Wednesday, August 12, 2009

குடியும் சாதி நிமித்தமும் - சுகிர்தராணி

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்று எண்பதைத் தொட்டுவிட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இருநூறுக்கும்மேல். அவர்களுள் பெண்களும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும். மதுவிலக்கு அமல்படுத்தப்படாத தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விஷச்சாராய உயிரிழப்புகள் சம்பவித்து வருகின்றன என்பது கண்கூடு.

விஷச்சாராயம் அருந்தி பலியானவர்கள் மற்றும் சிகிச்சைபெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். குஜராத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து கள்ளச்சாராயத்தைக் கடத்துவதற்காகக் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அக்குழந்தைத் தொழிலாளர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய படிப்பறிவற்ற தலித் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். தலித்துகளைக் கொண்டே தலித்துகளின் கண்ணைக் குத்தும் சமூக அவலத்திற்கு இவையெல்லாம் சான்றுகள்.

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் கள்ளச்சாராயம் பலிவாங்குவது ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களைத்தான். தலித்துகள் ஏன் குடியை நாடிச் செல்கின்றார்கள்? குடி தலித்துகளின் கலாச்சாரமா? கொண்டாட்டத்திற்குரிய ஒன்றா? போன்ற கேள்விகள் எழாமலில்லை.

o

இந்தியாவில் வேத காலம்தொட்டே மக்களுக்குக் குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கின்றது. சோமபானமும் சுராபானமும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின் அனைவராலும் அருந்தப்பட்டிருக்கின்றன.

அப்போது ஏறக்குறைய 62 பிரிவுகளாக விளங்கிய இந்து சமயத்தில் வேள்விகளும் சடங்குகளும் மலிந்திருந்தன. சாதிக்கொடுமைகள் வேறு மக்களை வாட்டின. இவற்றிலிருந்து மக்களை விடுவிக்கவே சமணமும் பௌத்தமும் மாற்றுச் சமயங்களாகத் தோன்றின.

பௌத்தம் அனைவரும் சமம் என்னும் கருத்தைப் போதித்ததால், தாழ்த்தப்பட்ட மற்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்து சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக பௌத்தம் வீழ்ச்சியடையத் தொடங்கியதால் புத்தரின் அட்டமார்க்கத்தைப் பின்பற்றி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள், உடலுழைப்புத் தொழில்களால் உண்டான களைப்பைப் போக்கிக்கொள்ள குடியை நாடத் தொடங்கினர்.

சமூகத்தில் சாதி அமைப்புமுறை தோன்றக் காரணமாக இருந்த, வேதங்களால் போஷிக்கப்பட்ட இந்து மதம் வளர வளரச் சாதியமைப்பும் சாதி இழிவும் இறுகிக்கொண்டே போகின்றன. அதனால்தான் இன்றும் இந்தியாவில் சாதிகள் காணப்படுகின்றன. இன்றும் பௌத்தத்தின் பூர்வ குடிமக்கள் ஊருக்கு வெளியே சேரிகளில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல், பிணங்களை எரித்தல், மூட்டை தூக்குதல் போன்ற தொழில்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே தொழில் நிமித்தம் அவர்களுக்குக் குடி தேவைப்படுகிறது.

ஆகவேதான் விலையுயர்ந்த மதுவைவிடத் தம் ஒரு நாள் கூலிக்குள் மலிவாகக் கிடைக்கக்கூடிய கள்ளச் சாராயத்தைத் தலித்துகள் நாடுகின்றனர். எங்கெல்லாம் தலித்துகள் அதிகமாக வசிக்கிறார்களே, அங்கெல்லாம் கள்ளச்சாராய விற்பனையும் கள்ளச்சாராயச் சாவுகளும் இயல்பாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் தலித்துகள் அதிகமாக வசிக்கின்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற வடமாவட்டங்களில் விஷச்சாராயச் சாவுகள் அவ்வப்போது நிகழ்வதை மறுக்க முடியாது. இது போன்று இந்தியா முழுவதும் நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது.

கூர்ந்து நோக்கினால் தீட்டானவை, அருவருப்பானவை எனச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட தொழில்களோடுதான் பெரும்பாலான தலித்துகளின் அன்றாட வாழ்க்கை இருப்பது புலப்படும். அவற்றை மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் உள்ள தலித்துகளின் மனோநிலையை ஆதிக்கச் சாதியினராலும் தலித் உணர்வுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் அறிவுஜீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதுதான்.

தம் மலத்தைத் தாம் பார்ப்பதையே அசூசையாகக் கருதும் மக்களிடையே, எவ்வித விகல்பமுமின்றி மலத்தை அள்ளுதல், சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பெடுத்தல், செத்த விலங்குகளைத் தூக்கிச்சென்று புதைத்தல், நெருப்புச் சூட்டில் வெந்து பிணங்களைப் புதைத்தல், உடல் கூராய்வின்போது பிணங்களை அறுத்தல், திருவிழாக்களிலும் இழவுகளிலும் பறையடித்தல், மூட்டை தூக்குதல், செங்கல் அறுத்தல் போன்ற தொழில்களைச் செய்வதற்குத் தம், முந்தைய அல்லது பிந்தைய மனோநிலையை நனவிலிருந்து நனவிலிக்குக் கடத்த வேண்டியுள்ளது.

அப்படிக் கடத்துவதற்குக் குடியை ஒரு கருவியாகத்தான் தலித்துகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியும் குடிக்கே போதாமையால் தலித் வீடுகளில் ஒருவேளைதான் அடுப்பெரிகிறது. ஆகவே நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப் படை வீரர்களுக்கு மலிவுவிலையில் மது வழங்கப்படுவதைப் போல இந்தியாவில் உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தலித்துகளுக்கு அடையாள அட்டை அளித்து, மலிவுவிலையில் தரமான மது வழங்க அரசு ஆவனசெய்ய வேண்டும். குடி ஆரோக்கியச் சீர்கேடு என்றால் கையால் மலத்தை அள்ளுவது அதைவிடச் சீர்கேடு. குடி என்பது தலித்துகளின் கொண்டாட்டத்திற்கு உரியதன்று. எல்லாவற்றிலும் நிறைவுபெற்றிருக்கின்ற ஆதிக்கச் சாதியினருக்குத்தான் குடி கொண்டாட்டமாக விளங்குகிறது.

மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மேற்கத்திய இசை அதிர அதிர மதுக்குவளையோடு திரிபவர்கள் பெரும்பாலும் தலித்துகளாக இருக்க வாய்ப்புகள் குறைவு. தலித்துகளுக்குக் குடி என்பது தொழில்நிமித்தமாக ஏற்பட்டதேயன்றி சாதிநிமித்தமாக ஏற்படவில்லை. “குடி என்பது தலித்துகளின் கலாச்சாரம்” என்னும் சொல்லாடலை உலவவிடுவது ஒரு ஆதிக்கச் சூழ்ச்சி.

அவ்வாறு கட்டமைத்தல் சாராயம், கள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றோடு தொடர்புடைய தலித்துகளைக் குடிகாரர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் வசவு வார்த்தைகளை வெளிப்படுத்தும் ஆபாசமானவர்களாகவும் சண்டைக் காரர்களாகவும் நிறுவுகின்ற ஒரு திரிபு. ஆகவே, குடியை மாற்றுக் கலாச்சாரமாகத் தலித்துகளின் மீது போர்த்துபவர்களை தலித்துகள் அடையாளம் கண்டுகொண்டு புறக்கணிக்க வேண்டும்.

குடியானது ஆதிக்கச் சாதியினரிடையே ஆதிக்க மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. குடியே அதைத் தலித்துகளுக்கு எதிராகத் திருப்புகிறது. அதனால்தான் ஆதிக்கச் சாதியினரால் தலித்துகள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தலித்துகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. தலித்துகளின் தலைமை அவர்களைப் பதற்றமடையச் செய்கின்றது.

o

தற்போது இலக்கிய உலகிலும் இந்நோய் பீடித்திருப்பது தலித் படைப்பாளிகளைக் கவலைகொள்ளச் செய்கிறது. ‘தலித் உணர்’ வாளர்களாக அறியப்படுபவர்களின் முகமூடிகள், அவர்களுடைய கொண்டாட்டக் குடியில் உருகி ஓடுவதை எழுத வேண்டியிருக்கிறது.

ஜூன் மாதம் 13,14 தேதிகளில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக, நானும், செல்மா பிரியதர்ஷன், யாழன் ஆதி மற்றும் லீனா மணிமேகலை ஆகியோர் ஒருங்கிணைத்த கவிதை நூல்கள் விமர்சனக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது. முதல்நாள் பிற்பகலில் தொடங்கிய முதல் அமர்வில் பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. யவனிகா ஸ்ரீராம் எழுதிய “திருடர்களின் சந்தை” கவிதை நூலின் விமர்சனக் கட்டுரையை மதிவண்ணன் முன்வைத்து விவாதப்புள்ளி ஒன்றைத் துவக்கிவைத்தார்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தைப் பேசுகின்ற யவனிகாவின் ஒரு கவிதையைக் குறிப்பிட்டுவிட்டு, “இதுதான் அரசியல் கவிதை, ஆத்மாநாமுக்குப் பிறகு யவனிகாதான் இத்தகைய அரசியல் கவிதையை எழுதியிருக்கிறார். சர்வதேச அரசியலைப் பேசுகின்ற இத்தகைய கவிதைகளை அனைவரும் எழுத முன்வர வேண்டும்” என்று அ. மார்க்ஸ் கூறுகிறார். அப்படியென்றால் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால் மட்டும்தான் அரசியல் கவிதையா? சாதி ஒழிப்பைப் பேசுவது அரசியல் கவிதை இல்லையா? இந்துத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? நாங்கள் அதைத்தானே எழுதிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? உள்ளூரில் நடக்கின்ற சாதிக்கொடுமை, சாதி இழிவு போன்றவற்றைப் பதிவுசெய்யாமல் சர்வதேச அரசியலை மட்டும் பேசுவது நியாயமா? யவனிகாவின் கவிதைகள் ஒன்றுகூட அவற்றைப் பற்றிப் பேசவில்லை. இதற்கு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன் என மதிவண்ணன் கேட்டார்.

அதற்கு செல்மா பிரியதர்ஷன் எழுந்து, “யவனிகா தலித் கவிதைகளை எழுதவில்லை என்பதாலேயே அவரைக் கவிஞர் இல்லையென்றோ அவருடைய கவிதைகளை அரசியல் கவிதைகள் இல்லையென்றோ ஒதுக்கிவிட முடியாது. மேலும் எதை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் படைப்பாளி. அது அவனுடைய சுதந்திரம். அவனிடம் ஏன் தலித் கவிதைகளை எழுதவில்லை என்று கேள்வி கேட்க முடியாது” என்று கூறினார்.

மீண்டும் மதிவண்ணன் தன் கேள்விகளைத் தெளிவாக முன்வைத்தார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கரிகாலன் எழுந்து “நாங்களும் தலித் உணர்வாளர்கள்தான், தலித் ஆதரவாளர்கள்தான். நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம். தலித் விஷயங்களைப் பதிவுசெய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

அப்போது கம்பீரன், “நீங்கள் தலித் உணர்வாளர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை வளர்க்கும்போது தலித்துகளைப் பற்றி ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி, சொல்லிச் சொல்லி வளர்த்திருப்பார்கள். அப்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களாகத்தான் நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில்தான் தலித் உணர்வுள்ளவர்களாக மாறியிருப்பீர்கள். அதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். ஆதிக்க உணர்விலிருந்து தலித் உணர்வுக்கு மாறிய கணத்தை ஏன் யாருமே இதுவரை பதிவுசெய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அரங்கத்தில் மீண்டும் சலசலப்பு. யாருமே பதிலளிக்கவில்லை. எனவே நான் எழுந்து “மதிவண்ணனும் கம்பீரனும் நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. நேர்மையான உங்கள் பதிலைத் தெரிவியுங்கள்” என்றேன்.

“பெண்ணியவாதிகளும் தலித்துகளும் அவரவர் பார்வையில் ஒரு பிரதியை அணுகுவது இயல்பானது. அப்படித்தான் அணுக முடியும். மதிவண்ணனும் யவனிகாவின் பிரதியை அவ்வாறே பார்த்துள்ளார். கேள்விகளைக் கேட்கக் கூடாது, தலித்துகளைப் பற்றி தலித்துகளே எழுதிக்கொள்ள வேண்டும் என்பது உங்கள் பதிலாக இருந்தால், எங்கள் எழுத்தை, எங்கள் விடுதலையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்றும் தெரிவித்தேன்.

பிறகு அ. மார்க்ஸ் பதில் கூறினார். “யவனிகாவின் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசிய விஷயங்களே தீராநதி கட்டுரையிலும் வந்திருந்தன. யவனிகா மட்டும்தான் அரசியல் கவிஞர் என்றோ அவர் கவிதைகள் மட்டும்தான் அரசியல் கவிதைகள் என்றோ குறிப்பிடவில்லை. யவனிகா ஏகாதிபத்தியத்திற்குள் ஊடாடும் அரசியலைக் கவிதையாக்கியிருக்கிறார்” என்று கூறினேன். மேலும் நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது பூரண விமர்சனத்தை முன் வைக்காமல் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. அது அவசியமும்கூட. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” மேலும் சில கட்டுரைகளின் வாசிப்போடு அவ்வமர்வு முடிந்தது. அமர்வு முடிந்தபின்னர் சிலர் மதிவண்ணன் அ. மார்க்ஸையே கேள்விகேட்டுவிட்டது பற்றித் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிரவு என்னை மதுவருந்த அழைத்தார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு என் அறையிலேயே இருந்தேன். அதே தளத்தில் இன்னொரு அறைக்குள் பலர் மதுவருந்திக்கொண்டிருந்தனர். அவர்களில் நட. சிவகுமார் மட்டும்தான் தலித் என்பதைப் பிற்பாடு அறிந்துகொண்டேன்; மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். இரவுக் கொண்டாட்டம் எடுக்க இருக்கும் ரூபங்களை முன்னுணர்ந்த சிலர் அவசரமாகக் கிளம்பி வெளியேறிவிட்டனர். கொண்டாட்டச் சத்தத்தால் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது அவர்களின் பேச்சு தலித்துகளின் பக்கம் திரும்பியது. “நாம் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மைப் போய் தலித்துகளுக்கு எதிராக எழுதுகிறோம் என்கிறார்கள். ஆதிக்கச் சாதியில் தலித்துகளுக்கு எதிராக யார் எழுதுகிறார்கள்” என்று திரும்பத் திரும்ப யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்த குரல் யாருடையது என என்னால் அறிய முடியவில்லை. குடியால் குரல் மாறியிருக்கலாம். “அவர்கள் கேட்பது நியாயம்தான். தலித்துகளைப் பற்றி நம் மனோநிலையை இதுவரை பதிவுசெய்திருக்கிறோமா? நேர்மையாகப் பதிவுசெய்யாதவரை நாம் எல்லோரும் ஆன்ட்டி தலித் தான், தலித்துகளுக்கு எதிராக யார் எழுதவில்லை என்று முதலில் சொல்லுங்கள். யார் எழுதினார்கள் என்று நான் பிறகு சொல்லுகிறேன்” என்று வாதிட்ட அந்தக் குரல் மட்டும்தான் தலித்துகளுக்கு ஆதரவாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குரல் கரிகாலனுக்குரியது.

இருந்தாலும் சுகிர்தராணி எப்படி அப்படிப் பேசலாம் என்றது இன்னொரு குரல். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டச் சத்தங்களுக்கிடையில் மதிவண்ணன் பற்றிய அவ தூறான பேச்சுகள் கேட்டன. அ. மார்க்ஸூக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்வி பலரை ஆழமாகச் சீண்டியிருந்தது உரையாடலில் வெளிப்பட்டது. எல்லாக் கூட்டங்களிலும் பிரச்சினை செய்பவர் அவர், எனவே அவரைப் பொருட்படுத்த வேண்டாம் என்றெல்லாம் பேசினார்கள். தலித்துகள் பற்றிய இழிவான பார்வை அவ்வுரையாடல்களில் ஊடாடியது. கீழ்த்தளத்தில் தங்கியிருந்த மதிவண்ணன் இவற்றை அறியவில்லை. கொண்டாட்டங்கள் நடந்த மேல்தளத்தில் என் அறைக்குப் பக்கத்து அறையிலிருந்த மதிவண்ணனின் மனைவி இந்த அவதூறுகளைக் கேட்டு இரவெல்லாம் அழுத கண்களுடன் காலை ஆறு மணிக்கு மதிவண்ணனை அழைத்துக் கொண்டு அவ்வரங்கை விட்டு வெளியேறினார். பிறகு என்னுடன் பேசிய மதிவண்ணனைச் சமூகத்தில் எதிர்கொள்ளும் அதே ஆதிக்கச் சாதி உணர்வுகள் இலக்கிய அரங்கிலும் வெளிப்பட்டதில் அவர் மனைவி அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டாட்டத்திற்குரிய குடி அங்கு ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான தலித்துகள் அக்கொண்டாட்டத்தில் இல்லாதபோது அவர்களைப் பற்றி விவாதித்தது நேர்மையற்ற செயலாகவே எனக்குத் தோன்றியது. ஆதிக்கத்தின் நனவிலி மனநிலையையும் தலித்துகளின் நனவு மனநிலையையும் அச்சூழலில் நேர்ப்படுத்த முடியாது என்பதால் அமைதி காத்தேன்.

முழுவதும் மதுவின் பிடியிலிருந்த ‘இளங்கவிஞர்’ ஒருவரின் ஆதிக்க மனோபாவத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கொண்டாட்டச் சூழலில் ததும்பிய தலித் எதிர்ப்பு மனோபாவத்தின் தொடர்ச்சியாக யாழன் ஆதி தங்கியிருந்த கீழ்அறைக்குச் சென்று தலித்துகள் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? கேட்கலாமா? என்று தாயைக் கேவலப்படுத்தும் வார்த்தைகளோடு ஏராளமான ஆபாச வசவுச் சொற்களைக் கொண்டு திட்டியிருக்கிறார் அந்த ‘இளங்கவிஞர்’. யாழன்ஆதி நிதானமாக இருந்ததால் சூழலைக் கருதி அவரும் அமைதி காத்திருக்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு லீனா மணிமேகலையும் செல்மாவும் யாழனைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசிய ‘இளங்கவிஞரை’ நீங்கள் அடிக்க வேண்டியதுதானே என்று கேட்டிருக்கிறார்கள். கருத்தியல்ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கும் தலித் படைப்பாளிகளை வன்முறையாளர்களாக மாற்றி, அவர்களைக் காலிசெய்யும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது.

தலித்துகள் இவ்வளவுதான் கேட்க வேண்டும், பேச வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான். ஆகவே தற்போதைய இலக்கியக் கூட்டங்கள் முடிந்ததும் நடந்து வருகின்ற குடி இரவுகள் பெரும்பாலும் சாதியைக் கட்டிக்காக்கின்ற, ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற, வன்மத்தை வளர்க்கின்ற இரவுகளாக முகம் காட்டுகின்றன. பலரின் ‘தலித் உணர்வு’ போலிமுகத்தையும் தோலுரித்துக்காட்டுகின்றன.

பிறகு ஒருநாள் அந்த ‘இளங் கவிஞர்’ என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தான் தலித்துகளை ஆபாசமாகத் திட்டவில்லை என்றும் அப்படித் திட்டியிருந்தால் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். நானும் மன்னித்துவிட்டேன். ஆதிக்கச் சாதியினர் தலித்துகளிடம் மன்னிப்பு கேட்பதேகூட தலித் விடுதலையின் அறிகுறிதான்.


Thanks: KALACHUVADU (AUG, 2009)

5 comments:

வளர்மதி said...

டிசே,

இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து நண்பர் மதிவண்ணன் மூலம் சில நாட்களிலேயே அறிந்திருந்தேன். அ. மா வைக் கேள்வி கேட்டதன் பலனாக அன்றிரவு முழுதும் அவர் மீது தொடுக்கப்பட்ட வசவுகள் பற்றிய செய்தி உட்பட :(

ஆனால், இது குறித்து சுகிர்தராணி பேசுவது நகைப்பையே வரவழைக்கிறது. லீனாவும் சுகிர்தராணியும் இணைந்து அரங்கேற்றிய அற்பத்தனங்கள் பல. இன்று அவர்களுக்குள் பிளவு. விளைவு தருணம் பார்த்து இக்கட்டுரை.

கிசுகிசு கட்டுரை என்பதுபோக வேதகால சமூகம், பௌத்தம், குடிக்கும் தலித் கலாச்சாரத்திற்குமான உறவு பற்றிய அபத்தங்கள் விரவியிருப்பது சுகிர்தராணியின் அரசியல் 'தெளிவைக்' காட்டுபவை.

சேர்ந்து கூத்தடித்த கும்பல்கள் தமக்குள் அடித்துக் கொள்கின்றன. ‘கடவு' நிகழ்வும் சேர்த்தே சொல்கிறேன். இதற்கு சுகிர்தராணிக்கு ‘தலித்' முகமூடி. அவ்வளவே! அதுவும் பாப்பாரப் பத்திரிகையில்.

DJ said...

வ‌ள‌ர்,
ம‌திவ‌ண்ண‌னும், யாழ‌ன் ஆதியும் த‌லித் என்ற‌ அடையாள‌த்தை ம‌ட்டுமே வைத்து அவ‌மான‌ப்ப‌டுத்த‌ப‌ட்ட‌போது, ந‌ம‌து த‌லித்/க‌ல‌க‌ப் போராளி என்ன‌ செய்துகொண்டிருந்தார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன். சில‌வேளை சென்னையில் நிக‌ழ்ந்த‌ அடுத்த‌ நிக‌ழ்விற்காய் இல‌ங்கைத் தேசிய‌க்கீத‌த்தை ம‌ன‌ன‌ம் செய்துகொண்டிருந்த‌தால் இந்நிக‌ழ்வை ம‌ற‌ந்தாரோ/ம‌றைத்தாரோ தெரியாது. இவ‌ர்க‌ளெல்லாம் வாய்ச்சொல்லில் வீர‌ர் என்ப‌தும‌ட்டும் தெளிவாக‌த தெரிகிறது.
....
'இள‌ங்க‌விஞ‌ரை'த் திருப்பி ஏன் அடிக்க‌வில்லையென‌ யாழன் ஆதியிட‌ம் கேட்ட‌ லீலாவும் செல்மாவும், ஏன் இள‌ங்க‌விஞ‌ருக்கு அவ‌ர்க‌ளே அடித்திருக்க‌கூடாது? அப்ப‌டி அடிக்காத‌த‌ற்காய் இவ‌ர்க‌ள் அல்ல‌வா வெட்கித் த‌லைகுனிந்திருக்க‌வேண்டும்?
.....
கிடைக்கிற‌ செய்திக‌ளைப் பார்த்தால், அ.மார்க்ஸ் குரு வ‌ழிபாடு, சுராவை மிஞ்சிப்போகின்ற‌து போல‌.ஒவ்வொரு கால‌க‌ட்ட‌த்திலும் இப்ப‌டியே யாரோ ஒருவ‌ரை குருபீட‌ங்க‌ளிலேற்றி ஏற்றி அழித்துவிட‌வேண்டிய‌துதான்.

அருண்மொழிவர்மன் said...

இலக்கியக் கூட்டங்களில் என்றல்லாது, எந்த இடத்திலும் இப்படியான குடித்தல், கொண்டாட்டங்கள் நடை பெறூம்போது குடித்த பின்னர் பலரின் செயற்பாடுகளே மாறிவிடுகின்றது. உண்மையில் அவர்கள் அணிந்திருந்த முகமூடி கிழிந்து விழ, அதன் பின் மனதில் இருக்கும் வக்கிரங்கள் தலை விரித்தாடுகின்றன. அது போலத்தான் இந்துவும். பலர், என்னதான் தம்மை எழுத்தாஆள்ர், முற்போக்கானவர்கள் என்றூ அறிவித்துக் கொண்டாலும், அவர்கள் மனதுக்குள் இருக்கின்ற சாதீயம் சார்ந்த வக்கிரங்கள் குடித்தலின் பின்னர் தெளிவாகிவிடுகின்றன.

வளர்மதி said...

அந்த மனுசருக்கு சுயஅரிப்பு பல வருஷங்களுக்கு முன்னமே பிடித்துவிட்டது. பல வழிகளில் அதை சுட்டிக் காட்டி விமர்சிக்க முனைந்தபோது, உறவில் விரிசல்தான் ஏற்பட்டது. வெறுத்து ஒதுங்கிக் கொண்டேன். ஒதுங்கி வந்து எட்டு வருடங்கள் ஆன பின்னும் ‘காலைச் சுற்றிய பாம்பு' கணக்காய் இன்னமும் அவரோடு பழகியதற்கான மோசமான பலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது :(

அன்று இரவு நடந்த சம்பவங்களை மறைத்து அக்கூடல் குறித்து தீராநதியில் எழுதியிருந்ததை நீங்கள் வாசித்தீர்களா என்று தெரியவில்லை. இரவுக் குடி நிகழ்வுகளில் தனக்குப் பிடிக்காதவர்களை வசைபாடும் கூட்டத்துடன் 'கொண்டாடுவது' அவருடைய நீண்டநாள் வழமை. இதற்கென்றே சுற்றும் ஜால்ராக் கூட்டமும் ஒன்று உண்டு.

