Tuesday, October 21, 2008

இந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியியல் அணுகல்

-தமிழவன்

இந்து பத்திரிகையில் நடுப் பக்கத்தில் வந்த கட்டுரை ஒன்று பற்றிய குறியியல் ஆய்வு இது. கட்டுரையின் தலைப்பு : "தமிழ்வெறியால் ஏற்படக் கூடிய ஆபத்து" ஆங்கிலத்தில் The Dangers of Tamil Chauvinism. இக்கட்டுரை வெளியான தேதி அக்டோபர் 14-ஆம் தேதி (2008).

குறியியல் ஆய்வு என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதுபற்றிய பரிச்சயம் செய்ய வேண்டும். அதற்கு முந்தி அக்கட்டுரை ஏன் முக்கியம் என்பது பற்றி ஓரிரு வரிகள்.

அக்டோபர்-15ஆம் தேதி அக்கட்டுரையை எதிர்த்துக் கோவையில் பெரியார் திராவிடக் கழகத்தினரும், சில வழக்கறிஞர்களும், மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. காவலர்கள் 147, 285, 447, 336, 506 ஆகிய செக்ஷன்களில் எதிர்ப்பாளர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். இந்திய பத்திரிகையாளர் யூனியன், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், மற்றும் சென்னை பிரஸ் கிளப் ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்களைக் கண்டித்துள்ளன.

குறியியல் பற்றி நான் ஒரு நூலும், சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். குறியியல் என்றால் ஆங்கிலத்தில் 'ஸெமியாடிக்ஸ்' என்று கூறுவர். இது ஒரு அறிவியில் துறை. அதாவது குறிகள் பற்றிய அறிவியல். உலக உண்மைகளைக் குறிகளாக இவ்வறிவியல் துறையினர் பார்ப்பார்கள். நான் தமிழ்ப் பேராசிரியனாகையால் 'நச்சினார்க்கினியரின் ஸெமியாடிக்ஸ்' என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் வீ.அரசு தவிர யாரும் அக்கட்டுரை வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதும் இன்றுவரை ஏதும் என்னிடம் பேசியதில்லை. 'தமிழும் குறியியலும்' என்று ஒரு நூலும் எழுதியுள்ளேன். தமிழில் நாடகம் பற்றிய ரவியின் குறியியல் நூல் ஒன்றும் வந்துள்ளது.

இந்து நாளிதழ் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு குறிப்பிட்ட நோக்கிலேயே செய்திகளை வெளியிடும் பத்திரிகை என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கை அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கும் இதழ். எப்படியாவது சிங்கள அரசு வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியத்துவ நிலைப்பாடாகக் கொண்ட பத்திரிகை அது என்பது பரவலான கருத்து. அதே நேரத்தில் இந்திய இடதுசாரிகளின் கருத்தை அடியொற்றிய கருத்துகளை இவ்விதழில் பார்க்கமுடியும். பி.ஜே.பி. சார்ந்த அமைப்புகளை இவ்விதழ் விமர்சிக்கும் என்றும் கிறிஸ்தவ கோயில்களைத் தாக்குவதைக் கண்டிக்கிற இதழ் என்றும் பலருக்கும் தெரியும். முரளிதர் ரெட்டி என்பவர் இலங்கை அரசின் துண்டறிக்கைகளைச் செய்திகளாக இந்து இதழில் தொடர்ந்து நிரப்புவதை இந்து நாளிதழ் வாசகர்கள் அறிவர். தமிழ் நிலப்பகுதிகளை இலங்கை அரசு போரில் கைப்பற்றுவதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

குறியியல் ஆய்வு குறிகளின் தாரதம்மியத்தையும், குறிகளின் வகைகளையும் பிரித்து அறிய முயலும்.

மாலினி பார்த்தசாரதி என்ற பெண்மணியால் எழுதப்பட்ட இக்கட்டுரை மொத்தத்தில் 14 பத்திகளைக் கொண்ட கட்டுரை. அனைத்திந்தியாவுக்கும் செல்லும் கட்டுரையாக இந்து நாளிதழ் இதனை அச்சிட்டுள்ளது. வெறும் பிராந்தியப்பக்கங்களில் அச்சான கட்டுரையல்ல. தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையும் அல்ல.

இக்கட்டுரை தீவிரவாதம் என்ற சொல்லை, மூன்றாவது பத்தியில், இஸ்லாமிய ஜிகாதிகளோடு இனம் கொள்கிறது. முதல் பாராவில் சமீபத்தில் இந்திய நகரங்களில் வெடிகுண்டு வைத்தவர்களோடு இணைக்கிறது. பின்பு எல்.டி.டி.இ.யின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ம.தி.மு.க மற்றும் பி.எம்.கே என்ற பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்கிறது. தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் ஆகும். ஆங்கிலத்தில் Terrorism. எல்லோருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் என்பது தெரியும். இந்த அமைப்பினருக்கு இலங்கை முஸ்லீம்களோடு சில பிரச்சினைகள் எழுந்தன என்பதும் தெரியும். முதல் பாராவிலும், பதினான்காம் பாராவிலும் காஷ்மீரில் பிரிவினை கேட்பவர்களும், இலங்கையில் பிரிவினை கேட்பவர்களும் ஒன்றே என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். குறியியல் கூற்றுகளை அடிப்படையாக வைப்பதைவிட (சொற்களுக்கு (Signifier) அதாவது குறிப்பானுக்கு உள்ள குறிப்பீடு (Signified) பற்றிக் கவலைப்படுவதன் மூலம்) கூற்றின் அர்த்தத்தை அடிப்படையாகக் கொள்ளும். இந்த இரண்டு பத்திகளின் குறிப்பீடு இங்கு நான் கூறும் விஷயம்தான். தீவிரவாதத்தைக் கையாள்பவர்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு கண், மூக்கு, கால் இவை வித்தியாசமாக இருக்கும். இவர்கள் வரலாற்றில் வராதவர்கள். வரலாற்றுக்கும் அப்பால் இருப்பவர்கள். எப்போதும் வெறுக்கத்தக்கவர்கள். இவர்கள் ஒரு குணரூபம் (abstraction). இப்போது விஷயம் ஓரளவுக்குத் தெளிவாகும்; அதாவது தீவிரவாதிகள் என்று சிலர் இல்லை; யாரைத் தீவிரவாதிகள் என்று அழைக்கிறோமோ அவர்களே தீவிரவாதிகள். அழைக்கிறவர்கள் பலசாலிகளானால்- அதிகமானவர்கள் ஆனால், அழைக்கப்படுபவர்கள் தீவிரவாதிகள். புஷ்ஷின் அமெரிக்காவிற்கு ஈராக் அன்று தீவிரவாதி. இந்தியாவிற்கு காஷ்மீர் பிரிவினை கேட்பவர்கள் தீவிரவாதிகள். இலங்கைக்கு தனிஈழம் கேட்பவர்கள் தீவிரவாதிகள். மாலினி பார்த்தசாரதியின் கட்டுரைக்குள் இறுக்கிக் கட்டப்பட்டுள்ள குறிகளைச் சற்றுத் தளர்த்தினால் நமக்குக் கிடைக்கும் அர்த்தங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

