Tuesday, July 17, 2007

கிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்?

இப்போது இதைப் பதிவதற்கு எதுவும் பெரிய காரணங்களில்லை. கிழக்குப்பதிப்பகத்தின் அறிவுத்திருடல்கள் வலைப்பதிவுலகத்தோடு பரீட்சயமானவர்களுக்கு புதிய விடயமுமல்ல. ஆனால் எனக்கு வரும் ஆச்சரியம் என்னவென்றால், தொடர்ந்து திருடல்களும் பிறகு அம்பலப்படுத்தல்களும் நடந்துகொண்டிருந்தும் இப்படியே திருட்டுக்கள் செய்ய என்னவொரு நெஞ்சுரம் வேண்டும் என்பதுதான். அண்மையில் சிங்கப்பூரில் வசிக்கும் எம்.கே.குமாரின் சிங்கப்பூர் பற்றிய தொடர் அபபடியே வேறொருவரின் பெயரில் புத்தகமாய் வந்து விவாதிக்கப்பட்டதை வலைப்பதிவில் அறிந்திருப்பீர்கள். அதேபோன்று திருட்டுக்களைச் செய்துவிட்டு அத்னோடு சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை சமரசத்தின் மூலம் அமுக்குவதிலும் கிழக்குப்பதிப்பகத்தார் கெட்டிக்காரர்கள். இவர்களிடம் இருக்கும் இந்த வகையான ethicsஜ மேற்குலத்தவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் காவ்யா விஸ்வநாதன் போன்றவர்களின் பிரதிகள் எல்லாம் இங்கே முடக்கப்படவேண்டிய தேவையிருந்திருக்காது. இவ்வாறான விவாதங்கள் வரும்போது அய்யோ பதிப்பகத்தில் இருக்கும் அவர் நல்லவர் இவர்தான் அப்படிப்பட்டவர் என்று வரும் குரல்கள் இன்னமும் விசனமளிப்பவை.
திருந்தவே மாட்டீங்களா சாமிகளா?
(~டிசே)

கிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங்
-திலீபன்


நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பது என்பதுவே பிரதானமாகவும், சேவை என்பது பெயரளவுக்குக் கூட இல்லாமல் எவ்வித உத்திகளையும் பணத்திற்காக தத்தமது துறைகளில் ஈடுபடுத்துவது சகஜமாகி விட்டது.

தமிழகத்தில் தற்பொழுது அந்த நிலைக்கு பதிப்புத் துறையும் வந்துவிட்டது. ஒருசில தமிழ் பதிப்பக நிறுவனங்களைத் தவிர பதிப்புத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் வணிக நோக்கில் செயல்படுபவர்கள்தான். எந்த ஒரு வெளியீடானாலும் தங்களுக்கென்று குறைந்தபட்ச லாபம் வைத்து தொழில் நடத்துபவர்கள்தான். அதில் ஒன்றும் தவறில்லை.

(ஆனால் இப்பொழுது முடி வெட்டும் கடை, மளிகைக்கடை, காய்கறிக் கடையில் இருந்து தொழில் நுட்ப நிறுவனங்கள் வரை நுழைந்துள்ள தாராளமயம் பிரமாண்டம் போன்றவை பதிப்புத் துறையிலும் நுழைந்துள்ளது. தாராளமயம் பணத்திற்ககாக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும்.

பதிப்புத் துறையில் அது கிழக்குப் பதிப்பகமாக உருவெடுத்துள்ளது.

கிழக்குப் பதிப்பகம், சதாம் உசேன், ஹிட்லர், பின்லேடன், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, அம்பானி, அசிம் பிரேம்ஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் வாழ்வில் ‘முன்னேறிய' கதை, தன்னம்பிக்கை, வரலாறு போன்றவைகளை வெளியிடுகின்றன. அல்லது மிகத் தீவிரமான மக்கள் பிரச்சனைகளை அப்போதைக்கப்போது உடனடியாக வெளியிட்டு காசு பார்க்கின்றன.

இவ்வாறு பணம் சம்பாதிப்பதே தொழில் என்றாகி விட்ட பிறகு, அங்கு நேர்மை என்பது எங்கு வரும்? தினசரி ஒரு வெளியீடு என்று திட்டம் வைத்து வியாபாரம் நடத்தி வரும் கிழக்கு பதிப்பகம் அதற்காக எந்த வழிமுறையையும் கையாளத் தயாராய் இருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் இணையத்தில் இருந்து சுடப்படுபவைதான். இணையத்தில் இருந்து பிறரது எழுத்துக்களை டவுன்லோடு செய்து, அதனை மொழிபெயர்த்து அப்படியே வெளியிடுவதுதான். இதன் மொழிபெயர்ப்பைச் செய்பவர் பெயர், மற்றும் ஒட்டு வேலைகள் பார்ப்பவர் பெயர், ஆசிரியராக உருமாற்றம் பெற்றிருக்கும். பலர் இது பற்றி அதிக அளவில் குற்றம் சுமத்திய பின்பும் கிழக்கு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏனென்றால் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் இன்னொரு நூல் வெளியிட்டு காசு பார்க்க முடியும் என்பதனால்தான். ஆதாரத்திற்கு ஒரு சமீபத்திய திருட்டைப் பார்ப்போம்;

மதுரையைச் சேர்ந்த கருத்துப் பட்டறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி முல்லை பெரியாறு பிரச்சனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறதே. விவசாயிகளின் அவலம் தீர வழியில்லையே? என்ற உண்மையான சமுதாய அக்கறையுடன் முல்லை பெரியாறு அணை குறித்த சிறு வெளியீடாக, "முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகள். ஒப்பந்தமும் தீர்ப்பும்'' என்ற சிறு நூலை பிப்ரவரி 2007 இல் கொண்டு வந்தார்கள். அந்த நூலில் சென்னை மாகாணம் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர்.

999 ஆண்டு கால ஒப்பந்தத்தை மதுரை நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். நாகராசன் மொழிபெயர்த்திருந்தார். மதுரை கருத்துப்பட்டறை நண்பர்களின் முயற்சி, உண்மையான சமுதாய அக்கறையின் வெளிப்பாடு. அப்பொழுது முல்லை பெரியாறு பிரச்சனை தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்.

எந்தப் பிரச்சினையையும் காசு சம்பாதிக்கும் நோக்கில் பார்க்கும் கிழக்கு இதிலும் காசு சம்பாதிக்கும் நோக்கில் "முல்லைப் பெரியாறு அணையா? நெருப்பா?'' என்ற நூலை ஏப்ரல் 2007 இல் வெளியிட்டது. நல்ல விற்பனையும் அடைந்தது. முல்லை பெரியாறு பிரச்சனை தீர்ந்ததோ இல்லையோ? கிழக்குப் பதிப்பகத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

ஆனால், அவ்வாறு வெளியிட்ட நூலிலும் நிறைய திருட்டுத்தனம் இருக்கிறது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட நூலிலும் 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அவ்வாறு வெளியிட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் பிப்ரவரி 2007 இல் மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட மொழிபெயர்ப்பின் நகலாக இருக்கிறது. வரிக்கு வரி, முற்றுப்புள்ளி உட்பட அனைத்தும் மதுரை கருத்துப் பட்டறை அமைப்பினரின் வெளியிட்ட நகல்தான்.

இருவரும் ஒப்பந்தத்தை ஒரேபோல மொழிபெயர்ப்பு செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு என்பது நபருக்கு நபர் மாறுபடும். இந்த திருட்டைக் கண்டு அதிர்ச்சியுற்ற கருத்துப் பட்டறை வெளியீட்டாளர்கள் கிழக்கு பதிப்பகத்திற்கு கடிதம் எழுதினர். கிழக்கு பதிப்பகத்திற்கு பதில் கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ ஏது நேரம்? ஏனென்றால் தவறு, காப்பி அடித்ததற்கு வருத்தம் என்று கூற ஆரம்பித்தால் பிறகு தினம் தினம் வருத்தம் மட்டுமே அல்லவா தெரிவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் ‘டவுன்லோடு' தானே?

சரி, மொழிபெயர்ப்பு ஒன்றுபோல இருக்க வாய்ப்பே இல்லையா? என்று ஏங்கும் நண்பர்களுக்காக மட்டும் சிறு எடுத்துக்காட்டு மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட நூலின் மொழிபெயர்ப்பில் சிறு பிழை ஏற்பட்டு இருந்தது (பக்கம் 3ல் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு) என்று பிழையாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதே பிழை கிழக்கு பதிப்பக வெளியீட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. பக்கம் 153 இல் உள்ள மொழிபெயர்ப்பிலும் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு என்று அதே பிழை ஏற்பட்டுள்ளது. உண்மையான மொழிபெயர்ப்பு என்றால் இது நேர வாய்ப்பில்லை.

ஈயடிச்சான் காப்பியில் மட்டுமே இது நேரும்.

இனிமேலாவது ‘கிழக்குப் பதிப்பகம்' தனது திருட்டை நிறுத்துமா?

நன்றி: விழிப்புணர்வு

30 comments:

நெய்தல் said...

கிழக்கு பதிப்பகத்தில் சேர்ந்தால் சென்னையில் ஒரு வீடும் காரும் வாங்கி செட்டிலாகலாம் இதுதான் இன்று நெட் எழுத்தாளர்கள் மத்தியில் பரவலாக இருக்கும் ஸ்லோகன்....இன்டர் நெட் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது இவர்கள் தினந்தோறூம் வாந்தி எடுக்கிறார்கள்.அப்படி வாந்தி எடுப்பதை ஒன்றைக் கூட கீழே விடாமல் அள்ளி எடுத்து பணம் பார்த்து வருகிறது ''கிழக்கு பதிப்பகம்""
சதாம் தூக்கிலடப்பட்ட போது நாம் எல்லோருமே அவருக்காக வருத்தப்பட்டோம் கிழக்கு என்ன செய்தது தெரியுமா?தூக்கிடப்பட்ட மறுநாள் சென்னை முழுவதும் சதாமின் நூலை போஸ்டர் ஒட்டி விற்றுத்தீர்த்தது.ராஜீவ்காந்தி இறந்த போது காங்கிரஸ்காரன் பிணத்தை காட்டி ஒட்டு வாங்கியதற்கும் எம்ஜிஆர் இறந்த போது ஜெயலலிதா அடித்த ஜல்ல்லிக்கும் ''கிழக்கு''செய்கிற ஆபாச இலக்கிய திருட்டுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?இவர்களைத்தான் சிறந்த பதிப்பாளர்களாக பிஜேபி கொண்டாடுகிறது .அப்படியானல் இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது தெரிகிறதா?

-/பெயரிலி. said...

டிசே,
நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் விழிப்புணர்வு இதழிலே வந்தது, எம். கே. குமார் நூல், இன்னும் இது போன்ற கிழக்கு பதிப்பகம் தொடர்பான குற்றச்சாட்டுகள்மீதான பொதுக்கருத்து (எம் .கே. குமாரின் இடுகையிலும் அந்நேரத்திலே அநாமதேயமாக் குறிப்பிட்டதும் அடங்க):

கிழக்கு பதிப்பகத்தினாலே வெளியிடப்படும் நூல்களின் தரம், முழுவர்த்தக நோக்கு, சிலவற்றின் உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மை எனக்கு ஒவ்வாததாகவிருப்பினுங்கூட, அவை வேறு தளத்திலே இன்னொரு சந்தர்ப்பத்திலே விவாதிக்கப்படவேண்டிய தேவை வந்தால் விவாதிக்கப்படவேண்டியவை. ஆனால், நான் இணையத்திலே வாசிப்பதை வைத்தும் அறிந்ததை வைத்தும் பார்க்கும்போது, கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் இயன்றவரை பதிப்பாளர் என்ற வகையிலே, இப்படியான படைப்புரிமை தொடர்பான விடயங்களிலே தொழில்முறையானநெறியுடன் நடக்கவும் அவ்வுரிமை அவர் பதிப்பகத்தினாலே மீறப்பட்ட நிலையிலே அதற்கான ஈடு செய்வதிலும் அவருக்கு இயன்றவரை முயல்கின்றார் என்றே படுகின்றது. இப்படியான ஒற்றி உருவியதை ஒட்டி வெளியிடுதல் தமிழ்ப்பத்திரிகை/பதிப்பகங்கள் எல்லாவற்றிலுமே இயல்பான செய்கைபோல காலங்காலமாக நடப்பதே. அதனால், கிழக்குப்பதிப்பக உரிமையாளரிலும்விட அவரின் கீழே தொழில் புரிகின்றவர்களே இதற்கு மிகவும் காரணமாகின்றார்கள். ஒரு பதிப்பாளர் தன் அனைத்து வெளியீடுகளையும் பார்த்துப்பார்த்து மூலம் தேடிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆக, உரிமையாளர் செய்யக்கூடியது, அவரின் பதிப்பகத்திலே இப்படியாக நடக்கின்றதென அவரின் கவனத்துக்கு வரும்போது, அதற்கேற்ப நிர்வாகியாக அப்படியான உருவுதலுக்கும் ஒட்டுதலுக்கும் காரணமானவர்(கள்)மீது தகுந்த நடவடிக்கையெடுப்பதே.

மேலும், மற்றைய தமிழகப்பதிப்பகங்கள் போலல்லாது, கிழக்கு பதிப்பகத்தின் மாறுபாடான அணுகுமுறையும் (இணையத்துடனான அதிக ஊடாட்டமும்) கிழக்கு பதிப்பகத்திலே இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது, அப்பதிப்பகம் பற்றி அதிகம் விமர்சிக்கப்படவும் பேசப்படவும் செய்ய வாய்ப்பினை ஏற்படுத்திவிடுகின்றதென்றும் தோன்றுகின்றது. இது பெரும்பாலான பதிப்பகங்களிலே இருப்பதே. ஆனால், அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. அந்தக்காலத்திலே சைவசித்தாந்தசபையும் செய்ததுதான். தமிழகத்தின் அனைத்து "வர்த்தகப்பத்திரிகைகளும்" பிறநாட்டுச்செய்திகளையும் படங்களையும் இணையத்திலிருந்து அள்ளிப்போடத்தானே செய்கின்றன. அவை இதுபற்றி எவ்விதத்திலும் வெட்கப்படவோ, அஞ்சுவதோ இல்லை. வர்த்தக ரீதியிலே மொழிபெயர்க்கும் நூல்களுக்கு எவ்வளவு மூல ஆசிரியர்களிடம் உரிமை பெறுகின்றார்களென நினைக்கின்றீர்கள். சஞ்சிகைகளிலே தொடராக வந்துபோகின்றன. சிலர் அவர்களது கவிதைகள் ஒரு தொகுப்பிலே (அவர்களின் பெயர்களிலேதான்) வந்தபின்னரே அறிந்துகொண்டதாகச் சொல்லவும் கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் அல்ல; இதற்கு தமிழ்ப்பதிப்பகங்கள் (தமிழ்நாடென்றில்லை, பொதுவாக தமிழ்பேசும் படைப்பிடும் எல்லாநாட்டுப்பதிப்பகங்களுமேதான்) தம் அமைப்பினூடாக, அரசு நீதிமன்றூடாக, அப்படியான பதிப்பகங்களுக்கு பணம், பதிப்புநிலை சார்ந்த தண்டங்களையும் (இடைத்)தடைகளையும் விதிப்பதே நடைமுறைக்குப் பயனாகும். அல்லாவிடின், பேசுவதோடு முடிந்துவிடும்.

இளங்கோ-டிசே said...

பெயரிலி,
/ஆக, உரிமையாளர் செய்யக்கூடியது, அவரின் பதிப்பகத்திலே இப்படியாக நடக்கின்றதென அவரின் கவனத்துக்கு வரும்போது, அதற்கேற்ப நிர்வாகியாக அப்படியான உருவுதலுக்கும் ஒட்டுதலுக்கும் காரணமானவர்(கள்)மீது தகுந்த நடவடிக்கையெடுப்பதே. /
இது ஏற்றுக்கொள்ளக்கூடிய புள்ளியே. ஆனால் அப்படிச் சம்பந்தப்பட்டவர்களை நோக்கி பதிப்பகத்தார் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்களா? எம்.கே.குமாரின் தொடரை அப்படியே பிரதியெடுத்து எழுதியவர் கூட பதிப்பகத்தில் ஒருவராகவோ அல்லது பதிப்பகத்தாருக்கு நெருக்கமானவர் என்றுதான் கேள்விப்பட்டேன். அவ்வாறு கீழே(?) இருப்பவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், கிழக்குப் பதிப்பகத்திற்கு நூல் எழுதுபவர்க்ள் இப்படி அறிவுத்திருட்டுச் செய்யாது இருந்திருப்பார்கள் அல்லவா?? ஆக கிழக்குப் பதிப்பகத்திற்கு எழுதுபவர்கள், பதிப்பகத்தார் ஒன்றுக்குமே இலாயக்கற்றவர்கள் என்று நினைத்துத்தான் இந்தத் திருடல்களைச் செய்கின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?


இருக்கலாம். பல பதிப்பகங்கள் இவ்வாறான வேலைகளைச் செய்துகொண்டும், ஆனால் கிழக்குப்பதிப்பகம் இணையத்தோடு நேரடித்தொடர்புகளால் அதிகம் விவாதிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கலாம். ஆனால் 'நிழல்' திருநாவுக்கரசு போன்றவர்கள் பிற நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை மொழிபெயர்க்கும்போது எத்தகை சிரத்தையெடுத்து அனுமதியெடுக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே. நிறைய மூலதனம் முதலிடப்பட்டு தொடங்கப்பட்டு (பதிப்பகத்துறையில் தொடர்புள்ள சில நண்பர்கள் சொல்லக்கேள்விப்பட்டது) ஆரம்பிக்கப்பட்ட கிழக்குப் பதிப்பகம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாவிட்டால் மேலே நெய்தல் கூறியதுமாதிரி பணத்திற்காக எதையும் இவர்கள் செய்யக்கூடியவ்ர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்? காலச்சுவடு பதிப்புரிமை தொடர்பில் புதுமைப்பித்தன் (எனப்படும் ச்ந்தியா) பதிப்பகத்திற்கு வழக்குத் தொடர்ந்திருந்தது (இப்போது அந்தப்பெயரில் புத்தகம் பதிப்பிப்பதை இளையபாரதி இல்லாமல் விட்டுவிட்டார் என்று நினைக்கின்றேன்). ஆக வளமும், வசதியும் உள்ள காலச்சுவடால் முடியும், ஆனால் அப்படி அப்படி வசதியற்ற்வர்கள்/நேரமற்றவர்கள் என்ன செய்யமுடியும்? இப்படி இரண்டு கட்டுரையை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவார்கள்அல்லவா?. மற்றது பிறர் கள்ளம் செய்வதில்லையா என்று நீங்கள் கேட்பதில் நியாயமிருக்கிறதுதான். ஆனால் எமக்குத் தெரிந்தது குறித்துத்தானே நாம் பேசமுடியும். ஆகவே இவற்றை முன்வைத்து உரையாடும்போது திருட்டுச்செய்யும் பிறர் சற்றேனும் விழிப்பாயிருப்பர்கள் அல்லவா? அதையெல்லாம் பேசாது இதையெல்லாம் பேசுவது நியாயமா என்ற தொனியில் எழும் உங்கள் குரல் சற்று அலுப்பூட்டக்கூடியது. சாருவும் களவு செய்திருக்கின்றார், ஜெயமோகனும் வேறொருவர் எழுதிய தமிழிசைக் கட்டுரையொன்றை உருவியெடுத்து தனது மனைவியின் பெயரில் பிரசுரித்திருக்கின்றார். அவற்றையும்தானே நாங்கள் இணையத்தில் பேசியிருக்கின்றோம்.

Anonymous said...

(இணையத்துடனான அதிக ஊடாட்டமும்) கிழக்கு பதிப்பகத்திலே இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது, அப்பதிப்பகம் பற்றி அதிகம் விமர்சிக்கப்படவும் பேசப்படவும் செய்ய வாய்ப்பினை ஏற்படுத்திவிடுகின்றதென்றும் தோன்றுகின்றது

கூர்மையான அவதானம்.

என்.ராம் மட்டும் பிலாக்கராக இருந்திருந்தால் எவ்ளோ சூப்பரா இருந்திருக்கும்? :-)

-/பெயரிலி. said...

/ஆகவே இவற்றை முன்வைத்து உரையாடும்போது திருட்டுச்செய்யும் பிறர் சற்றேனும் விழிப்பாயிருப்பர்கள் அல்லவா? அதையெல்லாம் பேசாது இதையெல்லாம் பேசுவது நியாயமா என்ற தொனியில் எழும் உங்கள் குரல் சற்று அலுப்பூட்டக்கூடியது/

அய்யோ! அய்யோ!! அட நாசமே! தம்ப்ரீ இப்படியுமா நான் சொல்வதை விளங்கிக்கொள்ளமுடியும்!! :-)
நான் விழிப்பாக இருக்கவேண்டாம் என்றும் சொல்லவில்லை (யாராவது கண்டும்காணாமலிருக்கவேண்டாம் என்று சொல்வார்களா? ஏனிந்த விபரீதமான யோசனை!!) ;-) இதைப் பேசவேண்டாமென்றும் சொல்லவில்லை; (இது அதை விட விபரீதமான புரிதல் தம்ப்ரீ :-))

நான் சொல்வதென்னவென்றால், இது சஞ்சிகைகள், பத்ரிகைகள், பதிப்பகங்களிலே பரவியிருக்கும் வருத்தமே! அதற்கு பதிப்பகங்களின்கூட்டமைப்பும் படைப்புகள்காக்கும்சட்டமும் கைகொடுக்காவிட்டால், எல்லாரும் அடுத்தவர் கை மட்டும் சுத்தமா என்பதாகத்தான் நிகழுமென்கிறேன்.

திருநாவுக்கரசு.... தனியே பேசிக்கொள்கிறேன் :-)

-/பெயரிலி. said...

/அவ்வாறு கீழே(?) இருப்பவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், கிழக்குப் பதிப்பகத்திற்கு நூல் எழுதுபவர்க்ள் இப்படி அறிவுத்திருட்டுச் செய்யாது இருந்திருப்பார்கள் அல்லவா?? /

மறுப்பதற்கில்லை. ஒத்துக்கொள்கிறேன்

-/பெயரிலி. said...

/ஜெயமோகனும் வேறொருவர் எழுதிய தமிழிசைக் கட்டுரையொன்றை உருவியெடுத்து தனது மனைவியின் பெயரில் பிரசுரித்திருக்கின்றார். அவற்றையும்தானே நாங்கள் இணையத்தில் பேசியிருக்கின்றோம்./
காலச்சுவடு-இளையபாரதி இடையேயான பிரச்சனையிலே புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கமும் சம்பந்தப்பட்ட "யார் குத்தகைக்காரன்" பிரச்சனையென்பதாகத்தான் வாசித்த ஞாபகம்.

ஜெயமோகன் மம்மதுவின் கட்டுரையை அமுக்கினது (அடப்பாவி! அமுக்கும்போது மனைவியின் தலையிலா மிளகாய் அரைப்பாய்!! :-)) .... கொஞ்சம் நில்லுங்கள்; அவரின் புத்தகப்பதிப்பாளர் இந்தப்பக்கம் வந்தாலும் எட்டிப்பார்த்துவிட்டுவருகிறேன்.. பிறகு "திட்றான்" சொல்லியே கைதட்றானைத் தேடிக்கொண்டிருப்பார்(கள்) :-), வெங்கடலாசபதி-வேதசகாயகுமார் இவர்களிலே புதுமைப்பித்தன் கதைகளை யார் முதலிலே முத்துக்குளித்து செம்பதித்தது, சாரு நிவேதிதா ஆப்டீனின் கதையைத் தூக்கித் தன் பெயரிலே போட்டது, (எஸ் இராமகிருஷ்ணனின் 100 திரைப்படங்கள் பற்றிய புத்தகமே இணையத்தில் ஒட்டிவெட்டி மொழிபெயர்த்ததாக ஒருவர் சொன்னார்; நான் வாசிக்கவில்லை அதனால், எதையும் சொல்வதற்கில்லை) .... இப்படியாக, பரவி வருத்தம் இருக்கின்றது. இதை வெளிக்கொணர்வது முக்கியமே. மறுக்கவில்லை.

ஆனால், இதையே அவ்வப்போது வரும்போது அரற்றிவிட்டிருப்பதாலே பயனில்லை... இலங்கையிலே குண்டுவிழுந்து ஆட்கள் சாக, "ஐயோ!" என்று கத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதாகத்தான் முடியும்.

நான் என்ன சொல்கிறேன்றால், அமெரிக்காவின் National Health Insititue போன்ற பெரு ஆய்வுக்கான நிதி வழங்குகின்றவர்களும் பெரு ஆய்வுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களும் இப்படியாக (தமக்கான ஆய்துறைப்பிரிவிலே) ஒற்றையாடல், ஒத்தியாடல், உருத்திரித்தாடல் அகப்பட்டால், அத்தனையையும் ஒட்டிவெட்டித் தம் தளத்திலேயே அனைவரும் காணப் போட்டுவிட்டு, அப்படியே நிதியினையும் கொஞ்ச ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கமுடியாதென இடைநிறுத்திவிடுவார்கள். அது பெரிதல்ல, பெரிதென்பது, குறிப்பிட்ட ஆய்வாளர் பிறகு எங்கே நிதிக்கு விண்ணப்பித்தாலும், இப்பிரபலமும் பிரதாபமும் பிலாக்கணமும் பின்னாலேயே விண்ணப்பத்தூடாகத் தொடர்ந்துவரும். ஆளின் ஆய்வு எதிர்காலம் அவ்வளவுதான்.

நாங்கள் இதையெல்லாம் செய்யமுடியாதென்பதால், ஒரு வலைப்பதிவு தொடங்கி இப்படியான உருவுதல், திருகுதல், ஒட்டுதல்களை ஆதாரத்துடன் பதிவு செய்து வைக்கலாம். ஆனால், இவை காழ்ப்பு உவப்பின்றிச் செய்யவேண்டியவை என்பதையும் நாம் எண்ணிக்கொண்டு செய்யவேண்டும்.

மிக முக்கியம்: அப்படியாகச் செய்யப்போகின்றோமென்றால், இணையத்தமிழ் வரலாற்றிலே "ஒட்டுதலுக்கொரு பதிவு திறந்த முதற்றமிழ்கிடா" நான் என்பதினையும் ஒத்துக்கொள்ளவேண்டும். :-)
ஐடியாவை செயற்படுத்திப் பெயரெடுக்க ஒன்றிரண்டு பேரிருந்தால், ஐடியாவைக் கொடுத்தே பெயரெடுக்க அலையும் ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். இதிலே நான் எவ்வகையேன்று எனக்கே தெரியும் :-)

கொழுவி said...

100 தாண்டும் வாய்ப்புக்கள் ஆங்காங்கே தெரிகின்றன என வலிமண்டல வினைக்களம் தெரிவிக்கிறது

இளங்கோ-டிசே said...

பெயரிலி,
எல்லோரும் உங்களோடு தனகினம் நானும் ஒருகாய்த் தனகிப்பார்ப்போம் என்றுதான் கூறிப்பார்த்தேன்.
நிற்க.
நீங்கள் குறிப்பிட்ட புள்ளிகளோடு எனக்கும் உடன்பாடே. முக்கியமாய்
/இதையே அவ்வப்போது வரும்போது அரற்றிவிட்டிருப்பதாலே பயனில்லை... இலங்கையிலே குண்டுவிழுந்து ஆட்கள் சாக, "ஐயோ!" என்று கத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதாகத்தான் முடியும்./
இது எனக்கு சரியாகப் பொருந்தக்கூடிய தொப்பியும் கூட :-).

நீங்கள் குறிப்பிட்ட புதுமைப்பித்தன் X காலச்சுவடு, புதுமைப்பித்தன் கடிதங்கள் தொகுப்போடு தொடங்கிய பிரச்சினைதான். காலச்சுவடு தங்களுக்குச் சாட்சி சொல்ல தினகரி சொக்கலிங்கத்தை உதவிக்கு அழைத்திருந்தது (அவர் புதுமைப்பித்தனின் படைப்புக்களை பிரசுரிக்க காலச்சுவடிற்கு அனுமதி கொடுத்திருந்தார்). ஆனால் அவ்வழக்கின் பின் அத்தொகுப்பு முடங்கப்பட்டதாய்தான் அறிந்தேன். அந்தக்கோபத்திலோ என்னவோ, இப்போது புதுமைப்பித்தன் பதிப்பகம் என்றபெயரில் இளையபாரதி புத்தகங்களை வெளியிடுவதில்லை என நினைக்கின்றேன். அவசரத்தில் வேறுமாதிரியான வாசிப்பைத் தருவது போல எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

Anonymous said...

கிழக்கு பதிப்பகத்தினர் ஒவ்வொருமுறை திருடி மாட்டிக்கொள்ளும்போதும் காசு தருகிறேன் என்று சொல்லி வாயை அடைக்கின்றனர். பெயரிலி படம் திருடப்பட்ட போதும் தோழியர் படம் திருடப்பட்ட போதும் எம்கேகுமாரின் சிங்கப்பூர் வரலாறு திருடப்பட்ட போதும் இதுதான் நடந்தது.

எம்கேகுமார் பத்ரிக்கு மிகவும் நெருக்கமானவர். அதிலும் நேசகுமார் என்ற பெயரில் எழுதும் குழுவின் ஒரு உறுப்பினர். பத்ரி தன் வலைப்பதிவில் எம்கேகுமாருக்கு தொடுப்பு கொடுத்து இருந்தார். இந்த சண்டைக்குப்பின் தொடுப்பை அகற்றியும் விட்டார். கிழக்கு பதிப்பகத்தில் கொடுத்து தனது சிங்கப்பூர் வரலாறு, கவிதைகள், கதைகள் என 3 புத்தகங்களை அச்சடிக்க இருந்தார். அதற்குள் முகில் என்பவரை வைத்து வரலாற்றைத் திருடியதும் வெறுத்துப் போய்விட்டார். நேசகுமார் வலைப்பதிவில் எழுதுவதும் இல்லை. இப்போது நேசகுமார் வலைப்பதிவில் எழுதுவது எஸ்கே என்கிற சைபர் பிரம்மா கிச்சு, சொக்கன், தேசிகன், கால்கரி சிவா, அரவிந்தன் ஆகியோர். நேசகுமார் என்ற பெயரில் முன்பு இஸ்லாத்துக்கு எதிரான பெரும்பாலான விவாதங்களைச் செய்தவர் குமார்தான். இப்போது இருக்கும் நேசகுமாரிடம் எந்த முஸ்லிமும் வீடு கட்டி அடிக்கலாம்.ஏன் எனில் குமார் அதில் இல்லை. குமாரை தவிர்த்து யாராலும் இஸ்லாமில் உள்ள குறைகளை அவ்வளவு எளிதாக எழுதி விட முடியாது. இப்போது குமார் நேசகுமார் பதிவுக்கும் கிழக்கு பதிவுக்கும் எதிரி. நேசகுமாரில் எழுதும் எல்லா பதிவருக்கும் ஆர்கனைசர் இந்த பத்ரி. நேசகுமாருக்கு ரூமியின் இனிய இஸ்லாம் என்ற புத்தகத்தை அனுப்பி வைத்தது பத்ரி. அதாவது நேசகுமார் என்ற போர்வையில் எழுதிய எம்கேகுமாருக்கு!

முகில் திருடியதும் சுத்தமா மாறிவிட்டார். அதோடு சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவும் ஆனதால் குமார் அடக்கி வாசிக்கிறார்.

ஒவ்வொருமுறை கிழக்கு திருடும்போதும் பாராகவன் பெயரை சொல்லி தப்பிப்பார். வேலை ஆட்கள் பெயரைச் சொல்லி தப்பிப்பது பத்ரிக்கு ஒன்றும் புதிது அல்ல. பாராகவனே "நிலமெல்லாம் ரத்தம்" தொடரை எத்தனை ஆங்கிலப் புத்தகங்களில் இருந்து காப்பியடிச்சு தொடராக எழுதினார் என்று ஜான் பாஸ்கோவை கேட்டுப் பாருங்கள்.

Anonymous said...

சொல்ல மறந்துட்டேன் பாருங்க.\


இந்த அறிவுத்திருட்டால் கிழக்கு பெயர் மோசமானதும் நாளைக்கு ஒரு புதுப்பெயரில் பதிப்பகம் திறக்கிறார்கள்.

வரம், நலம், அன்பு என்று பல பெயர்களில் கிழக்கு பதிப்பகம் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறது. அதில் இருந்தும் புத்தகங்கள் வெளியாகின்றன.

காமதேனு, வித்லோகா போன்றவை சைடு பிசினசுக்கு. இதனை நீங்கள் பத்ரியிடம் வேலை பார்க்கும் பாலபாரதியிடமே உறுதி படுத்திக் கொள்ளலாம்.

-/பெயரிலி. said...

கொழுவி கொக்கைத்தடியை கொஞ்சம் அங்காலை வையுமப்பன். பக்கத்துவீட்டிலையெல்லே காலமை நல்ல முருங்கைக்காய் வேலிக்குள்ளால அமத்தினனீர்? பொடியன் வலுசுழியனெண்டு சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கிறன். நீர் என்னாடாவெண்டால், இப்ப ஏன் வளவுக்குள்ளையே வரிச்சைப் பிரிச்சு மாங்காய் புடுங்குவமெண்டு கொக்கைச்சத்துவத்தை நீட்டுறீர்? ;-)

/எல்லோரும் உங்களோடு தனகினம் நானும் ஒருகாய்த் தனகிப்பார்ப்போம் என்றுதான் கூறிப்பார்த்தேன்./

என்னோடை தனகிப்பாக்கிறதென்ன சுப்பையர் கனகி பாத்ததுபோலவே? :-)

நானும் ஓமோமெண்டு, நீரும் ஓமோண்டால், பேசாமல் வலைப்பஜனைசபையே ஆரம்பிச்சு கொழுவியை கொண்டாக்ட் பண்ணவிட்டிருக்கவெல்லோ வேணும். உதெல்லாம் தனகலே?

/நிற்க/
ம்ஹூம். இருக்கப்போறன். திருநாவுக்கரசு பற்றி. அவர் நல்லதொரு புலம்பெயர்ந்தவர்களின் கவிதைத்தொகுப்பு புலம்பெயர்ந்த சஞ்சிகைகள், தளச்சஞ்சிகைகள் எல்லாம் தேடி 1999-2002 காலப்பகுதியிலே வெளியிட்டவர்தான். ஆனால், அதிலே சிலரிடம் முதலே கேட்கவில்லை. அவர்கள் நூல் வந்த பின்னரே தெரிந்துகொண்டனர் என்று அறிவேன். அவர் வெளியிட்டதன் நோக்கு விற்பனையை முன்வைத்ததா என்பது தெரியாது. ஆனால், கவிதைகளை எழுதியவர்களும் புரிந்துணர்வோடு அதை ஒரு தவறாகப் பார்க்கவுமில்லை.

Mookku Sundar said...

//999 ஆண்டு கால ஒப்பந்தத்தை மதுரை நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். நாகராசன் மொழிபெயர்த்திருந்தார். மதுரை கருத்துப்பட்டறை நண்பர்களின் முயற்சி, உண்மையான சமுதாய அக்கறையின் வெளிப்பாடு.//

ஓவராக ஊதப்படும் விஷயம் போலத் தான் தோன்றுகிறது. மொழிபெயர்ப்பு என்பதை மற்றவர்களுடைய படைப்பு என்று கருதமுடியாது. மற்றவர்களுடைய உழைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியே உழைப்பை திருடியதாக கொண்டாலும், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினையை கிழக்கு போன்ற வளர்ந்து வரும் பிரசுரங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியாகக் கூட பார்க்கலாம். அதில் அவர்களுக்கு வருமானம் வருகிறது என்பதற்காக திருட்டு என்று ஒர்ரெயடியாய மட்டையடிப்பது தவறு. இத்தனை ஊழியர்கள் வைத்துள்ள அவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை தமிழ்ப்படுத்துவது பெரிய காரியமா என்ன..?? why to reinvent the wheel என்ற காரணத்துக்காகவும், ஒரு authentic மொழிபெயர்ப்பையும் உபயோகப்படுத்தலாம் என்ற எண்ணத்திலும் இதை செய்ய்திருக்கலாம்.
கிழக்கின் முந்தைய பிரச்சினைகளை நான் அறீவேன். அதில் நையாயம் இருந்தாலும், இப்போதைய குற்றச்சாட்டில் அவசரம் தான் தெரிகிறது.

பாரதியை நியாபகம் (ரெளத்ரம் பழகு)வைத்திருப்பவர்கள் ஒளவையையும் மறக்காதீர்கள்(ஆறுவது சினம்).

கொஞ்ச நாட்களாகவே broக்கள் எல்லாம் மதன்மித்ரா சாப்பிட்டது போலத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் இளங்கோ...!!!
;-))

ரவி said...

மூக்கு சுந்தரின் கருத்தோரு நான் ஒப்புகிறேன்...

மட்டையடியும் ஜல்லியும் அதிகமாயிட்டது இப்போ...!!!

இளங்கோ-டிசே said...

சுந்தர்: எங்கேனும் அச்சில் எனது பதிவுகளைப் பார்க்கும்போது சிலவரிகள் எடுக்கப்பட்டிருந்தாலே ஒருவித கோபம் வரும் (அப்படி சில பத்திரிகை ஆசிரியர்களோடு முரண்பட்டிருக்கின்றேன்). அந்தவகையில்தான் இவ்வாறானவர்களின் வலி/கோபம் எனக்குப் புரிந்திருந்தது. இங்கே இந்தப்பதிவை மீண்டுமொரு முறை வாசித்துப் பாருங்கள் வரிக்கு வரி அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றது என்றுதான் குறிப்பிடுகின்றார்கள். ஒரு மொழிபெயர்ப்பு அப்படி யதார்த்தத்தில் இருக்காது அல்லவா? (குளோனிங் என்று தலைப்பில் குறிப்பிடுவது அதைத்தானென நினைக்கின்றேன்). ஆகக்குறைந்தது எங்கே எடுத்தாளப்பட்டது என்ற உசாத்துணையில் (reference) credit ஆவது கொடுத்திருக்கலாமே. அதனால் இழக்கப்போவது எதுவுமில்லைத்தானே.

இரவி: நீங்கள் அடித்த/அடிக்கின்ற மட்டையடிகளையும் மொக்கைப்பதிவுகளை விட இது மிஞ்சவோ/விஞ்சவோயில்லையென நினைக்கின்றேன். எங்கேனும் ஓரத்தில் மூலப்பிரதி எழுதியவர்களின் நியாயம்/வலி மறைந்திருக்கின்றதென்று இப்போதும் நம்புகின்றேன்.

Anonymous said...

இதையே மணிமேகலை பிரசுரமோ அல்லது வேறு யாராவதோ செய்திருந்தால் ஒரு தனிப்பதிவு போட்டுக் குமுறி இருப்பீர்களா என்பதே கேள்வி. இப்படிக் கேட்டால் - அதுவும் ஒரு கலாசலான ஒரு தலைப்பில் - எதிர்வினைகளில் உடனடித்தனம் இருக்கும் என்பதால் தானே எழுதுகிறீர்கள். எழுத்தாளர்களை அணுகுவது, அவர்களுடனான உறவு, எழுத்தாளர்களிடம் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் போன்ற நடைமுறைகள் டிரான்ஸ்பேரன்ஸி நிறைந்தது. பதிப்புலகில் - கிழக்கு ஏற்படுத்தி இருக்கும் சில வழிமுறைகள் முன்மாதிரியாகக் கொள்ளத் தக்கவை. அறிவுத் திருட்டு இருக்கட்டும், புத்தகம் போட்டு விட்டு ராயல்ட்டி என்கிற சமாசாரத்தையே எழுத்தாளர்களிடன் காட்டாமல் உழைப்புத் திருட்டு செய்யும் பதிப்பகங்களின் பட்டியலை நான் தரட்டுமா? அவர்களுக்கு எதிரான உங்கள் குமுறல்கள் எங்கே? கிழக்குப் பதிப்பகம் என்றதுமே உங்கள் மனதில் தோன்றும் பிம்பத்தை அடிப்படையாக வைத்து எழுதிய கட்டுரை இது என்றால் உங்களால் மறுக்க முடியுமா?

ஒரு நிமிடம், கிழக்கின் எழுத்துத் திருட்டை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அந்தக் குற்றத்துக்கு உங்கள் பதிவிலே நீங்களும், பின்னூட்டத்தில் பிறரும் வந்து தீர்ப்பு அளிப்பதையே - புத்தகத்தை எழுதியவர், பதிப்பாளர் ஆகியோரின் விளக்கம் என்னவாக இருக்கலாம் என்பதையே தெரிந்து கொள்ளாமல் - நான் அராஜகம் என்கிறேன். கிழக்குப் பதிப்பகம் பணம் ஈட்டுகின்றது ஆகையால், அவர்கள் இப்படித் திருட்டுத்தனம் செய்யத்தான் செய்வார்கள் என்பது உங்கள் எண்ணமோ...

ஆமாம் கிழக்கு மானாவாரி சாகுபடி செய்கிறார்கள் என்பதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு எல்லாம், புத்தகங்கள் அருகினால் தான் வசதி. அச்சில் இல்லை எனப்படும் அரிய புத்தகங்களை எல்லாம் அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டு நீங்கள் உங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்ள, மற்றவன் எல்லாம் மூலப்பிரதி கிடைக்காமல், வலைப்பதிவின் வாந்திகள் தான் ஒரிஜினல் என்று, படித்து விட்டு அவனும் கண்ட இடத்தில் கழிந்து விட்டுப் போக, நல்லா நாறட்டும் நாமிருக்குமிடம்.

இளங்கோ-டிசே said...

வாருங்கள் அநாமதேயத் தோழரே, உரையாடுவோம். சுந்தர், ஆறுவதே சினம் என்று எனக்கு கூறியிருப்பதால் நிதானமாகவே உரையாடுகின்றேன்/ உரையாடுவோம் :-).

நண்பரே,முதலில் இது கிழக்குப் பதிப்பகம் செய்யும் முதற்திருட்டல்ல என்ற புரிதலையாவது உங்களுக்கு விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. இரண்டாவது இங்கே நாமெவரும் தீர்ப்பு எழுதவில்லை. கேள்விகளைத்தான் எழுப்புகின்றோம். அத்தோடு ஏனைய பதிப்பகங்களும் இதே திருட்டுக்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்/செய்யலாம் என்ற புள்ளியையும் குறிப்பிட்டுத்தான் உரையாடிக்கொண்டிருக்கின்றோம்.

நிதானமாய் திலீபன் என்பவர் எழுதிய பதிவை மீண்டுமொருமுறை நண்பரே வாசியுங்கள். அவர்கள் இந்த மொழிபெயர்ப்புக் குறித்து விளக்கம் கேட்டும் கிழக்குப்பதிப்பகம் மெளனஞ்சாதித்த நிலையில்தான் இதை எழுதத்தொடங்கியிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

உண்மைதான்;மணிமேகலைப் பிரசுரம் செய்திருந்தால் நிச்சயம் எழுதியிருக்கமாட்டேன்; எனெனில் அதன் தகுதி ஏற்கனவே எல்லோரும் அறிந்தவிடயம். அதைப்போன்றதுதான் கிழக்குப் பதிப்பகமும் என்று நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்களா தெரியவில்லை. அந்தவளவுக்கு இன்னமும் கிழக்குப் பதிப்பகம் தாழ்ந்துவிடவில்லை என்றே நான் நம்புகின்றேன். ஆகக்குறைந்தது கிழக்குப் பதிப்பகத்தின் முன்னட்டை வடிவமைப்புக்குக் கிட்டவாகக் கூட மணிமேகலைப் பிரசுரம் வரமுடியாது.

மற்றும்படி,
/பதிப்புலகில் - கிழக்கு ஏற்படுத்தி இருக்கும் சில வழிமுறைகள் முன்மாதிரியாகக் கொள்ளத் தக்கவை. /
நல்ல விடயம். நிச்சயம் எழுதுங்கள். நான் மட்டுமில்லை கிழக்குப் பதிப்பகத்தினூடு தொகுப்புக்கள் கொண்டுவர விரும்பும் நண்பர்களும் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். அவ்வாறே அறிவுஜீவியாக இருக்க என்னென்ன இலட்சணங்கள் வேண்டுமென்று நேரங்கிடைக்கும்போது எழுதுங்கள். ஆகக்குறைந்தது அந்தத் தகுதிகளுக்கு எதிர்த்திசையில் பயணிக்கவே இன்றும்-என்றும்- விரும்புவேன். நன்றி.
-----
கடைசியாக வந்த பின்னூட்டம் எங்கேயிருந்து வந்ததென அனுப்பப்பட்டிருக்கும் இன்னொரு அநாமதேய நண்பரின் பின்னூட்டம் மட்டுநிறுத்தப்படுகின்றது. மன்னிக்கவும்.

எம்.கே.குமார் said...

"மொழிபெயர்ப்பு என்பதை மற்றவர்களுடைய படைப்பு என்று கருதமுடியாது. மற்றவர்களுடைய உழைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியே உழைப்பை திருடியதாக" - மூக்கு!

உழைப்போ, படைப்போ எதுவானாலும் அதை அப்படியே வெட்டி ஒட்டி "விற்பனை" செய்வது அறிவீனமான செயல். (இடையில் மானே தேனெ சேர்த்துக்கொண்டாலும் கூட!)

அட்டையில் பெயரிடுமுன் சம்பந்தமிட்டவர்கள் இதை உணர்ந்துகொண்டால் போதும் அல்லது உள்ளே பதினைந்து பேருக்கு நன்றிசொல்லி போடும்போது கூட இவருக்கும் ஒரு வார்த்தை போட்டால் போதும்.

யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, கட்டிஒட்டிய நண்பருக்குத் தெரியும். அவருக்கு எனது கண்டணங்கள். இதில் உறுதியாக இல்லாத
(அடித்துக்கொண்டு போகிற வெள்ளத்தில் இதையெல்லாம் பார்க்க நேரமிருக்குமா தெரியவில்லை.)பதிப்பாளர்களுக்கும் எனது கண்டணங்கள்.

நண்பர் அறிவழகன், கிழக்குப்பதிப்பகத்தில் சிறப்பு 30%சலுகையுடன் வாங்கிய அந்த 200ரூ புத்தகம் இருக்கிறது. இப்போது 50% தள்ளுபடியுடன் அதை விற்க தயாராய் இருக்கிறேன்.

சிங்கப்பூருக்கு வரும்போது வாங்கிக்கொள்ளலாம்.

உங்களுடைய கற்பனை வளத்தை, போலிப் பின்னூட்டங்களிலே செலவிட்டது போதும், கதை, கவிதை ஏதாவது எழுதலாமே!

அன்பன்
எம்.கே.

லக்கிலுக் said...

இங்கே அறிவழகன் என்ற பெயரில் பின்னூட்டமிட்டிருப்பவர் எழுத்தாளர் சாருநிவேதிதாவா என்று அறிய விரும்புகிறேன் :)

Mookku Sundar said...

//அல்லது உள்ளே பதினைந்து பேருக்கு நன்றிசொல்லி போடும்போது கூட இவருக்கும் ஒரு வார்த்தை போட்டால் போதும் //

வாய்யா கொமாரு..!! இது பேச்சு!!!

ஆக, மொழிபெயர்ப்புக்கு நன்றி - வழக்கறிஞர் எஸ். நாகராசன் என்று புத்தகத்தில் போட்டிருக்கலாம் என்று அறிவுறுத்தி இருந்திருக்கக்கூடிய ஒரு தம்மாத்தூண்டு விஷயத்தை, இளங்கோ மாதிரி ஒரு ஆள் இவ்வளவு சென்சேஷனலாக தலைப்பு வைத்து போட வேண்டுமா என்பதுதான் என் ஆதங்கம். மக்களுக்கு பழைய விவகாரங்களின் சூடு இன்னமும் தகித்துக் கொண்டு இருப்பதால், கிழக்கு என்றாலே பீர்பால் பூனை வளர்த்த கதையாக ஆகி விட்டது.

ரவி said...

///;மணிமேகலைப் பிரசுரம் செய்திருந்தால் நிச்சயம் எழுதியிருக்கமாட்டேன்; எனெனில் அதன் தகுதி ஏற்கனவே எல்லோரும் அறிந்தவிடயம். அதைப்போன்றதுதான் கிழக்குப் பதிப்பகமும் என்று நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்களா தெரியவில்லை. அந்தவளவுக்கு இன்னமும் கிழக்குப் பதிப்பகம் தாழ்ந்துவிடவில்லை என்றே நான் நம்புகின்றேன். ஆகக்குறைந்தது கிழக்குப் பதிப்பகத்தின் முன்னட்டை வடிவமைப்புக்குக் கிட்டவாகக் கூட மணிமேகலைப் பிரசுரம் வரமுடியாது.///

ஆதங்கம்...!!! சரிதான்....!!!

தெரியப்படுத்த்வேண்டியவர்களுக்கு முதலில் தெரியப்படுத்தினீர்களா ?

இது குறித்தான பதிப்பகத்தாருக்கு எழுதிய மடல் எங்கள் பார்வைக்கு கிடைக்குமா ? தேதியோடு ?

இப்னு பஷீர் said...

கிழக்குப் பதிப்பகம் தொடர்பாக எனது முந்திய பதிவு இது!

கிழக்குப் பதிப்பகமும் மதச்சண்டைகளும்

Anonymous said...

//உங்களுடைய கற்பனை வளத்தை, போலிப் பின்னூட்டங்களிலே செலவிட்டது போதும், கதை, கவிதை ஏதாவது எழுதலாமே!//

ஏன் நேசகுமார் சார், நேசமுடனில் எழுதுவதை நிறுத்திட்டீங்க? உங்க கவிதை புத்தகத்துக்குக்கூட நேசமுடன் என்றுதான் அட்டைப்படம் போட்டீங்களாமே?

Anonymous said...

//இத்தனை ஊழியர்கள் வைத்துள்ள அவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை தமிழ்ப்படுத்துவது பெரிய காரியமா என்ன..?? why to reinvent the wheel என்ற காரணத்துக்காகவும், ஒரு authentic மொழிபெயர்ப்பையும் உபயோகப்படுத்தலாம் என்ற எண்ணத்திலும் இதை செய்ய்திருக்கலாம்.//

மூக்கரே,
என்னே வலுவான வாதம்!!! அத்தனை (எத்தனை?) ஊழியர்களை வைத்துள்ள அவர்களுக்கு அது பெரிய காரியமில்லையென்றால் செய்யவேண்டியது தானே? Why reinvent the wheel என்பதற்காகத் தான் சுட்டார்கள் என்றால் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவருக்கு ராயல்டி கொடுக்க அத்தனை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் ஒரு பதிப்பகத்துக்கு இயலாத காரியமா?

பதிப்பாளர் நேர்மையானவராக இருந்தால் இவ்விஷயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள இதழில் தவறுக்கு வருத்தம் தெரிவித்து சிறு குறிப்பு வெளியிடவேண்டும். முதலில் மொழிபெயர்த்தவருக்கும், அதை வெளியிட்ட அமைப்புக்கும் தனிப்பட்ட முறையிலும் வருத்தம் தெரிவித்து, தகுந்த இழப்பீட்டுத் தொகையையும் வழங்கவேண்டும். கூடவே இன்னும் விற்காத பிரதிகளில் மூல மொழிபெயர்ப்புக்கு உரிய கிரெடிட்டை அச்சிட்டு ஒட்ட வேண்டும்.
பத்ரி இதைச் செய்வார் என்று நம்புவோம்.

இளங்கோ-டிசே said...

நண்பர்களுக்கு, தனிப்பட்ட நபர்கள்/சாதி போன்றவற்றை முன்வைத்து வந்த பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இயன்றளவு பதிவோடு சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிக்க விரும்புகின்றேன். புரிந்துகொள்வீர்களென நம்புகின்றேன். நன்றி.

இளங்கோ-டிசே said...

சுந்தர்: நீங்கள் அமெரிக்காவில்தானே இருக்கின்றீர்கள் :-)? Plagiarism என்ற சொல் எத்தகை வலிமையானது என்பதையும் அதற்கான விளைவுகளையும் பற்றி நான் உங்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையிலலையெனவே நினைக்கின்றேன். இங்கே ஒரு ஆக்கத்தை எடுத்து உபயோகித்தால், ஆகக்குறைந்தபட்ச அறம்தான், நன்றியுடன் ஆக்கியவர் பெயரை எழுதுதல். ஆனால் இன்னொருவரின் ஆக்கத்தை ஒரு தொகுப்பில் எப்படிப் பாவிப்பது என்பதற்கு நிறைய ethics இருக்கின்றது (சும்மா கூகிளில் Intellectual Property என்று தட்டிப்பார்த்தாலே நிறைய விடயங்கள்/வழக்குகள் வந்துவிழும்.). ஆக அந்தகுறைந்தபட்ச அறத்தைக்கூடச் கிழக்கு பதிப்பகத்தார் செய்யவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கின்றேனே தவிர, அதுவொன்றும் பெரியவிடயமில்லை என்கின்ற உங்களின் பார்வையோடு ஒப்புவுமையில்லை. நீங்கள் pursuit of happYnessபார்த்த்துவிட்டு அந்த நபரின் வாழ்க்கையோடு உங்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு எழுதியதாய் நினைவு. அதில் வில் ஸ்மித்தின் இயந்திரமொன்றை ஒருவர் திருடும்போது அவர் படும் பாடு உணரக்கூடியதாக இருந்தது அல்லவா? அவ்வாறு உழைப்புடன் காலத்தைச் செலவிட்ட இந்த நண்பர்களுக்கும் ஒருவித வலி இருக்கின்றதென ஏன் உங்களால் புரியமுடியாது இருக்கின்றது. எல்லாமே பணத்தோடு சம்பந்தபட்டிருக்க வேண்டும் என்று இல்லைத்தானே.

இரவி: விழிப்புணர்வு சஞ்சிகைக்கோ அல்லது இந்தக் கருத்துப் பட்டறை நண்பர்களுக்கோ எழுதிக்கேளுங்கள் கிடைக்கக்கூடும்.

இனி, இந்தப்பதிவு தொடர்பாய் எதையும் உரையாட என்னிடம் எதுவும் இல்லையென்றே தோன்றுகின்றது. விழிப்புணர்வில் வந்த இந்தப்பதிவை வாசித்தபோது எனது பார்வையை/கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினேன் (வாசித்துவிட்டு சும்மாயிருந்தால் பொல்லாப்பில்லையெனற உண்மை நன்கு விளங்கியபோதும்).. எனது புரிதல்களை/விசனங்களை பின்னூட்டங்களில் இயன்றளவு வைத்திருக்கின்றேனென நம்புகின்றேன். மற்றும்படி நான் கிழ்க்குப்பதிப்பகத்திற்கு தொகுப்பு போடச்சொல்லிக் கேட்கவோ அல்லது அவர்கள் மறுத்தோ..போன்றவகையான எந்தவிதமான தனிப்பட்ட காழ்ப்புணர்வும் இல்லையென்பதை ஒரு தேவையில்லாத குறிப்பாய் எழுதிக்கொள்கின்றேன். கிழக்குப்பதிப்பகத்தின் பத்ரியைத் தவிர வேறு யார் அப்பதிப்பகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்ற என் அறிதல் குறைவே (பா.இராகவன் நான் வலைப்பதியமுன்னர் வலைப்பதிவுகள் எழுதினார் என்று கேள்விப்பட்டேன், அவ்வளவுதான்). இங்கே பத்ரி தனிப்பட்டரீதியில் ஈழத்தில் கொலைகள் நிகழ்ந்தபோது துண்டுப்பிரசுரங்கள்/கடிதங்கள் (?) எழுதி தமிழக மக்களிடம் பரவலாக் கொண்டு செல்ல முயன்றவர் என்ற நன்றியுணர்வு எனக்கு அவரிடம் உண்டென்பதைத் தெளிவுபடுத்தவே விரும்புகின்றேன். ஆனால் அதற்காய் இவ்வாறான விடயங்கள் நடக்கும்போது மெளனமாயிருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லைத்தானே?

Anonymous said...

கிழக்கு பதிப்பக்கத்துக்கு பாராவின் மருந்தையே கொடுத்தால் தான் பித்தம் தெளியும். திண்ணையில் பா. ராகவன் எஃப்.எம். வானொலியைப் பற்றி எழுதிய கேட்டுக்கிட்டே இருங்க! கட்டுரையிலிருந்து:

'உங்களோட பேசறதுல ரொம்ப சந்தோசமா இருக்குது சார். என்னால நம்பவே முடியல சார். ரெண்டுநாளா லைன் கடெய்க்கலெ சார். உங்க வாய்ஸ் சூப்பர் மேடம். நான் கொருக்குப் பேட்டைலேருந்து குப்புசாமி பேசறேங்க. ஆல்தோட்ட பூபதி பாட்ட கண்டிப்பா போடுங்க மேடம். அந்தப் பாட்டை அயனாவரத்துல இருக்கற என் அத்தைப் பொண்ணு தனலச்சுமிக்கு டெடிகேட் பண்றேங்க... '


நல்ல கதை இல்லை ? யாரோ எழுதிய பாடல். யாரோ இசையமைத்து, யாரோ பாடி, யாரோ நடித்து, யாரோ விற்று சம்பாதித்துக்கொண்டிருக்கிற சரக்கைத் தூக்கி அயனாவரம் தனலட்சுமிக்கு சமர்ப்பணம் செய்யும் பரம பக்தர்கள் நிறைந்த புண்ணிய பூமியை நினைத்தாலே புல்லரிக்கிறது.


கொருக்குப்பேட்டை குப்புசாமி சும்மா ஒரு பாட்டு போடச்சொல்லி கேட்டு அதை அத்த பொண்ணு அயனாவரம் தனலச்சுமிக்கு சமர்ப்பணம் செய்வதற்கு எகிறி குதிக்கும் பாராவுக்கு தான் பணிபுரியும் நிறுவனம் யாரோ எழுதியதை எடுத்துப் பதிப்பித்து பணம் பண்ணுவதைப் பார்த்தாலும் புல்லரிக்கத்தான் செய்யும். தன் பாக்கெட்டிலும் கொஞ்சம் சில்லரை சேருமல்லவா. இவனுங்க சொல்றது ஒன்னு. செய்யறது ஒன்னு. இதைச் சொன்னா சிலருக்கு மூக்குக்கு மேல் கோவம் வருது.

பாராவைப் பற்றி அறியாத டிசே, இப்பொ கொஞ்சமாவது தெரிஞ்சிகிட்டிங்களா?

Anonymous said...

திருந்தாத கிழக்குப் பதிப்பகமும் திருத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கும்
http://www.keetru.com/vizhippunarvu/aug07/kizhakku.php

ஜமாலன் said...

//'நிழல்' திருநாவுக்கரசு போன்றவர்கள் பிற நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை மொழிபெயர்க்கும்போது எத்தகை சிரத்தையெடுத்து அனுமதியெடுக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே.//

அரசு எனது கல்லூரிக்கால நண்பர். இன்றுவரை அவரது பணிகள் குறித்து அறிந்தவன் என்கிற முறையில்.. உங்களது கருத்து முற்றிலும் உண்மை.

பெயரிலி.. குறிப்பிடும் அந்நூல் பெரும்பாலானவர்ககளிடம் அனுமதி பெற்றிருப்பார், இயலாதவர்களை தொடர்பு கொள்வதில் உள்ள சிரம அடிப்படையிலானதாக இருக்கலாம். அவர் பதிப்பகம் வைத்திரப்பவரே தவிர.. அன்று முதல் இன்றுவரை அதை வைத்த பெரிதாக காசு பண்ணியவரில்லை.

மற்றபடி கிழக்கு பதிப்பகம் குறித்த உங்கள் விவாதங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

ஜோதிஜி said...

தலை சுற்றுகிறது.