Thursday, June 11, 2009
'தோல்வியடைந்தது மக்கள்தான்' - தீபச்செல்வனின் நேர்காணல்
தளவாய் சுந்தரம்: யுத்தம் மற்றும் யுத்தத்தின் முடிவு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?
தீபச்செல்வன்: யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது ஒன்றுதான் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய விடயம்;. ஆனால் அதை முடிவுக்கு கொண்டவிதம் கொடுமையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. குறிப்பாக கடைசித் தாககுதலில் கணக்கிடப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியாகியிருக்கிறர்hகள். யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதில் இன்னொரு துயரம் ஒளிந்திருக்கிறது. ஈழப்போராட்டம் மற்றும் அதன் கனவுவெளி அழிக்கப்பட்டிருக்கிறது. மீளவும் அதற்காக மக்கள் தலை தூக்கப்போவதில்லை என்ற தோல்வியின் அனுபவ வெளிப்பாடு தரப்பட்டிருக்கிறது. வெறும் இராணுவ வெற்றிகளால் மட்டும் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பது யுத்தத்தின் முடிவை கேள்விக்குள்ளாக்கிறது.
தேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது. மக்களை தொடர்ந்தும் துயரங்கள் பீடிக்கின்றன. எதுவும் செய்யவும் பேசவும் திறனற்றுக்கிடக்கிறார்கள் எங்கள் மக்கள். ஆயுதங்கள் ஓயப்போவதில்லை என்பதைப்போல தமிழ் மக்கள்மீதான அடக்குமுறை யுத்தம் முடியப்போவதில்லை எனவும் மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அத்துடன் கிழக்கில் பதுங்கியிருக்கிற போராளிகள்மீது அறிவிக்கப்படாத தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.
தளவாய் சுந்தரம்: இந்த யுத்தத்தின் இலங்கை அரசுடன் பின்னணியில் சேர்ந்து இயங்கிய வல்லமையுள்ள நாடுகள் பற்றிய குறிப்பிடுங்கள்?
தீபச்செல்வன்: இந்த யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கும் எதிரானதுதான். இதில் உலகத்தின் வல்லமையுள்ள நாகள் பல சேர்ந்தியங்கியுள்ளன. அதிலும் இந்தியாவின் ஆதிக்கமும் தலையிடும் ஒத்துழைப்பும் வேவ்வேறு வடிவங்களில் இருந்துள்ளன. பிரபாரனை பழிவாங்கும் நோக்கில் பல்லாயிரம் மக்களை கொன்று அவர்களை அலைத்து துயரப்படுத்தி விட்டது இந்தியா.
பாகிஸ்தான் பகிரங்கமாகவே இலங்கை இராணுவ வெற்றியை தனக்குரியதாக உரிமை கோரியுள்ளது. சீனா, அமரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இந்த யுத்தத்தில் இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கியுள்ளன. எங்கள் தேசத்தின் நிலம் மற்றும் அதன் வளங்களை சுறண்டுகிற அரசியல் பொருளாதார நோக்கத்துடன் இவை செயல்படுகின்றன. உலக அதிகார நிகழ்ச்சி நிரலுக்கு எமது மக்கள் மற்றும் அவர்களின் கனவு பலியாக்கப்பட்டுள்ளது.
தளவாய் சுந்தரம்: இனி ஈழ விடுதலைப் போராட்டம் என்ன ஆகும் என்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தீபச்செல்வன்: ஈழப்போராட்டத்தை மிகவும் செப்பனிடப்பட்ட கருத்தியலுடன் முன்னெடுக்க வேண்டிய தேவை ஈழச்சமூகத்திற்கு இருந்தது. குறிப்பாக எழுபதுகளின் பிற்பகுதியில் ஈழப்பேராட்டம் தொடங்கியவேளையில் ஈழத்தமிழ் போராளிகளிடம் இருந்த ஒற்றுமை பிறகு இந்திய இலங்கை மற்றும் சருவதேச சதிகளால் சீர்குலைந்துபோனது. அந்த நிகழ்ச்சிநிரலிலுக்கு விடுதலைப்புலிகளது ஆதிக்கம் சாதகமாக இருந்தது. அவர்கள் சகோதரப் போராளிகளை இணைத்து தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்திருக்க வேண்டும். புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களும் புலிகளது ஆதிக்கத்தால் இலங்கையரசிற்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிராக நிற்பதற்காக மக்களுக்கு எதிராகவும் மாறினர்.
