Thursday, June 04, 2009

உண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2

தில்லையின் கீழேயுள்ள க‌ட்டுரை, முக்கிய‌மான‌ சில‌ விட‌ய‌ங்க‌ளைப் பேசுகின்ற‌து. குடும்ப‌ அமைப்பாய் இருந்தாலென்ன‌, போராட்ட‌ங்க‌ள்/போர்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளே அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். புலிக‌ள் பெண் போராளிக‌ளைச் சேர்க்கும்போது அவ‌ர்க‌ள‌து த‌லைம‌யிரை குட்டையாக‌ வெட்டுவ‌தென்ற‌ ப‌ழ‌க்கம், இன்று போர் முடிந்துவிட்ட‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌ சூழ்நிலையில் வ‌ன்னிக்குள்ளிலிருந்த‌ பெண்க‌ளை எளிதாக‌ இன‌ங்க‌ண்டு எதையும் செய்து முடிக்கும் சுத‌ந்திர‌ம் இல‌ங்கை இராணுவ‌த்திற்கு வாய்க்கின்ற‌து. இறுதி இர‌ண்டு/மூன்று வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ர் க‌ட்டாய‌மாக‌ப் போராட்ட‌டத்தில் சேர்க்க‌ப்ப‌ட்ட‌போது, விருப்ப‌மின்றி போராட்ட‌த்தில் இணைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளும் புலிக‌ள் என்ற‌ அடையாள‌த்தின் கீழ் மிக‌ மோச‌மாக‌ சித்திர‌வ‌தைக்கு ஆளாகும் அபாய‌மும் உண்டு.

ஈழ‌/புல‌ம்பெய‌ர் தேச‌த்திலிருக்கும் பெண்க‌ள் சார்ந்த‌ அமைப்புக்க‌ள் என்றில்லாது எல்லா அமைப்புக்க‌ளும் இவை குறித்து குர‌ல் கொடுக்க‌வும், இடைத்த‌ங்க‌ல் ம‌ற்றும் சித்திர‌வ‌தை முகாங்க‌ளிலுள்ள‌ (க‌வ‌னிக்க‌, ஒரு ப‌த்திரிகையாள‌ரின் க‌ட்டுரையில், தெற்கில் இருக்கும் ஒரு சிறை த‌ம‌து 'குவாண்டனாமோ சிறை' என்றொரு சிங்க‌ள‌ இராணுவ‌த்தின‌ன் குறிப்பிட்டிருக்கின்றார்) பெண்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌வும் வேண்டிய‌வ‌ராயிருக்கின்றோம்.

முக்கிய‌மாய் (நானென‌து 15/16 வ‌ய‌துக‌ளில் வாசித்த‌) ச‌ரிநிக‌ரில் பெண் போராளிக‌ள் ப‌ற்றிய‌ விவாத‌மொன்று ந‌ட‌ந்த‌தாய் நினைவு. அதில் 'பெண்மையின் அடையாள‌ம்' புலிக‌ளால் அழிக்க‌ப்ப‌டுகின்ற‌தென்று விவாதித்த‌ ராதிகா குமார‌சாமி இன்று ஜ‌.நாவின் சிறுவ‌ர்க‌ளுக்கான‌ அமைப்பில் இருக்கின்றார். என‌வே அவ‌ர் இன்று -த‌ன்னை ஒரு ந‌டுநிலையாள‌ர் என்று க‌டின‌ப்ப‌ட்டு நிரூபிக்க‌வானும்- குர‌ல் கொடுப்பார் என்று ந‌ம்புகின்றேன். ம‌ற்ற‌து, , புலிக‌ள் பெண்புலிக‌ளுக்குச் ச‌ரியாக‌க் கொடுமை செய்கின்றார்க‌ளென‌ கூறி, க‌ண்ணீரும் உகுத்த‌ நிர்ம‌லா இராஜ‌சிங்க‌ம் -தான் கொடுக்கும் எல்லா பேட்டிக‌ளில் தானொரு முன்னாள் புலி, முத‌லாவ‌து பெண் அர‌சிய‌ற் கைதி‍ ‍என்று ஒன்றையே திருப்பிக் கூறிக்கொண்டிருக்காம‌ல் - இன்று புலிக‌ள் அமைப்பற்று ஏதிலிக‌ளாக‌ இருக்கும் போராளிக‌ளுக்காய் த‌ம‌து குர‌லை அவ‌சிய‌மாய் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌திவு செய்து அவ‌ர் உகுத்த‌ க‌ண்ணீர் போலிக்க‌ண்ணீரில்லை என்ப‌தை நிரூபிப்பாரென‌வும் ந‌ம்புவோமாக‌.
-----

ஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம்?

-தில்லை (சுவிஸ்)

பெண் ஒடுக்கு முறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்கவாதத்தால் வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் பெண்கள் வைக்கப்பட்ட போதும் பின்னர் பெண்கள் போராட்டத்தின் அங்கமாகவும் ஆக்கப்பட்டார்கள். இலங்கை சிங்கள பேரினவாத அரசு காலம் காலமாகத் தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கிச் சிறுமைப்படுத்தியது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த்தேசிய போராட்டச் சிந்தனை எழுச்சி பெற்ற காலத்தில் அரசியலில் ஆண்கள் ஏகபோக உரிமையாளர்களாக இருந்த போதிலும் தமிழ்த்தேசியப் போராட்டம் தமது இலக்கை அடைவதற்காக தமது ஆளணித் தேவைக்காகப் பெண்களையும் இணைத்துக்கொண்டது.

ஆணாதிக்க மயப்பட்ட இந்தப் போராட்டத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இந்த பெண்போராளிகள் போராட்டத்தில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் கலை இலக்கியங்களிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறான போராளிகளின் படைப்பிலக்கியங்களை எத்தனை பேர் கண்டுகொண்டார்கள்? கடந்த காலங்களில் பெண்களின் கருத்துரிமை அரசியலைக் கற்றுத்தேர்ந்த பெண்ணியலாளர்கள் வாய்திறக்காத பக்கமாக பெண் போராளிகள் இருந்தனர்.

பிள்ளைகளை இழந்த தாயாக, கணவனை இழந்த மனைவியாக, பெற்றோரை இழந்த மகளாக, பெண்களே போரின் வடுக்களைச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறும் இலங்கைப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான போராளிகளைக் கைது செய்திருப்பதாகவும்,சரணடைந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது இவர்களில் ஏராளமானோர் பெண்போராளிகள்.

இவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனை பேர் சரணடைந்தார்கள்? இவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கு உள்ளாக்கப்படடார்கள்? இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகவும் சீர்திருத்தம் அளிப்பதாவும் வாயளந்து கொண்டிருக்கும் அரசு அல்லது பரப்புரை செய்து கொண்டிருக்கும் அரசு மனித உரிமையாளர்களையோ அல்லது சர்வதேசக் கண்காணிப்பாளர்களையோ அனுமதிக்காதது ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசேட தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளதாக அரசு அறிவித்திருந்த பெண்போராளிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புள்ளது? ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்போராளி மனம்பேரி மனக்கண்களில் நிறைகிறாள்.

பெண்கள் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் உள்ளூர் மற்றும் சர்வதேச பெண்ணுரிமைவாதிகள் கூட இப்போராளிகள் விடயத்தில் அவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக வாய்திறக்காதது வருத்தம் தருகிறது? கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடிய பெண்களின் ஆளணி எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு இருந்தது. அவ்வாறெனில் அப்பெண்களின் வரலாறும் அப்பெண்களின் நிலையும் பலரும் அறியாதவாறு மறைக்கப்பட்டிருக்கிறது? இன்றைய நிலையில் பெண்போராளிகளின் நலனில் விசேட கவனம் செலுத்துவது சமூக ஆர்வலர்களின் கடமையாகிறது.


ந‌ன்றி: ஊட‌று

No comments: