Thursday, February 08, 2007

தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும்

-யவனிகா ஸ்ரீராம்


சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கருத்துகளோடும் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு கவிதைத் தேவையை வழங்கிவிட்டுப் போனதையும் அதை தொடர்ந்த சிந்தனைப் பள்ளிகளையும் இன்றுவரை நம்மால் பார்க்க முடியும்.

1974ல் வானம்பாடிகள் ஆரம்பித்த சமூக, வரலாற்று பொருக்குகளும், மொழிப் பீறிடல்களும் ஊடக வளர்ச்சிப் போக்கிற்கிடையே பெரும் ஆரவாரம் பெற்றதையும் பல்கலைக்கழகக் கவிதை தொட்டியில் சாராய ஊறல்களாகி நாறியதையும், அதன் காய்ச்சப்பட்ட போதை வடிவுகளும் சினிமாத்துறையில் பெரும் விலைக்கு பரிமாறப்பட்டதையும் தமிழ்கூறும் நல்லுலகு நன்றியுடன் இன்றுவரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது.

ஆக தமிழனின் அறிவுத்துறைச் செயல்பாடு என்பது கவிதையைப் பொறுத்தவரை விளக்கெண்ணைய் வியாபாரமாகி பத்திரிகை மூலைகளிலும் லேஅவுட் செய்பவனின் விருப்பத்திற்கேற்ப பக்க இடைவெளிகளில் எறியப்பட்டு பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.

முற்போக்கு, நற்போக்கு என பல மாமாங்கமாக புரட்சிக் கவிதைகள் எழுதிய பூபாளப்பாடல்கள் எல்லாம் உலர்ந்த கனியின் கோட்பாட்டு வெடிப்புகளாகி காற்றில் பரவியபோது அதன் விதைகளை கையில் வைத்துக்கொண்டு சமரசச்சோலையை உருவாக்கும் வித்துகள் எனச் சொல்லியதோடு அதையே வெடிகுண்டாகவும் மாற்றியமைப்பதாக ஜம்பம் பேசியவர்கள் இறுதியில் அரசாங்க விருதுகள் எனும் ஈரச்சாக்கில் போட்டு அதை மூடிவிட்டு மேடையில் கைத்தட்டல்களுக்கு மட்டும் கவிதை சொல்லி ஆக்கப்பட்ட கவிஞர் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என ஆகிப்போனார்கள்.

இன்றைய சமகாலச் சூழலில் தீவிர மனோநிலையோடு இயங்கக்கூடிய கவிஞன் என்பதும் எல்லோரும் பயன்படுத்தும் மொழியை எடுத்துக்கொண்டு எவரும் சொல்லாதவற்றை சொல்லிவிட முயலும் புதிய மற்றும் மாற்றுப்பார்வைகளோடு கூடிய கவிதை என்பதும் சாத்தியம் இல்லாத சூழலில் ஒரு நூற்றாண்டுகாலக் கவிதை முற்றிலும் அரசாங்க அறிக்கைகளாகிப் போனதுதான் மிச்சம். இவர்கள் கவிதையைத் தெருவிற்கு கொண்டு வந்ததாக சொன்னாலும் தெருவிலிருந்து ஒரு கவிஞனும் உருவாகவில்லை. எதிர் கவிதைகள் கூட விமர்சனப் பார்வையை முன்வைத்து ஆளும் கருத்தியல் போக்கில், ஜனநாயக விளைவுகளை முன்வைக்க முனைந்தன என்றாலும் மாற்று இருப்புகள் கட்டற்ற விடுதலை உணர்ச்சி அதிகாரத்திற்கு எதிரான கலகம் போன்றவற்றை சூழலில் பிரித்தெடுக்க இயலாதவையாகிப்போயின.