இதுபிடிக்காமல் விலகிச் செல்பவர்களுக்கு ஒன்று ‘அவன் பார்ப்பான்' அல்லது ‘அவன் பார்ப்பானோட சுத்துறான்' என்ற வசைமழைகளே - அதுவும் வருடக் கணக்கில் - கிடைத்திருக்கின்றன.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக இதே போன்று பொ. வேல்சாமியையும் தனது சிஷ்யகோடிகளை வைத்து அவமானப்படுத்திய சம்பவமும் நடந்தது. கடும் எரிச்சலாகி அவர், பாஸ்போர்ட்டைப் பறித்து ஆளை இங்கேயே முடக்கி வைக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கத் துணிந்தார். கோபம் தணிந்தபின், பரிதாபம் பார்த்து விட்டுவிட்டார். இதுபோல பல சம்பவங்கள் :(

இம்முறை சாதியும் கலந்திருப்பதால் பெரிதாகியிருக்கிறது. சுகிர்தாவின் 'சுயநல நோக்கங்களைக்' கழித்துவிட்டு, இச்சம்பவம் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்றே.

இதில் இன்னொரு விஷயம் ‘குரு வழிபாடு' அவர்மீது ஏற்றி வைக்கப்பட்டது மட்டுமல்ல. அவரும் அதை விரும்புகிறார் என்பதே. அதற்காக எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கிறார் என்பது இன்னொரு ஆகக்கேவலம் :(

DJ said...

அருண்,
நீங்க‌ள் ச‌ரியாக‌வே குறிப்பிட்டிருக்கின்றீர்க‌ள். ஏதோ தாங்க‌ள் வித்தியாச‌மாய்ச் சிந்திக்கின்றோம் என்று பித‌ற்றுப‌வ‌ர்க‌ளிடையே ஆழ‌ப்புதைந்திருக்கும் சாதிய‌த்தின் வேர்க‌ளை இவ்வாறான‌ பொழுதுக‌ளில் தெளிவாக‌வே அடையாள‌ங் க‌ண்டுகொள்ள‌ முடியும்.
....
வ‌ள‌ர்,
நீங்க‌ள் குறிப்பிட்ட‌ அ.மார்க்ஸின் தீராந‌திக் க‌ட்டுரையை ஜூலை இத‌ழில் வாசித்திருக்கின்றேன். அதில் இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்ற‌தற்கான‌ எந்த‌க் குறிப்பையும் எழுதாது அ.மார்க்ஸ் க‌வ‌ன‌மாக‌த் த‌விர்த்திருக்கின்றார் என்றுதான் கூற‌வேண்டும்.
....
இதில் அ.மார்க்ஸ் ம‌ட்டுமில்லை, பெருந்த‌லைக‌ளாக‌த் த‌ங்க‌ளைத் த‌க்க‌வைக்கும் ப‌ல‌ருக்கு, அவ‌ர்க‌ளாலும் அவ‌ர் த‌ம் ப‌ப‌க்த‌ கோடிக‌ளாலும் நிக‌ழும் வீழ்ச்சியே இது. அண்மையில் ஒரு ப‌டைப்பைப் முன்வைத்து என‌து வாசிப்பை எழுதிய‌போது... நீயெல்லாம் இந்த‌ப்ப‌டைப்பாளியின் அள‌வுக்கு எழுதாம‌ல் எப்ப‌டி விம‌ர்சிக்க‌ முடியும் என்றும், பிர‌பல்ய‌ம் தேடுவ‌த‌ற்காய் எழுதுகின்றான் என‌வும் என் மீது குற்ற‌ச்சாட்டு வைக்க‌ப‌பட்டிருக்கிற‌து. ந‌ம‌க்கெல்லாம் இதெல்லாம் புதுசா என்ன‌ :-).