Tuesday, November 04, 2008

த‌ன்னாட்சி உரிமை

-ம‌ணி வேலுப்பிள்ளை


`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்!

தன்னாட்சி உரிமை (right of selfdetermination) என்பது `மக்கள் திரள் ஒன்று, அதன் அரசவிசுவாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் சுதந்திரம்' எனப்படுகிறது …the freedom of a people to decide their own allegiance or form of government… (Oxford). அத்தகைய தன்னாட்சி உரிமையின் தோற்றுவாயாக அமெரிக்க விடுதலைப் போரையும் (1775-1783), பிரெஞ்சுப் புரட்சியையும் (1789 - 1799) வரலாற்றறிஞர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. அமெரிக்க விடுதலையும், பிரெஞ்சுப் புரட்சியும் தோற்றுவித்த தன்னாட்சி உரிமை, தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் மன்னிக்கமுடியாத குற்றமாகிவிட்டது!

`ஒரு நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், ஆள்புலக் கட்டுறுதியையும் ஓரளவு அல்லது முற்றிலும் குலைக்கும் முயற்சி எதுவும் ஐ.நா. பட்டயத்துக்கு முரணாகும்' என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், `மக்கள்திரள்கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமை உண்டு' என்பதை ஐ.நா. பொது அவை 1960-ல் ஏற்றுக்கொண்டது. `எவ்வாறு பிரிவினை இயக்கங்களுக்கு அல்லது கிளர்ச்சி இயக்கங்களுக்கு உதவுவது சட்டவிரோதம் ஆகுமோ, அவ்வாறே தன்னாட்சி உரிமையைத் தடுப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதம் ஆகும்' (Daniel Patrick Moyniham, Pandaemonium, Oxford, 1993, p.151). இதில் பொதிந்துள்ள உண்மையை லெனின் நன்கு சுவைபட விளக்கியுரைத்தார்:

`தமது கணவர்களை மணவிலக்குச் செய்யும்படி பெண்களை நாம் தூண்டவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.'

`தொழிலாளிகளுக்குத் தாயகம் இல்லை, பொதுவுடைமை வாதிகள் தேசியத்துக்கு அப்பாற்பட்டவர்கள்' என்று மார்க்சும் (1865), `சமூகவுடைமையின் நலன்கள் தன்னாட்சி உரிமைக்கு மேம்பட்டவை' என்று லெனினும் (1912) முழங்கியது முற்றிலும் உண்மையே. அதேவேளை இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், இரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் விடுதலை பெறுவதற்கு மேற்கொண்ட போராட்டங்களை மார்க்சும், லெனினும் முற்றுமுழுதாக ஆதரித்தார்கள். அத்தகைய மார்க்சியலெனினிய நிலைப்பாட்டை மார்க்சியமும் தேசிய இனங்களும் (Marxism and Nationalities) என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுரையாக முன்வைத்தார் ஸ்டாலின் (1913).

அதேவேளை, சுவீடிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு நோர்வே மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அன்னை றோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg 1870-1919) எதிர்த்து நின்றார். அவருடைய நிலைப்பாட்டைக் கண்டித்து லெனின் முன்வைத்த விளக்கம் கவனிக்கத்தக்கது: (1) நோர்வேயின் விடுதலை சுவீடிய எதேச்சாதிகார அரசைப் பலவீனப்படுத்தும். அது சுவீடிய மக்களின் சொந்த விடுதலைக்கு வழிவகுக்கும். (2) நோர்வேயின் விடுதலை, அங்கு (நோர்வேயில்) தேசியத்தை நிலைநிறுத்தும். தேசியம், மக்களாட்சிக்கு ஒரு படிக்கல்.'

`தேசியப் போராட்டத்துள் மக்களாட்சிப் பண்பு பொதிந்துள்ளது' என்று வாதிட்ட லெனின், சோவியத் நாட்டை அமைத்த கையோடு, தாம் சொன்னதைச் செயலில் காட்டுமுகமாக, இரஷ்யப் பேரரசினால் கட்டியாளப்பட்ட பின்லாந்து, லற்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா முதலியவற்றின் தேசியத்தை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு விடுதலையளிக்க ஆணையிட்டார் (1918). 1944-ல் சோவியத் நாட்டினால் திரும்பவும் கைப்பற்றப்பட்ட லற்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா மூன்றும் 1991-ல் மீண்டும் விடுதலை பெற்றமை கவனிக்கத்தக்கது.

`இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரியமுடியாது என்றுதான் நான் முதலில் கருதினேன். அது பிரியாமல் இருக்க முடியாது என்று நான் இப்பொழுது கருதுகிறேன்' என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். அதன்படி, `அயர்லாந்து விடுதலை பெறும்வரை ஆங்கிலேயத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாது' என்ற முழக்கத்தை அவர் முன்வைக்க நேர்ந்தது. ஆங்கிலேயத் தொழிலாளிகள் தமது சொந்த விடுதலைக்கான போராட்டத்தில் குதிப்பதைத் தடுப்பதற்காக, அதாவது அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அவர்களை, அவர்களுடைய ஆட்சியாளர் அயர்லாந்து மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்திய படியால், மார்க்ஸ் அவ்வாறு முழங்க நேர்ந்தது. அந்த முழக்கத்தில் பொதிந்துள்ள தருக்கம் இலங்கைக்கும் பொருந்தும்.

1948-ல் பிரித்தானியர் வெளியேறுந் தறுவாயில், ஏழு இடதுசாரிகளைத் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய 10 இலட்சம் தமிழ் மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, தமிழர் சிங்களவர் பிரச்சனை தோற்றுவிக்கப்பட்டமை, தற்செயலாக இடம்பெற்ற ஒரு சங்கதி அல்ல. குடியுரிமைச் சட்டம் (1949), தனிச் சிங்களச் சட்டம் (1956), அரச (பௌத்த) மதச் சட்டம் (1972) போன்ற பேரினவாத அரசியல் நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் இடதுசாரித்துவம் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வந்துள்ளது.

1971-ல் கிளர்ந்தெழுந்த உறோகண விஜயவீரா (19431989), சோமவன்ச அமரசிங்கா, விமல் வீரசிங்கா போன்றவர்கள், தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெறும்வரை சிங்களத் தொழிலாளிகள் விடுதலை பெறமுடியாது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல, ஆட்சியாளருக்கு எதிரானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தால், மக்களின் பொது எதிரியை அவர்கள் இனங்கண்டிருந்தால், தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை அவர்கள் ஆதரித்திருப்பார்கள்.

அவர்களுக்கு முந்தைய இடதுசாரிகள் தமது முழுமுதல் நிலைப்பாடுகளை காலப்போக்கில் மாற்றியதுண்டு. எடுத்துக்காட்டாக, `ஒரு மொழி என்றால் இரு நாடுகள், இரு மொழிகள் என்றால் ஒரு நாடு!' (One language two nations, two languages one nation!) என்று முழங்கிய அதே கொல்வின் ஆர். டி சில்வா 1972-ல் வரைந்த அரசியல் யாப்பில் சிங்களம் ஆட்சி மொழியாக நீடித்தது மட்டுமல்ல, பௌத்தம் வேறு அரச மதம் ஆனது (இனி `மதம் மனிதனுக்கு அபின்' இல்லை போலும்!). எனினும், தோழர் நா.சண்முகதாசன், தோழர் வ.பொன்னம்பலம் ஆகிய இருவரின் நிலைப்பாடுகளும் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைக்குச் சார்பாகவே மாறிவந்தன. தோழர் சண்முகதாசன் தலைவர் மாவோவின் புத்திமதிகளைப் போராளிகளுக்கு அள்ளி வழங்கினார். தோழர் பொன்னம்பலம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். அவர் நிறுவிய அமைப்பின் பெயர்: செந்தமிழர் இயக்கம். மார்க்சியமும் (சிவப்பும்), தேசியமும் (தமிழரும்) ஒன்றுடன் ஒன்று உடன்பட வல்லவை என்பதை அவர் சூட்டிய பெயரே பறைசாற்றியது!

`வடக்கில் தமிழர்களும் தெற்கில் சமுத்திரமும் இருப்பதால் என்னால் கால்நீட்டிப் படுக்க முடியவில்லை' என்று துட்டகைமுனு (கி.மு. 161-137) வெம்பியதுண்டு. `தமிழனின் முதுகுத் தோலை உரித்து, செருப்புத் தைத்து, காலில் மாட்டித் திரிவேன்' என்று கே.எம்.பி.ராஜரத்தினா சூளுரைத்ததுண்டு. `சிங்கள மக்கள் ஒரு மரம், சிறுபான்மையோர் அதில் படரும் கொடிகள்' என்று ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கா (1993-1994) குறிப்பிட்டதுண்டு. `இலங்கை சிங்களவருக்குச் சொந்தமான நாடு. அவர்களைச் சிறுபான்மையோர் மேவி நடக்க வேண்டும்' என்று சேனாதிபதி பொன்சேகா வேறு அறிவுறுத்தியுள்ளார்!

இவ்வாறு தமது மெய்யான நிலைப்பாட்டை ஆட்சியாளர்கள் அவ்வப்பொழுது கக்குவதுண்டு (அவர்களுடைய வாய்மை பெரிதும் மெச்சத்தக்கது!). இலங்கையின் இறைமை, ஆள்புலக் கட்டுறுதி, தேர்தல்கள் என்னும் போர்வைக்குள் அத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் மூடிமறைத்து வருகிறார்கள். ஹிட்லரும், முசோலினியும் கூட மக்களாட்சித் தேர்தலில் வெற்றி ஈட்டியே ஆட்சி ஏற்றவர்கள். தத்தம் நாடாளுமன்றங்களின் ஒப்புதலுடன்தான் அவர்கள் போர் தொடுத்தார்கள். இலங்கை ஆட்சியாளரும் தமது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடனேயே தமிழ் பேசும் மக்கள்மீது போர் தொடுத்தார்கள்!

1991-ம் ஆண்டு ஈராக்கில் குர்திசு மக்கள் துருக்கிய, ஈரானிய எல்லைகளுக்கு விரட்டியடிக்கப்பட்ட பொழுது, `தலையிடும் உரிமை' என்னும் கொள்கையை பிரெஞ்சு அரசு முன்வைத்தது. அதனை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட (688_ம் இலக்கத்) தீர்மானத்தின்படி, ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மனிதாபிமான நோக்குடன் தலையிடும் உரிமை உலக சமூகத்துக்கு உண்டு.

தலையிடும் உரிமை என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் இறைமையை அல்லது ஆள்புலக் கட்டுறுதியை விஞ்சிய உரிமை என்பது பெறப்படுகிறது. அந்த வகையில், இறைமையோ, ஆள்புலக் கட்டுறுதியோ அப்படி ஒன்றும் புனிதமான சரக்கல்ல என்பது புலப்படுகிறது. எனினும், அதனைப் புனிதமான சரக்கென்று கொண்டாடி, சம்பந்தப்பட்ட ஆட்சியாளருக்கு ஒத்தாசை புரியும் பிறிதொரு வேடிக்கையான உலகமும் இருக்கத்தான் செய்கிறது!

அத்தகைய இறைமையும், ஆள்புலக் கட்டுறுதியும் வாய்க்கப்பெற்ற நாடுகள் தோற்றுவிக்கப்பட்ட விதத்துக்கு ஒரு சுவையான எடுத்துக்காட்டை எம்மால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை: `நாங்கள் அடுத்த அறைக்குள் நுழைந்தோம். கீழே வெளியாக இருந்தது. (அமெரிக்க ஜனாதிபதி வுட்றோ) வில்சன் (எங்கள் அலுவலகத்தில் வரையப்பட்ட) ஒரு பெரிய படத்தை கீழே விரித்து வைத்து, அதன்மீது தவழ்ந்த நிலைகொண்டு, தாங்கள் செய்த வேலையை எங்களுக்குக் காட்ட ஆயத்தப்படுத்தினார். நாங்களும் தவழ்ந்து நிலைகொண்டோம். முன் வரிசையில் தவழ்ந்து நிலைகொண்ட என்னைப் பின் வரிசையிலிருந்து யாரோ இடித்துத் தள்ளியதை உணர்ந்து, நான் ஆத்திரத்துடன் திரும்பிப் பார்த்தேன். (இத்தாலியப் பிரதமர்) ஓலாந்தோ அந்த வரைபடத்தை நோக்கி ஒரு கரடி போல் தவழ்ந்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு நான் இடம் விடவே, அவர் சட்டுப்புட்டென்று முன் வரிசைக்குள் ஊடுருவிவிட்டார். உலகின் மிகமுக்கிய பேர்வழிகள் அந்த வரைபடத்தின்மீது தவழ்ந்து நிலைகொண்டதைப் படம்பிடிப்பதற்கு ஒரு புகைப்படக்கருவி என் கைவசம் இல்லாது போனதையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன்' (Charles Seymour, quoted by Daniel Patrick Moyniham, Pandaemonium, Oxford, 1993, p.102).

அமெரிக்க ஜனாதிபதி வில்சன் (1913-1921), பிரித்தானியப் பிரதமர் லாயிட் ஜார்ஜ் (1916-1922), இத்தாலியப் பிரதமர் ஓலாந்தோ (1917-1919) ஆகியோர் தவழ்ந்து நிலைகொண்ட அதே காட்சி வேறொரு விதமாகவும் மட்டுக்கட்டப்பட்டுள்ளது: `அன்பே, இந்த அறிவற்ற பேர்வழிகள், பொறுப்பற்ற பேர்வழிகள் மூவரும் சின்ன ஆசியாவை (ஒட்டோமன் துருக்கியை) கேக் வெட்டுவதுபோல் வெட்டியது கண்டு நான் திகைத்து நிற்கிறேன் (Harold Nicolson மனைவிக்கு எழுதிய கடிதம், அதே நூல், அதே பக்கம்).

எவ்வாறாயினும், தன்னாட்சி உரிமையை முதன்முதல் அதிகாரபூர்வமாக முன்வைத்தவரும், அதனை ஐ.நா.பட்டயத்தில் இடுவித்தவரும் வில்சனே. அவருடைய பெயர்போன 14 அம்சத் திட்டத்தில் (1918) தன்னாட்சி உரிமை பொதிந்துள்ளது. தேசியத்துக்கு அது துணைநிற்க வல்லது. எனினும் `தேசியத்தை வில்சன் தோற்றுவிக்கவில்லை. மாறாக, தன்னாட்சி உரிமையின் மூலம் தேசியத்தை அவர் எதிர்கொண்டார்' (Moyniham, அதே நூல், ப.81). எனினும் தன்னாட்சி என்பது இன வாரியாகவா, சமய வாரியாகவா, மொழி வாரியாகவா நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் சிக்கலான வினாவுக்கு அவர் விடை அளிக்கவில்லை.

பிரித்தானிய, இரஷ்ய, ஜேர்மனிய, (ஒற்றோமன்) துருக்கிய பேரரசுகளினால் கட்டியாளப்பட்ட தேசங்களின் விடுதலையையே மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், வில்சன் முதலியோர் பெரிதும் தன்னாட்சி என்று கருதினார்கள். பிரித்தானியாவிலிருந்து அயர்லாந்து விடுதலை பெறவேண்டும் என்று மார்க்சும், இரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் விடுதலை பெறவேண்டும் என்று மார்க்சும், லெனினும், ஸ்டாலினும் வாதிட்டார்கள். வில்சனின் 14 அம்சத் திட்டத்தின்படி ஜேர்மனியிலிருந்து பெல்ஜியம் விடுதலை பெற்றது. (ஒற்றோமன்) துருக்கியிலிருந்து ஈராக்கும், லெபனானும், பாலஸ்தீனமும், ஜோர்தானும், சீரியாவும் தோற்றுவிக்கப்பட்டன. இரஷ்யாவிலிருந்து பின்லாந்தும், எஸ்தோனியாவும், இலற்வியாவும், லிதுவேனியாவும், போலாந்தும் விடுதலை பெற்றன (எஸ்தோனியா, இலற்வியா, லிதுவேனியா மூன்றும் 1944-ல் மீண்டும் சோவியத் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு, 1991-ல் மீட்சி பெற்றன).

யூகோசிலாவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குறோசியா, பொஸ்னியாகெசகோவினா, மொந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் முறையே 1991-ம், 1992-ம், 2006-ம் ஆண்டுகளில் தனி நாடுகள் ஆகின! அப்புறம் 1971-ல் வங்காளதேசமும், 1993-ல் எரித்திரியாவும், 2002-ல் கிழக்கு திமோரும், 2008-ல் கொசொவோவும் தனி நாடுகள் ஆகின. ஏறத்தாழ 50 நாடுகளுடன் தோன்றிய ஐ.நா.வில் இன்று 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பேரரசுகள் அருகி வருகின்றன, நாடுகள் பெருகி வருகின்றன. அதாவது, (1) மனித உரிமைகளும் (2) தன்னாட்சி உரிமையும் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. மனித உரிமைகளும், தன்னாட்சி உரிமையும் ஒன்றுடன் ஒன்று உடன்பட வல்லவை என்னும் உண்மையைப் பின்வரும் கூற்றுக்கள் இரண்டும் உணர்த்துகின்றன:

(1) `இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, மற்றும் பிற கருத்து, தாயகம், அல்லது தாய்ச் சமூகம், உடைமை, பிறப்பு, மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' (உலக மனித உரிமைப் பிரகடனம், ஐ.நா. பொது அவை, 1948/12/10).

(2) `ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாறு படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் உரிமையும் அதற்கு உண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்கு உண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்த அளவில் தன்னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்' (J.V.Stalin, Marxism & National Question, Prosveshcheniye, Moscow, 35, MarchMay 1913).

தமிழ் பேசும் மக்கள் தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்தது முற்றிலும் நியாயமே ஒழிய, சற்றும் குற்றமல்ல என்பதற்கு இவ்விரு கூற்றுகளும் கட்டியம் கூறுகின்றன.

ந‌ன்றி: தீராந‌தி (கார்த்திகை, 2008)

No comments: