Thursday, May 27, 2010

மெலிஞ்சிமுத்தனுடன் ஓர் இடைம‌றிப்பு

(1) நீங்கள் எழுத வந்த சூழலைப் பற்றிக் கூறுங்கள்?

இடப்பெயர்வு என் வாழ்க்கை பற்றிய கற்பனைகளை சிதறடித்தகாலத்தில். செம்பாட்டுத்தலையோடு மீன் விற்கும் சிறுவனாய் அலைந்திருக்கிறேன். பின்னர் சந்தையில் ஒரு மாம்பழ வியாபாரியாக, மூட்டை தூக்கும் தொழிலாளரின் மத்தியில் நோஞ்சானாக அவமானங்களோடும், வறுமையோடும், சலிப்போடும் வாழ்ந்திருக்கிறேன். மரணம். எப்போதுமே என் அருகில் சம்மானம் கொட்டியிருந்தது. நானோ கண்ணீர் அஞ்சலிகளை எழுதுபவனாக என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஆயினும் எழுதுதல் என்ற அனுபவம் அவசரமான என் ஏற்பாடுகளால் ஒருபோதும் நிகழ்ந்துவிடவில்லை. நான் எப்போது எழுதும் அனுபவத்தை அடைந்தேன் என்பதை சிலவேளைகளில் என் ஒவ்வொரு கவிதையின் முன்னும் பின்னும் நகர்ந்து நான் தேடிப் பார்ப்பதுண்டு. ஒரு கவிதைக்கு உள்ளேயே சிலவேளைகளில் கவிதை இன்மைகளும் இருந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் கவிஞன் ஒரு மகத்துவமான தனித் துண்டு இல்லை. அவனுக்கு முன்னே ஒரு தச்சுத் தொழிலாளியும், தையற்காரனும், எனக்குள் எப்போதுமே விழித்தபடி இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் என்மொழியில் கழுந்தடிக்கிறான், மற்றவனோ பீத்தல் தைக்கிறான். இரண்டு கடலோர இசைக்கிராமங்களின் பின்புலம் எனக்கு வாய்த்திருக்கிறது. மெலிஞ்சிமுனையின் தென்மோடிக்கூத்தையும், முத்தரிப்புத்துறையின் வடமோடிக் கூத்தையும் அனுபவித்திருக்கிறேன். அர்த்தம் புரியாமலே நான் மனனம் செய்த பழம் தமிழ்ப் பாடல்கள் இன்னமும் என் அடிமனதில் ஓசை எழுப்புகின்றன. கூத்து, நாடகம், ஓவியம், சிற்பம் என்று லயித்த மனம் கவிதையை இறைஞ்சிய‌போது எழுதத்தொடங்கினேன் என்றே கூறலாம்.


(2) இப்போது வெளியாகிய 'வேருலகு' உங்களின் நான்காவது தொகுப்பு, சொல்லப்போனால் இதுவரை வந்த மூன்று கவிதைத் தொகுப்பிலிருந்து வேறுபட்டு உரைநடையில் வந்த முதற்தொகுப்பு. எவ்வாறு உங்கள் படைப்புகளிற்கான வடிவங்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்?

நான் வடிவங்களை தேர்ந்தெடுப்பதில்லை. வடிவம் என்றாலே அதற்கு ஒரு இறுக்கமான தன்மை வந்துவிடுகிறது. நான் என் படைப்புக்கான பரப்பு தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள சாத்தியமான வழிகளில் பயணிக்கிறேன்.எனது இயல்பிலிருந்து ஒட்டுமொத்த பிரபஞ்ச அனுமானத் தளத்தோடு தாக்கமுறும் உத்தேசப் பாதையில் மனசு போகிறது.  என் கதைகளை கடந்துசெல்லும் கதைகள் என்றே நினைக்கிறேன். எப்போதுமே ஒரு சொற்கூட்டம் எனக்குள் பிசையப்பட்டவாறே இருக்கிறது. அதிலிருந்து வெளிவரும் ஒரு சொல்லை நேசத்தோடும், அக்கறையோடும் இறக்கி வைக்கிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லுக்குமே வாலும், வாயும் இருப்பதாக ஒரு உணர்வு. நான் முதலில் ஒவ்வொரு சொல்லையும் மதிக்கிறேன். பின்னர் பொருத்துகிறேன். சொற்களின்மேல் உறையைப்போல என் கதைகள் இருப்பதை நான் விரும்புவதில்லை. பெரும்பாலும் சொற்களுக்குள் ஊடுருவிய கதைகளையே விரும்புகிறேன்.எனது சொற்கள் கனதியான குறியீட்டுத் தன்மை கொண்டனவாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்குள் இருக்கிறது. கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் சொற்களை குலைத்து விடுகிறேன். நான் மொழியின் மேலோட்டமான அசைவை நம்பியிருப்பவன் அல்ல, என் கருத்தின் மூலத்திலிருந்தே அவ் அழகியல் தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன்.


(3) ஈழத்திலிருந்து இரண்டு தொகுப்புகளையும், புலம்பெயர் வாழ்வில் இரண்டு தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றீர்கள். இவ்விரு சூழலின் ஒற்றுமைகள்/ வித்தியாசங்கள் பற்றிக் கூறுங்கள்?

சூழலெங்கும் நானே இருக்கிறேன். நம் தாய்மண்ணின் பிரச்சினைகளில் இருந்து நாம் முற்றாக அறுத்து விட்டவர்கள் அல்ல. ஆயினும் கொஞ்சம் தள்ளியிருக்கக்கூடிய அவகாசம் கொண்டவர்கள் அல்லது விலகிவிடும் சாத்தியம் கொண்டவர்கள். அத்தோடு இந்தமண்ணின் பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. பிரச்சினைகளிலிருந்து விலகி ஒரு கவிஞனாக இயங்குதல் சாத்தியம் இல்லை. பிரச்சினைகள் மூளையை வேறுதிசைக்கு செலுத்த விடுவதாக இல்லை. ஒரு கவிமனம் பிரச்சினையை வேறு கோணத்தில் அணுகுகிறது, அது ஓர் அரசியல்வாதியின் பார்வையில் இருந்து வித்தியாசப்பட்டதாக இருக்கிறது .

இரண்டு நிலத்துக்குமான வித்தியாசங்களை பிரச்சினைகள் பெரும்பாலும் நிரப்பி விடுகின்றன. ஆயினும் பயணம், காட்சிமாற்றம் என்பவை ஓர் கலைமனத்திற்கு அவசியமானவை. தாய்மண் - நாம்பெயர்ந்து இருக்கும் மண் என்ற இரண்டு சீவியத் தளங்களோடு பயணப்பட்ட அனுபவமும் முக்கியமானதே. எப்போதுமே புலம்பெயர்ந்த இந்த மனது அந்தக் கலப்புப் பொதுமையில்தான் நிற்பதை அவதானித்திருக்கிறேன். கனடிய காவல்துறையினர் மெலிஞ்சிமுனையில் நிற்பதுபோன்ற
கனவுகளையே பல தடவை கண்டிருக்கிறேன். நீங்கள் கேட்ட இரண்டு நிலமுமே படைப்பூக்கம் தரவல்ல வெவ்வேறான தளங்களே.

(4) புலம்பெயர் சூழலில் ஒரு படைப்பாளிக்கு பதிப்பகத்தைத் தேர்ந்தெடுத்தல் என்பது மிகுந்த சிக்கலாகவே இன்றும் இருக்கின்றது. உங்களது வேருலகு பதிப்பிக்கப்பட்ட பின்னணி பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

உயிர்மை பதிப்பகத்திடம் கொடுத்து ஒருவருடத்தின் பின் நாற்பது ரூபாய்க்கு அவர்கள் விற்கும் புத்தகத்தை முப்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். படைத்தபின் படைப்பாளிகள் செத்துவிடுகிறார்கள் என்கிறார்களே, அது இதுதான் போலும். அச்சகத்தாருக்கு வேலைகள் அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியவன் நான். பலதடவைகள் வேறு அச்சகத்தால் போடலாம் என்று எண்ணியபோது இல்லை, இல்லை நாமே போடுவோம் என்றார் மனுஷ்யபுத்திரன். ஒருவருடத்தின்பின்னர் வெளியிடக் குறித்த திகதியும் கடந்து போனது........

திகதியைப் பின்போட்டு நூறு பிரதிகள் மட்டும் எடுத்து வெளியீட்டு நிகழ்வை நடத்தினேன். பின்னர் வந்த நூறு பிரதிகளை சாமி அறைக்குள் வைத்திருக்கின்றேன் . புத்தகத்தின் பின்புறத்தில் 'நெக்கற்றிவ் ' போடுவதே என் விருப்பமாக இருந்தது புகைப்படம் போடுவதே அச்சகத்தின் நடைமுறை என்று கூறப்பட்டதால் சலிப்போடு சம்மதித்துவிட்டேன் .


(5) 'வேருலகு' கனவுகளின் தொகுப்பு என அடையாளப்படுத்தவே உங்களிற்கு உவப்பானதாக இருக்கின்றது. மு.தளையசிங்கத்தை உங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கின்றீர்களென நினைக்கிறோம். மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவராக உங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றீர்களா? ஆமெனில் எந்தவகையான தொடர்ச்சியென உங்களை நினைக்கின்றீர்கள். இல்லையெனில் யார் யார் உங்களைப் பாதித்திருக்கின்றார்கள்?

கவிதை எழுதுதலில் ஒருவித சலிப்பு வந்தபோது எனக்குள் கிடந்த வார்த்தைகளை இறக்கிவைக்க மனது அவாவிக்கொண்டிருந்தது. கவிதைகளை நான் கனவாகக் காணத் தொடங்கினேன். ஆயினும் அவை நான் எதிர்பாராத படிமங்களால் நிரப்பப்பட்டிருந்தன . இருட்டுக்குள் இருந்தபடியே பதிவு செய்த கனவுகளே அதிகம். கனவுகளை எழுதுதல் அருமையானதொரு அனுபவம் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்தால் நமக்குள் இருந்தபடி யாரோ பேசிக்கொள்கிறார்கள் போன்ற உணர்வொன்று இருக்கும். நான் எழுதியவற்றை வாசித்தால் புறத்தில் நிகழ்ந்த சம்பவம் போன்றே சில தெரிகின்றன அவை ஒவ்வோன்றின் கீழும் இது கனவு என்று நான் அடிக்குறிப்பு இடமுடியாது.

எனது முகமே எனக்குப் போதுமான அடையாளம் இல்லை என்று நினைப்பவன் நான். வேறெந்த அடையாளங்களையும் சூடிக்கொள்ள விரும்பவில்லை. அவை எனக்கு போதுமானவையும் இல்லை. நான் தளையசிங்கத்தை அறிவதற்கு முன்னரே கனவு காணத் தொடங்கிவிட்டேன். ஆயினும் தளையசிங்கம்தான் எனது வழிகாட்டி. எனது பார்வை மெளனிக்கும், தளையசிங்கத்துக்கும் இடைப்பட்ட வெளியில் இருந்தே தொடங்குகிறது. தளையசிங்கம் கண்ட சத்தியத்தளத்தை என்னால் உணரமுடிகிறது என்பதை நான் சொன்னால் தற்புகழ்ச்சி என்றோ, மனச்சிதைவென்றோ சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவருடைய 'இரத்தம்' என்ற கதையைப் புரிந்துகொள்ளக் கூடிய அளவே பெரும்பாலான நமது எழுத்தாளர்களின் நிலை இருக்கிறது. கறுப்பு, வெள்ளை என்ற இரட்டைச் சிந்தனைக் கூடாரங்களில் இருந்து இவர்கள் முதலில் வெளியில் வரவேண்டும் . தளையசிங்கம் உணர்ந்ததை சொன்னதில்தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வரும்போது அங்கே ஒரு கோட்பாட்டுக்கான இறுக்கநிலை தேவைப்படுகிறது. இறுக்கநிலை இல்லாது போனால் கோட்பாட்டுத் தன்மை இழக்கப் படுகிறது. சிக்கல் இங்கேதான் நிகழ்ந்திருக்கிறது. நான் அதுபற்றி யோசிக்கிறேன் அவ்வளவேதான்.


(6) புலம்பெயர் இலக்கிய சூழல் எப்படி இருக்கின்றது? அது இனி எவ்வாறு இருக்கவேண்டும் அல்லது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

நமக்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன. வலைப்பதிவுச் சூழலில் இருந்து புதியவர்கள் பலர் ஆரோக்கியமான இலக்கிய மனதோடு வந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலம் ஒவ்வொருவரின் கையிலும்தான் இருக்கிறது.

(வைக‌றைக்காய் ச‌ந்தித்த‌வ‌ர்க‌ள் ஏதிலிக‌ள்)

Wednesday, May 26, 2010

'காலம்' நிகழ்வு

'காலம்' சஞ்சிகையின் 'ஈழ மின்னல் சூழ மின்னுதே..!'
உரையாடல் தொடர்கின்றது...

  • க. சட்டநாதனின் 'முக்கூடல்' சிறுகதைத் தொகுதி
  • கா.இந்திரபாலாவின் 'இலங்கையில் தமிழர்' (ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு)
ஆகிய நூற்களை முன்வைத்து

-முனைவர் ரகுபதி
-முனைவர் சிவச்சந்திரன்

இடம்- ஸ்காபுரோ சிவிக் சென்றர்
மே 28 வெள்ளி, 2010
மாலை 5 மணி

தொடர்பு: 416- 7311752
kalam@tamilbook.com