'தீவிரவாதிகள்' என்ற சொல்லுக்குப் புதுத்தொனி, புதுச் செயல்பாடு இக்கட்டுரைக்குள் உருவாகிறது. அதாவது வெறுப்பிலிருந்து உருவாவதுதான் இச்சொல். இனி, இச்சொல்லை யார் மீதும் ஒட்டலாம். ஐந்தாம் பத்தியில் எதிரணிகளான தி.மு.க.வும், அ.தி.மு.கவும் மாயமாய் ஓரணிக்குள் மாலினியால் கொண்டுவரப்படுகின்றன. புலிகள் மீது எடுக்கப்பட்ட மிலிட்டரிச் செயல்பாட்டால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 'பைத்தியம் பிடித்தது போலாகி (Work themselves into a frenzy)Õ ஒரே அணிக்குள் பிடித்துத் தள்ளப்படுகின்றனர். புலிகளும், அதன் ஆதரவாளர்களும் 'தமிழ் வெறி உணர்வை' (Tamil Chauvinist Sentiment) பயன்படுத்தி, டெல்லி மீது கொலம்போவின் படை எடுப்புக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வலியுறுத்துகின்றனர். 'வெறி உணர்வு' 'பைத்தியம் பிடித்தது' போலாதல் ஆகிய சொற்கள் இன்னொரு, அறிவுக்கப்பாற்பட்ட வலயத்தை உருவாக்குகின்றன.

இந்தப் பைத்தியம், தீவிரவாதம், வெறி உணர்வு போன்ற சொற்கள் இரண்டு முறை குறிப்பிடப்படும் 'ராஜீவ்காந்தி படுகொலை' என்ற நிகழ்ச்சியோடு பொருத்தப்படுகின்றன. வெறி, கொலை, தீவிரவாதம், முஸ்லீம் ஜிஹாதிகள் என்பதான ஒரு கதை சொல்லல் (narrative) கட்டப்படுகிறது. மாலினி பார்த்தசாரதியின் வெறுப்பை மையக்கருவாக (plot) கொண்ட கட்டுரையில் 15-10-08 அன்று இந்து இதழின் ஆசிரியர் கடிதம் எழுதுவோர், மாலினியின் கதை சொல்லலுக்கு (கதையாடலுக்கு) ஏற்ப நாயகர்களாகவும், (Heroes) வில்லன்களாகவும் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர். அதாவது மாலினியின் கட்டுரையை சபாஷ் என்று கூறி, கரகோஷம் செய்பவர்கள் நாயகர்கள். மாலினியின் கதையாடலை ஏற்காதவர்கள் வில்லன்கள். அவர்கள் இருவரின் கருத்தை ஏற்காதவர்கள் மாலினியின் வெறுப்புக் கதையை உருவாக்கும் இருவித பாத்திரங்கள். இரு எதிரும் புதிருமான ஈரிணை எதிர்வுகள் (Binary opposites) இவர்கள்.

நான்காவது பத்தியில் முஸ்லீம் பிரிவினைவாதம் பாக்கிஸ்தான் மிலிட்டரி ஜெனரல்களையும் இஸ்லாம் தீவிரர்களையும் ((Militants) ஓரணியாக மாற்றுகிறது. இந்த அணிக்கு எதிராக இந்திய தேசிய பிரக்ஞை (Indian National consciousness) நிறுத்தப்படுகிறது. பாக்கிஸ்தான் மிலிட்டரி ஜெனரல்களும், இஸ்லாம் தீவிரர்களும், காஷ்மீர் பிரிவினை கேட்பவர்களை 'சுதந்திர போராட்ட வீரர்கள்' என்கின்றனர். இப்போது கதைக்குள் பூடகமாக செயல்படும் ஒரு உபகதை நுழைகிறது. அது வெளிப்படையாய்ச் சொல்லாமல் பூடகமாக வைக்கப்படுகிறது. பா.ம.க, ம.தி.மு.க, மற்றும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய தமிழகத்தின் எல்லா முக்கியமான அரசியல் கட்சியும் புலிகளை 'சுதந்திர போராட்ட வீரர்கள்' என்று கருதுகின்றன என்பது இக்கட்டுரையாசிரியரின் 'கூறாக் கூற்று'

ஆக ஒரு கொலையைச் சுற்றி எழுதப்படும் மர்மக் கதையில் மாலினி கட்டுரையாசிரியராகவும், கொலையைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவாகவும் இருவேறு வேஷங்கள் அணிந்து, தன் துப்பாக்கியை, தமிழகத்தின் எல்லாக் கட்சிகள் மீதும் குறிபார்க்கிறார். குறியியல் என்ற அறிவியல் உலகமெங்கும் பிரபலமானது. கியுபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தாடியை உதிர வைக்க அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் முயற்சி செய்தபோதுதான். சாதாரண விஷயம் (இங்கு மயிர்) கூட முக்கியமானதாகும் சமாச்சாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல் ரோலான் பார்த் என்ற பிரஞ்சு இலக்கிய விமரிசகர், ஆடைகள், ஹோட்டல் மெனு போன்றவற்றையும் குறியியல் ஆய்வு செய்தார். Elements of semioties என்ற பெயரில் குறியியல் பற்றிய பாட புத்தகம் ஒன்றை ரோலான் பார்த் எழுதியிருக்கிறார். ஆனால் Mythologies (பௌரானிகம்) என்ற பெயரில் வந்த குறியியல் புத்தகம் தான் இன்னும் அதிகம் பிரபலமானது.