வாழ்வின் மீதான நிலைத்தன்மையே இவர்களிடையே மொழிக்கவனம் பெற்றதல்லாமல் எதுவும் புதிதல்ல என்ற கீழைத்தேய ஏகாந்தமும் கற்பிதமான குடும்ப அலகும் கொண்டாட்டமில்லாத நிலமும் ஒரு குறிப்பிட்ட ஒற்றைத்தன்மையுள்ள கவிதையியலைத் தீர்மானித்திருக்கிறது எனலாம். ஏறக்குறைய முலைப்பாலூட்டிகளின் ஊட்டுதலுக்கான இயங்குதலே தமிழ்க்கவிதையின் உளவியல் என்றும் கூடச் சொல்லி முடிக்கலாம். சங்க இலக்கியத்திலிருந்து பெறப்பட்ட காதல், வீரம், அகம், புறம், தத்துவம், தாய்மை, சடங்கு வழிபாடு, பக்தி இலக்கியம் எல்லாம் இதற்குள்தான் அடக்கம். தமிழனுக்கு ஏதாவது ஒரு சக்தி தன் முலையை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எடுத்துவிட்டால் மூச்சுத்திணறி அழும் குழந்தைதான் அவனது கவிதையும்.

இதைப்பற்றிக் கவலைகொள்வது ஒருபுறமிருக்க 1960களில் மேற்கத்திய பாணியைப் பின்பற்றி கட்டற்ற கவிதைகள் எழுதவந்த நவீன கவிஞர்கள் மீதான ஒருபார்வைதான் நமது உண்மையான அக்கறையாக இருக்கிறது. இது இன்னும் ஜனரஞ்சகப்படாமல் ஒரு குறிப்பிட்ட சுற்றுக்குள் இயங்கிவருவதாலும் அதுமெல்ல மேற்சொன்ன நிலைக்கு நீர்த்துப்பரவி வருவதையும் நாம் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. மத்தியகால நம்பிக்கைகளான கடவுள், மதம், தந்தைமை, வீரம் போன்றவற்றின் மீதான நம்பிக்கையும் அவற்றோடு சமூக, அரசியல், பொருளாதாரம் பற்றிய அறிவற்று, இருப்பை குருட்டுத்தனமாக நம்புதல் போன்றவற்றில் இயங்கும் கவிதைகளை இன்னும் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இவ்வகையான சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியோடு நவீனத்துவத்திற்கு கலகப்பண்பாடான நிலையை மேற்கத்தியச் சூழலில் தீவிரமாகச் சாதித்துக் காட்டியவர்கள் கலைஞர்கள், அறிவொளிக்கால கலை இலக்கிய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது நாம் சொல்லாமலே புரியும்.

இவ்வாறான நவீனத்துவம் ஒருபுறமிருக்க இரண்டு உலகப்போர்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பேரழிவு போன்றவற்றால் ஐரோப்பிய சமூகம் உட்பட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் மத்தியகால நம்பிக்கைகளும் அறிவொளிக்கால எதிர்பார்ப்புகளும் தகர்ந்து சிதைந்து போனதை கணக்கில் எடுக்காமல் கலை உட்பட எந்த மாற்றத்தையும் ஆய்வு செய்ய முடியாது. மொத்த மனித உளவியலே இருப்பின் தீவிர அவஸ்தையை உணர்ந்தபோது விஞ்ஞானவாதம் முதல் பகுத்தறிவின் விளைவுகள் வரை அனைத்தும் கேள்விக்குள்ளாகின. அறிவியல் மற்றும் மதம் சார்ந்த அனைத்து லட்சியவாதங்களும் தகர்ந்து நம்பிக்கைகுரியதல்ல எதிர்காலம் என்கிற நிலை ஏற்படுகிறது. இந்தச் சூழலில் உருவான கலைஞர்கள்தான் காப்காவும், ஆல்பர்ட் காம்யூவும் உலகத்தின் அத்தனை இலக்கியப் போக்குகளிலும் ஒரு தளமாற்றத்தை பாய்ச்சலாக புகுத்தியதுதான் அவர் தம் படைப்புகளின் பங்களிப்பு அவை வாழ்வை அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் நிறுவின.

இப்போக்கினை உள்வாங்கும்போது அதன் வலியை உணரும் ஒரு கலைஞன் தனக்கு வாழும் காலத்தில் நேரப்போகும் கெடுபிடியை முன்னுணர்ந்து தனது படைப்பை அதன் பழைய போக்குகளிலிருந்து சரேலென உருவிக்கொண்டு முற்றிலும் புதிய வகையான மாற்றுத்தளத்தில் புனைவில் கற்பனையில் கனவில் இயங்க நேர்வதையே அவன் சமகாலத்து நவீனம் எனக் கொண்டாட முடியும். தவிர மேற்கத்திய வடிவத்தை மட்டும் கைக்கொண்டு 1960களில் உருவாக தமிழ் நவீன கவிஞர்கள் ‘வாழ்வு அபத்தம் என்ற போக்கை இந்திய மரபு சொல்லியிருக்கிறது. நிலையாமையை விட உயர்ந்த தத்துவம் எதுவும் இல்லை’யென்று உள்ளூர் சாதியங்கள் அல்லது மற்றதுகள் தன் இருப்பிற்கு தொந்தரவாக இருப்பதை மறைத்து ‘ஏகம்தான் வாழ்க்கை’ என மேட்டுக்குடி ஆசிரியர்களாகி தங்கள் கவிதைச் செருக்கை முன்வைத்து, அதிகாரம் செய்தார்கள். இதுவே தமிழ் நவீன கவிதையின் வரலாறும் இயங்கியலும் கவிதையிலுமாக இருக்கிறது.

நவீன இருப்பு என்பது மேற்சொன்ன எதன் பிடியிலும் இல்லை. அனைத்து வகைத் தொழில்நுட்பங்களும் ஏகாதிபத்திய வளர்ச்சியும் ஓருலகு ஒரே நிறுவனம் என்ற கொடூரத்தின் கீழ் நம்மை மந்தைகளாக கணித்து வைத்திருக்கும்போது அறியமுடியாத அதன் நெருக்கடிகளிலிருந்து எழும் ஒரு கவிஞன் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு புதியதளத்தில் அத்துமீறி சஞ்சரிக்க வேண்டியதிருக்கிறது. அதற்கான வலியை உடையவனே சமகால நவீனத்தைப் படைக்க முடியும். ஆக, எதையும் மறுவுறுதி செய்யவேண்டிய அவசியமில்லாமலும், தத்துவத்தின் பிடியிலிருந்து விலகியும், அடங்க மறுத்தும், மொழியின் அதிகாரச் சொல்லடைவுகளைத் தகர்த்தும் எல்லாம் வார்த்தைகள்தான் என அறிந்தும் ஒரு குழந்தைமை விளையாட்டில் குரூரத்துடனே ஈடுபடவேண்டியிருக்கிறது.

வலியே வன்முறையையும் ஒழுங்குச் சிதைவையையும் உருவாக்குகிறதெனில் சமநிலை குலைக்கும் ஒரு கவிஞன் உருவாகாத நிலம் செயலூக்கமற்ற மொழியையும் மொண்ணைத்தனமான நிறுவன இருப்பையுமே தேசிய மனச்சாட்சியாக வைத்துக் கொண்டிருக்கும் என்பதைத்தவிர நாம் சொல்ல என்ன இருக்கிறது. ‘‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதால் ஏன் என் பெயர் சொல்லப்படவேண்டும்’’ என்ற ப்ரக்ட்டுக்கும் ‘‘பசித்தவன் முன்பு வெந்த முட்டையோடு உடையும் சத்தம் கொடியது’’ என்று எழுதிய லாக்ப்ரெவர்க்கும் இடையேதான் இன்றைய நவீன கவிதை மேலெழும்புகிறது. பாழ்நிலம் எழுதிய டி.எஸ்.எலியட் முதல் பாரதி எழுதிய ‘‘சோற்றுக்கா வந்தது இந்தப் பஞ்சம்’’ தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ வரையிலான கவிதைகள் சூழலில் எங்கே தொலைந்து கிடக்கின்றன என்பது புதிரானது. மொழி, உருவம், உள்ளடக்க உத்தி போன்றவற்றில் கச்சிதமான கவிதை தேடுபவர்கள், தமிழ்ச்சூழலில் தங்கள் தத்துவமான அரிப்பிற்கு கவிதை விரித்துக் கொண்டுபோவது உயர்குடி கேளிக்கையின் கொலைபாதகம்தானேயொழிய நவீனம் என்று சொல்லுவதெல்லாம் வெகுளித்தனமான எளியவைகளின் மீதான வன்முறை என்றதான் புரிந்துகொள்ள முடியும்.

பெருகிவரும் தாராளமயப்போக்கும் மூன்றாம் உலகங்களில் மறைக்கப்படும் வறுமையும் அமெரிக்க அரசியல் வன்முறையும் தற்கொலைகளும் வாழ்வின் சிதைவுகளையும் குடும்பம், அரசு, கோவில் போன்றவற்றின் பிடியிலிருந்து விலகி ஓடி மாற்று இருப்புக்கொள்ளும் உதிரி நிலைகளையும் பாலியல் வகைமைகளையும் உடல்மீதான கண்காணிப்பையும் பேசாத கவிதையானது படிமம், வடிவம், கச்சிதம் எனப் பழங்குப்பைகளை நவீன உறைக்குள் இட்டு நிரப்பி தொழில்நுட்ப புத்தக வடிவங்களாய் நம்முன் கொட்டுவது நியாயமற்றது.

நவீன கவிதைகளைப் படிக்க ஆர்வமில்லாதவர் மற்றும் அதுபற்றியே தெரிய விரும்பாதவர்களுக்கு எவரும் எதையும் முனைந்து சொல்லவேண்டியதில்லை. ஆனால் நவீன கவிதையே புரியவில்லை என்பவர்களில் பாசாங்குக்காரர்கள்போக புரிய ஆர்வமுள்ளவர்கள் மீது படைப்பாளிகள் எதிர்வன்முறை செய்வது தேவையற்றது. காரணம் பூடகமான மொழிதலில் விடுபட்டு எளிய நேரடித்தன்மையை நோக்கி கவிதை வந்துவிட்ட சூழலில் படிமங்களையும் காலம்-வெளி, போத அபோதங்களையும் மெய்யியல் கவிஞனுக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் மற்றதனோடு உறவு கொண்டிருக்கும் தனது நிஜமான இயல்பை மறைத்துக்கொண்டு தனித்துவம் கோருவது தீர்மானிக்கவும் அனுபவிக்கவுமான எதனுடைய உரிமையிலும் மொழி வழியாகத் தலையிடுவதில்தான் முடியும். அதைவிட நவீனகவிதையை அறியாத ஒருவனின் இருப்பு மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் அனுபவிக்க வசப்படுமேயானால் அவனை கீழிருப்புச் செய்து தன்னை மேல்நிலையாக்கம் செய்துகொள்ள முயற்சிக்கும் எந்தவொரு கவிதைச் செயல்பாடும் அனாவசியமானதுதான்.

பிறகு நவீனகவிதை என்பது ஒரு மொழி விளையாட்டுத்தான் எனவும் இதுவரை மொழிந்துபட்டவைக்கும் இருப்பிற்குமான உறவுகளை நம்பி வந்த மரபை உடைத்து மறுபடியும் மொழியுடன் மொழியை வைத்து அர்த்த உடைப்புகளில் எவரும் ஈடுபடலாம் என்பதே எல்லா நவீன இலக்கியங்களுக்கு நாம் பொருத்திப்பார்க்கச் சுலபமானது. ஒரு படைப்பாளி கோரும் இடத்தைவிட அவன் மொழியில் ஒளிந்துள்ள இடமே விளையாட்டின் முதல்நிலைக் கண்டுபிடிப்பாகிறது. யாவும் சந்தேகத்திற்குரியதும் கேள்விக்குட்பட்டதுமாகுமெனில் மொழி படைப்பாளியின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டே தனக்குள் ஒரு அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டு தோன்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

மொழியைச் சரியாகப் பயன்படுத்தபவன் அல்லது மொழியின் கூடுதலான தகவலைப்பெற்றவன் அதிகாரத்தின் மேல்நிலையாக்கத்தை எளிதில் பெற்றுவிடுகிறான் என்பதே அரசியல் கலை, இலக்கிய வரலாறு. எவ்வளவுதான் நுட்பமானவனாகவும் தேர்ந்த படைப்பாளியாக இருந்தாலும் மொழியின் அதிகாரச் சூசகங்களை தன் பிரக்ஞையிலிருந்து கழற்றுவதற்கு தேவையான வெகுளித்தனத்தை பெற்றிருந்தாலொழிய அவன் மொழியை வேறுதளத்திற்கு நகர்த்த முடியாது. கூடுதலான மொழி அறிவிற்கு இப்படியும் ஒரு நுட்பமான ஒரு தேர்வு இருக்கத்தான் வேண்டும். இது தேவையில்லையெனில் மொழி அதன் கதியில் தேர்ந்த படைப்பாளியையும் வீழ்த்திவிடும். நான் நாளைக்கு வந்தேன் என பதில் சொல்லும் குழந்தையின் மொழிச் சிரிப்புதான் வெகுளித்தனத்தின் துவக்கமாக இருக்கிறது.

ஒரு வர்த்தகக் காலனியான மூன்றாம் உலகத்தில் கவிதை எழுதும் ஒருவனுக்கு தன் வாழ்வின் நெருக்கடிகளுக்கான அடிப்படைத் தகவமைப்பு போதுமானதாக இருக்கும்பட்சத்தில் கலையின் உன்னதங்கள் பற்றி பேசிக்கூடுவது இலக்கிய தோட்டமாகலாம். ஆனால அரசியல், பண்பாட்டு, கலாச்சார மத ஒடுக்குதல்களுக்கும் குடும்பக் கற்பிதங்களில் நிகழும் வன்முறைக்கும் எந்நிலையிலும் விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் கோரும் பொருளாதார வன்மங்களுக்கும் ஆளாகும் ஒருவன் தன்மீதான கண்காணிப்பிற்கும் பொதுப்புத்திசார்ந்த மதிப்பீடுகளுக்கும் எதிராக மொழியைச் சிதைப்பதற்கும், சட்ட, நிறுவனக் கோட்பாடுகளுக்கு அகப்படாத உயிரிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அதிகாரத்திற்கு எதிரான குற்றச் செயல்களை புரிவதற்குமாகச் சேர்த்து கலையின் வெகுளித்தனங்களை முன்வைப்பது தவிர்க்க முடியாதாகிறது.

நாம் வசிக்கும் பகுதி அமெரிக்காவின் ஒரு வர்த்தகக் காலனி எனில் அதை அப்படியே அமெரிக்க நலன்களுக்கு தாரைவார்த்துவிட்டு தன் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளத்துடிக்கும் உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு எதிராக பேய்சிரிப்புடன் ஒரு கலகம் செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்கச் சுரங்கப்பாதை வாசிகளும் ஜிப்சிகளும் வந்தேறிகளும் அம்மண்ணில் ஆளும் வாழ்விடத்திலிருந்து துவங்குவதுதான் சமநிலை குலைக்கும் ஒரு காலனித்துவச் செயல்பாடாக இருக்க முடியும். ஏறக்குறைய அமெரிக்க மனம் கொண்ட பொதுப்புத்தி வளர்ந்து வரும் இன்றைய இந்தியனுக்கு மரபு, தொன்மங்கள் இவற்றிலிருந்து அவன் இருப்பை ஞாபகப்படுத்தவது காலவிரயமாகத்தான் முடியும்.

பன்னெடுங்காலமாகவே அரசியல் ஆளுமைக்கூறு இல்லாத இந்திய மனம் அடிமையாக இருப்பதையே தொடர்ந்து மறுவுறுதி செய்துகொண்டிருக்கிறது. இங்குதான் தமிழ் நவீனகவிதை எல்லாவற்றிலிருந்தும் சரேலென உருவிக்கொண்டு ஒரு பாய்ச்சலாக வெளிப்படுகிறது. வரப்போகும் அமெரிக்கவியத்திலிருந்து தன் மனிதமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் வளர்ந்துவரும், ஏகாதிபத்திய நலன்களில் பங்குபெற தனக்குள்ள உரிமையைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்ந்துவரும், ஏகாதிபத்திய நலன்களில் பங்குபெற தனக்குள்ள உரிமையைக் கம்பீரமாக வெளிப்படுத்தவும் தான் இதுவரை சுயமென நம்பிவந்த சாதிமான், தேசியவாதி, நற்குடிமகன், குடும்பப்பொறுப்புடையவன், கடும் குடிகாரன், பைத்தியக்காரன், நேர்மையற்றவன், பணிவற்றவன், நன்றிகெட்டவன், விசுவாசமற்றவன், சோம்பேறி, சந்தர்ப்பவாதி, பொறுப்பற்றவன், அரசு வருமானத்திற்கு உதவாதவன், ஊர்சுற்றி, நிலையில்லாதவன், கலைஞன் எனப்பெயரெடுக்கவும் நவீன கவிதை புதிய குணரூபம் கொள்கிறது. இவ்வாறு பெயரெடுப்பதைவிட அவன் தற்கொலை செய்துகொள்வதே மேல் என நினைக்கும் பொதுப்புத்திகளுக்கிடையே கலைஞர்களை கொலையாளிகளாகவும் இனம்காண வரலாற்றில் படைப்பாளியின் உருவம், உள்ளடக்கம், உத்திசெயல்படுகிறதேயொழிய அறிக்கைகளை கவிதைகளாகச் செய்து கொண்டிருப்பவன் நிலையாமை, மாயை, துறவு, ஆன்மீகம் என செயலூக்கமும் கொண்டாட்டமும் உள்ள ஒரு மனித தொகுதியையே பலகீன மந்தைகளாக்கி வீரியமிழக்க வைக்கிறான் என்பதைத் தொடர்ந்து எப்படிச் சகிக்க முடியும்.

ஆகவே 2000க்கு முன்பாக தமிழில் நவீனக்கவிதை எழுதியவர்களில் ஒரு சிலரைத் தவிர, சரியாக சொல்ல வேண்டுமானால் ஒருசில கவிதைகளைத் தவிர வாழ்வை அடையாளப்படுத்துவதாகச் சொன்ன அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் ஒருசேர நவீனத்தன்மையை இழக்கிறது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் குறித்தும் இன்னொரு சமயத்தில் பேசுவதையே இந்த கட்டுரை விரும்புகிறது. வலி நிறைந்தவனுக்கு அடையுமிடமும் தெரியும் வெளியேறும் வழியும் புரியும். வாழும்போது கற்றுக்கொள்ளுவதுதான் சுதந்திரம், இருப்புறுதி, விழைவுறுதி கொண்டாட்டம் போன்றவைகளேயன்றி எதிர்காலத்தில் கிடைக்குமென நம்பி நிகழ்காலத்தில் செத்து மடிவதல்ல. மற்றபடி எந்த நிறுவனமும் வாழுவதற்கான உறுதிப்பத்திரங்களை தந்து கொண்டிருப்பதில்லை. குற்றத்திற்கான தண்டனைகளை மட்டுமே அவை நிச்சயப்படுத்துகின்றன.

நவீன கவிதை தொடங்கும் புதிய புள்ளியும் அதுவே. அது அதிகாரம் பற்றிய அல்லது கடவுள் பற்றிய கேலிச் சித்திரங்களாகவும், பாலியல் விழைச்சுகளாகவும் அர்த்த மறுப்புகளாகவும், அனுபவத்தின் மீதான கிண்டல்களாகவும், அருவருப்பூட்டுவதாகவும், திகட்டலாகவும், சமநிலை குலைப்பதாகவும், ஒழுங்கற்ற பயனற்ற மொழி விளையாட்டாகவும் புனிதமற்றதாகவும், உருவம், உள்ளடக்கம், உத்தி போன்றவற்றை குழப்பியும் சிதறியடித்தும் திருகியும் மருகியும் வெருண்டும் மிரண்டும் அதிர்ந்தும் அமைதியற்றும் அச்சுறுத்தியும் வெளிப்பட்டு வரும் எனில் அதற்கான மாற்றுவழியை துணிச்சலோடு எந்த அதிகார கருத்தியல் நிறுவனமும் ஏற்படுத்தி தராது என்பதே அறமற்ற இன்றைய சமகாலச் சூழல். எனவே இந்த தாராளமயச்சூழலில் ஒருவன் இரண்டு கைநிறைய புளிய விதைகளைத் தரும்போது அவனுக்கு ஒரு இறக்குமதிபானம் மறுக்கப்படுமேயானால் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு கலகத்தை ஆரம்பித்து விடவேண்டியதுதான். அவனது மொழியும் அதற்கு உதவுமேயானால் நவீனக் கவிதையைவிட வேறென்ன இருக்கிறது அவன் வாழ்விற்கு.

நன்றி: புது விசை
........................................................

காலம் இதழில் ஜெயமோகன், சு.வியின் கவிதைகளை முன்வைத்து எழுதிய கட்டுரையில் - அகம் சார்ந்த கவிதைக்ளே மட்டுமே நவீன கவிதைகள் - என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியபோது, அப்படி மட்டும் பார்க்கமுடியாது என்றவகையில் சில குறிப்புகள் எடுத்து ஒரு பதிவு எழுத விரும்பியிருந்தேன். கிட்டத்தட்ட இந்த அகஞ்சார்ந்த விடயத்தில் ஈழத்துச் சிறுகதைகளை முன்வைத்து ஜெயமோகனோடு -பிற நண்பர்களோடு இணைந்து- பதிவுகள் விவாதக்களத்தில் விவாதித்தது நினைவுவர -அமைதியாயிருப்பதே சாலவும் சிறந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி ஆனதால், 'எழுதுவதை நிறுத்தியிருந்தாலும் இன்னும் இன்ரநெட்டில் திட்டுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை' என்று ஜெயமோகன - விகடனில்- ஆதங்கப்பட்டவர்களின் பட்டியலில் வராமற்போனது ஒருவகையில் மகிழ்ச்சிதான். ஜெயமோகன் தொட விரும்பாத/மறுத்த புள்ளிகள் சிலதை யவனிகா ஸ்ரீராமின் இந்தக் கட்டுரை கவனப்படுத்துகின்றது என்பதோடு நவீன கவிதைகள் எழுதியவர்கள்/எழுதுபவர்கள் பட்டியலையும் மீள்பரிசீலனை செய்ய இக்கட்டுரை கோரி நிற்கிறது.

யவனிகா ஸ்ரீராம், நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களில் ஒருவர். 'சொற்கள் உறங்கும் நூலகம்', 'கடவுளின் நிறுவனம்' போன்ற தொகுப்புகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்திருக்கின்றன. மொழியின் அரசிய்ல குறித்து அக்கறைப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்ற யவனிகா ஸ்ரீராம், 'அவ்ன்' பாலில் மட்டுமே பேசுவது முரண்நகைதான், கவனம் எடுத்திருக்கலாம்.... ~டிசே )

3 comments:

தமிழ்நதி said...

"அவன்'பாலில் மட்டும் பேசுவது முரண்நகைதான்"
கவிஞன்(கவிதாயினி என்பதெல்லாம் சும்மா சும்மா),பத்திரிகையாளன் இன்னோரன்னவற்றிற்கு பெண்பால் என்ன? விதவை,தேவடியாள்,கற்புக்கரசி என்பதற்கெல்லாம் ஆண்பால் என்ன...? 'நெஞ்சு பொறுக்குதில்லை'என்று சொல்வதன்றி வேறேது இயலும்?

Anonymous said...

தமிழன் என்பதைவிட்டுவிட்டீர்களோ? ;-)

டிசே தமிழன் said...

நதி, யவனிகா சிறிராமின் கவிதைகள், இன்னபிற எழுத்துக்களை ஒரளவு வாசித்தவன் என்றவளவில் - வேறு சிலரைப்போல வேண்டுமென்றே இதைச் செய்திருக்கமாட்டாரென்று- நம்புகின்றேன்.
......
அநாமதேய நண்பர்: தமிழன் மாதிரி ஒருவன் என்று இன்னும் பல சொற்கள் மேலே இருக்கின்றன் :-).