Friday, February 05, 2010

ஆயிர‌த்தில் ஒருவ‌ன்: சாருவின் அப‌த்த‌ உள‌ற‌ல்க‌ள்

'ஆயிர‌த்தில் ஒருவ‌ன்' ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் பார்த்த‌போது, க‌ற்ற‌து த‌மிழுக்கு வ‌ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளே நினைவிற்கு வ‌ந்த‌ன‌. ஒருசாரார் அதிக‌ம் புக‌ழ‌வும் இன்னொரு சாரார் வைய‌வும் என‌... க‌ட‌ந்த‌கால‌த்தில் க‌ற்ற‌து த‌மிழுக்கு நிக‌ழ்ந்த‌தே ஆயிர‌த்தில் ஒருவ‌னுக்கு நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. சில‌ க‌ருத்துக்க‌ளோடு உட‌ன்ப‌டாவிட்டாலும் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றி(நான் வாசித்த‌ளவில்) சுகுணா திவாக‌ர், அபிலாஷ் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ட்டுரைக‌ள் முக்கிய‌மான‌வை. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் குறித்து ந‌ண்ப‌ர்க‌ளுடான‌ என் ப‌கிர்த‌ல்க‌ளை சிறுசிறு துண்டு ரூவிற்ற‌ர்களை இர‌ண்டு சிறு ப‌திவுக‌ளாக‌ தொகுத்திருக்கிறேன். சாரு நிவேதிதாவின் ஆயிர‌த்து ஒருவ‌ன் ப‌ற்றிய‌ மிகுந்த‌ அப‌த்த‌மான‌ உயிர்மைக் க‌ட்டுரையைப் பார்த்த‌பின், சிலவ‌ற்றையாவ‌து உட‌ன‌டி எதிர்வினையாக‌ முன்வைத்த‌ல் அவ‌சிய‌மென‌ப்ப‌டுகிற‌து.

சாரு குறிப்பிட்ட‌ பிற‌ (ஆங்கில‌) திரைப்ப‌ட‌ங்க‌ளின் பாதிப்புக்க‌ளை ஏற்க‌ன‌வே ப‌ல இட‌ங்க‌ளில் குறிப்பிட்டு ப‌ல‌ர் எழுதிய‌தால் அவ‌ற்றைத் த‌விர்த்தே எழுதுகின்றேன். முக்கிய‌மாய் இரும்பு உருண்டையில் க‌யிற்றைக் க‌ட்டிய‌டிக்கும் (கிளேடியேற்ற‌ர்) காட்சியைக் கூட‌ த‌மிழ்ச்சூழ‌லிற்கு ஏற்ப‌ மாற்ற‌ முய‌லாத‌ செல்வ‌ராக‌வ‌னின் ப‌டைப்பு ம‌ந்த‌த்தை எல்லாம் ஏற்றுக்கொண்டே சாருவின் ப‌திவிற்கு எதிர்வினையாற்றுகிறேன்.

வ‌ர‌லாற்றில் ந‌ம‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ சோழ‌ர்க‌ளின் பொற்கால‌ம் என்ப‌து குறித்து நிறைய‌க் கேள்விக‌ள் பிற்கால‌த்தில் எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வ‌ள‌வு பெரிய‌ இராஜ்ஜிய‌த்தைக் க‌ட்டிய‌மைத்த‌ சோழ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு நிச்ச‌ய‌ம் இர‌த்த‌த்தாலே நிறைந்திருக்கும் என்ப‌து சொல்லாம‌லே எவ‌ருக்கும் புரியும். அவ‌ர்க‌ள் க‌ட்டிய‌ மிக‌ப்பெரும் கோயில்க‌ளிலேயே எத்த‌னை அடிமை ம‌க்க‌ளின் இர‌த்த‌மும் விய‌ர்வையும் உறைந்துகிட‌க்கும் என்ப‌து நாம் அறியாத‌தும‌ல்ல‌.

அவ்வாறான‌ ஒரு சோழ‌ ப‌ர‌ம்பரையில் வ‌ந்த‌வ‌ரை சாரு...
"சோழ மன்னன் தன் குடிமக்களை அடித்துக் கொல்லுகிறான்; வெட்டிச் சாய்க்கிறான். நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டியை விடக் கேவலமாக நடந்து கொள்கிறான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மன்னன் ஒரு காவிய நாயகனைப் போல் படத்தின் பிரதான பாத்திரமாகவும், பார்வையாளர்களின் கருணையைக் கோருபவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது எப்படி? நம்முடைய இதிகாச நாயகன் ராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு காட்சியில் ஏக பத்தினி விரதனாகவும், இன்னொரு காட்சியில் தன் குலப் பெண்டிரையே வன்புணர்ச்சி செய்பவனாகவும் சித்தரித்தால் எப்படி இருக்கும்? அதேதான் சோழ மன்னனின் பாத்திரப் படைப்பில் நடந்திருக்கிறது."
என்றெழுதுகின்றார். ஏன் அவ்வாறு இருக்க‌முடியாது என்றொரு கேள்வியை நாம் சாருவிட‌ம் திருப்ப‌ எழுப்ப‌ வேண்டியிருக்கிற‌து? வ‌ர‌லாற்றில் பேர‌ர‌சுக‌ளை க‌ட்டியெழுப்பிய‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே தாம் சார்ந்த‌ ப‌குதியின‌ருக்கு திரு உருக்க‌ளாக‌வும், பிற‌ருக்கு கேவ‌ல‌மாக‌வும் ஆகிய‌து ய‌தார்த்த‌ம் என்றால், மாபெரும் பேர‌ர‌சைக் க‌ட்டிய‌ சோழ‌ர்க‌ளும் ஏன் அப்ப‌டி இருந்திருக்க‌முடியாது? ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் பிரிக்க‌முடியாது அல்ல‌து ந‌ல்ல‌தும் கெட்ட‌தும் இணைந்திருப்ப‌தே இய‌ல்பான‌து என்று எத்த‌னையோ சிந்த‌னையாள‌ர்களை ப‌டித்துக் க‌ரைத்த‌தாய்க் கூறும் சாருவால் ஏன் இதை விள‌ங்கிக்கொள்ள‌முடியாது இருக்கின்ற‌து. த‌ன்னையொரு 'பின்ந‌வீன‌த்துவ‌வாதி'யாக‌ ம‌ட்டுமின்றி, 'பின் ந‌வீன‌த்துவ‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்' என்று பிற‌ரையும் சுட்டிக்காட்டுகின்ற‌ சாருதான் ஒரு க‌தாபாத்திர‌ம் ந‌ல்ல‌தாக‌/உய‌ர்ந்த‌தாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்க‌வேண்டும் என்று அடித்துக்கூறுகிறார். ஆக‌ இதுநாள் வ‌ரை எழுதிய‌து/வாசித்த‌தும் எல்லாம் பட‌ங்காட்ட‌த்தானா சாரு?

அடுத்து, "இந்திய ராணுவமே ஏதோ கூலிப்படையைப் போலவும், சினிமாவில் வரும் அடியாள் கூட்டத்தைப் போலவும்தான் காண்பிக்கப்பட்டிருக்கிறது."
இதில் சாருவிற்கு ஏன் க‌வலை வ‌ருகின்ற‌து?. இந்திய‌ இராணுவ‌ம் கூலிப்ப‌டை போல‌ த‌ன்னைச் சுற்றியிருக்கும் நாடுக‌ளில் ந‌ட‌க்க‌வேயில்லையா? நான் யதார்த்தில் ஈழ‌த்தில் பார்த்த‌ இந்திய‌ இராணுவ‌ம் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் கூலிப்ப‌டையை/அடியாள் கூட்ட‌த்தை விட‌வும் மிக‌வும் மோச‌மாக‌த்தானே இருந்திருக்கிற‌து? உண்மையை உண்மையாய்ச் சொன்னால் சாருவிற்கு வ‌லிக்கிற‌து என்கின்ற‌போது அவ‌்ர் அண்மைக்காலமாய் அருந்திவரும் அருட்பாலில் 'இந்திய‌த் தேசிய‌ப் பாலையும்' கொடுத்துவிட்டாரோ என்றூதான் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கிற‌து. தேசிய‌ப்பாலிற்காவ‌து ஏதாவ‌து விஷ‌ம் கொடுத்து இற‌க்கி வைக்க‌லாம். ஆனால் சாருவிற்கு உதார‌ண்க்காட்ட‌ வேறு ஒருவ‌ருமில்லாது இராம‌னே வ‌ர‌வேண்டியிருந்த‌தால், வ‌ந்திருக்கும் இந்துத்துவ‌க் காய்ச‌லிற்கு எந்த‌ ஊசி குத்துவ‌து என்றும் தெரிய‌வில்லை? அது கூட‌ப்ப‌ர‌வாயில்லை சோழ‌ர‌து காலமாவ‌து வ‌ரலாற்றில் இருந்திருக்கிற‌து, க‌ட‌வுளான‌ இராம‌ரின் க‌தையெல்லாம் 'இதிகாச‌ங்க‌ளிற்கு' ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டும்.

மேலும்,"நீலப் படங்களில் fetish என்ற ஒருவகை படம் உள்ளது. அதில் சிறுநீரைக் குடிப்பார்கள். இன்னும் அதுபோல் கற்பனைக்கே எட்டாதபடி கண்ட கண்ட கண்றாவியெல்லாம் வரும். அந்த ஃபெடிஷ் ரக நீலப் படங்களை ஞாபகப்படுத்தும்"
அட‌டா சாரு நீங்க‌ள் முன்பு நீங்க‌ள் எழுதிய‌வ‌ற்றின் பிர‌க்ஞையோடு தான் இதையெல்லாம் எழுதுகின்றீர்க‌ளா? உங்க‌ளின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில்' ஒரு ப‌தின்ம‌க்காரியை மூத்திர‌ம் பெய்ய‌ச் சொல்லி அதை ந‌க்க‌ விரும்புகின்ற‌ பாத்திர‌ப் ப‌டைப்பு 'க‌லைத்துவ‌மாக‌' இருக்கும்போது ஏன் உங்க‌ளிற்கு ரீமா சென் நின்ற‌ப‌டியே மூத்திர‌ம் பெய்வ‌து எரிச்ச‌லூட்டுகிறது; நீல‌ப்ப‌ட‌ங்க‌ளை நினைவுப‌டுத்துகிற‌து. ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யை(The Story of Eye) வாசித்துக் கொண்டுமா இப்ப‌டிக் கூசாம‌ல் சிறுநீரைக் க‌ழிப்ப‌தையெல்லாம் fetish வ‌கைக்குள் உள்ளட‌க்குவீர்க‌ள்? உன்ன‌த‌ ச‌ங்கீத‌த்தில் சிறுநீரைக் க‌ழித்தால் விழியின் க‌தையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னைப் பார்த்தால் fetish வ‌கையும் நினைவுக்கு வாச‌க‌ருக்கு/பார்வையாள‌ருக்கு வ‌ர‌வேண்டும் என்று நினைவூட்டுவ‌து கூட‌ ஒருவ‌கை வ‌ன்முறைதான்.

இன்னும் சாரு, "ஆயிரத்தில் ஒருவன் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட படம் என்பதால் இடையில் பிரபாகரனின் மரண சம்பவம் வேறு நிகழ்ந்து விட்டதால் கதை திடீரென்று பாதை மாறி இலங்கைத் தமிழர் பிரச்சினையின் பக்கம் நகர்ந்து விடுகிறது. புலிக்கொடி தாங்கிப் போராடும் சோழர்கள் புலிகள். அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம். புலிகளைக் கொன்று குவித்து, அவர்களின் பெண்களைக் கற்பழிக்கும் இந்திய ராணுவம். என்ன ஒரு வரலாற்றுப் பார்வை! அப்படியானால், இந்திய ராணுவம் சோழனின் குடிமக்களை என்ன செய்ததோ அதைத்தானே சோழ மன்னனும் செய்தான்? மிகக் கொடூரமான காட்டுமிராண்டியாகத்தானே சோழ மன்னனைப் படைத்திருக்கிறார் இயக்குனர்? அவனுக்கும் இந்திய ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம்? காவிய நாயகன் இறுதிக் காட்சியில் சாகும் போது நமக்குள் கண்ணீரல்லவா சுரக்க வேண்டும்? பதிலாக சோழ மன்னன் சாகும் போது ‘இது என்னடா பெரிய மண்டைக் குடைச்சலாக இருக்கிறது? ’ என்ற மன உளைச்சலே ஏற்படுகிறது. அதுவும் தவிர, இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் என்றால், விடுதலைப் புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?"
இல்லாத‌ வாசிப்பை இருக்கிற‌து போல‌ச் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்கு மேலேயுள்ள‌துதான் பொருத்த‌ம். செல்வ‌ராக‌வ‌னே த‌ன‌து ப‌ட‌ப்பிடிப்பு ஈழ‌ப்போர் ந‌ட‌க்க‌முன்ன‌ரே முடிந்துவிட்ட‌து என்று கூறியிருக்கிறார் என்று அறிகிறேன். ஆனால் பார்ப்ப‌வ‌ருக்கான‌ எல்லை விரிந்துள்ள‌து என்ப‌தை ஒப்புக்கொண்டு ஆயிர‌த்தில் ஒருவ‌னை ஈழ‌த்து வ‌ர‌லாற்றோடு ஒப்பிடுப‌வ‌ர்க‌ளை ம‌றுக்க‌வும் முடியாது (என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்தாய் இது ஈழ‌த்தின் வ‌ர‌லாற்றோடு ஒப்பிட‌முடியாது என‌த்தெளிவாக‌ எழுதியிருக்கிறேன்).

ஆனால் ஒரு பேச்சுக்கு சோழ‌ ப‌ர‌ம்ப்ப‌ரைதான் விடுத‌லைப்புலிக‌ளாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்தால் கூட‌ அதிலென்ன‌ த‌வ‌றிருக்கிற‌து என்று, சாரு மேலே எழுதிய‌தை வைத்து புரிந்துகொள்ள‌ முடிய‌வில்லை. இந்திய‌ இராணுவ‌ம் ஈழ‌ம் போன்ற‌ சிறு நாடுக‌ளில் ம‌ட்டுமில்லை, ம‌ணிப்பூர் காஷ்மீர் ப‌குதிக‌ளிலும் பெண்க‌ளிட‌ம் அத்துமீறியிருக்கிற‌து. ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ம் காடுக‌ளில் வீர‌ப்ப‌ன் வேட்டை என்று  ஆதிவாசிப் பெண்க‌ளிட‌ம் இந்திய‌ இராணுவ‌ம் அதிர‌டிப்ப‌டை எந்த‌ 'வேட்டை'யை ந‌ட‌த்திய‌து? (பால‌முருக‌னின் 'சோளகர் தொட்டி'யை வாசித்தால் 'அதிர‌டிப்ப‌டை' என்று எழுத‌வே இந்திய‌த் த‌மிழ‌ரிற்கு கூச்ச‌ம் வ‌ர‌வேண்டும்). இதே இராணுவ‌ந்தான் போராடும் இய‌க்க‌ங்க‌ளை மிக‌ மோச‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ஒடுக்கியிருக்கிற‌து. புலிக‌ள் அழிக்க‌ப்ப‌ட்ட‌தைப் பாட‌மாக‌ வைத்துக்கொண்டு மாவோயிஸ்டுக்க‌ளை கோர‌மாக‌ அழிக்க‌ இந்திய‌ இராணுவ‌ம் இப்போது ஓட‌வில்லையா? ஆக‌வே செல்வ‌ராக‌வ‌ன் ச‌ரியாக‌த்தான் இந்திய‌ இராணுவ‌த்தை சித்த‌ரித்திருக்கின்றார். அதே ச‌ம‌ய‌ம் சோழ‌ர்தான் புலிக‌ள் என்ற‌ க‌ருத்தை வைப்பவ‌ர்க‌ளின் க‌ருத்தை ஏற்றுக்கொண்டால் சோழ‌ன் போல‌ புலிக‌ளின் வ‌ர‌லாறும் அவ்வ‌ளவு ஒன்றும் புனித‌ம‌ல்ல‌ என்றுதானே செல்வ‌ராக‌வ‌ன் கூறியிருக்கின்றார் என்றும் எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ந‌ம‌து சாருவிற்கு "புலிகள் மற்ற தமிழ்ப் போராளி இயக்கத்தினர் மீது நடத்திய வன்முறையை என்னவென்று சொல்வது?" என்று உட‌னே அறிவுஜீவிக் கொம்பு முளைத்துவிடுகிற‌து. அட‌ முட்டாள் ம‌னுசா சோழ‌ன் த‌ன் அடிமைக‌ளைக் கொலை செய்ய‌விட்டு மகிழ‌வில்லையா என்ன‌??

இந்த‌ச் சாருதான் ஈழ‌த்தின் இறுதிப்போரின்போது க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதித்த‌வ‌ர் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் எடுக்க‌வேண்டும். அதைவிட‌ உன்ன‌த‌ ச‌ங்கீதத்தில் இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ள‌ப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ல்லுறவு செய்வ‌தாய்ச் ச‌ம‌கால‌த்தின் வ‌ர‌லாறே தெரியாம‌ல் எழுதிய‌வ‌ர்; இன்று  செல்வ‌ராக‌வ‌னிற்கு சோழ‌ரின் வ‌ர‌லாறு தெரியாது என்று பாட‌ம் ந‌ட‌த்துகிறார். எழுதுவ‌த‌ற்கு ஓரிட‌ம் இருக்கிற‌து என்ப‌த‌ற்காய் தான் எழுதிய அனைத்தையும் வ‌ச‌தியாய் மூடிம‌றைத்துவிட்டு எழுதுவ‌து எந்த‌வ‌கையில் அறஞ்சார்ந்த‌ நியாய‌ம்?

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ மிகுந்த‌ அப‌த்த‌மாய் அவ‌தார்(Avatar) ப‌ட‌த்தை உய‌ரிய‌ ப‌டைப்பாய் வைத்து ஒப்பிடுவ‌து. அவ‌தாரில் கூற‌ப்ப‌டுவ‌து எல்லாம் இங்கே ஆதிக்குடிக‌ளின் வாழ்க்கை முறைய‌ல்ல‌வா? வெள்ளையின‌ வெறி இதைத்தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆதிக்குடிக‌ளிற்கு செய‌தது? ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் கூட‌ தேவையில்லை, ஆதிக்குடிக‌ள் ப‌ற்றிய‌ சாதார‌ண் ஒரு க‌ட்டுரையை வாசித்தால் கூட‌ க‌ம‌ரூன் அவ‌தாரில் குறிப்பிடுகின்ற‌ விட‌ய‌ங்க‌ளை (being so close with nature) அறிந்துகொள்ள‌லாம். இதை (Avatar) ஏதோவோர் மாஸ்ர‌ர் பீஸ் போல் எழுதுகின்ற‌ சாருவை என்ன‌ செய்ய‌? வெள்ளையின‌ வெறியை நேர‌டியாக‌க் காட்ட‌க்கூட‌ வ‌க்கில்லாத‌ க‌ம‌ரூன் இப்போது Global Warming மாற்ற‌த்தால் தாங்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட‌ப்போகின்றோம் என்ப‌த‌ற்காய் ஆதிக்குடிக‌ளை ஒரு  க‌ச்சாய்ப்பொருளாய் பாவித்து எந்த‌ வெட்க‌முமின்றி 'உய‌ரிய‌ ப‌டைப்பாய்' எடுக்கிறார்   சாருவிற்கு நாங்க‌ளும் உல‌க‌ வ‌ரலாறு ப‌டிக்க‌ ப‌ரிந்துரைக்க‌த்தான் வேண்டுமா? அதுவும் அவ‌தாரில் இறுதியாய் இவ‌ர்க‌ள்தான் போய் அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றுவார்க‌ளாம்? அமெரிக்கா, க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளை ஆக்கிர‌மித்த‌ வெள்ளையின‌த்த‌வ‌ரில் ஏவ‌ரேனும் ஒருவ‌ர் இப்ப‌டி மாறி அந்த‌ ம‌க்க‌ளைக் காப்பாற்றியிருந்தால் அந்த‌ ம‌க்க‌ள் இந்த‌ளவு கொடுமையான‌ வாழ்வை இன்று தேர்ந்தெடுக்க‌வேண்டி வ‌ந்திருக்காது அல்ல‌வா? ஆக‌க்குறைந்து அவ‌ர்க‌ள் எப்ப‌டி இய‌ற்கையை தெய்வ‌மாக‌, ப‌ரிசுத்த‌ பொருளாய்ப் ப‌ய‌ன்ப்டுத்தினார்க‌ள் என்று க‌ற்றுக்கொண்டிருந்தால் 'இன்று அய்யோ உல‌க‌ம் கால‌நிலை மாற்ற‌ங்க‌ளினால் அழிய‌ப்போகின்ற‌து' என்று க‌த‌றிக்கொண்டிருக்க‌ வேண்டியிருக்காது? இந்த‌ எந்த‌ புரித‌லில்லாம‌ல் சாரு அவ‌தாரை ஆகா ஒகோவென்று புக‌ழும்போது வ‌ரும் எரிச்ச‌லில் எங்க‌ள் த‌லையை எங்கே கொண்டுபோய் இடிப்ப‌து? (அவ‌தாரை நான் முற்றுமுழுதாக‌ நிராக‌ரிக்க‌வில்லை; அவ‌தார் ப‌ற்றிய‌ உரையாட‌லைத் தொட‌க்க‌ இக்க‌ட்டுரையை வாசிக்க‌ப் ப‌ரிந்துரைக்கிறேன்)

ஆக‌ இத்த‌கைய‌ அப‌த்த‌ங்க‌ளைக் கொண்டு எழுத‌ப்ப‌ட்ட‌ சாருவின் க‌ட்டுரையை 'சாருவின் பாணியிலேயே' நாம் கிழித்தெறிய‌லாம். இன்னும் நிறைய‌ விவாதிக்கலாம். இப்போதைக்கு இது போதும்; வேறு 'உருப்ப‌டியான‌' வேலைக‌ள் எங்க‌ளுக்கும் இருக்கிற‌து.

(இது ஆயிர‌த்தில் ஒருவ‌ன் ப‌ற்றிய‌ ப‌திவ‌ல்ல‌; சாருவின் க‌ட்டுரை மீதான‌ எதிர்வினை என்ப‌தைக் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும்)

ஆயிர‌த்தில் ஒருவ‌ன் (Twitter)

9 comments:

Suresh said...

சாருவிற்கு நீங்கள் ஆற்றியுள்ள எதிர்வினையில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்து உள்ளது. அவர் எழுப்பும் முக்கியமான கேள்விகளுள் ஒன்று: பார்வையாளர்களின் கருணையைக் கோருபவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது எப்படி?
இதே கேள்வியைத்தான் சுகுணாவும் கேட்டார் (அவரின் விமர்சனம் பாதிக்குமேல் பேத்தல் என்பது என் கருத்து). கதையின் ஓட்டம் இனிமேல் கார்த்திக்கின் இடத்திலிருந்து நிகழ உள்ளது, அதற்கு முக்கிய காரணம் இறுதியில் சோழப் பெண்களுக்கு நடக்கும் கொடுமை. அதை விடுத்துப் பார்த்தல் கதை சோழர்களின் பக்கம் சாய எந்த முகாந்திரமும் இல்லை. ஆக கதாபாத்திரங்கள் ஒருமுகக் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டுமா என்பது இங்கே கேள்வி அல்ல. எம்மாதிரியான காதபாதிரங்களின் செயல்கள் பார்வாயாலர்களின் இசைவப் பெற -- to manipulate who they identify with -- அவர்களின் 'குறைகள்' பூசிமேளுகப் படுகின்றன என்பதே.

இந்திய ராணுவம் பற்றிய கேள்வியும் வேறுவகையான, தர்க்கம் சார்ந்த கேள்வியே: பாண்டிய வம்சாவளியில் வந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தில் எவ்வளவு செல்வாக்கு? இந்திய அரசிற்குத் தெரியாமல் இந்திய ராணுவம் இம்மாதிரியான operation'களை மேற்கொள்கிறார்களா? தெரிந்துதான் என்றால், இந்திய அரசிற்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கும், யாருக்குமே தெரியாத 'பழங்குடிகளை' அளிப்பதன் நோக்கம் என்ன? வெறும் பயிற்சி என்று தயவு செய்து சொல்லாதீர்கள், அம்மாதிரி sophistication'ம் காட்டப்படவில்லை.

அதேபோல் இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களைத் திணித்ததும் வெறும் manipulative தந்திரமே. இந்தி திரைபடம் ஜோதா அக்பர் பற்றி எழுதுகையில் இந்த விமர்சனத்தை முன்வைத்தேன்:
In movies of this kind, what makes anything admirable or interesting , as far as ideological make up of the characters is concerned, is when the characters are more true to the historical figures they are based on. That is, you might be in awe of a 16th century woman (although, personally, I don't find it all that fascinating. We have several examples of this kind) who actually did what is shown in the movie. Either that or when the movie itself is old. That is, if this movie had been released in the 60s, you might surprised by the 'modern' touch in the characters' behaviour. But that's not the case at all. How hard is it to make some 'secular', pseudo-feminist, 'modern' ideals and make them get acted out in some farcical historical setup?

We long ago reached a point where movie makers had developed the pretentious "courage" to throw in pseudo-revolutionary ideas. (This might point makes more sense when you consider some 'truly' revolutionary movies of the 70s.) He wants to make a movie with ideas that can be easily sold among the educated, middle class Indian crowd. Heck, even the 'masala' movies show women beating the crap out of men. I don't know why nobody thinks that is "refreshing". The masala movie heroine is no more fictional than Jodhaa in JA.

He might as well have shown Akbar devising a constitution that allowed for democratic elections. May be open a few universities and appoint Jodhaa as a professor (you know, make her really "smart") in it. That would have been even more interesting. If he is not going to give damn about what actually happened why stop with one or two corny ideals?

http://englishtamil.blogspot.com/2008/02/jodhaa-akbar.html
(contd..)

Suresh said...

ஆக இந்திய ராணுவம் இது போன்ற கொடுஞ்செயல்களை செய்ததில்லையா என்பது கேள்வி அல்ல, அவர்களுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்பதே. இரண்டு காராணங்கள்:
1. பெருவாரியான (தமிழ்) சாமானியர்களுக்கிடையே நிலவிய இந்திய/இந்திய ராணுவ எதிர்ப்பு மனநிலையைச் சுரண்டுதல் (manipulation 1)
2. அம்மாதிரியான கொடுமைக்கு ஆளான பெண்டிர் வழியாகவும், அதனால் 'அவானமுற்ற' ஆண் தலைவனின் உயிர்நீப்பின் வழி கதையின் திசை சோழர்கள் பக்கம் முழுதாக் திருப்புதல் (manipulation 2)

படத்தில் வரும் பல காட்சிகள் நான் பார்த்த 'திருட்டு பிரிண்டில்' சரியாகத் தெரியவில்லை. இந்த சிறுநீர் காட்சி இல்லவே இல்லை. ஆனால் ஒன்று, இது போன்ற காட்சிகளையெல்லாம் செல்வராகவன் வெறுமனே ஒரு அதிர்ச்சி மதிபீடுக்காக செய்கிறார் என்பது என் அவதானம். 'நாயகிகள்' இருவரும் சம்மந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் வசை பாடிக்கொல்வது போல. இவற்றை மதிப்பிடுவதில் காட்சிகள், வசனங்க, காதபாதிரங்களினது juxtaposition எல்லாம் மிகவும் முக்கியம். ஆகையால் தயவுசெய்து 1001 எந்த சீரிய படைப்போடும் ஒப்பிடாதீர்கள்.

(சாரு அவதார் பற்றிக் கூரியுள்ளதேல்லாம் டுபாகூர்தான்.)

வினவு எழுதியுள்ள விமர்சனம் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

My other opinions (just in case).

sanban said...

//பால‌முருக‌னின் 'சோள‌ர் தொட்டி'//

அது ”சோளகர் தொட்டி” . தகவலுக்காககச் சொன்னேன்.

மற்றெந்தத் திரைப்படத்தையும்விடக் கூடுதலாக அறிவு சார்ந்த விவாதத்தை இப்படம் எழுப்பியதால் சிறந்தப் படைப்பு என்பது என் கருத்து.

sunthari said...

படத்தின் முக்கிய அம்சமாக அமைந்திருப்பது இந்திய அதிகாரவர்க்கத்தின் வன்ம மனநிலை.

அது எவ்வகையில் செயற்படுகின்றது என்பதே பிரதானமானது.

அதிகாரவர்க்கத்துக்கு அடயாளமாக வருவது ரீமா சென். குறிக்கோள் குலதெய்வசிலையை மீட்பது.

ரீமா சென் இங்கே பாண்டிய வம்சாவளியாக சொல்லப்பட்டு ஆரியப் பெண்ணாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மிக தத்துருபமான ஒன்று. சோழ மன்னன் அவன் சூழ உள்ள பெண்கள் அவர்களின் உருவ அமைப்பு நடன அசைவு மொழி அனைத்திலும் இருந்து ரீமா சென் விலகி பாடல் பரதநாட்டியம் உடல் அசைவுகள் அனைத்திலும் நச்சுப்பாம்மை ஒத்த ஆரிய அதிகாரவர்க்க குணம் அடயாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அக்காலத்தில் தொடங்கி இக்காலம் வரை மன்னர்கள் முதல் இன்றுவரை ஆரியத்தின் நுழைவிலான சீரளிவை துல்லியமாக காட்டுகின்றது.
ஆரம்பத்தில் தொல்பொருள் ஆய்வுத் தகவல்களை பொய் கூறி வாங்குவது. பொய்கூறி வறிய மக்களை தம் பயணத்துணைக்கு அழைப்பது அவர்களை வதைதப்பது நிர்ப்பந்திப்பது. என நகர்கின்றது. இடையில் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் பூர்வகுடிமக்கள். அதே நேரம் உங்களையும் கொல்வோம் என கூட்டிவரப்பட்ட வறுமைப்பட்ட மக்களை மிரட்டுவது. அனைத்தும் இந்திய அதிகாரவர்க்கத்தின் வன்மத்தை வெளிப்படுத்துகின்றது. 17 மில்லியன் தலித்துக்கள் இந்திய அதிகாரவர்க்கத்தின் கீழாக எப்படி இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்திய ராணுவ வெறியாட்டம் ஈழத்தில் இந்தியாவில் பழங்குடி மக்கள் மீது காஸ்மீரில் என அவைகளும் அருமையாக காட்டப்பட்டுள்ளது.
குலதெய்வ சிலை மீட்பது என்ற முடிச்சு எவ்வளவு ஆழமானது !! எத்தனை விடயங்களில் இலட்சியம் கொள்ள முடியும் ! தேடல்கள் செய்ய முடியும் ! ஆனால் தமிழன் சிதைந்து அழிந்தது ஆரியனாலும் அவன் கடவுளை வைத்து கண்ணாமூச்சி ஆடியதாலும் அன்றோ ! இன்றும் தனது வாழ்வை அப்படித் தானே துலைத்துள்ளான். பாண்டிய வம்சத்தின் மனதில் பாண்டியதேசத்தை மீள அமைப்பது என்ற எண்ணம் இல்லை. பாண்டிய வரலாற்றை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை. எஞ்சிய பாண்டிய மக்களை ஒன்றாக்கும் எண்ணம் இல்லை. சோழனும் சேரனும் பாண்டியனும் தமிழன் என்ற எண்ணம் இல்லை குலதெய்வம் அதைமீட்க எத்தனை பேரையும் கொல்வேன். வறுமைப்பட்டவர்களை கொல்வேன் ஆதிவாசிகளை கொல்வேன் தமிழன் என்று பாராமல் அனைவரையும் கொல்வேன் இராணுவத்தை பயன்படுத்துவேன் அதிகாரத்தை பயன்படுத்துவேன். உயிர்காத்து கூட உதவிசெய்தவனை கொல்வேன் எல்லாம் கடவுள் சிலைக்காக ! பாண்டியனா பிராமணனா கொக்கா !

பிரஷாந்த said...

நேற்று சாருவின் விமர்சனம் படித்தபோது , இரண்டு முறை படம் பார்த்தும் இவரால் செய்மதி தொலைபேசி பற்றி காட்சியைக் கூட விளங்கிக்கொள்ள முடியவில்லையே என்ற ஆத்திரம் தான் வந்தது. அத்துடன் இந்திய தேசியக் கண்ணோட்டத்திலேயே இவர் படம் பார்திருப்பதும் புரிந்தது.
அதே நேரம் சோழனின் மரணம் தமிழ் தேசியவாதிகளை பாதித்த அளவு மற்றவர்களைப் பாதிக்கவில்லை எனபதையும் "என்னோடு அழும யாழே" என்னும் கவிவரியில் ஏன் யாழ் வருகின்றது என்று கோபம் கொள்பவர்களையும் பார்த்திருக்கின்றேன்

டிசே த‌மிழ‌ன் said...

அன்பின் சுரேஷ்,
இது ஆயிரத்தில் ஒருவனுக்கு எழுதப்பட்ட பதிவல்ல என்பதை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு சிலவற்றை இங்கே பகிரப் பிரியப்படுகிறேன்.
...
உங்களின் கேள்விகள் சிலவற்றுக்கும் (பொதுவாகவும்) மேலே சுந்தரி விரிவான பதிலைத் தந்திருக்கின்றார் என்றே எண்ணுகிறேன். ஆனால் எனக்கு பாண்டியர்=ஆரியர்கள் என்று பார்ப்பதில் அவ்வளவு உடன்பாடில்லை. அது எந்தவகையான அதிகார அமைப்பாக இருந்தாலும் இவ்வாறு தமக்கு முன் வரும் தடைகளை -அறஞ்சார்ந்து பார்க்காது- மூர்க்கமாய் அழித்தே செல்லும். அதை சுந்தரி விரிவாக ஆயிரத்தில் ஒருவன் சம்பவங்களினூடாக எழுதியிருக்கிறார்.
....
நீங்கள் manipulate செய்வதாகச் சொல்லும் சில விடயங்கள் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.
//(1) பெருவாரியான (தமிழ்) சாமானியர்களுக்கிடையே நிலவிய இந்திய/இந்திய ராணுவ எதிர்ப்பு //
என்பதே நானறிந்தவரை/6-7ஆண்டு வலைப்பதிவு அனுபவத்தில், இந்திய இராணுவம் என்று எதை எழுதுகின்றபோதும் வருகின்ற மிக மூர்க்கமான எதிர்ப்பைப் பார்த்துக்கொண்டு இது manipulateசெய்கின்ற விடயம் என்று என்னால் ஏற்கமுடியவில்லை. ஈழப் போராட்டத்தின் வலியை உணர்கின்ற பல தமிழகத்தவர்களின் பெரும்பான்மையினரால் கூட தமது இந்தியத் தேசியத்தை/இராணுவத்தை விமர்சிக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாதே இருக்கின்றது. அந்தவகையில் பார்க்கும்போது இப்படி துணிச்சலாக இந்திய இராணுவத்தின் உண்மை முகத்தைக் காட்டியதற்காக நான் செல்வராகவனைப் பாராட்டவே செய்வேன். இந்தக் காட்சியிலிருந்து ஒவ்வொரு பார்வையாளரும் தாமறிந்த இராணுவத்தின் கொடுமையை விரித்துப் பார்க்கவே செய்வார். இதேயே மணிரத்தினம் என்னும் 'இந்தியத் தேசியத்தைக் கைவிடாத' இயக்குநனரின் படங்களை அசை போட்டுப் பாருங்கள். இதே காரணத்தால்தான் இந்தியாவில் 'In the name of Buddha' வெளியிடப்படமுடியாத நிலை இருக்கிறது.
(2) இரண்டாவ்து பார்வையாளரிடம் கருணையை கோருபவனாக சோழனின் கைதும் மரணம்டைதலும் இருந்தாலும் நாம் அந்தக் கருணையை வழங்கும்போது கூட சோழனின் கடந்தகாலத்தை நினைவூட்டும்போது அது அவ்வளவு ஒன்றும் புனிதமானதல்ல என்ற புரிதலோடே சோழனின் கருணையைக் கோருதலை விளங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது . இதையே மாற்றி ஏன் சோழனை ஒரு திருவுருவாக்கி புனிதமானவனாய் மட்டும் காட்டவில்லை என்றும் கேட்கலாம். அப்படியிருந்திருந்தால் சோழனின் கருணை கோருதல் மிக இயல்பாய் பார்வையாள்ரிடையே படியவிட்டிருக்குமே?

அதைச் செய்யாது சோழ்னின் இருண்டபக்கங்களையும் காட்டி செல்வா சோழனின் க்ருணை கோருதலைக் காட்டுவதால் மற்றப்படங்களை விட இது வித்தியாசப்படுகிறாது. ஆயிரத்தில் ஒருவனின் சோழனின் கருணையைக் கோருதல் என்ற படிமம் என்னளவில் படம் பார்க்கும்போது வரவில்லை. ஒரு இனம் மூர்க்கமாய் அழிகிறதே... அதில் சோழனும் ஒரு படிமமாய் மட்டுமே தெரிந்தான்.

கிட்டத்தட்ட Downfall படத்திலும் ஹிட்லர் கருணையைக் கோருபவனாக சித்தரிக்கப்படுகிறார் என்றொரு பார்வையை நாம் வைக்கமுடியும். இன்னும் அந்தப் படத்தில் ஹிட்லர் நேரடியாக எந்தக் கொடுமையையும் காட்சிப்படுத்தாமல் வீழ்ந்துகொண்டிருக்கும் ஜேர்மனியும், தடுமாற்றமடையும் ஹிட்லருமே காட்சிப்படுத்தப்படுகின்றார்கள். என்கின்றபோதும் ஹிட்லர் கருணையை இறுதியில் கோருபவராய் ஒரு படிமம் பார்ப்பவருக்கும் வந்தாலும் அதை ஹிட்லரின் முன்னைய காலங்களினூடாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. மேலும் சோழன் கோரும் கருணையை, நாம் அவன் அடிமைகளை வைத்து நடத்தும் மனிதக்கொலைகளோடும், பலியிடல்களோடுமே அணுகுவோம். தனியாக இறுதி நிகழ்வை வைத்துக்கொண்டு அணுகப் போவதில்லை என்பதே எனது பார்வை.

டிசே த‌மிழ‌ன் said...

நீங்கள் வைத்த இன்னொரு குற்றச்சாட்டு
/இந்த சிறுநீர் காட்சி இல்லவே இல்லை. ஆனால் ஒன்று, இது போன்ற காட்சிகளையெல்லாம் செல்வராகவன் வெறுமனே ஒரு அதிர்ச்சி மதிபீடுக்காக செய்கிறார் என்பது என் அவதானம். 'நாயகிகள்' இருவரும் சம்மந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் வசை பாடிக்கொல்வது போல. இவற்றை மதிப்பிடுவதில் காட்சிகள், வசனங்க, காதபாதிரங்களினது juxtaposition எல்லாம் மிகவும் முக்கியம்./

நான் ஆயிரத்தில் ஒருவனை மிகச் சிறந்த படைப்பென எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் ஆயிரத்து ஒருவன் உருவாக்க விரும்பும் (அது அரைகுறையாக இருந்தால் கூட) விவாதப் புள்ளிகள் தமிழ்த் திரைப்படச் சூழலிற்கு முக்கியம் என்றே நினைக்கிறேன். நீங்கள் செல்வராகவன் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காய் காட்டுகிறார் என்பதையும் அவ்வளவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. செல்வராகவனின் பெண் பாத்திரப்படைப்பு எங்கள் இருவருக்கும் முரண்பாடான கருத்துக்கள் உளது பற்றி நானறிவேன். கே. பாலச்சந்தரின் 'புரட்சிபேசி' பிறகு ஒடுங்கும் பெண்களை விட, மன்னனின் விஜயசாந்தி, படையபாவில் நீலாம்பரி போன்ற பாத்திரப்படைப்புக்களை விட செல்வாவின் பாத்திரங்கள் என்னளவில் முக்கியமானவை. சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் செல்வாவின் பெண் பாத்திரங்கள் கவனத்திற்கொள்ளவேண்டியவை. இங்கே ஆயிரத்தில் ஒருவன் இரு மானிடவியல் படித்த/படிக்கும் பெண்கள் இப்படி ஆங்கிலத்தில் யதார்த்ததில் சண்டையிட்டுக்கொள்ளவே மாட்டார்களா? இது கிட்டத்தட்ட ஆண்கள் பெண்களிற்கு ஒரு கெட்ட்வார்த்தையும் அல்லது சண்டையே பிடிக்கமாட்டார்கள் என்றூ கற்பிதம் செய்வது போலல்லவா இருக்கிறது. அதேபோன்று கமல் ஆளவ்ந்தானில் மனீஷா கொய்யராலா பாத்ரூமில் சிகரெட் பிடித்துக்கொண்டு தொடர்பு ஏதுமில்லாது செல்வா எடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். பெண்கள் இருவரும் சண்டைபிடித்தால் என்ன அல்லது கன்னித்தன்மையைப் பரிசோதிக்க சிறுநீரைப் பெய்யவிட்டு பரிசோதித்தால் என்ன? போருக்கு போகும்போது பெண்களில் இடுப்பில் -தன்னைத் தவிர வேறெவரும்- உடலுறவு கொள்ளக்கூடாது என்று கவசமிட்டுச் சென்றதும் நம் தமிழ் மரபுதான் அல்லவா? இங்கெ ரீமா சென் தான் நினைத்ததை சாதிக்க விரும்பும் ஓர்மமுள்ள பாத்திரமாய், அதற்காய் வரும் தடைகளையெல்லாம் மூர்ககமாய் உதறித்தள்ளும் பாத்திரமாய் மட்டுமில்லை, வழமையான தமிழ்ப்படங்கள் போல எவ்வளவு ஆளுமையான பெண்ணாயிருந்தாலும் இறுதியில் ஆணொருவ்னிடம் சரண்டைந்து 'நீதான் உயர்ந்தவன் என்றவகையில் இல்லாததாலும் முக்கியத்துவம் பெறுகிறது ஆனால் நாங்கள் முன்னர் ரூவிற்றரில் உரையாடும்போது கூறிய, கார்த்தியோடு கட்டிப்பிடித்துக்கொண்டு குளிரைக் கடப்பது...இவையெல்லாம் exotic என்பதை விட எரிச்சலையே ஏற்படுத்தியது என்பதும், மற்றது நீங்கள் குறிப்பிட்ட ரீமாசென்னின் பாத்திரம் தொடக்கத்திலிருந்தே ஒரு எதிர்மறையான பாத்திரமாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது ஏன் என்பது குறித்த கேள்வி எனக்கும் உள்ளது. ஆனால் ரீமாவின் இந்த எதிர்மறைப் பாத்திரம் தெளிவாகத் தெரியாத வகையில் இறுதிவரை ரீமாசென்னின் பாத்திரத்தை செல்வா கொண்டு சென்றதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
.....
இறுதியாக நான் மேலே எழுதிய பதிவு, சாருவிற்கான எதிர்வினை மட்டுமே. அதுவும் முக்கியமாய் அவர் கடந்தகாலத்தில் எழுதியவற்றுக்கு முரண்பாடாய் ஆயிரத்தில் ஒருவனை பதிவை முன்வைத்து இப்போது எழுதியிருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதற்காய் மட்டுமே இது எழுதப்பட்டது.

மற்றும்படி ஒருமுறை பார்த்த ஆயிரத்தில் ஒருவனை இன்னொருமுறை என்னால் பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு விஜய,அஜித் படம் போலவோ...அல்லது பலர் வியந்தோத்திய பருத்திவீரன், நான் கடவுளை போன்றவற்றை விட இது என்னளவில் -அதன் பலவீனங்களோடு- முக்கியமானது.

டிசே த‌மிழ‌ன் said...

சுரேஷ்,சான்பன், சுந்தரி & பிரஷாந்த் பின்னூட்டங்களிற்கு நன்றி.
...
பிரஷாந்த் நீங்கள் குறிபிட்ட விடயத்தை சாரு மற்றுமல்ல வேறு பலரும் தவறவிட்டிருக்கிறார்கள்.

TBCD said...

பல முறை டுவிட்டரில் சொல்லப்பட்டதை இங்கேயும் பதிகின்றேன்.

படத்தில் வரும் அழகம் பெருமாள் கதாப்பாத்திரம் ஒரு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி என்று படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படுகின்றது. மத்திய அமைச்சராக இருக்கும் பாண்டியனின் தனிப்பட்ட ஆர்வத்தில் இந்தப் தனிப்படை (தனியார்) அமைக்கப்படுகின்றது.

பிற்பகுதியில் எஞ்சியுள்ள பாண்டியர்களின் குழு ஒன்றினையும் போது, இது அவர்களின் தனிப்பட்ட தேடுதலுக்காக அவர்கள் பிறரையும், அரசையும் (?1) ஏமாற்றி செய்து திட்டம் என்று கொள்ளலாம்.