குறியியலில் இல்லாதது உள்ளதாக உயிர்பெற்று வரும் அடிப்படை ஒன்று உண்டு. அதற்கோர் உதாரணம்- தமிழ் வெறி பற்றிய இந்த நாளிதழின் கட்டுரையைப் படித்த ஒரு வாசகரின் எதிர்வினை. 16.10.2008 இந்து நாளிதழ் வாசகர் கடிதத்தை எழுதியுள்ள பி.அமரேசன் பட்டுசாமி (திருவண்ணாமலை): இலங்கையில் நடக்கும் போரை பிரிவினைக்கான காஷ்மீர் கலகத்துடன் ஒப்பிடமுடியாதென்கிறார். பங்களாதேஷில் 1971இற்கு முன்பிருந்த நிலையோடும் கொஸவோவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்த நிலையோடும், இன்றைய பாலஸ்தீனிய சூழ்நிலையோடும் ஒப்பிடலாம் என்கிறார் இந்த வாசகர். ஆனால் கட்டுரையாசிரியர் இப்படி ஒரு விளக்கத்தைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் தீவிரவாதம் என்பது அவரது விருப்பப்படி மட்டுமே விளக்கம் பெற வேண்டும் என்பது குறியியல் வாசிப்பு ஒன்றின் மூலம் வெளிப்படும் உண்மையாகும். ஆனால் இந்து நாளிதழ் ஸ்ரீரங்கம் வி.மஹாலிங்கம் கருத்தை அரண் செய்வது போல் புகழ்பட வேண்டியதும் துணிகரமானதுமான கட்டுரையை வெளியிட்டிருக்கிறதாம்.

இந்து நாளிதழ் தமிழர்கள், தமிழ்மொழி போன்ற விஷயங்களில் எப்படி நடந்து கொண்டுள்ளது என்ற வரலாறு பேராசிரியர் நம்பி ஆரூரன் எழுதிய 'தமிழ்ப் புத்தொளி காலமும் திராவிட தேசியமும்' என்ற ஆங்கில நூலில் தெளிவாக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்த பத்தாண்டுகளில் மெட்ராஸ் யுனிவர்சிட்டியின் செனட் போன்ற உயர்மட்ட விவாதங்களில் தமிழை சமஸ்கிருதத்தைப் போலக் கருதக்கூடாது என்று கருதியவர்களின் பக்கம் இந்து நாளிதழ் நின்றிருக்கிறது. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்றும் தமிழ் ஒரு 'வெர்ணாக்குலர்' மட்டுமே என்றும் இந்து நாளிதழ் கருதி வந்திருக்கிறது.

தமிழ் வெறி பற்றிய இந்து நாளிதழின் கட்டுரையும் இந்து நாளிதழ் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கொள்கையை மேலும் வலுவுள்ளதாக்கியுள்ளது.


ந‌ன்றி: உயிரோசை (20 10 2008)

Wednesday, October 15, 2008

'எங்க‌ள் காய‌ங்க‌ளும் வெறுமைக‌ளும் வேறுவித‌மான‌வை'

இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதை நூலை முன்வைத்து…
-தேவகாந்தன்-

சமீபத்தில் வெளிவந்த இளம் கவிஞர்களின் ஆக்கங்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைத் துறையின், எதிர்காலச் செல்நெறியைச் சுட்டிக்காட்டும் கூறுகள் புலப்பட ஆரம்பித்திருப்பதை ஒரு தீவிர வாசகர் எதிர்கண்டிருக்க முடியும். அவ்வாறான ஆக்கங்களில் இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தொகுப்பை ஒரு முக்கிய வரவாக நான் காண்கிறேன்.

‘நாடற்றவனின் குறிப்புகள்’ எல்லா கவிதைத் தொகுப்புகளையும் போலவே மோசமானது, சுமாரானது, நல்லது, மிகநல்லது என்ற பகுப்புகளுள் அடங்கக்கூடிய விதமாக அமைந்து, 53 கவிதைகளைக் கொண்டிருக்கிற நூல்தான். ஆனாலும் இது அழுத்தமாகக் காட்;டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறதை இத் தொகுப்பில் முக்கியமாகக் காணக்கிடந்தது.

சென்ற நூற்றாண்டின் அந்திமம் வரை ஈழத்துப் புலம்பெயர்ந்த கவிஞர்களின் பாடுபொருள் பெரும்பாலும் தம் இழந்த மண்ணும், வாழ்வும், கலாச்சாரமும் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் மறுதிரும்புகையின் போதான துயர்களைப் போன்றதோடுகூட இவர்களுக்கு ஒரு திரும்புகை இருந்துவிடாது என்பதை அரசியல் வலிதாய் உணர்த்தி நிற்கையில், இன்று மண்ணும் வாழ்வும் கலாச்சாரமும் பற்றிய ஏக்கம் அவற்றை இழந்ததனாலாய துயரங்களை வைத்துப் பார்க்கையில் இவர்கள் கவிதைகளில் பின்தள்ளப்பட்டிருப்பதாகவே சொல்லக்கூடியதாய் இருக்கிறது. இன்று புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களே அதைப் பிரச்சினையென உணராதபோதிலும், புலம்பெயர்ந்ததினாலான மூலத்திலிருந்து கிளர்ந்திருப்பவை என்பதை சமூக அக்கறையாளரால் எளிதில் உணரமுடியும். அதனால் இந்த பழையனவற்றின் இழப்பும், புதிய புலத்தின் உழல்வும், ஒரு நவ கலாச்சாரக் கலப்பினால் அவைபற்றிய உணர்வும் கூடியோ குறைந்தோ அவர்கள் படைப்புக்களில் அழுத்தமாவதை தவிர்க்கவே முடியாதிருக்கும்தான். இச் செல்நெறியின் ஆகக் கூடிய உதாரணமாகும் தொகுப்புகளில் முதன்மையானது ‘நாடற்றவனின் குறிப்புகள்’ என்பதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், ஒளவை போன்றவர்களுடைய கவிதைகளின் பாடுபொருளைவிட, கி.பி.அரவிந்தன், பா.அ.ஜயகரன், திருமாவளவன், செழியன் போன்றோரினதை விடவுமே, இளங்கோ, தான்யா, பிரதீபா, தமிழ்நதி, ஆழியாள், றஞ்சினி ஆகிய புதிய தலைமுறையினரின் பாடுபொருள் வித்தியாசமானது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் முன்னையவர்களினதைவிட விரிவானது. ஒருபொருளிலிருந்து இன்னொரு பொருளாய் சூக்கும மாற்றமுற்றது. பெண்ணிலை வாதக் கருத்துக்களும், புகலிடத்தின் அவலங்களும், பல்வேறு சமூகங்களின் இதுபோன்ற துயரங்களின் அவதானிப்பும், அதனாலேயே இப் பொதுத் துயரத்துக்கு மூலாதாரம் கண்டு ஒன்றிணையும் எத்தனிப்பும் இவர்களின் கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. தமிழ்ச் சமூகமென்ற ஒற்றைத் தடத்திலிருந்து விலகி உலகமளாவ எத்தனிப்பது.

புகலிட அவலங்கள் அனாதியானவை. விவிலியம் இது குறித்த முதலாவது பதிவின் சாட்சியமெனக் கூறமுடியும். சங்ககாலத்துப் பாணர் பாடினிகளின் பாடல்களில் தெரிவது இதுபோன்ற துயரத்தின் ஒரு சாயல்தான்.
அப் பகுதிக்கு புதிதாக வந்த பாணன்தான் அவன். முதல்நாளிரவு அவன் ஓர் இல்லிலிருந்து பாடியிருக்கிறான். அதைச் சுட்டும் விதத்திலேயே அவன் ஒரு பெண்ணால் அவமானப்படுத்தப்படுவதாக ஒரு சங்கப் பாடல் உண்டு. அதன் கருத்து இது:
‘நேற்றிரவு ஒரு சத்தம் எழுந்துகொண்டிருந்தது எங்கிருந்தோ. அதைக் கேட்ட என் அன்னை பேய் கத்துகிறது என்றாள். என் தங்கையோ, நாய் குரைக்கிறது என்றாள். நான்தான் நீ பாடுகிறாய் என்று சொன்னேன்.’
‘பேயென்றாள் அன்னைதான்பேதை என் தங்கையும்நாயென்றாள், நீயென்றேன் நான்’ என்று வருவதான அடிகள் கலித்தொகையில் உள்ளதாக ஞாபகம்.

இதைவிட ஒரு பாடும் பரதேசியை அவமானப்படுத்தும் வார்த்தைகள் இருக்கமுடியுமா? தமிழ்ப் பரப்பில் அலைந்துழல்வின் மேலான அவலத்தின் முதல் பதிவாக இதைக் கொள்ள முடியும்.

அலைந்துழல்வு சங்கமளாவிய பழைமை எனினும் இன்றைய புதுமையும்தான். புதுமையற்ற பழைய அனுபவங்களில் புதுமையைக் காண்பதே கவிதை அல்லது இலக்கியத்தின் நோக்கம் என்று ~வ்லோவ்ஸ்கி சொல்லிய வாசகங்களை வைத்து நோக்குகையில் இந்த உண்மை இன்னும் உறுதிப்படும். ஆனாலும் இது தனிப்பட்ட படைப்பாளியின் ஆக்கத் திறனின் அம்சமாகவும் இருக்கிறது என்பதும் உண்மையே. அதை இளங்கோவின் கவிதைகளினூடாக அலசலாம்.

காதலில் காமத்தையும், காமத்தில் காதலையும் பிரிவறக் காணும் திணைக் காலத்திலிருந்து உருவான தமிழ் மரபு, முதன்முறையாக தெளிவான வேறுபாடுகளுடன் இளங்கோவின் கவிதைகளில் காட்டப்படுகிறது.

நினைவுகளின் செட்டையைக் கழற்றிவிட்டு
இறகுகளின் மிருதுவான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக் காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப் பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத் தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத் தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு’

என்பதிலும்,

‘குடித்துக் கிறங்கி
உனையணைத்த பின்னிரா வேளையில்’
என்பதிலும்,
‘உடல்கள் உராய்ந்து
ஆசைத்தீ கனன்றெரிந்த
மாலைப்பொழுதொன்றின் பிற்பாடு’
என்பதிலும் தெரிவது காமம்பற்றிய அனுபவப் பகிர்வுகளே. அவை காதலோடு பின்னமற்றவையாய் மயங்கவைக்கப்படவில்லை இங்கே. அது ஒரு வித்தியாசமான இலக்கியப் பிரிவாகவே தன்னை வெளிப்படுத்தும்.
பாலைத் திணையின் ஒழுக்கம் பிரிதல் ஆகும். கணவன் வாழ்வின் ஆதாரமான பொருள் தேடச் செல்லுதலை மய்யமாய்க் கொண்டு இது வரையறைபட்டது. இதில் பெண் கணவன் சொல்லிச்சென்ற காலம்வரை காத்திருத்தலே பெருவழக்கு. சிலவேளை பெண்டிரும் உடன்செல்லுதல் உண்டு. இதை உடன்போக்குப் பாலையெனக் கூறுகிறது திணைப் பகுப்பு. அதுபோல் இளங்கோ காட்டும் பிரிவை ‘உடன்பாட்டுப் பிரிவு’ என வகை செய்யலாம்போலப் படுகிறது. காதலனும் காதலியும் தம் உறவு கைகூடப் போவதில்லையெனத் தெரிந்து பிரிவை மிக்க இயல்பானதுபோல் கொண்டு தம் உறவை அறுத்து அகல்வர். தமிழ்க் கவிதைப் பரப்பில் இந்தத் துறை புலம்பெயர் கவிதையின் பாடுபொருளாக அமைவதைக் கவனிக்கவேண்டும். நிலைபேறுள்ள தனி மனிதர்களின் ஒழுக்கவியலாக இது இல்லை. அலைந்துழல்வோரின் ஒரு கூறாகவே இதைக் காணமுடிகிறது.

‘இனியென்ன
எதிரெதிர்த் திசைகளில் எம் பயணமும்
தற்செயலாய்ச் சந்திக்கையில்
சின்னதாய்ச் சிரிப்பும்

இவைபோதும் எனக்கும்
உனக்கும்’

என்ற வரிகளும்,

‘நாளைக்குப் பயணம் கனடாவிற்கெனக் கூறி
பார்வையைத் தூரத்தில் தொலைத்த பொழுதில்
நெருங்கிவந்து இதழ் பதித்தகன்றாய்

நான் நிசப்தமாயினேன்
நின்ற புள்ளியில்
நீயோ நடந்துசென்றாய்
திரும்பிப் பாராது
இனி நிலைப்பதற்கு
உறவெதுவும் இல்லாமற்போல்’
என்ற வரிகள் இடம்பெறும் ‘பனையும் அரசமரமும்’ என்ற ஒரு முழுக் கவிதையுமே இந்த நவஅறத்தைத்தான் சொல்கின்றன.

தொகுப்பில் உள்ள 2000, 2001, 2002ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகளில்தான் இத்தகைய போக்கினைக் காணக்கிடக்கின்றது என்பதையும் இங்கே மனங்கொள்ள வேண்டும். ஆனால் 2005, 2006 ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகள் தம்தொனியை சடுதியில் மாற்றத் தொடங்கிவிடுகின்றன.
2002 க்குப் பின் 2003, 2004ஆம் ஆண்டுகளின் கவிதைகளைக் காணாதிருக்கும் இத் தொகுப்பில் 2005 உம், 2006உம் ஊருக்குத் திரும்பிவிடும் மனம் ஆங்குள்ள வதைபாடுகளைப் பாடத் தொடங்கிவிடுகிறது. இவை ‘எங்கள் காயங்களும் வலிகளும் வித்தியாசமானவை’யென ஆணித்தரமாய் நிறுவுபவை. நினைவுகள் வலியை ஏற்படுத்தும். எவருக்கும் இயல்பானது இந்நிலைமை. ஆனால் மரணத்தை ஏங்குமளவுக்கு இந் நினைவுகள் வதையாவது இளங்கோவின் கவிதைகளில் உள்ள விசே~ம். மதுவிலும், மாதர்களிலும் தம் வலிகளை மறந்து திரிந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். மரண வலிகொண்டு மறைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இளங்கோ சொல்லும் முறையானது இதில் தனித்துவமானது. வாழ்தலின் நியதியோடு மரணத்தை ஏங்கும் வதை இது.

‘தடயங்களின்றி
இந்த ஆண்டு, இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்பகின்றேன்
எனது மரணத்தை’
என்றும்,
‘தேவதைகளைக் கொன்ற
சாத்தான்கள் நுழைந்த திசை
வெளுக்கத் தொடங்கையில் மட்டும்
மறக்க முடிவதில்லை
இது
தற்கொலை செய்வதற்குரிய
தருணம் என்பதை’
என்றும் கூறும் வரிகள் மரணத்தை யாசிக்கும் வலி படர்ந்திருப்பதன் அடையாளங்கள்.

மேலும், ‘சாத்தானின் காற்று / நள்ளிரவைச் சிலுவையில்அறைய /அதிர்கிறது / பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்’, ‘மதுக் குவளையின் விளிம்பிலமர்ந்த / எலுமிச்சையாய் / நிலவு மிதக்குமோர் பொழுதில்’ போன்ற வரிகளில் இந்தத் தலைமுறைக்கேயுரித்தான புதிய உவமானங்கள் மின்னுகின்றன.

மட்டுமில்லை. 2005, 2006ஆம் ஆண்டுக் கவிதைகளே கவிதைத் தரம் கூடியவையுமாகும். மொழியின் அதியுயர்ந்த சாத்தியப்பாட்டை இளங்கோ அளவில் அவை அடைந்துள்ளதோடு, உத்திவகையாகவும் மேனிலை கொண்டிருக்கின்றன. அதே வாழ்விலும் சூழ்நிலையிலும் வாழ்ந்துகொண்டுதான் இந்த வகையான பின்நவீனத்துவ உத்திகளுள் ஒருவரால் பிரவேசிக்கமுடியும். ‘கரையொதுங்கும் புறாவின் சிறகுகள்’, ‘ஆழப் புதையுண்ட வேர்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இத் தொகுப்பில் குறைகளே இல்லாமலில்லை. ஆனாலும் அதை வேறுவிதமாகக் கூறலாமென எண்ணுகின்றேன்.
ஒரு தொகுப்பில் பல உணர்வுகளும் கொண்ட கவிதைகள் இடம்பெறலாம். ஆனாலும் அந்த உணர்வுகள் ஒரே கவிதையில் புலப்பாடடையும்போது விகற்பமாய்த் தோன்றும். பூவுக்குள் புரட்சி தோன்றுவதுபோல, அறச் சீற்றம் கொள்ளும் தருணத்தில் புணர்ச்சி விழைவு சுண்டத் தொடங்கிவிடுகிறது இளங்கோவின் கவிதைகளில்.

இதற்கு படைப்பாளியின் மனம் அந்தக் கணத்திலேனும் நிறுதிட்டம் கொள்ளாதிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இது அனுபவக் குறைவாக, இலக்கற்ற சிந்தனைத் தொகுப்புள்ள வெறும் வாசிப்பு மனம் கொண்டதாக மட்டுமே இனங்காணப்படும். அந்தக் குறையை இப் படைப்பாளி கொண்டிருந்ததை தொகுப்பைப் பன்முறை வாசித்த வேளையிலும் என்னால் உணர முடிந்திருந்தது. இது முக்கியமாகச் சீர்செய்யப்படவேண்டிய ஒரு குறைபாடாக எனக்குத் தெரிகிறது. அதுவரை இன்னும் சிறந்த கவிதைகளை நாம் இளங்கோவிடத்தில் எதிர்பார்ப்பதில் ஞாயமில்லை.

00000

ந‌ன்றி: தாய் வீடு (ஒக்ரோப‌ர், 2008)

Wednesday, October 08, 2008

"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது" - தீபச்செல்வன்

பேட்டி: நிந்தவூர் ஷிப்லி


ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம்.

01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள்

தீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். அப்பாவால் சிறிய வயதில் கைவிடப்பட்ட சூழ்நிலையில் அம்மா இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாய் தனித்து எங்களை வளர்த்து வருக்கிறார். போரில் எனது அண்ணன் ஒருவனை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு தங்கை இருக்கிறார். இது தான் எங்கள் குடும்பம். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.

02) நிந்தவூர் ஷிப்லி :- முப்பது வருடங்களாக யுத்தத்தினால் சிதைந்து கொண்டிருக்கும் வடபுலத்திலிருந்து குறிப்பாக கிளிநொச்சி வன்னிப்பகுதியிலிருந்து மிகுந்த நெருக்கடியான சூழலிலும் ஒரு எழுத்தாளனாக உங்களை எங்கனம் நிலைநிறுத்திக்கொண்டீர்கள்..?

தீபச்செல்வன் :- உன்மைதான், யுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.

03) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தின் மீதான ஆர்வம் அல்லது வெறி எப்படி உங்களை தொற்றிக்கொண்டது.?

தீபச்செல்வன் :- முன்பு வாசிப்புக்கள் ஓரளவு எழுதத் தூண்டியிருந்தன. ஆனால் அவை போலச்செய்தல்களாகவும் பலவீனமானவையாகவும் இருந்தன. மிகவும் வறுமையான வாழ்வுச்சூழ்நிலை அம்மாவின் தனித்துவிடப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்தில் அனுபவித்த கொடுமைகள் சொந்தங்களின் நடைமுறைகள் போர் இடப்பெயர்வு என்பன என்னை எழுதத் தூண்டியிருந்தன. எழுத்து நிம்மதியை தந்தபொழுது எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தான் எழுத்தைவிட்டு நீங்கமுடியாதிருக்கிறது.

04) நிந்தவூர் ஷிப்லி:- உங்கள் சமூகம் சார்ந்த வாழ்வியல் வலிகளை உலகளாவிய ரீதியில் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தற்கால இலக்கிய ஊடாட்டங்கள் அல்லது எழுத்து அசைவுகள் எப்படி இருக்கின்றது..? அவைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?

தீபச்செல்வன் :- உலகளாவிய ரீதியில் இன்று இலக்கிய வாசிப்பு ஊடாட்டங்களை ஏற்படுத்த முடிகிறது. இதற்கு இணையம் பெரியளவில் உதவுகிறது. சமூகம் பற்றிய ஓட்டங்களையும் வாழ்வியல் வலிகளையும் உடனுக்குடன் பேசுகிற வசதி நிலவுகிறது. அதிலும் இன்று கருத்தூட்டங்கள் என்பது நிதானமாகவும் ஆழமாகவும் கூட முன்னெடுக்கப்படுகிறது.

05) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தில் உங்கள் குரு யார்? யாரையேனும் பின்பற்றுகிறீர்களா? வழிகாட்டிகள் அல்லது முன்னோடிகள் என்று யாரையேனும் முன்மொழிகின்றீர்களா?

தீபச்செல்வன் :- குரு என்று யாருமில்லை. யரையும் பின்பற்றுவதும் என்றில்லை. இந்தக் கேள்வியை பல உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. உன்னை நீ கண்டு பிடி என்றே நெருங்கி பழகுகின்ற படைப்பாளிகள் கூறியிருக்கிறார்கள். சிலருடைய படைப்புக்களை வாசிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. எனது எழுத்துக்ளை காட்டி கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். சில இடங்களில் ஏற்றிருக்கிறேன். பலர் என் எழுத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரன், நிலாந்தன், பொன்காந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். கருணாகரன், நிலாந்தன் என்னை கூடுதலாக செம்மைப்படுத்தியவர்கள் என்று கூறலாம். கருணாகரன் சில வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.

அது போல நம்மைப் போன்ற இளையவர்களின் கருத்து உரையாடல்களும் இடம்பெறுகின்றன. றஞ்சனி, பஹீமாகான், சித்தாந்தன், மாதுமை, பிரதீபா, அஜந்தகுமார் போன்றோரிடமும் நல்ல உரையாடல்கள் இடம்பெறுகின்றன.

06) நிந்தவூர் ஷிப்லி :- உங்கள் தீபம் இணையத்தளம் பற்றிச் சொல்லுங்கள்

தீபச்செல்வன் :- அது பதுங்குகுழியிலிருந்து தொடங்கப்பட்ட வலைப்பதிவு. அதன் மூலம்தான் எழுத்தை உலகளாவிய அளவில் பகிர்ந்து வருகிறேன். தீபத்தை பலர் வாசித்து வருகிறார்கள். அந்தப் பக்கத்தை குழந்தைகளின் பக்கமாகவே பதிந்து வருகிறேன். உடனுக்குடன் கிடைக்கிற பின்னூட்டங்கள் ஆறுதலும் தருகிறது. அவைகள் செம்மைக்கு உதவுகின்றன.

07) நிந்தவூர் ஷிப்லி :- யதார்த்த நிகழ்வுகளை வியாக்கியானம் செய்யும் படைப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தீபச்செல்வன் :- இது பற்றி ஓரளவு கூறமுடிகிறது. யதார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் அதற்குரிய வடிவத்தையும் மொழியையும் கொண்டிருக்க வேண்டும். இயல்பான வெளிப்பாடு இங்கு முக்கியமானது போலுள்ளது. அதன் மூலம்தான் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. தவிரவும் இது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இயல்பான வடிவம் மொழி என்பவற்றின் ஊடாக யதார்த்தத்தைப் பேசுகிற பொழுது அது வெற்றியளிக்கிறது.

08) நிந்தவூர் ஷிப்லி :- 1990 இற்குப் பின்னரான கிளிநொச்சி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா? போர் நகங்களின் கீறல்களை ஒரு எழுத்தாளனாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- 90களுக்குப் பிறகு கிளிநொச்சி பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வப்போது அதன் வளமான பகுதிகள் அழகான இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 96இல் கிளிநொச்சி நகரமே அடிமையாக்கப்படடு சிதைந்து போனது. அங்கு பல பொதுமக்ககள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மீண்டும் மீட்கப்பட்டபொழுது மீளுகின்ற வாழத் துடிக்கின்ற மனதோடு நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்படட்து. இப்படியான நகரத்தை மீண்டும் குறிவைத்து வருகிறார்கள். ஈழப்போராட்டம் இன்று கிளிநொச்சி நகரத்தில்தான் மையாக கிடக்கிறது. அது மீண்டும் சிதைக்கப்படுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

