எழுதியவர்: குட்டி யாழ்ப்பாணத்தான்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
உங்களுக்கு நான் முதன்முதலாய் எழுதும் கடிதம் இது. ஒவ்வொருமுறையும் உங்களுக்கென கடிதம் எழுத முயற்சிப்பேன். ஆனால் ஏதோ அமானுஷ்ய சக்திகளால் அது முழுமை பெறுவதில்லை. நீங்கள் உங்கள் படைப்புக்களை உங்களையறியாமலேயே எதுவோ எழுதிக்கொண்டுச் செல்கிறது என்று கூறுவதுபோல, உங்களுக்கு நான் எழுதும் கடிதங்களையும் என்னையறியாமலே எதுவோ ஒரு சக்தி அழித்துவிட்டுச் செல்கிறது. எனக்கென்னவோ அது 'அராபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் வருகின்ற ஜீனியின் சித்து விளையாட்டோ என்கின்ற சந்தேகமும் உண்டு. அதனால்தான் இன்றுவரை உங்களுக்கு ஒழுங்காய் ஒரு கடிதம் எழுதி அனுப்ப முடிந்ததில்லை.
செரி அத விடுங்கள்.
நீங்கள் சமீபத்தில் எழுதிய 'அறம்', 'சோற்றுக்கணக்கு', 'மத்துறுதயிர்' ஆகிய மூன்று கதைகளையும் வாசித்துவிட்டு இனியும் பொறுக்கமுடியாது என ஒரு கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று கதைகளும் மிக அருமை சார். சான்சே இல்லை, கலக்கிட்டீங்க சார்.
இனியும் நான் பேசாமல் இருந்தால் தமிழனாய் இருப்பதில் பயனே இல்லை. ஒன்று தற்கொலை செய்தாக வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். வாழ்விலே போராடி ஜெயிக்கவேண்டும் எனச் சொல்வார்கள். நானும். இருப்பதிலே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன், அதனால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உங்களது 'மத்துறு தயிர்' வாசித்த அனுபவத்தை நிச்சயமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் சார். கதையை வாசித்தவுடன் அப்படியே கம்பியூட்டரைப் பார்த்தபடி உறைந்துபோய்விட்டேன். கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு பக்கத்து சீட்டு ஜெனீஃபர், 'குட்டி வாட் ஹப்பண்டு வாட் ஹப்பண்டு?' என்று சத்தமாகக் கேட்கிறா...என்னாலை ஒரு சொல் வாய் திறந்து பேசமுடியலை. நாக்குக் குழறுகிறது. சும்மாவா என்ன? உங்கள் கதையிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் துரோணருக்கு அர்ஜூனன் இறுதியில் அம்புகளால் படுக்கை அமைத்த மாதிரியல்லவா என்னையும் கட்டிப் போட்டிருந்தது. நான் ஒருமாதிரி சமாளித்து, 'ஜெனிபார் ஐ ஹாவ் 'மெட்ராஸ் ஜ', அதனால்தான் கண்ணீர் கொட்டுகிறதென்றேன். அவளுக்கு புரியலை, 'வாட்? வாட் இஸ் மெட்ராஸ் ஐ?' என்கிறா. நான் அதெல்லாம் உனக்குப் புரியாது, அதற்கு நீயொரு தமிழச்சியாக பிறந்திருக்கனும்னு சொல்லி அனுப்பிட்டேன். பின்ன என்ன சார்... அவாளுக்கு இதெல்லாம் புரியுமா என்ன? இந்த வெள்ளைக்காரர்களிடம் என்ன இருக்கு? எங்களைப் போல கல்தோன்றா முன்தோன்றிய கலாசாரம் இருக்கா, பண்பாடு இருக்கா? அதைவிட முக்கியமாய் நாம எல்லோரும் எப்போதும் பெருமை கொள்ளக்கூடிய சாதியாவது இவங்களிடம் இருக்கா?
மத்துறு தயிரில் நீங்கள் குறிப்பிடுகிற, தயிர் கடைகிறது..., கம்பராமாயணம் பாடல்களுக்குப் பேராசிரியர் பொருள் சொல்கிறதெல்லாம் என் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது சார். அதைச் சொல்லமுன்னர் நீங்கள் இந்தக்கதையில் சொல்கிற 'பேராசிரியர்' யாரென என மூளையைக் கசக்கி கசக்கி அது சக்கையானதுதான் மிச்சம், விடையைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதியில், வேலையில் இருக்கிற எங்களின் வெள்ளைக்கார பாஸ் தான் அந்த விடையைக் கண்டுபிடித்துச் சொன்னவர் என்றால் உங்களால் நம்பமுடியுமா சார்? என்னால் கூட நம்பமுடியவில்லைத்தான். ஆனால் அதுதான் உண்மை சார். நான் இப்படி கண்ணீர் உகுத்ததைப் பார்த்து பயந்துபோய் இந்த ஜெனீபர் போய் எங்கள் பாஸிடம் சொல்லிவிட்டாள். அவரும் என் சீட்டுக்கு வந்துவிட்டார். 'ஹேய் குட்டி...வாட் ஹப்பண்டு?' என்று கேட்கத்தொடங்கிவிட்டார். நான் உண்மையைச் சொல்லமுடியுமா என்ன? இவங்கள் எப்படி எங்களின் வேம்பையும், மஞ்சளையும் தங்கள் உடைமையாக்க முயற்சித்தார்களோ அப்படியே உங்கள் சிந்தனைகளை களவெடுத்து தங்களுடையதாக்கிக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன? எவ்வளவு காலமாய் உங்கள் தளத்தை வாசித்துக்கொண்டு வருகின்றேன். இந்த வெள்ளைக்காரங்களிடம் ஒன்றுமே இல்லையெனத்தானே நீங்கள் உறுதியாக கூறி வருகின்றீர்கள். முக்கியமாய் இலக்கியத்தில் இருக்கும் வெற்றிடத்தை உங்களின் சிந்தனைகளை கொண்டு நிரப்ப முயற்சிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சார் இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். நீங்கள் எழுதுபவற்றையெல்லாம் காப்பி ரைட்டுச் செய்து பத்திரமாக சுவிஸ் பாங்கில் போட்டு விடுங்க. இல்லேன்னா, இப்ப இல்லாட்டிக்கூட எப்பவாவது ஒருகாலத்தில் உங்கள் நற்சிந்தனைகளை இவங்கள் அபகரித்துவிடுவாங்கள் சார்.
இதனால்தான், இந்தக் கதையிலை வருகிற பேராசிரியர் யார் என்று என் பாஸ் கண்டுபிடித்ததை என்னாலை நம்ப முடியாதிருந்தது. எனக்கென்னவோ இந்த வெள்ளைக்காரர்கள் உங்களின் தளத்தை உங்களுக்குத் தெரியாமலே வேவு பார்க்கிறாங்கள் போலத்தான் தோணுது. ஆனால் சார், என் பாஸுக்கு தமிழில் 'அ' கூட வாசிக்கத் தெரியாதே? எப்படி கண்டுபிடித்தார் என்றுதான் என்னால் ஊகிக்க முடியவில்லை. செரி அத விடுங்க சார்.
என் சீட்டுக்கு வந்து என்ன நடந்தது என்று பாஸ் கேட்க, நான் கண்ணிலை ஏதோ விழுந்துவிட்டது அதான் என்று சொல்லிச் சமாளித்தேன். எங்களின் பாஸும் உங்களின் கதையில் வருகின்ற பேராசிரியரின் மனைவி போல ஒரு அல்லோலயா கேசுதான். என்ன பேசினாலும் இறுதியில் வீ ஆர் ஸ்லேவ்ஸ் ஆஃப் ஜீஸஸ் (we are slaves of Jesus) என்பார். இப்படி அன்னைக்கும் சொன்னப்போதான் எனக்கு 'கிளிக்'கானது. ஜீஸஸ் என்றால் யேசு. ஸ்லேவ்ஸ் என்றால் அடிமை. அத இன்னொருவிதமாய் 'தாசன்'னும் கூறலாம். ஆக இந்தக் கதையில் வருகிற பேராசிரியர் பெயர் 'யேசுதாசன்'. என்னதான் என்றாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் சார். தமிழே தெரியாமல் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் யார்னு கண்டுபிடித்துவிட்டான் இல்ல! எனக்கென்னவோ சார், நீங்கள் அமெரிக்கா ஆஸி என பயணம் செய்தபோது, ஜேம்ஸ் பாண்டுப் படங்களில் வருகிறமாதிரி, உங்களின் உடம்பிலை உங்களையறியாமலே எதோ எலக்ரானிக் சிப்ஸ் ஐ இவனுங்க பொருத்திவிட்டிட்டாங்கா போலத் தோணுது. அந்தச் 'சிப்'புத்தான் நீங்கள் தமிழில் சிந்திக்கிறதை எல்லாம், இங்கிலீஷிலை மொழிபெயர்த்துச் சொல்லுது போல. எதற்கும் உங்கள ஆருயிர்த் தோழர், நமது அறிவியல் தந்தையோடு கலந்துரையாடுங்கள் சார். இந்த ஸீரியஸ் மாட்டரை ஸும்மா இப்படியே விடக்கூடாது.
மத்துறு தயிர்ல வந்த கம்பராமாயணம் எனக்கு நெருக்கமானதுன்னு சொன்னேன் அல்லவா? நேக்கு சார் பதினான்காம் வயதிலையே காதல் அரும்பிடுச்சு. அவாளும் ஒரே வகுப்புத்தான். ஆனால் அவாள் என்னை காதலிக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறா. ஏன் என்னைப் பிடிக்கலைன்னு கேட்க, நோக்கு ஒரு திறமையும் இல்லைங்கிறா... நேக்கு வநதே கோபம்...அறம் கதையில பெரியவர் சன்னதம் ஆடுறமாதிரி ஒரு ஆட்டம் போட்டேன்னு வைச்சுக்கோங்க. அவாள் பேய் பிடிச்சமாதிரி பயந்துட்டா. செரி ஒனக்குத் திறமை இருக்கன்னா, பாடப்புத்தகத்திலை இருக்கிற 30 கம்பராமாயணப் பாடல்களையும் பார்க்காமல் மனனம் செய்து ஒப்புவி என்கிறா. ஒரு வாரம் டயம் கேட்டேன். பகல் இரவுன்னு பார்க்காமா வெறியோட மனப்பாடம் செய்தேன். அம்பாளை அபிராமியாய் நெனைச்சுப் பாடிய அபிராமிப்பட்டர் போலன்னு வைச்சிக்கோங்க. ஒரு வாரத்துக்குப் பிறகு உன்மத்தத்தோடு ஒவ்வொருபாடலா அவாளிடம் ஒப்புவிக்கிறேன். அவாளும் புத்தகத்தை விரித்து வைத்து ஒவ்வொரு பாடலாய் சரியா என ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறா. முப்பதாவது பாடலுக்கு வந்திட்டேன். அவாளுக்குத் தான் தோற்கப்போகிறேன் எனத் தெரிந்துபோயிட்டுது...முகமெல்லாம் வேர்க்கிறது. சிவாஜி படத்தில, ஸ்ரேயா விரும்பிக் கேட்டிட்டாங்க என்பதற்காய் ரஜினி சார் வெள்ளைக்காரன் போல வந்து நிற்பாரில்ல...அப்ப ஸ்ரேயா முகத்திலை வருமே பதட்டம்..அதுபோல இவாள் முகத்திலையும் ஒரு பதட்டம் (ஆமாம் சார், நீங்க இப்ப திரைத்துறையிலதானே இருக்கீங்க. ரஜினி சாரை எங்கையாவது நேரிலை சந்தித்திருக்கிறீங்களா? எந்திரன் படத்தில் ரஜினி சாரின் நடிப்பு அருமை சார். தலைவர் பின்னிட்டாரில்ல)
முப்பதாவது பாடலிலை நிற்கிறேன். இனி அவாள் எனக்குத்தான் சொந்தம்னு தலைக்கனம் எனக்குள் ஏறிட்டீது. முப்பதாவது பாடலிலை கடைசி வரியைப் பிழையாய் ஒப்புவித்துட்டேன் சார். பகவானுக்கு தலைக்கனம் வர்லாம்...ஆனா மனுஷாளுக்கு வரலாமோ? இந்த வயசிலை தலைக்கனம் கூடாதுன்னு புரியிது. அந்த வயதிலை இதெல்லாம் புரியுமா? அம்பிகாபதி நூறாவது பாடல்ல சறுக்கி அமராவதியைத்த் தவறவிட்ட கணக்காய் நானும் என் அமராவதியையும் கடேசி வரியிலை தவறவிட்டு விட்டேன். ஆனா ஒன்னு சார். இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் என்று எனக்கு என் பதின்நான்காவது வயசிலையே புரிஞ்சிடுச்சு. பின்ன என்ன சார், கடைசிப் பாடலில் கடைசியில் வரியில் தவறுவதை... கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடுவாங்களா? ஆமா சார் அன்னைல இருந்து கம்பராமாயணமும் பிடிக்கிறதில்லை; பெண்ணுங்களுக்கும் என்னைப் பிடிக்கிறதுமில்லை. அதற்குப் பிறகு எந்தப் பெண்ணை லவ் பண்ணினாலும், ஒன்னு அவங்கள் தங்களுக்கு ஏற்கனவே பாய்பிரண்டு, கேர்ள்பிரண்டு இருக்காங்கள் என்கிறாங்க.... இல்லாட்டால்,கொஞ்சூண்டு காலம் லவ் பண்ணீட்டு என்னை அம்போன்னு கைவிட்டு யாரோ பின்னாலை ஓடிறாங்க. ஆமாம் சார், நீங்கள் மனசுக்குள்ள நெனைக்கிறது செரி. பிஞ்சிலேய வெம்பிட்டேனுங்க. 'சொல்லாமலே பிரமச்சாரியம் செய்'னு பெரியவா சும்மாவா சொல்வாங்க.
மத்துறு தயிர்'ல வருகிற ராஜம் மலையாளக் குட்டியை மறந்திட்டு பின்னாலை குடும்பஸ்தராய்ப் போயிருக்கலாம். ஆனால் எனக்கு அந்தக் கொடுப்பினை இன்னமும் வரலைங்க. அததற்கென ஒரு நல்லூழ் வேணுமா இல்லையா? இப்ப கூட, எந்தக் குட்டியைப் பார்த்தாலும் அது என்னிடம் கம்பராமாயணத்தை ஒப்புவிக்கக் கேட்டிரும்மோன்னு பயமாருக்கு சார். 'பயப்பிடாதைங்க, ஆற்றுல இறங்கினாத்தானே சுழி தெரியும்...கரையிலை நின்னு கதறக்கூடாது'ன்னு நீங்க சொல்றது என் உள்மனவெளிக்குத் கேட்கிது. 'தமிழ் தெரிந்தவங்கதான் கம்பராமாயணம் பத்திக் கேட்பாங்க...ஏன் நீங்க தமிழ் தெரியாத பெண்ணுக்கு முயற்சிக்கக் கூடாது'ன்னு கூட நீங்க கேட்கலாம். உண்மையைச் சொன்னா இந்த ஜெனிபர் பெண்ணுக்குக் கூட என் மேல ஒரு கண்ணு இருக்கு சார், . ஆனால் அந்த ஜெனீபர் பொண்ணு எங்கிட்ட ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்து ஒப்புவின்னு கேட்காதுன்னு என்பதற்கு என்ன உத்தரவாதம்? கம்பராவது பரவாயில்லை, இராமாயணத்தோடு நின்னுட்டாரு. ஆனா இந்த ஷேக்ஸ்பியரு எதோ வெறிநாய் கடிச்ச மனுஷன்கணக்காய் இல்ல, நிறைய புஸ்தகங்கள் எழுதிக் குவித்திருக்காரு....ஏன் எங்களின் பாஸ்க்கு கூட ஒரு மகள் இருக்கா...அஸினும் பாவனாவும் கலந்துருவாகி அசல் மலையாள குட்டியாட்டம் இருப்பா... அவ்வப்போது ஆபிஸுக்கும் வருகிறவா. நான் இன்னும் கல்யாணம் கட்டிக்கிடலைன்னு தெரிஞ்சுக்கிட்டு, 'ஹேய் மேன், ஆர் யூ ஸ்டில் வர்ஜின்'ன்னு கேட்டுக் கூடவே கண்ணுமடிப்பா. இப்படிக் கேட்கிறான்னா, 'உன்னை வர்ஜின் இல்லாமல் செய்யட்டுமா? என்பதுதானே அர்த்தம் சார். இந்த வெள்ளைக்கார பொண்ணுங்களே இப்படித்தான்...வெட்கம், மானம் எதுவுமில்லாது எல்லாத்தையும் திறந்து வைத்துக்கிட்டு திரிவாங்க. அதாவது பரவாயில்லை சார், சகிச்சுக்கிடலாம். இவங்கள் குடும்பமே அல்லோலயா கூட்டம்னு சொன்னேன் இல்லியா? புதிய வேதாகமம் பழைய வேதாகமம்னு ரெண்டையும் நிச்சயமாக வைச்சிருப்பாங்க... அதைப் பாடமாக்க வேணும்னு சொல்லிடுவாங்கள்ன்னு இப்ப நினைச்சாக் கூட வயித்தைக் கலக்குதுங்க. வேண்டாம் சார், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். நான் இப்படியே பிரமச்சாரியா இருந்துக்கிறன் சார். நகுலன், பிரமிள், ஏ.ஜேன்னு நிறையப் பேரு அப்படித்தானே இருந்திருக்கிறாங்க. அவங்களைப் போல இல்லைன்னாலும் ஓர் ஓரமாய் நானும் இந்தப்பூமியில ஒருத்தருக்கும் உபத்திரமில்லாம வாழ்ந்திட்டு போறேன் சார்.
இந்தக் கதையில, நீங்க தயிரைக் கடைகிறது பத்தி எழுதறப்போதான் எனக்கு பழைய நியாபகம் (ஆமா சார் 'ஞாபகமா', 'நியாபகமா' எது சரி? நிறையப் பேர் இணையத்துல 'நியாபகம்'ன்னு எழுதிறாங்க. சமீபத்தில தமிழ்நாடு அரசு ஏதாவது வார்த்தை மாற்றம் செய்தாங்களா... நான் தமிழ் படிக்கேக்க 'ஞாபகம்' என்றுதான் சொல்லித் தந்திருந்தாங்கள். அப்படி வார்த்தைச் சீர்திருத்தம் கலைஞர் அரசு செய்தாங்கன்னா, இந்தச் 'சிகிழ்ச்சை'யையும் மாற்றச் சொல்லவேணுங்க. எனக்குத் தெரியும் நீங்க எழுதுகிற தமிழ்தான் சரின்னு. அதனால்தான் நான் எப்பவோ 'சிகிச்சை' என எழுதிறதிலிருந்து 'சிகிழ்ச்சை'க்கு மாறிட்டேன். ஆனா பெரிய எழுத்தாளர்னு சொல்கிற எஸ்.ராமகிருஸ்ணன் சார் இன்னும் 'சிகிட்சை' ன்னு தவறாக எழுதுகிறார். அதாவது பரவாயில்லை. இணையத்துல பெயரிலியோ சுண்டெலியோன்னு எழுதுகிற ஒருவர் 'சிகிச்சை'ன்னு தான் இன்னும் எழுதுகிறார். அது தவறு 'சிகிழ்ச்சை'ன்னு எழுதுங்க எனச் சொல்லவும் பயமாயிருக்கு. இப்படி எதுவும் நல்லது சொல்லப்போனால் காளமேகப்புலவர் போல கவிபாடி அவர் என்னை வறுத்தெடுத்து விடுவாருங்க. பின்னே தீக்கோழி கணக்காய் மணலுக்குள்ள் தலையைப் புதைத்தால்தான் தப்பலாம். இங்கே மணலும் இல்லை, பனிக்குள்ளைதான் தலையை வைக்கவேண்டி வரும்.
பாருங்க, தயிரைக் கடைகிறதைப் பத்தி ஆரம்பித்து, தமிழைக் கடைகிறதிலை வந்து நிக்குது. நீங்க விபரிச்ச மாதிரி தயிரக் கடைகிறது சும்மா லேசில்லத்தான். அப்படிக் கஷ்டப்பட்டு தயிரக் கடைந்துகொண்டிருக்கிற பொண்ணுங்க கிட்ட நம்ம கண்ணன் குழப்படி செய்திருக்கின்றான் என அறியும்போது கண்ணன் மேல கூட கொஞ்சூண்டு வருத்தம் வருதுங்க. என்றாலும் அவன் பார்த்தசாரதி அல்லவா? நாம விதந்தோத்துகிற கீதையைத் தந்தவன் தானே, அதாலே பெருசா கோபம் அவன் மேல வரல்ல. ஆமா கீதைன்னு சொல்றபோதான் எனக்கு நியாபகம் வருகிறது. நான் 14 வயதுல காதலிச்ச பொண்ணுன்ன பெயரும் கீதா தாங்க. அதனால்தான் அந்தப்பெண்ணை மறக்கமுடியா வெப்பியாரத்தில் நான் தினமும் கீதையை எடுத்து வாசிக்கிறேன்னு நீங்க தப்பா புரிஞ்சிடக்கூடாதுங்க
தயிரைக் கடைகிற மாதிரித்தான் இந்தத் தொதல் கிண்டுகிறதும் (தமிழ்நாட்ல அத எப்படி அழைப்பாங்கன்னு தெரியலைங்க). எனக்குச் சின்ன வயசுல தொதல் தின்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அம்மாவை நச்சரித்துக் கொண்டிருப்பேனுங்க. அவங்களும் அலுக்காம எனக்குக் கிண்டித்தருவாங்க. இப்ப நீங்கள் அடிக்கடி டிரிப்பு, சினிமா, இலக்கியம்னு ஓடிக்கிட்டிருக்கும்போது, தானே சமைத்து, பிள்ளைங்களையும் பராமரித்துக்கிட்டிருக்கிற உங்க அருண்மொழி போல என் அம்மான்னு வைச்சிக்கோங்க. ஒருநாள் அம்மா, சித்த நேரம் அடுப்பில இருக்கிற தொதலைக் கிண்டடா என கரண்டியைத் தந்திட்டு ஏதோ வேற வேலை பார்க்கப் போனாங்க. நானும் இதென்ன பூமாதிரி வேலைன்னு கிண்டப்போனா, ஒரு செக்கன் சும்மா விட்டாலே தொதல், உருக்கி வைச்ச தார் மாதிரி ஒட்டிப்பிடிக்குது சார். ஒரு செக்கன் இடைவெளி இல்லாம கிண்டனும். நானும் கிண்டுறன் கிண்டுறன்...அது அப்படியே செங்கட்டிக் கல்லுப் போல வந்துருச்சுங்க. இவ்வளவு கஷ்டப்பட்டா அம்மா எனக்குத் தொதல் கிண்டித்தருகிறான்னு கவலை வந்துருச்சுங்க. அன்னைக்கு எடுத்த முடிவுதான்...இனிமேல தொதல் வேண்டாம்னு...இன்னைவரைக்கும் தொதல் பக்கம் போனதில்லை.. இப்ப நீங்க இந்தக்கதையிலை தயிரை இடையிலை கடைகிறமாதிரி நம்ம துக்கமுமன்னு சொல்றாப்போ, என்னாலை இனித் தயிரை சாப்பிடமுடியுமான்னு தெரியலை. ஏன்னா, தயிரைக் குடிக்கிறதும், துக்கத்தை எடுத்து எஙகளுக்குள் ஊத்திக்கிறதும் ஒன்னுன்னுதானே கமபன் சொல்கிறான். கம்பன் யாரு...அவன் மகாகவி. அவன் சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். கம்பன் சொன்னதுக்காய் இனிமேல் நான் தயிரைச் சாப்பிடுவதில்லைன்னு முடிவெடுத்திருக்கிறேன் சார். நம்ம மகாகவிக்கு இதைக்கூட நான் செய்யலேன்னா நான் தமிழ் படித்துத்தான் என்ன பயன்?
சார், இந்தக்கடிதத்திலை இதையும் சொல்லிடனும். மகாபாரத்திலை கர்ணனுக்கும் துரியோதனுக்கும் இருந்த நட்புக்கு அப்புறம் நான் பாத்துக்கிற தூயநட்பு உங்களுக்கும், அ.முத்துலிங்கம் சாருக்கும் இடையிலான நட்பைத்தான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கர்ணன் இருந்தப்ப, துரியோதனன் 'கோர்க்கவா விடவா'ன்னு கேட்டுக்கிட்ட மாதிரி, நீங்கள் ஒவ்வொரு கதையாய் எழுதித்தள்ளும்போது அ.மு சாரும், 'ஜெயமோகன் நான் இந்தக் கதையைப் பாராட்டி எழுதவா? அல்லது ஏற்கனவே யாரும் போதுமளவுக்குப் பாராட்டிவிட்டாங்களா'ன்னு மெயில் அனுப்பிக் கேட்பார் போலத்தான் எனக்குத் தோணுது. ஆனா சார், உங்களின் 'அறம்' கதையை. அ.மு சார் அவரது கதைகளை எழுதுவதைப்போல, எளிமையாகப் பாராட்டிவிட்டார்ன்னு கொஞ்சூண்டு வருத்தம் எனக்கு இருக்கு. ஏன்னா, 'அறம்' கதை பற்றிக் கூறும்போது இனி சிறுகதை எழுத விரும்புகின்றவர்கள் இந்தக் கதையை மட்டும் வாசித்தால் போதுமென மிக மெல்லிதாகப் பாராட்டியிருக்கிறார். ஆனால் நீங்க அதேபோல மூன்று அற்புதமான கதைகளை எழுதியிருக்கீங்க. நான் என்ன நெனைக்கிறேன் என்றால், 'இனி தமிழ் இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான். ஜெயமோகன் என்றாலே இனித் தமிழ் இலக்கியம் தான்' என அ.மு சார் சொல்லவேண்டுமென பிரியப்படுகிறேன்.
ஆனால் அ.மு சார் தமிழ்நதி என்கிறவங்ககிட்ட ஜெயமோகன் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர் என்று சொல்லியதில் எனக்கு முழு உடன்பாடே. சார், உங்களுக்கு விரைவில் நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்கமுடியா நம்பிக்கை இருக்கு. என்னுடைய ஒரு சின்ன வேண்டுகோள் சார். நீங்க நோபல் பரிசைப் பெறும்போது, எப்படி கொற்றவைக்கு இயல்விருதின் நாவலுக்கான பரிசு தரப்பட்டபோது, 'கொற்றவை இந்தப் பரிசுக்கு தகுதியானதே. அது எப்போதோ எனக்குத் தெரியும்' என ஞானச்செருக்கோடு செப்பியமாதிரி, நீங்கள் நோபல் பரிசு மேடையில், 'எனக்கு எப்போதே தெரியும் என் நாவல்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானது என்று, ஆனால் இதை இப்போது தாமதமாகத் தருவதால் நோபல் பரிசுக்கு அவமானமே தவிர என் படைப்புகளுக்கு அல்ல' என உலகைப் பார்த்துச் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்தான் இந்த வெள்ளைக்காரங்களுக்கும் உறைக்கும். இன்னொருபுறத்தில் அருந்ததி ராய்ங்கிறவுக்கும் மரணஅடி கொடுத்தமாதிரி இருக்கும். சார் இன்னுமொரு ரிக்குவெஸ்டு. நீங்கள் அந்த மேடையிலை இனி இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கான பெயரை 'அசோகவனம்'னு மாற்றக் கோரிக்கை விடுங்க. ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் வருடக்கணக்காய் அசோகவனத்தை எழுதிக்கொண்டிருக்கிறீங்க. எப்படியோ அந்தப் பெருங்காப்பியம் உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்தாற்பிறகுதான் புத்தகமாய் வெளிவரும் என்பது என கணிப்பு. ஆக, நோபல்காரங்க 'அசோகவனம்'னு இலக்கியத்துக்கான பெயரை மாத்திட்டாங்கண்ணா, உங்களுக்கு 2வது முறையும் நோபல் பரிசு கிடைக்க சான்ஸ் இருக்கு சார். எப்படின்னு கேட்கிறீங்களா? நோபல் பரிசையே 'அசோகவனம்'னு மாத்திக்கிட்டவங்க, உங்களின் 'அசோகவனம்' வெளிவரும்போது 2ந்தடவை பரிசைக் கொடுக்காவிட்டால், அவங்களுக்கு அல்லவா அவமானம்? ஒரு பேச்சுக்கு நாவல் மிகமோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் கூட உங்களுக்கு நோபல் பரிசு 2ந்தடவை கிடைக்கிறதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது சார். எப்படியெல்லாம் இப்படிச் சிந்திக்கிறேன்னுன்னு கேட்கிறீங்களா? எல்லாம் உங்க எழுத்துக்களை வரிக்கு வரி வாசித்து வாசித்து ஊறப்போட்டு எனக்குள்ளும் ஒரு குட்டி ஜெயமோகன் உருவாகிட்டு வாறான் என்பதற்கான அடையாளம் தான் இது.
சார், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பிடித்த இலக்கியவாதிகள் ன்னு ஒரு லிஸ்டு தயாரித்துத் தரமுடியுமா? ஏன்னு கேட்கிறீங்களா. எல்லோரையும் போட்டுத்தள்ளப் போகிறேனுங்க. சார் இதைக் கொலை வெறின்னு மட்டும் தயவுசெய்து பாக்காதீங்க, இது இலக்கிய வெறி சார். நீங்க தானே காலமான இலக்கியவாதிகள், மற்றும் மனிதர்களை வைத்து அவங்கள் இறந்திட்டாங்க என்ற தெகிரியத்துல அற்புதமான இலக்கியங்களை எழுதிகிட்டிருக்கீங்க. அவையெல்லாம் தமிழன்னைக்கு இடையில் கட்டிவிடுகின்ற ஒட்டடியாணம் போல ஜெகஜெகவென்று என்றைக்கும் ஜொலித்துக்கொண்டேயிருக்கும் சார். ஏன் லிஸ்டு கேட்கிறேன் என்றால், எனக்கு உங்களிடம் இன்னும் இதேபோன்ற அற்புதமான கதைகள் வரனுஙகிறது பெருவிருப்பம். ஆனால் என்னாலை இவங்கள் எல்லாம் காலமாகும் வரை -அதாங்க மண்டையைப் போடும்வரை- பொறுமையாக காத்துக்கிட்ட்டிருக்க முடியாது. நீங்க லிஸ்டைத் தந்தீங்கன்னா, நான் அவங்களை உடனேயே போட்டுத்தள்ளிவிடுகின்றேன். பிறகு நீங்கள் அவங்களை வைத்துச் சுடச்சுட இவ்வாறான அழியாப்புகழ் பெற்ற கதைகளை எழுதிடலாங்க. ஏனுங்க நாஞ் சொல்றது செரிங்கதானே?
நான் படிக்கிற காலத்திலை எங்கடை வாத்தியார் என்னுடைய நோட்டுப்புக்கைப் பாத்திட்டு 'என்னடா கோழி கிளறினமாதிரி எழுதியிருக்காய்' என்று திட்டுவார். அன்னைக்கு வாத்தி சொன்னது இன்னைக்கும் பலித்துக்கொண்டிருக்கிது. என்னாலை ஒழுங்காய் தமிழில் எழுதமுடியாததுமாதிரி, என்னாலை ஒழுங்காய் ஒரு மொழியில் நேர்த்தியாக எழுதமுடிவதில்லை. உங்களின் கதைகளில் வருகின்ற மாந்தர்கள் பேசுகின்ற மொழி போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால்தான் மேலே பல்வேறுபட்டவர்கள் பேசுகின்ற மொழியில் இந்தக் கடிதத்தை எழுதிருக்கிறேன். அதனால் தவறாக நினைக்கவேண்டாம்.
சார், உங்க விஷ்ணுபுரமும் எனக்கொரு இன்னொரு கீதை மாதிரித்தான். என் வீட்டிலை, வரவேற்பறையிலை, சமையலறையிலை, குளியலைறையிலை என ஐந்தாறு பிரதிகள எல்லா இடங்களிலும் வைத்திருங்கிறேனுங்க. மனசுக்குப் பிடித்த புத்தகங்களை எப்பவும் கைக்கெட்டியதூரத்திலை வைத்திருக்கனும்னு நீங்களும் சொல்லியிருக்கீங்க. அதோடு இன்னொரு காரணமும் இருக்கு சார். உங்களுக்கு கனடாவிலிருந்து கடிதம் எழுதும் லிங்கம் என்பவரும் தன் படுக்கையறையில் விஷ்ணுபுரம் வைத்திருக்கேன்னு எழுதுகிறவர். நான் அவரை விட ஐந்து மடங்கு மேலான வாசகரும், தீவிர வாசகரும்னு உறுதிசெய்யத்தான் இதைச் சொல்கிறேனுங்க.
இறுதியாய் இவ்வளவு நேரமும் பொறுமையாய் வாசித்ததாய் நன்றிங்க.
அன்புடன்,
குட்டி யாழ்ப்பாணத்தன்
(புனைபெயர்: விஷ்ணுபுரதாசன்)
(டிசேயின் குறிப்பு: 'இது கடிதம் அல்ல, காப்பியம்' என்றே குட்டி யாழ்ப்பாணத்தன் உபதலைப்பு வைக்கச் சொல்லியிருந்தார். அதைத் தவிர்த்திருப்பதைப் போன்று, இக்கடிதம் மிக நீண்டதாகவும், சில சர்ச்சைக்குரிய விடயங்களையும் கொண்டிருந்ததால் பல பகுதிகளைத் தணிக்கையும் செய்திருந்தேன். சிலவேளை அவர் ஜெயமோகனுக்கு முழுக்கடிதத்தையும் அனுப்பியிருக்கவும் கூடும். )
4 comments:
மிகப்பெரிய கடிதம். மன்னிக்கவும் என்னால் பாதிதான் படிக்கமுடிந்தது, பிறகு பொறுமையிழந்துவிட்டேன்.
அங்கதமுமில்லை , விமர்சனமுமில்லை ,காழ்ப்பு கூட நன்றாக வெளிப்படவில்லை, செமக்கடி , டிசே , நீங்களே ஏதாவது எழுதியிரருக்கலாம் , மொழியாவது நன்றாக இருக்கும்
இங்கு பயங்கர வெயில்:)))
No-பல் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர் என்று சொல்லியதில் எனக்கு முழு உடன்பாடே. :-))
--frying dragon
Post a Comment