Thursday, February 08, 2007

*சாரங்கன் கவிதைகள்

வேள்வி 2006

வெளிநாட்டிலிருந்தும்
உள்ளூரிலிருந்தும்
வேலைகளை விட்டுக்கொடுத்து
வந்திருக்கிறது
கூட்டம்.

சப்பாத்து, கழுத்துப்பட்டி
கைமூடிய சட்டைகளைத் துறந்து
சண்டிக்கட்டுடன்
கிடாய் பார்த்துத் திரிகிறது
HIACEகளில் ACஐ
நிறுத்தாமல்

கைச்சங்கிலிகளில்
கழுகையும், ஒலிவ் இலையையும்
அழகுக்காய் பொறித்திருக்கின்றனர்

இந்தமுறை
கிடாய்கள் 'கணாவத்தை”
போகாது.
உயர்பாதுகாப்பு வலயத்திற்கிப்பால்
மழைக்கால வெள்ளம் வடியும்
வாய்க்கால்களில்
சின்னவுயிர்களை
அறுத்து தின்னவேண்டியிருந்தது

எவருமே வருவதற்கான
தேவைகள்
இல்லாமல்
நிதமும் நடக்கிறது
வேள்வி
எங்களூர் ஒழுங்கைகளின்
புளியமரங்களினடியில்
முன்வினைப்பயனாக
சாராயம் பருக்காமலே
வெட்டப்படுகின்றன
மனிதக் கிடாய்கள்.


குரங்குப் பரம்பரை

தீப்பிடித்துவிட்டது எங்கள் வால்.
சாப்பிட்ட கோப்பையில் எச்சமிட்டதாக கூறி
கொளுத்திவிட்டார்கள் பலபேர் சேர்ந்து.

ஒவ்வொரு ஊராக
ஒவ்வொரு மரமாக
ஒவ்வொரு உயிராக
எரித்துக்கொண்டிருக்கிறோம் இயலுமட்டும்
புரிந்துணர்ந்துதான் பேனா பிடித்தோம்
கதிரைகள் தராதபோது
வாலைச்சுருட்டி பீடமாக்கி
அமர்ந்துகொண்டோம்
பின்புறம் சுடுவதை பொருட்படுத்தாமலே

தகிக்கின்ற வாலை
யாருடையதாவது வாய்க்குள் விட்டு
ஆட்டவேண்டும்
என்றுதான் எங்களுக்குக் கட்டளை
ஆனாலும்
நாங்கள் கொழுத்த வேண்டிய ஊர்கள்
துருவங்களிலும் இருக்கின்றன.

எரிகின்ற வாலுடன் விமானங்கள் ஏறி
சமரசங்கள் பேசி சராசரங்கள் ஆள்கிறோம்.
கிறிஸ்துவுக்குப் பின்னர்
எரிந்துகொண்டிருப்பது எங்களின் வால்
ஒன்றுதான்.

தகனவிதிகளை மீறி
எரிபொருள் இல்லாமல்
வளியும் இல்லாமல்
சொரிந்துகொண்டிருக்கும் சூடு
எங்கள் வால்த்தீப்பந்தத்தில்

வேதாளமாகி முருங்கையில்
முனியாகிப் புளியில்
யட்சணியாகிக் காற்றில்
கொழுந்துவிட்டுகிறது
வால்

பாதாளத்திலும் ஆகாசத்திலும் இருந்துதான்
இனி வரவேண்டும்
எங்கள் எழுந்தருளிக்கு கொம்பு பிடிக்கும்
கூட்டம்
நாங்கள் பிடிப்போம்
தீப்பந்தம்


கடுங்காவல்

நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள்
ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் ஒருவராக.
கிளைகள் வெட்டப்பட்ட மரங்களின் நிழலிலும்
கிடுகுவேலிகளில் சாய்ந்த படியும்
வெயிலுக்காக கண்களைப் பூஞ்சியபடியே
சுட்டுவிரல்கள் மாத்திரம் தெறிவினையாக
சுடுவதற்கு தயாராக இருந்தன

இரும்புத் தொப்பிக்கு கீழாக
தலைமயிரும், மனித மூளையும்
இருக்கத்தான் செய்கின்றன

வெறும் தேநீருக்காக அதிகாரத்துடன்
அவர்கள் வீட்டுப்பெண்களுக்கு
ஆணையிடும் பாணி அலாதியானது
சிலசமயம் பால்தேநீரே கிடைக்கும்
சீனி குறைவாகவும் தாய்மை நிறைவாகவும்

ஒருவன் சாப்பிட ஒருவன் காவல்
உதட்டில் ஒட்டிய சோற்றுப்பருக்கையை
நாவால்
லாவகமாக உள்ளெடுக்க நேரமில்லாமல்
அடுத்தவனுக்குக் காவல்
சூரியனைப் பிடித்து ஆலமரம்
தொங்கிக் கொண்டிருந்த மாலை
விழுதுகளில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன

அடிவயிற்றைக் கலக்குகின்ற சத்தம்
கண்ணை மறைக்கும் புகையும்
கந்தக வாசமும்
மனிதரும் மிருகமும் இல்லாத வெளிவும்
சில நிமிடங்களில் நிறைவுக்கு வந்தது.

சாயரட்சைப் பூசையில்
வசந்தமண்டப வாயிலில்
பந்துவராளியில் தேவாரம் பாடிய பெரியவர்
செத்துக்கிடந்தார்.
அதே கிடுகுவேலி
அதே கிளைகள் வெட்டிய மரம்
அனலடிக்கும் தார்வீதி
அவர்கள் காவலுக்காகவே இருந்தார்கள்

காலை ஒன்பது மணிக்குப்பிறகு
நீதவான் வந்து பெரியவரை
ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் வரை
தார் வீதியின் வெக்கையை
முகத்திலே அப்பிக்கொண்டு
அவர்கள்
கடுங்காவலுக்காகவே.


திருவிழா விடுமுறை

மஞ்சள் நிறப்பூக்களில்
தேனெடுக்கும் ஞாபகத்தில்ப்
பாடிக்கொண்டேயிருக்கின்றன
வண்டுகள்

கோவிலின் கதவிடுக்கில்
கண்களை வைத்து
மூலஸ்தானம் பார்த்து இரக்கிறாள்
ஒரு சிறுமி

பிச்சைக்காரர்களைத்
தாண்டிச்சென்று
கச்சான் வாங்கிக் கொறிக்கும்
பசார்க் கடை முதலாளி

திருவிழாவுக்காக மைபூச
வெளிக்கிட்டு,
கோபுரத்திலிருந்து புறாக்களையும்
பிரகாரத்திலிருந்து வெளவால்களையும்
விரட்டியாகிவிட்டது.

பட்டாம்பூச்சிகளின் மாமிசமுண்ணும்
கனவுகளைத் தாண்டி,
களைகட்டுகிறது திருவிழா.
லீவு விண்ணப்பத்தை
நிரப்பி வைத்துவிட்டு
சுற்றுலாச் சென்றிருக்கிறார்
கடவுள்.


சாறணைச் சங்கம்

தரவைகளில் பூக்கின்ற
சிறுசெருஞ்சிப் பூக்களையும்
கறிக்கு வருகின்ற பைரியையும்
சாறணையையும்
தூரதேசத்தில் இளவேனிற்காலத்தில்
வெளியாகும்
ஏதோவொரு
பத்திரிகையில் பார்த்தேன்.

பச்சைப்பயறு தின்று வயிற்று வலியிற்துடித்து
"துங்கப்பரிகாரி"யிடம் லேகியம்
வாங்கித்தின்றவர்கள்
பனிமூடும் காலைகளுக்குச் சொந்தமான
நாட்டில்
பத்திரிகை நடத்துகிறார்கள்.

என்னதான் வாசத்துடன்
எங்களுர்ச் சேற்றை எழுதினாலும்
ஊசிப்போன சாறணைக்கீரைக்கறியில்
பழஞ்சோறு பிசைந்து
உருட்டித்தின்பது ஒருவலி

அனுபவித்துச் சொல்லுங்கள்
சாறணைக்கீரைச் சங்கம் வைப்போம்
"கென்டகி" மற்றும் "மக்டொனால்ட்"
அனுசரணையில்.


*வை. சாரங்கன்
யாழ்- பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவன்.இன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையின் அவலத்தை எதிரொலிக்கும் இவரது கவிதைகள் எண்பதுகளை நினைவூட்டுகின்றது. பலரதும் கவனத்தை பெற்ற இவரது கவிதைகள் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

(நன்றி: வைகறை)

4 comments:

வி. ஜெ. சந்திரன் said...

இணைப்புக்கு நன்றி... புதிய ஒரு எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்
டிஜே

வசந்தன்(Vasanthan) said...

கவிதைகளுக்கு நன்றி டி.சே.

சாரங்கன் என்று போராளிப் படைப்பாளியும் ஒருவர் இருக்கிறார்.

கானா பிரபா said...

சாரங்கனின் ஆக்கம் மூலம் அவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி டி.ஜே.
சாரங்கன் என்று என் வகுப்புத் தோழன் இருந்தான் நல்ல சங்கீத வித்துவான் இப்போது. அவன் நினைவும் வந்துவிட்டது.

டிசே தமிழன் said...

நன்றி எல்லாம் வைகறைப் பத்திரிகைக்கே போகவேண்டியது. வெட்டி ஒட்டியது மட்டுமே எனது வேலை.
....
பிரபா, உங்களைப்போலவே எனக்கும் ஒரு தோழன் -ஒரு வகுப்பு குறைய படித்த- சாரங்கன் என்ற பெயரில் இருந்தார். இதையெழுதியது அவரோ என்று ஒரு தோற்றமயக்கம் வந்தது :-) (அவராகவும் இருக்கலாம், யார் கண்டது?). சாறணை என்று இந்தப்பதிவில் குறிப்பிட பலருக்கு தெரியாமல் இருந்தது. அட, நம்மைப்போல சாறணையில் பாசமுள்ள ஒருவர் இருக்கின்றாரே இன்னும் கூடப்பற்று வந்துவிட்டது :-).