09) நிந்தவூர் ஷிப்லி :- கிழக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் வடக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

தீபச்செல்வன் :- அப்படி வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எல்லாம் படைப்புக்கள்தான். பொதுவாகவே ஈழத்துப் படைப்புக்களுக்ககுரிய இயல்புகளைதான் காணமுடிகிறது. தமிழ்த்தேசியம் பெண்ணியம் சாதியம் போன்ற தன்மைகளில் இயல்பு ஒன்றுகின்றன. இரண்டு பகுதிகளும் இணைந்த மொழி வாசனை என்பவற்றைக் காண முடிகிறது. சிலருடைய படைப்புக்கள் குறிப்பிட்ட பிரதேச சொற்கள் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அது வன்னி யாழ்ப்பாணம் தீவகம் மன்னார் மட்டக்களப்பு என்றே வேறுபடுகின்றன. அதிலும் இன்று எழுதி வருபவர்களிடம் அந்த வேறுபாடுகளைக்கூட காணமுடியவில்லை. அவர்கள் வேவ்வேறு பிரதேச அனுபவங்களையும் எல்லாப் பிரதேசங்களுக்கரிய இயல்புடனும் எழுதுகிறார்கள்.

10) நிந்தவூர் ஷிப்லி :- யாழ் பல்கலைக்கழக தமிழ் விஷேட துறை மாணவன் என்பதனால்தான் எழுத்தில் உங்களை சீர்படுத்திக்கொண்டீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

தீபச்செல்வன் :- இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவன் என்பதனாலோ தமிழ்விசேடதுறை மாணவன் என்பதனாலோ எழுதி வருவதாகக் கூற முடியாது. நமது தமிழ்த்தறையில் ஒரு கட்டுரையைக்கூட சரியாக எழுதமுடியாத மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மருத்துவபீடம் முகாமைத்துவபீடம் விஞ்ஞானபீடங்களில் பல்ல படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள்.

இருந்தாலும் இன்று பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எழுதுவதை அடையாளம் காட்டுவதில்லை. சில விரிவுரையாளர்கள் மாணவர்கள் எழுத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. முன்பு பல்கலைக்கழகங்களை மையப்படுத்தியே அங்கிருந்து எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இப்பொழுது ஆக்க பூர்வமான எழுத்துக்களை பல்கலைக்கழக சூழலில் காணமுடிவதில்லை. வறண்ட சொற்களோடும் பண்டிதத்தனத்தோடும் பல தமிழ்துறைகள் இருக்கின்றன. முதலில் அவை நவீன அறியிவல் துறையாக ஆக்கப்படவேண்டும்.

பல்கலைக்கழகம் தமிழ்த்துறை என்று எழுத்துச்சூழலை வட்டமிட முடியாது. எழுத்து வாழ்விலிருந்துதான் உருவாகிறது. நல்ல எழுத்தாளர்கள் பலரை பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான் காணமுடிகிறது.

11) நிந்தவூர் ஷிப்லி :- கவிதைகள் தவிர வேறெந்த துறைகளில் உங்களுக்கு நாட்டம் இருக்கிறது?

தீபச்செல்வன் :- கவிதைகள் தவிர ஒளிப்படம் எடுப்பதிலும் நாட்டம் இருக்கிறது. வீடியோ விவரணம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. சமீபமாக ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். அத்தோடு எனது பார்வை கருத்துக்களுக்கு எட்டிய வகையில் விமர்சனங்களும் எழுதி வருகிறேன். நல்ல படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கிறது முயற்சித்துக்கொண்ருக்கிறேன்.

12) நிந்தவூர் ஷிப்லி :- தற்போதைய பின்நவீன இலக்கியங்கள் பற்றி தாங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- பின் நவீனத்துவ இலக்கியங்கள் தமிழில் அழகியல் பூர்வமான படைப்புக்களைத் தருகின்றன. இதை கருத்துக்கள் பதுங்கிக் கிடக்கும் அல்லது ஒளிந்திருக்கும் படைப்புக்கள் அல்லது குவிந்துகிடக்கும் படைப்புக்கள் என்று கூறலாம். வடிவத்திற்கும் மொழிக்கும் அதிகமான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி நிற்கிறது. முன்பு நாட்டாரியல் இலக்கியம் செவ்விலக்கியம் என்பன பிரிந்து கிடந்தன. ஆனால் பின் நவீனத்துவ இலக்கியங்களில் நாட்டாரியல்கூறுகள் கலந்த சமூகத்தின் அசலான தோற்றதத்தை காணமுடிகிறது. படைப்பக்களில் ஆழமும் கனதியும் ஏற்பட்டிருக்கிறது. இரசனை அதிகரித்திருக்கிறது.

அதிகாரங்களினால் மக்களது வாழ்வும் கருத்துக்களும் விழுங்கப்படுகின்ற சூழ்நிலையில் பின் நவீனத்துவ இலக்கியங்கள் கருத்துக்களை பதுக்கி காவிச் செல்கிறது. மனிதர்களைப்போல கருத்துக்களும் இங்கு பதுங்கிக்கிடக்கின்றன.

13) நிந்தவூர் ஷிப்லி :- இலங்கையின் எழுத்துத்துறை முன்னொருபோதுமில்லாதவாறு இன்றைய காலகட்டங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்து என்கிற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

தீபச்செல்வன் :- அப்படிக்கூற முடியாது. இப்பொழுது இலங்கையை மற்றும் ஈழத்தை பொறுத்தவரை எழுத்து ஆபத்தானதாகக் காணப்படுகிறது. சமூகத்தை அசலாக பிரதிபலிக்கின்ற படைப்புக்கள் மிகவும் குறைவாகவே வருகின்றன. எல்லாவற்றையும் அப்படி கூறிவிடமுடியாது. சிலரிடம் துணிச்சலும் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. ஆனால் அதிகாரங்களினால் அவைகளின் மேலாதிக்கங்களினால் சில எழுத்துகள் அடங்கி விடுகின்றன. தணிக்கை எச்சரிக்கை என்பன இயல்பான எழுத்தைப் பாதிக்கிறது. ஊடகங்கள் அரசம மற்றும் தனியாள் அதிகார மயமாகிவிட கருத்து நசிபடுகிறது. பொறுப்புள்ள ஒரு படைப்பாளிக்கு இது சங்கடமானதாயிருக்கும். சிலர் அதிகாரங்களிற்கு மடிந்து ஏதோ எழுதி தம்மை எழுத்தில் தீவிரமாகக் காட்டுவது பக்கங்களை நிறைப்பது படங்களை பிரசுரிப்பது நமது இலக்கிய வளர்ச்சி இல்லை என்றுதான் படுகிறது.

