"இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் காலம் நடந்துகொண்டே இருக்கிறது
‘காலம்’ செல்வம் அருளானந்தம் நேர்காணல்
எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்
1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம்.
முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. ஏனென்றால் இங்கு எவ்வளவோ இலக்கிய ஆளுமைகள் இருக்கின்றார்கள். நான் எதைச் செய்திருக்கின்றேன் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில் சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன். நான் ஒரு கத்தோலிக்க கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் வீட்டில் இரவில் செபமாலை சொல்லப்படும். அதன் பின்னர் இரவு சாப்பாடு முடிய அம்மா அம்மானை வாசிப்பார். ஞான சவுந்தரி, நல்ல தங்காள், அந்தோணியார்….. என எதாவது ஒரு அம்மானைக் கேட்டபடி நான் படித்துக் கொண்டே இருப்பேன். தவக்காலம் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் வியாகுல பிரசங்கம் பாடிக்கொண்டிருப்பார்கள். எதாவது வீட்டில் இருந்து கூத்துப் பாட்டோ, சினிமாப் பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கும்.இரவில் ஊரிலும் ஊரைச்சுற்றிய கிராமங்களிலும் வருசத்திற்கு நாலு, ஐந்து நாட்டுக் கூத்துக்களும், அதோடு நாடகங்களும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இவையெல்லாம் ஒருமாதிரியான மனநிலையை என்னிடத்தில் ஏற்படுத்;தியிருந்ததாகவே இப்ப நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு அந்தக் காலத்திலேயே இதொன்றுதான் சரிவரும் என்றுபட்டது. அதாவது இலக்கியம் வாசிப்பது. அங்கிருக்கும்போது ஓரிரு தடவை ‘நான்’ என்றொரு சஞ்சிகை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றினால் வெளியிடப்பட்டது, அது இன்றும் வெளிவருவதாக நினைக்கிறேன், அதில் சில கட்டுரைகளை சும்மா எழுதிப்பார்த்திருக்கிறேன். அது பிரசுரமானது பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. என்னுடைய படைப்பு வந்ததென்று நீண்டகாலமாக அதைக் காவித் திரிந்துள்ளேன். இது 70களின் நடுப்பகுதி, பிற்பகுதி என்று ஞாபகம். அத்துடன் சுதந்திரனுக்கு எழுதிய ஒன்றிரெண்டு கடிதங்கள் வெளிவந்திருக்கவேண்டும். இதைத்தவிர ஈழத்தில் பெரிதாக நான் ஒன்றும் எழுதவில்லை. வாசிப்பு முக்கியம்தானே. படைப்பு எவ்வளவு முக்கியமோ, விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ இதைவிட வாசிப்பு மிக முக்கியம் என்று கருதுகின்றேன். ஆசிரியர் இறந்து விட்டார் என்று சொல்லலாம், பிரதி இறந்து விட்டது என்று சொல்லலாம் ஆனால் வாசகன் இறந்து விட்டான் என்று சொல்லலாமா? தீராத வாசகன்தான் பெரிய இலக்கியகாரன் என்ற நினைப்பு எனக்கு இருக்கின்றது.
2. அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தை அல்லது இலங்கையைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியப் பிரச்சினை இருந்தது. இந்தப் பிரச்சினை உங்களை எவ்வாறேனும் பாதித்திருந்ததா?
நான் ஒரு தமிழரசுக்கட்சி பாரம்பரியத்திலிருந்து வந்தவன். என்னுடைய சிந்திப்பு அந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை தவிர்த்திருக்க முடியாதுதான். ஆனால் வாசிப்புகள் இருந்திருக்கு. மல்லிகையை பார்த்திருக்கின்றேன். …… வாசிக்கவில்லை. அகஸ்தியருடையவை, எஸ்.பொ வினுடையவை வாசித்திருக்கிறேன். ஆனாலும் முற்போக்குப் பத்திரிகைளில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. எனக்கு தமிழரசுக்கட்சிப் பின்னணி இருந்தபடியால் தேசியப் பிரச்சினைபற்றிக் கதைக்காமல் வேறொன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்களே என்று. மற்றது சாதி பற்றி கதைத்தமை எனக்கொரு மனத்தாங்கலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பல மாற்றங்கள் வந்துள்ளன. அன்றிருந்த மனநிலை இன்றில்லை. ஆனால் அன்று அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
3. உங்கள் ஊரைப்பற்றி அதன் மண்மணம் வருவதுமாதிரி உங்கள் மனப்பதிவு என்ன?
என்னுடைய ஊர் வந்து முற்றிலுமான ஒரு கத்தோலிக்க வெள்ளாம் ஆட்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம்.. இன்று ஊர் தலைகீழாகி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கின்றது. ஊரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் பெரியதொரு கடலும், கடற்கரையும் இருந்தன.
மிகவும் துக்கமாக இப்பவும் நினைப்பது என்னவென்றால், சைவ வேளாளர்தான் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு காரணமாக இருந்தது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தளவில் எனது அனுபவங்கள் சார்ந்து நான் கூறுவது கத்தோலிக்க உயர்சாதியினர் மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறார்கள் என்பதே. நான் கூறுவது எல்லோரையும் அல்ல. பெரும்பான்மையானவர்களை. கைகள் விரித்து சிலுவையில் அறையுன்ட இயேசுவின் சிலைக்கு முன்னால், இருக்கிற இடத்தில் சாதிக்கொரு இடம் பிரித்துக் கொடுத்திருந்த மனப்பான்மையை எவ்வாறு இந்த கிறிஸ்தவம் தாங்கிக் கொண்டது என்பது இன்றுவரையும் எனக்கு கேள்வியாகவே இருக்கிறது.
அங்கை பறையர் சமூகம் எனப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்த கொடுமைகள் மிகமிக துக்கத்தைத் தருவன. நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். படிக்கும் காலத்தில் வெள்ளாம் ஆசிரியர் ஒருவர், ஒரு பறை சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை, மற்ற இரு மாணவர்களைக் கொண்டு இரண்டு கையையும் பிடிக்க சொல்லிவிட்டு கொள்ளிவால் எறும்பை பிடித்து சேட்டினுள் விடுவார். அச்சிறுவன் நெளிவதைப் பார்த்து வகுப்பு முழுவதும் சிரிக்கும். பாடசாலையில் கடைசிப்பாடம் என்னவென்றால் பாடசாலை முடிவடைந்ததும், வெள்ளாம் பெடியள் பறைப் பெடியளுக்கு அடிப்பது. அப்ப அவர்கள் பாடசாலை முடிய புத்தகங்கள் எல்லாம்; எடுத்துக்கொண்டு ஓடத் தயாராக இருப்பார்கள். இப்பிடித்தான் எங்கள் சமூகம் இருந்தது. ஒரு 60-70 வயதான பறைய சமூகத்து முதியவரை என்னுடன் நான்காம் வகுப்பு படிக்கும் பெடியன் ‘டேய்’ என்றுதான் கூப்பிடுவான். டேய் நல்லான், டேய் நீக்கிலான் என்று கூப்பிடுவான். இதை எந்த மனச்சாட்சியுமில்லாது அங்கிருந்த பெரியாக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஒருவர் வந்து இப்படி சொல்லக் கூடாது என்று சொன்னதில்லை. ஏனென்றால் ஆசிரியர்மாரே அப்படியாகத்தான் இருந்தினம். டேய் பறையா என்று ஆசிரியரே மாணவனைக் கூப்பிடும் வகுப்பில் நான் இருந்திருக்கிறேன்.
எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆட்கள் பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள். கடைசியாக அந்த சமூகம் ஈ.பி.ஆh.;எல்.எப்ஃ இன் கதையைக் கேட்டு கடைசியாக தங்களிடம் இருந்த அந்த மேளங்களை எல்லாம் சந்தியில் கொண்டுவந்து போட்டு எரிச்சுப்போட்டு இருந்தது. 2004ல் நான் அங்கே போகும் போது அச்சமூகம் அப்படியே குலைந்து போயிற்று. ஊர் மாறி, தேசம் மாறி எல்லாம் போயிற்று. விடுதலைப் போராட்டம் தொடங்கியதன் பின் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.
அவர்களுக்கு எந்தக் குரலுமில்லை. ஆனால் கோயிலுக்கு காசு கட்டவேணும். மற்றவர்கள் கட்டுவதுபோலத்தான் கட்டவேண்டும். கோயிலின் பராமரிப்பு வேலை செய்யவேணும். ஆனா அவைக்கு எந்த உரிமையும் அங்கே இல்லை.
இதுதான் எங்கள் கிராமம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் கலையும் பக்தியும் நிறைந்த ஒரு நல்ல கிராமம்தான். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையிடம்தான் அந்தக் கிராமம் இருந்தது. நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. வயல், கடல் ஊரின் நடுவில் யாழ்ப்பாணத்திலேயே மிக அழகான கோயில் என ஒரு அமைதியான சூழலுடனும் எனது ஊர் இருந்தது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமைகளை யோசிக்கிறேன். ஆனால் ஊரில் இருந்தபொழுது சந்தோசமாகவே இருந்துள்ளேன்.
எங்கள் வாழ்க்கை விடிய 6 மணிக்கு திருந்தாதி கேட்டால் 6:30க்கு கோயிலுக்கு செல்லவேண்டும். 6:30 பூசை முடிய திரும்ப வந்து 8:00 மணிக்கு பாடசாலை போக வேண்டும். பாடசாலையால் திரும்பியவுடன் மாலைத் திருந்தாதி மணி அடிக்கும்வரை கேட்பாரற்று வயல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் திரிவோம். இப்படியொரு வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு இல்லை என நினைக்கும்போது மிகவும் மனவருத்தமாயிருக்கிறது. எப்படித்தான் அந்த வாழ்க்கை குறையிருந்தாலும் எங்கள் சந்ததிக்கு இனி எந்தக் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை. நாங்கள் பெரிதாக இழந்தது எதுவென்றால் இவைதான். நான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழந்திருக்கிறேன். இந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அந்த வாழ்க்கை, மண்ணோடு மனிசருக்கிருந்த உறவிருக்கல்லவா, அந்த உறவுடன் கூடிய வாழ்க்கை, அற்புதமானது.
4. உங்கள் புலப்பெயர்வின் காரணம் என்ன?
நான் பிரான்சுக்கு 81 முடிவில வருகிறேன். நாட்டில அப்போ ஆயுதப் போராட்டம் தொடங்கிவிட்டது. இயக்கங்கள் பெரியளவில் அடையாளப்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எடுத்து வரப்பட்டது. அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. யாழ்ப்பாண பண்ணைவெளியில் வெட்டிப் போடப்பட்டிருந்த செல்வம்,இன்பத்தின் உடல்களைப் பார்த்து பயந்து விட்டேன்.நான் புலம்பெயர்ந்த காரணம் உண்மையில் பெருளாதார நெருக்கடிதான். மற்றது இங்கு தமிழருக்கு ஒரு வாழ்வில்லை என்றும் உறுதியாயிற்று. தமிழருக்கு வாழமுடியாதுதான். ஆனால் உடனடியாக வெளியேறியதற்கு பொருளாதாரம் தான் காரணம். அந்த அடிப்படையில்தான் வெளிநாட்டிற்கு புறப்பட்டு திசை தெரியாமல் நான் பிரான்சுக்கு சென்றிருந்தேன்.
5. அடுத்த கட்ட உங்கள் கலை இலக்கிய ஈடுபாட்டினை நீங்கள் புலம்பெயர்ந்ததன் பின் கொள்ளலாமெனில் அதன் கூர்மையடைதலுக்கு எவற்றைக் காரணமாக நினைக்கிறீர்கள்?
வெளிக்கிட்டு வரும்போது, ஒரு வேதாகமும், ஒரு பாரதியார் கவிதைப் புத்தகம்தான் இருந்தது. நான் பயணம் கூறச்செல்கையில் எங்கள் மாமி வீட்டு முற்றத்தில் பாரதியார் கவிதைப் புத்தகம் இருந்தது. அதை எடுக்கலாமா எனக் கேட்டேன். ‘ஓம்’ என்றார். எடுத்துவந்தேன். பிரான்சுக்கு வந்ததும் இதைத் தவிர வேறொன்றுமே வாசிக்க இருக்கவில்லை. ஊரில் யாழ்ப்பாண நூலகம் எரியுமட்டும் என்னிடம் நான்கைந்து புத்தகங்கள் தினசரி இருந்து கொண்டிருந்தன. இப்ப பிரான்சில பெரிய இடைவெளி. வாசிக்க ஒன்றுமில்லை என்பது மட்டுமல்ல. நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் வரலாற்றில் தமிழர் எதிர்கொள்ளாத பிரச்சினைகள். ஏனென்றால் புதிய நாடு, புதிய மொழி, புதியு கலாச்சாரம், போக்குவரத்துப் பிரச்சினை, சாப்பாட்டுப் பிரச்சினை, கையில் காசில்லாத பிரச்சினை. இவை எல்லாவற்றுக்கும் என்னைவிட சிக்கலுக்குள் இருந்த எனது மைத்துனரின் உதவியையே நம்பி இருந்தேன். இந்தப் பிரச்சினைகளுக்குள் வாசிக்கவும் ஒன்றுமில்லாவிட்டால்; எழுத வேண்டும் போல் இருந்தது. எழுதவேணும் போல இருக்கும்போது இரவில ரொயிலெற்றுக்குள் இருந்து, அல்லது எங்காவது இருந்து எழுதவேணும். எழுதினால் அதை வெளியிடுவதற்கு ஒன்றும் பத்திரிகை, சஞ்சிகையும் இல்லை.
அங்கு என்னுடன் இருந்த நண்பர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இ;ல்லை. அவர்களும் என்னைப்போல அந்த புதிய நாட்டை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிருந்தனர். ஒரு வேலை கிடைக்குமா? ஒரு வதிவிட ‘பேப்பர்’ கிடைக்குமா என்ற பிரச்சினைகளுக்குள் தலை உடைத்துக் கொண்டிருந்தோம். ஊரில் புத்தகங்கள் வாசித்து, கூத்துகள், நாடகங்கள், அரசியல் என்று வாழ்ந்த எனக்கு இந்த அகதி வாழ்கை அவமானமாய், மனப்போராட்டமாய், அவலமாய் இருந்தது. எந்த நேரமும் திரும்பிப் போயிடவேண்டும், திரும்பிப் போயிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.
அப்ப மெல்ல மெல்ல இயக்கங்களினுடைய கிளைகள் அங்கே நிறுவப்பட்டன. அந்த நேரத்திலதான் தற்செயலாக ‘தமிழ்முரசு’ என்ற ஒரு சஞ்சிகையை இன்னொரு நண்பர் வீட்டிற்கு செல்கையில் பார்த்தேன். உடனே புத்தக அலுவலகத்துக்கு இந்தப் புத்தகத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். அப்போதுதான் முதன்முதலில் காலஞ்சென்ற நண்பர் உமாகாந்தனுடன் எனக்கு தொடர்பு ஏற்படுகிறது. உமா காந்தனிடம் சென்றபொழுதுது ஒரு யன்னல் திறந்தது போல் இருந்தது. எங்கள் உறவுதாண்டி என்னை ஒத்த கருத்துள்ளவர்களைச் சந்திப்பதற்கு உமாகாந்தன் ஒரு வெளிச்சத்தை தருகிறார்.
அந்தக் காலகட்டத்தில் எனக்கு வேறு விதமான ஒரு உறவுமுறையால் ஈரோஸ் அமைப்பினுடைய தொடர்பு ஏற்பட்டிருந்தது. 82ன் பிற்பகுதியாக இருக்கலாம், அங்கிருந்த ஈரோஸ் அமைப்பில் வந்து இணையும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சந்தித்து போராட்டம் பற்றியும், மார்க்ஸியம் பற்றியும் கலந்துரையாடல்கள் செய்கிறோம், நீங்கள் வாருங்கள்’ என அழைத்தார்கள். அப்பொழுது எனக்கும் அது ஒரு ஆறுதலாகத் தோன்றியது. இது உமாகாந்தனைச் சந்திப்பதற்கு முன்னரே நடைபெற்று விட்டது. அங்கு பேர்ராளிகளின் முன்னோடியான தோழர் அழகிரியின் மனைவி றஞ்சி அக்கா வீட்டில்தான் சந்திப்புகள.; குகன் என்ற தோழர் இருந்தார். அவர் ஈரோஸ் அமைப்பால் சில பயிற்சிகள் பெற்றவர். அங்கேதான் எனக்கு ஊரில் தெரியாத பல விடயங்களை, செய்திகளை, மார்க்ஸியம் பற்றிய அறிவுகளைப் பெற்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவற்றை கலந்துரையாடலாக நடத்துவார்.பின்னர் உமாகாந்தனின் தொடர்பால் உமாகாந்தனின் தம்பி குகன், கலாமோகன், அருந்ததி, தேவதாசன், சபாலிங்கம் போன்ற நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தன.
இதில் கலாமோகன் மிக முக்கியமான நண்பர். அவரை நான் நாட்டுக்கு வெளியே சந்தித்த ஒரு நல்ல கலைஞனாகக் கருதலாம். இருபத்தினான்கு மணித்தியாலமும் ஒரு இலக்கியகாரனாக நடக்கவேண்டும் என நினைக்கிற ஒரு ஆள். அதோடு அவருக்கு இன்னொரு சிறப்பிருந்தது. அந்த நேரத்தில் அவர் பிரன்சு மொழியை கொஞ்சம் கற்று, பேசக்கூடியவராக புலமையானவராய் இருந்தார். அத்Nhடு அங்குள்ள பெரிய தொழில்சங்கத்தில் அங்கத்தவராய் இருந்தார்அவர் எனக்கு ஒரு நல்ல பாதிப்பைக் கொடுத்திருந்தார்.
6. இயக்க நெறிப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் போக்குகள், தமிழ்ப்பரப்பில் கவனத்தைக் குவித்துவந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடலை பலவீனப்படுத்தியதாகச் சொல்லமுடியுமா?
அப்படியென்று கூறமுடியாது. ஏனெனில் அந்தக்காலத்தில் வந்தவர்கள் எல்லோரும் ஏதோ கட்டத்தில ஏதோ ஒரு வகையில விடுதலைப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுடைய நண்பர்கள் அல்லது எழுத்து முயற்சியிலிருந்தவர்கள். பாரிசினுடைய அன்றைய தமிழ்ச் சூழல் தமிழ் இடதுசாரிகளின் கைகளிலேயே இருந்துள்ளது. ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்றவர்களின் கைகளில். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக அங்கே இயங்கவில்லை. உத்தியோபூர்வகமாக இயங்கியவர்கள் ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்தான்.
பின்னால் 83க் கலவரத்திற்கு பின்பு பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்கியதன் பின்னர் சூழல் மாறிவிட்டது. ஏனெனில் முழுக்க முழுக்க தமிழ் தேசியம் தொடர்பானவர்கள் வந்து குவியத்தொடங்கிவிட்டனர். நான் சந்தித்ததில் சபாலிங்கம் ஒரு முக்கியமானவர். சபாலிங்கம் உண்மையில் ஒரு ஆரம்ப கட்டப் போராளி. அவருக்கு பெரிய இலக்கிய வாசிப்புகள் இல்லை. ஆனால் திடீரென எங்களுடன் இணைந்தது அவரையும் இந்தப் புத்தகங்கள் பக்கம் திருப்பி விட்டது. ஏனென்றால் அவருக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது. அவர் ரெலோவில் இருந்தவர். அவருக்கு எந்தப் பொறுப்பையும் ரெலோ கொடுக்கவில்லை. அவர் சிறியுடன் கதைத்துப்பார்த்தார். ஏனோ அவர்கள் கொடுக்கவில்லை. அதன் மூலம் சபாலிங்கத்துக்கு ஒரு விரக்தி வந்து இந்தப் புத்தகங்கள் பக்கம் வருகிறார். ஏறத்தாழ அந்த நேரத்தில் நான் சபாலிங்கத்தை சந்திக்கும்பொழுது எங்கள் பத்மநாப ஐயரின் ஒரு மறுபதிப்பாகத் தெரிந்தார். ஏராளமான புத்தகங்கள் சேகரித்து, ஏராளமான விடயங்களுடன் இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு கேஸ் எழுதுதல் எனும் வேலையையும் செய்துகொண்டிருந்தார். அவருடைய தொடர்பு கிடைத்ததன் பின்னர் பழையபடி எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் சூழல் உருவாகிறது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபாட்டோடிருந்தார். நான் அவரிடமே மு.தளையசிங்கம், நுஃமான் போன்றோரின் நூல்களைப் பெற்று வாசித்தேன். அவருக்கு அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்று தெரியாது. ஆனால் அந்தநேரத்தில் அவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார். காலப்போக்கில் திரும்பவும் இயக்கம் என செயலாற்றினார்.
அக் காலகட்டத்தில் புஸ்பராஜா போன்றோரும் வந்திருந்தனர். கலாமோகனைத் தவிர்த்துப் பார்த்தால், கலாமோகனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ல் தொடர்பிருந்தது, மற்றவர்கள் எல்லோருக்கும் முக்கியம் இலக்கியம் அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் என்றும் சொல்லமாட்டேன். தான், தான் சேர்ந்த இயக்கமே முக்கியமாக இருந்தது. இது இப்புலம்பெயர்ந்த இலக்கியத்துள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவரும் வந்து சுதந்திரமாக இயங்கவில்லை என்றுதான் நான் கூறுவேன். இலக்கியத்தை ஒரு வாகனமாகப் பாவிப்போம் என்ற பொதுவான ஒரு எண்ணம்தான் அவர்களிடத்தில் இருந்துள்ளது. கலாமோகனுக்கு எஸ்.பொன்னுத்துரையோடு தொடர்பிருந்தபடியால் கலாமோகன் இலக்கியத்தை ஒரு பகுதியாகச் செய்யலாம் என்று நினைத்தார். மற்றவர்கள், உமாகாந்தன் உட்பட, எல்லோரும் இலக்கியத்தை ஒரு வாகனமாக, எவ்வாறு மதமும் அரசியலும் வாகனமாக பாவித்ததோ அவ்வாறு இலக்கியத்தை இவர்கள் பாவிக்க வெளிக்கிட்டார்கள். அந்தளவில் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கு. அது தடையாகவும் இருந்திருக்கிறது என்றே இப்போது கருதுகிறேன்.
7. இது ஓரளவுக்கு உங்கள் இலக்கிய முயற்சிக்கான பின்புலத்தை உருவாக்கி இருக்கிறதா? அவ்வாறாயின் நீங்களே தொடக்கிய இலக்கிய முயற்சி என்ன?
அப்பொழுது ஏதாவது இலக்கியத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக ‘இரவுச் சூரியன்’ என்ற தலைப்பில் எல்லா இயக்கத்திலும் இருந்து இறந்த மூன்று போராளிகளை வைத்து ஒரு கவிதை எழுதி ‘தமிழ்முரசு’க்கு அனுப்பியிருந்தேன். அதற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருந்தது. அப்பொழுது பெரியதொரு அறியப்பட்ட கவிஞன் நீ… நீதான் கவிஞன் …என்றார்கள். கிட்டத்தட்ட நான் கனடா வரும்வரைக்கும் ஒவ்வொரு தமிழ்முரசிலும் கவிதையோ கட்டுரையோ வெளிவந்துகொண்டிருந்தது. அப்படி இவர்களோடு நெருக்கமாக இருந்துகொண்டு நான் ஈரோஸ் அமைப்பில் வேலைசெய்தேன். அது அங்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஈரோசுக்கு நான் தமிழ்முரசில் எழுதுவது இடைஞ்சலாக இருந்தது. என்னை அங்கே எழுதவேண்டாம், அவர்கள் சரியில்லை என எச்சரித்தார்கள். இப்போது போன்றதுமாதிரியான எச்சரிக்கையல்ல அது. கருத்தளவிலான மாறுபாட்டை உசிதமாகத் தெரிவிக்குமளவிற்கே அன்றைய மாறுகருத்துள்ளவர்கள் இருந்தார்கள்.
எனக்கு 86களில் திருமணம் நடக்கிறது. எனக்கு சில உறவினர் இருந்தனர். மனைவிக்கு யாருமில்லை. எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் முழுக்க ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் நண்பர்கள்தான். இவற்றை இப்பொழுது நினைத்துப் பார்த்தால், இலக்கியம் தவிர்த்துப் பார்த்தால், சிரிப்பாக இருக்கிறது. அழகிரியும் சபாலிங்கமும் முன்நின்றனர். சபாலிங்கம் லட்டு செய்துகொண்டு வந்திருந்தார். உமாகாந்தன் கேக் செய்திருந்தார். கலாமோகன் கையால் எழுதிய திருமணப் பத்திரிகையை கொடுத்திருந்தார்.
என்னுடன் தொடர்புடனிருந்த பாண்டிச்சேரி நண்பர்கள் 80பேருக்கு சமைத்தார்கள். இப்பொழுது போலுள்ள வசதியல்ல அப்பொழுது. 80 பேருக்கு சமைப்பது என்பது கற்பனை செய்யமுடியாதது. சமைத்துக்கொண்டிருந்த பொழுது புகை வந்ததால் பொலிஸ் வந்து சாப்பாட்டைக் கொண்டுசென்று விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சமைக்கக் கூடாத இடத்தில் வைத்து சமைத்திருந்தார்கள். பின்னர் நண்பர்கள் சென்று பொலிசுடன் கதைத்து திரும்பப் பெற்று வந்தார்கள். இவ்வாறு பல நிகழ்வுகள். கத்தோலிக்க முறைப்படி மணம் முடித்தபடியால் மணப்பெண்ணுக்கு தலையில் வேல் எனப்படும் முகத்திரை போடவேண்டும். நண்பர் ஒருவர் தான் கொணர்வதாக கூறியிருந்தார். காலை 8:00மணியாகிறது, எட்டுமணிக்கு சடங்கு அவர் வரவில்லை. மணப்பெண் தான் தேவாலயத்திற்கு வரமுடியாது என்றுவிட்டார். இதைக்கூட எடுக்கவில்லையா என காலையிலே சச்சரவு தொடங்கியிருந்தது. பின்னர் நடா என்றொரு நாடகக்கார நண்பர் 7:55க்கு அதைக் கொணர்ந்து மனைவியை சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்துவந்தார். கோயிலில் பாடகர் என்று யாரும் இல்லை. மனைவிக்கோ கோயில் பூசையில் ஒரு பாட்டாவது யாராவது பாடவேண்டும் என்று ஆசை. எனவே மனைவி தானே பாடிவிட்டார். ஆனால் பூசை பிரென்சு பாதிரியாரால் நடத்தப்பட்டது. நண்பர்களுக்கோ வினோதமாக இருந்தது.
8. உங்கள் வாசிப்பு அப்போது எவ்வாறிருந்தது? நீங்கள் ஒரு தீவிர வாசகன் என்று கூறாதபடியால்..?
சோசலிசம் வந்து விட்டால் மனிதனுக்கு எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும் என்ற எண்ணம் எனக்கு ஈரோஸ் தொடர்பால் அப்போது ஏற்பட்டிருந்தது. கிருஸ்ணகுமார் என்பவரை உமாகாந்தன் வீட்டில் சந்தித்தேன். அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்னணி உள்ளவர். அவருக்கும் பத்மநாப ஐயருக்கும் உள்ள தொடர்பால் எனக்கு வேறு புத்தகங்கள் கிடைக்கத் தொடங்கின. ‘அலை’ போன்றவை கிடைத்தன. அதன்பின் ‘மரணத்துள் வாழ்வோம்’ கிடைத்தது. இப்பொழுது என் எண்ணங்களில் தளையசிங்கம் ஒரு முக்கியமானவராக வருகிறார். எனக்கு இன்றைக்கு ஒரு வேலையும் வீடும் கிடைத்தால் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடுமோ என்ற கேள்வி வரும்போதுதான் எனது வாசனைத் தளம் மாறுகிறது. அப்போ அலையில் மு.பொன்னம்பலம் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. யார் இவர், இவ்வாறு எல்லாம் எழுதுகிறார் என்று நினைக்கையில் என் வாசனைத்தளம் மாறுகிறது. நான் வெளியைத் தாண்டி உள்ளடுக்குகளை கொஞ்சம் சிந்திக்கத் தொடங்குகின்றேன்.
அப்பொழுது கலாமோகனுக்கு பொன்னுத்துரையின் மகன் அனுப்பிய ஜே.ஜே சில குறிப்புகள் அவருக்கு வந்து கிடைக்கும்பொழுது பொன்னுத்துரையின் மகன் மித்தி கடலில் இறந்துபோகிறார். அப்போ கலாமோகன் அப்புத்தகத்தை வைத்து ஒரு கதையை எழுதி எனக்குக் காட்டுகிறார்.. அப்பொழுது கலாமோகனிடம் ஜே.ஜே சில குறிப்புகளை பெற்று வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய பாதிப்பைக் கொடுத்தது. செயல் அல்ல செயலின் ஊற்றுக் கண்ணான சிந்தனையைப் பாதிப்பதே என் வேலை….. பல பக்கங்கள் மனப்பாடமாக நான் இப்பவும ;சொல்லுவேண். நான் அதற்கு முன் ஜெயகாந்தனை ஊரில் நூலகத்தில் வாசித்திருந்தேன். ஜானகிராமனை வாசித்திருந்தேன். எனக்கு சுந்தர ராமசாமி புதிதாக இருந்தது. ஜெயகாந்தனுக்குள்ளால் தான் தீவிர வாசிப்புக்கு வருகிறேன். அதன் பிறகு ஜானகிராமனிடம் மிகப்பெரிய பிரியம் வருகிறது. அந்த நேரத்தில்தான் நான் ஊரைவிட்டு வெளியேறினேன். அதற்கிடையில் எனக்கு வேறு யாருமில்லை…. நன்றாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம்; இருந்தது தவிர என்னை அவர்கள் குலைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமியிடம் வரும்போதுதான் ஒரு அதிர்வு வருகிறது. வாழ்க்கை பற்றிய கேள்வி வருகிறது. வாழ்க்கை பற்றிய பார்வைகள் மாறுகிறது. அந்தத் தருணத்தில் தளையசிங்கத்தை வாசிக்கும்போது இன்னமும் அது பொருந்திப் போவதுபோல் இருக்கிறது. மார்க்ஸியமும் தேவை, ஆனால் அதைத்தாண்டியும் மனிதனுக்கு தேவை இருக்கிறது, மார்க்சிய கோட்பாடுகளால் மட்டும் திருப்பதிப்பட முடியாது என்ற எண்ணம் உருவாகிறது. அதனால்தான், அந்த நேரத்தில்தான் எனக்கு ஈரோஸோடு பிரச்சினை உருவாகிறது. ஆனாலும் எது எப்படி இருந்தாலும் பெண்கள் தலைமை தாங்கி (பெண்ணியம் என்று இன்று சொல்லப்படுகின்ற பெண், ஆண் ஆவதல்ல) தனிச்சொத்து வரையறுக்கப் பட்ட ஒரு சமூகம் உருவாகுமானால் இன்றுள்ள பல துண்பங்கள் மனிதருக்கு இல்லாமல் போயிருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.
9. உங்கள் கட்டடிடக் காடு கவிதை நூல் குறித்து
தமிழ் முரசில் எனது கவிதைகள் வரும்போது உமாகாந்தன் அது பற்றிக் கதைப்பார். புலம்பெயர் முதல்கவிதைகள் என்று என்னை உற்சாகப்படுத்துவார். அப்பொழுது வரதராஜப்பெருமாள் அங்கே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். உமா காந்தன் மெல்ல மெல்ல ஈ.பி.ஆர்.எல்.எஃப் பக்கம் போய்விட்டார். அதனால் சங்கே முழங்கு என்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் வருடாந்த கலைநிகழ்வி;ல் இடம்பெறும் கவிதா நிகழ்வில் எனது கவிதை முக்கியமாக இருக்கும். அவற்றைப் புத்தகமாகப் போடுதல் வேண்டும் என்று உமாகாந்தன் கேட்டார். நான் மறுத்தேன். ஏனென்றால் அவை எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை. ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. ஒன்று எனது ஊரின் பிரிவு. இரண்டு அங்கே எதிர்கொண்ட பிரச்சினைகள். மூன்றாவது தேசவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தமை. இந்த மூன்றும் என்னை அலைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது தனிப்பட்ட விதமாயும் மனஉளைச்சல். அந்நேரம் சபாலிங்கம் கூறினார், “நான் ஏசியா என்றொரு புத்தக வெளியீடு கொண்டுவரப்போகிறேன், செல்வத்தின் பாட்டுத்தான் அதில் முதல் போடுவது” என்று. நான் அதில் அக்கறைப் படவில்லை. புத்தகமாக வரும்போது அதன் பலவீனங்கள் எனக்குத் தெரியும். நான் அப்பொழுது வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் நான் இங்கே கனடாவுக்கு வந்ததன்பின் சபாலிங்கம் தனது இரண்டாவது வெளியீடாக அதைச் செய்திருந்தார்.
10. பிரான்ஸில் வளர்ந்துவந்த தமிழ் தீவிர கலை இலக்கிய முயற்சிகளில் பிரான்ஸிய இலக்கியப் புதுநெறிகளின் குறிப்பாக பின்அமைப்பியலின் செல்வாக்கு எவ்வாறு இருந்ததாகக் கருதுகிறீர்கள்?
அப்படி ஒன்றும் நிகழவில்லை. நான் அறிய கலாமோகன் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவராக இருந்தார். இதில்தான் சல்வடோர் டாலி தேத்தண்ணி குடித்திருந்தார். இதிலதான் பிகாசோ வந்து கோப்பி குடித்திருந்தார். இதுதான் பிகாசோவின் மாளிகை, இதில்தான் பிகாசோவின் ஓவியங்கள் என கலாமோகன் இவற்றை எனக்கு காட்டித்தருவார்.
பாரிசின் பெரிய நூலகத்திற்கு நான் அடிக்கடி செல்வேண். எனக்கு பிரென்சு வாசிக்கத் தெரியாது. இலட்சக்கணக்கான நூல்களில் இரண்டு தமிழ் புத்தகங்கள் இருக்கலாம். அந்தச் சூழலுக்காக மட்டும் அங்கே முன்னால் சென்று இருப்பேன். அந்தச் சூழலுக்குள் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் இந்தியப் படவிழா நடைபெறுவதாக விளம்பரம் பார்த்தேன். அப்பப்போ பத்திரிகைகளில் வாசித்ததினால் சத்தியஜித் ரே, மிர்ணாள் சென் போன்றோரின் பெயர்கள் பரிச்சயமாகியிருந்தன. படத்திற்குப் போனால் அங்கே பிரெஞ்சு மொழியில் எழுத்துகள் போடுவார்கள். ஒன்றும் விளங்காது. இருந்தும் நான் தொடர்ந்து போவேன். கிருஸ்ணகுமாரை ஒவ்வொரு நாளும் படவிழாவில் காண்பேண். கிருஸ்ணகுமாரைப் பொறுத்தளவில் உமாகாந்தன் வீட்டில் சந்தித்தாலும் நான் அவருடன் நட்பாகவில்லை. பிரெஞ்சுக்காரர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு விளங்காவிட்டாலும் இதற்குள் ஏதோ இருக்கிறது என தொடர்ந்து போய் வந்தேன். ஒரு நாள், நாயக் என்று நினைக்கிறேன், அப்படத்தைப் பார்த்துவிட்டு கிருஸ்ணகுமாரிடம் “ உண்மையில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இதில் என்ன இருக்கிறது, எழுந்து நின்றெல்லாம் கைதட்டுகிறார்கள்” என்று கேட்டேன். கிருஸ்ணகுமார் கொஞ்சம் விளங்கப்படுத்தியபின் உம் வீட்டுக்கு வரலாமா எனக்கேட்டார். பின்னர் இது பெரும் நட்பாக மாறியது என்னை தீவிர இலக்கியத்திற்கு கொணர்ந்ததற்கு கிருஸ்ணகுமாருக்கு பெரும் பங்கிருக்கிறது. ஆனால் அவர் பெரிதாக எழுதுபவர் அல்லர். நல்ல வாசகன். கல்விப் பின்னணி உள்ளவர்.
நாங்கள் இருந்த காலத்தில் யாருக்கும் பின்னவீனத்துவம் பற்றி தெரியாது. அது பின்னுக்குத்தான் வந்தது. ஆகக் கூடினால் மாபசானைத் தெரியும். நான் இருந்த வீட்டின் அண்மைய சப்வேக்கு பெயர் கப்ரியல் பெரி. இந்த சப்வேயில் எத்தனையோ வருடங்களாக நான் சென்று வந்துள்ளேன். ஆனால ஒரு சஞ்சிகையில் எஸ்.வி.ராஜதுரை கப்பிரியல் பெரியின் கவிதை மொழிபெயர்ப்பைப் பார்த்ததன் பின்தான் ஓ நான் ஒரு கவிஞனின் பெயர்கொண்ட சப்வேயில்தான் இருக்கிறேன், அருகில் தான் எனது வீடு என்று பெருமைப்பட்டேன். இதுதான் அப்ப இருந்த பிரான்ஸ் சூழல். ஒருவருக்கும் நாம் ஒரு மிகப்பெரிய நாட்டில் இருக்கிறோம், ஒரு கலைப் பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை. மொழிப் பிரச்சினையும் அவற்றை அணுகும் மன அவகாசங்கள் அன்று இல்லாதிருந்தமையும் அதற்குக் காரணம். ஒருவருக்கும் மொழியைப் படித்து வளரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எப்பவும் ‘எப்படி வந்த கடன் அடைப்பது? எப்படி மணம்முடிப்பது? எவ்வாறு குடும்பத்தைக் காப்பாற்றுவது?’ என்ற மனநிலைதான். அதைவிட இடைஞ்சலாக இருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம்.
(தொடரும்...)
(எனது தளத்தில் 'காலம்' செல்வத்தின் நேர்காணலை வெளியிட விரும்பியபோது, 'கூர்'த் தொகுப்பில் வெளிவந்த இந்நேர்காணலை மின்னஞ்சலில் அனுப்பி உதவிய தேவகாந்தனிற்கு நன்றி)
3 comments:
நல்ல நேர்காணல். கூர் புத்தகம் வாங்கவேண்டும். இரண்டாம் பாகத்துக்குக் காத்திருக்கிறேன்.
செல்வம் அவர்களின் பதில்களில் அல்லது பதில்கள் எழுத்தாக்கம் செய்யப்பட்ட விதத்தில் ஒரே ஒரு இடம் உறுத்துகிறது.
///எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆட்கள் பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள் ///
வெள்ளாம் ஆக்களும், கரையாம் ஆக்களும் ஒதுக்கலாம் என்றால், பள் ஆக்கள் ஒதுக்குவது ஏன் மோசமானது?
பள்ளர் சமூகமும் ஒடுக்குமுறையைச் சந்திக்கிற சமூகம். அதே சமூகமே இன்னொரு சமூகத்தை ஒதுக்குவதால் அது மோசமானதாகிறது என்று பொருள் கொள்ளலாமா?
அல்லது
ஒதுக்குவதற்கான உரிமை வெள்ளாளனுக்கும், கரையானுக்கும் இருக்கிறது என்பது மாதிரிப் பொருள் கொள்ளலாமா?
நேர்கண்டவர் தேவகாந்தன். பதில் சொன்னது செல்வம். இருவரும் சமூக சமநீதி பற்றி மார்க்சியத்தினூடாகச் சிந்திக்கவல்லவர்கள். இவர்கள் இருவரும் இணைந்த ஒரு உரையாடலில் அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள் என்கிற வரிகளை என்னால் பொருத்திப்பார்க்க முடியவில்லை.
வெள்ளாம் ஆக்கள், கரையாம் ஆக்கள் பள் ஆக்கள் என்று எல்லோரும் பறையாம் ஆக்களை ஒதுக்குவார்கள் என்று சொல்லியிருக்கலாம்.
/பள்ளர் சமூகமும் ஒடுக்குமுறையைச் சந்திக்கிற சமூகம். அதே சமூகமே இன்னொரு சமூகத்தை ஒதுக்குவதால் அது மோசமானதாகிறது என்று பொருள் கொள்ளலாமா?/
கிருத்திகள், செல்வம் இப்படியான அர்த்தத்தில்தான் சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன். வேண்டுமென்றால் வரும் சனிக்கிழமை இது குறித்த விரிவான விபரத்தை செல்வத்திடம் இருவருமாய்ச் சேர்ந்து கேட்போமா?
//பள்ளர் சமூகமும் ஒடுக்குமுறையைச் சந்திக்கிற சமூகம். அதே சமூகமே இன்னொரு சமூகத்தை ஒதுக்குவதால் அது மோசமானதாகிறது என்று பொருள் கொள்ளலாமா?/
கிருத்திகள், செல்வம் இப்படியான அர்த்தத்தில்தான் சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன். //
இதே தான் நானும்நினைக்கின்றேன். தலித் சமூகத்தினருக்கு உள்ளேயும் வகுப்புகளும், ஒடுக்கு முறைகளும் இருக்கின்றான என்ற அளவில், ஒடுக்கப்பட்ட இனமும் இன்னொரு இனத்தை ஒடுக்குகின்றது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.... எனினும், இதை சம்பந்தப் பட்ட இருவரின் கவனத்துக்கும் கொண்டு வருவதும் முக்கியமே
Post a Comment