-மறைக்கப்பட்ட பக்கங்களில் நகரும் நியாயங்கள்-
கூபாவிற்கு போகும் அவசரத்தில் துணைக்கு சில புத்தகங்களை இவன் எடுத்துப்போயிருந்தான். நண்பரின் உதவியால் இவர்களது நூலகச் சேகரத்தில் வந்துசேர்ந்த 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' கையில் அகப்பட்டிருந்தது. அதை வாசிக்கும்போது 'பழி நாணுவார்' என்று ஷோபா சக்தி ஒரு கட்டுரை எழுத, பின்னூட்டங்களில் பாலன் என்பவர் ஹெலன் டெமூத்திற்கும் மார்க்ஸிற்குமான உறவிற்கான ஆதாரம் வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக்கொண்டிருந்தது இவனுக்கு நினைவுக்கு வந்தது. பிறகு 'அன்புள்ள ஹெலன் டெமூத்' என்று ஷோபா இன்னொரு கட்டுரை எழுதியதை நீங்கள் அனைவரும் வாசித்திருப்பீர்கள். இவனுக்கு ஹெலன் டெமூத்திற்கும், மார்க்ஸிற்கும் உறவு இருந்ததா இல்லையா என்பது பற்றி விடுப்புப் பார்க்கும் மனோநிலை இருக்கவில்லை. ஆனால் தமிழ்ச்சூழலில் இந்த உரையாடல் எப்படி நடந்தது/முடிந்தது என்பதை அறியவும், மார்க்ஸை அவர் காலத்தில் வைத்துப் பார்க்கும் விரும்பும் இருந்தது. ஷோபா தனக்கு 10 வருடங்களுக்கு முன் 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' வாசித்தபோது ஹெலன் டெமூத்தோடான மார்க்ஸின் உறவுபற்றித் தெரிந்தது என்கிறார். ஆனால் சிக்கல் என்னவென்றால் ஷீலா ரெளபாத்தம் எழுதிய 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' என்று கடிதமெழுதும் பாத்திரம் ஒரு கற்பனைப் பாத்திரமே (மார்க்ஸியத்தில் பெண்களுக்கான விடுபடல்களை இது விரிவாக ஆராய்கிறது).
இச்சிறு நூல் நேரடியான ஒரு கட்டுரையாக எழுதப்படவில்லை என்பது கவனிக்கத்தது. சில கற்பனைப் பாத்திரங்களுடன், வரலாற்றுப் பாத்திரங்களை இணைத்து இது எழுதப்பட்டிருக்கும். எனவே ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தைப் பேசும்போது இதையொரு முக்கிய சான்றாக நாம் முன் வைத்துப் பேசமுடியாது. இதன் பின் 'Dear Dr. Marx' ஐ ஆங்கிலத்தில் வாசித்தபோதும், ஷீலா கடிதமாய் எழுதி முடித்தபின் தனியே எழுதும் முடிவுக் குறிப்பிலேயே ஹெலன் டெமூத் பற்றிய விபரத்தை ஷீலா குறிப்பிடுகிறார் (அநதக்குறிப்பையே ஷோபா ஒரு முக்கிய சான்றாய்த் தன் கட்டுரையிலும் குறிப்பிடுகிறார்). அத்துடன் ஹெலன் டெமூத் பற்றிக் குறிப்பிடும் விடயத்திற்கு எந்தவொரு அடிக்குறிப்பும் -எங்கிருந்து பெறப்பட்டதென- தரவில்லை. அடிக்குறிப்பு தராமல் ஷீலா எழுதுகின்றார் என்றால் ஒன்று ஹெலனுக்கு பிறந்த குழந்தையிற்கு மார்க்ஸ் தந்தையென, பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதென எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. அல்லது போகின்றபோக்கில் ஷீலா எழுதியிருக்கின்றாரென -மார்க்ஸின் குழந்தையில்லையென வாதிடுபவர்களுக்கு- சார்பாக இது போய்விடும். இதையேன் இவன் குறிப்பிடுகின்றான் என்றால், சர்ச்சைக்குரிய ஹெலன் மார்க்ஸ் உறவு பற்றிய உரையாடலுக்கு நாம் இந்நூலை முக்கிய நூலாக வைத்து உரையாடமுடியாது என்பதே.
மேலும் ஷோபாவின் 'அன்புள்ள ஹெலனுக்கு' கட்டுரையில் தந்திருக்கும் மேலதிக வாசிப்பிற்கான் இணைப்புக்கள் -அவ்வளவு தெளிவாக- அவரது கட்டுரைக்கு உதவுகின்றனவாய் இல்லை. உதாரணமாக ஷோபா தனது கட்டுரையில் ‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்?' என்று கேட்பது சரியான கேள்வியுமல்ல.
மார்க்ஸை விட ஏங்கல்ஸ் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் குடும்பத்திற்கென புதைக்கும் மயானம் கூட இருக்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமாய் ஏங்கல்ஸின் விருப்புப்படி அவரின் உடல் புதைக்கப்படவில்லை என்பதை ஷோபா மறந்தோ/மறுத்தோ விடுகிறார். ஏங்கல்ஸின் உடல் எரியூட்டப்பட்டு அவரது சாம்பல் கடலில் வீசப்பட்டிருக்கிறது. எனவே ஷோபாவின் 'ஏன் எங்கல்ஸ் மார்க்ஸின் அருகில் புதைக்கப்படவில்லை?' என்ற வாதம் சரியானதல்ல. மேலும் ஷோபா குறிப்பிட்ட விக்கி இணைப்பின்படி, ஹெலனை மார்க்ஸின் குடும்ப கல்லறைகளில் புதைக்கவேண்டும் என்பது ஜென்னி மார்க்ஸின் விருப்பாகவே இருந்திருக்கிறது (In accordance with Jenny Marx's wishes, she was buried in the Marx family grave).
இவ்வாறு கூறுவதால் ஹெலனின் பிள்ளைக்கு மார்க்ஸ் தந்தையல்ல என்பதை மறுப்பதற்காக அல்ல. ஆனால் ஹெலனின் பிள்ளை மார்க்ஸிற்குப் பிறந்ததுதான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க ஷோபா தரும் சான்றுகள் சரியான வகையில் தரப்படவில்லை என்பதைக் குறிக்கவே. இவ்விடயத்தில் ஷோபா வைத்த உருப்படியான ஒரெயொரு சான்று மார்க்ஸின் மகளான எலினோர் எழுதிய கடிதங்களே ஆகும். எலினோர் நீண்டகாலமாய் ஏங்கல்ஸிற்குப் பிறந்த மகனே ஹென்றி ஃபெடரிக் டெமூத் என நம்பி வந்திருக்கின்றார். பின்னாளில் உண்மையை அறிகின்றபோது, 'நானும் நீங்களும் ஒருவிதமாய் கவனிக்கப்படாதவர்கள்' என ஒரு கடிதத்தில் எலினோர் எழுதுகின்றார்.
மேலும் ஷோபா சொல்வதுபோல 'மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை' என்பதில் முற்றுமுழுதாக ஏங்கல்ஸை நாம் குறை கூறமுடியாது. ஏங்கல்ஸ் தனது உற்ற நண்பரைக் காப்பாற்றும்பொருட்டு மார்க்ஸின் மகனுக்கு தனது குடும்பப் பெயரையே வழங்கியிருக்கிறார். நீண்ட காலமாக மார்க்ஸின் மகளான எலினோர் உட்பட பலர் ஃபெடரிக் டெமூத்தை ஏங்கல்ஸின் மகனெனவே நினைத்திருக்க மார்க்ஸிற்காய் பாவச்சுமையை ஏங்கல்ஸே சுமந்துமிருக்க ஏங்கல்ஸை மார்க்ஸைப் போலக் குற்றவாளிக் கூண்டில் அவ்வளவு எளிதில் ஏற்றமுடியாது.
இவையெல்லாவற்றையும் விட இந்த விவாதத்தில் ஏன் ஒரு முக்கிய புள்ளியை எல்லொரும் மறந்துவிட்டிருக்கின்றார்கள் என இவன் யோசிக்கிறான். ஜென்னி மார்க்ஸ் என்பவரின் நிலைபற்றி ஏன் எவரும் கதைக்கவேயில்லை என்பதுதான். இவனுக்கு ஏன் இந்தக் கேள்வி வருகின்றது என்றால்,'அன்புள்ள டாக்டர் மார்க்ஸில்' ஷோபா ஹெலன் டெமூத் பற்றி ஆதாரம் காட்டும் அதே 70ம் பக்கத்தில் மார்க்ஸும், ஜென்னியும் கூட்டு வாழ்வில்லத்திற்குச் செல்லும்போது ' மரபொழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காத கவிஞரின் (ஜோர்ஜ் ஹேர்வே) நடத்தை முறைகளை திருமதி மார்க்ஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை வசியப்படுத்த ஹெர்வெ செய்த முயற்சிகளை அவர் நிராகரித்தார். ஆண் - பெண் சுதந்திர உறவு பற்றி பாரிஸில் நடந்த விவாதங்கள் அவருக்கு திகைப்பேற்றின' எனச் சொல்லபடுகின்றது. ஜென்னி, மார்க்ஸ் X ஹெலன் உறவுபற்றி என்ன நினைத்திருப்பார்? எவ்வாறான சூழ்நிலையில் இம்மூவரும் ஒரேவீட்டில் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் என்ற இருட்டுப் பக்கங்கள் பற்றி -ஷோபா உட்பட- எல்லோரும் ஏன் மறைக்கின்றார்கள் என்பதில் வெளியே பிதுக்கித் தள்ள முடியாத சில கதைகள் அவரவர்க்கு இருக்கக்கூடும்.
மார்க்ஸ் ஜென்னி ஹெலன் கல்லறைகளுக்குள் போய்விட்டார்கள். மார்க்ஸ் என்கின்ற பேராசானும் தவறுவிடுகின்ற ஒரு மனிதனே என்பதை -ஹெலன் டெமூத் பற்றி வெளிப்படையாகப் பேசாமற் போயிருப்பதிலிருந்து- நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஷோபாசக்தி குறிப்பிடுவது போல உறவில் நல்ல உறவு X கள்ள உறவு எனறு எதுவுமில்லைத்தான். ஆனால் எல்லா உறவும் நல்ல உறவாய் மட்டுமே இருக்கிறதென நாம் அவ்வளவு எளிதாய்ச் சுருக்கிவிடவும் முடியாது. ஹெலன் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் பேசும்போது அதேயளவு முக்கியத்துவத்துடன் ஜென்னி பற்றியும் உரையாடத்தான் வேண்டும். தாம் திருமணம் செய்துகொண்டோ (அல்லது உறவொன்றில் இருந்துகொண்டோ) தங்கள் அலைபாயும் மனத்திற்காய் தம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் ஆணை/பெண்ணை ஏமாற்றி பிறருடன் உறவு வைத்துக்கொண்டிருப்பவர்களையும் நாம் அவ்வளவு எளிதாக கடந்து போய் விடமுடியாது. முக்கியமாய் இன்றைய காலத்தில் பேராசானை உதாரணங்காட்டி இங்கே பலர் தம்மை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதை. பேராசானே ஹெலனின் முன் தலைகுனிந்து நிற்கும்போது, இப்படி ஆட்டம் போடுபவர்களை நாளைய காலம் சும்மா 'ஊ' என்று ஊதித்தள்ளிவிட்டு போய்விடும் என்பதையும் நாம் நினைவூட்டத்தான் வேண்டும்.
இவ்வாறு எல்லாம் எழுதுவதெல்லாம்... மார்க்ஸின் மீது காழ்ப்புணர்வு கொண்டு எதிர்க்கின்றவர்களுக்கோ அல்லது அவரைப் புனிதமாக்கி திருவுருவாக்குபவர்களுக்கோ உதவட்டும் என்பதால் அல்ல என்பதை இத்தால் இங்கே இவன் உறுதிப்படுகின்றான். மார்க்ஸின் மீதுள்ள பிரியத்தில் அவரை அவர் வாழ்ந்த காலத்திலிருந்து எல்லாவிதக் கோணத்திலிருந்தும் வைத்துக் கற்றுக்கொள்வதற்கான சிறுமுயற்சியே இதுவாகும். இன்னொன்று தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் எந்தளவு ஆழமாகவும், நேர்மையாகவும் நிகழ்கின்றன என எட்டிப் பார்க்கும் ஆவலுமாகும்.. ஷோபாவின் நக்கலும் நையாண்டியுமான புனைவுகள் மீது இவனுக்கு மிகப் பெரும் விருப்புள்ளது எனினும், அதே அளவுகோல்களுடனேயே கட்டுரைகள் எழுதும்போது சிலவேளைகளில் ஆபத்தாய்/அபத்தமாய்ப் போய்விடும் என்பதை அவருக்கு சுட்டிக்காட்டவும் வேண்டியிருக்கிறது.
இனி முதல் நாள் கூபாப் பயணத்தில் சென்றிறங்கிய வராதாரோ கடற்கரையில் கண்டவை, இரசித்தவை...
மினுங்கும் திரவங்கள்
சே மற்றும் காட்சிப் படங்கள் @ Market Place
அடுக்குச் செவ்வரத்தம்பூ
அடுத்த பகுதியில் ஹவானாப் பயணம் பற்றியும், பினாகோலடா எப்படிச் செய்வது என்பது பற்றியும் விளக்கித் தெளிக்கப்படும்.
குறிப்பு: மேலே எழுதப்பட்ட பகுதி முழுதும் ஷோபாசக்தி 'அன்புள்ள ஹெலன் டெமூத்' கட்டுரையில் தந்த இணைப்புகளை முன்வைத்து மட்டுமே எழுதப்படுகிறது.
(உருத்திராட்சைக் கொட்டைகள் உருட்டல் தொடரும்....)
ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01