Friday, January 19, 2007

*சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்

'புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்' என்ற சுஜாதாவின் நூல் சில்வருடங்களுக்கு முன் வெளிவந்தபோது பலவித எதிர்வினைகள் வந்திருந்ததை வாசித்தது நினைவு. உயிர்மையில் இருந்த பழைய கறள் மற்றும் யார் சிற்றிதழ் உலகில் அதிகாரத்திலிருப்பவர்- என்ற போட்டியில் ஒழுங்காய் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கக்கூடிய விவாதத்தை, காலச்சுவடு X உயிர்மை வெற்றுவிவாதமாய் அது முடிவடைந்திருந்தது.. இப்போது மதிவாணன் எழுதிய 'சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்' நூலிற்கான மதிப்புரையை வாசிக்கும்போது மதிவாணன் நேர்மையாக இந்நூலை அணுகியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

நன்றி: உங்கள் நூலகம் (கீற்று இணையத்தளத்தினூடு)
~டிசே
-----------------------------------------------------------

சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்
இராம.சுந்தரம்



“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”
(பிறம் : 195)

பல நூற்றாண்டுகாலப் பழமை உடைய நூல்களைப் புதிய நோக்கில், புதிய மொழிநடையில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இன்று பலரிடமும் காணப்படுகிறது. இதற்குப் பைபிளும் விதிவிலக்கன்று. கிரேக்க மொழியிலிருந்து 17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் King James ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இருநூறாண்டுகள் அது வழக்கிலிருந்தது. அதற்கு ஒரு திருந்திய பதிப்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. அந்த மொழி நடையைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் பைபிளின் மூலக்கருத்தில் சிதைவு ஏற்படாத வண்ணம், மொழிபெயர்ப்புப் பணி நடந்தது. இந்தப் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு 1964-இல் வெளியானது. அந்த நூலின் பெயர்: The New English Bible - New Testament. இதைத் தொடர்ந்து பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டது.

பழைய ஆங்கில மொழிநடையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல், கிரேக்க மொழிக்கல்வியின் சரிவு ஆகியன இதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. தமிழிலும் பைபிளின் பழைய மொழிபெயர்ப்பைத் திருத்தி, புதிய மொழிநடையில் மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலந்தோறும் மொழியிலும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலிலும் ஏற்படும் மாற்றங்கள் இந்தத் தேவைக்கான காரணங்களாகும். பழைய நூல்களின் மூலக்கருத்தின் உள்ளடக்கத்தில், சிதைவு ஏற்படா வண்ணம், புதிய மொழியில் அதை விளக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மு. வரதராசன், வ.சுப. மாணிக்கம், ச.வே. சுப்பிரமணியன், மார்க்க பந்துசர்மா, தமிழண்ணல், புலியூர் கேசிகன் எனப் பலர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் சங்க இலக்கியப் புத்துரை நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் நாவலாசிரியரும், கணினியியலாளருமான சுஜாதா திருக்குறளுக்கு விளக்கம் தந்த கையோடு, புறநானூறுக்கும் ஓர் எளிய அறிமுகம் தந்துள்ளார். அவரது புறநானூறு: ஓர் எளிய அறிமுகம் என்ற நூல் சில கடுமையான மதிப்பீடுகளை / விமர்சனங்களை எதிர்கொண்டது. அவற்றை முன்வைத்த அவரது எதிர்வினையும் ‘தடாலடியாக’ இருந்தது.

அவரது நூலுக்கு மதிப்புரை எழுதியவர்களுள் ஒருவர் ‘சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்’ என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் பா. மதிவாணன். ‘இந்தியாடுடே’ இதழில் (ஜூலை 9, 2003) வந்த அந்த மதிப்புரையின் விரிவான பதிவு இந்த நூலில் 76 பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

மதிவாணன் ஒரு நம்பிக்கையோடு சுஜாதாவின் நூலைப் படிக்கத் தொடங்கியதும், நூலுக்குள் உள்ள “குறைபாடுகளும் குளறுபடிகளும் தவறுகளும் தடுமாற்றங்களும் பிழைகளும்” அவரை அதிர்ச்சியடையச் செய்ததாகக் குறிப்பிடுகிறார் (பக். 17). மூலமும் உரையும், பலபொருள் ஒரு சொல், பழஞ்சொல்லே பொருளாதல், பிழையான பொருள், ஒலியொத்த சொல் பொருளாதல், நேர்மாறான பொருள், பிறழவுணர்தல், உவமையும் பொருளும், மையக்கருத்து மயக்கங்கள் என ஒன்பது தலைப்புகளில் ஏறத்தாழ 175 குளறுபடிகளை, தவறுகளை எடுத்துக்காட்டுகிறார். இறுதியில் உரை எழுத விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் பற்றி விரிவாக எழுதுகிறார். மனம் போன போக்கில் உரை எழுதுதல் மூல நூலைச் சிதைத்து அதன் பெருமையைக் குறைத்துவிடும் என்பது இதன் உள்ளீடாகும்.

அவர் சுட்டிக்காட்டும் குறைகளில் சிலவற்றைக் காணலாம்:- ‘தண்ணடை நல்கல்’ (பா. 312) என்பதை மூலபாடமாகக் கொண்டு “ஒழுக்கமுள்ளவனாக்குதல்” என சுஜாதா பொருள்தர, இந்தப் பொருள் “நன்னடை நல்கல்” என்கிற பாடத்துக்குரியது என்கிறார். உ.வே.சா. பதிப்பில் ‘தண்ணடை’ பாட பேதமாகத் தரப்பட்டுள்ளது. மர்ரே பதிப்பில் ‘தண்ணடை’ மூலபாடமாக உள்ளது. இதற்கு ஏற்ற பொருள், ‘வென்றவீரர்க்கு நீர்வளம் மிக்க மருத நிலம் நல்குதல்’ என்பதாகும் (பக். 24). இதைக் காட்டும் மதிவாணன் தண்ணடை நல்கல் என்பதே பொருத்தமான பாடம் என்கிறார். ஆனால், சுஜாதா தரும் பொருள்தான் பொருத்தமில்லை.

பல பொருள் ஒரு சொல் என்கிற பகுதியில், ‘அவன் எம் இறைவன்’ (பா.48. மதிவாணன் நூலில் பாடல் எண் விடுபட்டுள்ளது பக். 25) என்பதற்கு ‘அவன் தெய்வம்’ என்று சுஜாதா பொருள் காண்கிறார். இது பிழை என்றும், தலைவன் / அரசன் என்பதே சரி என்றும் கூறுகிறார். 145-வது பாடலில் வரும் ‘பாரமும் இலமே’ என்பதற்கு ‘வேலைச் சுமையும் இல்லை’ என்பது சுஜாதா தரும் பொருள். இதற்கு ஏற்ற பொருள் ‘சுற்றம்’ என்பதாகும். புறப்பாடல் 35, பதிற்றுப்பத்து பாடல் 14 இரண்டிலும் இடம் பெறும் ‘பாரம்’ என்பது ‘ஒருவரது குடியைக்’ குறிக்கும்.

குறிஞ்சிப்பாட்டில் இது ‘பருத்திப்பூ’வைக் குறிக்கும். ஆக, 4 இடங்களில் தான் ‘பாரம்’ சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது. தமிழ்ப் பேரகராதியில் 145-வது பாடலிலுள்ள பாரம் என்பதற்குப் பெருங்குடும்பம், Big Family, Considered a burden எனப் பொருள் தரப்பட்டுள்ளது. புறநானூறு சொல்லடைவு (வ.அய். சுப்பிரமணியம்) ‘பாரம், responsibility’ எனப் பொருள் தருகிறது. இது எந்த அளவு பொருத்தமுடையது எனத் தெரியவில்லை. ‘வேலைச்சுமை’ என்பது தற்காலத்துக்கேற்றதேயன்றி, சங்ககாலத்திற்கு ஏற்றதன்று.

இதே போல, ‘சான்றோன்’, ‘சான்றீர்’ ஆகிய சொற்களுக்கும் இடத்துக்கேற்ற பொருள் கொள்ள வேண்டும். ‘பல்சான்றீரே’ எனத் தொடங்கும் 301-வது பாடலுக்கு. சுஜாதா ‘பெரியவர்களே’ எனப் பொருள் தருகிறார். புறநானூறு சொல்லடைவு ‘அமைந்த குணங்களை உடையீர்’ எனப் பொருள் தருகிறது. இங்கு மதிவாணன் சுட்டுவது போல, இது ‘வீரர்களே’ என்ற பொருள் உடையதாகும். புறநானூற்றில் ‘சான்றீர்’ 3 பாடல்களில் 9 முறையும், ‘சான்றோர்’ 9 பாடல்களில் 10 முறையும், ‘சான்றோன்’ 2 பாடல்களில் 3 முறையும் ஆக 14 பாடல்களில் 22 இடங்களில் இடம் பெறுகின்றன. புறம் பாடல் 63, 301, 302 ஆகியவற்றில் ‘போர் வீரன்’ என்ற பொருளில் வருகிறது. பதிற்றுப்பத்தில் ‘சான்றோர்’ என்பது ‘வீரர்’ என்ற பொருளில் 3 பாடல்களில் (55,67,82) இடம் பெறுகிறது. புறம் பா. 312-இல் வரும் ‘சான்றோன்’ என்பது ‘வீரன்’ என்ற பொருளில் வர, ஏ.கே. இராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட் ஆகியோர் தங்களது மொழிபெயர்ப்பில் noble, noble man எனத்தரக் காணலாம். அந்த, முறையில் சுஜாதாவும் பொருள் தந்திருக்கலாம். ஆனால், புறநானூற்று உரை இவ்வாறு பொருள் தரவில்லை. இது ஒரு தனியாய்வுக்குரியது, மதிவாணன் இதை மேற்கொள்ளலாம்.

எளிய அறிமுகம் செய்ய விரும்பும் சுஜாதா பழஞ்சொற்களை அப்படியே கையாண்டிருப்பது தற்கால வாசகர் பிறழ உணர வழிவகுக்கும் என்கிறார் நூலாசிரியர். ஒன்றிரண்டு இடங்களில் சரியாகப் பொருள் தருவதையும் சுட்டிக்காட்டுகிறார். ‘மதிலைக் கடந்து’ (பா. 392, பக். 27) எனத் தருதற்குப் பதில், ‘மதிலைத் தகர்த்து’ என்பது எளிமையானது என்னும் மதிவாணன், சுஜாதா, பா. 11ல் ‘அரண்கடந்து’ என்பதற்கு ‘அரண்களைத் தகர்த்து’ எனச் சரியாக எழுதியுள்ளதைக் குறிப்பிடுகிறார். ‘மதில்களின் பக்கத்தில்’ என்பதற்குப் பதில் ‘மதில்களின் சிறைக்குள்’ (பா. 44) எனத் தருவதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்.

‘ஐம்பெரும் பூதம்’ (பா. 2, பக். 28) ‘மடிவாய் இடையன்’ (பா. 54, பக். 29) ‘கொண்டி’ (பா. 78, பக். 29) ‘ஐவனம்’ (பா. 159) ‘பருத்தி வேலி’ (பா. 299, பக். 30) ஆகியவற்றிற்கு முறையே ‘ஐம்புலன்’, ‘கோணல் வாய் இடையன்’, ‘படை’, ‘ஐவகைப் பயிறு’ எனப் பிழையான பொருள்கள் தரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி, இவற்றின் சரியான பொருள்களை (பஞ்சபூதம், சீட்டி ஒலி எழுப்பமடியும் உதடு, திறை, மலைநெல்) தந்துள்ளார், 22 இடங்களில் பிழையான பொருள் தரப்படுள்ளதைக் காட்டுகிறார்.

மள்ளர் - மல்லர், முயங்கினேன் - மயங்கினேன் என்பன போன்ற ஒலி ஒப்புடைய சொற்களில் சுஜாதா மயங்கியுள்ளதையும் காட்டுகிறார்.

தமிழ் இலக்கணப் பயிற்சி இன்மைகாரணமாக ஏற்படும் தவறுகள் முதன்மையானதாகும். சிறந்தன்று, ஒத்தன்று என்பன முறையே சிறந்தது, ஒத்தது எனப் பொருள்தரும். சுஜாதா இவற்றைச் சிறந்ததில்லை, இசைவல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டமைக்கு, இலக்கணப் பயிற்சிக்குறைவே காரணமாகும்.

பிறழஉணர்தல்: “இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா” (பா. 44) “கூட்டத்தோடு உழவர் குளம் இல்லாமல் - என்பது பிறழவுணர்தலின் உச்சம். தொழுதி - கூட்டம், கயம் - குளம், என்கிற இரு சொற்கள் தவிரப் பாட்டுக்கும் உரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண் யானைகள், பெண் யானைக் கூட்டத்தோடு பெரிய நீர்நிலையில் படியாதனவாக - என்பது பொருள் (பக். 35)” சுஜாதா 42 இடங்களில் பிறழ உணர்ந்துள்ளார்.

இன், புரையும், கடுக்கும், ஏய்ப்ப முதலிய உவம உருபுகளின் தன்மை அறியாது பொருள்கூறி வாசகர்களை மயங்க வைக்கிறார் சுஜாதா. “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு (பா. 111) - நீலமலர் அணிந்த கரியகண் விறலியர் (பிழை) கண்ணுக்கு உவமையாக வந்த மலரை விறலியர்க்குச் சூட்டி விடுகிறார் சுஜாதா (பக். 44).”

பா. 220- இன் மையக் கருத்தை உரையாசிரியர் சுஜாதா புரியாது இடர்ப்படுவதை எடுத்துக்காட்டுகிறார் (பக். 52).

குறைகளைச் சுட்டிக்காட்டியவர், சுஜாதா சில இடங்களில் குறிப்பிட்ட சில சொற்களுக்குச் சரியான பொருள் தந்திருப்பது பற்றியும் (பக். 27, 29) புறநானூறு, சங்க இலக்கியம் பற்றி அவர் சில தரமான நூற்களைப் படித்துள்ளது குறித்தும், அவரது சுயமான முயற்சி பற்றியும், நூலமைப்பு குறித்தும் பாராட்டுகிறார். சில இடங்களில் அச்சுப்பிழை காரணம் ஆகலாம் என்று கூறிச் சுஜாதாவைக் காப்பாற்றுகிறார்.

தமிழ்ச் செவ்விலக்கியங்களுக்கு உரைகாண முயல்வோர், அவற்றில் தக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; மூலபாடத்தைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும்; முந்தைய உரைகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வுரைகள் முதலியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; பழந்தமிழ் இலக்கண அறிவு தேவை; சொல்வழக்குகளில் போதிய அறிவு வேண்டும்; இலக்கியப் படைப்பின் காலச் சூழலை அறிதல் தேவை. இந்த உரைநெறி முறைகள் எல்லோருடைய கவனத்திற்கும் உரியன. உரை எழுதுவோர்க்கு மதிவாணன் தரும் இந்த நெறிமுறைகள் நல்வழிகாட்டியாகும்.

தமது மதிப்புரையைச் சுவை குன்றாமல், தக்க ஆதாரங்களோடு, ஓர் ஆய்வுரை போலத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. பா. 84, 192 ஆகியவற்றிக்கு இவர் தரும் விளக்கம் சிறப்பாக உள்ளது. தமது கருத்துக்கு ஆதாரமாகச் சில நூல்களை அடிக்குறிப்பில் தந்துள்ளதும் பாராட்டுக்குரியது.

‘கள்ளுடைமை ஆமூரின் வளத்திற்கு அடையாளம்’ / ‘கள்ளை மல்லனுக்குக் கொடுத்து மயக்கிவிட்டார் சுஜாதா (பக். 36)’ / “லேசான புதுக்கவிதைபோல் சொல்ல முயலும்’ சுஜாதா பழங்கவிதை நயத்தையும் கோட்டை விட்டதுதான் (உரை) கண்டபலன் (பக். 41)”.

“சுஜாதா வையாபுரிப்பிள்ளை முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதல்லாமல் வேறென்ன செய்வது?” (பக். 57).

இப்படி, மதிவாணன் உரை நடையில் ஒருவித கிண்டல், எள்ளல் தொனிகேட்கிறது. சுஜாதாவின் நூல்பற்றிய இந்த மதிப்புரை அனைவரது கவனத்துக்கும் உரியதாகும். பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவதாகச் சொல்லிக் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் உண்டு பண்ணுவதோடு, அந்த இலக்கியங்களின் சீர்மையையும் சுவையையும் குறைத்துவிடக் கூடாது. தம்மை முன்னிலைப் படுத்தும் நோக்கோடும் சில இலக்கிய மரபுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கோடும், சிலர் புதிய உரை / விளக்கம் தரமுற்படுகின்றனர். அணிந்துரையில் சு.வேங்கடராமன் கூறுவதுபோல இவை ‘ஒவ்வொன்றின் பின்னும் ஓர் அரசியல் உள்ளது.’ இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் என்ற நூல்வழி மதிவாணன் உணர்த்துகிறார்.

இந்த மதிப்புரையில் பக். 20-ல் சுஜாதாவின் ஐந்து வினாக்களுக்கு விளக்கம் தருவதன் மூலம் அந்த வினாக்களை விளங்கிக் கொள்ளலாம் என்கிறார். இந்த sudoku வுக்குப் பதில் வினாக்களைத் தந்து விளக்கத்தையும் தந்திருக்கலாம்.

பக். 23: சுஜாதா ‘ஆயிவாளர்’ (பா. 390) எனப் பாடம் கொள்ள மதிவாணன் ‘ஆயிலாளர்’ எனப்பாடம் கொள்கிறார். புறநானூறு சொல்லடைவில் ‘ஆயிவாளர்’ இடம் பெற்றுள்ளது. பொருள் தரப்படவில்லை. இது குறித்த விளக்கம் தேவை.

‘படப்பை’ (பா. 326) எனப்பாடம் கொண்டு சுஜாதா ‘மடையிலே பிடித்த’ எனப் பொருள்தர, இந்தப் பொருளுக்கு ஏற்றது ‘படுமடை’ என்ற பாடமே என்கிறார் மதிவாணன். உ.வே.சா. வையாபுரிப்பிள்ளை (சங்க இலக்கியம்) பதிப்புகளில் படமடை என உள்ளது. மடை = கீழ்மடை என்று புறநானூறு சொல்லடைவு பொருள் தருகிறது. பட என்பது தரப்படவில்லை. எது சரியான பாடம்?

பக். 50 புலைத்தி என்பதற்கு இரண்டு பொருள். ஒன்று புலைமகள். (பா. 259) மற்றது வண்ணாத்தி (பா.311) குறத்தி என்ற பொருள் பொருந்துவதாக இல்லை. சாமியாடுவது குறத்தியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புறநானூறு சொல்லடைவு இந்த இரண்டு பொருள்களையும் (புலைமகள், வண்ணாத்தி) தருகிறது.

இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள சில மதிப்புரைகள் தரமானவையாகும். மதிவாணனின் இந்த நூலை மதிப்பீடு செய்ததன் மூலம் நான் சில புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புத்துரை எழுத விரும்புவோர், புத்துரை படிக்க விரும்புவோர் என இருதரப்பினரும் இந்த நூலைப் படிப்பது காலத்தின் கட்டாயம்.

சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்

ஆசிரியர்: பா. மதிவாணன்,
வெளியீடு: குகன் பதிப்பகம்,
5, வி.கே.கே. பில்டிங்,
வடுவூர் - 19,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
விலை : ரூ. 75.00.

3 comments:

சுந்தரவடிவேல் said...

என்ன டிசே நீங்க! சுசாதா மாதிரி ஒரு அறிஞ்சர் எங்கே இந்த மதிவாணன் எங்கே?

சிறில் அலெக்ஸ் said...

பழைய இலக்கியங்களுக்கு புதிய அர்த்தம் காண்பது தேவையான ஒன்றே. பாரம் என்பதை இன்றைய கட்டத்தில் பொருத்திப் பார்ப்பது தவறானதாகத் தெரியவில்லை இருப்பினும் அதன் பழைய அர்த்தத்தை தந்தபின் இதைச் செய்வது நல்லது என நினைக்கிறேன்.

புறநானூற்றை எளிதில் புரியச் செய்யும்படி சுஜாதா எழுத நினைத்திருந்தால் இந்தப் பிழைகளை செய்தது தவறே.

இளங்கோ-டிசே said...

சுந்தரவடிவேல் :-).
.....
சிறில் நீங்கள் கூறுவதுபோல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிமையான அறிமுகங்கள வருவது வரவேற்கப்படவேண்டியதொன்றே. மூலத்தை நேரடியாகப் பேசும்போது கவனமாயிருக்கவேண்டும் அல்லவா? ஒரு மொழிபெயர்ப்பைச் செய்வதைப்போல சிரத்தை இதற்கும் வேண்டியிருக்கும். அப்படியில்லாதுவிடின் அதன் உயிர்ப்பும், மூலத்தை எழுதியவர் சொல்லவந்த கருத்தும்... திசைமாறிப்போய்விடும் அபாயம் உள்ளதல்லவா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பழ்ந்தமிழ் இலக்கியத்தை தழுவி வாசிக்கலாம்/எழுதலாம். ஜெயமோகன் சங்கப்பாடல்களைச் சாரமாய்க்கொண்டு சங்கச்சித்திரங்கள் என்ற நல்லதொரு தொகுப்பை அவரது வாசிப்பு அனுபவங்களினூடாகத் தந்திருக்கின்றார்.கலைஞரின் தொல்காப்பியப்பூங்கா கூட அப்படிப்பட்டது என்றுதான் புரட்டிப் பார்த்தபோது தோன்றியது.
......
எவராயிருப்பினும் தவறுகள் என்று ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்படும்போது அதை ஏற்று மாற்றங்களை செய்வதுதானே சிறந்தமுறையாகும். அதுவேதான் பழந்த்மிழ் இலக்கியங்களுக்கு கொடுக்கும் மரியாதையாகவும் இருக்கும்.