14) நிந்தவூர் ஷிப்லி :- போர்வலிகளைத்தவிர வேறு கருக்களில் நீங்கள் கவிதை எழுத எத்தனிக்கிறீர்கள் இல்லை. கவிதையின் உள்ளார்ந்தம் மிகப்பரந்தது இல்லையா?

தீபச்செல்வன் :- நான் போர் வலிகளைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தனிமனித உணர்வுகள் போன்று பலவற்றை எழுதுவதாக நினைக்கிறேன். அறையிலும் வெளியிலும் சந்திக்கின்ற மனிதர்களின் முகங்கள் கோபம் நெருக்கம் பிரிவுகள் போல பலவற்றால் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறன். மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கங்களை 'பல்லி அறை' என்ற வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். எழுதுகின்ற எல்லாக் கவிதைகளையும் படித்தால் இது புரிந்து விடும். இருந்தாலும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமாக நான் எழுதுகின்ற போர் மற்றும் அரசியல் கவிதைகளைத்தான் பத்திரிகைகள் இணையதளங்கள் பிரசுரிக்க முக்கியம் கொடுக்கின்றன.

15) நிந்தவூர் ஷிப்லி :- விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தால் உங்கள் கவிதை நூலொன்று வெளிவர இருப்பதை அறிகிறேன்... அந்நூல் பற்றி கூறுங்கள்?

தீபச்செல்வன் :- கவிதைப் புத்தகம் வெளியிடுவதை முதலில் நான் சிந்திக்கவில்லை. சுவிஸலாந்திலிருக்கும் எழுத்தாளர் மாதுமைதான் புத்தகம் வெளியிடுகின்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தினார். 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' என்ற அந்த புத்தகம் வெளிவர அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இது தான் எனது முதலாவது புத்தகமாக வருகிறது. தெரிவுசெய்யப்பட்ட கவிதைகள்தான் இடம்பெறுகின்றன. காலச்சவடு பதிப்பகம் அதனை சிறப்பாக வடிவமைத்து வெளியிடுகிறது. இங்கு நிலவுகின்ற போர்ச்சூழலில் புத்தகம் பதிப்பது வெளியிடுவது மிகவும் சிக்கல் மிகுந்திருக்கிறது. எனவே காலச்சுவட்டின் இந்த வெளியிட்டிற்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.

16) நிந்தவூர் ஷிப்லி :- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் வகிக்கும் பங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தீபச்செல்வன் :- நிறையவே இருக்கிறது. அதுவும் பிரக்ஞை பூர்வமான பங்களிப்பிருக்கிறது. ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை சித்திலெப்பைதானே எழுதியிருக்கிறார். உமறுப்பலவர் பேராசிரியர் உவைஸ் போன்றவர்களின் பங்களிப்புக்கள் செம்மையானவை. பிற்காலத்தில் நுஃமான் சோலைக்கிளி மஜித் பௌசர் ஓட்டமாவடி அறாபத் அஃராப் போன்றவர்கள் பங்களித்திருக்கிறார்கள். பங்களித்து வருகிறார்கள். சமகாலத்தில் அனார் அலறி பஹீமகான் வஸீம் அக்ரம் போன்றோர் எழுதி வருகிறார்கள். பெருவெளி போன்ற இதழ்கள் வருகின்றன. தமிழுக்கும் முஸ்லீம்களும் இடையிலிருக்கிற நெருக்கம் இன்னும் நிறைவே இருக்கிறது. (முழுவற்றையும் குறிப்பிட முடியவில்லை)

17) நிந்தவூர் ஷிப்லி :- இது நமது இரண்டாவது உரையாடல். முதல் உரையாடலுக்கும் இதற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் துளிர் விட்டிருக்கிறதா? இதைத் தொடர நீங்கள் விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- நீங்கள் பேசிய விடங்களுக்கும் நான் பேசிய விடயங்களுக்கம் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் வெள்வேறு சூழலில் வாழ்வதனால் அப்படி இருக்கின்றன. கேள்விகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கின்றன. தொடர்ந்து உரையாடலாம். அதன் மூலம் மிக இளையவர்களான நாம் நமது எழுத்தை செம்மைப்படுத்துகின்ற பக்குவத்தை அடையலாம்.

அத்தொடு நமது அந்த உரையாடலை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான தினகரன் தணிக்கைகளுக்கு உட்படுத்தி தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறது. அதில் போரில் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய நிலைகள் - அரசு காட்டும் போர் முனைப்பு - செலவிடும் பணம் போன்ற விடங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இணையதளங்களில் அது முழுமையாக வெளிவந்திருந்தது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறான விடயங்களிலிருந்து உரையாடல்களையும் கருத்துக்களையும் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

18) நிந்தவூர் ஷிப்லி:- இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- எழுத்து ஆபத்தானதாக இருக்கிறபொழுதும் எழுத்தை விட்டு நீங்க முடியவில்லை. அதுதான் நிம்மதியாக இருக்கிறது. போர் தின்று ஏப்பமிடுகிற எங்கள் மண்ணில் நிம்மதி மலர வேண்டும். எமது மக்களுக்கு நாடும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். நாங்கள் வாழவே விரும்புகிறோம். காலம் காலமாய் கிராமத்திற்குக் கிராமமும் நாட்டிற்கு நாடும் அகதியாக திரிந்துகொண்டிருக்கிற எங்கள் சனங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும். எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது.

நன்றி தீபச்செல்வன். மிகுந்த நெருக்கடியான சூழலிலும் நமது இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது. உங்கள் நூல் விரைவில் வெளிவரவும் எழுத்துத்துறையில் நீங்கள் இன்னுமின்னும் முன்னேறவும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உடனிருக்கும். மீண்டும் சந்திப்பில் இன்னும் அலசுவோம். நன்றி நண்பரே.

(ந‌ன்றி: கீற்று)