பெரிய ஒறறுமையினமையையும் பிழைகளையும் தந்திருந்தபோதும் கடையிசில் புலிகளது இராணுவ பலம் ஓங்கியிருந்தது. அவர்கள் சிலவற்றை திட்டமிடடு நடத்தினார்கள். நடத்துகிற நிலமும் வல்லமையும் அவர்களுக்கு இருந்தது. அதுவும் மீறிய இன்றைய நிலையில் ஈழப்போராட்ம் என்பது குறித்து மக்களிடம் தேக்கம் இருக்கிறதே தவிர, மீளவும் ஒரு எழுச்சிக்கான இடத்தையோ வாய்ப்பையோ இல்லாமல் செய்திருக்கிறது அரசு. ஈழப்போராட்டம் பற்றி குறிப்பாக இந்த மக்ளே தீர்மானிக்க முடியும். அவர்கள் அதற்காக தமது முழுக்குருதியையும் சிந்தியிருக்கிறார்கள். விலையும் பலியும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியான துயரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தனது எண்ணத்தை வெறறியாக்கியிருக்கிறது இலங்கை அரசு. பேராட்டத்திற்கான தேவையிருக்கிறபோதும் அதற்கான சூழல் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது.
தளவாய் சுந்தரம்: எல்லாம் போதும், போராட்டங்களை கைவிட்டுவிட்டு, இருக்கும் சூழ்நிலையில் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்களா?
தீபச்செல்வன்: அனுபவித்தவை, அலைந்தவை, இழந்தவை, பலியிட்டவை எல்லாம்போதும் என மக்கள் நினைக்கிறார்கள். அளவுக்கதிமான இழப்புக்களையும் உலகத்தால் கைவிடப்பட்ட நிலமைகளையும் உலகத்தின் சூழ்ச்சிகளையும் பேரவலத்தையும் கண்;ட மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். பேராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது அதை வாய்வாதத்தினாலும் அரசியலுக்காகவும் தர்க்கத்திற்காகவும் பேசி அதற்கு நீட்சிகளை கற்பிக்கிற மனநிலையில் மக்கள் இல்லை. போராட்டம் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டது. இனி போதும் என்கிற மனநிலையை உருவாக்கிவிட்டது. இராணுவம் முற்றகையிட்ட போதெல்லம் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று நம்பி மக்கள் ஏமாந்தனர். அதற்காக மீளமீள இழப்புக்கைள மக்கள் சந்தித்தனர். உலகத்தின் சூழ்சசியாலும் இராணுவ அரசியல் ரீதியான ஓத்துழைப்பாலும் புலிகள் தோல்வியை சந்தித்தனர் அவைகளின் விளைவாக மக்கள் தான் பேரிழப்புக்களை கண்டனர்.
இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என மக்கள் கருதுகிறார்கள்தான். ஆனால் அப்படியொரு அமைதி திரும்பாமல் தொடர்ந்தும் துயரங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த துயரம் என்றைக்குத் தீரும் என்று யாராலும் அறிய முடியவில்லை. வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கும் அமைதியாக வாழ முடியவில்லை. தமது சொந்த மண்ணுக்கு திரும்பினாலும்கூட அமைதிக வாழவார்களா? என்ற கேள்வியிருக்கிறது. ஏனென்றால் மக்கள் இராணுவத்தால் ஆளப்படுகிற வாழ்வை விரும்பவில்லை. அவர்களால் மேற்கொள்ளப்படுகிற அடக்குமுறைகள் மீறல்கள் மிகவும் கொடுமையானவை. அப்படியிருக்க மக்கள் எதிர்பார்க்கிற அமைதியான வாழ்வு சாத்தியங்களற்றிருக்கிறது.
