Wednesday, April 29, 2009

மீள் குடியேற்றம் இன்றி 3ஆம் ஆண்டு நிறைவு:மூதூர் கிழக்கு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

(மூதூர் ம‌க்க‌ளாவ‌து ப‌ர‌வாயில்லை, அவ‌ர்க‌ளுக்கு மூன்று ஆண்டுக‌ள். நான் வாழ்ந்த‌ கிராம‌த்த‌வ‌ர்க‌ளுக்கு யாழ்ப்பாண‌ம் இல‌ங்கை இராணுவ‌த்தால் முற்றுமுழுதாக‌க் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு 15 வ‌ருட‌ங்க‌ளாகியும் மீள் குடியேற்ற‌மில்லை (ச‌ண்டையின் உக்கிர‌த்தால் சொந்த‌க்கிராம‌த்திலிருந்து 90க‌ளின் ஆர‌ம்ப‌த்திலேயே அலைய‌த்தொட‌ங்கிவிட்டோம்). 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் புலிக‌ளால் துர‌த்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் ம‌க்க‌ளுக்குந்தான் இன்னும் யாழில் மீள் குடியேற்ற‌த்தைக் காணோம்.

எங்க‌டை ஊர்ச்சன‌த்தில் முக்கால் வாசிப்பேர் வ‌ன்னிக்குள்ளேயே போய்விட்டார்க‌ள். அக‌தியாய் வாழ்ப‌வ‌ருக்கு யாழில் வாழ்ந்தால் என்ன‌ வ‌ன்னிக்குள் வாழ்ந்தால் என்ன‌...? எல்லாம் ஒன்றுதானே. இப்போது 'அவ‌ர் ச‌ரியாம், இவ‌ருக்குக் காய‌மாம்' என்று வ‌ருகின்ற‌ தொலைதூர‌த் தொலைபேசிக‌ள் எல்லாம் சாதார‌ண நிக‌ழ்வு. வீட்டில் யாராவ‌து தொலைபேசியை எடுத்துக் க‌தைத்துக்கொண்டிருக்கும்போது என்ன‌ செய்தியாக‌ இருக்கும் என்று காத்துக்கொண்டிருக்கையில் நெஞ்சுத் துடிப்பு துல்லிய‌மாக‌க் கேட்கும்.

புக‌லிட‌/புல‌ம்பெய‌ர் புதிய‌/பழைய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளிட‌ம் வ‌ருட‌ந்தோறும் மனு அனுப்பினாலாவ‌து இந்த‌ மீள் குடியேற்ற‌ங் குறித்து அவ்வ‌ப்போது ம‌கிந்தாவைச் ச‌ந்திக்கும்போதாவ‌து அவ‌ரின் காதில் போட்டுவிடுவார்க‌ள். புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ள் கொழும்பு தொட‌க்கம் உல‌க‌ப்ப‌ர‌ப்பு எங்கும் ச‌மாதான‌ம் வாங்க‌ அல்ல‌வா அலைந்துகொண்டிருக்கின்றார்க‌ள். யாழிலிருந்து அக‌தியாக்க‌ப்ப‌ட்ட‌ எங்க‌ள் ஊர்ச்ச‌ன‌த்துக்கே 15 வ‌ருட‌ங்க‌ளாகிவிட்ட‌து என்றால், மூதூர் ம‌க்க‌ளுக்கும் இப்போது அக‌தி முகாங்க‌ளில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன்னி ம‌க்க‌ளுக்கும்...?

~டிசே
)


2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மூதூர் கிழக்கு மக்கள் இன்று மட்டக்களப்பில் தமது வெளியேற்றத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு முதல் கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களில் சம்பூர் மேற்கு ,சம்பூர் கிழக்கு ,கூணித்தீவு ,கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1750 குடும்பங்கள் இது வரை மீள் குடியேற்றம் இன்றி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றன.

இக்கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதால் தான் இவர்களின் மீள் குடியேற்றத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.இவர்களின் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இது வரை சாதகமான பதில்கள் இல்லை. இவர்களை குடியேற்ற அரசாங்கம் தெரிவு செய்துள்ள மாற்றுக் காணிகள் பொருத்தமற்றது என்பதால் இவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது உயர் பாதுகாப்பு வலய எல்லை குறைக்கப்பட்டு கடற்கரைச்சேனை கிராம சேவையாளர் பிரிவையாவது விட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலய முன்றலில் இக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இன்று காலை முதல் மாலை வரை பிரார்த்தனையிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்திற்கு மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது.இப் போராட்டத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கலாநிதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மனாந்தாஜி உட்பட சர்வ மத பிரமுகர்கள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.


ந‌ன்றி: இனியொரு

No comments: