-மாலதி மைத்ரி
1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.
ஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.
பிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்கங்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.
அருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things
நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.
இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.
இவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.
மாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவில்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.
மேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையைக் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.
‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
மணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.
உண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.
நானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.
(நன்றி: காலச்சுவடு)
No comments:
Post a Comment