தளவாய் சுந்தரம்: விடுதலைப் போராட்டம் தொடரவேண்டும் எனக் கருதுபவர்களில்... ஆயூதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அரசியல் போராட்டத்துக்கு திரும்பலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்களா?
தீபச்செல்வன்: விடுதலைப்போராட்டம் தொடரவேண்டும் என்று கருதுபவர்கள் குறிப்பிடதக்க புலம்பெயர் தமிழர்களும் தமிழகத்தமிழர்களும்தான். தமிழகத்தலைவர்கள் சிலர் தொடர்ந்தும் கற்பிக்கிற கற்பிதங்கள் குறித்து மிகவும் அதிருப்தி காணப்படுகிறது. நடந்து முடிந்த இந்தியத்தேர்தலின் அனுபவமும் முள்ளிவாக்காலில் நடந்த கடைச் சமரும் ஈழப்போராட்டம் அதற்கான ஆதரவுத்தளம் பற்றிய மாறுபட்ட அனுபவத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட சூழலில் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்ப்டிருக்கிறார்கள். ஆயதப்போராட்டத்தை முன்னெடுக்க எந்த வாய்ப்புமற்றிருப்பதால் ஜனநாயக ரீதியாக பேராடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஈழத்தமிழ் சமூகத்தலிருந்து சிலர் கருகிறார்கள். உண்;மையில் தமக்கு அரசியல் உரிமை தேவை என்ற நிலைப்பாடு மக்களுக்கு இருக்கிறது. வன்னி மக்களிடம் மிகுந்த தற்போதைய நெருக்கடிகளின் காரணமாக அதன் வெளிப்பாடு தெரியாமல் இருந்தாலும் மற்ற மக்களிடம் அப்படியிருக்கிறது.
ஆனால் தமிழ் மக்களுக்கான நல்ல ஜனநயாக தலைமைத்துவத்தையோ போராட்ட முனைப்பையோ சிங்கள அரசு விரும்பவில்லை. புலிகளின் சருவதேச விவகார பொறுப்பாளர் கே.பத்மநாதன் மற்றும் மட்டக்களப்பு அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் முதலியோர் அரசியல் நீரோட்டத்தில் இணைய விரும்பியது குறித்த அறிவிப்பை இலங்கையின் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபாயராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இதனோடு தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை நாடாளமன்றத்தலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்காக பிரக்ஞை பூர்வமாக செயல்படக்கூடிய ஜனநாகத்தையோ அரசியல் தலைமையையே சிங்கள அரசு விரும்பவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ், கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசபிள்ளை சந்திரகாந்தன், தேசிய நல்லிணக்கதுறை அமைச்சர் முரளிதரன் போன்றவர்கள் மாதிரி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவர்களை தமிழ்மக்களின் ஜனநாயக முனைப்புக்களாக காட்டுகிறது. தமிழ்மக்களை தனது அதிகாரம் ஆட்சி என்பவற்றுக்குள்ளாக வைத்திருந்து எந்த அரசியல் உரிமைகளையும் வழங்காமல் இழுத்தடிப்பதற்குத்தான் இப்படியான ஜனநாயகம்தான் இங்கு காணப்படுகிறது.
தளவாய் சுந்தரம்: விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளது தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த வகையில் பாதித்துள்ளது? வழக்கம் போல் மக்கள் அன்றாட வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்களா? அல்லது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதா?
தீபச்செல்வன்: விடுதலைப்புலிகளுக்கு விமர்சனமற்ற முறையில் பெரிய ஆதரவு இருந்தது. அதே வேளை எதிர்ப்பும் இருந்தது. குறிப்பாக ஆதரவானவர்களிடம் புலிகளின் தேர்ல்வி பாதிப்பை ஏற்படுத்தியது. விடுதலைப்புலிகளுடன் அங்கு பல்லாயிரம் மக்களும் இருந்ததால் கடைசிச்சமர் மற்றும் தோல்வி என்பன அநேகமான மக்களது அன்றாட வாழ்க்கையை பாதித்தது. ஆனால் மக்கள் எதையும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் பெரியளவிலான துக்கம் இருந்ததை உணர முடிகிறது. விமர்சனங்களுக்கப்பால் புலிகள் இராணுவ பலத்தால் உயர்ந்திருந்ததால் அவர்களுக்கு பெரிய ஆதரவு இருந்தது. அவர்கள் ஊடாகத்தான் ஈழம் காண முடியும் என்ற நம்பிக்கையை இந்த தோல்வி வழகிவிட்டது.
தளவாய் சுந்தரம்: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த மர்மம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தீபச்செல்வன்: தலைவரது மரணம் குறித்து மாறுபட்ட யெ;திகள் வந்தன. அவரது மரணத்தை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனது தேசிய தொலைக்காட்சியில் அவரது சடலம் என ஒன்றை ஒளிபரப்பியது. அது பொம்மைத்தனமானதாகவும் அசைவில் யதார்த்தமற்றும் இருந்தது. அதைப் பார்த்த மக்கள் அதை பிரபாரகரன் என்று ஏற்கவில்லை. பின்னர் கருணாஅம்மானும் தயாமாஸ்டரும் சடலத்தை இனங்காட்டும் காட்சியை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில் சடலம் வித்தியசமாக இருந்தது. அது அவரது சடலம் என கூறக்கூடிய மாதிரியிருந்தது. முதலில் பிரபாகரன் மரணிக்கவில்லை எனக்கூறிய பத்மநாதன் பின்னர் அவர் மரணித்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இப்படி தலைவர் பிரபாகரனின் மரணத்தில் மாறுபட்ட நிலையும் மர்மமும் இருக்கிறது. அது தொடர்ந்து நீடித்தபடியிருக்கிறது. பிரபாகரனின் மரணம் பற்றி கதைத்தவர்களை இராணுவம் கைது செய்து கொண்டு போயுள்ளது. அத்துடன் முதியவர் ஒருவர் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படியிருக்க இதைப்பற்றி இன்னும் மக்கள் என்ன கதைக்கிறார்கள் என்று வெளிப்படையாக அறிய முடியாதிருக்கிறது.
தளவாய் சுந்தரம்: வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன? அதுபற்றி...
தீபச்செல்வன்: வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மாநகரசபைத்தேர்தல் நiபெறவிருக்கிறது. அவை ஒரு சுகந்திரமான ஜனநாயகத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தலாக இருக்கும் என்று கூற முடியாது. அப்படித்தானே தேர்தல்கள் அங்கும் நடக்கின்றன. இங்கும் அப்படித்தான் சமூக பிரனக்ஞை உள்ள ஒருவர் தேர்தலில் நிறகப்போதுமில்லை அப்படி நின்றால் அவர் வெல்லப்போதுமில்லை. தேர்தலிலும் ஜனநாயகத்திலும் துவக்குத்தான் ஆளுகிறது. முடிவு செய்யப்பட்ட சபைக்கான தேர்தல்தான் நடக்கப்போகிறது. பல வருடங்களின் பின்னார் வடக்கில் மாநகர சபைத்தேர்தல் என அரசு அறிவித்த போதும் இது மக்களை எந்த வித்திலும் கவனப்படுத்தவில்லை. அவர்கள் இந்த தேர்தல் குறித்து எதுவும் அலட்டவும் இல்லை.
தளவாய் சுந்தரம்: யுத்த வலயத்தில் இருந்து வருகை தந்து அகதிமுகாம்களில் உள்ள மக்களின் நிலமை எப்படியிருக்கிறது.
தீபச்செல்வன்: அவர்கள் விலங்குகளைப்போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் எந்தச் சுகந்திரமும் அற்றிருக்கிறார்கள். இடவசதியில்லாமல் மக்கள் குறுகிய இடத்தில் நெருங்கியிருக்கிறார்கள். ஐம்பதுபேர் இருக்கக்கூடிய இடத்தில் நுர்று பேர் இருக்கிறார்கள். நோய் முதலிய நெருக்கடிகளை அனுபவிக்pறார்கள். உழைப்பு வருமானம் முதலியவற்றை இழந்து தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலும் எதுவரை இந்த நிலை என வெறுமையுடன் இருக்கிறார்கள்.
தளவாய் சுந்தரம்: அகதி முகாம்களில் இருப்பவர்களுடன் வெளியேயுள்ளவர்கள் தொடர்புகொள்ள முடியுமா?
தீபச்செல்வன்: தொடக்கத்தில் மிகவும் சிக்கலாக இருந்தது. தற்போது குறிப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களுக்குள் சந்திக்க முடிகிறது. அவ்வளுதான்., சோதனைகள் மிக இறுக்கமாக இருக்கும். தொலைபேசி வதமிகள் செய்து கொடுக்கப்பட்டள்ளன என்று கூறப்பட்டபோதும் அப்படி எந்த வசதியும் இல்லை. நிறைய மக்கள் உயிருடன் இருக்கிறார்கள், இல்லை என்ற செய்திகளை பிள்ளைகள் பெற்றோர் உறவினர்கள் என்று தமது உறவுகளுக்கு தெரிவிக்க வழியற்றிருககிறார்கள். பல குடும்பங்கள் பல்வேறு முகாம்களில் பிரிந்து வாழ்கிறார்கள்.
தளவாய் சுந்தரம்: புலிகள் மீண்டும் எழுந்துவர சாத்தியப்பாடுகள் உள்ளதா?
தீபச்செல்வன்: புலிகள் மீண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் கொஞ்சமும் இல்லை. கிழக்கிலும் வடக்கிலும் சில போராளிகள் மறைந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அண்மையில் மட்டகளப்பு மாவட்ட அரசியல் தலைவர் தயாமோகன் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். போராளிகள் சிலர் எஞ்சியிருப்பினும் முன்னர் போல வெளிப்பட சாத்தியமில்லை. அதற்கான அடிப்படைகளை அழித்து மேலும் தேடியழித்துக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்கு உலகளவில் தொடர்ந்து முழுமையான ஆதரவு இருக்கிறது. அதற்கேற்ப இலங்கை-ஈழச் சூழல் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருககிறது.
தளவாய் சுந்தரம்: போர் நடந்து முடிந்த பகுதிகளைப் பார்க்க மற்றவர்கள் (மக்கள்) செல்ல முடியுமா?
தீபச்செல்வன்: போர் நடந்து முடிந்த இப்பொழுது பார்க்க முடியாது என்பது பிரச்சினை இல்லை எப்போது பார்க்க முடியும் என்பதுதான் பிரச்சினை. மக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. மூடுமந்திரங்காளக அந்த பகுதிகள் இருக்கின்றன. மனிதநேய அமைப்பு என்று வருகிறவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மனிதாபிமானத்தை கருதி வந்த ஐநா செயளாலர் பர்கீமூனாலும் மற்றும் விஜய் சம்பியாராலும் சுகந்திரமாக பார்வையிட முடியவில்லை. அவை பெரும் அடையாள அழிபபுகளுக்கம் மாற்றங்களுக்கும் அப்பால்தான் வேறு நிறத்துடன் காணமுடியும் என நினைக்கிறேன்.
...............
குமுதம் செய்தி ஆய்விற்காக தளவாய் சுந்தரம் என்னுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பிறகு அவர் நிலமைகளை கேட்டறிய தொடர்பு கொண்டார். நம்பிக்கைகள் தகர்ந்து போய் பீதியும் யுத்தத்தின் வடுக்களும் துயர் தருகிற சூழலில் எமது மக்கள் வெறுமையுடன் இருப்பதை அவருக்கு தெரிவித்தேன்.
உரையாடியவர்:தளவாய்சுந்தம்
நன்றி: தீபம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment