Thursday, March 27, 2008

நாங்களும் தமிழிலை கதைப்பம்!

இன்றைக்கு எங்கடை anniversary என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கா?
ஆ...அது இண்டைக்கா, கல்யாணமே ஒரு கெட்ட கனவு என்று கலங்கிக்கொண்டிருக்கிறன்...அதற்குள் எப்படி இந்தச் சோகமான நாளையும் நினைவில் வைத்துக்கொள்வது...?
நீர் இப்படிச் சொல்லுவீர் என்டு தெரியுந்தான்...
'சகியே உன்னை நினைக்கையில்
என் மனசு சொதி போலக் கொதிக்கிறது
கறிவேப்பிலையாய் மிதந்த என்னை
புளிமாங்காயாக கரைத்துவிட்டாய்
நானும் நீயும் இனி சொதியில்
பிரிக்க முடியாத பாலும் நீரும்.

என்று நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் கிறுக்குத்தனமாய் எழுதித் தந்ததாவது உமக்கு நினைவிருக்கா?
என்ன செய்ய? எனக்கு திருமணம் எனும் எதிர்கால அசம்பாவிதம் நிகழுமென அப்பவே தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டேன்... ஆனால் அதை விடக்கொடுமையானது...
என்னப்பா? என்ன கொடுமை... ?
இல்லை, நீர் படித்துக்கொண்டிருக்கிற காலத்தில், கடையில் இடியப்பத்தையும், சொதியையும் வாங்கிச்சாப்பிட்டுவிட்டு, அதை எப்படிச் சாப்பிட்டேன் என்பதை மட்டும் மணித்தியாலக்கணக்கில் போனில் கதைத்துக்கொண்டிருப்பீரே...அதை அனுபவித்தனுக்குத்தான் அந்த வேதனை தெரியும்.
ஏன் நீர் உந்த உளுத்துப்போன அரசியல் இலக்கியச் சண்டைகளை அரசியல்வாதியின் மேடைப்பேச்சுப்போல பேசும்போது நானும் சகித்துக்கொண்டுதானே கேட்டிருக்கிறேன்....ஒரு கொஞ்சநேரம் நான் எப்படி இடியப்பமும் சொதியும் சாப்பிடுகிறனான் என்டு மனோரதியமாய்ச் சொன்னால் மட்டும் உமக்கு கசக்கிறதாக்கும்.
இடியப்பமும் சொதியும் எல்லோரும் சாப்பிடுகிறதுதானே...அதை மணித்தியாலக்கணக்கில் கதைத்து என்னப்பா கிடைக்கப்போகிறது?
ஏன் உங்கடை இலக்கியச் சண்டைகளும் கூட அப்படித்தானே? பிறகேன் என்னோடு அதைப்பற்றி வளவளவென்று பேசுகிறனீர்?
ஆ...மனுசர் உங்களோடு கதைக்க முடியுமே? இப்படியே விட்டால் எதையாவது அலம்பிக்கொண்டிருப்பீர்...இந்தாரும் இந்த ரீயைக் குடித்து சாந்தியடையும்.
என்னப்பா? இண்டைக்கு புது விதமாய் ரீயெல்லாம் ஊற்றி எனக்குத் தருகிறீர்? எஙகே உந்த ரீ போடுகிறதை learn பண்ணினனீர்...
எனக்கு வாற விசருக்கு......அதுவோ நேற்றைக்கு coffee timeக்கு, நான் உம்மை லவ் பண்ணமுன்னம் லவ் பண்ணிக்கொண்டிருந்தேனே அந்த கேர்ள் வந்து சொல்லித்தந்தவா? விளக்கம் போதுமா?
நீர்தானே பதினொரு வயசிலிருந்து வருசத்திற்கொருவர் என்டு எத்தனையோ பேரைக் காதலித்துக்கொண்டிருந்தனீர்...? அதிலை இவா எந்த அவாவோ தெரியாது. விளக்கமாய்ச் சொன்னால்தானே விளங்கும்..
ஏனப்பா கொஞ்ச நேரம் கதைக்காமலிரும் என்டுதானே ரீ ஊற்றித்தந்தனான்....இப்ப என்ன தான் நான் செய்ய?
எதிர்வினை செய்வது எமது மரபு.
ஆ...நாசமாய்ப் போச்சுது... 'என்ரை தங்கச்சி எதையும் எதிர்த்துக்கதைக்கா சொக்கத் தங்கம்' என்டு sentiment கதைத்த உம்மடை அண்ணனை பிடித்து உதைத்தால்தான் என்ரை விசர் தீரும்போலக் கிடக்கு.

******************************************
முன்னர் எழுதியவை)

என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?’
ச்சாச்சா…என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.
இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிகைக்கு அனுப்பிவிடும்.
கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.
அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.
சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்…. என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கிறீர்?
‘எப்படியப்பா?’
‘இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா….உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.’
அப்படியா சொல்லுறவா...? நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது, அந்த மனுசி இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.’
அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?
‘அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.’
‘அவனவன் கதைகள், கவிதைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்….
என்னப்பா எங்கையப்பா இப்ப அவசரமாகப் போகின்றீர்?’
‘இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.’
‘ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்...’
‘சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.’
(மனதுக்குள் முணுமுணுத்துபடி…) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்…இப்ப என்னடா என்றால்…
‘என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது…?’
இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?
‘சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.’
‘என்னதையப்பா..?’
‘என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக் கேட்கிறீர்…..வெங்காயம்…. வெங்காயத்தை உரியும்.
******************************************

என்னப்பா எழும்புங்கோவன்…..எத்தனை முறை வந்து எழுப்பிறது…எருமைமாடு மாதிரி படுத்திருக்கிறியள்
கொஞ்சநேரம் விடுமனப்பா…இப்பத்தான் அஸினைப் பற்றி ஒரு கனவு வந்தது…எப்ப பார்த்தாலும் சிவபூசையில் புகுந்த கரடிமாதிரி வந்து கனவைக் குழப்பும்.
என்ன அஸினைப் பற்றிக் கனவோ….அவாதானே உம்மடை தொல்லை தாங்காது கலியாணங்கட்டி இரண்டு குழந்தையும் பெற்று சந்தோசமாய் வாழ்கிறா…உமக்கு ஒருத்தர் நல்லாயிருக்கிறது பிடிக்காதே!
எனக்கு இப்பவும் ஏழு வருசத்துக்கு முன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அஸின்தான் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறா.
அதுசரி எப்பவும் உமக்கு மன்மதக்குஞ்சென்று நினைப்பு.
சரி சரி புறுபுறுக்காதையும்….நீரும் என்னை லவ் பண்ணேக்கில சூர்யாவைப் பார்த்து பார்த்து உருகித்தானே என்னையும் ஜிம்முக்குப் போ போ என்று துரத்தினனீர்...
அது சரி…ஜிம்முக்கு போனால் pacs வருமென்றால்… உமக்கு கண்டகிண்ட தலையிடி, இழுப்பு, இரத்தஅழுத்தம் எல்லோ வந்தது…
நான் என்னப்பா செய்ய… அங்கேயும் ஸல்சா, சாச்சா என்று அங்குமிங்குமாய் பொம்பிளையப் பிள்ளைகள் ஒடித் திரிந்துகொண்டிருக்க, அவையளைப் பார்த்த பிரமிப்பில் ஒரேயடியாய் வெயிட்ஸை கூட எல்லோ தூக்கிவிடுகிறனான்…கடைசியில் எல்லா வருத்தமும் எனக்கு வந்துவிட்டது.
நான் தான் பிழை விட்டு விட்டேன்….மனுசர்தானே ஜிம்முக்கு போறது… உம்மையெல்லாம் அங்கே அனுப்பின என்ரை புத்தியைச் செருப்பாலை அடிக்கோணும்.
******************************************

இஞ்சையப்பா, இன்டைக்கு காலமை அம்மா கோயிலுக்குப் போகப்போறன் என்டவா அவாவை ஒருக்கா கொண்டுபோய் காரில் இறக்கிவிடுகிறிரே…
உம்மடை கொம்மாவையோ…எனக்கு வேற வேலை இல்லையோ…நீர்தானே சோத்து மாடு மாதிரிக் கிடக்கிறீர்… உந்த வேலைகளையாவது செய்யும்.. அத்தோடு அந்த மனுசியின்ரை கடியும் தாங்கேலாது.
ஏனப்பா என்ன நடநது?
இல்லை…அன்டைக்கு தலைமயிரை சரியாய் முடியாமல் அவாவை கோயிலிலை இறக்கிவிடப்போனால், அவா சொல்கிறா….நான் அம்மன் கோயிலுக்குப் போறன்…இஞ்சை காரை ஓட்டிக்கொண்டு என்ரை அம்மாளாச்சியே காட்சியளிக்கிறா போலக் கிடக்கிறது என்டா…
ஹ..ஹ…ஹ
நான் அவாவுக்குச் சொன்னன்….அப்ப ஏன் நீங்கள் கோயிலுக்குப்போகிறியள்? உங்கடை மகனை காளியின்ரை காலுக்குள் நசுங்கி கிடக்கிற அசுரன் மாதிரித்தானே வைத்திருக்கிறன்…மற்றக்கால் சும்மாதான் கிடக்கிறது…வேண்டுமென்றால் அங்கை ஒரு இடந்தரட்டோ என்றேன்… அதற்குப்பிறகு மனுசி வாய் திறக்கிறதில்லை பாத்தியளோ.
ஏன் உம்மடை கொம்மா மட்டும் என்ன திறமோ…நான் உம்மடை வீட்டுக்கு வந்த முதல்நாளே…நான் மருமகனுக்கு அந்தமாதிரி ரீ போட்டுத்தாறேன் என்டு சொல்லிப்போட்டு சீனிக்குப் பதிலாய் உப்பைப் போட்டுக் கொண்டுவந்து தந்துவிட்டு 'மருமகனே தேத்தண்ணி எப்படி இருக்கு?' என்டு நக்கலாய்க் கேட்டதை மறக்கமுடியுமா என்ன?
எங்கடை அம்மாவுக்கு முதல் நாளிலேயே உமது வண்டவாளம் எல்லாம் தெரிந்துவிட்டது போல..
அதாவது பரவாயில்லை….மருமகனுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு கோழி அடித்துக்கொடுக்கப்போறேன் என்று சொல்லிவிட்டு மனுசி என்னைத்தானே அந்தச் சேவலை துரத்திப் பிடித்து தா என்று கேட்டது….நான் அண்டைக்கு முழுதும் அந்தச் சேவலோடுதானே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனான்….
முந்தின காலத்திலே காளையை அடக்கினால்தான் பெடியங்களுக்கு தங்கடை பொம்பிளைப்பிள்ளையளை கலியாணஞ்கட்டிக்கொடுப்பினமாம்…உமக்குச் சேவலாவது பிடிக்கத் தெரிகிறதா என்று அம்மா போட்டி வைத்துப் பார்த்திருக்கிறா.
எனக்கு அண்டைக்கு வந்த ஆத்திரத்தில் வளவுக்கிலை கிடந்த உலக்கையாலே ஒரு போடு போட்டால் என்ன என்ற மாதிரி இருந்தது
என்ன சேவலுக்கா…?
இல்லை உம்மடை கொம்மாவின்ரை மண்டையிலை.
******************************************

ஏனப்பா உமக்கு ஞாபகமிருக்கா…நாங்கள் லவ் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் நான் எழுதித்தந்த கவிதை ஒன்று….
கவிதையோ…உம்மடை கவிதைகளை வாசிக்கத்தொடங்கினாப்பிறகுதான் அதுவரை கவிதைகளை நேசித்துக்கொண்டிருந்த எனக்கு கவிதைகள் மீது வெறுப்பே வந்தது…கண்டறியாத உம்மடை கவிதை…
நீர் முந்தி பெரிய வளையம் ஒன்டை உம்மடை காதில் போட்டியிருப்பீரே…அதுவின்ரை அழகைப்பார்த்துத்தானே எனக்கு முதலில் லவ்வே வந்தது.
உந்த அற்புதமான காரணத்தை வெளியிலை ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையும்…கேட்கிற சனங்கள் கொதிப்பில் தங்களைத்தாங்களே செருப்பாலை அடிக்கத் தொடங்கப்போகுதுகள்.
ஆ…ஞாபகத்துக்கு வந்துவிட்டது கவிதை..
உன் காது வளையத்தில்
ஊஞ்சல் ஆடி
செவியினுள் நுழைந்து
மூளையில் புதைந்து
தலையில் மலர்ந்த்
காதல் பேன்
நான்.
எனக்கு உந்த புல்லரிக்க வைக்கின்ற கவிதை நினைவிலை இல்லை….ஆனால் உதை வாசித்த என்ரை தோழி சொன்ன ஒன்றுதான் இப்பவும் நினைவிலிருக்கிறது…
என்ன சொன்னவா அவா?
அந்தாளிட்டை சொல்லு…காதிலை எதுவும் நுழைந்தால் காதல் வராது…காதுக் குத்துதான் வரும்…எதுக்கும் ஒருக்காய் பைத்தியக்கார டொக்கரைப் பார்க்கச் சொல் என்டு…
அவா தனக்கொருத்தரும் காதற்கவிதை எழுதித்தரவில்லையென்ற பொறாமையிலை அப்படிச் சொல்லியிருக்கிறா...
அது மட்டுமில்லை…இந்தக் கவிதை எழுதிற.. , குடுகிறவன்கள் எல்லாம் சரியான கள்ளங்கள் அவங்களை மட்டும் நம்பிவிடாதே என்டும் சொன்னவா…ம்..ம்.. அப்பவே அவளின்டை அட்வைஸைக் கேட்டிருந்தால் நான் இப்படி படுகுழிக்குள் விழாது இருந்திருப்பேன்..
உமக்கு எப்பவும் என்ரை கவிதைபற்றி நக்கல்தான்…எனக்கு எத்தனை விசிறிமார் இருந்தினம் என்டு உமக்குத் தெரியுமோ?
விசிறிகளோ….கவனமாய் வைத்திருங்கோ…வருகிற கோடைகாலத்தில் விசுக்க உதவும்…
உம்மளை கலியாணங்கட்டின நேரத்தில் கூட, எனக்கு ஒரு இரசிகை கடிதம் எழுதிக் கேட்டிருந்தவா…நீங்கள் கவிதை எழுதாத நேரங்களில் என்ன செய்யிறனியள் என்டு..
நீர் என்னத்தைச் சொன்னனீர்..?
கவிதை எழுதாத நேரத்தில் என்ரை மனுசிக்கு வெங்காயம் உரித்துக் கொடுக்கிறனான் என்டு உண்மையைத்தான் சொன்னனான்.
அது சரி…
அந்த இரசிகை எனக்கொரு கடிதம் திருப்பி எழுதியிருந்தா…
'கவிதை எழுதும் இந்தக் கரங்கள்
நீல வானில் நட்சத்திரங்களுக்கும்
கதை சொல்லும் என்று கனா வளர்த்திருந்தேன்!
வேதனை வேதனை
தமிழுக்கு வந்த சோதனை சோதனை!
வெங்காயம் உரிப்பதா கவிஞனின் கைகள்?
எடுத்து வருகிறேன் கத்தியை
எங்கே அந்த இராட்சசி?
வெட்டி நாலாய்
ஊறப்போடுகின்றேன்
ஊறுகாய்! '

அவா இங்கை வந்திருந்தால் இரண்டு கொலைகள் விழுந்திருக்கும்…
ஏனப்பா அவா ஒராள்தானே வருவா?
முதலில் உம்மைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தானே…அவாவை ஊறுகாய் ஆக்கியிருப்பேன்.
*****************************************

9 comments:

Sri Rangan said...

டி.ஜே,
தமிழ்மணம்-இலக்கிய வட்டம், இருக்கிற இன்றைய சூழலில் இத்தகையவொரு நடை-நறுக்கு-எழுத்து-புனைவு உண்மையில் தேவையாகவே இருந்தது!சிரிப்பதற்கும் சுவைப்பதற்கும் இதற்குள் பல சொல்லியுள்ளீர்கள்.அது சரி"குடும்ப"அநுபவம் எப்படி வந்தது?திருமண வாழ்வில் இதைவிட மோசமான புடுங்குப்பாடுகள் வரும்.அது, உயிரையே குடிக்கக் கூடிய மாதிரியெல்லாம் வரும்.நீங்களும்,உங்கள் மானசீக மனைவியும் உரையாடுவதுபோல அவ்வளவு பதுமையான-நகைச்சுவையாக இருக்காது!அல்லது, மகிழ்வு ததும்பும்-பொலிவுறும் சில நொடிகளில் ப+கம்பம் வெடித்துச் சிதறும்.மண்டையைப் பிராண்டி,மயிரைப் பிய்த்தெறிந்து...வேண்டாம்.அதிக பயமூட்டல் வாழ்வை இரசிக்கும்படியாக்கும்.பின்பு, நீங்களும்"வாழ்ந்துதாம் பார்ப்போமே"என்று கல்யாணத்துக்காக ஒற்றைக் காலில் தவமிருக்க உங்கள் பெற்றோருக்குத்தாம் வேலை!

பதிவுக்கு:நன்றி!

Raj Chandra said...

டி. சே...

இவ்வளவு நேரமெல்லாம் தைரியமாகப் பேசிக்கொண்டிருக்க இயலாது. நாலாவது பத்தியிலேயே 'வாயை மூடிக் கொண்டு போம்' (கணவர்கள் சொல்லமுடியாத வார்த்தை) என பதில் விழுந்திருக்கும் (10 வருட அனுபவம்) :).

சயந்தன் said...

ஸ்ப்பா - இதை நீ தான் எழுதினாய் என ஒற்றைக்காலில் நின்றவரிடம் பாரடியப்பா இதை எழுதினவர் டிசே எண்டொருத்தர் கனடாலை எண்டுங்கள் profile காட்டிய பிறகும் இதை ஏன் ரசித்து வாசிக்கிறாய் எனக் கேட்டோய்ந்தாயிற்று - என்ன செய்ய கடைசியில் டிசேக்கு வேலை இல்லை எனச்சொல்லி தப்பித்தேன். ::)))

சில நொடிகளில் ப+கம்பம் வெடித்துச் சிதறும்.மண்டையைப் பிராண்டி,மயிரைப் பிய்த்தெறிந்து...வேண்டாம//

வர வர எனக்கு மயிர் கொட்டுண்டுது - வெளியில சுடு தண்ணியில குளிக்கிறதாலை எனச் சொல்லித் திரிகிறேன்.

டிசே தமிழன் said...

இப்படிக் குடும்பஸ்தர்கள் அனைவரும் பயமுறுத்தினால், என்னைபோன்றவர்கள நாளை எப்படித்தான் இல்லறவாழ்வில் காலடியெடுத்து வைப்பது?

மற்றது சயந்தன், உமது பின்னூட்டத்தை வீட்ட்லிருப்பவர்களுக்குக் காட்டவும் :-).

நளாயினி said...

adaadaaa mm.. nadakadum.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ரசனையான கணவன் மனைவி சண்டையாயிருக்கே..
என்ன தான் சொன்னாலும் அந்த மனைவிக்கு என்ன ஒரு அன்பு அந்த கணவர் மேல.. பின்னூட்டம் போட்ட ஒருத்தர் கூட அதை கண்டுக்கவே இல்லையே..

கொண்டோடி said...

அப்பப்ப வந்து உம்மட தமிழிழில நொட்டை பிடிச்சுக்கொண்டிருக்கிற பேர்வழியளுக்காகத்தான் உந்தத் தலைப்பில பதிவெழுதினீர் எண்டு நினைச்சன்.

தமிழன்... said...

நானும் வாசிப்பன் உங்கடை பதிவுகள் ஆனால் இந்தப்பெயரில் ஒரு நாளும் பின்னூட்டம் எழுதியதில்லை ஏனோ இந்தப்பதிவுக்கு இந்த பெயரில் பின்னூட்டம் எழுதயிருக்கிறேன்...
சொல்லப்போனா உதுவும் ஒரு வகை காதல் தான் பாருங்கோ....:)

வாசிக்க வாசிக்க ஊரில பாத்த பல நினைவுகள் எழுத்து நடை தரம் அண்ணன்

டிசே தமிழன் said...

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே.
....
/என்ன தான் சொன்னாலும் அந்த மனைவிக்கு என்ன ஒரு அன்பு அந்த கணவர் மேல/
க‌ய‌ல்விழி முத்துலெட்சுமி: பெண்ணின் ம‌ன‌ம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்க‌ள் :-)
....
கொண்டோடி: இப்ப‌திவின் த‌லைப்புக்கு தீவு அண்ணையின் இந்த‌ப்ப‌திவும் ஒரு கார‌ண‌மென‌க் கொள்க‌: http://theevu.blogspot.com/2008/03/blog-post_21.html