-கலீஸ்தினோ மிகுந்தன்
நீரஜாவோடான பதின்ம ஈர்ப்பு (அல்லது அவனது வார்த்தைகளில் சொல்வதானால் காதல்) கையிலும் காலிலும் உள்ள மொத்த விரல்களையும் எண்ணுவதற்கும் குறைவான நாட்களிலேயே நீர்த்துப் போய்விட்டது. இதன்பின் சில முயற்சிகள் நடைபெற்றன, ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் வெற்றிய்டைந்ததாய் அவனது 'சரிதத்தில்' இல்லை. வருடங்கள் செல்லச் செல்ல எப்படி காதலிப்பதில் ஈர்ப்புக் குறைந்துபோனதோ அதே போன்று படிப்பிலுமிருந்த விருப்பும் போனது. வகுப்புகளுக்கு கட்டடித்து குடித்தலும் குதூகலித்ததலும், தெருக்களில்/பூங்காக்களில்/அங்காடிகளில் போய் வருபவர்களுடன் வம்புச் சண்டைகளில் ஈடுபடுவதும் முக்கியம் வாய்ந்ததாகிவிட்டன. அவனோடு சேர்ந்து திரிந்தவர்களில் அநேகர் உயர்கல்லூரியை இடைநடுவில் நிறுத்திவிட்டு வேலைக்கு முழு நேரமாய் போகத்தொடங்கியபோது அவர்களோடு சேர்த்து வேலைக்குப் போகும் பெருவிருப்பை அம்மாவின் கண்ணீர் தடுத்து நிறுத்தியது. தாயின் மன்றாட்டத்தால், ஒரு மாதிரி பன்னிரண்டாம் வகுப்பை முடித்து கல்லூரிக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ' மேற்படிப்புக்குப் போவதென்றால் யூனிவர்சிற்றிக்குப் போய்ப் படிக்கவேண்டும்; இல்லாவிட்டால் எல்லாம் பாழ்' என்று இவனது நிலையைக் கண்டு கதைக்கும் உறவுகளின் கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன என்றமாதிரி இவனுக்குத் தோன்றும். உதைத்தாலும் உடைந்தாலும் இந்தத் தமிழ்ச் சகதியிற்குள்ளேயே... மன்னிக்க சனத்திற்குள்ளேயே உழல்வேண்டியிருக்கிறதே என்ற அலுப்பு இவனுக்கு மனச்சோர்வாய் வந்து சூழும். கல்லூரிக்குப் போகத் தொடங்கியதால் பழைய நண்பர்களோடு பொழுதைக் கழிப்பதும் குறைந்து, அவர்கள் தொலைவில் போனதுமாதிரி இவனுக்குத் தோன்றியது. கல்லூரியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காய்ப் போகாவிட்டாலும், கல்லூரியிலேயே தனது பொழுதை அதிகம் கழிக்கப் பழகியிருந்தான். கல்லுரியில் நடக்கும் அமெரிக்கன் ஃபுட்போல், கூடைப்பந்தாட்டம் போன்றவைப் பார்ப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. கல்லூரி ஜிம்மிலும், பப்பிலும் பொழுதைத் தனியே கழிக்கப் பழகியிருந்தான். கல்லூரி பப்பில் இருட்டி மூலையைத் தேடி ஆறுதலாய் இரசித்து இரசித்துக் குடிப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. சிலநாட்களில் பதினொரு மணியானால் பப்பிலின் ஒருபகுதி டான்ஸ் ப்ளோராகா மாறிக் கொண்டாட்டமாகிவிடும். ப்ளோரில் ஆடுவதைவிட ஆட்டத்தைப் பார்ப்பதுதான் இவனுக்கு விருப்பாயிருந்தது. ஆட்டம் உச்சமேற அபத்த/அங்கத/துரோக நாடகங்கள் பல சோடிகளுக்கிடையில் அரங்கேறும். பியர் போத்தல்களை உடைக்காது, கைகலப்பு வந்து பவுண்சர்கள் குழப்புபவர்களை வெளியே தூக்குப் போடாது நடந்த ஆட்ட நாட்கள் மிகக் குறைவானதே. ஆனால் இவற்றுக்கப்பாலும் சந்தோசமும் கொண்டாட்டமும் இரவின் வெளியெங்கும் ததும்பி வழிந்துகொண்டேயிருக்கும்.
இவ்வாறு ஒருநாள் தனிமையையும், மதுவையும், இரவையும் சுவைத்துக்கொண்டிருந்தபொழுதில் ஒருத்தி மிகவும் பதற்றத்துடன் ஒரு பியரைக் கையிலேந்தியபடி இவனோடு மேசையைப் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்று கேட்டபடி வ்ந்தாள். 'பிரச்சினையில்லை, அமரலாம்' என்றான். நாளை காலை ஒரு முக்கியமான பிரசன்டேசன் இருக்கிறது. ஒரு பாடத்தின் இறுதித்தேர்வாய் இந்தப் பிரசன்டேசன் இருக்கிறது. அதுதான் மிகவும் பதற்றமாயிருக்கிறதென்று பியரை வாயில் வைத்தாள். அவள் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வைக்கும், பியர் போத்தலில் பரவியிருந்த துளிகளுக்குமிடையில் இருக்கும் வித்தியாசந்த்தான் வாழ்வுக்கும் மரணத்திற்குமான வித்தியாசமாக்குமென நினைத்தபடி அவளின் பேச்சைக் கேட்கத் தொடங்கினான். அவளது பதற்றத்தில் அவள் இங்கே அங்கேயென விடயங்களைக் கதைத்துக்கொண்டிருந்தாள். அவனுக்குப் பதிலுக்குப் பேசுவதற்கென்று எதுவுமேயிருக்கவில்லை. அவளும் இவன் எதையும் பேசாது தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பதையே விரும்பியவள் போல இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள். விடைபெற்றுப்போகும்போது, தானிங்கே ரெசின்டஸிலேயே தங்கியிருக்கின்றேன், நேரமிருக்கும்போது நீ என்னோடு கதைக்கலாம் என்று அவள் தனது தொலைபேசியை இலக்கத்தைப் பகிர, அவனும் தனது இலக்கத்தைக் கொடுத்திருந்தான்.
அடுத்தநாள் காலை எழும்பியபோது, இவன் நேற்றிரவு நடந்தது நினைவுக்கு வர, தொலைபேசியில் அவள் பிரசன்டேசனுகுப் போக முன்னர் வாழ்த்துத் தெரிவித்தான். 'நீ நன்றாகச் செய்வாய், எதற்கும் பயப்பிடாதே; அப்படிச் செய்யாதுவிட்டாலும் உலகம் அழிந்துபோய்விடாது' என்று நகைச்சுவையாக இவன் சொன்னான். அவளுக்கு அவனது அழைப்பு வியப்பாயிருந்தது என்பது அவளது நன்றி சொன்ன குரலிலேயே தெரிந்தது, அவளிருந்த பதற்றத்தில் இப்படி யாரோ ஒருவர் தனக்காய் யோசிக்கின்றார் என்ற நினைப்பு அவளுக்கு தேவையாகவுமிருந்தது. இந்த பிரசன்டேசன் நன்றாகச் செய்தேன் என்றால் இன்று மாலை எனது செலவில் பியர் வாங்கித்தருகினறேன் என்றாள் அவள்.
மாலை, அவன் கல்லூரி ஜிம்முக்குள் நின்றபோது தொலைபேசி அழைப்பு அவளிடமிருந்து வந்தது. தான் பப்பில் நிற்கின்றேன, வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டாள். இன்று நேற்றுப் போல பதற்றமில்லாது புன்னகைத்தபடி வரவேற்றாள். வெளியே கொட்டிக்கொண்டிருந்த பனியின் துகள்கள் அவள் தலைமயிரில் மல்லிகைப்பூக்கள் பூத்திருந்தமாதிரியான தோற்றததைக் கொடுத்திருந்தது. காதுகள் குளிரில் சிவந்திருந்தன. குளிர்க்கோட்டை கழற்றியபடி 'நான் திருப்திப்படுமளவுக்கு எனது பிரசன்டேசனைச் செய்திருக்கின்றேன்' என்றாள். ஏற்கனவே பியரிற்கு ஓடர் செய்திருப்பாள் போல. அவன் வந்திருந்ததுமே வெயிட்டர்ஸ் ஒரு பிச்சரில் பியரை நிரம்பிக் கொண்டுவந்து மேசையில் வைத்தார். பின் அவ்விரவு மிக நீண்டதானது. மாறி மாறி உரையாடல். அவனையும் அவளையும் அறிய முயன்ற அற்புதக்கணங்கள். இரண்டு பேரும் ஒருமிக்கும் புள்ளியென்று எதையும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும்...தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தது அவ்விரவில் இருவருக்கும் பிடித்தமாயிருந்தது. ஆங்கிலமென்ற பொதுமொழிதான் அவர்களைப் பிணைத்துக்கொண்டிருந்தது. மொழியாலும், கலாசாரத்தாலும்,மேற்கு கிழக்கு என்று வெவ்வேறு பின்புலங்களாலும் இருவரும் தூரத் தூரவாகவே இருந்தனர். ஒவ்வா முனைகள் அதிகம் கவர்வதில்லையா, அதுபோல் எதுவோ அவர்களை இணைத்துவைத்தது போலும்.
பிறகான நாட்கள் எவ்வளவு இனிமையானவை. நேசம் இவ்வளவு கதகதப்பாய் இருக்கமுடியுமா என்று வியக்கவைத்த நாட்கள். பகலிலும் இரவிலும் திகட்டவே முடியாது என்று பொங்கிப் பிரவாகரித்த அன்பு. இப்படியொரு பெண்ணிடமிருந்து காமம் பீறிட்டுக் கிளம்பமுடியுமா என்று திகைத்து பின் திளைத்த பொழுதுகள். அவள் இருந்த பெண்களுக்கான ரெசிடன்ஸில் கூடவிருக்கும் அறைத்தோழிகள் வெளியில் போகும்போது, ரெசிடன்ஸின் front desk secutrityற்கும் கண்ணில் மண்ணைத் தூவிட்டு -குறுகிய/நீண்ட- பதற்றமும் கள்ளமும் காமமும் பின்னிப்பிணைந்த பொழுதுகளை வார்ததைகளுக்குள் நின்று வர்ணித்தல் அவ்வளவு சாத்தியமில்லை.
கிட்டத்தட்ட ஒருவருடம் முடிந்து, வந்த இரண்டு வார கிறிஸ்மஸ் விடுமுறையில் தான் தனது பெற்ரோரைப் பார்க்க தனது நகரிற்குப் போகப்போகின்றேன் என வெளிக்கிட்டிருக்கிறாள். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முடிந்து ஸ்நோ பொழியும் அல்லோலோகல்லோலத்துடன் குளிர்காலத் தவணையிற்கான வகுப்புக்களும் ஆரம்பித்துவிட்டிருந்தன. இவனால் அவளைச் சந்திக்க முடியவில்லை. தொலைபேசி அழைப்புக்களுக்கும் எவ்விதமான பதில்களையும் காணவில்லை. அவளிலிருந்த ரெசிடென்ஸில் போய்த்தேடியபோது அவள் இப்போது அங்கே வசிப்பதில்லையெனச் சொன்னார்கள். அவளோடு அறையைப் பகிர்ந்த மற்ற நணபிகளிடம் கேட்டபோது ஏதோ co-op வேலை எடுத்து, ரெசிடென்சை விட்டு வெளியே வசிக்கப்போய்விட்டாள் என்றனர். அவளது தற்போதைய முகவரி தரமுடியுமா என்று இவன் கேட்டபோது தங்களுக்குத் தெரியாது என்று இவனைத் தவிர்க்கச் செய்தனர். இவனுக்குப் பித்துப்பிடித்தது மாதிரியிருந்தது. ஏன் அவள் அப்படிச் செய்கின்றாள் ஏதாவது பிழையைத் தான் செய்துவிட்டேனா என்று மூளையைத் தோண்டத்தொடங்கினான்.
திரும்பவும் தனிமையும, இருளும், கொடுமையான குளிரும் அவனைச் சூழத்தொடங்கின. ஆனால் இவை முன்போதில்லாது தாங்கமுடியாதவையாக யாராவது தன்னோடு வந்து பேசமாட்டார்களா என்று ஏங்க வைப்பவையாக அவனை மாற்றிவிட்டன. திகட்டத் திகட்ட அன்பைத் தந்தவள் இப்படி பெரும் இடைவெளியைவிட்டு ஒன்றும் சொல்லாமற்போய்விட்டாளென்ற நினைப்பு அவள் மீது ஒரேநேரத்தில் வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்கின. ஆகவும் நினைவுகள் வந்து அவன் உணர்வுகளை அரிக்கத்தொடங்கும்போது தனக்குத் தெரிந்த அவளது தொலைபேசி இலக்கத்தில் அழைக்கத் தொடங்குவான். இப்போது தொடர்ச்சியாக மூன்று நான்கு முறை அவ்விலக்கத்தை அழைக்கும்போது ஒரு ஆண் எடுத்து 'பிழையான இலக்கத்தை அழைக்கிறாய், நீ கேட்கும் அவள் இவ்விலக்கத்க்தில் இல்லை; இனி அழைக்கவேண்டாமெனச்' சொல்லத்தொடங்கினான். ஒருநாள் பப்பில் இயலாத் தனிமையில் பொதுத்தொலைபேசியிலிருந்து அவளது இலக்கத்திற்கு அழைத்தபோது, ஒரு பெண் குரல் மறுமுனையில் எடுத்துக் கதைப்பது தெரிந்து. நிச்சயம் அவனால் அடையாளங்கொள்ளக்கூடியதாயிருந்தது. அவளேதான். நீ ......... தானே என்று அவள் பெயரைச் சொல்லி இவன் கேட்க மறுமுனை துண்டிக்கப்படடுவிட்டது. திரும்பி நாலைந்துமுறை இவன் எடுப்பதும், எதிர்முனை துண்டிப்பதுமாயிருக்க, கடைசியாய் 'தயவுசெய்து வைத்துவிடாதே நான் சொல்வதைக் கேள். இப்போது என் நிலை எப்படியென்பது அறிவாயா? நீ என்னை உண்மையில் நேசித்திருபாயின் தொலைபேசியை வைக்காது நான் சொல்வதைக் கேள்' என்று உடைந்தகுரலில் பேசத்தொடங்கினான். இம்முறை மறுமுனை துண்டிக்காது மிகுந்த மவுனத்துடன் இவன் பேசுவதைக் கேட்கத் தொடங்கியது. இறுக்கப்பூட்டியிருந்த அவள் மனது சற்று நெகிழ்ந்திருக்கவேண்டும்போல. 'இவன் என்ன நடந்தது உனக்கு?' என்று தொடங்கி எல்லாவிதமான தன் துயரங்கையும் சொல்லத்தொடங்கினான். அவளது மிகப்பெரும் மவுனம் இவனை ஒரு இராட்சத விலங்காய் விழுங்கத் தொடங்கியிருந்தது. அன்றிரவு குடித்த ஏழாவது பியர் தந்த உச்சபோதை போனதன் சுவடே தெரியாமற்போய்விட்டது.
மிகவும் இயலாதபட்சத்தில் இவன் 'நீயொரு வார்த்தை பேசமாட்டாயா?' என்று திருப்பத் திருப்பக் கேட்கத்தொடங்கினான். இறுதியில் அவள், 'சரி, தயவுசெய்து இனி தொலைபேசி எடுக்காதே, நான் வருகின்ற சனிக்கிழமை கல்லூரிக்கு இந்த நேரம் வந்து கதைக்கின்றேன்' என்றாள்.
சனிக்கிழமை வந்தது; வந்தாள். இப்போதிருக்கும் நான் முன்பு இருந்தவள் அல்ல. நாங்களிருவரும் இருந்த நல்ல நினைவுகளோடு பிரிந்துவிடுவோம் என்றாள். ஏன் என்ன நடந்தது? என்னில் என்ன பிழையைக் கண்டாய்? தவறுகள் இருந்தால் சொல், நான் திருத்திக்கொள்கின்றேன். தயவுசெய்து என்னைவிட்டுப் போகாதே. நீயில்லாத் தனிமையை யோசிக்க முடிவதில்லை என்றான் இவன். 'இல்லை தயவு செய்து என்னை மறந்துவிடு' என்று அவள் திருப்பத் திருப்பச் சொல்லத் தொடங்கினாள். என்னால் முடியாது என்று அவள் கையைப் பிடித்து இதழில் முத்தமிட முனைந்துபோது... F*** you, you are trying to abuse me... உனக்குக் காரணந்தானே வேண்டும். நான இன்னொருத்தனுடன் சேர்ந்து வாழத்தொடங்கியிருந்தேன். காரணம் போதுமா?' என்று கூறிவிட்டு இருட்டில் கரைந்துபோயிருந்தாள். அவன் அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஆறு நாட்கள் வீட்டுக்கு வராது வெளியில்தான் திரிந்திருக்கின்றான். சாப்பாடு, இயற்கை உபாதையெல்லாம் வெளியேதான். அந்த ஆறு நாட்களில் ஒருநாள் தான் ஒரு பொதுக்கழிப்பறையில் குளித்திருக்கின்றான். ஆடை காயும்வரை சில மணித்தியாலங்கள் பாத்ரூம் கதவை மூடிப்போட்டு உள்ளே அமர்ந்திருக்கின்றான்.
அப்போது வெளியே மிக உக்கிரமான குளிர். Homeless நண்பர்கள்தான் இவனை அந்த ஆறு நாட்களும் காப்பாற்றியிருக்கின்றார்கள். குளிர் தாங்காதபோது மிகவும் மலிவாய் தாங்கள் வாஙகி வைத்திருந்த கஞ்சாவை ஊதத்தந்து குளிரை மரைக்கச் செய்திருந்தார்கள். இன்னும், தங்களுக்குக் கிடைத்த கம்பளிகளை இவனோடு பகிர்ந்திருக்கின்றார்கள். இப்படிக் கழிந்த ஆறாவது நாளில்தான் இவனோடு உயர்கல்லூரியில் படித்த தோழியொருத்தி கண்டு, ரோட்டிலிருந்து எழுப்பிக்கொண்டுபோய், தனது வீட்டில் வைத்து பிட்டும் மாம்பழமும் பிசைந்து ஊட்டிவிட்டிருக்கின்றாள். தானாய் இருந்து கையால் எடுத்துச் சாப்பிட முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமாய் இருந்திருக்கின்றான்.
இவ்வாறு அவன் தனது கதையை எனக்குச் சொல்லி முடித்தபோது, 'இந்தக் காதலுக்காகவா இவ்வளவு சித்திரவதைகளை நீ அனுபவித்தாய், சும்மா தூசென இதைத் தட்டிப்போயிருக்கலாம்' என்று எல்லோரைப் போலவே எனக்கும் சொல்லவே விரும்பமிருந்தாலும் அவன் குரலில் கனிந்துகொண்டிருந்த நேசம் என்னை எதையும் பேசாது தடுத்துநிறுத்தியது. 'அந்த ஆறு நாட்களில் உன்னை உனது பெற்றோர் தேடவில்லையா?' என்று சம்பிரதாயமான கேள்வியை நான் அவனிடம் கேட்டேன். 'ஓம். அவையளும் தேடினைவைதான். ஏலேத கட்டத்தில் பொலிஸிடமும் முறையிட்டிருக்கினம். நானும் டவுன் ரவுக்குள்ளேதான் ஒளித்துக்கொண்டனான். அத்தோடு பொலிஸும் பதினம வயதுகள் என்றால் கொஞ்சம் தேடுவான்கள். பதினெட்டு வயதுக்குப் பிறகு என்டால் அவ்வளவு அக்கறை எடுக்கமாட்டான்கள். எனென்டால் இங்கை கன சமயம் வீட்டை உறவுகளைவிடடு ஓடிப்போறது சாதாரணமாய் நடக்கிறதுதானே' என்றான்.
அவனை நான் சந்தித்தது, அவனின் இந்தக் கதையைக் கேட்டது எல்லாம் அந்த கல்லூரி வளாகத்தில்தான். நானும் அங்கே பகுதிநேரமாய் வகுப்புக்கள் எடுக்கத் தொடங்கியிருந்த காலம் அது. 'இதுவெல்லாம் நடந்து எவ்வளவு காலம் ஆகின்றது?' என்று கேட்டேன். நான்கு மாதங்களாகிவிட்டது. இப்போது இஙகே வகுப்புக்கள் எடுப்பதில்லை, ஆனால் வந்து வந்து போய்க்கொண்டிருப்பேன் எனறான். ஏன்னெறு கேட்டதற்கு அவளை எங்கேயாவது பார்க்கும் சந்தர்ப்பம் வந்துவிடாதா என்று. பிறகு இந்த நான்கு மாதங்களில் தானொருநாள் அவளைச் சந்தித்ததாகவும், தான் அவளோடு கதைக்க முற்பட்டபோது, தன்னோடு கதைக்கவேண்டாமென்று சொல்லி விலத்திப் போனதாகவும் தான் பின் தொடர்ந்தபோது கமபஸ் பொலிஸிடம் அவள் முறையிட்டதாகவும் சொன்னான்.
அநேகமாய் உலகிலிருக்கும் எல்லோருமே இவ்வாறான காயங்களைத்தாண்டித்தான் வந்திருப்போம். இவ்வாறான கொடுங்காலங்களைத் தாண்டிப் போய்ப்பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாயிருக்கும். ஏன் நீ நடந்துபோன விடயங்களை மற்ந்துவிட்டு முன்னே நகர்கின்ற வாழ்க்கையைப் பார்க்கக்கூடாது? என்றேன். நான் சொல்வதை மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தவன் கொஞ்ச நேர அமைதியைக் குலைத்து, 'என்னதான் இருந்தாலும் ஒரு தமிழ்ப்பெட்டையை நான் லவ் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருக்கமாட்டாள்தானே' என்றான். தமிழ்ப்பெட்டை என்றில்லை, மனித மனங்களே விசித்திரமானதுதான். கணந்தோறும் மாறிக்கொண்டிருப்பவை. மாறும் மனங்களிற்கு ஏன் தாம் மாறினோம் என்று சொல்வதற்கு சிலவேளைகளில் காரணங்களே இருப்பதில்லை. நீ இப்படி அவளுக்காய் ஏங்கிக்கொண்டிருப்பதில், அவள் உன்னை நிராகரித்தற்கு ஒரு வலுவான காரணத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றாய். அதுதான் உன்னை இன்னும் கஷ்டப்படுத்துகின்றது. உலகில் நடக்கும் விசயங்களுக்கு எல்லாம் காரண்ங்கள் இருக்கா என்ன? நீயும் உனது காதல் விடயத்தை இவ்வாறு எடுத்துவிட்டு நகர முயற்சி செய்யேன் என்று நான் கடைசியாய்ச் சொன்னதாகவும் நினைவு.
பிறகு சில மாதங்களில் எனது பகுதி நேர வகுப்புக்கள் முடிந்து நான் அக்கல்லூரிக்குப் போவதை நிறுத்த்தியிருந்தேன். அவனைப் பற்றிய நினைவுகளும் மறக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவன் விழிகளுக்குள் தெரிந்த ஏதோ ஒரு இனம்புரியாத தவிப்பு மட்டும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒருநாள் சப்வேயில் போகும்போது இரட்டைக் கொலை சம்பவம் பற்றிய செய்தி பேப்பரில் இருந்தது. கொல்லப்பட்ட இரண்டுபேரில் அவனது படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது . மிகவும் அவசரப்பட்டுவிட்டனோ என்று மனம் பெரும் மழையின் ஏற்பட்ட மண்சரிவைப்போல அரிக்கத்தொடங்கியது. பின் ஒருநாள் இரட்டைக்கொலைகள் நடந்தகதையை அங்கே படித்துக்கொண்டிருந்த எனது கசின் ஒருவன் சொல்லக்கேட்டேன்.
2.
கொலை நடந்த அன்று, இவன் அவளையும் அவளது புதிய காதலனையும் கண்டிருக்கின்றான். தங்களைப் பின் தொடரவேண்டாம் என்று அவர்கள் கேட்டும் இவன் பின்தொடர்ந்திருக்கின்றான். அவர்களும் தாம் வழமையாகப் போகும் திசையை மாற்றி கல்லூரிக்குப் பின்னாலிருக்கும் சிறு காடு இருக்கும் பகுதியால் சென்றிருக்கின்றனர். இவனுக்குத் தன்னைப் புறக்கணித்து அவனோடு கதைத்துக்கொண்டு போகும் அவளைப் பார்க்க வன்மம் ம்னதிற்குள் வெடித்துப் பரவியிருக்கிறது போலும். ஜீன்ஸிற்குள் வைத்திருந்த மடக்கு கத்தியால் சடக்கென்று அவளோடு போன பெடியனின் கழுத்தால் நாலைந்து முறை வெட்டியிருக்கின்றான். தடுக்க முயன்ற அவளுக்கும் கன்னத்தில் வெட்டு விழுந்திருக்கிறது. அவன் உயிரடங்கிப்போகும்வரை இவன் அவளது தலைமயிரைப்பிடித்துக்கொண்டு பார்க்க வைத்திருக்கின்றான். பிறகு தனது பெற்றோர் இருந்த மாடியின் மேல்மாடிக்குப் போய், இந்த பூமியிற்கு இனி வரக்கூடாது என்பதற்காய் மேலே பறந்துபோவதற்காய் கீழே குதித்திருக்கின்றான்.
பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.
.....................................
நாவலின் -ஏற்கனவே பதிவிலிட்ட- பகுதிகள்:
-கவிழ்ந்த வானத்தின் மேல் முளைத்த காளான்கள்
-உறைந்த நதியின் மீது பறந்துகொண்டிருந்த கொள்ளிவால்பிசாசுகளை ஆடு தின்ற ஆதிக்கதை
No comments:
Post a Comment