்ணில்பட்டன. நேரமெடுத்துத் தேடினால் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் வேறு படங்களும் இணையத்தில் கிடைக்கக்கூடும். நன்றி.

Ruban:
To be continued
http://www.youtube.com/watch?v=qPJtaZ92rqA

This movie has no name
http://www.youtube.com/watch?v=GES5mQT6TYQ&feature=related

Sumathy Ruban:
Manushi
http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A&feature=related

ஆ.கோகுலன் said...

நன்றி டி.சே தமிழன். மேலும் தேடியதில் 'அப்பால் தமிழ்' என்ற இணையதளத்தில் 'சலனம்' என்ற பகுதியில் சில குறும்படங்களை தரவிறக்க முடிந்தது.